முதல் நாள் முதல் ஷோவிற்கு டிக்கெட் வாங்கி படம் பார்க்க வேண்டும் என்பது நீண்டகாலத் திட்டம். சினிமா வெறியனாக நான் இருப்பதை அப்பாவால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் பள்ளிக் காலத்தில் என் திட்டம் நிறைவேறியதில்லை. இப்பொழுது துப்பாக்கி படத்தின் முதல் ஷோவிற்கு ரசிகர் மன்ற டிக்கெட் கிடைத்திருக்கிறது. எந்த லாஜிக்கும் பார்க்காமல் போனால் விஜய்யின் படங்கள் நல்ல எண்டர்டெயினராக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு- இது விஜய் பற்றிய விமர்சனங்களிலிருந்து நானாக உருவாக்கிக் கொண்ட நம்பிக்கை. இது வெறும் நம்பிக்கைதான் என்பதையும் சொல்லிவிட வேண்டும். ஏனென்றால் நான் விஜய்யின் சமீபத்திய படங்கள் எதையுமே பார்த்ததில்லை. 2007 இல் பார்த்த போக்கிரிதான் கடைசிப்படம்.
முதல் ஷோ பார்ப்பதற்கான வாய்ப்பு பள்ளியில்தான் கிடைக்கவில்லையே தவிர கல்லூரி படிக்கும் போது நானாக ஏற்படுத்திக் கொண்டேன். பாபா படத்தை அப்படி பார்த்திருக்கிறேன். அது ரஜினியின் வெறித்தனமான ரசிகனாக இருந்த பருவம். அடுத்த நாள் லேப் எக்ஸாம் என்பதால் யாரும் கம்பெனி தரவில்லை. தனியாகத்தான் போயிருந்தேன். முதல் ஷோவிற்கு ரசிகர் மன்றங்களுக்கு கொடுத்த டிக்கெட்கள் போக நூறு டிக்கெட்களை பொதுமக்களுக்கு விற்றார்கள். பொதுமக்களுக்கு என்றாலும் ரசிகர்கள்தான் வாங்கினார்கள். நூறு டிக்கெட்களை வாங்க ஆயிரக்கணக்கில் வரிசையில் நின்றார்கள்.
ப்ளேக்கில் விற்பதை வாங்குமளவிற்கு எனது பொருளாதாரம் இடம் கொடுக்காது. என்பதால் முந்தின நாள் இரவே க்யூவில் இடம் பிடித்திருந்தேன். அதிகாலை நெருங்கியபோது சில முரட்டு ரசிகர்கள் க்யூவில் நின்றவர்களின் தோள் மீது ஏறி கவுண்ட்டரை நெருங்கினார்கள். பேசாமல் நின்று கொண்டால் அவர்களை சுமக்கும் வலியோடு தப்பித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் அவர்களின் அடியையும் வாங்கவேண்டும். ரஜினி என்ற மூன்றெழுத்து இந்த வலிகளைத் தாங்குவதற்கான வலிமையை கொடுத்திருக்கிறது என நம்பிக் கொண்டு அவர்களுக்கு தோள் கொடுத்தேன். இது நடந்து பத்து வருடங்கள் ஓடிவிட்டன.
இப்பொழுது துப்பாக்கி படத்திற்கு டிக்கெட் வாங்குவதற்கு இந்தச் சிரமமெல்லாம் இல்லை. நண்பனிடம் முதலே சொல்லி வைத்திருந்தேன். அவன் ரசிகர் மன்றத்தில் பொறுப்பில் இருக்கிறான். ஐநூறு ரூபாய் ஆகும் என்று சொல்லியிருந்தான். அப்பா எதுவும் சொல்லவில்லை. மனைவியும் சரியென்று சொல்லியிருந்தாள். தீபாவளியன்று படத்திற்கு போக வேண்டுமா என அம்மாதான் சலித்துக் கொண்டார். நான் பொருட்படுத்தவில்லை. அதிகாலை மூன்றரை மணிக்கு தியேட்டருக்கு வந்துவிடும்படி நண்பன் கட்டளையிட்டிருந்தான். சற்று உற்சாகமாகத் தூங்கப் போயிருந்தேன். பாபா பட நினைவுகள் மனசுக்குள் கொசுவர்த்தியைச் சுழற்றி ப்ளாஷ்பேக்கை ஓட்டியது.
பாபா படத்திற்கு டிக்கெட் வாங்க நின்ற க்யூவை சரிபடுத்துவதற்காக இரண்டு போலீஸ்காரர்கள் பெரிய தடியை வீசிக் கொண்டேயிருந்தனர். அவர்களிடம் அடி வாங்காமல் டிக்கெட் வாங்கி, கூட்டத்தில் நசுங்கி இடத்தைக் கண்டுபிடித்து அமரும்போதுதான் தெரிந்தது பர்ஸை கோட்டைவிட்டிருப்பது. அந்தக் காலத்தில் என் பர்ஸில் பணம் அதிகம் இருக்காது. யாராவது திருடினார்களா அல்லது கீழே விழுந்துவிட்டதா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் அதைத் திறந்து பார்ப்பவர்களுக்கு பத்து ரூபாய் கிடைத்தாலே பெரிய விஷயம். அதனால் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. டிக்கெட் வாங்குவதற்காக இரவு முழுவதும் தூக்கம் கெட்டிருந்ததால் கண்கள் சுழன்றன. ரஜினியை ஸ்கிரீனில் பார்க்கும் வரை பொறுத்துக் கொண்டால் பிறகு என்னை உற்சாகமாக வைத்துக் கொள்ளும் வேலையை அவர் எடுத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் உடலில் சதைப்பிடிப்பான பகுதிகளை ‘நறுக்’ என கிள்ளிவிட்டுக் கொண்டேன். வலியின் காரணமாக தூக்கம் தள்ளிப்போனது.
திரை விலகியது. விசில் சப்தத்தில் தியேட்டரின் கூரை விழுந்துவிடக் கூடும் என நினைத்தேன். தீப்பொறி பறக்க ரஜினி வரும் வரை இருந்த உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் துவங்கியது. ரஜினியும், சுரேஷ் கிருஷ்ணாவும், எஸ்.ராமகிருஷ்ணனும் கூட்டு சேர்ந்து சாகடித்திருந்தார்கள். இடைவேளைக்குப் பிறகு அமர முடியாமல் வெளியேறினேன். வெளியே வந்த போதுதான் அடுத்த நாளையை லேப் எக்ஸாம் பூதாகரமாகத் தோன்றியது. அந்த நொடிவரை தேர்வுக்காக எந்தத் தயாரிப்பும் இல்லாமல் இருந்தேன். சோறில்லாமல் கிடந்ததாலும் கூட்டத்தின் காரணமாகவும் களைத்திருந்தேன். டீ குடிக்கக் கூட காசில்லை. விடுதிக்கும் நடந்துதான் போக வேண்டும். இத்தனை கஷ்டத்தையும் ஒரு மட்டமான படத்திற்காக அனுபவிக்கிறேன் என்ற போது வருத்தம் அதிகமாகியிருந்தது. எனக்குள் இருந்த தலைவர் ரஜினி வெறும் நடிகர் ரஜினியாக மாறியிருந்தார். இனிமேல் எந்தக் காரணத்திற்காகவும் முதல் ஷோ பார்க்கக் கூடாது என முடிவு செய்திருந்தேன்.
இப்பொழுது என் முடிவை தகர்க்கவிருக்கிறேன் என்றாலும் சந்தோஷமாக இருந்தது. ‘சாட்டிங்’கில் வந்த நண்பர்களிடம் துப்பாக்கி படம் பார்ப்பதாகச் சொல்லியிருந்தேன். மூன்று மணிக்கு அலாரம் வைத்திருந்த மொபைலை தலையணைக்குக் கீழாக வைத்து விட்டு பன்னிரெண்டு மணியைத் தாண்டிய போது தூங்கப் போனேன். கனவில் ரஜினியும், விஜய்யும் ஒரே குதிரையில் வந்தார்கள். பஸ்ஸில் மோதவிருந்த குழந்தையை காப்பாற்றினார்கள். விரலை மடித்து நாக்கின் கீழாக வைத்து விசிலடித்துக் கொண்டிருந்தேன். யாரோ தியேட்டரின் கதவை ஓங்கித் தட்டினார்கள். தூக்கம் கலைந்தது. தட்டப்பட்டது என் அறைக் கதவு. எழுந்து திறந்த போது வெளிச்சம் கண்களைக் கூசியது. "எல்லோரும் குளிச்சாச்சு, எந்திரிச்சு குளிங்க" என்றார் மனைவி. ஓடி வந்து மொபலைப் பார்த்தேன். அதுவும் பேட்டரியில்லாமல் தூங்கியிருந்தது. "மணி என்ன?" என்றதற்கு "ஏழு" என்றார். அவசரவசரமாக மொபலை சார்ஜரில் போட்டு நண்பனுக்கு டயல் செய்தேன். ரிங் ஆகிக் கொண்டிருந்தது. அவன் எடுப்பதாக இல்லை. அவன் விஜய்க்காக வெறித்தனமாக விசிலடித்துக் கொண்டிருக்கக் கூடும் என்று நினைத்த போது “மூன்று மணிக்கு படத்துக்கு போற ஆளைப்பாரு” என்று அம்மா கிண்டலடிக்கத் துவங்கியிருந்தார். நான் துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனன். இன்றைய தீபாவளி அத்தனை உற்சாகமானதாக தெரியவில்லை.
தீபாவளி வாழ்த்துக்கள்!
5 எதிர் சப்தங்கள்:
தப்பிச்சீங்களா தவறவிட்டீங்களா என்பதை படம் பார்த்தவங்களை கேட்டாத்தான் தெரியும்
எனது இதயங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்
அடப்பாவி...நீ எழுத்து வித்தகன்யா...கலக்கிட்டீங்க..வாழ்த்துகள்
அட, போங்க சார். விறுவிறுப்பான விமர்சனத்த எதிர்பார்த்து வாசிக்கவந்தா, பல்பா குடுக்கிறீங்க பல்பு.
படத்தைவிடுங்க... அதான் கனவுப்படம் பார்த்துட்டீங்களே,, அதைவிடவா துப்பாக்கி ஒஸ்தி?
Post a Comment