Dec 31, 2012

ஐயரைக் காணவில்லை


உறவுக்காரர் வீடு கட்டியிருக்கிறார். ஏற்கனவே கட்டியிருந்த வீடுதான். இப்பொழுது வீட்டை கொஞ்சம் விரிவுபடுத்தியிருக்கிறார். வெறும் எக்ஸ்டென்சன் என்பதால் புதுமனை புகுவிழாவெல்லாம் தேவையில்லை என்று யாரோ சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. அதற்கு பதிலாக கணபதி ஹோமம் நடத்தினால் போதும் என்ற ட்ரெண்ட்தான் ஓடிக் கொண்டிருக்கிறதாம். கணபதி ஹோமம் நடத்துவதற்கு ஐயர் வேண்டுமில்லையா? நாமம் போட்ட ஐயர் ஆகாது என்று சொல்லிவிட்டார்கள். பட்டை போட்ட ஐயர் ஒருவரை பார்த்து பேசியாகிவிட்டது. ஐயர் பெயர் சுவாமிநாதன். 

டீலிங்கை சில நாட்களுக்கு முன்பாக முடிந்திருந்தோம். ஐயரைப் பார்க்க திட்டமலை போயிருந்த போது அவருடைய அப்பாதான் கோயிலில் இருந்தார். ஐயரின் அப்பா ஒரு பூங்கிழடு. பூங்கிழடு என்றால் தெரியும்தானே? பூ மாதிரி ஆகிவிட்ட முதியவர். தொட்டால் உதிர்ந்துவிடக் கூடும். விஷயத்தைச் சொன்னவுடன் தன் மகன் சுவாமிநாதனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் கணபதி ஹோமம் செய்வதற்கு அவர் வருவார் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் சொன்னார். தற்பொழுது வீட்டில்தான் இருப்பதாகவும் சொல்லியிருந்தார்.

எதற்கும் சுவாமிநாதன் ஐயரை ஒரு முறை பார்த்துவிடலாம் வீட்டிற்குச் சென்றிருந்தோம். ஐயருக்கு சுற்றுவட்டாரத்தில் நல்ல பெயர் உண்டு. சமஸ்கிருதம் படித்துவிட்டு ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்தாராம். பிறகு ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். பூஜை புனஸ்காரங்களை சுவாமிநாதன் அளவுக்கு இந்த ஏரியாவில் யாராலும் சிறப்பாக செய்ய முடியாது என்று அக்கம்பக்கத்தினர் சொல்லியிருந்தார்கள். அதனால் அவர்தான் ஹோமத்தை செய்ய வேண்டும் என உறவினரின் வீட்டில் விரும்பினார்கள். அவரை எப்படியாவது ‘புக்’ செய்துவிட வேண்டும் என கோயிலிலிருந்து வீட்டிற்கு போன போது பட்டையும் கொட்டையுமாக கணபதி ஐயர் கன கம்பீரமாக அமர்ந்திருந்தார். நாங்கள் சொன்ன தேதியைக் குறித்து வைத்துக் கொண்டார். தான் வந்துவிடுவதாக அவர் உறுதியளித்த போது எங்களுக்கு பரம திருப்தி. ஹோமத்திற்கு தான் வரும் போது வீட்டில் வாங்கி வைத்திருக்க வேண்டிய பொருட்களுக்கு ஒரு லிஸ்ட் கொடுத்திருந்தார். நெய், பட்டுத்துணி, பசு மாட்டுக் கோமியம் என்ற அந்தப் பட்டியலின் பொருட்கள் நீண்டிருந்தது. முந்தின நாள் இரவு பத்து மணிக்கு தான் வந்துவிடுவதாகவும் சில பொருட்களை தானே வாங்கி வந்துவிடுவதாகவும் சொல்லியிருந்தார். 

கணபதி ஹோமத்திற்கு முந்தின நாள் மாலையிலேயே உறவினர்கள் கூடத் துவங்கினார்கள். இரவு உணவை முடித்துவிட்டு ஊர்க்கதைகளை மிகுந்த உற்சாகமாக ஆளாளுக்கு பரிமாறத் துவங்கினார்கள். கொலை, கொள்ளை, கள்ள உறவு என சகலமும் ஓடிக் கொண்டிருந்தன. ஒவ்வொருவரும் அந்த கதையாடலில் ஐக்கியமாகியிருந்தோம். உற்சாகமான அந்த முன்னிரவில் சுவாமிநாதன் ஐயர் அழைத்திருந்தார். தான் பேருந்தில் ஏறிவிட்டதாகவும் பேருந்து நிறுத்தத்தில் தன்னை ‘பிக்-அப்’ செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார். இந்த அழைப்பை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம் என்பதால் எந்த சலனமும் இல்லாமல் கதைகளைத் தொடர்ந்தோம். 

அடுத்த சில மணி நேரங்களில் உறவினர்களில் கொஞ்சம் பேர் தூங்கியிருந்தார்கள். ஆனால் விழித்திருந்தவர்களில் யாருக்கும் உற்சாகம் குறைந்திருக்கவில்லை. மொட்டை மாடியில் நிலா காய்ந்து கொண்டிருந்தது. சுற்றிலும் இருக்கும் வாழைத் தோட்டத்தின் காற்று சுகமாக வீசிக் கொண்டிருந்தது. மணி பதினொன்றைத் தொட்டது. ஐயர் வந்து சேரவில்லை. ஐயரை அவரது செல்போனில் அழைத்த போது அவர் போனை எடுக்கவில்லை. நான்கைந்து முறை அழைத்தும் பதில் இல்லை என்பதால் உறவுக்காரர் சற்று பதட்டமடைந்தார். நாளை காலை ஐயர் வந்து சேரவில்லையென்றால் உறவினர்களுக்கு என்ன பதில் சொல்வது என்பது அவரது கவலை. 

ஆளாளுக்கு அட்வைஸ் செய்யத் துவங்கினார்கள். நாமாகவே சில பூசைகளைச் செய்துவிட முடியும் என்று ஒருவர் சொன்னார். ஐயர்களை அழைப்பது என்பது சமீபத்தில் தொற்றிக் கொண்ட பழக்கம் என்றும் நம் சாதி நிகழ்வுகளுக்கு ஐயர் அவசியமே இல்லை என்றும் இன்னொருவர் தனது பங்குக்கு வாதாடினார். உறவுக்காரர் திருப்தி அடைவதாக இல்லை. நானும், உறவுக்காரரும் ஐயரின் வீட்டுக்கு கிளம்புவதாக முடிவு செய்தோம். 

கிளம்புவதற்கு முன்பாக ஐயரின் வீட்டை தொலைபேசிக்கு அழைத்த போது ஐயரின் அப்பாதான் எடுத்தார். உறங்கிக் கொண்டிருந்திருப்பார் போலிருந்தது. விவரத்தைச் சொன்னபோது அதிர்ச்சியடைந்தார். தன் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னதன் அர்த்தம் ‘மனநிலை சரியில்லை’ என்பதாம். சமீபகாலமாக அவரது மனநிலை மிகுந்த பாதிப்படைந்திருப்பதாகவும், ஓரிரு முறை காணாமல் போய்விட்டதாகவும் அவர் பேசத் துவங்கியபோது அழத் துவங்கினார். அந்த முதியவரின் மனநிலை மனதுக்குள் ஒரு கணம் வந்து போனது. வயதான ஒருவர் அழுவதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. திரும்பவும் அழைப்பதாகச் சொல்லிவிட்டு உறவினரிடம் தகவலைத் தெரிவித்த போது அவர் ஐயரின் அப்பாவை விடவும் அதிகமாக அதிர்ச்சியடைந்தார்.

அந்த நேரத்தில் தனக்கு தெரிந்த சில நண்பர்களிடம் ஐயரைப் பற்றி விசாரிக்கத் துவங்கினார். ஐயருக்கு மூன்று பெண்கள். அதில் ஒரு பெண் காதல் திருமணம் செய்து கொண்டார். மற்ற ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து அனுப்பிவிட்டார். இந்தச் சமயத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த விபத்து ஒன்றில் தண்டுவடம் பாதித்ததில் ஐயரின் மனைவி படுத்த படுக்கையாகிவிட்டார். தனது மனைவியின் நிலைமை, இன்னமும் திருமணமாகாத இளைய பெண், வயதான பெற்றோர் என சகல குடும்பச் சிக்கல்களாலும் சுவாமிநாதன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டார். 

உறவினருக்கு இந்த இரவுக்குள் இன்னொரு ஐயரை பிடித்தாக வேண்டிய கட்டாயம். ஆனால் எனக்கு ஐயரின் அப்பாதான் மனதுக்குள் வந்து போனார். இன்னொரு முறை அவரை அழைத்து பேசிவிடலாம்  என்று அழைத்தேன். இப்பொழுது அதிகமாக கதறத் துவங்கினார். தனது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே ஆளான தன் மகன் இல்லையென்றால் இந்தப் பெண்களை வைத்துக் கொண்டு இந்த கிராமத்தில் என்ன செய்வதென்றே தெரியாது என்று அழுது கொண்டிருந்தார். அருகில் “என்னாச்சு? என்னாச்சு” என்று கேட்ட சில பதட்டமான குரல்களையும் தாண்டி அவர் அழுது கொண்டிருந்தார். நள்ளிரவைத் தாண்டிய இந்த நேரத்தில் அந்தப் பெண்களுக்கு இது பேரதிர்ச்சியான செய்தியாக இருக்கும். அந்தப் பெண்களை சமாளிக்க வேண்டிய பெரும் பொறுப்பு முதியவரின் தலையில் இறங்கியிருக்கிறது. தனது சுமைகளை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள விரும்புகிறார் அந்தப் பெரியவர். “இப்போ என்ன செய்யலாம்?” என்றார் என்னிடம்.  என்னால் அவரது சுமைகளை இறக்கி வைக்க முடியும் என்று தோன்றவில்லை. அவருக்கு என்ன என்ன பதிலைச் சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. எப்படி இந்தச் சிக்கலிலிருந்து தப்பிப்பது என யோசிக்கத் துவங்கியிருந்தேன்.

Dec 26, 2012

நிர்வாணமாக்குதல் என்னும் தண்டனை


இரண்டாம் வகுப்பு படிக்கும் போது சித்ரா என்ற டீச்சர்தான் எங்களுக்கு க்ளாஸ் டீச்சர். இப்பொழுது யோசித்துப் பார்த்தால் அவரது முகம் முழுமையாக ஞாபகத்தில் இல்லை. ஆனால் அவரது குதிரைவால் கூந்தல் நினைவில் இருக்கிறது. அவரிடம் சிக்கி ஆறு மாதங்களுக்கு சின்னாபின்னமானதால் அடுத்த பல வருடங்களுக்கு சித்ரா என்ற பெயரைக் கேட்டாலே அலறியதும் ஞாபகத்தில் இருக்கிறது.

ஆரம்பத்தில் கோபியில் இருந்த ஒரு பள்ளியில்தான் படித்துக் கொண்டிருந்தேன். இரண்டாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் அம்மா அரசுப்பணியில் சேர்ந்தார்.  அவருக்கு செண்பகப்புதூர் என்ற கிராமத்தில்தான் முதல் வேலை. எனவே அருகாமையில் இருந்த டவுனான சத்தியமங்கலத்தில் இருந்த சாரு மெட்ரிகுலேஷன் என்ற பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள். அப்பொழுதுதான் நேரடியாக ஏழரைக்கு ப்ரோமோஷன் கொடுத்தார்கள். சனிபகவான் சித்ரா டீச்சர் ரூபத்தில் பிரசன்னமாகியிருந்தார். 

அந்த சித்ரா டீச்சருக்கு என்னை மட்டுமில்லை எங்கள் பென்ச்சில் அமர்ந்திருக்கும் எந்த மாணவனையும் பிடிக்காது. அவ்வப்போது சுளுக்கெடுப்பார். வகுப்பிற்கு வந்தவுடன் ஏதாவது ஒரு பாடத்தில் கேள்வி கேட்பார். அனேகமாக நானோ அல்லது சரவணனோதான் முதல் போனியாக இருக்கும். சத்தியமாக பதில் தெரியாது. கொட்டு வைத்து வகுப்பறைக்கு முன்னால் போகச் சொல்வார். கொட்டு ‘நங்ங்ங்’ என்று இறங்கும். தலையைத் தேய்த்துக் கொண்டே வகுப்பின் முன்னால் நின்று கொள்வோம். வரிசையாக ஒவ்வொரு மாணவனாக கேட்டுக் கொண்டே வருவார். கடைசியாக கிட்டத்தட்ட அத்தனை பையன்களும் தலையைத் தேய்த்துக் கொண்டிருப்போம். பையன்கள் லிஸ்ட் தீர்ந்த பிறகு அடுத்தது கிருத்திகாவையோ, லீலாவதியையோ கேள்வி கேட்பார் என்று எதிர்பார்த்திருப்போம். ஆனால் கேட்க மாட்டார். அவருடைய டார்கெட் ‘பையன்’கள் மட்டும்தான் என்று சோகமாகிவிடுவோம்.

வகுப்பிற்கு முன்பாக வந்து நிற்கும் வந்த அத்தனை ‘மடையர்களையும்’ நாற்காலியில் அமருவது போன்ற பாவனையில் அமரச் சொல்லிவிட்டு அவர் பாடத்தைத் துவங்குவார். அந்த இடத்தில் நாற்காலி எதுவும் இருக்காது. ஆனால் அங்கு நாற்காலி இருப்பதாக கற்பிதம் செய்து கொண்டு முட்டியை மடக்கி நிற்க வேண்டும். கொஞ்ச நேரத்தில் கணுக்காலில் ஆரம்பித்து கெண்டைக்கால் வரைக்கும் வலி இழுக்கத் துவங்கும். இந்த வலியை சமாளிப்பதா அல்லது பாடத்தை கவனிப்பதா என்ற குழம்பி பிறகு வலியை சமாளிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து பாடத்தை ‘டீலில்’ விட்டுவிடுவோம். 

அடுத்த நாள் வந்து முந்தைய நாள் ‘டீலில்’விட்ட பாடத்திலிருந்து கேள்வி கேட்பார். இப்படியே எங்கள் சோகக் கதை தொடர்ந்து கொண்டிருந்தது. கொஞ்ச நாட்களுக்கு பிறகு கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாத மாணவர்களை டீச்சர் கொட்டுவதற்கு பதிலாக அருகில் இருக்கும் மாணவனையே கொட்டு வைக்கச் சொல்வார். எனக்கு சரவணன் கொட்டு வைப்பான், அவனுக்கு நான் கொட்டு வைக்க வேண்டும் என்பதால் ‘மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்கில்’ தடவிக் கொடுத்துக் கொள்வோம். அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் “கொட்டு வைக்கும் சப்தம் எனக்கு கேட்க வேண்டும் இல்லையென்றால் நான் வந்து கொட்டுவேன்” என்று டார்ச்சர் கொடுக்கத் துவங்கினார். அப்படியும் நாங்கள் வழிக்கு வராததால் வேறொரு உபாயத்தைக் கண்டுபிடித்தார். பென்ச்சில் ஒரு பையன் அமர வேண்டும் அவனை அடுத்து ஒரு பெண் அமர வேண்டும் அவளை அடுத்து மீண்டும் ஒரு பையன் என்று அமர வைத்தார்.

கல்லூரிப்பருவமாக இருந்திருந்தால் அது நல்ல அனுபவமாகத்தான் இருந்திருக்கும். ஆனால் அது  இரண்டாம் வகுப்பு. அக்கா தங்கைகளுடன் பிறக்காத எனக்கு ஒரு பெண்ணின் அருகில் அமர வேண்டும் என்பது உவப்பானதாக இல்லை. வெட்கம் பிடுங்கும். கால்களை குறுக்கி அருகில் அமர்ந்திருக்கும் பெண் மீது உரசாமல் அமர்ந்து கொள்வேன். அப்பொழுது சரவணனின் இடத்தில் பானு வந்திருந்தாள். அவள்தான் இனிமேல் என்னைக் கொட்ட வேண்டும். இது ஒரு பக்க அட்டாக். அவள் மட்டுமே என்னைக் கொட்டுவாள். நான் அவளை திருப்பிக் கொட்டக் கூடாது என்ற தைரியத்தில் என் மண்டையில் சடுகுடு ஆடுவாள். அதோடு என் தொடையை கிள்ளி வைக்கவும் அவளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. தினமும் வீங்கிய தலையுடனும், சிவந்த தொடையுடனும் வீட்டுக்கு போவது என்பது எனக்கு விதிக்கப்பட்டிருந்தது.

எத்தனை தண்டனைகளாலும் திருப்தியடையாத சித்ரா டீச்சர் ஒரு நாள் எங்களின் துகிலுரிய முடிவு செய்துவிட்டார். வகுப்பில் நிர்வாணமாக்கப்பட்டு விளையாட்டு மைதானத்தை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு மீண்டும் வகுப்புக்கு வர வேண்டும் என்பது டீச்சரின் ஆணை. என் துகிலை உரிவதற்கு பானு பணியமர்த்தப்பட்டாள்.

சட்டையைக் கழற்றுவதற்கு அவள் பெரும் சிரமப்படவில்லை. ஆனால் அதையும் என்னால் முடிந்த அளவு தடுக்க முயன்றேன். சட்டை கழற்றப்பட்டு அரை நிர்வாணம் ஆன பிறகு எங்களது ட்ரவுசர்கள் கழற்ற உத்தரவிடப்பட்டது. நாங்கள் கதறத்துவங்கினோம். எந்த மாணவனும் அந்த மாணவிகளிடம் தோற்கவில்லை. டீச்சர் களமிறங்கினார். கொட்டி வைப்பேன், மர ஸ்கேலால் அடிப்பேன் என்றெல்லாம் மிரட்டினார். எங்களுக்கு வலியை விடவும் மானம் பெரிதாக இருந்தது. எங்கள் போராட்டத்தை எளிதில் தோற்கடிக்க முடியவில்லை. 

இந்த சம்பவத்திற்கு பிறகு அந்தப்பள்ளியில் நிகழ்ந்த பெரும்பாலான நிகழ்வுகள் மறந்து போனது. அந்த அளவிற்கு இந்நிகழ்ச்சி பெரும் பாதிப்பை உருவாக்கியது.  என் பள்ளிப்பருவத்தில் மறக்க விரும்பும் தினங்களாக என்      இரண்டாம் வகுப்பு அமைந்தது. அப்பொழுது அந்த டீச்சர் எங்களை தண்டிப்பதாக நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் அது வெறும் தண்டித்தலாக மட்டும் இருக்க முடியாது என்று பிறகு தோன்றியது. அந்த டீச்சர் எதனால் அத்தனை குரூரமானவராகவும், ராட்சசியாகவும் நடந்து கொண்டார் என்று யோசித்திருக்கிறேன். இந்த யோசனைக்கு ஆயிரம் பதில்களை என்னால் சொல்ல முடியும். ஆனால் உண்மையான பதிலை சித்ரா டீச்சரால் மட்டுமே சொல்ல முடியும்.

Dec 24, 2012

குட்டியானையாக ஒரு சாஃப்ட்வேர் தலையன்


பெரும்பாலும் ரிசர்வ் செய்யாத பேருந்துகளில் பயணிப்பதில்தான் எனக்கு விருப்பம் அதிகம். கொஞ்சம் சிரமம் இருக்கும்தான். ஆனால் அற்புதமான அனுபவங்கள் சாதாரண பேருந்துகளில்தான் கிடைக்கும். ரிசர்வ் செய்த பேருந்துகளுக்குள் நுழையும் போது நிலவும் மயான அமைதி எரிச்சல் ஊட்டுவதாக இருக்கும். அதைக் கூட தொலையட்டும் என்று விட்டுவிடலாம். நம் ஸீட்டை கண்டுபிடித்து அமரப் போகும் போது பக்கத்து சீட்டுக்காரன் முகத்தை தெரியாத்தனமாகக் கூட பார்த்துவிடக் கூடாது. மீறி பார்த்துவிட்டால் ஏதோ கடன்காரனைப் பார்ப்பதை போல முகத்தை திருப்புவார்கள் பாருங்கள்- முகத்திலேயே ஒரு குத்துவிட வேண்டும் என்று தோன்றும்.

ஆனால் ரிசர்வ் செய்யாத பேருந்துகளில் ஏறும் போதே ‘ஜாலி’ ஆகிவிடலாம். அப்படித்தான் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை செல்வதற்காக டிக்கெட் எதுவும் எடுத்திருக்கவில்லை. பாண்டிச்சேரி வண்டியில் ஏறிவிட்டேன். ஓசூரில் இறங்கி அங்கிருந்து சென்னைக்கு இன்னொரு பேருந்தை பிடித்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். 

ஏறியவுடன் கண்டக்டர் “எங்கே போகணும்” என்றார்.  “ஓசூர்” என்றவுடன் கடுப்பாகிவிட்டார்.  

“ஏம்ப்பா இதென்ன டவுன்பஸ்ஸா?” என்று மீண்டும் எகிறினார். 

“அய்யய்யோ ஓசூரில் பஸ் நிக்காதா சார்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டேன். ஓசூரில் நிற்காமல் போவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரியும். நான் நக்கலடிப்பதாகத் தெரிந்து கொண்டு அவரும் சிரித்து வைத்தார். அவ்வளவுதான். ஃப்ரெண்ட்ஸ் ஆகிவிட்டோம். அவர் ஸீட்டுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டும் ஓசூர் வரைக்கும் சொந்தக் கதை சோகக் கதை பேசிக் கொண்டு வந்தோம். அவர் பெண் +2 படிப்பதிலிருந்து அடுத்து என்ன படிக்கலாம் என்பது வரைக்கும் பேசிவிட்டு இறங்கினால் ஓசூரில் எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். இந்தத் தலைகளை வென்றுதான் சென்னை பேருந்தில் இடம் பிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு தலையும் அமெரிக்கக்காரனுக்கும், ஐரோப்பாக்காரனுக்கும் உழைத்து ஓடாய்த் தேயும் சாஃப்ட்வேர் தலைகள். சாஃப்ட்வேரில் இருக்கிறார்கள் என்பதால் டீசண்டாக நடந்து கொள்வார்கள் என்றோ, எகிறாமல் பேசுவார்கள் என்றோ நினைத்தால் அதைவிட வேறு முட்டாள்த்தனம் இருக்க முடியாது. தனது மேனேஜர்கள் மீது இருக்கும் கோபத்தையெல்லாம் பக்கத்து ஸீட்டுக்காரன் மீதுதான் காட்டுவார்கள். அப்படி ஒரு தலை என்னிடம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் வந்துவிட்டது. அதுவும் யானைத் தலை. 

ஓசூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சென்னைக்கான பேருந்தில் கடைசி வரிசையில் ஒரு இடம் இருந்தது. ஏறி அமர்ந்தால் பக்கத்தில் இந்தக் குட்டியானை. அவன் ஏற்கனவே அங்கு அமர்ந்திருந்தான். எனக்காக ஆறு இஞ்ச் இடத்தை விட்டு வைத்திருந்தான். கிட்டத்தட்ட டபுள் ஸீட் வாங்க வேண்டிய உருவம் அது. என் கெட்ட நேரம், ஜன்னல் ஓரமாக என்னைத் தள்ளிவிட்டு நசுக்க ஆரம்பித்துவிட்டது. அதைக் கூட பொறுத்துக் கொண்டிருப்பேன். ஆனால் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் “சார், தள்ளி உக்காருங்க” என்றார்.  

“நான் வேணும்ன்னா சக்கரத்தில் உக்காந்துட்டு வந்துடுறேன்” என்றேன். 

அவ்வளவுதான். சட்னி ஆக்க கங்கணம் கட்டிக் கொண்டான் போலிருந்தது. என்னைப்பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் தூங்கத் துவங்கினான். பேருந்து கிளம்பியது. தூங்கித் தூங்கி விழுந்தான். கிருஷ்ணகிரி, ஆம்பூர் என ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் ஏதாவது ஸீட் காலியாகுமா என்று பார்த்து கொண்டே வந்தேன். இடம் மாறி அமர்ந்தால் இந்த கிரகத்திடம் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. ம்ஹூம். யாருமே இறங்குவதாகத் தெரியவில்லை. தோள்பட்டை வலிக்கத்துவங்கியது. இந்த இடத்தில் ‘தூக்கமே வரவில்லை’ என்று எழுதினால் சரியாக வராது.  ‘தூங்கவே விடவில்லை என்பதுதான் சரியாக இருக்கும்.

அவனோடு தோள் உரசிக் கொண்டே வந்த போது மணி மூன்று ஆகியிருந்தது. எப்படியும் இனி நான் தூங்கப்போவதில்லை என்பதால் அவனையும் சேர்த்து தூங்கவிடாமல் செய்யலாம் என்று அவன் என் மீது சாயும் போதெல்லாம் அவனது தலையை ‘விசுக்’ என்று தள்ளிவிடத் துவங்கினேன். அவன் விழித்துப்பார்த்தால் நான் தூங்கிக் கொண்டிருப்பது போல நடிக்க ஆரம்பித்துவிடுவேன். நான்காவது முறை தள்ளிவிட்ட போது நன்றாகவே விழித்துக் கொண்டான். எனக்கு உள்ளூர பயங்கர சந்தோஷம். யானையை வென்றுவிட்ட கஜவென்றான் என சுய புளாங்கிதம் அடைந்திருந்தேன். ஆனால் சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

அடுத்த ஐந்து நிமிடத்தில் வேலூர் பேருந்து நிலையம் வந்தது. யாராவது இறங்குகிறார்களா என்று பார்த்தேன். யாரும் இறங்கவில்லை. ஆனால் அவசரவசரமாக பைகளைத் தூக்கிக் கொண்டு குட்டியானை இறங்கிப் போனது. செம டென்ஷனாகிவிட்டேன். எழுப்பாமல் விட்டிருந்தால் அவன் அடுத்த பேருந்து நிலையம் வரைக்கும் வந்திருப்பான். தண்டனை கொடுத்த சந்தோஷமாவது கிடைத்திருக்கும். அவசரப்பட்டு அவனை எழுப்பி விட்டுவிட்டேனே என புலம்ப ஆரம்பித்தேன். அதன்பிறகு வேலூரிலிருந்து சென்னை வரைக்கும் ஸீட் ஃப்ரீயாகத்தான் இருந்தது. ஆனால் தூக்கம்தான் வரவில்லை.

Dec 21, 2012

சென்னை ஒரு மாயக்காந்தம்


வாழ்க்கை குறித்த தேடலுடன் தனது எல்லைக்குள் காலடி எடுத்து வைக்கும் மனிதனை சென்னை அளவுக்கு வேறு ஊரால் அலைகழிக்க முடியுமா என்று தெரியவில்லை. அதே சமயம் Survive ஆகிக் கொள்பவனை சென்னை அளவுக்கு அரவணைத்துக் கொள்ளும் வேறு ஊர் ஒன்று இருக்கிறதா என்பதும் சந்தேகமாகத்தான் இருக்கிறது. 

சென்னையில் மொத்தமாக ஒரு வருடம் மட்டுமே இருந்திருக்கிறேன். அதன் பிறகு பயணித்த எந்த ஊரும் சென்னை அளவுக்கு ஈர்த்ததில்லை. க்ளைமேட் சரியில்லை, வெப்பம் அதிகம், சூழல் மாசடைந்து கிடக்கிறது என்று எந்தக் காரணத்தைச் சொன்னாலும் என்னளவில் சென்னை is the best. 

சென்னையை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னமும் தன்னைப் பற்றிய கனவுகளை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. சென்னைக்கு செல்ல வேண்டும் என்ற காரணம் ஏதாவது கிடைக்கும் போது மிகுந்த உற்சாகமடைந்துவிடுகிறேன். ஒவ்வொரு முறையும் ‘இப்படித்தான் இருக்கும்’ என்ற மனச்சித்திரத்துடன் சென்னையை அடையும் போதும் தன்னை உருமாற்றி வைத்திருக்கும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சென்னையின் முகம் மாறிக்கொண்டேயிருப்பதாகத் தோன்றும். ஆனால் ஒவ்வொரு முகமும் எந்த விதத்திலும் ஈர்ப்பு குறைந்ததாக மாறியிருக்கவில்லை.

சென்னையில் இருப்பவர்களால் இந்த மனநிலையை புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. கொஞ்ச நாட்கள் சென்னையில் இருந்துவிட்டு வெளியேறி பிறகு வேறு ஊர்களின் இரும்புப்பிடிக்குள் சிக்கிக் கொண்டவர்களாக இருந்தால் புரிந்து கொள்ள முடியும்.

இன்றைக்கு இரவு சென்னைக்கு கிளம்ப வேண்டும் என்னும் மனநிலை மிகுந்த உற்சாகமானதாக இருக்கிறது. இந்த முறை கவிஞர்கள் நிலாரசிகன், கதிர்பாரதியின் கவிதைத் தொகுப்புகள் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பயணம். நிகழ்ச்சி  சனிக்கிழமை மாலை (22.12.2012) கே.கே.நகர் டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறுகிறது. கதிரும் சரி, நிலாவும் சரி நவீன கவிதை மொழியின் இறுக்கங்களையும், வழமைகளை தங்களது புது மொழியால் நெகிழச் செய்கிறார்கள் என்று அடிக்கடி தோன்றும். அவர்கள் இருவரின் தொகுப்பும் ஒரே பதிப்பகத்தில், ஒரே நேரத்தில் வெளிவருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. 


கதிர்பாரதி தனது கவிதைத்தொகுப்பின் முதல் பிரதியை நான் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொன்னபோது தயக்கமாக இருந்தது. தனது கவிதைத் தொகுப்பின் முதல் பிரதியை வெளியிடுபவர் யார், பெற்றுக் கொள்பவர் யார் போன்றவை குறித்து கவிஞனுக்கு ஆயிரம் கனவுகள் இருக்கக் கூடும். எந்த அடிப்படையில் கதிர்பாரதி என்னைத் தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. நெகிழ்ச்சியாக இருந்தாலும், உண்மையைச் சொன்னால் ஒரு தொகுப்பின் முதல் பிரதியை பெற்றுக் கொள்ளும் தகுதி எனக்கு இருப்பதாக இன்னமும் நம்பவில்லை. 

நானே நம்பாத போது வீட்டில் நம்புவார்களா? எள்ளி நகைக்கிறார்கள். “சென்ட்ரல் மினிஸ்டராலேயே முடியலையாமாஆஆஆஆ...” என இழுக்கிறாள் மனைவி. “போன் வயர் அறுந்து நாலு நாள் ஆச்சு” என்கிறான் தம்பி. ஆனாலும் தளர்வடையாமல் இருக்கிறேன்.

 பிரிண்ட் அடித்த அழைப்பிதழ் இருந்தால் மறக்காமல் வாங்கி பைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். கொண்டு வந்து காண்பித்தால் கொஞ்சமாகவேனும் நம்புவார்கள். வெளியில் இருப்பவர்களை நம்ப வைப்பதைவிடவும் வீட்டில் இருப்பவர்களை நம்ப வைக்கத்தான் பெரும் சிரமப்பட வேண்டியிருக்கிறது.

Dec 14, 2012

டேய் வாத்தி


வாழ்க்கையில் மறக்கவே முடியாத தருணங்களை லிஸ்ட் எடுத்தால் அவற்றில் பல பள்ளிகளில் நடந்ததாகத்தான் இருக்கும். இந்த வாத்தியார்கள் இருக்கிறார்கள் பாருங்கள். அவர்களை ஞாபகப்படுத்தி எழுதினால் குறைந்தபட்சம் ஆளுக்கு ஒரு புத்தகம் எழுதிவிடலாம். 

பத்தாவது படிக்கும் போது பாண்டு என்று ஒரு வாத்தியார் வந்தார். அவரது உண்மையான பெயர் பாண்டு இல்லை. வேறு ஒரு பெயர். பள்ளி மாணவர்கள்தான் அவருக்கு ஜேம்ஸ்பாண்ட் என்று பட்டப்பெயர் வைத்து பிறகு அதைச் சுருக்கி பாண்டு என்றாக்கிவிட்டார்கள். அந்தப்பெயர்தான் அவருக்கு காலம் காலமாக இருந்து வந்தது. பாண்டு வாத்தியார் கிட்டத்தட்ட ரோபோ மாதிரி நடப்பார் என்பதால் அவருக்கு அப்படி பெயர் வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.

பெயர்தான் ஜேம்ஸ்பாண்ட். ஆனால் அவரைப்பார்த்தால் அப்படித் தெரியாது. விளக்குமாறுக் குச்சிக்கு கை,கால் செட்டப் செய்து அதற்கு ஒரு பேண்ட் சர்ட்டை போட்டுவிட்டால் போதும்-அப்படித்தான் பாண்டு இருப்பார். கையில் ஒரு பிரம்பை எடுத்து வருவார். ஒரு நாள் கூட யாரையும் அடித்ததில்லை. ‘அடித்துவிடுவேன்’ என்று அவர் சொல்லும் போதெல்லாம் எங்களுக்கு கிச்சு கிச்சு மூட்டுவது போல இருக்கும். 

பாண்டு சார் வகுப்பில் அட்டெண்டென்ஸ் எடுப்பது இன்னொரு காமெடி. ரோல் நெம்பர் படிதான் அட்டெண்டன்ஸ் எடுக்கப்படும். லீடர்தான் நெம்பரை சத்தமாக அழைக்க வேண்டும். நெம்பருக்குரியவன் “உள்ளேன் ஐயா” என்று சொல்வார்கள். பன்னிரெண்டு வந்தால்  ‘பன்னெண்டு’ என்று சொல்லாமல் ‘பாண்டு’ ‘பாண்டு’ என்பேன். பன்னிரெண்டாம் நெம்பருக்குரிய குமார் வேண்டுமென்றே பதில் சொல்லமாட்டான். நானும் சளைக்காமல்  “டேய் பாண்டு” என்று கத்துவேன் அல்லது “சார், இந்த பாண்டு அட்டெண்டன்ஸ் சொல்லுறதே இல்லை” என்பேன். எல்லாவற்றிற்கும் ஒரு புன்முறுவல் பூப்பார். அவ்வளவுதான்.

ஒரு நாள் வகுப்பறைக்கு வந்தவர் தனது நாற்காலியில் அமரவும் இல்லாமல் நகரவும் இல்லாமல் டேபிளையே பார்த்துக் கொண்டிருந்தார். எதற்காக அப்படியே நிற்கிறார் என்று புரியாமல் எங்களுக்கு குழப்பம். பத்து நிமிடங்களுக்குப் பிறகு ‘லீடர்’ என்றார். பத்தாம் வகுப்பில் கேடி ரங்காவாக வலம் வந்த என்னைத்தான் லீடராக போட்டிருந்தார்கள். எங்கள் பள்ளியில் எந்தப் பையன் அதிகம் குறும்பு செய்கிறானோ அவனை லீடர் ஆக்கிவிடுவார்கள். ரெளடியை அழைத்து  ‘நீ போலீஸாக இருந்து இந்த ஊரைக் காப்பாத்து’ என்று சொல்வது போல. நான் வகுப்பை அடித்து உலையில் போட்டதுதான் நடந்தது. அந்தக் கதையை இன்னொரு முறை சொல்கிறேன்.

அவர் அழைத்தவுடன் பவ்யமாகச் சென்று பார்த்தால் டேபிள் மீது ஒரு எட்டுக்கால் பூச்சி ஊறியது. அது இறங்கும் வரைக்கும் பார்த்துக் கொண்டே நின்றிருக்கிறார். எங்களுக்கு அந்த பத்து நிமிடமும் மெளனப்படம் பார்ப்பது போன்று நல்ல டைம்பாஸ். அடுத்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளைக்கும் ஒருவித பூச்சியை பிடித்துவந்து டேபிள் மீது விட்டுவிடுவது வழக்கமாகிப் போனது. அதற்கென்றே வகுப்பில் ஒரு டீம் ஃபார்ம் செய்துவிட்டார்கள். பத்து நிமிடங்களாவது படம் பார்ப்போம். அந்த மனுஷன் ஒரு முறை கூட எங்களை சந்தேகப்படவில்லை. 

இப்ராகிம் என்று ஒரு மாணவன் இருந்தான். ஃபயர் டான்ஸ் ஆடுவான். பாம்பை வைத்தும் நடனமாடுவான். பூச்சியை பிடித்து டேபிள் மேலாக விடுவதற்கு பதிலாக கிறுக்குத்தனமாக பாம்பை பிடித்துவந்து விட்டுவிட்டான். அது ஒரு குட்டிப்பாம்பு. அவன் கொண்டு வந்து டேபிள் மேல் விடுவதை நாங்கள் யாருமே கவனிக்கவில்லை. அசால்டாக அமர்ந்திருந்தோம். பாண்டு அந்தச்சமயத்தில் வகுப்புக்கு வந்திருக்கவில்லை. அது சுறுசுறுப்பான பாம்பு போலிருக்கிறது. டேபிளிலிருந்து மடமடவேன இறங்கி வந்து கூட்டத்துக்குள் நுழைந்துவிட்டது. ஒட்டுமொத்த வகுப்பும் சிதறி ஓடியபோது கண்ணன் வகுப்பறைச் சுவரிலிருந்து எட்டிக்குதித்து கையை முறித்துக் கொண்டதுதான் மிச்சம். அதன் பிறகு பூச்சி மேட்டரை கைவிட்டுவிட்டோம்.

பாண்டு சார் பாட நோட் திருத்துவதும் காமெடிதான். பாடத்தை எழுதிக் கொண்டு வந்தால் ஒவ்வொரு பக்கமாக ‘டிக்’ மார்க் அடிக்க மாட்டார். கடைசி பக்கத்தை லீடர் திறந்து காட்ட வேண்டும். கடைசிப்பக்கத்தில் மட்டும் ‘டிக்’அடித்து கையெழுத்து போடுவார். எனக்குத் தெரிந்து ஒருவன் கூட ஒழுக்கமாக பாடம் எழுதியதில்லை. கடைசிப்பக்கத்தில் மட்டும் ஒருபக்கம் அல்லது அரைப்பக்கம் எழுதி வந்து என்னிடம் கொடுத்துவிடுவார்கள். நான் கையெழுத்து வாங்கித்தருவேன். முந்தைய பக்கங்கள் எல்லாம் வெற்றுத்தாள்களாக மட்டுமே இருக்கும்.

இத்தனை சேட்டைகளைச் செய்தாலும் அந்தவருடம் எங்கள் வகுப்பு நூறு சதவீத தேர்ச்சி. சர்டிஃபிகேட் வாங்கும் போது அவரிடம் சென்று “சார் நான் சமூகவியலில் 97 மார்க்” என்றேன். “மார்க் யார் வேணும்னாலும் வாங்கிக்கலாம் மணி. வாத்தியாரை ‘டேய் பாண்டு’ன்னு கூப்பிடற தைரியம் ரொம்ப முக்கியம். அந்த தைரியத்தை நல்லதுக்கு மட்டும் பயன்படுத்து” என்றார். தூக்கிவாரி போட்டது. எனது அத்தனை லொள்ளையும் தெரிந்து வைத்துக்கொண்டும் எதுவுமே காட்டிக்கொள்ளாமல் இருந்திருக்கிறார். அவர் நினைத்திருந்தால் தண்டித்திருக்கலாம். ஆனால் எதுவுமே சொன்னதில்லை. அந்தக் கணத்தில் அவர் கடவுளாக தெரிந்தார். 

ரொம்ப வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் பஸ்ஸ்டாப்பில் பார்த்தேன். அதே மாதிரிதான் இருந்தார். நான் தான் மாறியிருந்தேன். அவருக்கு அடையாளம் தெரியவில்லை. சடாரென காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு அறிமுகப்படுத்திக் கொண்டேன். “இப்படி மாறிட்டியா” என்றார். “இல்ல சார், நடிச்சேன்” என்றேன். ஆனால் அதைச் சொல்லும் போது என்னையும் அறியாமல் கண்கள் கலங்கியிருந்தன.

Dec 13, 2012

எதுக்குய்யா இத்தனை டார்ச்சர் கொடுக்குறீங்க?


ராகிங் செய்யும் மனநிலையில் இருப்பவர்களிடம் இண்டர்வியூவில் சிக்கிக் கொள்வது one of the கொடுமையான அனுபவம். கிட்டத்தட்ட கதற வைத்துவிடுவார்கள். டெலிபோனிக் இண்டர்வியூ என்றால் கொஞ்சம் பரவாயில்லை. சமாளித்துவிடலாம். நான் அவ்வப்போது டெலிபோனிக் இண்டர்வியூவில் கலந்து கொள்வதுண்டு. ஆனால் ஒரு முறை கூட அடுத்த் ரவுண்டுக்கு போனதில்லை. சிறுபிள்ளைத்தனமான காரணம்தான். கலந்து கொள்ளும் டெலிபோனிக் இண்டர்வியூக்களில் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியாது. கொஞ்ச நேரம் பார்ப்பேன். அப்புறம் ‘கட்’செய்துவிடுவேன். அதன்பிறகு அவன் எத்தனை முறை அழைத்தாலும் கண்டு கொள்ளவேமாட்டேன். அவ்வளவு பெரிய டுமீலான என்னை அழைத்து எங்கள் நிறுவனத்தில் இண்டர்வியூ செய்யச் சொல்கிறார்கள். இந்த மேட்டர் இதோடு நிற்கட்டும். ஒரு ப்ளாஷ்பேக்கை பார்த்துவிட்டு திரும்ப வரலாம்.

பள்ளியில் படிக்கும் போது பிரதீப் என்று நண்பன் இருந்தான். நண்பன் என்பதைவிட எதிரி என்பதுதான் சரியாகப் பொருந்தும். காரணம் என்னை விட நன்றாகப் படிப்பான். அவன் படித்து தொலைவதுதான் எனக்கு பெரும் தலைவலி. அவனுடைய அப்பா என் அப்பாவுடன் வேலை செய்தார். அவனுடைய அம்மா என்னுடைய அம்மாவுடன் வேலை செய்தார். இசெத்துச் செத்து பிழைத்தேன்.

வீட்டில் தினமும் பிரதீப் புராணம்தான். போதாக்குறைக்கு நான் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி என்று வெட்டித்தனமாக சுற்றுவதாக புலம்புவார்கள். என்னதான் முக்கினாலும் யூனிட் டெஸ்ட்டில் கூட அவனை விட அதிகம் மார்க் வாங்க முடிந்ததில்லை. ஒவ்வொரு தேர்வுக்கு போகும் போதும் எனக்கு மறக்காமல் இருக்க வேண்டும் என்பதை விட பிரதீப்புக்கு மறந்து போக வேண்டும் என்றுதான் சாமிகளைக் கும்பிடுவேன். ம்ஹூம்.ஒரு கடவுளும் மனம் இறங்கியதில்லை.

ஆறாம் வகுப்பு என்று ஞாபகம். காலாண்டுத் தேர்வுக்கு முன்பாக காரப்பொரி தின்னலாம் அழைத்துப் போய் அவனுக்கு மட்டும் அதிக காரத்துடனான பொரியைக வாங்கிக் கொடுத்தேன். எப்படியும் அடுத்தநாள் கழிவறையை விட்டு வெளியே வரமாட்டான் என்ற நம்பிக்கையில் என் முகத்தில் புன்னகை பொங்கி வழிந்தது. ஆனால் காரப்பொரிக்காரனும் கை விட்டுவிட்டான். பிரதீப் அடுத்த நாள் ஸ்ட்ராங்காக வந்து ஜெர்க் கொடுத்தான். வழக்கம் போலவே அவன் தான் அதிகம் மார்க்.

இன்னொரு தேர்வு. இரண்டு நாட்களுக்கு முன்பாகவே படித்து முடித்துவிட்டு தேர்வுக்கு முந்தின நாள் அவனது வீட்டுக்கு சென்று விட்டேன். கதை பேசி அவன் ‘பொழைப்பை’ கெடுக்க வேண்டுமென்பதுதான் திட்டம். அவனும் அட்டகாசமாக கதை பேசினான். பன்னிரெண்டு மணி வரைக்கும் பேசிவிட்டு நான் சந்தோஷமாகத் தூங்கிவிட்டேன். அவனும் என்னோடுதான் படுத்தான். ஆனால் நான் தூங்கிய பிறகு எழுந்தவன் விடிய வரைக்கும் படித்து என்னை முந்திவிட்டான்.

இப்படி எந்தத் திட்டத்தாலும் தோற்கடிக்க முடியாத ஜாம்பவானாக இருந்த அவனை நான் கைவிட்டுவிட்டேன். ஆனால் அம்மா அப்பாதான் என்னை விட வில்லை. பத்தாம் வகுப்பிலும், பன்னிரெண்டாம் வகுப்பிலும் அட்டகாசமான மார்க் வாங்கினான். அவன் டாப் க்ளாஸ் கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ். நான் குட்டிக்கரணம் அடித்து அப்போது சுமாராக இருந்த கல்லூரியில் சேர்ந்தேன். அதுவும் எலெக்டிரிக்கல்தான். அப்பொழுதெல்லாம் கம்யூட்டர் சயின்ஸ்தான் கனவுக்கன்னியாக இருந்தது. அதையும் வீட்டில் குத்திக்காட்டினார்கள். பல தகிடுதத்தங்களுக்கு பிறகு நான் எம்.டெக் சேர்ந்த போது அவன் மிகச் சிறந்த கல்லூரியில் எம்.பி.ஏ படித்தான். 

இப்படியான அத்தனை அக்கப்போர்களையும் தாண்டி வேலைச் சேர்ந்து இத்தனை வருடங்களில் அவனை மறந்திருந்தேன். இன்றைக்கு ஒரு பேரதிர்ச்சி. நம்ப முடியாத இன்ப அதிர்ச்சி. முதல் பத்தியில் சொன்ன இண்டர்வியூ மேட்டர்தான் தான். இண்டர்வியூ எடுக்க வேண்டியது நான். எதிர்முனையில் பிரதீப். அவனது Resume ஐ பார்த்தவுடனே நான் உற்சாகத்தில் எகிறிக் குதித்தேன். நல்ல அறையாக பார்த்து அமர்ந்து கொண்டு அவனை அழைத்த போது பவ்யமாகப் பேசத் துவங்கினான். எனது பெயரை மாற்றிச் சொல்லியிருந்தேன்.

சில கேள்விகளைக் கேட்டவுடன் நாங்கள் எதிர்பார்க்கும் டெக்னாலஜியில் அவனுக்கு அனுபவம் இல்லை என்று தெரிந்துவிட்டது. ஆறாம் வகுப்பு பிரதீப் மனக்கண்ணில் வந்து வந்து போனான். எனது டார்ச்சரை ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட அழாத குறையாக பதில் சொன்னான். இன்னமும் உற்சாகமாகிவிட்டேன். டார்ச்சரை டாப்கியரில் மாற்றி ஓட்டத் துவங்கினேன். கொஞ்சம் நேரம் பொறுத்தவன் இணைப்பைத் துண்டித்துவிட்டான். திரும்ப எத்தனை முறை அழைத்தும் எடுக்கவில்லை. என்னைவிட டுமீலாக மாறியிருப்பான் போலிருக்கிறது. கொஞ்ச நேரத்திற்கு பிறகு எனது மொபைலில் இருந்து அழைத்தேன். எடுத்தான். 

“கட் ஆகிடுச்சா” என்றேன்.

 “ஆமாம்” என்று வழிந்தான். 

“இண்டர்வியூவைத் தொடரலாமா?” என்றேன்.  

“இப்பொழுது கஷ்டம்” என்றான். 

“ப்ரெண்ட்ஷிப்பைத் தொடரலாமா” என்று ப்ளாஷ்பேக்கை ஆரம்பித்தேன்.

மணிக்கணக்கில் பேசிவிட்டு வந்து இந்தக் குறிப்பை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Dec 5, 2012

Dynora Vs Solidaire : எந்த டிவி வாங்கலாம்?



ஒரு ப்ளாக் அண்ட் ஒயிட் படத்தில் பணக்கார நாயகி தன்னை சமூக சேவகி என்பதை நிரூபிப்பதற்காக ஒரு விளக்குமாரைக் கையில் பிடித்துக் கொண்டு காமிராவுக்கு போஸ் கொடுப்பார். படத்தின் பெயர் மறந்துவிட்டது. தூர்தர்ஷனில் பார்த்த படம் அது. அந்த நாயகியை காமிராக்காரன் வளைத்து வளைத்து படம் எடுப்பான். இந்த ப்ளாக் அண்ட் ஒயிட் நாயகி பற்றி எழுதப்போவதில்லை. அவள் இப்பொழுது என் ஞாபகத்திற்கு வந்தததற்கான காரணத்தை இன்னொரு நாளைக்குச் சொல்கிறேன்.

ஆனால் இந்தப்படத்தை பார்த்த காலத்தில் எங்கள் வீட்டில் டி.வி இல்லை என்பதை இப்பொழுது சொல்லிவிடுகிறேன். எங்கள் வீடு என்றில்லை நம் பெரும்பாலான வீடுகளில் டிவி இருக்காது.

ஒருமுறை டயனோரா டிவி வாங்கலாமா அல்லது சாலிடரா என்று வீட்டில்  விவாதத்தை துவக்கினார்கள். எப்படியும் டிவி வந்துவிடும் என நம்பிக் கொண்டிருந்தேன். மனசுக்குள் பட்டாம்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக பறக்கத் துவங்கின.  கடைசியில் இரண்டும் விலை அதிகம் என்று இன்ஸால்மெண்டில் ஒரு ரேடியோ செட்டை அப்பா வாங்கி வந்தார். அதற்கு பிறகு பல வருடங்களுக்கு டிவி பற்றி கேட்கவே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

பிறகு வழக்கம் போல வீடு வீடாக டிவி பார்க்க படையெடுக்கத் துவங்கினேன்.  டிவி இருந்தால் அது பணக்காரர்களின் வீடாக இருக்கும். அதுவும் ப்ளாக் அண்ட் ஒயிட் டிவிதான். கலர் டிவி ஊர் மொத்தத்திற்கும் ஒன்று இருந்தாலே பெரிய விஷயம். கலர் டிவி இருக்கும் வீட்டுக்காரர் மிகப்பெரிய பணக்காரராக இருப்பார் என்பதால் அந்த வீட்டிற்கு டிவி பார்க்க போவதற்கு துணிச்சல் இருக்காது.

சுமாரான பணக்காரர்கள் வீட்டிலும் அவ்வளவு சீக்கிரம் நுழைந்துவிட முடியாது. டிவிக்காரரின் வீட்டிலிருந்து வெகு தூரத்தில் பொடியன்கள் நின்று கொள்ள ஒருவன் மட்டும் பதுங்கிச் சென்று டிவி ஓடுகிறதா என்று பார்ப்பான். அவன் சிக்னல் கொடுத்தவுடன் வீட்டுக்காரர்களுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்ற பிரக்ஞையுடன் ஒவ்வொருவரவாக நுழைய வேண்டியிருக்கும். சில நிமிடங்களில் அந்த வீட்டில் பெருங்கூட்டம் சேர்ந்துவிடும். சில பெண்கள் குழந்தை குட்டிகளுக்கு தேவையான துண்டை எடுத்துவந்து விரித்துப் போட்டு தூங்க வைத்துவிடுவார்கள்.

டிவி ஓடும் போது அருகில் இருப்பவனுடன் பேசுவதாக இருந்தாலும் கூட கிசுகிசுப்புதான். வாய் மீது கையை வைத்து மறைத்துக் கொண்டு பேசியது ஞாபகத்திலிருக்கிறது. ‘மேல்மாடி காலி’ போன்ற சில வார நாடகங்களுக்கு படு கூட்டமாக இருக்கும். ஒல்லிப்பிச்சான் கோவை அனுராதாவை பார்த்தாலே கெக்கேபிக்கே என்று சிரிப்பு வந்துவிடும். கோவை அனுராதா எப்படியிருக்கிறார்?. வாஷிங்பவுடர் நிர்மாவெல்லாம் ஏன் மார்கெட்டில் கிடைப்பதில்லை? போன்ற கேள்விகள் இப்பொழுது தோன்றுவதற்கு அவசியமும் இல்லாமல் அவகாசமும் இல்லாமல் போய்விட்டது.

அறுவை போடும் மனிதர்களை ‘வயலும் வாழ்வும்’ என்று அழைத்துக் கடுப்பேற்றியது, ஒரு வார்த்தையும் புரியாவிட்டாலும்  ‘சித்ரஹார்’பாடல்களை வாயைத் திறந்து பார்த்தது எல்லாம் வசந்தகாலமாகத்தான் தெரிகிறது. மேகக் கூட்டம் வந்தாலே ஆண்டெனா ப்ளக்கை கழட்டி விட்டது, ஆண்டெனா கம்பி வளைந்து போய்விடக் கூடும் என்பதற்காக காகங்களை அமரவிடாமல் துரத்திவிட்டது போன்றவற்றை இப்பொழுது நினைத்தாலும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. Golden Times!

ஞாயிற்றுக்கிழமை படம் பார்க்க பெரும்பாலும் பஞ்சாயத்து போர்டுக்குத்தான் போக வேண்டும். அதற்கு காரணம் இருக்கிறது. பணக்கார வீடுகளில் பாதிப்படம் ஓடிக் கொண்டிருக்கும் போது சில முசுடுகள் டிவியை நிறுத்தி துரத்திவிட்டுவிடுவார்கள். பஞ்சாயத்து போர்டில் இந்த தொந்தரவு இருக்காது. ஆனால் பஞ்சாயத்து போர்டில்தான் படம் பார்ப்பார்கள் என்று தெரிந்து கொண்டு அம்மாவோ அப்பாவோ நேராக வந்துவிடுவார்கள். சண்டைக்காட்சி வரும் போது ‘சாப்பிட வா’ என்று டார்ச்சரைக் கொடுப்பார்கள்.

வெள்ளிக்கிழமை மாலைகளில் ஒளியும் ஒலியுமுக்காக சேரும் பெருங்கூட்டத்தில் முண்டியடித்து இடம்பிடித்துவிடுவது பெரும் பாக்கியம். அப்படி ஒரு நாள் டிவி பார்த்துக் கொண்டிருந்த போதுதான் கவிதா அக்காவின் கணவன் குடித்துவிட்டு வந்திருந்தான். அந்த அக்கா டிவி பார்க்க போயிருப்பது அவனுக்கு தெரியவில்லை. கொஞ்ச நேரம் கத்திக் கொண்டிருந்தவன் அப்படியே வாசலில் தூங்கிவிட்டான். ஒளியும் ஒலியும் பார்த்துவிட்டு உற்சாகமாக வந்த கவிதா அக்கா இவனை பார்த்ததும் உறைந்து போய் நின்றாள். எங்களோடு வந்த சில பெண்கள் தைரியமாக போகச் சொன்னார்கள். அவளும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு முன்னேறினாள். குழந்தை அவளது இடுப்பில் ஒட்டியிருந்தது. அசைவற்றுக் கிடக்கும் தைரியத்தில் சப்தமில்லாமல் அவன் கால்களைத் தாண்டி அவள் கதவைத் திறப்பதை பார்த்துக் கொண்டிருந்தோம். 

கிசுகிசுப்புடன் எங்களுக்குள் சிரித்துக் கொண்டிருந்த அந்த கணத்தில் மிருகம் விழித்துக் கொண்டது. படுத்தவாறே அவளது இடுப்பில் ஓங்கி உதைத்தான். முதலில் குழந்தையும் அவள் மீது கவிதா அக்காவுமாக சாக்கடைக்குள் விழ பெரும் அதிர்ச்சியில் உறைந்து போனோம். பெண்கள் ஒதுங்கிக் கொள்ள சில ஆண்கள் ஓடிவந்து அவனைத் தடுத்தார்கள். சில பெண்கள் கவிதா அக்காவை பார்த்து அழத்துவங்கினார்கள். நான் பயத்தில் வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன்.

அவளையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுவிட்டார்கள் என பிரகாஷ் சொன்னான். அவளுக்கு என்ன ஆனது என்று கேட்கவேயில்லை. அதன் பிறகு அந்த வீடு திறக்கப்படவேயில்லை. சில மாதங்களுக்கு பிறகாக வேறொரு பெண் அந்த வீட்டில் கோலம் போடுவதைப் பார்த்தேன். இப்பொழுது வரைக்கும் கவிதா அக்காவுக்கு என்ன ஆனது என்று யாரிடமும் கேட்டதில்லை. ஆனால் மியூசிக் சேனல்களுக்கு டிவி ரிமோட்டை விரட்டும் போது அந்த அக்காவின் ஞாபகம் அவ்வப்போது வந்து போகிறது.

Dec 3, 2012

கொன்றுவிட்டு போனவன்



ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் சாலை இப்பொழுதெல்லாம் எனக்கு மிக முக்கியமானதாக மாறியிருக்கிறது. அதற்காக இந்தச் சாலையில் வீடு எதுவும் வாங்கிப் போட்டிருக்கவில்லை.  அழகிய பெண்கள் நிறைந்த கல்லூரி எதுவும் இந்தச் சாலையில் இல்லை. அப்படியிருந்தும் இந்தச் சாலையில் பயணிக்கும் போது அதன் இரண்டு பக்க மரங்களும், குளிர்ச்சியும் பெங்களூரின் உயிர்மையை இன்னமும் இழுத்துப் பிடித்திருப்பதாகத் தோன்றும்.

வழக்கம் போல அலுவலகம் வந்து கொண்டிருந்த போதுதான் அந்த விபத்தை பார்க்க நேர்ந்தது. வாட்டசாட்டமான ஆள். தோளில் லேப் டாப் பை, ஹெல்மெட், மடிப்பு கலையாத பேண்ட் சர்ட் என இருந்தார். இந்தச் சாலை அகலமாக இருந்தாலும் ஓரங்களில் குண்டும் குழியுமாக இருப்பதால் பெரும்பாலான வண்டிகள் குழிகள் இல்லாத இடத்தை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கும். அந்த இடங்களில் வாகன நெருக்கமும் அதிகமாக இருக்கும். அப்படியான ஒரு குழியிலிருந்து ஒதுங்கியிருப்பார் போலிருக்கிறது. பின்னாலிருந்து வேகமாக வந்த ஒரு கால் டாக்ஸிக்காரன் உரசியிருக்கிறான். இவர் கீழே உருளவும் அவன் நிற்காமல் சென்றுவிட்டான். 

அத்தனை கூட்டம் இருந்த போதும் அந்த டாக்ஸிக்காரனை ஒருவரும் நிறுத்தவில்லை. நான் அந்த இடத்தை அடையும் போது விபத்து நடந்து மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் ஆகியிருக்கும். அங்கிருந்த சிலர் இவரை ஓரமாக நகர்த்திவிட்டு ஆம்புலன்ஸூக்கும், போலீஸூக்கும் தகவல் கொடுத்துவிட்டார்கள். ஆனால் யாரும் அந்த டாக்ஸியின் நெம்பரை குறித்து வைக்கவில்லை என்று கைவிரித்துவிட்டார்கள். போலீஸ்காரனுக்கு இன்னுமொரு விபத்து. ஆம்புலன்ஸ்காரனுக்கு இன்னும் ஒரு உயிர். அவர்களின் தினசரி வேலைகளில் இதுவும் ஒன்று. 

யாரும் அவரது ஹெல்மெட்டை கழட்டியிருக்கவில்லை. ஹெல்மெட்டின் கண்ணாடியை தூக்கிவிட்டு வாய்வழியாக நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள். யார் வீட்டுத் தண்ணீரோ அவரது தொண்டைக்குழியை நனைத்தது போக வழிந்து சாலையில் ஓடிக் கொண்டிருந்தது. யாரோ ஒருவர் ஹெல்மெட்டை அசைத்த போது அவரது கால்கள் துள்ளின. வலிக்கக் கூடும் என்று அவர் கழட்டுவதை நிறுத்திவிட்டார். ஹெல்மெட் வழியாக விழிகளை பார்க்க முடிந்த போது உறையச் செய்தன. அந்த விழிகள் எதையோ சொல்ல முயல்கின்றன என்பதை  ஒவ்வொருவராலும் புரிந்து கொள்ள முடியும். அது அத்தனை பரிதாபமான பார்வையாக இருந்தது. தனது மனைவிக்கு தகவல் சொல்லிவிடச் சொல்லி கேட்டிருக்கலாம் அல்லது குழந்தையை ஒரு முறை பார்க்க விரும்புகிறேன் என்று கெஞ்சியிருக்கலாம். ஆனால் யாராலும் துல்லியமாக புரிந்து கொள்ள முடியாத பார்வை அது. அந்தப்பார்வையை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் வேறு பக்கம் பார்க்கத் துவங்கினேன்.

அதே சாலையில் வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு வாகன ஓட்டியும் ஒரு கணம் ஆக்ஸிலேட்டரில் இருந்து காலை எடுத்து கீழே விழுந்து கிடப்பவரை பார்த்துவிட்டு மீண்டும் மிதிக்கத் துவங்கினார்கள். இவரை பார்க்க விரும்பாத அல்லது துணிவில்லாத வாகன ஓட்டிகள் தமக்கு முன்பாக இருக்கும் வாகனங்களை ஹார்ன் சத்தத்தால் விரட்டத்துவங்கினார்கள்.

ஆம்புலன்ஸ் சப்தம் தூரத்தில் கேட்டது. இவரை எடுத்துச் செல்லத்தான் வரக்கூடும் எனத் தோன்றியது. இனி இவர் பிழைத்துக் கொள்ளக் கூடும் என நினைத்துக் கொண்டு இருந்தபோது யாரோ ஒருவர் அவரின் செல்போனை பாக்கெட்களில் தேடிக் கொண்டிருந்தார். செல்போன் இருக்கிறது என அவர் சொன்ன போது கால்கள் மீண்டும் துள்ளின. அது ஆக்ரோஷமான துள்ளல். அதுதான் கடைசி துள்ளலும் கூட. அவசரமாக விழிகளைப் பார்த்த போது அவை குத்திட்டு நின்றன. திறந்த வாயில் எந்த அசைவும் இல்லை. செல்போனை எடுத்தவர் ‘ஆயித்து’ என்று சொல்லி ஒரு சோகமான பார்வையை உதிர்த்தார். சுற்றி நின்றவர்களின் ‘உச்சு’கள் அந்த இடத்தை நிரப்பின.

செல்போனை எடுத்தவரின் விரல்கள் நெம்பர்களை பிசையத் துவங்கின. இறந்தவரின் வீட்டில் இன்று அவர் குளித்துவிட்டு துடைத்த துண்டு ஈரம் காயாமல் கிடக்கக் கூடும். தலைவாரிய சீப்பில் ஓரிரண்டு முடிகள் ஒட்டியிருக்கலாம். கடைசியாக உண்ட உணவுத்தட்டு கழுவப்படாமல் இருக்கக் கூடும். மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் இந்தக் கணம் வரைக்கும் இது மற்றொரு வழக்கமான நாள்.  இந்தக் கடைசி அழைப்பு அவர்களை ஒட்டுமொத்தமாக புரட்டிப்போடவிருக்கிறது. இந்த கடைசி அழைப்புதான் அவர்களின் வீட்டிற்கு ஒரு பிரளையத்தை தூக்கிச் செல்லவிருக்கிறது. தலைவிரிகோலமாக மருத்துவமனைக்கு ஓடிவரவிருக்கிறார்கள். குழந்தைகளின் பிஞ்சு பாதங்கள் மார்ச்சுவரியின் வாசலை மிதிக்கப்போகின்றன. யோசிக்கவே பாரமாக இருந்தது.

தனது குடும்பத்திற்கான அத்தனை கனவுகளையும் இந்த ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் சாலையில் இறைத்துவிட்டு போயிருக்கிறான். அவை பொறுக்குவாரில்லாமல் தெறித்துக் கிடக்கின்றன. இப்பொழுது நூற்றுக்கணக்கான வாகனங்கள் விரையத்துவங்குகின்றன. வாகனங்களின் சக்கரங்கள் கனவுகளை நசுக்கும் சாலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவை எந்தக்காலத்திலும் திரும்பப் போகாத கனவுகள்.

Nov 29, 2012

என்னோடு சேர்த்து நான்கு டெரரிஸ்ட்ஸ்




ஒரு வட்ட மேஜை மாநாடு. வட்ட மேஜை என்ன வட்டமேஜை? வெட்டி மேஜை மாநாடு அது. ஆளாளுக்கு தனது வீர பிரதாபங்களை அடுக்கிக் கொண்டிருந்தோம். 

கெளதம்தான் ஆரம்பித்தான். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ரேங்க் ஷீட்டில் அப்பாவின் கையெழுத்தை அவனே போட்டுவிட்டானாம். வாத்தியார் கண்டுபிடித்துவிட்டார். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் நொக்கியும் எடுத்துவிட்டார். நண்பர்கள் குழாமோடு சேர்ந்து திட்டம் தீட்டியவன் அந்த வாத்தியாரை பழி வாங்குவதாக முடிவு செய்துவிட்டான். ஆனால் உடனடியாக திட்டத்தை அமல்படுத்தினால் அந்த கிரிமினல் வாத்தியார் தன்னைக் கண்டுபிடித்துவிடக் கூடும் என்பதால் கொஞ்ச நாட்களுக்கு தனது முடிவை தள்ளி வைத்துவிட்டான்.

அதற்கான காலம் மூன்று மாதங்களுக்கு பிறகு கனிந்தது. ஒருநாளும் இல்லாத திருநாளாக அந்த வாத்தி தனது புதிய வெள்ளை நிற மாருதி 800 இல் பள்ளிக்கு வந்துவிட்டார். இப்பொழுது நண்பர்கள் யாரையும் கூட சேர்த்துக் கொள்ளவில்லை. ஒன் மேன் ஆர்மியாக செயல்படுவது என்ற தனது திட்டத்தை செயல்படுத்துவதற்காக காம்பஸை எடுத்து யாரும் பார்க்காத நேரத்தில் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். பிறகு நீங்களும் நானும் எதிர்பார்த்ததுதான். அவரது காரில் ஒரு புதுக்கவிதை எழுதி வைத்துவிட்டான். 

“என்ன எழுதின?” என்றேன்.

“மாம்ஸ், உன் பொண்ணு சூப்பர் பிகர்” என்று எழுதினானாம். இப்பொழுது அந்த மாம்ஸ்தான் ரியல் மாமனார். ஆனால் மாமனாருக்கு இந்த மேட்டர் தெரியாது.

அடுத்தது சுஜய். பெங்காலி. கொஞ்சம் ஹை-ஃபை டைப். அதனால் அவன் பென்ஸ் காரில் ஆரம்பித்தான். தனது அபார்ட்மெண்டில் பென்ஸ் வைத்திருக்கும் கிழவனார் ஒருத்தர் இவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்து“இங்கு விளையாடினால் எப்படி நடப்பது” என்று கேட்டிருக்கிறார். “பென்ஸ் வைத்துக் கொண்டு எதற்கு நடந்து போகிறீர்கள்?” என்று சுஜய் பதில்கேள்வியைக் கேட்டிருக்கிறான். இதைக் கேட்டபோது சுஜய்யின் வயது பதினேழு. ப்ளஸ் டூ படித்த பருவம். இவனது கேள்வியில் கடுப்பான கிழவர் ஆங்கிலத்தில் சில கெட்டவார்த்தைகளைச் சொல்லி திட்டி பிறகு செக்யூரிட்டியை அழைத்து இந்த காக்கைகள் கூட்டத்தை துரத்திவிட்டுவிட்டார். 

அடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமையில் தனது அபார்ட்மெண்டிலேயே இருக்கும் நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு வந்த போது நடுவயது ஆண்ட்டியைப் போல நின்று கொண்டிருக்கிறது பென்ஸ். அந்தக் காலத்து பென்ஸில் அதன் லோகோ முன்புற டிக்கியில் நட்டுக் கொண்டு நிற்கும். அதுதான் சுஜய்யின் கண்களை உறுத்தியிருக்கிறது. அந்த லோகோ மீது ஈர ஜட்டியோடு ஏறி அமர்ந்திருக்கிறான்.  

“அப்போ என்ன ஆச்சு தெரியுமா?” என்று சஸ்பென்ஸ் வைத்து நிறுத்தினான்.  

“ஜட்டியைக் கிழித்ததுமில்லாமல் உன்னையும் பஞ்சராக்கிவிட்டதா?” என்று கெளதம் நக்கலடித்தான்.

“நோ நோ” என்றவன் தனது பர்ஸின் ஒரு அறையை பிரித்துக்காட்டினான். இன்னமும் அந்த லோகோ அந்த பர்ஸுக்குள்தான் இருக்கிறது. தனது வீரவிளையாட்டில் கிடைத்த மிகப்பெரிய பரிசு இது என்றான். இப்பொழுது கிழவனின் முகமும், கொண்டை அறுபட்ட பென்ஸ் ஆண்ட்டியும் பாவமாக மனதுக்குள் நிழலாடினார்கள்.

அடுத்து அருள். அக்மார்க் தமிழன். பாக்யராஜைவிடவும் தேர்ந்த திரைக்கதைக்காரன். அவனும் ஒரு காரை வைத்துதான் கதையைத் தொடங்கினான். ஒரு கார்க்காரன் வெளியே எட்டி உமிழ்ந்தபோது பக்கத்தில் பைக்கில் ஓட்டி வந்த இவன் முகத்தில் தெறித்துவிட்டது. அவனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என முடிவு செய்தவன் அந்தக் காரை துரத்துகிறான். அந்தக் கார் மிக வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் எப்படியோ அடுத்த சிக்னலில் மாட்டிக் கொள்கிறது. தனது பையில் இருந்த வாட்டர் பாட்டிலிருந்து கொஞ்சம் நீரை வாயில் ஊற்றிக் கொப்புளித்துக் கொண்டே கார் ஜன்னல் கண்ணாடியைத் தட்டியிருக்கிறான். அவன் சைகை காட்டிய போது இவனும் கண்ணாடியை கீழே இறக்கு என சைகை காட்டியதால் அவன் எதார்த்தமாக திறந்துவிட்டான். 

“ப்ப்ப்ப்ப்புளிளிளிச்ச்ச்ச்ச்ச்”- அவ்வளவுதான். அவன் சுதாரிப்பதற்குள் இவன் சிக்னலைத் தாண்டிவிட்டான்.

இவர்கள் மூன்று பேர்களுக்கும் அடுத்து நான் எனது வீரக்கதையை சொல்ல வேண்டும்.தயாரேனேன். ஆனால் அதற்குள் மீட்டிங்குக்கு நேரமாகிவிட்டது என்று கிளம்பிவிட்டோம். மீட்டிங்கின் போது இந்த சம்வங்கள்தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அவரவரளவில் தான் செய்த காரியத்தை விளையாட்டு என்றோ அல்லது செய்தது சரியென்றோ Justify செய்துவிட முடியும். ஆனால் யோசித்துப்பார்த்தால் வன்மத்தை புதரைப்போல வளர்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் புதருக்குள்ளிலிருந்துதான் எந்தவிதமான தயவுதாட்சண்யமுமில்லாமல் எதிரியை அட்டாக் செய்யும் கொடூரமான காட்டுவிலங்கொன்று அவ்வப்போது வெளிப்பட்டுவிடுகிறது. அதை மறைக்கத்தான் பேண்ட்,சர்ட்,கூலிங்கிளாஸ், இரண்டு மூன்று மொழி புலமையெல்லாம் தேவைப்படுகிறது போலிருக்கிறது. 

Nov 27, 2012

அப்பா...உங்க கால் மேலேயே ஒண்ணுக்கு அடிச்சுட்டேன்




காலையில் நான்கு மணிக்கு தூக்கத்திலிருக்கும் அப்பாவை எழுப்பும் சிறுவன் “அப்பா ஒண்ணுக்கு” என்று அந்த தினத்தை துவங்கி வைக்கிறான். இப்படித்தான் அட்டகாசமாகத் துவங்குகிறது அந்த நாவல். அப்பாதான் தூக்கக் கலக்கத்தில் இருப்பார். ஆனால் சிறுவன் அப்பொழுதே படு சுறுசுறுப்பாகியிருப்பான். பாத்ரூமில் அவனை விட்டுவிட்டு கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கும் போது அவரது கால் மீது அடித்துவிட்டு “அப்பா உங்க கால் மேலேயே ஒண்ணுக்கு அடிச்சுட்டேன்” என்று ஆரம்பிப்பான் அன்றைய தினத்துக்கான அவனது லூட்டியை.

இரண்டு கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது. ஏழாயிரம் பக்கங்களுக்கு. இவ்வளவு பெரிய நாவலை படித்துவிட முடியும் என்று நினைத்துப்பார்த்தது கூட இல்லை. அதுவும் பதினைந்து நாட்களில். அதைவிடவும் அப்படியொரு நாவல் இருப்பதே எனக்குத் தெரியாது. மார்ஷெல் ப்ரஸ்ட் எழுதிய In search of lost time தான் இதுவரை எழுதப்பட்ட நாவல்களிலேயே மிக நீளமானது என விக்கிபீடியா சொன்னதை நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது அதைவிடவும் நீளமான ஒரு நாவலை பார்த்தாகிவிட்டது.

அல்பேனிய நகரான Fierதான் இந்த ஏழாயிரம் பக்க நாவலின் களம்.  கணவனையும் மூன்று வயதுக் குழந்தையையும் விட்டுவிட்டு அலுவலக பயணமாக பதினான்கு நாட்களுக்கு மனைவி ஜெர்மனி போய்விடுகிறாள். அவள் போனபிறகுதான் நாவல் தொடங்குகிறது. நாவல் தொடங்குகிறது என்பதைவிடவும் சிறுவனின் அழிச்சாட்டியம் தொடங்குகிறது என்பதுதான் பொருத்தமாக இருக்கும். அடுத்த பதினான்கு நாட்களுக்கும் அந்தச் சிறுவன் அடிக்கும் லூட்டிகளும் அவனது முப்பது வயது அப்பாவின் கண்ணாமுழி திருகலுமாக படு ஆர்ப்பாட்டமான நடையில் நாவல் நகர்கிறது. 

விடிந்தும் விடியாமலும் தன் கால் மீது சிறுநீர் கழித்துவிட்டதை சிறுவன் பெருமையடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் கழுவி துடைத்து பாத்ரூமை விட்டு வெளியே வருவார். இன்னும் இருளாக இருப்பதாகவும் திருடன் வருவான், பூனை வரும் என்றெல்லாம் சொல்லி சிறுவனை அழைத்துவந்து மீண்டும் படுக்கையில் அமுக்குவார். ஐந்து நிமிடங்களில் “அப்பா ஆய் வருது” என்பான். இன்றைய தனது தூக்கம் அவ்வளவுதான் என்று நினைத்து அவன் டாய்லெட்டில் அமர்ந்து கொண்டிருக்கும் போதே பல் துலக்கி முகம் கழுவி முடித்துவிடுவார். அவனுக்கும் கழுவிவிட்டு வெளியே வரும் போது “அப்பா நான் தூங்கப்போறேன்” என்று படுக்கையில் படுத்து அவரைக் கடுப்பேற்றுவான். முகம் கழுவியிருந்தாலும் பரவாயில்லை தூங்கிவிடலாம் என்று போர்வைக்குள் புகுந்து தூங்க முயற்சிக்கும் போது “அப்பா பசிக்குது. பால் வேணும்” என டபாய்ப்பான்.

இரவிலேயே இத்தனை அட்டகாசங்கள் என்றால் பகலில் என்ன செய்வான் என்பதை தனியாகச் சொல்ல வேண்டுமா? அதகளம்தான். கீழ்தளத்தில் வீட்டு ஓனர் பகல் தூக்கம் போடும் அறையை எப்படிக் கண்டுபிடிப்பானோ தெரியாது நேராக அதே இடத்தில் ஒரு பாத்திரத்தை ‘டமார்’ என்று நொறுக்குவான். அவர் அடித்துபிடித்து மேலே வந்து எச்சரித்து விட்டு கீழே போவதற்குள் இன்னொரு டமார். அவருக்கு பதில் சொல்லி அப்பாதான் டயர்டாகிக் கொண்டிருப்பார். சிறுவனும் சரி, அந்த வீட்டு ஓனரும் சரி டயர்டாகாமல் டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டை தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.

சில சமயங்களில் கோபம் உச்சந்தலையில் நட்டுக் கொள்ளும் போது சிறுவனை மிரட்டலாம் என எத்தனிப்பார். “அம்மா வேணும்” என அழ ஆரம்பித்துவிடுவான். கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு  “நாளைக்கு ப்ளைட் ஏறிப்போலாமா?” என்று அவனை திசைமாற்றினால் பத்து நிமிடம் அமைதியாக இருப்பான். பிறகு அதே சரணம், பல்லவி, அனுபல்லவி எல்லாம் தொடரும் “அம்மா வேணும்”. ஒரு கட்டத்தில் இனி வாழ்நாளில் கோபமே படக்கூடாது என அப்பா முடிவு செய்வார்.

பகலெல்லாம் அவனோடு ஆடி முடித்து இரவில் தொண்டைத்தண்ணீர் வற்ற கதைகளைச் சொல்லி தட்டிக் கொடுப்பார். ஓரு மணி நேரத்திற்கும் மேலாக கதையைச் சொல்லி முடித்து சிறுவன் தூங்கிவிட்டதாக கண்ணை மூடுவார். ஆனால் சிறுவன் தூங்கியிருக்க மாட்டான். “அப்பா..அப்புறம்?” என்பான் சிறுவன். மீண்டும் அனர்த்த ஆரம்பித்தால் பன்னிரெண்டு மணி வரைக்கும் “ம்ம்ம்” கொட்டிக் கொண்டேயிருப்பான். பன்னிரெண்டு மணிக்குத்தான் இரண்டு பேரும் தூங்கியிருப்பார்கள். ஆனால் மீண்டும் ஒன்றரை மணிக்கு எழ வேண்டியிருக்கும். அதற்கும் காரணமிருக்கிறது. இருவரின் ஆடைகளையும் வெதுவெதுப்பான சிறுநீரில் நனைத்திருப்பான். மாற்றிவிட்டு தூங்கினால் மீண்டும் வழக்கம் போல நான்கு மணிக்கு எழுந்துவிடுவான். பிறகு புதுப்புது சாகசங்களைச் செய்வான்.

இப்படியான இரவு லூட்டிகளும், பகலில் குளிக்க வைப்பதிலிருந்து சாப்பாடு ஊட்டுவது வரைக்குமான அத்தனை அட்டகாசங்களும் இம்மிபிசகாமல் நாவலாகியிருக்கிறது. குழந்தைகளின் உலகத்தை இவ்வளவு துல்லியமாக வாழ்ந்து பார்த்தால் மட்டுமே அனுபவிக்க முடியும். நம் எல்லோருக்குமே குழந்தைகளோடு அனுபவம் இருக்கிறது. அதுவும் அப்பாவுக்கும் மகனுக்குமான உறவில் ஒரு நட்பு சார்ந்த ரிலேஷன்ஷிப் இருக்கும். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா என்று தெரியவில்லை. அப்பா மகன் உறவை இத்தனை துல்லியமாக ஒரு நாவலில் சொல்ல முடிகிறது என்பதை ஆச்சரியத்தோடு நினைத்துக் கொண்டே தூங்கியிருந்தேன்.

விடிந்தும் விடியாமலும் “அப்பா ஒண்ணுக்கு” என்று மகி எழுப்பினான். எழுந்து பார்த்தால் நான் எந்த நாவலையும் வாசித்திருக்கவில்லை. என் மனைவி ஜெர்மனி போனதற்கு பிறகு மகனுடன் நான் நடத்தும் பதினான்கு நாள் பாசப்போராட்டமும் ஒரு நாவல் படிப்பது போன்ற கனவாக வந்திருக்கிறது. அதுவும் ஏழாயிரம் பக்கங்களுடைய நாவலைப் படிப்பதாக.

இதோ இன்றைக்கும் அதே கால்கள் நனைப்பு, ஆய், பசி என அத்தனையும் வழமை மாறாமல் செய்துவிட்டு இப்பொழுது தூங்கிக் கொண்டிருக்கிறான். நான் கிடைத்த இடைவெளியில் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Nov 26, 2012

முஸ்லீம்ஸ் ஏமாத்திடுவாங்க




வீட்டின் முன்புறமாக கற்கள் ஒட்ட வேண்டிய வேலை ஒன்றிருந்தது. சில வீடுகளின் முன்பாக கருங்கற்களை வரிசையாக ஒட்டியிருப்பதை கவனித்திருப்பீர்கள். அந்த வேலைதான். கற்களை வெட்டுவதிலிருந்து நேர்த்தியாக ஒட்டுவது வரைக்கும் முஸ்லீம்கள்தான் இந்த வேலையை கச்சிதமாகச் செய்வார்கள் என்று சொன்னார்கள்.

பெங்களூரில் ஷில்கரிபாளையா என்ற இடம் இருக்கிறது. அங்கு இந்த வேலை செய்யும் முஸ்லீம்கள் நிறைய இருப்பதாகச் சொல்லி நியாமத் என்பவரின் எண்ணைக் கொடுத்தார் ஆர்கிடெக்ட் ஒருவர். நெம்பர் தந்ததோடு நிறுத்தாமல் ஒரு எச்சரிக்கையையும் சேர்த்துக் கொடுத்தார். “பண விஷயத்தில் உஷாரா இருங்க சார். முஸ்லீம்ஸ் காசு வாங்கிட்டு காணாம போயிடுவாங்க”.

நியாமத் ஒரு ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்திருந்தார். வயதானவர். ஜிப்பா, முஸ்லீம் குல்லா, இசுலாமியர்களின் ட்ரேட் மார்க் தாடி என்றிருந்தார். இந்தக் கற்களைப் பற்றி கொஞ்சம் விவரித்தார். சாதரஹள்ளி அல்லது சிரா என்ற வகைக் கற்களைத்தான் பெரும்பாலும் ஒட்டுவார்களாம். சிரா கொஞ்சம் ரேட் அதிகம்.  கல்லின் விலை மட்டும் சதுர அடிக்கு எழுபத்தைந்து ரூபாய். ஒட்டும் கூலி சதுர அடிக்கு நூற்றியிருப்பத்தைந்து ரூபாய் என்றார். நூறு ரூபாய் என்றால் ஒட்டுங்கள் இல்லையென்றால் வேறொருவருக்கு வேலையைக் கொடுத்துவிடுகிறேன் என்ற போது பரிதாபமாகப் பார்த்தார். ஆனால் வேலை செய்வதாக ஒத்துக் கொண்டார்.

“அட்வான்ஸ் வேண்டும்” என்றார்.

“எவ்வளவு தரணும்?”

“பத்தாயிரம் குடுங்கோ சார்” என்றவுடன் ஆர்கிடெக்ட்டுக்கு போன் செய்தேன். மறுபடியும் அதே டயலாக்கை இம்மிபிசகாமல் சொன்னார் “முஸ்லீம்ஸ் காசு வாங்கிட்டு காணாம போயிடுவாங்க”

“இப்போ காசு இல்லைங்க பாய். வேலையை ஆரம்பிங்க வாங்கிக்கலாம்” யோசித்தவர் அதற்கும் சரியென்று சொன்னார்.

“எப்போ வேலை ஆரம்பிப்பீங்க?”

“நாளைக்கே ஆரம்பிச்சுடுறோம். ஆனால் நாளைக்கு சாயந்திரம் காசு வேணும் சார்”

“என்னங்க காசு காசுங்குறீங்க. வேலையைச் செய்யுங்க. காசு வரும்”

எதுவும் பேசாமல் சென்றுவிட்டார். அடுத்த நாள் வேலையைத் தொடங்கினார். இரண்டு மூன்று ஜூனியர்களோடு வந்திருந்தார். எல்லோரும் குடும்ப உறுப்பினர்களாம். ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. வேலை படு வேகமாக நடந்தது. அவர்கள் எத்தனை வேகமாக வேலையைச் செய்தாலும் ஒரு நாளைக்கு ஐந்தாயிரத்துக்கு மேல் கொடுத்துவிட வேண்டாம் என்று ஆர்கிடெக்ட் எச்சரித்தார்.

அன்று மாலை ஐந்தாயிரம் கொடுத்தேன். அப்பொழுதும் நியாமத் அதட்டாமல் கேட்டார்.

“ப்ளீஸ் சார், பத்தாயிரம் வேணும்”

“பணம் இல்லைங்க. நாளைக்கு வாங்கிக்கலாம்” என்றேன் .

அவருடன் வந்தவர் என்னிடம் கொஞ்சம் அதட்டலாக பேசினார். அப்பொழுது நியாமத் அவரை சமாதானப்படுத்திவிட்டு என்னிடம் “நாளைக்கு கொடுத்துடுங்க சார்” என்ற போது அவரின் கண்களில் கண்ணீர் கசிந்தது.

சங்கடமாகிவிட்டது.  “ஏ.டி.எம் வர்றீங்களா? எடுத்து தந்துடுறேன்” என்றபோது தலையாட்டினார். இன்னொரு ஐந்தாயிரம் கொடுத்துவிட்டு ஆர்கிடெக்டிற்கு போன் செய்தேன்.

“ஏன் சார் பத்தாயிரம் கொடுத்தீங்க? நாளைக்கு வர மாட்டாங்க பாருங்க” என்றார். அதோடு நிறுத்தாமல் “எத்தனை கட்டடம் நாங்க கட்டறோம்? எங்களுக்கு தெரியாதா சார்?” என்றார்.

நியாமத் ஏமாற்றிவிடுவாரோ என்று பயந்து கொண்டே தூங்கினேன். ஆனால் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு வேலையை ஆரம்பித்திருந்தார்கள். அன்றும் அவர்களுக்குள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. அதே வேகம். மதிய உணவு கூட இல்லாமல் எதற்காக இத்தனை வேகமாகச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அடுத்த ஐந்து நாட்களுக்கும் தினமும் பத்தாயிரம் வாங்கிக் கொண்டார்கள். நான் ஆர்கிடெக்டிடம் பணம் சம்பந்தமாக ஆலோசனை கேட்பதைக் குறைத்திருந்தேன். பத்து நாட்களில் முடிப்பதாகச் சொன்ன வேலையை ஐந்து நாட்களில் முடித்துவிட்டார்கள்.

கடைசி தினத்தில் இன்னொரு பத்தாயிரம் கொடுத்த போது கணக்கு முடிந்திருந்தது. நியாமத் நன்றி சொன்னார். பிறகு முகம், கை கால்களைக் கழுவினார்.  அவருக்குப் பின்னால் ஒவ்வொருவராக கை கால் கழுவினார்கள். கிளம்புவதற்கு தயாரான போது கேட்காமல் இருக்க முடியவில்லை.

“ஏன் ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொள்ளாமல் வேலை செய்யறீங்க?” என்றபோது அவரது ஜூனியர்கள் தங்களுக்குள் முகத்தை பார்த்துக் கொண்டார்கள்.

நியாமத்தான் சொன்னார். அவரது ஜூனியர்கள் ஒவ்வொருவரும் அவரது தம்பிகள். இந்தக் கல் ஒட்டுவதுதான் குடும்பத்திற்கான ஒரே வருமானம். தம்பிகள் யாருக்கும் திருமணம் ஆகவில்லை. நியாமத்துக்கு மட்டும் திருமணம் ஆகிவிட்டது. அவருக்கு மூன்று பெண் குழந்தைகள். கடைசியாக பிறந்த குழந்தைக்கு ஒன்றரை வயது. அவரது மனைவிக்கு கிட்னி ஃபெயிலியராம். ரொம்ப நாட்களாக டயாலிசிஸ் கிட்டத்தட்ட வாழ்வின் இறுதிகட்டத்திற்கு வந்துவிட்டாராம்.

“டயாலிசிஸ், ஆஸ்பத்திரி செலவுன்னு பணம் கரையுது சார். எப்படியும் போயிடுவான்னு தெரியுது. ஆனா விட மனசு வரலை. அவளோட நிலைமை, குழந்தைக, பணத்துக்கான தேவையெல்லாம் எங்களை பேச விடறதில்லே சார். அதான் உங்ககிட்ட  கூட பணம் வேணும்ன்னு திரும்பத் திரும்ப கேட்டேன்” என்ற போது தனது ஜிப்பா நுனியால் கண்களை துடைத்துக் கொண்டார்.

“இதை முன்னாடியே சொல்லியிருக்கலாமே” என்றேன்.

“இல்ல சார். எங்களை யாரும் இங்கே நம்பறதில்ல. என்ன சொன்னாலும் பொய் சொல்லுறதாத்தான் சொல்லுவாங்க” என்றார். என்னிடம் ஒரு பத்தாயிரம் அதிகமாக இருந்தது. “முடிந்த போது கொடுங்க” என்று கொடுத்தேன். “ரொம்ப நன்றி சார். தேவைப்படும் போது வாங்கிக்கிறேன். இப்போ வேண்டாம்” என்று கிளம்பினார். அந்த நடையில் நேர்மையிருந்தது.  அவர் நகர்ந்த பிறகு மனம் பாரமாகியிருந்தது. உடனடியாக வீட்டுக்குள் செல்லாமல் அந்த வீதியில் நடந்து கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்திற்குப் பிறகு ஆர்கிடெக்ட் போன் செய்தார்.  “வேலை முடிஞ்சுடுச்சு சார். மொத்தமா ஐம்பதாயிரம் கொடுத்துட்டேன்” என்றேன்.

“ஐயாயிரம் புடிச்சுட்டு கொடுத்திருக்கலாம்ல சார்” என்று துவங்கினார். கட் செய்துவிட்டு போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டேன். கார்த்திகைக் குளிர் சில்லிடத் துவங்கியிருந்தது.

Nov 24, 2012

ஐயோ போலீஸ், ப்ளீஸ் விட்டுடுங்க!


சென்ற மாதம் அலுவலகத்தில் ஒரு பயிற்சி வகுப்பு நடந்தது. அதில் கலந்துகொண்டவர்கள் தங்களைத் தாங்களே அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்கள். ஆளாளுக்கு எதையாவது சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். ஒரு பெண்மணி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு நடந்தே போவது தனது hobby என்றார். கடந்த நான்கு வாரங்களாக இதைச் செய்து கொண்டிருக்கிறாராம். மொத்தமாக வெறும் நான்கு முறை மட்டுமே நடந்து போயிருக்கிறார். அது எப்படி ஹாபியாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. அவர் ஸீன் போடுவதற்காக சொல்லியிருந்திருக்கக் கூடும். இருந்தாலும் எல்லோரும் அவருக்காக கரவொலி எழுப்பினார்கள். எதற்கு பொல்லாப்பு என்று நானும் கைத்தட்டி வைத்தேன். 

சேலத்தில் அதிகமாக நடந்திருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது சனிக்கிழமை இரவுகளில் பழைய பஸ் நிலையம் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு தியேட்டரில் படம் பார்த்துவிட்டு சோனா கல்லூரி வரைக்கும் நடந்தே வருவேன். தனியாக நடந்துவருவது அப்பொழுது விருப்பமான செயலாக இருந்தது. விருப்பத்தை தாண்டி இன்னொரு காரணமும் இருக்கிறது. நான் கஞ்சூஸாக இருந்தேன். நள்ளிரவு நேரத்தில் பேருந்தில் பயணித்தால் டபுள் டிக்கெட் வாங்க வேண்டும். அதனால் நடந்து போவது ஒரு சிக்கன நடவடிக்கையாக இருந்தது.

கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த சமயத்தில் வீரபாண்டியார் அமைச்சர் ஆகியிருந்தார். மேயர் சூடாமணியும் திமுகக்காரர்தான். வீரபாண்டியாரின் மூத்தமகன் நெடுஞ்செழியன் சேலம் திமுகவில் முக்கியமான சக்தியாக இருந்தார். மொத்த சேலமும் திமுகவின் கோட்டையாக இருந்தது. சனிக்கிழமைகளின் நள்ளிரவில் பெரும்பாலும் திமுக கொடி கட்டுபவர்கள் மற்றும் பேனர் கட்டுபவர்களின் நடமாட்டம் இருக்கும். அதனால் தனியாக நடக்க பயம் எதுவும் இருக்காது. சில சமயங்களில் போலீஸ்காரர்கள் விசாரிப்பார்கள். கல்லூரி அடையாள அட்டையிருந்தால் அனுப்பிவிடுவார்கள். பெரும்பாலான நேரங்களில் தனியாக நடக்க வேண்டாம் என அறிவுரை செய்வார்கள். ‘சரிங்க சார்’ என்று பவ்யம் காட்டிவிட்டு நகர்ந்துவிடுவேன். 

ஒவ்வொரு நாளும் நல்ல நாளாக இருப்பதில்லை அல்லவா? ஒரு தீபாவளி சமயத்தில் விடுதி காலியாகியிருந்தது. எல்லோரும் ஊருக்கு போயிருந்தார்கள். சில சென்னை நண்பர்களும் நானும் மட்டும் விடுதியில் இருந்தோம். வழக்கம் போல நான் படத்துக்கு போய்விட்டு தனியாக வந்து கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்தவர்கள் என்னோடு சேர்ந்து நடக்கத் துவங்கினார்கள். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று கேட்கவில்லை. கேட்க வேண்டிய அவசியமும் இல்லாமல் இருந்தது. அவர்கள் குடித்திருந்தார்கள். கால் போதை, அரைப்போதை என்ற நிலையில் யாருமே இல்லை. எல்லோருமே முழுப்போதைதான். சாலை நெடுக கூத்து கும்மாளம் என அதிரச் செய்தார்கள். 

அவர்களின் கூச்சல் போதையில்லாமல் இருந்த எனக்கு பயமூட்டிக் கொண்டிருந்தது. போதை ஏறியவர்களோடு போதையில்லாதவன் உடன் இருப்பது கொடுமையான நிகழ்வு. அவர்களின் அத்தனை அழிச்சாட்டியத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும். அது கூட பிர்ச்சினையில்லை. இந்நேரத்தில் யாராவது ரெளடிகள் வந்தால் எனக்கும் சேர்ந்து அடி விழும் என நடுங்கிக் கொண்டிருந்தேன். போதையில் இருப்பவர்கள் ஓரிரண்டு அடிகளில் விழுந்துவிடுவார்கள் என்பதால் ‘ஸ்டெடியாக’ நிற்கும் என்னை மொக்கிவிடுவார்கள் என பயந்தேன். யார் அடிக்க வந்தாலும் முதல் அடியில் கீழே சுருண்டு விழுந்துவிட வேண்டும் என உள்ளுக்குள் திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் எதிர்பார்த்தது போல ரெளடிகள் யாரும் வரவில்லை. எதிர்பாராத போலீஸ் ஜீப் எங்கள் முன்னால் வந்து நின்றது. 

அவர்கள் எங்களை எச்சரிக்கை செய்து அனுப்பியிருக்கக் கூடும். அதற்கு இடமில்லாமல் செய்துவிட்டது எங்களில் இருந்த ஒரு பன்னாடை. “வணக்கம் மாம்ஸ்! என்ன இந்நேரத்துல? போய் தூங்குங்க” என்று சொல்லி அவர்களை கடுப்பேற்றிவிட்டான். ரெளடிகள் என்றால் கூட அடியோடு போயிற்று இனி கோர்ட் கேஸ் என சிக்கிக் கொண்டோமே என அழத்துவங்கினேன். மொத்தமாக அள்ளியெடுத்துக் கொண்டு போய் சூரமங்கலம் ஸ்டேஷனில் அமர வைத்துவிட்டார்கள். 

மாம்ஸ் என்று அழைத்தவனுக்கு மட்டும் ஓரிரண்டு கும்மாங்குத்து எஸ்.ஐ.யிடம் விழுந்தது. அவனுக்கு மட்டும் தான் அடி. எங்களை அடிக்கவில்லை. நாளைக்கு பிரின்ஸிபால் வந்தால்தான் ஆச்சு என்று சொல்லிவிட்டார். பிரின்சிபால் வரும்போதே ஒவ்வொருவருக்கும் சஸ்பெண்ட் லெட்டரோ அல்லது டிஸ்மிஸ் லெட்டரோ தயார் செய்துவிட்டுதான் வருவார் என்று தெரியும்.

கொஞ்ச நேரம் அமர்ந்திருந்த எங்கள் ஆட்கள் ஒவ்வொருவருவராக மட்டையாகிவிட்டார்கள். ஒரு ஏட்டய்யாவிடம் போய் கதையைச் சொல்லி புலம்பினேன். நான் குடிக்காத யோக்கியன் என்று அழுதேன். “எதுவாக இருந்தாலும் எஸ்.ஐயிடம் பேசு” என்று சொல்லிவிட்டார். எஸ்.ஐ எங்களையெல்லாம் ஸ்டேஷனில் போட்டுவிட்டு மீண்டும் ரவுண்ட்ஸ் போயிருந்தார். எப்பொழுது வருவார் என்று கேட்டால் பதிலில்லை. விடியும் போது எல்லோருக்கும் ‘மப்பு’ தெளிந்துவிடும் என்பதால் நான் குடிக்கவில்லை என்பதை நிரூபிக்க வழியே இருக்காது என நினைத்த போது துக்கம் தொண்டையை அடைத்தது. இப்பொழுது ஊரில் தூங்கிக் கொண்டிருக்கும் அப்பா அம்மாவுக்கு நாளை பெரிய இடியுடன் விடியப்போகிறது என பதறினேன். போலீஸ் ஸ்டேஷன் ஒரு பெரிய அரக்கர் மாளிகையாகத் தெரிந்தது.

அதிகாலை மூன்று மணிக்கு எஸ்.ஐ வந்தார். நான் மட்டும் அமர்ந்திருந்தேன். கண்கள் வீங்கியிருந்தன. கதையை மீண்டும் விவரிக்க ஆரம்பித்தேன்.  “ஊது” என்றார். ஊதினேன். அவருக்கு நம்பிக்கை வந்தது. இருந்தாலும் பிரின்ஸிபாலிடம் பேசிவிட்டு அனுப்புகிறேன் என்றார். காலில் விழாத குறையாக கெஞ்சினேன். அம்மா அப்பாவுக்கு தெரிந்தால் உயிரை விட்டுவிடுவார்கள் என்று சொன்னேன். அவர் என்னை விட்டுவிட முடிவு செய்தார். “சரி இந்த நேரத்தில் போக வேண்டாம் விடிந்தால் விட்டுவிடுகிறேன்” என்றார். நான் விடுவதாக இல்லை மீண்டும் கெஞ்சினேன்.  “என்னால் இங்கே இருக்க முடியாது” என அழுதேன்.சிரித்துக் கொண்டே “இவனுகளோட சேராதே” என்றார்.  “சரிங்கய்யா” என்றேன்.  அவர் “போ” என்று சொல்லி முடிப்பதற்கு முன்பாக ஸ்டேஷனை விட்டு வெளியேறியிருந்தேன்.

இரவின் அந்த நேரம் கொஞ்சம் ஆசுவாசமானதாக இருந்தது. வேகமாக நடந்தேன். அது கிட்டத்தட்ட ஓட்டம்தான். காலில் பிசுபிசுவென என்னவோ ஒட்டியது. இரத்தம். செருப்பில்லாத காலை கற்கள் கிழித்திருந்தன். செருப்பை ஸ்டேஷனிலேயே மறந்து விட்டிருந்தேன். அது முக்கியமில்லை என்று தோன்றியது. ஸ்டேஷன் இருக்கும் ஏரியாவைத் தாண்டிவிட வேண்டும் என மீண்டும் வேகம் எடுத்தேன். விடுதியை அடைந்து அறையைத் திறந்த போதுதான் கால் வலிக்கத் துவங்கியிருந்தது. அது நிம்மதியான வலியாகத் தெரிந்தது.

Nov 19, 2012

அவ்வ்வ்வ்வ்


ஒரு லோக்கல் எண்ணிலிருந்து அழைப்பு வருகிறது. வழக்கம் போல ஏதாவது ஒரு விளம்பர அழைப்பாக இருக்கும் என நினைத்து எடுத்தால் எதிர்முனையில் கட்டையான பெண்குரல். விளம்பர அழைப்பாக இருந்தால் இளம்பெண்கள்தான் பேசுவார்கள். இது கட்டைக் குரல் என்பதால் அவசர அவசரமாக வேறு எதையோ மூளை யோசிக்க ஆரம்பிப்பதற்குள் அந்தப் பெண் ஆரம்பித்துவிட்டார்.

“சார் உங்க பில் ஆயிரத்தி ஐந்நூறு பாக்கி இருக்கு”

ஒருவனை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டுமானால் பேச்சை ஆரம்பித்த உடனே “பணம் கொடு” என்று ஆரம்பிக்கலாம். அந்தப் பெண் அதைத் தெளிவாகச் செய்தார்.

“நீங்க யாருங்க மேடம்” - இது நான்.

“பி.எஸ்.என்.எல்லிருந்து பேசறேன்” என்று சொல்லிவிட்டு ஒரு நெம்பரைச் சொன்னார். அவரே கேள்வியும் கேட்டார்.

“இது உங்க நெம்பர்தானே சார்?”

“மேடம் நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி BSNL லேண்ட் லைன் வெச்சிருந்தேன். அந்த நெம்பர் ஞாபகத்தில் இல்லை”

“அப்போ இதான் உங்க நெம்பர்” 

“அப்படியா?”

“ஆமாங்க சார். பில் கட்டிடுங்க”

கோபத்தில் கத்தினேன். “ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் பில் கட்டச் சொன்னால் என்னங்க அர்த்தம்?”

எவ்வளவு கோபமான கேள்விக்கும் ஒரு மொன்னையான பதில் மூலம் எதிராளியின் வாயை அடைத்துவிட முடியும். அந்தப் பெண்மணியும் அதே உபாயத்தைத்தான் கையில் எடுத்தார்.

பதில் இதுதான் - “ஸாரி சார்! கொஞ்சம் லேட் ஆகிடுச்சு”

ரிலையன்ஸ், ஏர்டெல் நிறுவனங்கள் பில் கட்ட ஒரு நாள் தாமதம் என்றாலும் கூட கொத்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். BSNL காரர்களுக்கு இரண்டு வருடம் என்பது ‘கொஞ்சம்’ லேட். இந்த பதிலுக்கு அப்புறம் என்ன கேள்வி கேட்க முடியும்.

“நான் அட்ரஸ் மாத்தி வந்துட்டேன் மேம்”என்றேன்.

“பரவால்ல சார், இ-மெயிலில் அனுப்பி வைக்கிறேன்” என்றார். விடமாட்டார் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டு  “அனுப்புங்க” என்றேன்.

“உங்க மெயில் ஐடி சொல்லுங்க சார்” என்றார். தப்பிப்பதற்கு ஒரு சான்ஸ் கிடைத்துவிட்டது.

“vamanikandan@gmail.com" 

தப்பியோடிய திருடனை பிடித்துவிட்ட சந்தோஷத்தில் “தேங்க்யூ” என்றார்.

நான் கொடுத்திருந்த மின்னஞ்சலில் ஒரு A வை முழுங்கியிருந்தது தெரியாமல் இத்தனை சந்தோஷப்பட்டிருக்கத் தேவையில்லை. எனது மொபைலில் அட்டெண்ட் செய்யக் கூடாத லிஸ்ட்டில் அந்த எண்ணைச் சேர்த்து வைத்தேன்.

சிறிது நேரத்தில் வேறொரு மொபைல் நெம்பரில் இருந்து அழைத்தார். வேறு எண் என நினைத்து அட்டெண்ட் செய்து மாட்டிக் கொண்டேன்.

“சார் நீங்க கொடுத்த மெயில் ஐ.டி தப்பு போல இருக்கு. எங்க டேட்டாபேஸில் சரியான மெயில் ஐடி இருந்துச்சு. பில் அனுப்பியிருக்கேன் பார்த்துட்டு பணத்தைக் கட்டிடுங்க”

இதற்கு என்ன பதில் சொல்வது? வடிவேலு ஸ்டைல்தான்....“அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்”

குடிசையில் வாழும் திருடர்கள்




வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு குடிசைப் பகுதி இருக்கிறது. அங்கு பெரும்பாலும் தமிழர்கள்தான். இரண்டு மூன்று தலைமுறையாக பெங்களூரில் செட்டிலானவர்கள். இழுத்து என்பதை இஸ்து என்பார்கள். அப்படியா என்று கேட்பதற்கு பதில் ஆமாவா என்பார்கள். சில வார்த்தைகளை சிரமப்பட்டு புரிந்துகொள்ள வேண்டியிருக்கும். மற்றபடி தமிழர்கள்தான். 

மொத்த குடிசைப்பகுதியும் ஒரு லோக்கல் தாதாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த தாதா ஏதாவது அரசியல் மீட்டிங்க்கு போனால் அவரது பெயர் பொறித்த பேனரைத் தூக்கிக் கொண்டு அவரது ‘வெயிட்டை’ இவர்கள் காண்பிப்பார்கள். தாதாவோடு ஒத்துப்போகவில்லை என்றால் குடிசைக்கு வரும் கரண்ட்டை கட் செய்துவிட்டு போய்விடுவார். சில சமயம் நான்கு பேரைக் கூட்டிவந்து மொத்திவிட்டும் போவார். தாதாவுக்கு இவர்கள் அவ்வப்போது ‘மால்’ வெட்டுவதும் உண்டு.

குடிசையை ஒட்டியிருக்கும் எங்கள் லே-அவுட்டில் குடியிருப்பவர்கள் மிடில்-க்ளாஸ் மாதவன்களும் மாதவிகளும். அநேகமாக ஐ.டியில் வேலை செய்கிறார்கள். குடிசைப்பகுதியில் இருப்பவர்கள் பெரும்பாலும் வேலைக்குப் போகாத சோம்பேறிகள் என்ற இமேஜை இவர்கள் பில்ட் அப் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த குடிசைவாசிகள்தான் அவ்வப்போது லே-அவுட் வீடுகளில் திருடுகிறார்கள் என்று பேசிக் கொள்வதுண்டு.

ஒரு மாதுஸ் என்னிடம் சில நாட்களுக்கு முன்னால் போனில் பயங்கர ரகசியம் ஒன்றைச் சொன்னார். இதை கவனிக்க வேண்டும்- எங்கள் வீடுகள் இருப்பது ஒரே லே-அவுட்டில்தான். நான்கு வீடு தள்ளி அவரது வீடு. ஜன்னலைத் திறந்து வைத்து சத்தமாக பேசிக் கொண்டால் கூட காது கேட்கும். ஆனால் சம்பாஷணைகள் அனைத்தும் போனில்தான். அவர் சொன்ன ரகசியம் இதுதான் - அவரது வீட்டில் ஒரு ஜோடி செருப்பு காணாமல் போய்விட்டதாம். அதை குடிசைவாசிகள்தான் திருடிவிட்டார்கள் என்றார். அவர் சொன்ன தொனி இருக்கிறதே அதுதான் முக்கியம் “அமெரிக்க சி.ஐ.ஏ என் வீட்டில் ஒரு ஜோடி செருப்பை திருடிவிட்டது” என்ற ரேஞ்சில் இருந்தது. “அப்படியா சார், நாங்களும் ரொம்ப ஜாக்கிரதையாக இருந்து கொள்கிறோம். முதல் வேலையாக செருப்புக் கூட்டுக்கு ஒரு பூட்டு வாங்குகிறேன்” என்று நான் சொன்னது அவரை திருப்திபடுத்திவிட்டது. ஒரு மிகப்பெரிய திருட்டில் இருந்து என்னைக் காப்பாற்றிவிட்ட திருப்தி அது. இதே விவகாரத்தை அவர் காலனிவாசிகளுக்குள் நடக்கும் மாதாந்திர கூட்டத்திலும் அழுத்தம் திருத்தமாக சொன்னதாக கேள்விப்பட்டேன்.

குடிசைவாசிகள் உண்மையிலேயே விளிம்பு நிலை மனிதர்கள். அவர்களின் வாழ்க்கை முறையை மிக நெருக்கமாக பார்க்கிறேன். அடுத்தவன் மீதான தேவையில்லாத பயத்தோடு பொதுக்குழாயில் தண்ணீர் எடுப்பதற்கான சண்டைகளில் ஆரம்பித்து அடுத்த குடிசையின் கழிவு நீர் தனது குடிசைக்கு முன்னால் வருகிறது என்ற வசவுகள் வரை வெளிப்படையான வாழ்க்கை முறையை வாழ்கிறார்கள். ஊசியில் விஷம் தடவி அதை நாசூக்காக வாழைப்பழத்தில் செருகிக் கொடுக்கும் ‘நவ நாகரீக’ வாழ்முறைக்கு அது முற்றிலும் வேறானது. பிரச்சினைகளையும் வன்மத்தையும் மனதிற்குள் பூட்டி வைக்கத் தெரியாத வெள்ளந்தி மனிதர்கள் இவர்கள். கோபம் வந்தால் அடித்துக் கொள்வதும் அடுத்த ஓரிரு நாட்களில் பேசிக் கொள்வதுமான இயற்கையான சமூக வாழ்க்கை அவர்களுடையது.  இவர்கள் ஆட்டோ ஓட்டுகிறார்கள், தள்ளுவண்டியில் காய்கறி விற்கிறார்கள், குப்பை பொறுக்குகிறார்கள்.

அவர்களின் குழந்தைகள் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. அந்தக் குழந்தைகள் குழந்தைமையை அனுபவிக்கிறார்கள். மண்களில் விளையாடுவதும், தண்ணீரில் நனைவதும் அவர்களின் உரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. மாலை வேளையை விளையாடிக் கழிப்பது அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. சாக்கடை மீதான பயத்தை, கொசுக்கடியை என சகலத்தையும் உதாசீனப்படுத்துகிறார்கள். ஆனால் மாதவன்களின் பிள்ளைகள் சோடாப்புட்டி கண்ணாடியை அணிந்து கொண்டு புத்தகமூட்டையோடு காலை ஏழு மணிக்கு சாலைகளில் நிற்கிறார்கள். பள்ளி வேன்கள் அவர்களை மூட்டைகளோடு மூட்டைகளாக தூக்கிச் சென்று மாலையில் மீண்டும் அதே சாலையில் துப்புகின்றன. பிறகு ட்யூசன், டான்ஸ் க்ளாஸ், சூப்பர் சிங்கர் கனவுகள், வீடியோ கேம், கிருமிகள், அழுக்கு பயம் என சூரியனைப் பார்க்காத சபிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறார்கள். தங்கள் குழந்தைகளின் சிறகுகளை மொத்தமாக கத்தரித்துவிட்ட இந்த மாதவன்களுக்குதான் குடிசைவாசிகள் வேப்பங்காய்.

நேற்று நான்கு குடிசைவாசிகள் ஓடிக் கொண்டிருக்கும் சாக்கடையின் இரண்டு புறமும் மண்ணைக் கொட்டியிருந்தார்கள். நடுவில் தண்ணீர் குளம் போலத் தேங்கியிருந்தது. நான்கு பேரும் சேர்ந்து சாக்கடைத் தண்ணீரை வாளிகளில் மொண்டு வெளியே கொட்டிக் கொண்டிருந்தார்கள். நாற்றம் குமட்டிக் கொண்டிருந்தது. எதையோ தேடுகிறார்கள் என்று தெரிந்தது. அநேகமாக தங்க ஆபரணமாகவோ அல்லது சாவியாகவோ இருக்கக் கூடும் என நினைத்துக் கொண்டேன். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களுக்கு சாக்கடைத் தண்ணீருக்குள் புழங்குவது பெரிய சிரமமாகத் தெரியவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கஷ்டப்பட்டார்கள். தண்ணீர் தீர்வதாகத் தெரியவில்லை. அடுத்த ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகாக தண்ணீர் தீர்ந்திருந்தது. துழாவ ஆரம்பித்தார்கள். 

நான்கைந்து மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தன. அந்தச் சாக்கடைத் தண்ணீருக்குள் மீன்கள் இருக்கும் என்பது ஆச்சரியமாக இருந்தது. அந்த மீன்களைப் பிடித்து பக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்கள். சாக்கடையின் இருபுறமும் கொட்டியிருந்த மண் மேட்டைத் சமன் செய்துவிட்டு கிளம்பிவிட்டார்கள். அப்பொழுதான் அவர்கள் தேடியது வெறும் மீன்களை மட்டும்தான் என்று புரிந்து கொண்டேன். மொத்தமாக கிடைத்த ஐந்து மீன்களும் இரண்டு அல்லது மூன்று கிலோ தேறும். இந்த மூன்று கிலோ மீனுக்காக நான்கு ஆடவர்கள் சாக்கடைத் தண்ணீருடன் இரண்டு மணி நேரமாக மல்லுக் கட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். இத்தனை நாற்றத்தையும் மீறி, நோய்களைப் பற்றிய பயம் எதுவும் இல்லாமல், இடுப்பு நோக நீரைக் காலி செய்து வெறும் மூன்று கிலோ மீன்களுடன் திருப்திபட்டுக் கொள்ளும் இவர்களைத்தான் உழைக்காதவர்கள் என்கிறார்கள். இவர்களைத்தான் சோம்பேறிகள் என முத்திரை குத்துகிறார்கள். இவர்களைத்தான் வெறுத்து ஒதுக்கிறார்கள் லே-அவுட் வாசிகள். 

நேற்று மாலை நேரத்தில் அதே சி.ஐ.ஏ ஏஜெண்ட் அழைத்தார். “வீட்டில் தண்ணீர் வரவில்லை. இரண்டு குடம் தண்ணீரை சுமப்பதற்குள் இடுப்பு முறிந்துவிட்டது” என்று பேச்சுவாக்கில் சொன்னார். அதோடு நிறுத்தியிருக்கலாம் “செருப்பு கூட்டுக்கு பூட்டு வாங்கிட்டீங்களா?” என்றார். “வாங்கவில்லை என்றால் நீங்கள் காவலுக்கு வருகிறீர்களா?” என்று நாக்கு வரைக்கும் வார்த்தைகள் வந்துவிட்டன. அவரது நல்ல நேரம் போலிருக்கிறது. என் நாக்கில் டெண்ட் அடித்திருக்கும் சனி டீ குடிக்க போய்விட்டார். கேட்காமல் நிறுத்திக் கொண்டேன்.

Nov 16, 2012

ஒரு கலக்கலான இண்டர்வியூ



படித்து முடித்த பிறகு ஏழெட்டு வருடங்களாக வேலையில் இருக்கிறேன். கூடப் படித்தவர்களில் நிறையப் பேர் வெவ்வேறு நிறுவனங்களில் மேனேஜர்கள் ஆகிவிட்டார்கள். ஆனால் எனக்கு இதுவரைக்கும் ஒரு ஜூனியர் கூட வாய்த்ததில்லை. கொஞ்சம் வருத்தம்தான். இப்பொழுதுதான் வாய்க்கும் போலிருக்கிறது. 

புதிதாக கல்லூரி முடித்த இரண்டு மூன்று பேர்களுக்கு நேர்காணல் நடத்தி அதில் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு மேனேஜர் சொல்லியிருந்தார். நேற்றுதான் நேர்காணல்.மூன்று பேர்கள் வந்திருந்தார்கள். மூன்று பேருமே எம்.பி.ஏ முடித்தவர்கள். முதல் இரண்டு பேரை அவ்வளவாக பிடிக்கவில்லை. மூன்றாவதாக வந்தவர் தமிழ்நாட்டுக்காரர். சிவகாசி பக்கத்திலிருந்து வந்திருந்தார். பொடிப்பையன். நாற்பது கிலோ கூட இருக்கமாட்டான் போலிருந்தது.

"உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்" என்றேன்.

“அம்மாவும் இல்லாத அப்பாவும் இல்லாத சுயமாக படித்து முடித்த திறமைசாலி நான்” என்றான். முதல் வரியிலேயே ஆளை அடித்துவிட்டான். அதன் பிறகு டெக்னிக்கலாக கேள்வி கேட்க வேண்டுமென்று தோன்றவில்லை. அவனது சொந்தக் கதையை பேசத் துவங்கினோம். இருபது நிமிடங்கள் சொல்லிக் கொண்டிருந்தான். அம்மா கேன்சரில் இறந்து போனாராம். தந்தை விபத்தில் இறந்துவிட்டார். தனது எட்டு வயதிற்குள் இரண்டு பேரையும் இழந்துவிட்ட அவரை பள்ளி ஆசிரியர் ஒருவர் படிக்க வைத்திருக்கிறார்.

பி.ஈ படிப்பதற்கு உள்ளூர் அறக்கட்டளை ஒன்று உதவி செய்ய, எம்.பி.ஏவை வங்கிக் கடனில் முடித்திருக்கிறான். இரண்டிலுமே கலக்கலான பர்செண்டேஜ் வைத்திருக்கிறான். படிப்பு தவிர என்ன பிடிக்கும் என்ற அடுத்த கேள்விக்கு சைக்காலஜி, இலக்கியம் எனக் கலந்து கட்டி அடித்த அவனைப் பிடித்து போய்விட்டது. 

கொஞ்சமாவது டெக்னிக்கலாக கேட்க வேண்டுமே என்பதற்காக எங்கள் நிறுவனத்தில் செய்யும் வேலையைப் பற்றி விவரித்துவிட்டு இதைப் பற்றி ஏதாவது தெரியுமா என்றேன். "சுத்தமாகத் தெரியாது" என்றான். நேர்காணலுக்கு வந்திருந்த மற்ற இரண்டு பேரும் இந்த வேலைக்குத் தேவையான அடிப்படையைத் தெரிந்து வைத்திருந்தார்கள். அவர்களுக்கு சொல்லித்தருவது எளிதாக இருக்கும். இவனுக்கு எதுவுமே தெரியவில்லை என்று குழப்பமானேன். 

“கத்துக்கலாம் சார்!” என்றான். 

“அது கஷ்டம்” என்றேன்

“இங்க யாருக்குமே எதுவுமே தெரியாது சார். எல்லாமே கத்துக்கிறதுதான்” என்றான். அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதே மிஷெல் பூக்கோவின் புத்தகங்களை வாசித்திருக்கிறேன். ஷேக்ஸ்பியரின் மேக்பெத் வசனங்களை மனப்பாடமாகச் சொல்ல முடியும்” என்று அடுக்கிக் கொண்டிருந்தான். 

“அதெல்லாம் கம்யூட்டருக்கு பிரையோஜனப்படாதே” என்றேன்.

“பிரையோஜனப்படாதுதான். ஆனால் அதைவிடவும் கஷ்டமான புத்தகங்களையா கொடுத்து படிக்கச் சொல்லப் போகீறீர்கள்” என்றான். பவுன்சர் போட்டால் கூட சிக்ஸர் அடிக்கும் இவனிடம் அடுத்து என்ன கேட்பது என்று தெரியவில்லை. கொஞ்ச நேரம் அமர்ந்திருக்கச் சொல்லிவிட்டு மேனேஜரிடம் சென்றேன். 

“பையன் இம்ரெஸ் செய்கிறான் ஆனால் வேலை சம்பந்தமாக எதுவும் தெரியவில்லை” என்றேன். 

“நானும் வருகிறேன்” என்று வந்தார்.

அவரை கேள்வி கேட்கச் சொல்லிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். கேள்விகளுக்கு அவன் அளித்த பதில்களுக்கு மேனேஜர் பயங்கரமாக சிரித்துக் கொண்டிருந்தார். அவருக்கும் அவனைப் பிடித்துப் போய்விட்டது என்று அவரது முகத்திலேயே தெரிந்தது.

கடைசியாக “உன்னை ஏன் வேலைக்கு எடுக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணத்தைச் சொல்” என்றார்.

“என்னை ஏன் வேலைக்கு எடுக்கக் கூடாது என்பதற்கு உங்களிடம் ஒரு காரணம் கூட இருக்காது” என்றான். இதற்கும் மேனேஜர் சிரித்தார். எழுந்து நின்று கை குலுக்கினார். 

“உனக்கு இந்த நிறுவனத்தில் வேலை உண்டு. ஆனால் வேறொரு டீமில்” என்று சொல்லிவிட்டு அவனை வெளியே காத்திருக்கச் சொன்னார். அவனைப் பிடித்திருந்தால் அவரது டீமிலேயே வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே எதற்காக வேறொரு டீமுக்கு அனுப்புகிறார் என்று எனக்கு புரியவில்லை. அவரது முகத்தை பார்த்தேன். 

அவரேதான் சொன்னார். “இவ்வளவு திறமையான பையனை இந்த நிறுவனத்தை விட்டு அனுப்ப மனம் வரவில்லை. ஆனால் நம் டீமுக்கு இவ்வளவு திறமையானவன் தேவையில்லை. அது உனக்கும் ஆபத்து எனக்கும் ஆபத்து” என்று சொல்லிவிட்டு போய்விட்டார். 

மேனேஜர்கள் இப்படியெல்லாம் யோசிப்பார்களா என்று முழித்துக் கொண்டிருந்தேன். இந்த மாதிரியான கார்பேரேட் டெக்னிக்ஸ் தெரியாததாலேயே எனக்கு இன்னும் ஒரு ஜூனியர் கூட இல்லை என்று நினைத்துக் கொண்டேன். அது என்னை நானே தேற்றிக் கொள்ள உதவும் ஒரு நினைப்பு- அவ்வளவுதான்.

Nov 14, 2012

நாசமாகப் போகட்டும் தீபாவளி


இந்த வருடம் பட்டாசு வாங்குவதற்காக கடைக்கு சென்றிருந்தபோது நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. வழக்கத்திற்கு மாறான கூட்டம். வரிசையில் நின்ற பெரும்பாலானோர் "இந்த வருஷம் விலை ரொம்ப அதிகம்" என்றார்கள். அதற்காக யாரும் பட்டாசு வாங்காமல் திரும்பிப் போகவில்லை. ஹோட்டலில் அளவு சாப்பாடு கட்டித்தரும்  ஒரு பாலித்தீன் Carry Bag அளவிற்கு நானும் இந்த வருடம் பட்டாசுகள் வாங்கினேன். ஆயிரத்தி இருநூறு ரூபாய் பில் போட்டிருந்தார்கள். 

"நான் சின்னப்புள்ளையா இருந்தப்போ வெறும் அஞ்சு ரூவாய்க்கு எங்கப்பன் பட்டாசு வாங்கி தந்துச்சு" என ஒரு ஆத்தா அளந்து கொண்டிருந்தது. அவரைப் பார்த்து ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு வந்தேன். 

ஊருக்குள்ளும் பட்டாசுதான் முக்கியமான விஷயமாக இருந்தது. உள்ளூர் மிராஸ்தார் ஒருத்தர் போகிற வருகிறவர்களையெல்லாம் நிறுத்தி தான் ‘பட்டாசு வாங்கிய புராணத்தை’ அவிழ்த்துவிட்டார். தனது நண்பர்கள் நான்கைந்து பேர் சிவகாசியிலிருந்து மொத்தமாக அள்ளி வந்ததாகவும் அறுபத்தைந்தாயிரம் ரூபாய் பட்டாசுகளிலிருந்து எட்டாயிரம் ரூபாய்க்கு தான் எடுத்துக் கொண்டதாக அடுக்கிக் கொண்டேயிருந்தார். ஒவ்வொருவருக்கும் மூச்சுத்திணறி மயக்கம் வராத குறைதான்.

கெடுபிடிகள் என்ற பெயரில் விதிக்கப்படும் அரசின் அத்தனை கட்டுப்பாடுகளும் அதிகார வர்க்கத்திற்கு காசு கொழிக்கச் செய்யும் காரியம் போலிருக்கிறது. பட்டாசுத் தொழிற்சாலை முதலாளிகள் அரசின் உயர்மட்டத்தை பணத்தால் கவனித்துக் கொள்கிறார்கள். பட்டாசுகளை விற்பனை செய்யும் ஒவ்வொரு கடையும் விதிமுறை மீறல்தான். அதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஒரு லம்ப்பான தொகையைக் கொடுக்கிறார்கள். ஆம்னி பஸ்ஸின் மேற்கூரையில் பண்டல் பண்டலாக பட்டாசுகள் கொண்டு செல்லப்படுகின்றன. அதிகாரிகளின் வாய்கள் பணத்தால் அடைக்கப்படுகின்றன. இப்படி பட்டாசுக்காக செலவு செய்யப்படும் ‘எக்ஸ்ட்ரா’ தொகை அத்தனையும் வாடிக்கையாளரின் தலையில் கட்டப்படுகிறது. நாமும் ‘இந்த வருஷம் விலை அதிகம்’ எனச் சொல்லிவிட்டு வாங்கிவருகிறோம்.

எண்ணெய்க் குளியல், புதுத்துணி, ஸ்வீட் என எல்லாவற்றையும் பட்டாசு புறந்தள்ளிவிட்டு 'ஸ்டேட்டஸ் ஐகான்' ஆகியிருக்கிறது. ஊரிலிருந்து பெங்களூர் திரும்பி வரும் இருநூற்றைம்பது கிலோமீட்டர் தூரத்திற்கும் வான வேடிக்கைதான். வழக்கமாக சூளகிரியைத் தாண்டும் போது மூக்கைத் துளைக்கும் புதினா வாசமும், ஈரோட்டின் மஞ்சள் வாசமும் பூனையைப் போல பதுங்கிவிட்டன. எல்லா ஊர்களும் பட்டாசு வாசத்தில் திணறிக் கொண்டிருந்தன. பெரும் வெடிகள் காதுகளுக்குள்ளேயே வெடித்தன. நாய்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு பயத்தில் ஓடிக் கொண்டிருந்தன. காகங்களையோ, கழுகுகளையோ பார்க்க முடியவில்லை.

அம்மாப்பேட்டை அருகே ஒரு தொழிற்சாலையின் மூலையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. ‘ராக்கெட் விஞ்ஞானி’யின் செயலாக இருக்கும் என பேசிக் கொண்டு கடந்த போது தீயணைப்பு வண்டி எங்களைத் தாண்டிச் சென்றது. கிருஷ்ணகிரி தாண்டிய சாலையில் பட்டாசினால் கவனம் சிதறிய ஒரு பைக்காரரை அடித்துவிட்டு போயிருந்தான் அடையாளம் தெரியாத லாரிக்காரன். அவரை ஓரமாக நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர் இறந்திருக்கக் கூடும். அவரது குடும்பத்தாருக்கு ‘கறுப்பு தீபாவளி’ ஒன்றை பரிசளித்துப் போயிருக்கிறது அந்தப் பட்டாசு.

முதியவர்கள், மருத்துவமனைகள், இதய நோயாளிகள் என சகலரும் 'இன்று ஒரு நாள்தானே' என பொறுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கக் கூடும். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் ஜன்னல்கள் இறுக்க அடைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆஸ்துமா நோயாளிகள் தப்பிப்பதற்கு வழி தெரியாமல் விழி பிதுங்கியிருக்க வேண்டும்.

வெடிச்சத்தமும், கூசும் வெளிச்சமும், புகை நெடியும், அடுத்த நாளைய கண் எரிச்சலையும் தாண்டி இந்த பட்டாசுகளாலான தீபாவளி நமக்கு அளிக்கு சந்தோஷம் என்ன என்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை. குழந்தைகளுக்கு ஆழ்மனதில் வன்முறையூட்டும் செயல்தான் பட்டாசு மீதான ஆர்வம் என்று தோன்றுகிறது. ஆனால் அதை உற்சாகமாக செய்து கொண்டிருக்கிறோம். கொண்டாட்டம் என்பதற்கான வரையறைகளை மாற்றிக் கொண்டிருக்கிறோம். டாஸ்மாக் கொண்டாட்டமும், சோம்பேறித்தனமும் கலாச்சாரமாக இடம்பெற்றுவரும் ஒரு மாநிலத்திலிருந்து எதைப் புலம்புவதும் அர்த்தமற்றது. நாம் வாழும் காலம் இருண்ட காலம். யாரையும் யாராலும் மாற்றிவிட முடியாத சூழல் இது. எதையும் புலம்ப வேண்டியதில்லை. 

‘பட்டாசு இல்லாத தீபாவளி’ என்ற சூழலியல் சார்ந்த பிரச்சாரம், சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரியும் குழந்தைகளுக்காக 'பட்டாசுகளை நிராகரிப்போம்' என்ற பரப்புரைகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.  

ஆயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்கினேன் என்பதை முதல் பத்தியில் சொல்லிவிட்டு முடிக்கும் போது “நாசமாக போகட்டும் தீபாவளி” என்று முடிப்பது சரியில்லைதான் என்றாலும் அப்படியே முடிக்கிறேன். 

நாசமாகப் போகட்டும் தீபாவளி. 

Nov 13, 2012

துப்பாக்கி - முதல் ஷோ



முதல் நாள் முதல் ஷோவிற்கு டிக்கெட் வாங்கி படம் பார்க்க வேண்டும் என்பது நீண்டகாலத் திட்டம். சினிமா வெறியனாக நான் இருப்பதை அப்பாவால்  ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் பள்ளிக் காலத்தில் என் திட்டம் நிறைவேறியதில்லை. இப்பொழுது துப்பாக்கி படத்தின் முதல் ஷோவிற்கு ரசிகர் மன்ற டிக்கெட் கிடைத்திருக்கிறது. எந்த லாஜிக்கும் பார்க்காமல் போனால் விஜய்யின் படங்கள் நல்ல எண்டர்டெயினராக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு- இது விஜய் பற்றிய விமர்சனங்களிலிருந்து நானாக உருவாக்கிக் கொண்ட நம்பிக்கை. இது வெறும் நம்பிக்கைதான் என்பதையும் சொல்லிவிட வேண்டும். ஏனென்றால் நான் விஜய்யின் சமீபத்திய படங்கள் எதையுமே பார்த்ததில்லை. 2007 இல் பார்த்த போக்கிரிதான் கடைசிப்படம்.

முதல் ஷோ பார்ப்பதற்கான வாய்ப்பு பள்ளியில்தான் கிடைக்கவில்லையே தவிர கல்லூரி படிக்கும் போது நானாக ஏற்படுத்திக் கொண்டேன். பாபா படத்தை அப்படி பார்த்திருக்கிறேன். அது ரஜினியின் வெறித்தனமான ரசிகனாக இருந்த பருவம். அடுத்த நாள் லேப் எக்ஸாம் என்பதால் யாரும் கம்பெனி தரவில்லை. தனியாகத்தான் போயிருந்தேன். முதல் ஷோவிற்கு ரசிகர் மன்றங்களுக்கு கொடுத்த டிக்கெட்கள் போக நூறு டிக்கெட்களை பொதுமக்களுக்கு விற்றார்கள். பொதுமக்களுக்கு என்றாலும் ரசிகர்கள்தான் வாங்கினார்கள். நூறு டிக்கெட்களை வாங்க ஆயிரக்கணக்கில் வரிசையில் நின்றார்கள். 

ப்ளேக்கில் விற்பதை வாங்குமளவிற்கு எனது பொருளாதாரம் இடம் கொடுக்காது. என்பதால் முந்தின நாள் இரவே க்யூவில் இடம் பிடித்திருந்தேன். அதிகாலை நெருங்கியபோது சில முரட்டு ரசிகர்கள் க்யூவில் நின்றவர்களின் தோள் மீது ஏறி கவுண்ட்டரை நெருங்கினார்கள். பேசாமல் நின்று கொண்டால் அவர்களை சுமக்கும் வலியோடு தப்பித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் அவர்களின் அடியையும் வாங்கவேண்டும். ரஜினி என்ற மூன்றெழுத்து இந்த வலிகளைத் தாங்குவதற்கான வலிமையை கொடுத்திருக்கிறது என நம்பிக் கொண்டு அவர்களுக்கு தோள் கொடுத்தேன். இது நடந்து பத்து வருடங்கள் ஓடிவிட்டன.

இப்பொழுது துப்பாக்கி படத்திற்கு டிக்கெட் வாங்குவதற்கு இந்தச் சிரமமெல்லாம் இல்லை. நண்பனிடம் முதலே சொல்லி வைத்திருந்தேன். அவன் ரசிகர் மன்றத்தில் பொறுப்பில் இருக்கிறான். ஐநூறு ரூபாய் ஆகும் என்று சொல்லியிருந்தான். அப்பா எதுவும் சொல்லவில்லை. மனைவியும் சரியென்று சொல்லியிருந்தாள். தீபாவளியன்று படத்திற்கு போக வேண்டுமா என அம்மாதான் சலித்துக் கொண்டார். நான் பொருட்படுத்தவில்லை. அதிகாலை மூன்றரை மணிக்கு தியேட்டருக்கு வந்துவிடும்படி நண்பன் கட்டளையிட்டிருந்தான். சற்று உற்சாகமாகத் தூங்கப் போயிருந்தேன். பாபா பட நினைவுகள் மனசுக்குள் கொசுவர்த்தியைச் சுழற்றி ப்ளாஷ்பேக்கை ஓட்டியது.

பாபா படத்திற்கு டிக்கெட் வாங்க நின்ற க்யூவை சரிபடுத்துவதற்காக இரண்டு  போலீஸ்காரர்கள் பெரிய தடியை வீசிக் கொண்டேயிருந்தனர். அவர்களிடம் அடி வாங்காமல் டிக்கெட் வாங்கி, கூட்டத்தில் நசுங்கி இடத்தைக் கண்டுபிடித்து அமரும்போதுதான் தெரிந்தது பர்ஸை கோட்டைவிட்டிருப்பது. அந்தக் காலத்தில் என் பர்ஸில் பணம் அதிகம் இருக்காது. யாராவது திருடினார்களா அல்லது கீழே விழுந்துவிட்டதா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் அதைத் திறந்து பார்ப்பவர்களுக்கு பத்து ரூபாய் கிடைத்தாலே பெரிய விஷயம். அதனால் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. டிக்கெட் வாங்குவதற்காக இரவு முழுவதும் தூக்கம் கெட்டிருந்ததால் கண்கள் சுழன்றன. ரஜினியை ஸ்கிரீனில் பார்க்கும் வரை பொறுத்துக் கொண்டால் பிறகு என்னை உற்சாகமாக வைத்துக் கொள்ளும் வேலையை அவர் எடுத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் உடலில் சதைப்பிடிப்பான பகுதிகளை ‘நறுக்’ என கிள்ளிவிட்டுக் கொண்டேன். வலியின் காரணமாக தூக்கம் தள்ளிப்போனது.

திரை விலகியது. விசில் சப்தத்தில் தியேட்டரின் கூரை விழுந்துவிடக் கூடும் என நினைத்தேன். தீப்பொறி பறக்க ரஜினி வரும் வரை இருந்த உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் துவங்கியது. ரஜினியும், சுரேஷ் கிருஷ்ணாவும், எஸ்.ராமகிருஷ்ணனும் கூட்டு சேர்ந்து சாகடித்திருந்தார்கள். இடைவேளைக்குப் பிறகு அமர முடியாமல் வெளியேறினேன். வெளியே வந்த போதுதான் அடுத்த நாளையை லேப் எக்ஸாம் பூதாகரமாகத் தோன்றியது. அந்த நொடிவரை தேர்வுக்காக எந்தத் தயாரிப்பும் இல்லாமல் இருந்தேன். சோறில்லாமல் கிடந்ததாலும் கூட்டத்தின் காரணமாகவும் களைத்திருந்தேன். டீ குடிக்கக் கூட காசில்லை. விடுதிக்கும் நடந்துதான் போக வேண்டும். இத்தனை கஷ்டத்தையும் ஒரு மட்டமான படத்திற்காக அனுபவிக்கிறேன் என்ற போது வருத்தம் அதிகமாகியிருந்தது. எனக்குள் இருந்த தலைவர் ரஜினி வெறும் நடிகர் ரஜினியாக மாறியிருந்தார். இனிமேல் எந்தக் காரணத்திற்காகவும் முதல் ஷோ பார்க்கக் கூடாது என முடிவு செய்திருந்தேன்.

இப்பொழுது என் முடிவை தகர்க்கவிருக்கிறேன் என்றாலும் சந்தோஷமாக இருந்தது. ‘சாட்டிங்’கில் வந்த நண்பர்களிடம் துப்பாக்கி படம் பார்ப்பதாகச் சொல்லியிருந்தேன். மூன்று மணிக்கு அலாரம் வைத்திருந்த மொபைலை தலையணைக்குக் கீழாக வைத்து விட்டு பன்னிரெண்டு மணியைத் தாண்டிய போது தூங்கப் போனேன். கனவில் ரஜினியும், விஜய்யும் ஒரே குதிரையில் வந்தார்கள். பஸ்ஸில் மோதவிருந்த குழந்தையை காப்பாற்றினார்கள். விரலை மடித்து நாக்கின் கீழாக வைத்து விசிலடித்துக் கொண்டிருந்தேன். யாரோ தியேட்டரின் கதவை ஓங்கித் தட்டினார்கள். தூக்கம் கலைந்தது. தட்டப்பட்டது என் அறைக் கதவு. எழுந்து திறந்த போது வெளிச்சம் கண்களைக் கூசியது. "எல்லோரும் குளிச்சாச்சு, எந்திரிச்சு குளிங்க" என்றார் மனைவி. ஓடி வந்து மொபலைப் பார்த்தேன். அதுவும் பேட்டரியில்லாமல் தூங்கியிருந்தது. "மணி என்ன?" என்றதற்கு "ஏழு" என்றார். அவசரவசரமாக மொபலை சார்ஜரில் போட்டு நண்பனுக்கு டயல் செய்தேன். ரிங் ஆகிக் கொண்டிருந்தது. அவன் எடுப்பதாக இல்லை. அவன் விஜய்க்காக வெறித்தனமாக விசிலடித்துக் கொண்டிருக்கக் கூடும் என்று நினைத்த போது “மூன்று மணிக்கு படத்துக்கு போற ஆளைப்பாரு” என்று அம்மா கிண்டலடிக்கத் துவங்கியிருந்தார். நான் துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனன். இன்றைய தீபாவளி அத்தனை உற்சாகமானதாக தெரியவில்லை.

தீபாவளி வாழ்த்துக்கள்!