Nov 29, 2012

என்னோடு சேர்த்து நான்கு டெரரிஸ்ட்ஸ்




ஒரு வட்ட மேஜை மாநாடு. வட்ட மேஜை என்ன வட்டமேஜை? வெட்டி மேஜை மாநாடு அது. ஆளாளுக்கு தனது வீர பிரதாபங்களை அடுக்கிக் கொண்டிருந்தோம். 

கெளதம்தான் ஆரம்பித்தான். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ரேங்க் ஷீட்டில் அப்பாவின் கையெழுத்தை அவனே போட்டுவிட்டானாம். வாத்தியார் கண்டுபிடித்துவிட்டார். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் நொக்கியும் எடுத்துவிட்டார். நண்பர்கள் குழாமோடு சேர்ந்து திட்டம் தீட்டியவன் அந்த வாத்தியாரை பழி வாங்குவதாக முடிவு செய்துவிட்டான். ஆனால் உடனடியாக திட்டத்தை அமல்படுத்தினால் அந்த கிரிமினல் வாத்தியார் தன்னைக் கண்டுபிடித்துவிடக் கூடும் என்பதால் கொஞ்ச நாட்களுக்கு தனது முடிவை தள்ளி வைத்துவிட்டான்.

அதற்கான காலம் மூன்று மாதங்களுக்கு பிறகு கனிந்தது. ஒருநாளும் இல்லாத திருநாளாக அந்த வாத்தி தனது புதிய வெள்ளை நிற மாருதி 800 இல் பள்ளிக்கு வந்துவிட்டார். இப்பொழுது நண்பர்கள் யாரையும் கூட சேர்த்துக் கொள்ளவில்லை. ஒன் மேன் ஆர்மியாக செயல்படுவது என்ற தனது திட்டத்தை செயல்படுத்துவதற்காக காம்பஸை எடுத்து யாரும் பார்க்காத நேரத்தில் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். பிறகு நீங்களும் நானும் எதிர்பார்த்ததுதான். அவரது காரில் ஒரு புதுக்கவிதை எழுதி வைத்துவிட்டான். 

“என்ன எழுதின?” என்றேன்.

“மாம்ஸ், உன் பொண்ணு சூப்பர் பிகர்” என்று எழுதினானாம். இப்பொழுது அந்த மாம்ஸ்தான் ரியல் மாமனார். ஆனால் மாமனாருக்கு இந்த மேட்டர் தெரியாது.

அடுத்தது சுஜய். பெங்காலி. கொஞ்சம் ஹை-ஃபை டைப். அதனால் அவன் பென்ஸ் காரில் ஆரம்பித்தான். தனது அபார்ட்மெண்டில் பென்ஸ் வைத்திருக்கும் கிழவனார் ஒருத்தர் இவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்து“இங்கு விளையாடினால் எப்படி நடப்பது” என்று கேட்டிருக்கிறார். “பென்ஸ் வைத்துக் கொண்டு எதற்கு நடந்து போகிறீர்கள்?” என்று சுஜய் பதில்கேள்வியைக் கேட்டிருக்கிறான். இதைக் கேட்டபோது சுஜய்யின் வயது பதினேழு. ப்ளஸ் டூ படித்த பருவம். இவனது கேள்வியில் கடுப்பான கிழவர் ஆங்கிலத்தில் சில கெட்டவார்த்தைகளைச் சொல்லி திட்டி பிறகு செக்யூரிட்டியை அழைத்து இந்த காக்கைகள் கூட்டத்தை துரத்திவிட்டுவிட்டார். 

அடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமையில் தனது அபார்ட்மெண்டிலேயே இருக்கும் நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு வந்த போது நடுவயது ஆண்ட்டியைப் போல நின்று கொண்டிருக்கிறது பென்ஸ். அந்தக் காலத்து பென்ஸில் அதன் லோகோ முன்புற டிக்கியில் நட்டுக் கொண்டு நிற்கும். அதுதான் சுஜய்யின் கண்களை உறுத்தியிருக்கிறது. அந்த லோகோ மீது ஈர ஜட்டியோடு ஏறி அமர்ந்திருக்கிறான்.  

“அப்போ என்ன ஆச்சு தெரியுமா?” என்று சஸ்பென்ஸ் வைத்து நிறுத்தினான்.  

“ஜட்டியைக் கிழித்ததுமில்லாமல் உன்னையும் பஞ்சராக்கிவிட்டதா?” என்று கெளதம் நக்கலடித்தான்.

“நோ நோ” என்றவன் தனது பர்ஸின் ஒரு அறையை பிரித்துக்காட்டினான். இன்னமும் அந்த லோகோ அந்த பர்ஸுக்குள்தான் இருக்கிறது. தனது வீரவிளையாட்டில் கிடைத்த மிகப்பெரிய பரிசு இது என்றான். இப்பொழுது கிழவனின் முகமும், கொண்டை அறுபட்ட பென்ஸ் ஆண்ட்டியும் பாவமாக மனதுக்குள் நிழலாடினார்கள்.

அடுத்து அருள். அக்மார்க் தமிழன். பாக்யராஜைவிடவும் தேர்ந்த திரைக்கதைக்காரன். அவனும் ஒரு காரை வைத்துதான் கதையைத் தொடங்கினான். ஒரு கார்க்காரன் வெளியே எட்டி உமிழ்ந்தபோது பக்கத்தில் பைக்கில் ஓட்டி வந்த இவன் முகத்தில் தெறித்துவிட்டது. அவனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என முடிவு செய்தவன் அந்தக் காரை துரத்துகிறான். அந்தக் கார் மிக வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் எப்படியோ அடுத்த சிக்னலில் மாட்டிக் கொள்கிறது. தனது பையில் இருந்த வாட்டர் பாட்டிலிருந்து கொஞ்சம் நீரை வாயில் ஊற்றிக் கொப்புளித்துக் கொண்டே கார் ஜன்னல் கண்ணாடியைத் தட்டியிருக்கிறான். அவன் சைகை காட்டிய போது இவனும் கண்ணாடியை கீழே இறக்கு என சைகை காட்டியதால் அவன் எதார்த்தமாக திறந்துவிட்டான். 

“ப்ப்ப்ப்ப்புளிளிளிச்ச்ச்ச்ச்ச்”- அவ்வளவுதான். அவன் சுதாரிப்பதற்குள் இவன் சிக்னலைத் தாண்டிவிட்டான்.

இவர்கள் மூன்று பேர்களுக்கும் அடுத்து நான் எனது வீரக்கதையை சொல்ல வேண்டும்.தயாரேனேன். ஆனால் அதற்குள் மீட்டிங்குக்கு நேரமாகிவிட்டது என்று கிளம்பிவிட்டோம். மீட்டிங்கின் போது இந்த சம்வங்கள்தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அவரவரளவில் தான் செய்த காரியத்தை விளையாட்டு என்றோ அல்லது செய்தது சரியென்றோ Justify செய்துவிட முடியும். ஆனால் யோசித்துப்பார்த்தால் வன்மத்தை புதரைப்போல வளர்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் புதருக்குள்ளிலிருந்துதான் எந்தவிதமான தயவுதாட்சண்யமுமில்லாமல் எதிரியை அட்டாக் செய்யும் கொடூரமான காட்டுவிலங்கொன்று அவ்வப்போது வெளிப்பட்டுவிடுகிறது. அதை மறைக்கத்தான் பேண்ட்,சர்ட்,கூலிங்கிளாஸ், இரண்டு மூன்று மொழி புலமையெல்லாம் தேவைப்படுகிறது போலிருக்கிறது. 

7 எதிர் சப்தங்கள்:

அகல்விளக்கு said...

அக்மார்க்... :)

manjoorraja said...

வயசு காலத்தில் இதெல்லாம் சகஜமப்பா!

சேக்காளி said...

//வன்மத்தை புதரைப்போல வளர்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் புதருக்குள்ளிலிருந்துதான் எந்தவிதமான தயவுதாட்சண்யமுமில்லாமல் எதிரியை அட்டாக் செய்யும் கொடூரமான காட்டுவிலங்கொன்று அவ்வப்போது வெளிப்பட்டுவிடுகிறது. அதை மறைக்கத்தான் பேண்ட்,சர்ட்,கூலிங்கிளாஸ், இரண்டு மூன்று மொழி புலமையெல்லாம் தேவைப்படுகிறது போலிருக்கிறது//
உண்மைதான்.
அப்புறம் ரேங்க் ஷீட்டில் கையெழுத்தை கண்டுபிடித்தவர் காரில் ''உன் பொண்ணு சூப்பர் பிகர்" என்று உண்மைக்கு புறம்பாய் எழுதியதை தெரிந்தே கண்டுபிடிக்காமல் விட்டு விட்டாரோ?

Prapavi said...

மனதுக்குள் ஒளிந்திருக்கும் பெரிய மிருகம் பழிவாங்கும் உணர்ச்சி! இந்த மிருகம் அடங்கிவிட்டால், இங்கே எல்லாமே நிசப்தம் ஆகிவிடும், எல்லாவற்றிலும் ஒரு அழகு வெளிப்படும்!

Uma said...

இப்படியெல்லாம் வயசு காலத்தில் சேட்டைபண்ணினால்தான் வயதான காலத்தில் நினைத்து பார்த்து மகிழ(?) முடிகிறது!

பாலராஜன்கீதா said...

//அவரது காரில் ஒரு புதுக்கவிதை எழுதி வைத்துவிட்டான்..........
இப்பொழுது அந்த மாம்ஸ்தான் ரியல் மாமனார்.//
அந்த ஆசிரியர் இப்படியெல்லாம் பழி தீர்த்துக் கொள்ளக்கூடாது :-)

Tamil News Service said...

எனது பழைய நினைவுகள் கிளறியது உங்கள் பதிவு
மிக்க நன்றி.