Dec 5, 2012

Dynora Vs Solidaire : எந்த டிவி வாங்கலாம்?



ஒரு ப்ளாக் அண்ட் ஒயிட் படத்தில் பணக்கார நாயகி தன்னை சமூக சேவகி என்பதை நிரூபிப்பதற்காக ஒரு விளக்குமாரைக் கையில் பிடித்துக் கொண்டு காமிராவுக்கு போஸ் கொடுப்பார். படத்தின் பெயர் மறந்துவிட்டது. தூர்தர்ஷனில் பார்த்த படம் அது. அந்த நாயகியை காமிராக்காரன் வளைத்து வளைத்து படம் எடுப்பான். இந்த ப்ளாக் அண்ட் ஒயிட் நாயகி பற்றி எழுதப்போவதில்லை. அவள் இப்பொழுது என் ஞாபகத்திற்கு வந்தததற்கான காரணத்தை இன்னொரு நாளைக்குச் சொல்கிறேன்.

ஆனால் இந்தப்படத்தை பார்த்த காலத்தில் எங்கள் வீட்டில் டி.வி இல்லை என்பதை இப்பொழுது சொல்லிவிடுகிறேன். எங்கள் வீடு என்றில்லை நம் பெரும்பாலான வீடுகளில் டிவி இருக்காது.

ஒருமுறை டயனோரா டிவி வாங்கலாமா அல்லது சாலிடரா என்று வீட்டில்  விவாதத்தை துவக்கினார்கள். எப்படியும் டிவி வந்துவிடும் என நம்பிக் கொண்டிருந்தேன். மனசுக்குள் பட்டாம்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக பறக்கத் துவங்கின.  கடைசியில் இரண்டும் விலை அதிகம் என்று இன்ஸால்மெண்டில் ஒரு ரேடியோ செட்டை அப்பா வாங்கி வந்தார். அதற்கு பிறகு பல வருடங்களுக்கு டிவி பற்றி கேட்கவே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

பிறகு வழக்கம் போல வீடு வீடாக டிவி பார்க்க படையெடுக்கத் துவங்கினேன்.  டிவி இருந்தால் அது பணக்காரர்களின் வீடாக இருக்கும். அதுவும் ப்ளாக் அண்ட் ஒயிட் டிவிதான். கலர் டிவி ஊர் மொத்தத்திற்கும் ஒன்று இருந்தாலே பெரிய விஷயம். கலர் டிவி இருக்கும் வீட்டுக்காரர் மிகப்பெரிய பணக்காரராக இருப்பார் என்பதால் அந்த வீட்டிற்கு டிவி பார்க்க போவதற்கு துணிச்சல் இருக்காது.

சுமாரான பணக்காரர்கள் வீட்டிலும் அவ்வளவு சீக்கிரம் நுழைந்துவிட முடியாது. டிவிக்காரரின் வீட்டிலிருந்து வெகு தூரத்தில் பொடியன்கள் நின்று கொள்ள ஒருவன் மட்டும் பதுங்கிச் சென்று டிவி ஓடுகிறதா என்று பார்ப்பான். அவன் சிக்னல் கொடுத்தவுடன் வீட்டுக்காரர்களுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்ற பிரக்ஞையுடன் ஒவ்வொருவரவாக நுழைய வேண்டியிருக்கும். சில நிமிடங்களில் அந்த வீட்டில் பெருங்கூட்டம் சேர்ந்துவிடும். சில பெண்கள் குழந்தை குட்டிகளுக்கு தேவையான துண்டை எடுத்துவந்து விரித்துப் போட்டு தூங்க வைத்துவிடுவார்கள்.

டிவி ஓடும் போது அருகில் இருப்பவனுடன் பேசுவதாக இருந்தாலும் கூட கிசுகிசுப்புதான். வாய் மீது கையை வைத்து மறைத்துக் கொண்டு பேசியது ஞாபகத்திலிருக்கிறது. ‘மேல்மாடி காலி’ போன்ற சில வார நாடகங்களுக்கு படு கூட்டமாக இருக்கும். ஒல்லிப்பிச்சான் கோவை அனுராதாவை பார்த்தாலே கெக்கேபிக்கே என்று சிரிப்பு வந்துவிடும். கோவை அனுராதா எப்படியிருக்கிறார்?. வாஷிங்பவுடர் நிர்மாவெல்லாம் ஏன் மார்கெட்டில் கிடைப்பதில்லை? போன்ற கேள்விகள் இப்பொழுது தோன்றுவதற்கு அவசியமும் இல்லாமல் அவகாசமும் இல்லாமல் போய்விட்டது.

அறுவை போடும் மனிதர்களை ‘வயலும் வாழ்வும்’ என்று அழைத்துக் கடுப்பேற்றியது, ஒரு வார்த்தையும் புரியாவிட்டாலும்  ‘சித்ரஹார்’பாடல்களை வாயைத் திறந்து பார்த்தது எல்லாம் வசந்தகாலமாகத்தான் தெரிகிறது. மேகக் கூட்டம் வந்தாலே ஆண்டெனா ப்ளக்கை கழட்டி விட்டது, ஆண்டெனா கம்பி வளைந்து போய்விடக் கூடும் என்பதற்காக காகங்களை அமரவிடாமல் துரத்திவிட்டது போன்றவற்றை இப்பொழுது நினைத்தாலும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. Golden Times!

ஞாயிற்றுக்கிழமை படம் பார்க்க பெரும்பாலும் பஞ்சாயத்து போர்டுக்குத்தான் போக வேண்டும். அதற்கு காரணம் இருக்கிறது. பணக்கார வீடுகளில் பாதிப்படம் ஓடிக் கொண்டிருக்கும் போது சில முசுடுகள் டிவியை நிறுத்தி துரத்திவிட்டுவிடுவார்கள். பஞ்சாயத்து போர்டில் இந்த தொந்தரவு இருக்காது. ஆனால் பஞ்சாயத்து போர்டில்தான் படம் பார்ப்பார்கள் என்று தெரிந்து கொண்டு அம்மாவோ அப்பாவோ நேராக வந்துவிடுவார்கள். சண்டைக்காட்சி வரும் போது ‘சாப்பிட வா’ என்று டார்ச்சரைக் கொடுப்பார்கள்.

வெள்ளிக்கிழமை மாலைகளில் ஒளியும் ஒலியுமுக்காக சேரும் பெருங்கூட்டத்தில் முண்டியடித்து இடம்பிடித்துவிடுவது பெரும் பாக்கியம். அப்படி ஒரு நாள் டிவி பார்த்துக் கொண்டிருந்த போதுதான் கவிதா அக்காவின் கணவன் குடித்துவிட்டு வந்திருந்தான். அந்த அக்கா டிவி பார்க்க போயிருப்பது அவனுக்கு தெரியவில்லை. கொஞ்ச நேரம் கத்திக் கொண்டிருந்தவன் அப்படியே வாசலில் தூங்கிவிட்டான். ஒளியும் ஒலியும் பார்த்துவிட்டு உற்சாகமாக வந்த கவிதா அக்கா இவனை பார்த்ததும் உறைந்து போய் நின்றாள். எங்களோடு வந்த சில பெண்கள் தைரியமாக போகச் சொன்னார்கள். அவளும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு முன்னேறினாள். குழந்தை அவளது இடுப்பில் ஒட்டியிருந்தது. அசைவற்றுக் கிடக்கும் தைரியத்தில் சப்தமில்லாமல் அவன் கால்களைத் தாண்டி அவள் கதவைத் திறப்பதை பார்த்துக் கொண்டிருந்தோம். 

கிசுகிசுப்புடன் எங்களுக்குள் சிரித்துக் கொண்டிருந்த அந்த கணத்தில் மிருகம் விழித்துக் கொண்டது. படுத்தவாறே அவளது இடுப்பில் ஓங்கி உதைத்தான். முதலில் குழந்தையும் அவள் மீது கவிதா அக்காவுமாக சாக்கடைக்குள் விழ பெரும் அதிர்ச்சியில் உறைந்து போனோம். பெண்கள் ஒதுங்கிக் கொள்ள சில ஆண்கள் ஓடிவந்து அவனைத் தடுத்தார்கள். சில பெண்கள் கவிதா அக்காவை பார்த்து அழத்துவங்கினார்கள். நான் பயத்தில் வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன்.

அவளையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுவிட்டார்கள் என பிரகாஷ் சொன்னான். அவளுக்கு என்ன ஆனது என்று கேட்கவேயில்லை. அதன் பிறகு அந்த வீடு திறக்கப்படவேயில்லை. சில மாதங்களுக்கு பிறகாக வேறொரு பெண் அந்த வீட்டில் கோலம் போடுவதைப் பார்த்தேன். இப்பொழுது வரைக்கும் கவிதா அக்காவுக்கு என்ன ஆனது என்று யாரிடமும் கேட்டதில்லை. ஆனால் மியூசிக் சேனல்களுக்கு டிவி ரிமோட்டை விரட்டும் போது அந்த அக்காவின் ஞாபகம் அவ்வப்போது வந்து போகிறது.

2 எதிர் சப்தங்கள்:

Thozhirkalam Channel said...

உங்களின் அறுபவங்கள் மீண்டும் அந்த காலத்தை நினைவுப் படுத்துகிறது

ravindhar said...

sila pathivugalai padikkum pothu antha thukkam mattum manathil appadiye ottikolgirathu...