Dec 13, 2012

எதுக்குய்யா இத்தனை டார்ச்சர் கொடுக்குறீங்க?


ராகிங் செய்யும் மனநிலையில் இருப்பவர்களிடம் இண்டர்வியூவில் சிக்கிக் கொள்வது one of the கொடுமையான அனுபவம். கிட்டத்தட்ட கதற வைத்துவிடுவார்கள். டெலிபோனிக் இண்டர்வியூ என்றால் கொஞ்சம் பரவாயில்லை. சமாளித்துவிடலாம். நான் அவ்வப்போது டெலிபோனிக் இண்டர்வியூவில் கலந்து கொள்வதுண்டு. ஆனால் ஒரு முறை கூட அடுத்த் ரவுண்டுக்கு போனதில்லை. சிறுபிள்ளைத்தனமான காரணம்தான். கலந்து கொள்ளும் டெலிபோனிக் இண்டர்வியூக்களில் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியாது. கொஞ்ச நேரம் பார்ப்பேன். அப்புறம் ‘கட்’செய்துவிடுவேன். அதன்பிறகு அவன் எத்தனை முறை அழைத்தாலும் கண்டு கொள்ளவேமாட்டேன். அவ்வளவு பெரிய டுமீலான என்னை அழைத்து எங்கள் நிறுவனத்தில் இண்டர்வியூ செய்யச் சொல்கிறார்கள். இந்த மேட்டர் இதோடு நிற்கட்டும். ஒரு ப்ளாஷ்பேக்கை பார்த்துவிட்டு திரும்ப வரலாம்.

பள்ளியில் படிக்கும் போது பிரதீப் என்று நண்பன் இருந்தான். நண்பன் என்பதைவிட எதிரி என்பதுதான் சரியாகப் பொருந்தும். காரணம் என்னை விட நன்றாகப் படிப்பான். அவன் படித்து தொலைவதுதான் எனக்கு பெரும் தலைவலி. அவனுடைய அப்பா என் அப்பாவுடன் வேலை செய்தார். அவனுடைய அம்மா என்னுடைய அம்மாவுடன் வேலை செய்தார். இசெத்துச் செத்து பிழைத்தேன்.

வீட்டில் தினமும் பிரதீப் புராணம்தான். போதாக்குறைக்கு நான் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி என்று வெட்டித்தனமாக சுற்றுவதாக புலம்புவார்கள். என்னதான் முக்கினாலும் யூனிட் டெஸ்ட்டில் கூட அவனை விட அதிகம் மார்க் வாங்க முடிந்ததில்லை. ஒவ்வொரு தேர்வுக்கு போகும் போதும் எனக்கு மறக்காமல் இருக்க வேண்டும் என்பதை விட பிரதீப்புக்கு மறந்து போக வேண்டும் என்றுதான் சாமிகளைக் கும்பிடுவேன். ம்ஹூம்.ஒரு கடவுளும் மனம் இறங்கியதில்லை.

ஆறாம் வகுப்பு என்று ஞாபகம். காலாண்டுத் தேர்வுக்கு முன்பாக காரப்பொரி தின்னலாம் அழைத்துப் போய் அவனுக்கு மட்டும் அதிக காரத்துடனான பொரியைக வாங்கிக் கொடுத்தேன். எப்படியும் அடுத்தநாள் கழிவறையை விட்டு வெளியே வரமாட்டான் என்ற நம்பிக்கையில் என் முகத்தில் புன்னகை பொங்கி வழிந்தது. ஆனால் காரப்பொரிக்காரனும் கை விட்டுவிட்டான். பிரதீப் அடுத்த நாள் ஸ்ட்ராங்காக வந்து ஜெர்க் கொடுத்தான். வழக்கம் போலவே அவன் தான் அதிகம் மார்க்.

இன்னொரு தேர்வு. இரண்டு நாட்களுக்கு முன்பாகவே படித்து முடித்துவிட்டு தேர்வுக்கு முந்தின நாள் அவனது வீட்டுக்கு சென்று விட்டேன். கதை பேசி அவன் ‘பொழைப்பை’ கெடுக்க வேண்டுமென்பதுதான் திட்டம். அவனும் அட்டகாசமாக கதை பேசினான். பன்னிரெண்டு மணி வரைக்கும் பேசிவிட்டு நான் சந்தோஷமாகத் தூங்கிவிட்டேன். அவனும் என்னோடுதான் படுத்தான். ஆனால் நான் தூங்கிய பிறகு எழுந்தவன் விடிய வரைக்கும் படித்து என்னை முந்திவிட்டான்.

இப்படி எந்தத் திட்டத்தாலும் தோற்கடிக்க முடியாத ஜாம்பவானாக இருந்த அவனை நான் கைவிட்டுவிட்டேன். ஆனால் அம்மா அப்பாதான் என்னை விட வில்லை. பத்தாம் வகுப்பிலும், பன்னிரெண்டாம் வகுப்பிலும் அட்டகாசமான மார்க் வாங்கினான். அவன் டாப் க்ளாஸ் கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ். நான் குட்டிக்கரணம் அடித்து அப்போது சுமாராக இருந்த கல்லூரியில் சேர்ந்தேன். அதுவும் எலெக்டிரிக்கல்தான். அப்பொழுதெல்லாம் கம்யூட்டர் சயின்ஸ்தான் கனவுக்கன்னியாக இருந்தது. அதையும் வீட்டில் குத்திக்காட்டினார்கள். பல தகிடுதத்தங்களுக்கு பிறகு நான் எம்.டெக் சேர்ந்த போது அவன் மிகச் சிறந்த கல்லூரியில் எம்.பி.ஏ படித்தான். 

இப்படியான அத்தனை அக்கப்போர்களையும் தாண்டி வேலைச் சேர்ந்து இத்தனை வருடங்களில் அவனை மறந்திருந்தேன். இன்றைக்கு ஒரு பேரதிர்ச்சி. நம்ப முடியாத இன்ப அதிர்ச்சி. முதல் பத்தியில் சொன்ன இண்டர்வியூ மேட்டர்தான் தான். இண்டர்வியூ எடுக்க வேண்டியது நான். எதிர்முனையில் பிரதீப். அவனது Resume ஐ பார்த்தவுடனே நான் உற்சாகத்தில் எகிறிக் குதித்தேன். நல்ல அறையாக பார்த்து அமர்ந்து கொண்டு அவனை அழைத்த போது பவ்யமாகப் பேசத் துவங்கினான். எனது பெயரை மாற்றிச் சொல்லியிருந்தேன்.

சில கேள்விகளைக் கேட்டவுடன் நாங்கள் எதிர்பார்க்கும் டெக்னாலஜியில் அவனுக்கு அனுபவம் இல்லை என்று தெரிந்துவிட்டது. ஆறாம் வகுப்பு பிரதீப் மனக்கண்ணில் வந்து வந்து போனான். எனது டார்ச்சரை ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட அழாத குறையாக பதில் சொன்னான். இன்னமும் உற்சாகமாகிவிட்டேன். டார்ச்சரை டாப்கியரில் மாற்றி ஓட்டத் துவங்கினேன். கொஞ்சம் நேரம் பொறுத்தவன் இணைப்பைத் துண்டித்துவிட்டான். திரும்ப எத்தனை முறை அழைத்தும் எடுக்கவில்லை. என்னைவிட டுமீலாக மாறியிருப்பான் போலிருக்கிறது. கொஞ்ச நேரத்திற்கு பிறகு எனது மொபைலில் இருந்து அழைத்தேன். எடுத்தான். 

“கட் ஆகிடுச்சா” என்றேன்.

 “ஆமாம்” என்று வழிந்தான். 

“இண்டர்வியூவைத் தொடரலாமா?” என்றேன்.  

“இப்பொழுது கஷ்டம்” என்றான். 

“ப்ரெண்ட்ஷிப்பைத் தொடரலாமா” என்று ப்ளாஷ்பேக்கை ஆரம்பித்தேன்.

மணிக்கணக்கில் பேசிவிட்டு வந்து இந்தக் குறிப்பை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

16 எதிர் சப்தங்கள்:

Thozhirkalam Channel said...

ஆச்ச்ச்சோ!பாவம் உங்கள் நண்பர்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வேலை கொடுத்தீங்களா இல்லையா?

கார்த்திக் சரவணன் said...

அவருக்கு அப்படி என்ன ஒரு கஷ்டம்?

திவாண்ணா said...

சின்ன வயசில பிரமாதமா செய்யறவங்க காலேஜ் காலத்துக்குள்ள பர்ன் அவுட் ஆகிடறது உண்டு!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

[[ கலந்து கொள்ளும் டெலிபோனிக் இண்டர்வியூக்களில் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியாது. கொஞ்ச நேரம் பார்ப்பேன். அப்புறம் ‘கட்’செய்துவிடுவேன். அதன்பிறகு அவன் எத்தனை முறை அழைத்தாலும் கண்டு கொள்ளவேமாட்டேன். ]]

புனைவென்றாலும் இது நம்பும் படியாயில்லை. இப்படி ஒருவர் தொலைபேசியை வைத்து விட்டால் அந்த நபரை கரும் பட்டியலில்(ப்ளாக்லிஸ்ட் ) வைப்பதுதான் பெரும்பாலான நிறுவனங்களின் மனித வளத் துறை செய்வது !..

Vaa.Manikandan said...

அறிவன்,

நீங்க ஐ.டில இருக்கீங்களா? ஒரே நிறுவனத்திடமிருந்து இரண்டு Offer கடிதங்களை ஒரே நேரத்தில் வாங்கிய ஆட்களை எனக்குத் தெரியும் :).

இப்படி போனை கட் செய்த அதே கம்பெனியிடமிருந்து அடுத்த முறை அழைப்பு வந்து பேசியிருக்கிறேன்.

எல்லாம் தேவையைப்பொறுத்துதான். ஆள் தேவைப்பட்டால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இறங்கி வருவார்கள். தேவையில்லையென்றால் இருப்பவர்களையும் தூக்கி வீசுவார்கள் :)

நானாக புனைவுன்னு சொன்னால்தான் புனைவு. இல்லைன்னா உண்மை. சம்பவம் நடந்திருக்கும்.

அகல்விளக்கு said...

கலாய் கலக்கலாய்...

ப்ரியன் said...

அறிவன் , ஐடி ல இருக்கிற கம்பெனிலேயே ஓப்பனிங் இருக்கு வரீங்களான்னு HR கேட்ட கூத்து எல்லாம் இருக்கு.

பாரதசாரி said...

பிரமாதமான இனடர்வியூ :)

Anonymous said...

Nanum iti la than iruken enakku velai kodupingala B-)senthilrao;->

Unknown said...

சுவையான பதிவு! பாவம் உங்கள் நண்பர்!

Anonymous said...

ஹாஹா....சுவாரசியம்...

Vaa.Manikandan said...

நன்றி தொழிற்களம்.

முரளிதரன், அவன் அதற்கு ஒத்துவரமாட்டான் என்று சொல்லிவிட்டோம் :)

ஸ்கூல்பையன், அவனுக்கு கஷ்டமில்லை. என்னைத்தான் நல்ல நிறுவனத்தில் வேலைக்கு வைத்திருக்கிறார்கள்.

நன்றி வாசுதேவன், அகல்விளக்கு, ப்ரியன்,பாரதசாரி.

செந்தில் ராவ், டெய்லி நிசப்தம் படிக்கும் அடிக்ஸன் கண்டினியூ ஆகும் போல இருக்கே :)

நன்றி புலவர்.

நன்றி அனானிமஸ்.

anujanya said...

உன்னையெல்லாம் நண்பன்னு நினைக்கவே ஒரே டெரர்ரா இருக்குபா ! பழைய பகை எதுனாச்சும் இருந்தால் தயவு செய்து மறந்து மன்னிக்கவும்.

இராஜராஜேஸ்வரி said...

இதுதான் தலைகீழ் மாற்றமோ!

Uma said...

பாவம்க உங்க நண்பர்! இளமையில் நன்றாக படித்ததற்கு இப்படி தண்டனையா?