படித்து முடித்த பிறகு ஏழெட்டு வருடங்களாக வேலையில் இருக்கிறேன். கூடப் படித்தவர்களில் நிறையப் பேர் வெவ்வேறு நிறுவனங்களில் மேனேஜர்கள் ஆகிவிட்டார்கள். ஆனால் எனக்கு இதுவரைக்கும் ஒரு ஜூனியர் கூட வாய்த்ததில்லை. கொஞ்சம் வருத்தம்தான். இப்பொழுதுதான் வாய்க்கும் போலிருக்கிறது.
புதிதாக கல்லூரி முடித்த இரண்டு மூன்று பேர்களுக்கு நேர்காணல் நடத்தி அதில் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு மேனேஜர் சொல்லியிருந்தார். நேற்றுதான் நேர்காணல்.மூன்று பேர்கள் வந்திருந்தார்கள். மூன்று பேருமே எம்.பி.ஏ முடித்தவர்கள். முதல் இரண்டு பேரை அவ்வளவாக பிடிக்கவில்லை. மூன்றாவதாக வந்தவர் தமிழ்நாட்டுக்காரர். சிவகாசி பக்கத்திலிருந்து வந்திருந்தார். பொடிப்பையன். நாற்பது கிலோ கூட இருக்கமாட்டான் போலிருந்தது.
"உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்" என்றேன்.
“அம்மாவும் இல்லாத அப்பாவும் இல்லாத சுயமாக படித்து முடித்த திறமைசாலி நான்” என்றான். முதல் வரியிலேயே ஆளை அடித்துவிட்டான். அதன் பிறகு டெக்னிக்கலாக கேள்வி கேட்க வேண்டுமென்று தோன்றவில்லை. அவனது சொந்தக் கதையை பேசத் துவங்கினோம். இருபது நிமிடங்கள் சொல்லிக் கொண்டிருந்தான். அம்மா கேன்சரில் இறந்து போனாராம். தந்தை விபத்தில் இறந்துவிட்டார். தனது எட்டு வயதிற்குள் இரண்டு பேரையும் இழந்துவிட்ட அவரை பள்ளி ஆசிரியர் ஒருவர் படிக்க வைத்திருக்கிறார்.
பி.ஈ படிப்பதற்கு உள்ளூர் அறக்கட்டளை ஒன்று உதவி செய்ய, எம்.பி.ஏவை வங்கிக் கடனில் முடித்திருக்கிறான். இரண்டிலுமே கலக்கலான பர்செண்டேஜ் வைத்திருக்கிறான். படிப்பு தவிர என்ன பிடிக்கும் என்ற அடுத்த கேள்விக்கு சைக்காலஜி, இலக்கியம் எனக் கலந்து கட்டி அடித்த அவனைப் பிடித்து போய்விட்டது.
கொஞ்சமாவது டெக்னிக்கலாக கேட்க வேண்டுமே என்பதற்காக எங்கள் நிறுவனத்தில் செய்யும் வேலையைப் பற்றி விவரித்துவிட்டு இதைப் பற்றி ஏதாவது தெரியுமா என்றேன். "சுத்தமாகத் தெரியாது" என்றான். நேர்காணலுக்கு வந்திருந்த மற்ற இரண்டு பேரும் இந்த வேலைக்குத் தேவையான அடிப்படையைத் தெரிந்து வைத்திருந்தார்கள். அவர்களுக்கு சொல்லித்தருவது எளிதாக இருக்கும். இவனுக்கு எதுவுமே தெரியவில்லை என்று குழப்பமானேன்.
“கத்துக்கலாம் சார்!” என்றான்.
“அது கஷ்டம்” என்றேன்
“இங்க யாருக்குமே எதுவுமே தெரியாது சார். எல்லாமே கத்துக்கிறதுதான்” என்றான். அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதே மிஷெல் பூக்கோவின் புத்தகங்களை வாசித்திருக்கிறேன். ஷேக்ஸ்பியரின் மேக்பெத் வசனங்களை மனப்பாடமாகச் சொல்ல முடியும்” என்று அடுக்கிக் கொண்டிருந்தான்.
“அதெல்லாம் கம்யூட்டருக்கு பிரையோஜனப்படாதே” என்றேன்.
“பிரையோஜனப்படாதுதான். ஆனால் அதைவிடவும் கஷ்டமான புத்தகங்களையா கொடுத்து படிக்கச் சொல்லப் போகீறீர்கள்” என்றான். பவுன்சர் போட்டால் கூட சிக்ஸர் அடிக்கும் இவனிடம் அடுத்து என்ன கேட்பது என்று தெரியவில்லை. கொஞ்ச நேரம் அமர்ந்திருக்கச் சொல்லிவிட்டு மேனேஜரிடம் சென்றேன்.
“பையன் இம்ரெஸ் செய்கிறான் ஆனால் வேலை சம்பந்தமாக எதுவும் தெரியவில்லை” என்றேன்.
“நானும் வருகிறேன்” என்று வந்தார்.
அவரை கேள்வி கேட்கச் சொல்லிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். கேள்விகளுக்கு அவன் அளித்த பதில்களுக்கு மேனேஜர் பயங்கரமாக சிரித்துக் கொண்டிருந்தார். அவருக்கும் அவனைப் பிடித்துப் போய்விட்டது என்று அவரது முகத்திலேயே தெரிந்தது.
கடைசியாக “உன்னை ஏன் வேலைக்கு எடுக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணத்தைச் சொல்” என்றார்.
“என்னை ஏன் வேலைக்கு எடுக்கக் கூடாது என்பதற்கு உங்களிடம் ஒரு காரணம் கூட இருக்காது” என்றான். இதற்கும் மேனேஜர் சிரித்தார். எழுந்து நின்று கை குலுக்கினார்.
“உனக்கு இந்த நிறுவனத்தில் வேலை உண்டு. ஆனால் வேறொரு டீமில்” என்று சொல்லிவிட்டு அவனை வெளியே காத்திருக்கச் சொன்னார். அவனைப் பிடித்திருந்தால் அவரது டீமிலேயே வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே எதற்காக வேறொரு டீமுக்கு அனுப்புகிறார் என்று எனக்கு புரியவில்லை. அவரது முகத்தை பார்த்தேன்.
அவரேதான் சொன்னார். “இவ்வளவு திறமையான பையனை இந்த நிறுவனத்தை விட்டு அனுப்ப மனம் வரவில்லை. ஆனால் நம் டீமுக்கு இவ்வளவு திறமையானவன் தேவையில்லை. அது உனக்கும் ஆபத்து எனக்கும் ஆபத்து” என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
மேனேஜர்கள் இப்படியெல்லாம் யோசிப்பார்களா என்று முழித்துக் கொண்டிருந்தேன். இந்த மாதிரியான கார்பேரேட் டெக்னிக்ஸ் தெரியாததாலேயே எனக்கு இன்னும் ஒரு ஜூனியர் கூட இல்லை என்று நினைத்துக் கொண்டேன். அது என்னை நானே தேற்றிக் கொள்ள உதவும் ஒரு நினைப்பு- அவ்வளவுதான்.
11 எதிர் சப்தங்கள்:
என்னமா யோசிக்கிறார்கள்...! எப்படியோ வேலை கிடைத்து விட்டது...
வாவ! திறமையான பையன் மட்டுமல்ல, வித்தை தெரிந்த பையன். மனிதர்களை கவரும் வித்தை கைவரப் பெற்றிருக்கிறான்!
ரொம்ப பெரிய ஆளா வருவார்
'பையனுக்கு’ வேலை கிடைத்ததிற்கு மகிழ்ச்சி.
உங்களுக்கு சீக்கிரம் ஒரு ஜூனியர் கிடைக்கவும் வாழ்த்து .... :-(
வேறு டீமில் வேலை கொடுத்தீர்களா தம்பிக்கு?
ரசிக்கும் படியான பதிவு.
[[அவனது சொந்தக் கதையை பேசத் துவங்கினோம். இருபது நிமிடங்கள் சொல்லிக் கொண்டிருந்தான். அம்மா கேன்சரில் இறந்து போனாராம். தந்தை விபத்தில் இறந்துவிட்டார். தனது எட்டு வயதிற்குள் இரண்டு பேரையும் இழந்துவிட்ட அவரை பள்ளி ஆசிரியர் ஒருவர் படிக்க வைத்திருக்கிறார்.]]
ஆனால் நேர்காணலில் சொந்த விதயங்களைப் பேசுவது பொதுவான மரபு இல்லைதானே :)) நேர்காணலுக்கான நடத்தை விதிமுறைகளில் இதைத் தெளிவாகவே சொல்லிவிடுவார்கள்.
அக்குப்ஞ்சர், பிபிஎம் நிறுவனம் இரண்டின் நேர்காணல் குழுவில் இருந்திருக்கிறேன். இந்த விதிமுறைகள் வெளிப்படையாகவே வைத்திருக்கிறார்கள்.
...
ஆனால் உங்கள் நேர்காணலில் பங்குபெற்ற நபர் நிச்சயம் திறமைசாலி !
Innum niraiya politics irukkirathu -
intha corporate niruvangalil...
Innum niraiya politics irukkirathu -
intha corporate niruvangalil...
தோல்வியை எண்ணி பயப்படும் இந்த '' உனக்கும் ஆபத்து எனக்கும் ஆபத்து''என்ற எண்ணம் தான் சாதியத்தின் ஆணிவேரா? நண்பரே
nice
Just happened to read now. Reminded me of my experience when I interviewed for an assistant post in my Company at Delhi. At that time, that Tamil Boy (who came to his brother's house in search of job) boldly said that he don't know Hindi but will learn in a month. I selected him & he too learnt and talked good Hindi.
Post a Comment