Nov 14, 2012

நாசமாகப் போகட்டும் தீபாவளி


இந்த வருடம் பட்டாசு வாங்குவதற்காக கடைக்கு சென்றிருந்தபோது நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. வழக்கத்திற்கு மாறான கூட்டம். வரிசையில் நின்ற பெரும்பாலானோர் "இந்த வருஷம் விலை ரொம்ப அதிகம்" என்றார்கள். அதற்காக யாரும் பட்டாசு வாங்காமல் திரும்பிப் போகவில்லை. ஹோட்டலில் அளவு சாப்பாடு கட்டித்தரும்  ஒரு பாலித்தீன் Carry Bag அளவிற்கு நானும் இந்த வருடம் பட்டாசுகள் வாங்கினேன். ஆயிரத்தி இருநூறு ரூபாய் பில் போட்டிருந்தார்கள். 

"நான் சின்னப்புள்ளையா இருந்தப்போ வெறும் அஞ்சு ரூவாய்க்கு எங்கப்பன் பட்டாசு வாங்கி தந்துச்சு" என ஒரு ஆத்தா அளந்து கொண்டிருந்தது. அவரைப் பார்த்து ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு வந்தேன். 

ஊருக்குள்ளும் பட்டாசுதான் முக்கியமான விஷயமாக இருந்தது. உள்ளூர் மிராஸ்தார் ஒருத்தர் போகிற வருகிறவர்களையெல்லாம் நிறுத்தி தான் ‘பட்டாசு வாங்கிய புராணத்தை’ அவிழ்த்துவிட்டார். தனது நண்பர்கள் நான்கைந்து பேர் சிவகாசியிலிருந்து மொத்தமாக அள்ளி வந்ததாகவும் அறுபத்தைந்தாயிரம் ரூபாய் பட்டாசுகளிலிருந்து எட்டாயிரம் ரூபாய்க்கு தான் எடுத்துக் கொண்டதாக அடுக்கிக் கொண்டேயிருந்தார். ஒவ்வொருவருக்கும் மூச்சுத்திணறி மயக்கம் வராத குறைதான்.

கெடுபிடிகள் என்ற பெயரில் விதிக்கப்படும் அரசின் அத்தனை கட்டுப்பாடுகளும் அதிகார வர்க்கத்திற்கு காசு கொழிக்கச் செய்யும் காரியம் போலிருக்கிறது. பட்டாசுத் தொழிற்சாலை முதலாளிகள் அரசின் உயர்மட்டத்தை பணத்தால் கவனித்துக் கொள்கிறார்கள். பட்டாசுகளை விற்பனை செய்யும் ஒவ்வொரு கடையும் விதிமுறை மீறல்தான். அதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஒரு லம்ப்பான தொகையைக் கொடுக்கிறார்கள். ஆம்னி பஸ்ஸின் மேற்கூரையில் பண்டல் பண்டலாக பட்டாசுகள் கொண்டு செல்லப்படுகின்றன. அதிகாரிகளின் வாய்கள் பணத்தால் அடைக்கப்படுகின்றன. இப்படி பட்டாசுக்காக செலவு செய்யப்படும் ‘எக்ஸ்ட்ரா’ தொகை அத்தனையும் வாடிக்கையாளரின் தலையில் கட்டப்படுகிறது. நாமும் ‘இந்த வருஷம் விலை அதிகம்’ எனச் சொல்லிவிட்டு வாங்கிவருகிறோம்.

எண்ணெய்க் குளியல், புதுத்துணி, ஸ்வீட் என எல்லாவற்றையும் பட்டாசு புறந்தள்ளிவிட்டு 'ஸ்டேட்டஸ் ஐகான்' ஆகியிருக்கிறது. ஊரிலிருந்து பெங்களூர் திரும்பி வரும் இருநூற்றைம்பது கிலோமீட்டர் தூரத்திற்கும் வான வேடிக்கைதான். வழக்கமாக சூளகிரியைத் தாண்டும் போது மூக்கைத் துளைக்கும் புதினா வாசமும், ஈரோட்டின் மஞ்சள் வாசமும் பூனையைப் போல பதுங்கிவிட்டன. எல்லா ஊர்களும் பட்டாசு வாசத்தில் திணறிக் கொண்டிருந்தன. பெரும் வெடிகள் காதுகளுக்குள்ளேயே வெடித்தன. நாய்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு பயத்தில் ஓடிக் கொண்டிருந்தன. காகங்களையோ, கழுகுகளையோ பார்க்க முடியவில்லை.

அம்மாப்பேட்டை அருகே ஒரு தொழிற்சாலையின் மூலையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. ‘ராக்கெட் விஞ்ஞானி’யின் செயலாக இருக்கும் என பேசிக் கொண்டு கடந்த போது தீயணைப்பு வண்டி எங்களைத் தாண்டிச் சென்றது. கிருஷ்ணகிரி தாண்டிய சாலையில் பட்டாசினால் கவனம் சிதறிய ஒரு பைக்காரரை அடித்துவிட்டு போயிருந்தான் அடையாளம் தெரியாத லாரிக்காரன். அவரை ஓரமாக நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர் இறந்திருக்கக் கூடும். அவரது குடும்பத்தாருக்கு ‘கறுப்பு தீபாவளி’ ஒன்றை பரிசளித்துப் போயிருக்கிறது அந்தப் பட்டாசு.

முதியவர்கள், மருத்துவமனைகள், இதய நோயாளிகள் என சகலரும் 'இன்று ஒரு நாள்தானே' என பொறுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கக் கூடும். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் ஜன்னல்கள் இறுக்க அடைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆஸ்துமா நோயாளிகள் தப்பிப்பதற்கு வழி தெரியாமல் விழி பிதுங்கியிருக்க வேண்டும்.

வெடிச்சத்தமும், கூசும் வெளிச்சமும், புகை நெடியும், அடுத்த நாளைய கண் எரிச்சலையும் தாண்டி இந்த பட்டாசுகளாலான தீபாவளி நமக்கு அளிக்கு சந்தோஷம் என்ன என்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை. குழந்தைகளுக்கு ஆழ்மனதில் வன்முறையூட்டும் செயல்தான் பட்டாசு மீதான ஆர்வம் என்று தோன்றுகிறது. ஆனால் அதை உற்சாகமாக செய்து கொண்டிருக்கிறோம். கொண்டாட்டம் என்பதற்கான வரையறைகளை மாற்றிக் கொண்டிருக்கிறோம். டாஸ்மாக் கொண்டாட்டமும், சோம்பேறித்தனமும் கலாச்சாரமாக இடம்பெற்றுவரும் ஒரு மாநிலத்திலிருந்து எதைப் புலம்புவதும் அர்த்தமற்றது. நாம் வாழும் காலம் இருண்ட காலம். யாரையும் யாராலும் மாற்றிவிட முடியாத சூழல் இது. எதையும் புலம்ப வேண்டியதில்லை. 

‘பட்டாசு இல்லாத தீபாவளி’ என்ற சூழலியல் சார்ந்த பிரச்சாரம், சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரியும் குழந்தைகளுக்காக 'பட்டாசுகளை நிராகரிப்போம்' என்ற பரப்புரைகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.  

ஆயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்கினேன் என்பதை முதல் பத்தியில் சொல்லிவிட்டு முடிக்கும் போது “நாசமாக போகட்டும் தீபாவளி” என்று முடிப்பது சரியில்லைதான் என்றாலும் அப்படியே முடிக்கிறேன். 

நாசமாகப் போகட்டும் தீபாவளி. 

10 எதிர் சப்தங்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

நாங்கள் வாங்கவே இல்லை... இந்தப்பிரச்சனைகளும் இல்லை...

bala said...

எங்களுக்கு வேறு பிரச்சினை. புஸ்வானம் வெடித்தும், வெடிக்கும் பட்டாசு புஸ்வானமாகியும் போனது...

santhosh said...

மணி திருவல்லிக்கேணியில் எங்கள் வீட்டிற்கு முன்னால் ஒரு மேன்ஷன் இருக்கிறது. ஊறுக்கு போகமுடியாத பயபுள்ளைகள் தங்கள் வெறியை அணுகுண்டுகள் வெடித்து தீர்த்துக்கொண்டார்கள் போல. இவ்வளவு நெருக்கமான சூழலிலும் எந்த பாதுகாப்பு உறுதியும் இல்லாமல் கண்டமேனிக்கு வெடித்துக்கொண்டிருந்தாட்கள். வீட்டிற்குள்ளும் புகைமண்டலம். உண்மையில் எதைபற்ரியும் கவலை இல்லாமல் ஒரு வெறித்தனம். இது தான் கொண்டாட்டமா?

ராமலக்ஷ்மி said...

உங்களுடன் முழுக்க முழுக்க உடன் படுகிறேன். என் மகன் பள்ளியில் இருந்தபோது சுற்றுச் சூழலுக்குக் கேடு என்பதை உணர்த்தவும் அப்போது வாங்குவதில்லை என முடிவெடுத்த பள்ளி நண்பர்கள் பலரும் கடந்த ஏழெட்டு வருடங்களாக வாங்கவில்லை. பெரியவர்களுக்குப் புரிய வைக்க முடியாவிட்டாலும் பள்ளிகள் அடுத்த தலைமுறைக்கேனும் புரிய வைக்கலாம்.

Anonymous said...

Diwali is festival of light not festival of fire crackers ,you bloody idiot.

Vaa.Manikandan said...

நன்றி தனபாலன், பாலா.

சந்தோஷ்,
இல்லைன்னு சொன்னா இந்த அனானிமஸ் இடியட்ன்னு எல்லாம் திட்டறாரு பாருங்க.

ராமலக்ஷ்மி,
நீங்கள் சொல்வதைப் போல பள்ளிகளும், கல்லூரிகளும்தான் விழிப்புணர்வுக்கான சரியான இடம்.

அனானிமஸ்,
நான் இடியட் என்பதை ஏற்றுக் கொள்வதில் எனக்கு பிரச்சினை ஒன்றுமில்லை.

ஆனால் Festival of Lights என்றால் தீபங்களும், விளக்குகளும் போதுமல்லவா? எதற்காக இத்தனை வெடிகளும், புகையும்? இதைத்தான் நான் கேட்டிருக்கிறேன்.

suvanappiriyan said...

//Diwali is festival of light not festival of fire crackers ,you bloody idiot. //

மத்தாப்பு கொளுத்தும் பழக்கமே முகலாயர் காலத்தில்தான் உண்டானது. இந்த வார்த்தையே அங்கிருந்து வந்ததுதான். முன்பு தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தும் பழக்கம் நம்மவரிடத்தில் இல்லை. இடையில் வந்த பழக்கத்தை படிப்படியாக குறைத்துக் கொள்ளலாமே!

அமுதா கிருஷ்ணா said...

இந்த தீவாளிக்கு பட்டாசு வாங்கவே இல்லை. என் பசங்களை இனி வாங்கவே வேண்டாம் என்று கேட்டு கொண்டிருந்தேன்.

பொன். வாசுதேவன் said...

பட்டாசு வெடிப்பதை நிறுத்தி பல வருடங்களாகி விட்டது. மத்தாப்பூ, புஸ்வானம் மட்டுமே. அதுவும் குழந்தைகளுக்காக.

Uma said...

எனக்குமே வெடிகள் தேவையில்லை. எல்லோருக்கும் மகிழ்ச்சியூட்டும் சிரிக்கும் மத்தாப்பூக்களும் ஒளிமழைபொழியும் புஸ்வாணமும் போதுமே என்றுதான் தோன்றுகிறது. வாங்கித்தரும் பெற்றோர்தான் இதைச் செயல்படுத்தவேண்டும்