Dec 21, 2012

சென்னை ஒரு மாயக்காந்தம்


வாழ்க்கை குறித்த தேடலுடன் தனது எல்லைக்குள் காலடி எடுத்து வைக்கும் மனிதனை சென்னை அளவுக்கு வேறு ஊரால் அலைகழிக்க முடியுமா என்று தெரியவில்லை. அதே சமயம் Survive ஆகிக் கொள்பவனை சென்னை அளவுக்கு அரவணைத்துக் கொள்ளும் வேறு ஊர் ஒன்று இருக்கிறதா என்பதும் சந்தேகமாகத்தான் இருக்கிறது. 

சென்னையில் மொத்தமாக ஒரு வருடம் மட்டுமே இருந்திருக்கிறேன். அதன் பிறகு பயணித்த எந்த ஊரும் சென்னை அளவுக்கு ஈர்த்ததில்லை. க்ளைமேட் சரியில்லை, வெப்பம் அதிகம், சூழல் மாசடைந்து கிடக்கிறது என்று எந்தக் காரணத்தைச் சொன்னாலும் என்னளவில் சென்னை is the best. 

சென்னையை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னமும் தன்னைப் பற்றிய கனவுகளை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. சென்னைக்கு செல்ல வேண்டும் என்ற காரணம் ஏதாவது கிடைக்கும் போது மிகுந்த உற்சாகமடைந்துவிடுகிறேன். ஒவ்வொரு முறையும் ‘இப்படித்தான் இருக்கும்’ என்ற மனச்சித்திரத்துடன் சென்னையை அடையும் போதும் தன்னை உருமாற்றி வைத்திருக்கும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சென்னையின் முகம் மாறிக்கொண்டேயிருப்பதாகத் தோன்றும். ஆனால் ஒவ்வொரு முகமும் எந்த விதத்திலும் ஈர்ப்பு குறைந்ததாக மாறியிருக்கவில்லை.

சென்னையில் இருப்பவர்களால் இந்த மனநிலையை புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. கொஞ்ச நாட்கள் சென்னையில் இருந்துவிட்டு வெளியேறி பிறகு வேறு ஊர்களின் இரும்புப்பிடிக்குள் சிக்கிக் கொண்டவர்களாக இருந்தால் புரிந்து கொள்ள முடியும்.

இன்றைக்கு இரவு சென்னைக்கு கிளம்ப வேண்டும் என்னும் மனநிலை மிகுந்த உற்சாகமானதாக இருக்கிறது. இந்த முறை கவிஞர்கள் நிலாரசிகன், கதிர்பாரதியின் கவிதைத் தொகுப்புகள் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பயணம். நிகழ்ச்சி  சனிக்கிழமை மாலை (22.12.2012) கே.கே.நகர் டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறுகிறது. கதிரும் சரி, நிலாவும் சரி நவீன கவிதை மொழியின் இறுக்கங்களையும், வழமைகளை தங்களது புது மொழியால் நெகிழச் செய்கிறார்கள் என்று அடிக்கடி தோன்றும். அவர்கள் இருவரின் தொகுப்பும் ஒரே பதிப்பகத்தில், ஒரே நேரத்தில் வெளிவருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. 


கதிர்பாரதி தனது கவிதைத்தொகுப்பின் முதல் பிரதியை நான் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொன்னபோது தயக்கமாக இருந்தது. தனது கவிதைத் தொகுப்பின் முதல் பிரதியை வெளியிடுபவர் யார், பெற்றுக் கொள்பவர் யார் போன்றவை குறித்து கவிஞனுக்கு ஆயிரம் கனவுகள் இருக்கக் கூடும். எந்த அடிப்படையில் கதிர்பாரதி என்னைத் தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. நெகிழ்ச்சியாக இருந்தாலும், உண்மையைச் சொன்னால் ஒரு தொகுப்பின் முதல் பிரதியை பெற்றுக் கொள்ளும் தகுதி எனக்கு இருப்பதாக இன்னமும் நம்பவில்லை. 

நானே நம்பாத போது வீட்டில் நம்புவார்களா? எள்ளி நகைக்கிறார்கள். “சென்ட்ரல் மினிஸ்டராலேயே முடியலையாமாஆஆஆஆ...” என இழுக்கிறாள் மனைவி. “போன் வயர் அறுந்து நாலு நாள் ஆச்சு” என்கிறான் தம்பி. ஆனாலும் தளர்வடையாமல் இருக்கிறேன்.

 பிரிண்ட் அடித்த அழைப்பிதழ் இருந்தால் மறக்காமல் வாங்கி பைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். கொண்டு வந்து காண்பித்தால் கொஞ்சமாகவேனும் நம்புவார்கள். வெளியில் இருப்பவர்களை நம்ப வைப்பதைவிடவும் வீட்டில் இருப்பவர்களை நம்ப வைக்கத்தான் பெரும் சிரமப்பட வேண்டியிருக்கிறது.

6 எதிர் சப்தங்கள்:

semmalai akash said...

அழகா சொல்லிருக்கிங்க அருமை. சென்னை வந்தவரை வாழவைக்கும் என்று சொல்வார்கள்.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

சென்னைக்கு யார் வந்தாலும் அவர்களுக்கு ஒரு டெஸ்ட் வைப்பாள் சென்னை அன்னை. நீங்கள் பாஸ் செய்துவிட்டால் போதும், அப்புறம் வாழ்க்கை ஜாம் ஜாம்தான். உங்கள் அன்னைக்குப் பிறகு உங்களை வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுவாள் இந்த சென்னை அன்னை.

நல்லதொரு பகிர்வு வாழ்த்துகள்.

Anonymous said...

Boss! Vanthorai vala vaikkum chennai! Senthilrao, Doha qatar

சேக்காளி said...

"பைரவனைத் தெரியுமா" வை கேட்டிருப்பார்கள் நண்பா.

APRsathish said...

anna, sariya sonninga, vanthorai vaala vaikkum enamum, edamum, Molli, ellame TAMIL thaan,,,,,

Anonymous said...

naarapayalukalukku nalla ooruthaan...