சென்ற மாதம் அலுவலகத்தில் ஒரு பயிற்சி வகுப்பு நடந்தது. அதில் கலந்துகொண்டவர்கள் தங்களைத் தாங்களே அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்கள். ஆளாளுக்கு எதையாவது சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். ஒரு பெண்மணி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு நடந்தே போவது தனது hobby என்றார். கடந்த நான்கு வாரங்களாக இதைச் செய்து கொண்டிருக்கிறாராம். மொத்தமாக வெறும் நான்கு முறை மட்டுமே நடந்து போயிருக்கிறார். அது எப்படி ஹாபியாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. அவர் ஸீன் போடுவதற்காக சொல்லியிருந்திருக்கக் கூடும். இருந்தாலும் எல்லோரும் அவருக்காக கரவொலி எழுப்பினார்கள். எதற்கு பொல்லாப்பு என்று நானும் கைத்தட்டி வைத்தேன்.
சேலத்தில் அதிகமாக நடந்திருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது சனிக்கிழமை இரவுகளில் பழைய பஸ் நிலையம் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு தியேட்டரில் படம் பார்த்துவிட்டு சோனா கல்லூரி வரைக்கும் நடந்தே வருவேன். தனியாக நடந்துவருவது அப்பொழுது விருப்பமான செயலாக இருந்தது. விருப்பத்தை தாண்டி இன்னொரு காரணமும் இருக்கிறது. நான் கஞ்சூஸாக இருந்தேன். நள்ளிரவு நேரத்தில் பேருந்தில் பயணித்தால் டபுள் டிக்கெட் வாங்க வேண்டும். அதனால் நடந்து போவது ஒரு சிக்கன நடவடிக்கையாக இருந்தது.
கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த சமயத்தில் வீரபாண்டியார் அமைச்சர் ஆகியிருந்தார். மேயர் சூடாமணியும் திமுகக்காரர்தான். வீரபாண்டியாரின் மூத்தமகன் நெடுஞ்செழியன் சேலம் திமுகவில் முக்கியமான சக்தியாக இருந்தார். மொத்த சேலமும் திமுகவின் கோட்டையாக இருந்தது. சனிக்கிழமைகளின் நள்ளிரவில் பெரும்பாலும் திமுக கொடி கட்டுபவர்கள் மற்றும் பேனர் கட்டுபவர்களின் நடமாட்டம் இருக்கும். அதனால் தனியாக நடக்க பயம் எதுவும் இருக்காது. சில சமயங்களில் போலீஸ்காரர்கள் விசாரிப்பார்கள். கல்லூரி அடையாள அட்டையிருந்தால் அனுப்பிவிடுவார்கள். பெரும்பாலான நேரங்களில் தனியாக நடக்க வேண்டாம் என அறிவுரை செய்வார்கள். ‘சரிங்க சார்’ என்று பவ்யம் காட்டிவிட்டு நகர்ந்துவிடுவேன்.
ஒவ்வொரு நாளும் நல்ல நாளாக இருப்பதில்லை அல்லவா? ஒரு தீபாவளி சமயத்தில் விடுதி காலியாகியிருந்தது. எல்லோரும் ஊருக்கு போயிருந்தார்கள். சில சென்னை நண்பர்களும் நானும் மட்டும் விடுதியில் இருந்தோம். வழக்கம் போல நான் படத்துக்கு போய்விட்டு தனியாக வந்து கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்தவர்கள் என்னோடு சேர்ந்து நடக்கத் துவங்கினார்கள். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று கேட்கவில்லை. கேட்க வேண்டிய அவசியமும் இல்லாமல் இருந்தது. அவர்கள் குடித்திருந்தார்கள். கால் போதை, அரைப்போதை என்ற நிலையில் யாருமே இல்லை. எல்லோருமே முழுப்போதைதான். சாலை நெடுக கூத்து கும்மாளம் என அதிரச் செய்தார்கள்.
அவர்களின் கூச்சல் போதையில்லாமல் இருந்த எனக்கு பயமூட்டிக் கொண்டிருந்தது. போதை ஏறியவர்களோடு போதையில்லாதவன் உடன் இருப்பது கொடுமையான நிகழ்வு. அவர்களின் அத்தனை அழிச்சாட்டியத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும். அது கூட பிர்ச்சினையில்லை. இந்நேரத்தில் யாராவது ரெளடிகள் வந்தால் எனக்கும் சேர்ந்து அடி விழும் என நடுங்கிக் கொண்டிருந்தேன். போதையில் இருப்பவர்கள் ஓரிரண்டு அடிகளில் விழுந்துவிடுவார்கள் என்பதால் ‘ஸ்டெடியாக’ நிற்கும் என்னை மொக்கிவிடுவார்கள் என பயந்தேன். யார் அடிக்க வந்தாலும் முதல் அடியில் கீழே சுருண்டு விழுந்துவிட வேண்டும் என உள்ளுக்குள் திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் எதிர்பார்த்தது போல ரெளடிகள் யாரும் வரவில்லை. எதிர்பாராத போலீஸ் ஜீப் எங்கள் முன்னால் வந்து நின்றது.
அவர்கள் எங்களை எச்சரிக்கை செய்து அனுப்பியிருக்கக் கூடும். அதற்கு இடமில்லாமல் செய்துவிட்டது எங்களில் இருந்த ஒரு பன்னாடை. “வணக்கம் மாம்ஸ்! என்ன இந்நேரத்துல? போய் தூங்குங்க” என்று சொல்லி அவர்களை கடுப்பேற்றிவிட்டான். ரெளடிகள் என்றால் கூட அடியோடு போயிற்று இனி கோர்ட் கேஸ் என சிக்கிக் கொண்டோமே என அழத்துவங்கினேன். மொத்தமாக அள்ளியெடுத்துக் கொண்டு போய் சூரமங்கலம் ஸ்டேஷனில் அமர வைத்துவிட்டார்கள்.
மாம்ஸ் என்று அழைத்தவனுக்கு மட்டும் ஓரிரண்டு கும்மாங்குத்து எஸ்.ஐ.யிடம் விழுந்தது. அவனுக்கு மட்டும் தான் அடி. எங்களை அடிக்கவில்லை. நாளைக்கு பிரின்ஸிபால் வந்தால்தான் ஆச்சு என்று சொல்லிவிட்டார். பிரின்சிபால் வரும்போதே ஒவ்வொருவருக்கும் சஸ்பெண்ட் லெட்டரோ அல்லது டிஸ்மிஸ் லெட்டரோ தயார் செய்துவிட்டுதான் வருவார் என்று தெரியும்.
கொஞ்ச நேரம் அமர்ந்திருந்த எங்கள் ஆட்கள் ஒவ்வொருவருவராக மட்டையாகிவிட்டார்கள். ஒரு ஏட்டய்யாவிடம் போய் கதையைச் சொல்லி புலம்பினேன். நான் குடிக்காத யோக்கியன் என்று அழுதேன். “எதுவாக இருந்தாலும் எஸ்.ஐயிடம் பேசு” என்று சொல்லிவிட்டார். எஸ்.ஐ எங்களையெல்லாம் ஸ்டேஷனில் போட்டுவிட்டு மீண்டும் ரவுண்ட்ஸ் போயிருந்தார். எப்பொழுது வருவார் என்று கேட்டால் பதிலில்லை. விடியும் போது எல்லோருக்கும் ‘மப்பு’ தெளிந்துவிடும் என்பதால் நான் குடிக்கவில்லை என்பதை நிரூபிக்க வழியே இருக்காது என நினைத்த போது துக்கம் தொண்டையை அடைத்தது. இப்பொழுது ஊரில் தூங்கிக் கொண்டிருக்கும் அப்பா அம்மாவுக்கு நாளை பெரிய இடியுடன் விடியப்போகிறது என பதறினேன். போலீஸ் ஸ்டேஷன் ஒரு பெரிய அரக்கர் மாளிகையாகத் தெரிந்தது.
அதிகாலை மூன்று மணிக்கு எஸ்.ஐ வந்தார். நான் மட்டும் அமர்ந்திருந்தேன். கண்கள் வீங்கியிருந்தன. கதையை மீண்டும் விவரிக்க ஆரம்பித்தேன். “ஊது” என்றார். ஊதினேன். அவருக்கு நம்பிக்கை வந்தது. இருந்தாலும் பிரின்ஸிபாலிடம் பேசிவிட்டு அனுப்புகிறேன் என்றார். காலில் விழாத குறையாக கெஞ்சினேன். அம்மா அப்பாவுக்கு தெரிந்தால் உயிரை விட்டுவிடுவார்கள் என்று சொன்னேன். அவர் என்னை விட்டுவிட முடிவு செய்தார். “சரி இந்த நேரத்தில் போக வேண்டாம் விடிந்தால் விட்டுவிடுகிறேன்” என்றார். நான் விடுவதாக இல்லை மீண்டும் கெஞ்சினேன். “என்னால் இங்கே இருக்க முடியாது” என அழுதேன்.சிரித்துக் கொண்டே “இவனுகளோட சேராதே” என்றார். “சரிங்கய்யா” என்றேன். அவர் “போ” என்று சொல்லி முடிப்பதற்கு முன்பாக ஸ்டேஷனை விட்டு வெளியேறியிருந்தேன்.
இரவின் அந்த நேரம் கொஞ்சம் ஆசுவாசமானதாக இருந்தது. வேகமாக நடந்தேன். அது கிட்டத்தட்ட ஓட்டம்தான். காலில் பிசுபிசுவென என்னவோ ஒட்டியது. இரத்தம். செருப்பில்லாத காலை கற்கள் கிழித்திருந்தன். செருப்பை ஸ்டேஷனிலேயே மறந்து விட்டிருந்தேன். அது முக்கியமில்லை என்று தோன்றியது. ஸ்டேஷன் இருக்கும் ஏரியாவைத் தாண்டிவிட வேண்டும் என மீண்டும் வேகம் எடுத்தேன். விடுதியை அடைந்து அறையைத் திறந்த போதுதான் கால் வலிக்கத் துவங்கியிருந்தது. அது நிம்மதியான வலியாகத் தெரிந்தது.
5 எதிர் சப்தங்கள்:
உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி
பக்குவப்பட்ட நல்ல நடை...
#எந்த நடையென்று எடுத்துக்கொண்டாலும் சரி...:)
நீங்களும் உண்மையான தமிழன் ...
தவறே செய்யாவிட்டாலும் போலீஸ் கண்டு பயம் கொண்டு பீதி அடைபவன் தான் தமிழன்...
அருமை மச்சி. நானும் சேலத்தில் ராமகிருஷ்ணாவில் படிச்சவன் தான்
பனை மரத்தடியில் இருந்து பால் குடித்த கதை தான்.நல்ல அனுபவம் .
Post a Comment