இரண்டாம் வகுப்பு படிக்கும் போது சித்ரா என்ற டீச்சர்தான் எங்களுக்கு க்ளாஸ் டீச்சர். இப்பொழுது யோசித்துப் பார்த்தால் அவரது முகம் முழுமையாக ஞாபகத்தில் இல்லை. ஆனால் அவரது குதிரைவால் கூந்தல் நினைவில் இருக்கிறது. அவரிடம் சிக்கி ஆறு மாதங்களுக்கு சின்னாபின்னமானதால் அடுத்த பல வருடங்களுக்கு சித்ரா என்ற பெயரைக் கேட்டாலே அலறியதும் ஞாபகத்தில் இருக்கிறது.
ஆரம்பத்தில் கோபியில் இருந்த ஒரு பள்ளியில்தான் படித்துக் கொண்டிருந்தேன். இரண்டாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் அம்மா அரசுப்பணியில் சேர்ந்தார். அவருக்கு செண்பகப்புதூர் என்ற கிராமத்தில்தான் முதல் வேலை. எனவே அருகாமையில் இருந்த டவுனான சத்தியமங்கலத்தில் இருந்த சாரு மெட்ரிகுலேஷன் என்ற பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள். அப்பொழுதுதான் நேரடியாக ஏழரைக்கு ப்ரோமோஷன் கொடுத்தார்கள். சனிபகவான் சித்ரா டீச்சர் ரூபத்தில் பிரசன்னமாகியிருந்தார்.
அந்த சித்ரா டீச்சருக்கு என்னை மட்டுமில்லை எங்கள் பென்ச்சில் அமர்ந்திருக்கும் எந்த மாணவனையும் பிடிக்காது. அவ்வப்போது சுளுக்கெடுப்பார். வகுப்பிற்கு வந்தவுடன் ஏதாவது ஒரு பாடத்தில் கேள்வி கேட்பார். அனேகமாக நானோ அல்லது சரவணனோதான் முதல் போனியாக இருக்கும். சத்தியமாக பதில் தெரியாது. கொட்டு வைத்து வகுப்பறைக்கு முன்னால் போகச் சொல்வார். கொட்டு ‘நங்ங்ங்’ என்று இறங்கும். தலையைத் தேய்த்துக் கொண்டே வகுப்பின் முன்னால் நின்று கொள்வோம். வரிசையாக ஒவ்வொரு மாணவனாக கேட்டுக் கொண்டே வருவார். கடைசியாக கிட்டத்தட்ட அத்தனை பையன்களும் தலையைத் தேய்த்துக் கொண்டிருப்போம். பையன்கள் லிஸ்ட் தீர்ந்த பிறகு அடுத்தது கிருத்திகாவையோ, லீலாவதியையோ கேள்வி கேட்பார் என்று எதிர்பார்த்திருப்போம். ஆனால் கேட்க மாட்டார். அவருடைய டார்கெட் ‘பையன்’கள் மட்டும்தான் என்று சோகமாகிவிடுவோம்.
வகுப்பிற்கு முன்பாக வந்து நிற்கும் வந்த அத்தனை ‘மடையர்களையும்’ நாற்காலியில் அமருவது போன்ற பாவனையில் அமரச் சொல்லிவிட்டு அவர் பாடத்தைத் துவங்குவார். அந்த இடத்தில் நாற்காலி எதுவும் இருக்காது. ஆனால் அங்கு நாற்காலி இருப்பதாக கற்பிதம் செய்து கொண்டு முட்டியை மடக்கி நிற்க வேண்டும். கொஞ்ச நேரத்தில் கணுக்காலில் ஆரம்பித்து கெண்டைக்கால் வரைக்கும் வலி இழுக்கத் துவங்கும். இந்த வலியை சமாளிப்பதா அல்லது பாடத்தை கவனிப்பதா என்ற குழம்பி பிறகு வலியை சமாளிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து பாடத்தை ‘டீலில்’ விட்டுவிடுவோம்.
அடுத்த நாள் வந்து முந்தைய நாள் ‘டீலில்’விட்ட பாடத்திலிருந்து கேள்வி கேட்பார். இப்படியே எங்கள் சோகக் கதை தொடர்ந்து கொண்டிருந்தது. கொஞ்ச நாட்களுக்கு பிறகு கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாத மாணவர்களை டீச்சர் கொட்டுவதற்கு பதிலாக அருகில் இருக்கும் மாணவனையே கொட்டு வைக்கச் சொல்வார். எனக்கு சரவணன் கொட்டு வைப்பான், அவனுக்கு நான் கொட்டு வைக்க வேண்டும் என்பதால் ‘மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்கில்’ தடவிக் கொடுத்துக் கொள்வோம். அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் “கொட்டு வைக்கும் சப்தம் எனக்கு கேட்க வேண்டும் இல்லையென்றால் நான் வந்து கொட்டுவேன்” என்று டார்ச்சர் கொடுக்கத் துவங்கினார். அப்படியும் நாங்கள் வழிக்கு வராததால் வேறொரு உபாயத்தைக் கண்டுபிடித்தார். பென்ச்சில் ஒரு பையன் அமர வேண்டும் அவனை அடுத்து ஒரு பெண் அமர வேண்டும் அவளை அடுத்து மீண்டும் ஒரு பையன் என்று அமர வைத்தார்.
கல்லூரிப்பருவமாக இருந்திருந்தால் அது நல்ல அனுபவமாகத்தான் இருந்திருக்கும். ஆனால் அது இரண்டாம் வகுப்பு. அக்கா தங்கைகளுடன் பிறக்காத எனக்கு ஒரு பெண்ணின் அருகில் அமர வேண்டும் என்பது உவப்பானதாக இல்லை. வெட்கம் பிடுங்கும். கால்களை குறுக்கி அருகில் அமர்ந்திருக்கும் பெண் மீது உரசாமல் அமர்ந்து கொள்வேன். அப்பொழுது சரவணனின் இடத்தில் பானு வந்திருந்தாள். அவள்தான் இனிமேல் என்னைக் கொட்ட வேண்டும். இது ஒரு பக்க அட்டாக். அவள் மட்டுமே என்னைக் கொட்டுவாள். நான் அவளை திருப்பிக் கொட்டக் கூடாது என்ற தைரியத்தில் என் மண்டையில் சடுகுடு ஆடுவாள். அதோடு என் தொடையை கிள்ளி வைக்கவும் அவளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. தினமும் வீங்கிய தலையுடனும், சிவந்த தொடையுடனும் வீட்டுக்கு போவது என்பது எனக்கு விதிக்கப்பட்டிருந்தது.
எத்தனை தண்டனைகளாலும் திருப்தியடையாத சித்ரா டீச்சர் ஒரு நாள் எங்களின் துகிலுரிய முடிவு செய்துவிட்டார். வகுப்பில் நிர்வாணமாக்கப்பட்டு விளையாட்டு மைதானத்தை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு மீண்டும் வகுப்புக்கு வர வேண்டும் என்பது டீச்சரின் ஆணை. என் துகிலை உரிவதற்கு பானு பணியமர்த்தப்பட்டாள்.
சட்டையைக் கழற்றுவதற்கு அவள் பெரும் சிரமப்படவில்லை. ஆனால் அதையும் என்னால் முடிந்த அளவு தடுக்க முயன்றேன். சட்டை கழற்றப்பட்டு அரை நிர்வாணம் ஆன பிறகு எங்களது ட்ரவுசர்கள் கழற்ற உத்தரவிடப்பட்டது. நாங்கள் கதறத்துவங்கினோம். எந்த மாணவனும் அந்த மாணவிகளிடம் தோற்கவில்லை. டீச்சர் களமிறங்கினார். கொட்டி வைப்பேன், மர ஸ்கேலால் அடிப்பேன் என்றெல்லாம் மிரட்டினார். எங்களுக்கு வலியை விடவும் மானம் பெரிதாக இருந்தது. எங்கள் போராட்டத்தை எளிதில் தோற்கடிக்க முடியவில்லை.
இந்த சம்பவத்திற்கு பிறகு அந்தப்பள்ளியில் நிகழ்ந்த பெரும்பாலான நிகழ்வுகள் மறந்து போனது. அந்த அளவிற்கு இந்நிகழ்ச்சி பெரும் பாதிப்பை உருவாக்கியது. என் பள்ளிப்பருவத்தில் மறக்க விரும்பும் தினங்களாக என் இரண்டாம் வகுப்பு அமைந்தது. அப்பொழுது அந்த டீச்சர் எங்களை தண்டிப்பதாக நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் அது வெறும் தண்டித்தலாக மட்டும் இருக்க முடியாது என்று பிறகு தோன்றியது. அந்த டீச்சர் எதனால் அத்தனை குரூரமானவராகவும், ராட்சசியாகவும் நடந்து கொண்டார் என்று யோசித்திருக்கிறேன். இந்த யோசனைக்கு ஆயிரம் பதில்களை என்னால் சொல்ல முடியும். ஆனால் உண்மையான பதிலை சித்ரா டீச்சரால் மட்டுமே சொல்ல முடியும்.
15 எதிர் சப்தங்கள்:
அதிர்ச்சியான சம்பவம்
ஆம் இதற்கும் சமூக வியாக்கியானம் கொடுக்க முடியாது, அவரால் மட்டுமே சொல்ல முடியும்.
அடக் கொடுமையே :(
I've shared your post in G+
நானும் இதுபோல் என்னுடைய 6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் சந்தானம் என்ற ஒரு அரைக் கிறுக்கனை (இரண்டையும் சேர்த்து அரக்கன் என்றே வைத்துக் கொள்ளலாம்) கடந்து வந்துள்ளேன். கூடிய விரைவில் அந்த ஜந்துவைப் பற்றி ஒரு பதிவும் போடலாம் என்றிருக்கிறேன். நல்லவேளை நான் படித்து ஆண்கள் பள்ளி..
கொடுமைக்கார சைக்கோ டீச்சரை இன்றுவரை மரியாதையுடன் அழைக்கும் உங்களைப் பாராட்டுகிறேன்.
இப்படியெல்லாம் நடந்திருக்கா...?? :((
ஆனால் எனக்கு இது போன்று அமையவில்லை. என்னை அடித்து கையை வீங்க வைத்த அருள் இல்லா ஜோதியை என் அம்மாவிடம் சொல்லி திட்ட வைத்தேன். அதன் பின்பு எந்த பிரச்சனையுமின்றி 5 வது பாஸ் ஆனேன்.
ஆனால் 10 வது அப்படி நிகழ வில்லை. அம்மாவிடம் சொல்வது என்பது பயந்தாங்கொள்ளிகளின் செயலாகப் பார்க்கப்பட்டதால் பத்மாவதியின் தண்டனையான வகுப்புக்கு வெளியே நிற்பது என்பது தொடர்ந்தது. ஒரு மாதம் கழித்து வெளியெ நிற்பது என்பது பக்கத்து வகுப்பு பெண்களின் முன்பு அவமானமாக இருந்ததால் அறிவியல் வகுப்பு என்றால் எனக்கு அது PT CLASS தான்
நீங்கள் சொல்வது உண்மைதான்.5ஆம் வகுப்பை பற்றி யோசிக்கும் போதெல்லாம் எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த அப்பாவி மாணவரைப் பற்றி இன்றளவும் யோசிக்காமல் இருப்பதில்லை.இப்போது என் மகளே 5ஆம் வகுப்பிற்கு வந்துவிட்டாள்.
ithuverayaaa....
நீங்கள் எல்லாம் கோழைகள் இதுல நான்மட்டும்தான் வீரன் என்னால் வகுப்பில் யாருடனும் பேசாமல் இருக்கமுடியாது இதைபார்த்த வாத்தி எச்சூர் மனி என்னை அடிக்கடி அடிப்பார் என்ன செய்வது ஒரு நாள் நானும் பொங்கி எழுந்தேன் கையைபிடித்து கடித்துவிட்டு ஓடிவந்துவிட்டேன்.
அட ராமா!!!!!
எங்க சுப்பையா வாத்தியார் எவ்வளவோ தேவலை:-)
சுப்பையா வாத்தியார் இங்கே:
http://thulasidhalam.blogspot.co.nz/2008/10/blog-post_10.html
Please do look into this issue which went unnoticed for 4 years. This is more brutal than Delhi gang rape. Please make awareness this issue and help the poor girl in getting the proper justice.
http://www.theweekendleader.com/Causes/1470/naked-injustice.html
கடவுளே! பெண்களைத்தான் ஆரம்பவகுப்பு ஆசிரியைகளாக நியமிக்க வேண்டும் என்பதே அவர்கள்தான் மென்மையும் அன்பும் கலந்தவர்கள் என்பதால்தான். ஆனால் சித்ராடீச்சரை நினைக்கும் போது .... பாவம் மணிகண்டன் நீங்கள்!
சமீபத்துலதான் அந்த டீச்சர் இறந்திட்டாங்களாம்...சாகும்போது ஒன்னுடைய நெனப்பாவே இருந்தாங்களாம்..நம்ம பானுவுக்கு பக்கத்தில ஒக்காந்திருந்தானே அந்த பையந்தான் சொன்னான்......
நான் 4 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். நான் வீட்டுப்பாடம் செய்யாமல் சென்றதால் டீச்சர் என்னை அடித்த அடியில் என்னுடைய வலது கை புத்தூர் கட்டு போடும் அளவிற்கு ஆகிவிட்டது. அதற்கு என் குடும்பமே பெரிய ரகளை செய்தது வேறு கதை.
By : Selvam
Tirunelveli
Post a Comment