Nov 19, 2012

அவ்வ்வ்வ்வ்


ஒரு லோக்கல் எண்ணிலிருந்து அழைப்பு வருகிறது. வழக்கம் போல ஏதாவது ஒரு விளம்பர அழைப்பாக இருக்கும் என நினைத்து எடுத்தால் எதிர்முனையில் கட்டையான பெண்குரல். விளம்பர அழைப்பாக இருந்தால் இளம்பெண்கள்தான் பேசுவார்கள். இது கட்டைக் குரல் என்பதால் அவசர அவசரமாக வேறு எதையோ மூளை யோசிக்க ஆரம்பிப்பதற்குள் அந்தப் பெண் ஆரம்பித்துவிட்டார்.

“சார் உங்க பில் ஆயிரத்தி ஐந்நூறு பாக்கி இருக்கு”

ஒருவனை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டுமானால் பேச்சை ஆரம்பித்த உடனே “பணம் கொடு” என்று ஆரம்பிக்கலாம். அந்தப் பெண் அதைத் தெளிவாகச் செய்தார்.

“நீங்க யாருங்க மேடம்” - இது நான்.

“பி.எஸ்.என்.எல்லிருந்து பேசறேன்” என்று சொல்லிவிட்டு ஒரு நெம்பரைச் சொன்னார். அவரே கேள்வியும் கேட்டார்.

“இது உங்க நெம்பர்தானே சார்?”

“மேடம் நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி BSNL லேண்ட் லைன் வெச்சிருந்தேன். அந்த நெம்பர் ஞாபகத்தில் இல்லை”

“அப்போ இதான் உங்க நெம்பர்” 

“அப்படியா?”

“ஆமாங்க சார். பில் கட்டிடுங்க”

கோபத்தில் கத்தினேன். “ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் பில் கட்டச் சொன்னால் என்னங்க அர்த்தம்?”

எவ்வளவு கோபமான கேள்விக்கும் ஒரு மொன்னையான பதில் மூலம் எதிராளியின் வாயை அடைத்துவிட முடியும். அந்தப் பெண்மணியும் அதே உபாயத்தைத்தான் கையில் எடுத்தார்.

பதில் இதுதான் - “ஸாரி சார்! கொஞ்சம் லேட் ஆகிடுச்சு”

ரிலையன்ஸ், ஏர்டெல் நிறுவனங்கள் பில் கட்ட ஒரு நாள் தாமதம் என்றாலும் கூட கொத்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். BSNL காரர்களுக்கு இரண்டு வருடம் என்பது ‘கொஞ்சம்’ லேட். இந்த பதிலுக்கு அப்புறம் என்ன கேள்வி கேட்க முடியும்.

“நான் அட்ரஸ் மாத்தி வந்துட்டேன் மேம்”என்றேன்.

“பரவால்ல சார், இ-மெயிலில் அனுப்பி வைக்கிறேன்” என்றார். விடமாட்டார் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டு  “அனுப்புங்க” என்றேன்.

“உங்க மெயில் ஐடி சொல்லுங்க சார்” என்றார். தப்பிப்பதற்கு ஒரு சான்ஸ் கிடைத்துவிட்டது.

“vamanikandan@gmail.com" 

தப்பியோடிய திருடனை பிடித்துவிட்ட சந்தோஷத்தில் “தேங்க்யூ” என்றார்.

நான் கொடுத்திருந்த மின்னஞ்சலில் ஒரு A வை முழுங்கியிருந்தது தெரியாமல் இத்தனை சந்தோஷப்பட்டிருக்கத் தேவையில்லை. எனது மொபைலில் அட்டெண்ட் செய்யக் கூடாத லிஸ்ட்டில் அந்த எண்ணைச் சேர்த்து வைத்தேன்.

சிறிது நேரத்தில் வேறொரு மொபைல் நெம்பரில் இருந்து அழைத்தார். வேறு எண் என நினைத்து அட்டெண்ட் செய்து மாட்டிக் கொண்டேன்.

“சார் நீங்க கொடுத்த மெயில் ஐ.டி தப்பு போல இருக்கு. எங்க டேட்டாபேஸில் சரியான மெயில் ஐடி இருந்துச்சு. பில் அனுப்பியிருக்கேன் பார்த்துட்டு பணத்தைக் கட்டிடுங்க”

இதற்கு என்ன பதில் சொல்வது? வடிவேலு ஸ்டைல்தான்....“அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்”

5 எதிர் சப்தங்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

விவரமான ஆட்கள் தான்...

கவிதை வானம் said...

இதே அனுபவம் எனக்கும் உண்டு ...பத்து வருடங்களுக்கு முன்பு ..இப்பவும் அப்படியா...?

semmalai akash said...

ஹா ஹா ஹா !!!

வசமா மாட்டிகிட்டீங்களா!

அகல்விளக்கு said...

விடுங்க சார்...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்...

ஹம்துன்அஷ்ரப் said...

// “ஸாரி சார்! கொஞ்சம் லேட் ஆகிடுச்சு”// சரியான கமெடி ஸார், பில் பணம் கட்டியாச்சா இல்லையா..?