Dec 24, 2012

குட்டியானையாக ஒரு சாஃப்ட்வேர் தலையன்


பெரும்பாலும் ரிசர்வ் செய்யாத பேருந்துகளில் பயணிப்பதில்தான் எனக்கு விருப்பம் அதிகம். கொஞ்சம் சிரமம் இருக்கும்தான். ஆனால் அற்புதமான அனுபவங்கள் சாதாரண பேருந்துகளில்தான் கிடைக்கும். ரிசர்வ் செய்த பேருந்துகளுக்குள் நுழையும் போது நிலவும் மயான அமைதி எரிச்சல் ஊட்டுவதாக இருக்கும். அதைக் கூட தொலையட்டும் என்று விட்டுவிடலாம். நம் ஸீட்டை கண்டுபிடித்து அமரப் போகும் போது பக்கத்து சீட்டுக்காரன் முகத்தை தெரியாத்தனமாகக் கூட பார்த்துவிடக் கூடாது. மீறி பார்த்துவிட்டால் ஏதோ கடன்காரனைப் பார்ப்பதை போல முகத்தை திருப்புவார்கள் பாருங்கள்- முகத்திலேயே ஒரு குத்துவிட வேண்டும் என்று தோன்றும்.

ஆனால் ரிசர்வ் செய்யாத பேருந்துகளில் ஏறும் போதே ‘ஜாலி’ ஆகிவிடலாம். அப்படித்தான் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை செல்வதற்காக டிக்கெட் எதுவும் எடுத்திருக்கவில்லை. பாண்டிச்சேரி வண்டியில் ஏறிவிட்டேன். ஓசூரில் இறங்கி அங்கிருந்து சென்னைக்கு இன்னொரு பேருந்தை பிடித்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். 

ஏறியவுடன் கண்டக்டர் “எங்கே போகணும்” என்றார்.  “ஓசூர்” என்றவுடன் கடுப்பாகிவிட்டார்.  

“ஏம்ப்பா இதென்ன டவுன்பஸ்ஸா?” என்று மீண்டும் எகிறினார். 

“அய்யய்யோ ஓசூரில் பஸ் நிக்காதா சார்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டேன். ஓசூரில் நிற்காமல் போவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரியும். நான் நக்கலடிப்பதாகத் தெரிந்து கொண்டு அவரும் சிரித்து வைத்தார். அவ்வளவுதான். ஃப்ரெண்ட்ஸ் ஆகிவிட்டோம். அவர் ஸீட்டுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டும் ஓசூர் வரைக்கும் சொந்தக் கதை சோகக் கதை பேசிக் கொண்டு வந்தோம். அவர் பெண் +2 படிப்பதிலிருந்து அடுத்து என்ன படிக்கலாம் என்பது வரைக்கும் பேசிவிட்டு இறங்கினால் ஓசூரில் எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். இந்தத் தலைகளை வென்றுதான் சென்னை பேருந்தில் இடம் பிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு தலையும் அமெரிக்கக்காரனுக்கும், ஐரோப்பாக்காரனுக்கும் உழைத்து ஓடாய்த் தேயும் சாஃப்ட்வேர் தலைகள். சாஃப்ட்வேரில் இருக்கிறார்கள் என்பதால் டீசண்டாக நடந்து கொள்வார்கள் என்றோ, எகிறாமல் பேசுவார்கள் என்றோ நினைத்தால் அதைவிட வேறு முட்டாள்த்தனம் இருக்க முடியாது. தனது மேனேஜர்கள் மீது இருக்கும் கோபத்தையெல்லாம் பக்கத்து ஸீட்டுக்காரன் மீதுதான் காட்டுவார்கள். அப்படி ஒரு தலை என்னிடம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் வந்துவிட்டது. அதுவும் யானைத் தலை. 

ஓசூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சென்னைக்கான பேருந்தில் கடைசி வரிசையில் ஒரு இடம் இருந்தது. ஏறி அமர்ந்தால் பக்கத்தில் இந்தக் குட்டியானை. அவன் ஏற்கனவே அங்கு அமர்ந்திருந்தான். எனக்காக ஆறு இஞ்ச் இடத்தை விட்டு வைத்திருந்தான். கிட்டத்தட்ட டபுள் ஸீட் வாங்க வேண்டிய உருவம் அது. என் கெட்ட நேரம், ஜன்னல் ஓரமாக என்னைத் தள்ளிவிட்டு நசுக்க ஆரம்பித்துவிட்டது. அதைக் கூட பொறுத்துக் கொண்டிருப்பேன். ஆனால் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் “சார், தள்ளி உக்காருங்க” என்றார்.  

“நான் வேணும்ன்னா சக்கரத்தில் உக்காந்துட்டு வந்துடுறேன்” என்றேன். 

அவ்வளவுதான். சட்னி ஆக்க கங்கணம் கட்டிக் கொண்டான் போலிருந்தது. என்னைப்பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் தூங்கத் துவங்கினான். பேருந்து கிளம்பியது. தூங்கித் தூங்கி விழுந்தான். கிருஷ்ணகிரி, ஆம்பூர் என ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் ஏதாவது ஸீட் காலியாகுமா என்று பார்த்து கொண்டே வந்தேன். இடம் மாறி அமர்ந்தால் இந்த கிரகத்திடம் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. ம்ஹூம். யாருமே இறங்குவதாகத் தெரியவில்லை. தோள்பட்டை வலிக்கத்துவங்கியது. இந்த இடத்தில் ‘தூக்கமே வரவில்லை’ என்று எழுதினால் சரியாக வராது.  ‘தூங்கவே விடவில்லை என்பதுதான் சரியாக இருக்கும்.

அவனோடு தோள் உரசிக் கொண்டே வந்த போது மணி மூன்று ஆகியிருந்தது. எப்படியும் இனி நான் தூங்கப்போவதில்லை என்பதால் அவனையும் சேர்த்து தூங்கவிடாமல் செய்யலாம் என்று அவன் என் மீது சாயும் போதெல்லாம் அவனது தலையை ‘விசுக்’ என்று தள்ளிவிடத் துவங்கினேன். அவன் விழித்துப்பார்த்தால் நான் தூங்கிக் கொண்டிருப்பது போல நடிக்க ஆரம்பித்துவிடுவேன். நான்காவது முறை தள்ளிவிட்ட போது நன்றாகவே விழித்துக் கொண்டான். எனக்கு உள்ளூர பயங்கர சந்தோஷம். யானையை வென்றுவிட்ட கஜவென்றான் என சுய புளாங்கிதம் அடைந்திருந்தேன். ஆனால் சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

அடுத்த ஐந்து நிமிடத்தில் வேலூர் பேருந்து நிலையம் வந்தது. யாராவது இறங்குகிறார்களா என்று பார்த்தேன். யாரும் இறங்கவில்லை. ஆனால் அவசரவசரமாக பைகளைத் தூக்கிக் கொண்டு குட்டியானை இறங்கிப் போனது. செம டென்ஷனாகிவிட்டேன். எழுப்பாமல் விட்டிருந்தால் அவன் அடுத்த பேருந்து நிலையம் வரைக்கும் வந்திருப்பான். தண்டனை கொடுத்த சந்தோஷமாவது கிடைத்திருக்கும். அவசரப்பட்டு அவனை எழுப்பி விட்டுவிட்டேனே என புலம்ப ஆரம்பித்தேன். அதன்பிறகு வேலூரிலிருந்து சென்னை வரைக்கும் ஸீட் ஃப்ரீயாகத்தான் இருந்தது. ஆனால் தூக்கம்தான் வரவில்லை.

15 எதிர் சப்தங்கள்:

Robert said...

தூங்க விடாம இவ்ளோ டார்ச்சர் பண்ணியும், நம்மளுக்கு ரொம்ப நல்லது செஞ்சுருக்கானே இந்த அப்பாவின்னு நினைச்சுகிட்டு இறங்கி இருப்பார் அந்த Mr.குட்டி யானை.....

Anonymous said...

Good laugh :)))

ப.கந்தசாமி said...

நல்ல அனுபவம்.

semmalai akash said...

ஹா ஹா ஹா ஹா !!! வண்டி பஞ்சர் ஆகிவிட்டதா? குட்டியானை பக்கத்தில் உக்காருவதே கஷ்டம், அதிலும் அவர் தூங்குகிறார் என்றால் சொல்லவே வேண்டாம், இனி ஒரே பஸ்ல போய்டலாம் இந்த தொல்லையே வேண்டாம் என்று முடிவு செய்திருப்பிங்களே????

Peppin said...

rasikka mudiyavillai :(

Vaa.Manikandan said...

நன்றி ராபர்ட்,பழனி.கந்தசாமி, செம்மலை ஆகாஷ்.

பெப்பின்,

யாரையும் புண்படுத்த வேண்டும் இதை எழுதவில்லை. உங்களுக்கு வருத்தம் உண்டாக்கியிருப்பின் மன்னிக்கவும். நன்றி.

சேக்காளி said...

சாப்ட்வேர் தலையணை எழுப்பிய தலைவா வாழ்க

Guru said...

super sir Last line told a good story. Thanks for sharing

Anonymous said...

not a good post. u should feel ashame and delete the post

iK Way said...

நல்ல அனுபவ / உள் மன எண்ண ஓட்ட பகிர்வு.

//இனி ஒரே பஸ்ல போய்டலாம் இந்த தொல்லையே வேண்டாம் என்று முடிவு செய்திருப்பிங்களே???? //
ஒருவேளை அந்த பக்கத்து இருக்கையர் கூடவே ஏறி சென்னை வரை செல்பவராக இருந்து விட்டால், கடைசிவரை தப்பிக்க வாய்ப்பே இருந்திருக்காதே!!!

இதில் ஏதும் வெட்கப்படவோ / மன வருத்தம் உண்டாக்கவோ வேண்டுமென்றே எழுதப்பட்டிருப்பதாக தெரியவில்லை.

நினைவிற்கு வரும் வேறு சில குறைந்த தூர பயண நிகழ்வுகள் / நினைவுகள் :
பத்து பதினைந்தாண்டுகள் முன் வரை சாதரணமாக தஞ்சாவூர் - முதல் மயிலாடுதுறை / நாகை தடத்தில், கூட்ட நேரத்தில், பெரும்பாலும் நம்ம பாய்மார்களும், ஐயமார்களும் பயணிக்கும் வேளையில், கண்டிப்பாக ஒரு முறையாவது நடத்துனர், "மேல படாம வரணும்னா தனியா கார் வைச்சுகிட்டு வர வேண்டியதுதான" சொல்லாமல் முடிந்ததில்லை.:-)

http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/

அகல்விளக்கு said...

நல்லவேளை எழுப்பி விட்டீங்க...

:)))



அகல்விளக்கு said...

இதச் சொல்லாம என்னால கமெண்ட் முடிக்க முடியாது...

'இன்னா செய்தாரை ஒறுத்தல்...' :)))

சர்வோத்தமன் சடகோபன் said...

குட்டி யானை என்றும் அவர் டபுள் ஸீட் வாங்கியிருக்க வேண்டும் என்று எழுதியதும் தவறு மணிகண்டன்.

சர்வோத்தமன் சடகோபன் said...

ஒல்லியாக இருக்கும் பலர் அவர்கள் ஒல்லியாக இருப்பதற்கு அப்படி அவர்ள் பெரிதாக ஒன்றும் பயிற்சி செய்ததில்லை என்பதை நினைப்பதே இல்லை.

Uma said...

அவருக்கு தண்டனை கொடுக்க நினைச்சு நீங்க தண்டனை வாங்கிட்டீங்க போல (தூக்கம் போச்சே)