காலையில் நான்கு மணிக்கு தூக்கத்திலிருக்கும் அப்பாவை எழுப்பும் சிறுவன் “அப்பா ஒண்ணுக்கு” என்று அந்த தினத்தை துவங்கி வைக்கிறான். இப்படித்தான் அட்டகாசமாகத் துவங்குகிறது அந்த நாவல். அப்பாதான் தூக்கக் கலக்கத்தில் இருப்பார். ஆனால் சிறுவன் அப்பொழுதே படு சுறுசுறுப்பாகியிருப்பான். பாத்ரூமில் அவனை விட்டுவிட்டு கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கும் போது அவரது கால் மீது அடித்துவிட்டு “அப்பா உங்க கால் மேலேயே ஒண்ணுக்கு அடிச்சுட்டேன்” என்று ஆரம்பிப்பான் அன்றைய தினத்துக்கான அவனது லூட்டியை.
இரண்டு கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது. ஏழாயிரம் பக்கங்களுக்கு. இவ்வளவு பெரிய நாவலை படித்துவிட முடியும் என்று நினைத்துப்பார்த்தது கூட இல்லை. அதுவும் பதினைந்து நாட்களில். அதைவிடவும் அப்படியொரு நாவல் இருப்பதே எனக்குத் தெரியாது. மார்ஷெல் ப்ரஸ்ட் எழுதிய In search of lost time தான் இதுவரை எழுதப்பட்ட நாவல்களிலேயே மிக நீளமானது என விக்கிபீடியா சொன்னதை நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது அதைவிடவும் நீளமான ஒரு நாவலை பார்த்தாகிவிட்டது.
அல்பேனிய நகரான Fierதான் இந்த ஏழாயிரம் பக்க நாவலின் களம். கணவனையும் மூன்று வயதுக் குழந்தையையும் விட்டுவிட்டு அலுவலக பயணமாக பதினான்கு நாட்களுக்கு மனைவி ஜெர்மனி போய்விடுகிறாள். அவள் போனபிறகுதான் நாவல் தொடங்குகிறது. நாவல் தொடங்குகிறது என்பதைவிடவும் சிறுவனின் அழிச்சாட்டியம் தொடங்குகிறது என்பதுதான் பொருத்தமாக இருக்கும். அடுத்த பதினான்கு நாட்களுக்கும் அந்தச் சிறுவன் அடிக்கும் லூட்டிகளும் அவனது முப்பது வயது அப்பாவின் கண்ணாமுழி திருகலுமாக படு ஆர்ப்பாட்டமான நடையில் நாவல் நகர்கிறது.
விடிந்தும் விடியாமலும் தன் கால் மீது சிறுநீர் கழித்துவிட்டதை சிறுவன் பெருமையடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் கழுவி துடைத்து பாத்ரூமை விட்டு வெளியே வருவார். இன்னும் இருளாக இருப்பதாகவும் திருடன் வருவான், பூனை வரும் என்றெல்லாம் சொல்லி சிறுவனை அழைத்துவந்து மீண்டும் படுக்கையில் அமுக்குவார். ஐந்து நிமிடங்களில் “அப்பா ஆய் வருது” என்பான். இன்றைய தனது தூக்கம் அவ்வளவுதான் என்று நினைத்து அவன் டாய்லெட்டில் அமர்ந்து கொண்டிருக்கும் போதே பல் துலக்கி முகம் கழுவி முடித்துவிடுவார். அவனுக்கும் கழுவிவிட்டு வெளியே வரும் போது “அப்பா நான் தூங்கப்போறேன்” என்று படுக்கையில் படுத்து அவரைக் கடுப்பேற்றுவான். முகம் கழுவியிருந்தாலும் பரவாயில்லை தூங்கிவிடலாம் என்று போர்வைக்குள் புகுந்து தூங்க முயற்சிக்கும் போது “அப்பா பசிக்குது. பால் வேணும்” என டபாய்ப்பான்.
இரவிலேயே இத்தனை அட்டகாசங்கள் என்றால் பகலில் என்ன செய்வான் என்பதை தனியாகச் சொல்ல வேண்டுமா? அதகளம்தான். கீழ்தளத்தில் வீட்டு ஓனர் பகல் தூக்கம் போடும் அறையை எப்படிக் கண்டுபிடிப்பானோ தெரியாது நேராக அதே இடத்தில் ஒரு பாத்திரத்தை ‘டமார்’ என்று நொறுக்குவான். அவர் அடித்துபிடித்து மேலே வந்து எச்சரித்து விட்டு கீழே போவதற்குள் இன்னொரு டமார். அவருக்கு பதில் சொல்லி அப்பாதான் டயர்டாகிக் கொண்டிருப்பார். சிறுவனும் சரி, அந்த வீட்டு ஓனரும் சரி டயர்டாகாமல் டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டை தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.
சில சமயங்களில் கோபம் உச்சந்தலையில் நட்டுக் கொள்ளும் போது சிறுவனை மிரட்டலாம் என எத்தனிப்பார். “அம்மா வேணும்” என அழ ஆரம்பித்துவிடுவான். கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு “நாளைக்கு ப்ளைட் ஏறிப்போலாமா?” என்று அவனை திசைமாற்றினால் பத்து நிமிடம் அமைதியாக இருப்பான். பிறகு அதே சரணம், பல்லவி, அனுபல்லவி எல்லாம் தொடரும் “அம்மா வேணும்”. ஒரு கட்டத்தில் இனி வாழ்நாளில் கோபமே படக்கூடாது என அப்பா முடிவு செய்வார்.
பகலெல்லாம் அவனோடு ஆடி முடித்து இரவில் தொண்டைத்தண்ணீர் வற்ற கதைகளைச் சொல்லி தட்டிக் கொடுப்பார். ஓரு மணி நேரத்திற்கும் மேலாக கதையைச் சொல்லி முடித்து சிறுவன் தூங்கிவிட்டதாக கண்ணை மூடுவார். ஆனால் சிறுவன் தூங்கியிருக்க மாட்டான். “அப்பா..அப்புறம்?” என்பான் சிறுவன். மீண்டும் அனர்த்த ஆரம்பித்தால் பன்னிரெண்டு மணி வரைக்கும் “ம்ம்ம்” கொட்டிக் கொண்டேயிருப்பான். பன்னிரெண்டு மணிக்குத்தான் இரண்டு பேரும் தூங்கியிருப்பார்கள். ஆனால் மீண்டும் ஒன்றரை மணிக்கு எழ வேண்டியிருக்கும். அதற்கும் காரணமிருக்கிறது. இருவரின் ஆடைகளையும் வெதுவெதுப்பான சிறுநீரில் நனைத்திருப்பான். மாற்றிவிட்டு தூங்கினால் மீண்டும் வழக்கம் போல நான்கு மணிக்கு எழுந்துவிடுவான். பிறகு புதுப்புது சாகசங்களைச் செய்வான்.
இப்படியான இரவு லூட்டிகளும், பகலில் குளிக்க வைப்பதிலிருந்து சாப்பாடு ஊட்டுவது வரைக்குமான அத்தனை அட்டகாசங்களும் இம்மிபிசகாமல் நாவலாகியிருக்கிறது. குழந்தைகளின் உலகத்தை இவ்வளவு துல்லியமாக வாழ்ந்து பார்த்தால் மட்டுமே அனுபவிக்க முடியும். நம் எல்லோருக்குமே குழந்தைகளோடு அனுபவம் இருக்கிறது. அதுவும் அப்பாவுக்கும் மகனுக்குமான உறவில் ஒரு நட்பு சார்ந்த ரிலேஷன்ஷிப் இருக்கும். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா என்று தெரியவில்லை. அப்பா மகன் உறவை இத்தனை துல்லியமாக ஒரு நாவலில் சொல்ல முடிகிறது என்பதை ஆச்சரியத்தோடு நினைத்துக் கொண்டே தூங்கியிருந்தேன்.
விடிந்தும் விடியாமலும் “அப்பா ஒண்ணுக்கு” என்று மகி எழுப்பினான். எழுந்து பார்த்தால் நான் எந்த நாவலையும் வாசித்திருக்கவில்லை. என் மனைவி ஜெர்மனி போனதற்கு பிறகு மகனுடன் நான் நடத்தும் பதினான்கு நாள் பாசப்போராட்டமும் ஒரு நாவல் படிப்பது போன்ற கனவாக வந்திருக்கிறது. அதுவும் ஏழாயிரம் பக்கங்களுடைய நாவலைப் படிப்பதாக.
இதோ இன்றைக்கும் அதே கால்கள் நனைப்பு, ஆய், பசி என அத்தனையும் வழமை மாறாமல் செய்துவிட்டு இப்பொழுது தூங்கிக் கொண்டிருக்கிறான். நான் கிடைத்த இடைவெளியில் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இதோ இன்றைக்கும் அதே கால்கள் நனைப்பு, ஆய், பசி என அத்தனையும் வழமை மாறாமல் செய்துவிட்டு இப்பொழுது தூங்கிக் கொண்டிருக்கிறான். நான் கிடைத்த இடைவெளியில் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
5 எதிர் சப்தங்கள்:
எப்படிய்யா இப்படியெல்லாம்? நேத்து பரபரன்னு வேறொரு ஏரியா..இன்னைக்கு உல்டாவா இன்னொரு ஏரியா...அடிச்சு ஆடுய்யா! சான்சே இல்லை...
ரசிக்க வைக்கும் எழுத்து நடை... ரசித்தேன்... நன்றி...
ரொம்ப சுவாரசியமா வாசிக்க ஆரம்பிச்சேன்...
நாவலோட தலைப்பை சொல்லவே இல்லையேன்னு பாதிலையே லைட்டா ஒரு டவுட்டு வந்துச்சு...
கடைசில கன்பர்ம் ஆயிடுச்சு...
:)))
enjoyed reading it.
congrats continue..
really enjoyed it.
congrats. shared in twitter.. if u give me ur twitter name i would like to follow u.
many thanks.
A.Senthu
Post a Comment