Dec 31, 2012

ஐயரைக் காணவில்லை


உறவுக்காரர் வீடு கட்டியிருக்கிறார். ஏற்கனவே கட்டியிருந்த வீடுதான். இப்பொழுது வீட்டை கொஞ்சம் விரிவுபடுத்தியிருக்கிறார். வெறும் எக்ஸ்டென்சன் என்பதால் புதுமனை புகுவிழாவெல்லாம் தேவையில்லை என்று யாரோ சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. அதற்கு பதிலாக கணபதி ஹோமம் நடத்தினால் போதும் என்ற ட்ரெண்ட்தான் ஓடிக் கொண்டிருக்கிறதாம். கணபதி ஹோமம் நடத்துவதற்கு ஐயர் வேண்டுமில்லையா? நாமம் போட்ட ஐயர் ஆகாது என்று சொல்லிவிட்டார்கள். பட்டை போட்ட ஐயர் ஒருவரை பார்த்து பேசியாகிவிட்டது. ஐயர் பெயர் சுவாமிநாதன். 

டீலிங்கை சில நாட்களுக்கு முன்பாக முடிந்திருந்தோம். ஐயரைப் பார்க்க திட்டமலை போயிருந்த போது அவருடைய அப்பாதான் கோயிலில் இருந்தார். ஐயரின் அப்பா ஒரு பூங்கிழடு. பூங்கிழடு என்றால் தெரியும்தானே? பூ மாதிரி ஆகிவிட்ட முதியவர். தொட்டால் உதிர்ந்துவிடக் கூடும். விஷயத்தைச் சொன்னவுடன் தன் மகன் சுவாமிநாதனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் கணபதி ஹோமம் செய்வதற்கு அவர் வருவார் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் சொன்னார். தற்பொழுது வீட்டில்தான் இருப்பதாகவும் சொல்லியிருந்தார்.

எதற்கும் சுவாமிநாதன் ஐயரை ஒரு முறை பார்த்துவிடலாம் வீட்டிற்குச் சென்றிருந்தோம். ஐயருக்கு சுற்றுவட்டாரத்தில் நல்ல பெயர் உண்டு. சமஸ்கிருதம் படித்துவிட்டு ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்தாராம். பிறகு ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். பூஜை புனஸ்காரங்களை சுவாமிநாதன் அளவுக்கு இந்த ஏரியாவில் யாராலும் சிறப்பாக செய்ய முடியாது என்று அக்கம்பக்கத்தினர் சொல்லியிருந்தார்கள். அதனால் அவர்தான் ஹோமத்தை செய்ய வேண்டும் என உறவினரின் வீட்டில் விரும்பினார்கள். அவரை எப்படியாவது ‘புக்’ செய்துவிட வேண்டும் என கோயிலிலிருந்து வீட்டிற்கு போன போது பட்டையும் கொட்டையுமாக கணபதி ஐயர் கன கம்பீரமாக அமர்ந்திருந்தார். நாங்கள் சொன்ன தேதியைக் குறித்து வைத்துக் கொண்டார். தான் வந்துவிடுவதாக அவர் உறுதியளித்த போது எங்களுக்கு பரம திருப்தி. ஹோமத்திற்கு தான் வரும் போது வீட்டில் வாங்கி வைத்திருக்க வேண்டிய பொருட்களுக்கு ஒரு லிஸ்ட் கொடுத்திருந்தார். நெய், பட்டுத்துணி, பசு மாட்டுக் கோமியம் என்ற அந்தப் பட்டியலின் பொருட்கள் நீண்டிருந்தது. முந்தின நாள் இரவு பத்து மணிக்கு தான் வந்துவிடுவதாகவும் சில பொருட்களை தானே வாங்கி வந்துவிடுவதாகவும் சொல்லியிருந்தார். 

கணபதி ஹோமத்திற்கு முந்தின நாள் மாலையிலேயே உறவினர்கள் கூடத் துவங்கினார்கள். இரவு உணவை முடித்துவிட்டு ஊர்க்கதைகளை மிகுந்த உற்சாகமாக ஆளாளுக்கு பரிமாறத் துவங்கினார்கள். கொலை, கொள்ளை, கள்ள உறவு என சகலமும் ஓடிக் கொண்டிருந்தன. ஒவ்வொருவரும் அந்த கதையாடலில் ஐக்கியமாகியிருந்தோம். உற்சாகமான அந்த முன்னிரவில் சுவாமிநாதன் ஐயர் அழைத்திருந்தார். தான் பேருந்தில் ஏறிவிட்டதாகவும் பேருந்து நிறுத்தத்தில் தன்னை ‘பிக்-அப்’ செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார். இந்த அழைப்பை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம் என்பதால் எந்த சலனமும் இல்லாமல் கதைகளைத் தொடர்ந்தோம். 

அடுத்த சில மணி நேரங்களில் உறவினர்களில் கொஞ்சம் பேர் தூங்கியிருந்தார்கள். ஆனால் விழித்திருந்தவர்களில் யாருக்கும் உற்சாகம் குறைந்திருக்கவில்லை. மொட்டை மாடியில் நிலா காய்ந்து கொண்டிருந்தது. சுற்றிலும் இருக்கும் வாழைத் தோட்டத்தின் காற்று சுகமாக வீசிக் கொண்டிருந்தது. மணி பதினொன்றைத் தொட்டது. ஐயர் வந்து சேரவில்லை. ஐயரை அவரது செல்போனில் அழைத்த போது அவர் போனை எடுக்கவில்லை. நான்கைந்து முறை அழைத்தும் பதில் இல்லை என்பதால் உறவுக்காரர் சற்று பதட்டமடைந்தார். நாளை காலை ஐயர் வந்து சேரவில்லையென்றால் உறவினர்களுக்கு என்ன பதில் சொல்வது என்பது அவரது கவலை. 

ஆளாளுக்கு அட்வைஸ் செய்யத் துவங்கினார்கள். நாமாகவே சில பூசைகளைச் செய்துவிட முடியும் என்று ஒருவர் சொன்னார். ஐயர்களை அழைப்பது என்பது சமீபத்தில் தொற்றிக் கொண்ட பழக்கம் என்றும் நம் சாதி நிகழ்வுகளுக்கு ஐயர் அவசியமே இல்லை என்றும் இன்னொருவர் தனது பங்குக்கு வாதாடினார். உறவுக்காரர் திருப்தி அடைவதாக இல்லை. நானும், உறவுக்காரரும் ஐயரின் வீட்டுக்கு கிளம்புவதாக முடிவு செய்தோம். 

கிளம்புவதற்கு முன்பாக ஐயரின் வீட்டை தொலைபேசிக்கு அழைத்த போது ஐயரின் அப்பாதான் எடுத்தார். உறங்கிக் கொண்டிருந்திருப்பார் போலிருந்தது. விவரத்தைச் சொன்னபோது அதிர்ச்சியடைந்தார். தன் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னதன் அர்த்தம் ‘மனநிலை சரியில்லை’ என்பதாம். சமீபகாலமாக அவரது மனநிலை மிகுந்த பாதிப்படைந்திருப்பதாகவும், ஓரிரு முறை காணாமல் போய்விட்டதாகவும் அவர் பேசத் துவங்கியபோது அழத் துவங்கினார். அந்த முதியவரின் மனநிலை மனதுக்குள் ஒரு கணம் வந்து போனது. வயதான ஒருவர் அழுவதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. திரும்பவும் அழைப்பதாகச் சொல்லிவிட்டு உறவினரிடம் தகவலைத் தெரிவித்த போது அவர் ஐயரின் அப்பாவை விடவும் அதிகமாக அதிர்ச்சியடைந்தார்.

அந்த நேரத்தில் தனக்கு தெரிந்த சில நண்பர்களிடம் ஐயரைப் பற்றி விசாரிக்கத் துவங்கினார். ஐயருக்கு மூன்று பெண்கள். அதில் ஒரு பெண் காதல் திருமணம் செய்து கொண்டார். மற்ற ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து அனுப்பிவிட்டார். இந்தச் சமயத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த விபத்து ஒன்றில் தண்டுவடம் பாதித்ததில் ஐயரின் மனைவி படுத்த படுக்கையாகிவிட்டார். தனது மனைவியின் நிலைமை, இன்னமும் திருமணமாகாத இளைய பெண், வயதான பெற்றோர் என சகல குடும்பச் சிக்கல்களாலும் சுவாமிநாதன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டார். 

உறவினருக்கு இந்த இரவுக்குள் இன்னொரு ஐயரை பிடித்தாக வேண்டிய கட்டாயம். ஆனால் எனக்கு ஐயரின் அப்பாதான் மனதுக்குள் வந்து போனார். இன்னொரு முறை அவரை அழைத்து பேசிவிடலாம்  என்று அழைத்தேன். இப்பொழுது அதிகமாக கதறத் துவங்கினார். தனது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே ஆளான தன் மகன் இல்லையென்றால் இந்தப் பெண்களை வைத்துக் கொண்டு இந்த கிராமத்தில் என்ன செய்வதென்றே தெரியாது என்று அழுது கொண்டிருந்தார். அருகில் “என்னாச்சு? என்னாச்சு” என்று கேட்ட சில பதட்டமான குரல்களையும் தாண்டி அவர் அழுது கொண்டிருந்தார். நள்ளிரவைத் தாண்டிய இந்த நேரத்தில் அந்தப் பெண்களுக்கு இது பேரதிர்ச்சியான செய்தியாக இருக்கும். அந்தப் பெண்களை சமாளிக்க வேண்டிய பெரும் பொறுப்பு முதியவரின் தலையில் இறங்கியிருக்கிறது. தனது சுமைகளை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள விரும்புகிறார் அந்தப் பெரியவர். “இப்போ என்ன செய்யலாம்?” என்றார் என்னிடம்.  என்னால் அவரது சுமைகளை இறக்கி வைக்க முடியும் என்று தோன்றவில்லை. அவருக்கு என்ன என்ன பதிலைச் சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. எப்படி இந்தச் சிக்கலிலிருந்து தப்பிப்பது என யோசிக்கத் துவங்கியிருந்தேன்.

4 எதிர் சப்தங்கள்:

குறையொன்றுமில்லை. said...

அப்புரம் என்னாச்சு. வேற ஐயர் வந்தாங்களா. வீட்டு விசேஷம்லாம் நல்லபடியாக நடந்ததா?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இன்னும் இருகிறதா?

Vaa.Manikandan said...

//அப்புரம் என்னாச்சு. வேற ஐயர் வந்தாங்களா..//

அது வேற ஒரு ட்ராக்...:) கிராமம்தானே வேறொரு அய்யரை பிடிப்பதில் பெரிய சிரமமில்லை.

//இன்னும் இருக்கிறதா//

என்னளவில் எதற்குமே முடிவு இல்லை. முடிந்துவிட்டதாக நாம் நினைக்கும் ஒரு விஷயத்தின் தொடக்கமே அந்த முடிவிலிருந்து ஆரம்பிக்கக் கூடும் என்பதை பூரணமாக நம்புகிறேன்...

ப.கந்தசாமி said...

அந்த ஐயர் என்ன ஆனார்? அவர் பெண்களுக்கு கல்யாணம் ஆச்சா? ஒண்ணும் சொல்லாம இப்படி தொபுகடீர்னு கதையை முடிச்சிட்டா, நாங்க எல்லாம் தூங்கறதா, வேண்டாமா? இதுக்காக ஒரு போராட்டம் நடத்தப்போறோம், ஜாக்கிரதை!!!!!!!