Dec 22, 2012

டெல்லி வன்புணர்வு மட்டும்தான் நம் பிரச்சினையா?



ஓடும் பேருந்தில் பெண்ணொருத்தியை கற்பழித்துவிட்டு நாப்கினைப் போல எறிந்துவிட்டு போகிறார்கள்.கொடூரமாகத்தான் இருக்கிறது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவனை திகார் சிறையில் அடைத்த போது அங்கிருந்த கைதிகள் அவனை அடித்து உதைத்து சிறுநீர் குடிக்க வைத்து மனித மலத்தை தின்ன வைத்திருக்கிறார்கள். “சாவடிக்கட்டும்” என்ற மனநிலையில் இருக்கிறோம்.

உண்மையில் இந்த மனநிலை ஊடகங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக வடநாட்டு ஊடகங்களால். இந்த ஊடகங்கள் தங்களின் சேனலுக்கான ‘எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோரி’யை தயாரிக்கும் போதே அந்த நிகழ்ச்சியை பார்த்த பின்னர் பார்வையாளர்கள் எத்தகைய மனநிலையை அடைய வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்கின்றன. அது கோபம், அறச்சீற்றம், பீதி என சீஸனுக்குத் தகுந்த மனநிலையாக இருக்கும். டெல்லி விவகாரத்தில் நமது மனநிலை மாற்றம் குறித்து ஒரு Graph வரைந்தால் அது அந்த பெண்ணின் மீதான பரிதாபத்தில் ஆரம்பித்து காமுகர்களின் மீதான கோபத்தை நோக்கி நகரும்.

கவனித்துப்பார்த்தால் இத்தகைய ஊடகங்களின் டார்கெட் ‘மிடில் கிளாஸ்’. இந்த மிடில் கிளாஸ் மாதவன்கள் பொங்கி வரும் தங்களின் உணர்ச்சியை சமூக ஊடகங்களில் கொட்டிவிட்டு சைலண்ட் ஆகிவிடும் போராளிகள். அதிகபட்சமாக வார இறுதி நாட்களில் ஏதேனும் ஒரு பொது இடத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி போராடிவிட்டு கே.எஃப்.சியில் சிக்கன் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போகும் போலியான போராளிகளை இந்த ஊடகங்கள் வெற்றிகரமாக உருவாக்கி வருகின்றன.  இந்த நவீன போராளிகளிடம் ஒரு பிரச்சினை இருக்கிறது. ஊடகங்களில் எந்தச் செய்தி‘ஹைலைட்’ செய்யப்படுகிறதோ அதைப்பற்றி மட்டுமே கவனம் செலுத்துவார்கள். அதற்கு முந்தைய பிரச்சினையை மறந்திருப்பார்கள்.

சில மாதங்களுக்கு முன்பாக ‘ஊழலை ஒழிப்போம்’ என்று அன்னா ஹசாரேவை ஊடகங்கள் தூக்கிப்பிடித்தன. ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் அன்னாவின் கொடி பறந்தது. பிறகு அவர் ஒரு ‘டம்மி பீஸ்’ என்றான பிறகு எந்த உயரத்தில் பிடித்திருந்தார்களோ அங்கிருந்து கீழே விட்டார்கள். அதுவரை ஊழலை ஒழிப்போம் என்று நாலுகால் பாய்ச்சலில் பாய்ந்த போராளிகளை பூதக்கண்ணாடி வைத்துத் தேடினாலும் இப்பொழுது கண்டுபிடிக்க முடியாது. அதே போராளிகள்தான் இப்பொழுது வன்புணர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனைகள் பற்றியும், இனி எப்படி இந்தப்பிரச்சினைகளை கையாள வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கபடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த பிரச்சினை ‘ஹைலைட்’ ஆகும் போது இதை விட்டுவிட்டு அதைத் தூக்கிக் கொள்வார்கள். 

ஒன்றுமேயில்லாத சப்பை மேட்டரான பறவைக்காய்ச்சலுக்கு வடக்கத்திய ஊடகங்கள் கொடுத்த பில்ட்-அப் ஞாபகமிருக்கிறதா? அது மக்களின் மத்தியில் அந்தச் சமயத்தில் ஒருவித பீதியை கிளப்பிவிட்டிருந்தது. மிச்சம் மீதியாகிப்போன  பறவைக்காய்ச்சலுக்கான தடுப்பூசி ஸ்டாக்கை காலி செய்வதற்கு மருத்துவக் கம்பெனிகள் விரித்த சதிக்கு நமது ஊடகங்களும் உடந்தையாக இருந்தன. மக்கள் பதறியடித்துக் கொண்டு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டார்கள். மருத்துவக் கம்பெனிகளின் ஸ்டாக் தீர்ந்த பிறகு பறவைக்காய்ச்சலை ஊடகங்கள் மறந்துவிட்டன.

டெல்லி பெண்ணுக்கு நடந்த கொடுமை யாராலும் ஜீரணிக்க முடியாததுதான். அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அதே சமயம் மற்ற முக்கியமான பிரச்சினைகளை ஏன் ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை?

தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் போது இதே அளவு முக்கியத்துவத்தை இந்த ஊடகங்கள் ஏன் அளிப்பதில்லை என்று புரிவதேயில்லை. மிகச் சமீபத்தில் வினோதினி என்ற பெண்ணின் மீது ஆசிட் ஊற்றப்பட்டு அவள் தனது பார்வையை முழுமையாக தொலைத்துவிட்டாள். எத்தனை சேனல்கள் இது பற்றிய கவனத்தை உருவாக்கின? 

2004 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் 94 குழந்தைகள் எரிந்த தீ விபத்து தேசிய அளவில் எந்தச் சலனத்தையும் உருவாக்கவில்லை. ஆனால் நொய்டாவில் 2008 ஆம் கொல்லப்பட்ட ஒன்பது வகுப்பு மாணவியான ஆருஷி வழக்கு பற்றிய விவாதங்களை இன்னமும் ஆங்கிலச் சேனல்களில் கவனிக்க முடியும். 1999 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட மாடல் அழகியான ஜெஸிக்காவை இன்னமும் நாம் மறக்காமல் இருக்கக் காரணம் ஊடகங்கள்தான். ஆருஷி, ஜெஸிக்காவை விடக் கொடுமையான நரபலிகள் இந்த நாட்டின் மற்ற பகுதிகளில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஊடகங்கள்தான் தலைநகரை விட்டு வெளியில் வருவதில்லை. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடந்த வன்புணர்வு சம்பவம் கோயமுத்தூரிலோ அல்லது எர்ணாகுளத்திலோ நடந்திருந்தால் இத்தகைய சலனத்தை உருவாக்கியிருக்குமா என்ற கேள்வி முக்கியமானது? பதில் எல்லோருக்குமே தெரிந்ததுதான்.

வடநாட்டு பிரச்சினைகளை மட்டுமே தேசியப் பிரச்சினையாக காட்டிக் கொண்டிருப்பதை ஊடகங்கள் எந்தக் காலத்திலும் மாற்றிக் கொள்ளப்போவதில்லை. அது வன்புணர்ச்சியாக இருந்தாலும் சரி, கொலையாக இருந்தாலும் சரி டெல்லியில் நடந்தால்தான் சலனமுண்டாக்கும் செய்தியாக மாறும் போலிருக்கிறது. 

எனக்கு சமூகப்போராட்டம் நடத்த செய்தி கிடைத்தால் சரி அந்த பிரச்சினை எங்கு நடந்தால் எனக்கு என்ன?

“கற்பழித்தவனை தூக்கில் போடு” 

“போராடுவோம்! போராடுவோம்!! அடுத்த நியூஸ் வரும் வரைக்கும் போராடுவோம்”

Dec 19, 2012

அதிகாரவர்க்கத்திற்கு உயிர் என்பது மயிருக்குச் சமானம்

நம் ஊர்ப்பக்கம் அதிகாரவர்க்கம் யாரையாவது கொல்ல விரும்பினால் அவ்வளவு சீக்கிரமாக வீதியிலேயே வைத்து  சுட்டுத்தள்ள மாட்டார்கள். பிடித்துக் கொண்டு போய் ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து என்கவுண்ட்டரில் போட்டால்தான் உண்டு.  அந்த அளவில் நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள்தான். ஆனால் மணிப்பூர், காஷ்மீர் போன்ற பகுதிகளில் நிலைமை அப்படியில்லையாம். ஆயுதப்படையினர் தங்களுக்கு தூக்கம் வராமல் இருக்க யாரையாவது சுட்டுத் தள்ளினால் கூட “சும்மா விளையாட்டுக்கு” என்று அதை அசால்ட்டாக எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அந்தளவிற்கு அங்கிருக்கும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினருக்கு வரைமுறையற்ற சுதந்திரத்தை அரசுகள் வழங்கியிருக்கின்றன.

ஆயுதப்படையினரை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற Armed Forces Special Power Act (AFSPA) என்ற பிரிவை வைத்திருக்கிறார்கள். அவர்கள் இந்தப்பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட ‘எந்த’ காரியத்திலும் ஈடுபடுவதற்கான அனுமதியை இந்த சிறப்புப் பிரிவு வழங்குகிறது. எந் இப்படித்தான் 2000 ஆம் ஆண்டில் மணிப்பூரில் மாலோம் என்ற இடத்தில் பேருந்துக்கு நின்றிருந்த பத்து பேரை ஆயுதப்படையினர் பொசுக்கித் தள்ளினார்கள். அந்தப் பத்து பேரும்தான் இம்பாலில் நடந்த குண்டு வெடிப்புக்கு காரணம் என்று கேஸை மூடிவிட்டார்கள். எவனாவது வாயைத் திறந்தால் அவனையும் லிஸ்டில் சேர்க்கும் முடிவில்தான் இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. ஆனால் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அடுத்த இரண்டாவது நாளில் 27 வயதான இளம்பெண் உண்ணாவிரதத்தை துவக்கினாள். அவள் முன் வைத்த கோரிக்கை மிக எளிமையானது. AFSPA வை மணிப்பூரில் இருந்து நீக்க வேண்டும். அவ்வளவுதான்.

அரசுகளாவது செவிமடுப்பதாவது? நாட்கள் மாதங்களாகி வருடங்களும் ஓடிவிட்டன. அந்தப் பெண்மணி உண்ணாவிரதத்தைத் துவங்கி இப்பொழுது பன்னிரெண்டு ஆண்டுகள் முடிந்தாயிற்று. அரசும் இறங்கி வந்ததாகத் தெரியவில்லை, அந்தப் பெண்ணும் ஓய்ந்து போனதாகத் தெரியவில்லை. அத்தனை ஜால்ரா மீடியாக்களும் செய்தி கசிந்துவிடாமல் மறைத்தாலும் அவள் பிரபலமாகிக் கொண்டிருந்தாள். அவளைத்தான் மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் தங்கள் உரிமைகளுக்காக போராடும் மக்களுக்கு ‘ஐகானாக’ மாறிவிட்ட அந்த இரும்புப் பெண்மணியின் பெயர் இரோம் ஷர்மிலா.


கொஞ்ச நாட்களுக்கு ஷர்மிலாவை வெளியில் விட்டு வைத்த அரசாங்கம் இவள் தலைவலியாக மாறிவிடக் கூடும் என நினைத்து செக்‌ஷன் 309 ல் உள்ளே தள்ளிவிட்டார்கள். பிரிவு 309 என்பது தற்கொலை முயற்சி செய்பவர்களை தண்டிப்பதற்கான சட்டப்பிரிவு. அதிகபட்சமாக ஒரு வருடம் மட்டுமே சிறையில் வைத்திருக்கலாம். ஷர்மிலாவை ஒரு வருடம் கஸ்டடியில் வைத்திருப்பார்கள். பிறகு பெயரளவில் ‘ரிலீஸ்’ செய்துவிட்டு மீண்டும் கைது செய்துவிடுவார்கள். 

கைது செய்தாலும் ஷர்மிலா தனது உண்ணாவிரதத்தை தொடர்வதால் மூக்கு வழியாக ஒரு குழாயைச் செருகி வலுக்கட்டாயமாக எதையாவது ஊற்றி ஷர்மிலாவை உயிரோடு வைத்திருக்கிறார்கள். 

பன்னிரெண்டு வருடங்களாக மூக்கு வழியாகச் செலுத்தப்படும் உணவை உண்டு, ஆறேழு ஆண்டுகளாக பல் கூட துலக்காமல், தனது அபிலாஷைகள், உணர்வுகள் என அத்தனையும் மழுங்கடித்து மனித உரிமைக்காக குரல் கொடுத்து வரும் ஷர்மிலாவின் அத்தனை போராட்டமும் மூன்றாவது மனிதனுக்கானது. தனது அத்தனை கஷ்டங்களையும் வேறு யாருக்காகவோ அனுபவிக்கிறாள். தனக்காவோ, தனது குடும்பத்திற்காகவோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன்னை சிறுகச் சிறுக அழித்துக் கொள்ளும் அந்தப் பெண்மணி உண்மையிலேயே ‘சல்யூட்’டுக்குரியவள்.

ஷர்மிலாவுக்கு போராளி என்பதைத் தாண்டி இன்னொரு முகம் இருக்கிறது. அது கவிதை முகம். தனது கவிதைகளை ‘மைதைலான்’ என்ற மணிப்பூரின் மொழியில் எழுதியிருக்கிறார். இந்தக் கவிதைகள் தமிழிலிலும் கிடைக்கின்றன. மொழியாக்கம் செய்திருப்பவர் அம்பை. ஷர்மிலாவின் பன்னிரெண்டு கவிதைகள் அடங்கிய “அமைதியின் நறுமணம்” என்ற தொகுப்பை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கவிதைகள் என்ற அளவில் வாசித்தால் சாதாரணமானவையாக தெரிவதற்கான அத்தனை சாத்தியங்களும் இருக்கின்றன. ஆனால் இந்தக் கவிதையின் வழியாக இரோம் ஷர்மிலாவை காண முடிந்தால் அது மிக முக்கியமான அனுபவமாக இருக்கும்.

இந்தத் தொகுப்பின் இரண்டு பத்திகள் வாசித்ததிலிருந்து மிகவும் அலைகழிக்கின்றன. 

“என்னை விடுவியுங்கள்
செய்யாத தவறுக்கு 
கூண்டுப் பறவையான என்னை
இந்தச் சிறு அறையில் பிணைத்திருக்கும்
இந்த முள் சங்கிலியிலிருந்து

இந்த திகிலூட்டும் சிறையில்
பல குரல்களின் அருவி இல்லை
அவை நிறுத்தாமல் பேசும்
பறவைகளின் கீச்சொலி இல்லை
பொங்கி எழும் சிரிப்பொலியும் இல்லை
தாலாட்டின் இனிய ஒலியோ
இல்லவே இல்லை”

இந்தக் கவிதையில் ஷர்மிலாவின் குரலைக் கேட்க முடிந்த ஒவ்வொருவரும் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகக் கூடும். தன்னை விடுவிக்கக் கோரும், சிறையின் வேதனையை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் இந்தப் பெண்மணி உழலும் அதே தேசத்தில்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவளுக்காக எந்தத் துரும்பையும் எடுத்துப் போடாத, ஒற்றைச் சொல்லைக் கூட உதிர்க்காத நம்மை நாமே வெட்கித்துக் கொள்ளச் செய்யும் எழுத்துக்கள் இந்தப் பத்தியிலிருக்கின்றன.

‘காலச்சுவடு’ வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம் ஆவணம் என்ற வகையிலும், குரல் நசுக்கப்படும் ஒரு இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்ணின் வாக்கு மூலம் என்ற அடிப்படையிலும் மிக முக்கியமான புத்தகம். 

புத்தகத்தை வாசித்துவிட்டு தூக்கம் வராமல் ஷர்மிலா பற்றிய தகவல்களைத் தேடிக் கொண்டிருந்தேன்.  நீண்ட பட்டினியால் அவரது உடலின் பல பாகங்கள் சிதைந்து கொண்டிருப்பதாக ஒரு செய்தியை வாசிக்க நேர்ந்தது. அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அரசுக்கும், பெரும்பான்மை ஊடகங்களுக்கும் இது பற்றிய கவலை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. 

இலட்சக்கணக்கான உயிர்களைக் கூட கொல்வதற்கு தயாராக இருக்கும் இந்த பயங்கரவாத அதிகார வர்க்கத்திற்கு சிதைந்து கொண்டிருக்கும் ஒற்றை உயிர் என்பது உதிர்ந்து கொண்டிருக்கும் ஒற்றை மயிருக்குச் சமானம்.

Dec 2, 2012

என்கவுண்ட்டரும் டாஸ்மாக்கும் அரசாங்கத்தின் ஆயுதங்கள்



“தப்பித்து ஓடினார்கள்; சுட்டுக் கொன்றுவிட்டோம்” சாதாரணமாகத்தான் செய்தியைக் கொடுக்கிறார்கள். 

“அடிச்சு கொன்னு இருக்கானுக சார். போலீஸ்காரன் நெஞ்சு மேலேயே கல்லைப் போட்டு கொன்னு இருக்கானுக. இப்படி செஞ்சாத்தான் அடுத்தவனுக்கு பயம் வரும்” நாமும் உணர்ச்சி பொங்க பேசுகிறோம். 

எஸ்.ஐ ஆல்வின் சுதனின் குடும்பம் பெரியது. நோய்வாய்ப்பட்ட பெற்றோர், தம்பி, தங்கை என மொத்தக் குடும்பமும் அவரது வருமானத்தை நம்பி இருந்திருக்கிறது. சம்பவத்தின் போது இரண்டு போலீஸாரை சில ரவுடிகள் சேர்ந்து ராகிங் செய்து கொண்டிருந்தபோது தடுக்க போயிருக்கிறார் ஆல்வின் சுதன். போதையில் இருந்தவர்கள் அவரைக் கீழே தள்ளி பாறாங்கல்லை போட்டு கொன்றுவிட்டார்கள் என்று ஒரு கட்டுரை இணையத்தில் கிடைக்கிறது. எப்படி கொன்றார்கள் என்பது முக்கியமான விஷயமாகத் தெரியவில்லை. கொன்றவர்கள் போதையில் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் உறுத்துகிறது. இப்பொழுது வரும் கொலைச் செய்திகள் பெரும்பாலானவற்றில் கொலையாளிகள் போதையில் இருக்கிறார்கள் என்பதை கவனிக்க முடியும்.

அப்படியானால் போதைதான் குற்றங்களுக்கு அடிப்படையான காரணமாக மாறிக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழும் போதும் அதை முற்றாக நிராகரிக்க முடிவதில்லை. கல்வி முறையில் ஒழுக்க நெறிகள் போதிக்கப்படுவதில்லை என்பதில் தொடங்கி இளைஞர்களுக்கு சரியான தொழில்கள் அமைவதில்லை, வேலை இல்லை, எளிதில் கிடைக்கும் போதை வஸ்துக்கள் என சமூகக் குற்றங்களுக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த ஒவ்வொரு காரணத்திலும் குற்றவாளியாக அரசாங்கம்தான் பல்லிளிக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

கொல்வதற்கு முன்னால் கொலைகாரனுக்கு கிடைக்கும் துணிச்சல் போதையின் வழியாகக் கிடைக்கிறது அல்லது கொல்வதற்கு தேவையான மடத்தனத்தை போதை கொடுக்கிறது என்றால் அந்த போதையை சமூகத்திற்கு வெற்றிகரமாக கொடுத்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தைதான் குற்றவாளி ஆக்க வேண்டும். குடிப்பதை ஒரு சமூகத்தின் கலாச்சாரமாக்கிக் கொண்டிருக்கின்றன இந்த அரசாங்கங்கள். சில காலத்திற்கு முன்பாக  ‘குடிகாரன்’ என்பது ஒருவனை அவமானப்படுத்துவதற்கான குறிச்சொல். இப்பொழுது அதுவே ஒருவன் தன்னை ‘கெத்து’ ஆனவனாகக் காட்டிக் கொள்ளுவதற்கான சொல்லாக மாறியிருக்கிறது. சமூகத்தின் அடையாளங்களை இந்த மதுபானக் கடைகள் மாற்றிக் கொண்டிருக்கின்றன. வீதிக்கு வீதி முதுபானக் கடைகளைத் திறந்து வைத்திருக்கும் அரசை நோக்கி துப்பாக்கியை நீட்ட வேண்டியதில்லை குறைந்தபட்சம் விரல்களையாவது நீட்ட வேண்டிய காலம் இது. 

ஆல்வின் சுதனின் கொலைகாரர்களை சுட்டுக் கொன்றது சரியா தவறா என்பதற்காக இந்தக் குறிப்பை எழுதவில்லை.

சமூகத்தின் பெரும்பாலான குற்றங்களின் முகங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன என்பதை கவனிக்கத் தவறிக் கொண்டிருக்கிறோம். இனியும் கவனிக்காமல் விட்டால் மிகக் கொடூரமான சூழலுக்கு நம் சமூகம் தள்ளப்ப்பட்டுவிடும். இப்பொழுதே மனிதாபிமானம் என்ற சரடு அறுந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. யாருக்கும் யார் மீதும் அன்போ அக்கறையோ இல்லாத சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாரை வேண்டுமானாலும் ஒரு கேள்வி கூட கேட்காமல் அடித்துக் கொல்லும் ஒரு வறண்ட சமூகம் இது. 

ஒவ்வொரு கொலையிலும் ஒருவனைக் கொல்வதற்கு ஏதோ ஒரு காரணம் போதுமானதாக இருக்கிறது. கள்ளக்காதல், கொலைகாரன், வன்புணர்ச்சியாளன், தப்பித்து ஓடினான், போலீஸைத் தாக்கினான், பொதுமக்களைக் கொன்றான் இப்படி ஏதோ ஒரு காரணம் கிடைத்துவிடும்.

ஒருவனைக் கொல்வதற்கு ஏதோ ஒரு ஆயுதம் போதுமானதாக இருக்கிறது. அரிவாள், கத்தி, பாறாங்கல், துப்பாக்கி என ஏதோ ஒன்று கிடைத்துவிடுகிறது.

ஒருவனைக் கொன்றபிறகு டைம்பாஸூக்கு தேவையான செய்தி ஒன்று நமக்கு கிடைத்துவிடுகிறது. இது சைக்கிள். இந்தச் செய்தியை மறந்த பிறகு வேறொரு கொலை, பதில் கொலை, செய்தி, டைம்பாஸ் என இந்த சைக்கிள் சுற்றிக் கொண்டேயிருக்கும்.

ஆனால் பிரச்சினை ஒருவனைக் கொல்வதில் இல்லை என்பதை நாம் ஒருபோதும் புரிந்து கொள்ளப்போவதில்லை. சமூகத்தின் அடிப்படையான சிக்கல்களைக் களையாமல் குற்றவாளிகளையெல்லாம் கொல்ல வேண்டுமானால் இருக்கும் அத்தனை தொழிற்சாலைகளையும் துப்பாக்கித் தொழிற்சாலைகளாக மாற்ற வேண்டியிருக்கும். போலீஸ்துறையில் என்கவுண்ட்டர் டிபார்ட்மெண்ட் என்று தொடங்க வேண்டியிருக்கும். வெள்ளைத்துரைக்கும், சைலேந்திரபாபுவுக்கும் எப்பொழுதும் வேலை இருந்து கொண்டேயிருக்கும்.

Nov 22, 2012

செத்தாண்டா கசாப்


ஒரு மனிதனை தூக்கிலிட்டு கொன்றிருப்பது ஒட்டுமொத்த சமூகத்தையும் குதூகலிக்கச் செய்திருக்கிறது. பட்டாசுகளும் கொண்டாட்டங்களும் டிவிக்களிலும், செய்தித்தாள்களிலும் முக்கியமான இடத்தை பிடித்துவிட்டன. பெருநகரங்களின் வீதிகளில் இனிப்பை வாரி வழங்கியிருக்கிறார்கள். ஒரு அசுரன் அழிக்கப்பட்டதாக மக்கள் கொண்டாடி களைத்திருக்கிறார்கள்.

இன்றைய இந்தியாவின் குல்லா போட்ட குட்டி காந்தியார் அண்ணா ஹசாரே அவர்கள் கசாப்பை பொது இடத்தில் தூக்கிலிட்டிருக்க வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். குட்டி காந்தியாக உலவினாலும் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், இரத்தத்துக்கு ரத்தம் என்பதில் உறுதியாக இருக்கிறார். நல்லவேளையாக அரசே கசாப்பை தூக்கில் போட்டுவிட்டது. இவரிடம் கொடுத்திருந்தால் தனது பற்களால் அவனது நெஞ்சைப் பிளந்திருப்பார் போலிருக்கிறது. இத்தகைய ஆவேசத்தினாலும் தேசப்பற்றினாலும்தான் இந்தியாவிலிருந்து ஊழலை முற்றுமாக ஒழித்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களின் தேசப்பற்றை அணைந்துவிடாமல் காக்கும் அரசுதான் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியம். ஆனால் நமது ஆட்சியாளர்கள் ஒரு படி மேலே போய் அணைந்து கொண்டிருந்த தேசப்பற்றை ஊதிவிட்டிருக்கிறார்கள். இப்பொழுது அது கொழுந்துவிட்டு எரிகிறது. மக்களுக்கு கிளம்பியிருக்கும் வெறியைப் பார்த்தால் ஆளுக்கு ஒரு கருங்கல்லை தூக்கிக் கொண்டு பாகிஸ்தான் மீது போருக்குச் செல்லத் தயாராக இருப்பார்கள் போலிருக்கிறது. நேற்று ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் மூவர்ணத்தில் புகை வந்து கொண்டிருந்தது. இவ்வளவு உணர்ச்சிகரமான தேசப்பற்று எப்பொழுதாவதுதான் வெளியில் தெரிகிறது. குறிப்பாகச் சொன்னால் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியில் வெளிப்படுகிறது அல்லது  பாகிஸ்தான் தீவிரவாதியை தூக்கில் போடும் போது வீதியில் பெருக்கெடுக்கிறது.

பெரும்பாலான அல்லது கிட்டத்தட்ட அத்தனை அரசியல் கட்சிகளும் அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றிருக்கின்றன. இந்த வரவேற்பில் வாக்கு வங்கி அரசியல் பிரதான இடம் பிடித்திருக்கிறது என்று யாராவது சொன்னால் அவரை அழைத்து வாருங்கள். அவரது முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட வேண்டும். இந்தத் தண்டனையை எதிர்த்து பேசும் கயவாளிகள், கருங்காலிகளையெல்லாம் வரிசையாக நிறுத்தி வைத்துச் சுட்டுவிடலாம்.  ஒரு தேசத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதைவிடவும் ஆட்சியாளர்களுக்கு வேறு என்ன பெருமை கிடைத்துவிடப் போகிறது? அதைத்தான் இப்பொழுது செய்திருக்கிறார்கள். Sweet surprise.

பால்தாக்கரே மரணம், அதற்கான பந்த், பெருகும் வேலையில்லாத்திண்டாட்டம், சரியும் பொருளாதாரம் என இந்த தேசமே சோகங்களிலும் சிக்கல்களிலும் தத்தளித்து கொண்டிருக்க, குஜராத் தேர்தல் வேறு கழுத்தை நெரிக்கத் துவங்கியிருக்கிறது. இது அத்தனையிலிருந்தும் மக்களுக்கு சரியான நேரத்தில் Relaxation கொடுத்திருக்கும் அரசுக்கான முழு ஆதரவாளனாக மாறிவிட விரும்புகிறேன்.

கசாப்பை ஏவிவிட்டவர்கள் இந்த தூக்குதண்டனையின் காரணமாக பயத்தில் காலோடு சிறுநீர் கழித்திருப்பார்கள் என நம்பலாம். இனிமேல் அடங்கி ஒடுங்கிக் கிடப்பார்கள். நம்மால் கசாப் அநியாயமாக செத்துவிட்டானே என மனசாட்சி உறுத்த சயனைடு குப்பியைக் கடித்தோ அல்லது தூக்கு மாட்டிக் கொண்டோ அவர்கள் செத்துப்போனால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

எல்லை தாண்டிய பயங்கரவாதிகளும், இந்தியாவிற்குள் ஊடுருவியிருக்கும் தீவிரவாதிகளும் துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் தூக்கி வீசிவிட்டு பெட்டிக்கடை வைப்பதற்கும்,  புரோட்டா மாவு பிசையும் வேலைக்கும் போய்விடுவார்கள். இனி எந்த ஒரு தீவிரவாதியையும் யாராலும் மூளைச்சலவை செய்துவிட முடியாது. காலத்தால் அழிக்க முடியாத காவியமாக இடம்பெற்றுவிட்ட இந்த தண்டனை ஒவ்வொரு தீவிரவாதிக்கும் ஒரு பாடமாக இருக்கும். ஏ.கே 47 இல்லை சாதாரண தண்ணீர் துப்பாக்கியைக் கூட இனி தொட மாட்டார்கள். இனி குண்டு வெடிப்பில்லாத, தீவிரவாதிகள் இல்லாத, சாந்தி நிலவும் ஒரு நாட்டில் வாழப்போகிறேன் என்பதை நினைத்து ஆனந்தக் கூத்தாடுகிறேன்.

கசாப்பால் சுடப்பட்ட மனிதர்களின் குடும்பத்தாருக்கு நீதி வழங்கப்பட்டுவிட்டது என ஒபாமாவின் வார்த்தைகளை ப.சிதம்பரம் ரிபீட் அடித்திருக்கிறார். இந்தியாவில் இன்றைக்கு இருக்கும் மிகச் சிறந்த அறிவாளிகளில் ஒருவரான ப.சி சொல்வதற்கு எதிர்பேச்சு பேசும் அருகதை யாருக்கும் இல்லை என நம்புகிறேன். இனி அந்தக் குடும்பங்களின் அத்தனை பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். அவர்களின் பொருளாதாரப்பிரச்சினைகள், அன்பிற்குரியவனை இழந்ததற்கான பதிலீடு என அத்தனைக்கும் இந்த ஒரு மரண தண்டனை பதிலளித்திருக்கிறது.

இந்த தூக்கு தண்டனைக்கு எதிரான எந்தக்கருத்தையும் நான் முன் வைக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும். பெரும்பாலானாவர்களின் விருப்பம் என்னவோ அதுவேதான் என் விருப்பமும். இந்த தேசமக்கள் எதற்காக குரல் கொடுக்கிறார்களோ அதை ஏற்றுக் கொள்கிறேன். தேசத் துரோகியாகவோ அல்லது இந்திய இறையாண்மைக்கு எதிரானவனாகவோ ஒரு போதும் இருக்கவிரும்பவில்லை.

ஜெய்ஹிந்த்!

Oct 30, 2012

விஜயகாந்த்- நாயகனா?காமெடியனா?



ஏழாம் வகுப்பு குடிமையியல் பாடத்தில் இந்தியா பலகட்சி ஆட்சிமுறையுடைய நாடு என்று குறிப்பு வரும். அதைத் தொடர்ந்து பல கட்சி X இரு கட்சி ஆட்சிமுறைகளுக்கு இடையிலான நிறை குறைகளை பற்றிய குறிப்புகள். மனப்பாடம் செய்து தேர்வு எழுத வேண்டும். பல கட்சி ஆட்சிமுறையில் இரண்டு கட்சிகளையும் பிடிக்கவில்லையென்றால் தூக்கியெறிந்துவிட்டு மூன்றாவது கட்சிக்கு வாய்ப்பளிக்கமுடியும் என்று யாரோ ஒரு புண்ணியவான் எழுதி வைத்திருந்தார்.  

அந்தக்காலத்திலிருந்து தமிழகத்தில் மூன்றாவது கட்சி ஆட்சியைப் பிடித்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். தகுதியிருக்கிறதோ இல்லையோ கருணாநிதி,ஜெ. தவிர இன்னொரு முதலமைச்சர் வர வேண்டும் என்று விரும்பியதுண்டு. அயோக்கியகனாக இருந்தாலும் கூட பரவாயில்லை- இவர்கள் இருவரையும் தவிர்த்த முகம் ஒன்றைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டு.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் வை.கோபால்சாமி முதல்வராகிவிடுவார் என நம்பினேன். கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் போன்ற திமுகவின் பில்லர்களோடு வெளியேறிய வைகோ மதிமுக வைத் தொடங்கியபோதும், வீரபாண்டி ஆறுமுகம் கூட அவரோடு போகப்போகிறார் என்ற செய்திகள் பரவியபோதும் கலைஞரே கூட அப்படித்தான் நம்பியிருப்பார். ஆனால் கலைஞரின் பகடையாட்டத்தில் வைகோவின் தளபதிகள் வெட்டி சாய்க்கப்பட்டபோதும் அவர்களின் சாயங்கள் மாற்றப்பட்டபோதும், வைகோவின் தவறான அரசியல் முடிவுகளாலும் நம்பிக்கைகள் தளர்ந்து போனது. 

இடையிடையே மூப்பனார், ப.சிதம்பரம், ரஜினிகாந்த் என்ற டெம்பரரி கனவுக்கண்ணன்கள் ’மூன்றாவது முகம்’ ஆசையின் திரியை அரை இன்ச்சுக்கோ அல்லது ஐந்தரை இன்ச்சுக்கோ அவரவர் தகுதிக்கு ஏற்ப தூண்டிவிட்டார்கள். இரு துருவங்களைத் தாண்டி தமிழக அரசியலில் துரும்பைக் கூட அசைக்க முடியாது என்பது தூண்டிவிட்டவர்களுக்கு தெரிந்திருக்கும் போல. தங்களின் விரலை கமுக்கமாக உள்ளே இழுத்துக்கொண்டார்கள்.

இரண்டாயிரத்தைந்தில் விஜயகாந்த் என்ற கருப்புக்காந்தம் தமிழகத்தின் மூன்றாவது இயக்கத்திற்கான வெற்றிடத்தை நிரப்பிவிடும் என்று விகடன் போன்ற ஜாம்பவான்களின் தூபத்தில் சொக்கிப்போயிருந்தது உண்மைதான். விஜயகாந்த் என்ற பலூன் ஊதப்பட்டுக்கொண்டிருந்தது. அவரும் பெரியாரிசத்தில் ஆரம்பித்து அம்பேத்கரிசம் ராஜாஜியிசம் அண்ணாயிசம் என கலந்து அடித்து ரசம் ஊற்றிக் கொண்டிருந்தார். அவரது ‘தான்’ என்ற ஈகோ ஊதப்பட்ட பலூனுக்கு ஏற்ற ஊசியாக மாறிக் கொண்டிருந்ததை அவர் கவனிக்காமல் விட்டிருப்பது அவருக்கு கெட்டநேரம் தமிழகத்திற்கு நல்லநேரம். 

ஜெயலலிதா ஊடகவியலாளர்களை சந்திப்பதேயில்லை என்பதால் பகையாளிகளை 'நேரடியாக’ சம்பாதித்துக் கொண்டதில்லை. கலைஞரை எத்தனை டென்ஷனாக்கினாலும் சமாளித்துவிடுவார் என்று கேள்விப்பட்டதுண்டு. விஜயகாந்த் பாய்ந்து விழுந்திருக்கிறார். விஜயகாந்தின் கோட்டைக்கனவுகளின் செங்கற்களான எம்.எல்.ஏக்களை ஒவ்வொன்றாக ஜெயலலிதா உருவிக் கொண்டிருந்த சமயத்தில் அவரது ஜெயா டிவியின் நிருபர் விஜயகாந்த்தின் முன்பாக மைக்கை நீட்டியிருக்கிறார். 

இழவு விழுந்துகொண்டிருக்கும் வீட்டில் பேட்டி வேண்டும் என்று மைக்கை நீட்டினால் கோபம் வரும்தான். ஆனால் கேள்விகேட்பவர் யார் என்று பார்த்திருக்க வேண்டாமா? அவர் மைக்கை நீட்டுவதில் இருக்கும் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் ’நாய்’ என்று விஜயகாந்த் திட்டியதை படம்பிடித்து 24x7 இல் வீட்டு வரவேற்பறைக்கு கொண்டுவந்துவிட்டார்கள். 

குடிகாரன், வேட்பாளரை அடிக்கிறார் போன்ற குற்றச்சாட்டுகளை மீறி அவரை எதிர்கட்சித்தலைவராக்கியதற்கு விஜயகாந்த் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைதான் காரணம் என்று நம்பினால் அதைப்போன்ற முட்டாள்த்தனம் வேறு இருக்க முடியாது. ஆனால் மக்கள் கொடுத்த வாய்ப்பை விஜயகாந்த் பயன்படுத்திக் கொண்டாரா என்பதும் அவரை இயங்கவிடாமல் ஆளுங்கட்சி ஆடும் சூதாட்டத்தில்  வெற்றிபெறாவிட்டாலும் பரவாயில்லை- குறைந்தபட்சம் தோல்வியை தவிர்க்கவாவது முயல்கிறாரா என்பதும் முக்கியமான கேள்விகள். 

ஜெ. ஆரம்பித்திருக்கும் நாடகத்தை தான் முடிக்கப்போவதாக சொல்லிக் கொண்டு முதலமைச்சரைச் சந்திக்க அனுமதி கேட்டு சபாநாயகரிடம் மனு கொடுத்திருக்கிறார் விஜயகாந்த். தமிழகத்தின் கடந்த கால்நூற்றாண்டு வரலாற்றில் கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான் சீரியஸாக நாடகம் நடத்தியிருக்கிறார்கள். மற்றவர்களின் சீரியஸ் நாடகங்களை காமெடி நாடகங்களாக மாற்றிவிடுவதில் அவர்கள் இரண்டு பேரும் வித்தகர்கள். விஜயகாந்த் இன்னமும் தன்னை ஹீரோவாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். காமெடியனாக மாறிவிடாமல் இருக்க வாழ்த்துச் சொல்ல மட்டும்தான் முடியும். முடிந்தால் ‘மூன்றாவது முக’த்திற்கான நம்பிக்கையை அணைந்துவிடாமல் காப்பாற்றுங்கள் என்றும் வேண்டிக் கொள்ளலாம்.

Oct 27, 2012

சின்மயி செய்தது மட்டும் சரியா?


சின்மயி அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ராஜன் குறித்தான செய்திகள் இதுவரை வெளிவரவில்லை. விசாரணை என்ற பெயரில் அவரை துன்புறுத்த மாட்டார்கள் என நம்புகிறேன். ஆனால் இது வெறுமனே நம்பிக்கையாக மட்டுமே இருக்கக் கூடும் என்று தெரியும். ஊடகச் சுதந்திரம் என்பதெல்லாம் நம் காலத்தில் வெறும் பம்மாத்து. சாமனியனின் குரல்வளையின் மீது அதிகாரத்தின் ஆணவக் கரங்கள்  இன்னும் ஒருமுறை அழுத்தம் கொடுத்திருக்கிறது. அவ்வளவுதான்.

மீனவர் பிரச்சினை, இடஒதுக்கீடு ஆகியவற்றில் சின்மயியின் so called அபிப்பிராயங்கள் அவருக்கான கருத்துச் சுதந்திரம் என்று சொல்லும் அவரது ஆதரவாளர்களின் வாதங்களை ஏற்றுக் கொள்கிறேன். அதே சமயம் அவரது கருத்துக்கள் ஒரு சாமானியனின் உணர்வுகளை சீண்டக் கூடிய தன்மயைக் கொண்டிருக்கின்றன என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மீனவர் பிரச்சினையிலும், இட ஒதுக்கீட்டுப்பிரச்சினையிலும் போகிற போக்கில் தத்துவ முத்துக்களை உதிர்த்து போகும் சின்மயி அதற்கான எதிர்வினைகளை எதிர்கொள்ள கொள்ள முடியாமல் காவல்துறையினரை அணுகுவது எந்த விதத்தில் நியாயம் ஆகும்? 

ஐம்பது பைசா பெட்ரோல் உயர்வுக்கு வசைமாரி பொழியும் சமூகத்தில்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? காலங்காலமாக நசுக்கப்பட்டு வந்த இனத்தின் பிரச்சினைகளைப் பற்றி எந்தப் புரிதலுமில்லாமல் கருத்துக்களைச் சொல்லும் போது வரக்கூடிய விமர்சனங்கள் நிச்சயம் கடுமையானதாகத்தானே இருக்கும்? சமூக வலைத்தளங்களில் இலட்சக்கணக்கானோர் பின்தொடரும் சின்மயி போன்ற பிரபலங்கள் எதையாவது உளறிக் கொட்டினால் எல்லோரும் அமைதியாக பார்த்துக் கொண்டு போய்விடுவார்கள் என்று சின்மயி நம்புவது எவ்வளவு அபத்தம்? தன் பொறுப்பற்ற தன்மை பற்றிய எந்த வருத்தமும் அல்லது குற்றவுணர்ச்சியும் இல்லாமல் அடுத்தவர்களைக் கை காட்டியிருக்கிறார் சின்மயி.

ராஜன் தன்னை எந்த இடத்திலும் அறிவுஜீவியாகவோ அல்லது மெத்தப் படித்த மேதாவியாகவோ  நினைத்து பேசியதாக ஞாபகமில்லை. டீக்கடையில் பேப்பர் செய்திக்கு கருத்துச் சொல்பவர் அல்லது சலூனில் கிடைக்கும் நேரத்தில் நிகழ்கால நிகழ்வுகளை விமர்சிக்கும் சாமானிய மக்களின் பிரதிநிதியாகவே தன்னை உருவகப்படுத்திக் கொண்டவர். அரசியல், சமூகப்பிரச்சினைகளில் நேரடியாக சலனமுறும் சாமானிய மனிதனின் கருத்துக்கள் எப்படியிருக்குமோ அதே மாதிரியானவை என்ற கோணத்தில் ராஜனின் எதிர்வினைகளை புரிந்துகொள்கிறேன்.

ராஜனின் கருத்துக்கள் பாலியல் ரீதியான வன்முறை அல்லது செக்ஸிஸ்ட்டின் தாக்குதல் என்றும் அவரை தண்டிக்க வேண்டும் என வாதிடும் சின்மயியின் ஆதரவாளர்கள் சின்மயி நிகழ்த்திய சமூகத்தின் மீதான தாக்குதலைப் பற்றி வாய் திறப்பதில்லை என்பது வருத்தத்திற்குரியது. 

சின்மயியின் கருத்துக்களுக்கு எதிர்வினையாக ஆபாச கருத்துக்களை வெளியிட்டவனை தண்டிக்கவே கூடாதா என்ற கேள்வி வரலாம். தண்டிக்கலாம். ஆனால் குற்றங்கள் முழுமையாக நிரூபிக்கப்படட்டும். விசாரணைக்கு இருதரப்பினரும் உட்படுத்தப்பட வேண்டும். குற்றம் செய்தவன் எதற்காக குற்றம் செய்தான் என்று ஆராயட்டும். குற்றவாளியைவிடவும் அவனைத் தூண்டியவனுக்கான தண்டனைகள் அதிகம் இருக்க வேண்டும் என்று பேசும் நாம் அதை இந்த வழக்கில் எதிர்பார்ப்போம்.

இணையதளங்களில் நிகழ்த்தப்படும் பெண்களின் மீதான பாலியல் தாக்குதல்கள் தனது விவகாரத்தின் மூலமாக முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று ஒரு பண்பலை நிகழ்ச்சியில் சின்மயி பேசினாராம்.எனக்கு அப்படித் தோன்றவில்லை. அதிகாரமட்டத்தின் தொடர்புகளும், சமூக அந்தஸ்தும் இருந்தால் யாரை வேண்டுமானாலும் கம்பிக்கு பின்னால் தள்ளலாம் என்பது மீண்டும் அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் ஒருவன் பாலியல் ரீதியான தாக்குதலை நிகழ்த்திவிட்டான் என்று சில ஸ்கீரின் ஷாட்களை வைத்துக் கொண்டு பிரபலமான சின்மயி புகார் அளித்திருப்பதாலேயே ஒருவனைக் குற்றவாளி என்று முடிவு செய்து விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அடைத்து வைத்திருப்பது டூ மச். ப்ளீஸ் அவரை வெளியே விடுங்கள்.

Sep 20, 2012

ராஜபக்‌ஷே, ப்ளீஸ் வெளியே போ



மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் புத்த பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்ட ராஜபக்‌ஷேவை அழைத்திருக்கிறார்கள். புத்தனுக்கும் ராஜபக்‌ஷேவுக்கும் என்ன சம்பந்தம்? எந்தத் தகுதியின் அடிப்படையில் சிங்களத்து கோமகனை அழைத்திருக்கிறார்கள்? கோமகனாக இருந்தாலும் அந்த மனிதன் கொலைகாரன் தானே?.  

இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இனவெறி இராணுவத்திற்கு உத்தரவிட்ட அதிபர் ராஜபக்க்ஷே. ஒவ்வொரு சுண்டுவிரல் அசைவிலும் ஓராயிரம் பேரையாவது கருக்கிய அயோக்கியத் தனத்தை செய்தவர். தமிழ் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு குழந்தைகளின் உடல்கள் இலங்கையின் தெருக்களில் சிதறவிடப்பட்டுக் கொண்டிருந்த போது முகம் நிறைய பவுடரும் வாய் நிறைய புன்னகையுமாக நிழற்படங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தவர்.

ஐரோப்பிய நாடுகளில் கால் வைத்த இடங்களில் எல்லாம் எதிர்ப்பின் உஷ்ணம் தாளாமல் தலையில் துண்டு போட்டுக் கொண்டு ஓடி வந்தவரை இந்த தேசம் மட்டும் ஏன் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கிறது? போர்க்குற்றவாளி என அறிவிக்க உலகத் தமிழர்களோடு சேர்ந்து சில நாடுகள் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்க என்ன காரணத்திற்காக இந்த மனிதனை இந்தியா காப்பாற்றுகிறது?

இந்தக் கேள்விகள் இயல்பாக எழக் கூடிய கேள்விகள். காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அரசியல் காரணங்கள். காரணங்கள் இருக்கட்டும். அதிகார வர்க்கம் அப்படித்தான். ஆனால் சொந்த இனத்தை வெட்டிக் கொன்றவன் நம் வீட்டிற்குள் காலடி வைத்தால் அதை ஏற்றுக் கொண்டு சமாதானமாக போவோம் என்பது மடத்தனம் இல்லையா? குறைந்தபட்ச எதிர்ப்புணர்வையாவது காட்டுவதுதானே சரியாக இருக்கும்?

இத்தகைய ராஜபக்‌ஷேவை இந்தியாவிற்குள் அனுமதித்தால் என்ன தவறு என்ற ரீதியில் சில கருத்துக்களை பார்க்க வேண்டியிருப்பதுதான் வேதனையாக இருக்கிறது.

நம் சகோதரன்- அவன் எத்தகைய குற்றம் செய்தவனாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே- அவனை நேர்மையற்ற முறையில் ஒருவன் கொன்றிருந்தால் அந்தக்கொலைகாரனை எந்தக் காலத்திலாவது நம்மால் மன்னிக்க முடியுமா? அதே நிலைப்பாடுதானே ராஜபக்‌ஷே மீதும் இருக்க வேண்டும். 

இந்த நேரத்தில் ராஜபக்‌ஷேவிற்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு படையைத் திரட்டிக் கொண்டு மத்திய பிரதேசத்தில் முகாமிட்டிருக்கும் அர்பணிப்பு உணர்விற்காக  வைகோவை பாராட்ட வேண்டும். இந்த எதிர்ப்புணர்வும் இல்லையென்றால் நூறு கோடி மக்கள் வாழும் தேசத்தில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் வந்து சென்றான் ஒரு கொலைகாரன் என்ற பெருமையோடு ராஜபக்‌ஷே திரும்பியிருக்கக் கூடும்.

அதிகார வர்க்கத்தின் ஊதுகுழல் ஊடகங்கள் வைகோவின் போராட்டத்தையும் எதிர்ப்பையும் புறக்கணிக்கின்றன. மத்தியப்பிரதேச அரசு வைகோவை சாஞ்சி நகரை நோக்கிச் செல்ல அனுமதிக்க மறுக்கிறது. நள்ளிரவில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து சாலையில் அமர்ந்து தர்ணா நடத்துகிறார்கள் வைகோவும் அவரது தொண்டர்களும். விடியும் வரை தொடர்ந்து கொண்டிருக்கும் தர்ணாவிற்கு பிறகும் அனுமதியில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். கைது செய்துவிடக் கூடும். அது பிரச்சினை இல்லை. எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். 

இந்த எதிர்ப்புணர்வு தமிழர்கள் அனைவரிடமும் எதிரொலித்திருக்க வேண்டும். இங்கிலாந்தில் துரத்தப்பட்டத்தைப் போல ராஜபக்‌ஷே துரத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழனின் விதி- நிலக்கரி ஊழலும், டீசல் விலையுயர்வும், விநாயகர் சதுர்த்தியும், பாரத் பந்த்தும், அரசியல் பாகுபாடுகளும் அவனை தொடர்ந்து அலைகழித்துக் கொண்டிருக்கின்றன. இடையில் சுந்தர பாண்டியன் படம் வேறு. இத்தனை பிரச்சினைகளையும் தாண்டி ஈழத்தை எங்கே நினைக்கப்போகிறோம்.

தமிழர்களின் பிரதிநிதியாக ராஜபக்‌ஷேவின் வருகையை எதிர்க்க மத்தியப்பிரதேசத்தில் போராடிக் கொண்டிருக்கும் வைகோவிற்கு அவரது தொண்டர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

Sep 11, 2012

பாஸ்!அணு ஆற்றல் ரொம்ப அவசியம்


கூடங்குளம் கலவர பூமியாக மாறியிருக்கிறது. அரசுக்கு ஆதரவளிக்கு ஊடகங்கள் பிரச்சினையை ஒரு திசையில் அணுகுகின்றன. அணு உலை எதிர்ப்பாளர்களை ஆதரிக்கும் ஊடகங்களும், சமூக ஊடகங்களில் இயங்கும் தனிமனிதர்களும் அணு உலையை வேறு மாதிரியாக அணுகுகிறார்கள். அடிப்படையில் இந்தப்பிரச்சினை பன்முகத் தன்மையுடையது. தனிமனிதனால் இதன் முழுப்பரிமாணத்தையும் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றவில்லை. 

இந்த பிரச்சினையின் துவக்கப்புள்ளி ஒற்றைச் சொல்தான். அது "வளர்ச்சி" . இந்தச் சொல் மட்டுமே முதலாளித்துவ அரசுகளின் முழு சிந்தனையாக இருக்கிறது. தேசம் முழுவதும் தொழிற்சாலைகளும், வணிகவளாகங்களும் நிரம்பி வழிய வேண்டும் என்னும் முதலாளிகளின் ஆசைகளை பூர்த்தி செய்ய விரும்பும் அரசுக்கு மின் சக்தி அடிப்படைத் தேவையாகியிருக்கிறது. உண்மையில் இது அரசின் ஆசை மட்டுமில்லை. ஆறு இலக்க சம்பளமும், அதிநவீன வாழ்க்கை முறையும் வேண்டும் என விரும்பும் ஒவ்வொரு குடிமகனின் ஆசை.  இந்த ஆசை கொழுந்துவிட்டு எரிய "மின்சாரம்" தேவை. 

பெரிய பிரச்சினை எதுவும் இல்லாமல் மின்சாரம் தயாரிக்க வேண்டுமானால் நீர் மின்சாரம் ஒரு வரப்பிரசாதம். ஆனால் தேவைக்கும் வளர்ச்சி வேகத்திற்கும் அதனால் ஈடுகொடுக்க முடிவதில்லை. நீர் நிலைகளில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு குறையக் குறைய அனல்மின்சாரம் தயாரிக்க நிலக்கரியையும் இயற்கை எரிவாயுவையும் எரிப்பது அதிகரிக்கிறது. எரிக்கப்படும் நிலக்கரி வெளியிடும் மாசுகலந்த வாயுக்களும் வெப்பநிலையும் 'க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட்' என்னும் புவிவெப்பமயமாதலுக்கு தீனி போடுகின்றன. புவிவெப்பமயமாதலைத் தடுத்தாக வேண்டிய கட்டாயமும் அரசுக்கு உருவாகிறது.

பாம்பும் சாகக் கூடாது தடியும் முறியக் கூடாது. அடுத்த வழி? பெருகிவரும் மின் தேவைகளுக்கு மாற்றாக அணு ஆற்றலை அரசு முன்வைக்கிறது. அணு ஆற்றல் தயாரிப்பதற்கு தேவையான உலைகளும், உபகரணங்களும் மிக அதிக அளவிலான முதலீடு கோருபவை. இருப்பினும் அரசாங்கங்கள் இதை முன்னெடுக்க சில காரணங்கள் உண்டு. குறைந்த அளவிலான அணு எரிபொருள் போதுமானது, மிக அதிக அளவிலான மின்சாரம் தயாரிக்க முடியும் என்பன சில. இவை விஞ்ஞானப்பூர்வமான காரணங்கள். அரசியல் ரீதியான காரணங்களும் பின்ணணியில் இருக்கக் கூடும். அது உலக நாடுகள் தரக்கூடிய அழுத்தம், இந்த அணு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்காக அதிகார வர்க்கத்தின் மட்டத்தில்  பரிமாறிக்கொள்ளப்படும் இலஞ்சம் என்பவை சில காரணங்களாக இருக்கலாம்.

"அணு ஆற்றல் வேண்டாம்" வேண்டும் என்று குரல் எழுப்புவதற்கு உலகம் முழுவதுமே ஆட்கள் உண்டு. அவர்கள் சில வாதங்களை முன்வைக்கிறார்கள். அணு ஆற்றலை தவிர்த்து காற்றாலை, சூரியவெளிச்சம் போன்ற மாற்று எரிபொருட்களை பயன்படுத்தலாம் என்பதும், தற்போதைய மின் இழப்பை தவிர்ப்பது, மின் திருட்டை தடுப்பது போன்ற செயல்களின் மூலம் மின் தேவையை சரிகட்டலாம் போன்றவை அவற்றில் சில. 

ஆய்வுப்பூர்வமாக விவாதித்தால் அணு ஆற்றலுக்கான இணையான மாற்று என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சோலார், காற்றாலை போன்றவை தற்போதையை மின்தேவையை பூர்த்தி செய்வதற்கு உதவலாம். ஆனால் "வளர்ச்சி" என்ற மாயவலைக்குள் சிக்கியிருக்கும் உலகின் அகோரமான ஆற்றல் பசிக்கு இவையெல்லாம் சோளப்பொறிதான். இன்னும் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தேவை பன்மடங்கு அதிகரித்திருக்கும். மின் இழப்பை குறைப்பதும், மின் திருட்டை தடுப்பதும் (ஒருவேளை முழுமையாகச் செயல்படுத்தினால்) மட்டும் போதுமானதில்லை. எதிர்காலத்தில் தேவை அதிகரிக்கும் போது மாற்று ஆற்றலுக்கான வழியை கண்டுபிடித்தே தீரவேண்டும்.

மும்பை போன்ற பெருநகரங்களின் மின்தேவையை வருடக்கணக்கில் பூர்த்தி செய்ய சில அவுன்ஸ் யுரேனியம் போதுமானதாக இருக்கும். அதே சமயத்தில் தூத்துக்குடி போன்ற சிறு நகரத்தின் மின்தேவையை சில நாட்களுக்கு பூர்த்தி செய்வதற்கும் கூட பல சதுர மைல்களுக்கு 'சோலார் பேனல்கள்' அமைக்கப்பட வேண்டியிருக்கும். சோலார் தகடுகள் இத்தனை பெரிய பரப்பளவில் அமைப்பது மட்டும் பெரிய காரியமில்லை. அவற்றிற்கான பாதுகாப்பு? பராமரிப்புப்பணிகள்? ஆகவே அணு ஆற்றலுக்கு மாற்று என்ற வாதத்தை அறிவியல் ரீதியிலும் Practical ஆகவும் நிரூபிக்க முடியாது என நம்புகிறேன். 

அதே சமயம் கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது. அது  "பாதுகாப்பு". விபத்து என்று நிகழ்ந்துவிட்டால் இலட்சக்கணக்காணோரை காவு வாங்குவதுடன் கொள்ளுப்பேரன்களையும் கூட விட்டுவைக்காது. பிரதமரோ, முதலமைச்சரோ அல்லது மத்திய அமைச்சரோ வெளியிடும் அறிக்கைகளில் "கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது" என்ற பொதுவான அறிக்கையைத் தவிர்த்து "எப்படி" பாதுகாப்பானது என்பதை நிரூபிக்கும் முனைப்பு இல்லாதது வருத்தத்திற்குரியது. விபத்து நடக்காது என்றே நம்புவோம். ஒருவேளை விபத்து ஏற்படுமெனில் அதற்கான பொறுப்பு யாரைச் சாரும்?  போபால் விபத்தில் யூனியன் கார்பைடு 'கை கழுவி'விட்டு போனது போல ஒவ்வொருவரும் நழுவிவிட்டால் தமிழக அரசு தரும் மரணமடைந்தவர்களுக்கான 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கான ஐம்பதாயிரம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும்தான் நஷ்ட ஈடாக இருக்கும்.  

மேலும் அணு உலைக் கழிவுகளை என்ன செய்யப்போகிறார்கள்? அவை கடலோர மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் செய்யப்படும் என்பதை மாநில அரசு எவ்வாறு உறுதி செய்கிறது? போன்ற கேள்விகளுக்கான பதிலை வெளிப்படையாக அரசாங்க அறிவிக்க வேண்டுமே தவிர தடியடியும் துப்பாக்கிச் சூடும் நடத்தி கூடங்குளம் மக்களையும் அவர்களது உரிமைகளையும் கடற்கரை மணலில் புதைக்கக் கூடாது.

Apr 24, 2012

வருங்கால குடியரசுத்தலைவர் அப்துல்கலாம்: வாழ்த்துக்கள்



அப்துல்கலாமை மீண்டும் குடியரசுத்தலைவர் ஆக்க வேண்டும் என்ற குரல்கள் கேட்கத் துவங்கியிருக்கின்றன. தமிழர், விஞ்ஞானி, சிறுபான்மை சமூகத்தவர், குழந்தை நேசன் என்ற பல்வேறு முகமூடிகளை வெற்றிகரமாக அணிந்துகொண்டிருக்கும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதைத் தவிர வேறு எதைச் சொன்னாலும் உங்களை நோக்கி தேசத்துரோகி என்று குரல்கள் ஒலிக்கத் துவங்கலாம் என்பதனால் எதிர்ப்பதையெல்லாம் விட்டுவிட்டு இந்திய வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக தமிழனொருவன் குடியரசுத்தலைவர் ஆவதாக புளாங்கிதம் அடையலாம்; 2020 இல் இந்தியாவை வல்லரசாக்க துடிக்கும் விஞ்ஞானி மீண்டும் ஒருமுறை குழந்தைகளை வழிநடத்த வரவிருப்பதாக உற்சாகம் கொள்ளலாம் அல்லது எளிமையின் எவரெஸ்ட், கனவுகளால் கட்டப்பட்ட பிரம்மச்சாரி ஒருவர் மீண்டும் இந்த தேசத்தை கனவு காணச் சொல்ல வருகிறார் என விசில் அடிக்கலாம்.

அதேசமயம் பிரதீபா பாட்டிலுக்கு முன்பாக குடியரசுத்தலைவராக இருந்த அப்துல்கலாம் அந்த ஐந்து ஆண்டுகள் காலமும் என்ன சாதனைகளைச் செய்தார் என்ற கேள்வியை அப்துல்கலாமின் எதிர்ப்பாளர்கள் எழுப்பக்கூடும். அதற்கான பதிலை இந்தியவாத ஊடகங்கள் இன்னும் சில தினங்களில் கர்மசிரத்தையாக தங்களின் பக்கங்களில் கசியச் செய்வார்கள். வழவழப்பான தாளில் புன்னகை சிந்தப்போகும் அப்துல்கலாமின் படங்களுக்குக் கீழாக அவர் ஏவுகணை செலுத்தியதையும், பொக்ரானில் அணுகுண்டை வெடித்து பாகிஸ்தானுக்கு பராக்கு காட்டியதையும் எழுதி நம்மை மெய்சிலிர்க்கச் செய்வார்கள். 

தன் பதவிக்காலம் முடிந்த போது தன்னையே அடுத்த முறையும் குடியரசுத்தலைவர் ஆக்குவார்கள் என ஏங்கிக் கொண்டிருந்ததை நாசூக்காக மறைத்து தான் பதவிகள் மீது விருப்பமற்றவன் என்றும், ஏவுகணை செய்வதைவிடவும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு எடையற்ற செயற்கைக் கால்கள் செய்ததே தனது பெரும் சாதனை என்றும் தன் பிரதாபங்களை அடுக்கும் அப்துல்கலாமை சந்தேகிப்பவனை தெருவில் நிறுத்தி சுடுவதை விடவும் வேறு எந்த தண்டனை பொருத்தமானதாக இருக்க முடியும்?

இந்தச் சாதனையை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு அப்துல்கலாமின் பிற சாதனைகளைத் தேடினால் தன் பதவிக்காலம் முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகளைச் சந்தித்திருக்கிறார் என்பதனைத் தவிர வேறு எதுவும் ஞாபகத்தில் வந்து தொலைக்க மறுக்கிறது. 2002 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்த்தப்பட்ட குஜராத் படுகொலைகளுக்குப் பிறகாக அதே ஆண்டு ஜூலையில் ராஷ்டிரபதி பவனின் நாற்காலியை அலங்கரிக்கத் துவங்கிய அப்துல்கலாம் இந்தக் கலவரத்திற்கெதிராக அரசுக்கு என்ன அறிவுறுத்தல்களை மேற்கொண்டார் என்ற கேள்வியும் துருத்திக் கொண்டு நிற்கிறது. தனது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் இருந்து 18 கடல் மைல் தூரத்தில் கசக்கியெறியப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக குறைந்தபட்ச குரலையாவது உயர்த்தினாரா இந்தத் தமிழர் என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.

இந்துத்துவ தேசியவாத அமைப்புகள், ஒரு முஸ்லீம் இந்தியாவில் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகின்றனவோ அந்த எதிர்பார்ப்பிலிருந்து துளிபிசகாமல் வாழும், பகவத் கீதையை தினந்தோறும் வாசிக்கும் “இசுலாமியராக” இருப்பதைத் தவிர அப்துல்கலாமை ஆதரிக்க பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு காரணமும் வெளியில் தெரிய மறுக்கிறது. உத்தரப்பிரதேசத்திலும், மஹாராஷ்டிராவிலும் முஸ்லீம்கள் மற்றும் நடுத்தர மக்களின் வாக்குகளை பெறுவதற்கான ஆயுதமாக பயன்படுத்துவதைத் தவிர சமாஜ்வாடியின் முலாயம் சிங் யாதவக்கும், சரத்பவாருக்கும் அப்துல்கலாமின் வேறு எந்த சாதனைகள் கண்ணை உறுத்துகின்றன என்பதை அவர்கள் தெளிவுப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

தேசியவாதம் பேசிக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் இங்கு ஒரு முகத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த முகம் இந்த தேசத்தில் பெரும்பான்மையாக இருக்கும் படித்த, நடுத்தர மனோபாவத்திற்கு ’இந்திய ரத்தத்தை’ பாய்ச்சுவதற்கும், துப்பாக்கியில் நிரப்புவதற்கு ரவை தீர்ந்து கிடக்கும் இந்திய ராணுவத்தை உலகின் பெரும்பலம் வாய்ந்த ராணுவம் என பொய்யாக சித்தரிப்பதற்கும் உதவும் முகமாக இருக்க வேண்டும். அரசியல் கட்சியைச் சாராதவர் என்ற பிம்பம் அந்த முகத்திற்கு பொருத்தமானதாக இருக்கும். படித்த நடுத்தர மக்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பின் இன்னும் உசிதம். அதிர்ஷ்டவசமாக இந்த ஆட்சியாளர்களுக்கு அப்துல்கலாமின் முகம் ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது. 

குழந்தைகளிடம் கனவு காணச்சொல்லும் அப்துல்கலாம் இந்த நாட்டின் கல்விமுறைகளில் நிகழ்த்தப்பட வேண்டிய மாறுதல்கள் குறித்தான திட்டம் எதுவும் கொண்டிருக்கிறாரா என்பதும், கிராமப்புற குழந்தைகளின் மேம்பாட்டிற்கான என்ன திட்டங்களை முன்னெடுத்தார் என்பதும் பதில் இல்லாத வேறு சில கேள்விகள் என்றாலும் ஒரு தேசியவாதியின் செயல்பாடு குறித்து சந்தேகிப்பவர்களை பிரிவினைவாதி என்றோ கலகக்காரன் என்றோ உதாசீனப்படுத்திவிடலாம்.

அவர் குடியரசுத்தலைவராக இருந்த போதுதான் வடகிழக்கு மாநிலங்களில் அரசபயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டது என்பதும் மஹாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மாண்டு போனதும் ஞாபகத்திற்கு வருகிறது. 

குடியரசுத்தலைவருக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான பணிகள் மற்றும் ஆட்டோகிராப் வாங்கவும், கைகுலுக்கவும் காத்திருக்கும் இலட்சக்கணக்கான குழந்தைகளின் முகம் இத்தகைய ’சின்னச்சின்ன’ பிரச்சினைகளை அவரிடம் இருந்து மறைத்திருக்கக்கூடும் என்பதை நீங்களும் நானும் புரிந்துகொள்வதே பொருத்தமானதாக இருக்கும்.

குடியரசுத்தலைவராக இல்லாத போது அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானது என்று அத்தாட்சி வழங்குவதற்கும், அணுமின் நிலையங்களே இந்தியா வல்லரசாகுவதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள் என்ற பிம்பத்தை உருவாக்குவதற்கும் ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்ட அப்துல்கலாம் என்னும் ’விஞ்ஞானி’ அணுமின் நிலையங்களால் பாதிக்கப்படவிருக்கும் மக்களுக்கான மாற்றுவழிகள் எதையும் முன்வைக்க மறந்துபோயிருக்கிறார். ஆனால் நாம் கவலைப்பட வேண்டியதில்லை குடியரசுத்தலைவர் ஆனபிறகு ’மாற்றுவழிகள்’ பற்றிய கனவுகளைக் காண்பதற்கான வழிகளை நமக்குச் சொல்லித்தர காத்திருக்கிறார் வருங்கால வல்லரசின் வருங்கால மேதகு குடியரசுத்தலைவர்.

ஜெய் ஹிந்த்!


Mar 13, 2012

நீங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கடா!



ஐ.நாவின் மனித உரிமைகள் சபையில் ஸ்ரீலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்தான தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்திருக்கும் நிலையில் தீர்மானம் வெற்றிபெற்றால் மகிந்த ராஜபக்சேவும் அவரது சகாக்களும் சாகும் வரை தூக்கிலிடப்படக்கூடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். ஜெயலலிதாவும், கருணாநிதியும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கச் சொல்லி இந்திய அரசாங்கத்தை வலியுறுத்திய வேகத்தில் நான் இன்னும் கொஞ்சம் உற்சாகமடைந்து ராஜபக்சேவை எண்ணெய் கொப்பரையில் தலைகீழாகத் தொங்கவிட்டுவிடுவார்கள் என்று நம்பிவிட்டேன். 

நல்லவேளையாக அமெரிக்கா,சீனா, இந்திய வல்லரசுகள் ஒரு நாட்டின் அதிபரையோ அல்லது வேறு ஒரு அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியையோ தண்டிக்கும் அளவிற்கு கல்நெஞ்சம் படைத்தவைகள் அல்ல என்பது ஆறுதலான செய்தி. இத்தீர்மானத்தைச் சுற்றி நிகழும் களேபரங்கள், ஒரு குஞ்சுக்கோழியை நடுவில் வைத்துக் கொண்டு இரு பெரும் யானைகள் மோதிக்கொள்வதைப் போன்று ’பாவ்லா’ காட்டுவதான பிம்பத்தை உருவாக்குகிறது. இங்கே குஞ்சுக்கோழிகள் இலங்கையின் தமிழ் மக்கள்.

அமெரிக்காவின் இந்த ‘திடீர்’ செயல்பாட்டை ”சீனாவுடன் மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்காவின் மீதான அமெரிக்காவின் ராஜதந்திர நெருக்குதல்” என்று குறிப்பிடுகிறார்கள். சீனாவுடன் இலங்கை நெருங்குவதை பல வழிகளிலும் அமெரிக்கா தடுத்து பார்த்தது. ஆனால் இலங்கை ஒருபோதும் அமெரிக்காவின் எதிர்ப்பினை காதிலேயே போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஸ்ரீலங்காவில் மிக உக்கிரமாக போர் நடந்து கொண்டிருந்த நிலையிலும், இலட்சக்கணக்கான அப்பாவி மனிதர்கள் இரவும் பகலுமாக கொன்றழிக்கப்பட்ட போதும் எந்தவிதமான சலனத்தையும் காட்டிக் கொள்ளாத ஒபாமாவின் அரசு, இப்பொழுது மட்டும் ஸ்ரீலங்காவின் மனித உரிமைகள் குறித்து விழித்துக் கொள்வதற்கு வேறு ஏதேனும் சிறப்புக்காரணத்தை அமெரிக்காவே நினைத்தாலும் கூட வெளிப்படுத்த முடியாது என்பதுதான் நிதர்சனம்.

இந்தியாவிற்கும் சீனா-இலங்கை நெருக்கத்தில் உடன்பாடில்லையென்றாலும் இலங்கையை மிரட்டி, சீனா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் எதிர்ப்பினை ஒரே சமயத்தில் சமாளிக்கும் தெம்பில்லை. உலக அரங்கில் சீனாவின் தோளில் கைபோட்டுக் கொண்டு இலங்கை சுற்றக்கூடாது என்பதனை வலியுறுத்தவே அமெரிக்காவின் பின்னால் ஒளிந்துகொண்டு இந்தத் தீர்மானம் குறித்து தன் மெளனத்தை கடைபிடிக்கிறது இந்தியா என்ற பேச்சும் உலவுகிறது. அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் எனக் கருணாநிதியும், ஜெயலலிதாவும் இந்திய அரசாங்கத்தை வற்புறுத்தியதைக் கூட இதனுடன் முடிச்சுப் போட்டு பார்க்கலாம். இலங்கையை மிரட்ட இந்தியாவின் அரசுக்கு உதவியது போலும் ஆகிவிட்டது; தமிழகத்தில் ஈழ ஆதரவாளர் என்ற முகமூடியை அணிந்துகொள்ளவும் உதவிவிட்டது.

ஆடு நனைய ஓநாய் அழுவது நினைவுக்கு வந்தாலும் இப்படியாகவேனும் ஸ்ரீலங்கா நிகழ்த்திய கொடூரங்களின் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பக்கூடும் என்பதான ஆறுதல் உண்டாகிறது. அதே சமயம் உலகநாடுகளின் இந்தக் கவனத்தைத் தவிர வேறு ஏதேனும் பலன்கள் உண்டா எனவும் யோசிக்கத் தோன்றுகிறது.

போருக்குப் பிறகாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ”கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு”(Lessons Learned and Reconciliation Commission-LLRC)வினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும் என்பதுதான் அமெரிக்கத் தீர்மானத்தின் முக்கியமான அம்சமாக இருக்கிறது. இந்த LLRC யின் அறிக்கையில்தான், போர் நிறுத்தப் பகுதிகளில் பாதுகாப்பு படைகள் குடிமக்களின் மீது வேண்டுமென்றே தாக்குதல் எதுவும் நடத்தவில்லை என்று குறிப்பிட்டு பாதுகாப்பு படையினருக்கு “ரொம்ப நல்லவர்கள்” சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

அதே சமயம், இந்த அறிக்கையின் சில பரிந்துரைகளை குறிப்பிட்டாக வேண்டும் - போரில் குடிமக்கள் இறந்தது குறித்தான விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், தேசிய நில ஆணையம்(National Land commission) அமைக்கப்படல் வேண்டும், போரில் இறந்தவர்களுக்கு தக்க நிவாரணங்கள் வழங்கப்படல் வேண்டும் என்பதானவற்றை குறிப்பிடலாம். அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி பெறுவதன் பலனாக ஸ்ரீலங்கா இந்ந்தப்பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டிய சூழல் உருவாகுமெனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அநேகமாக பயன் கிட்டலாம்.

அமெரிக்கா முன் வைத்திருக்கும் தீர்மானம் ஸ்ரீலங்காவை LLRC யின் பரிந்துரைகளை அமல்படுத்தச் செய்ய வலியுறுத்துவதோடு, பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் வழிமுறைகளை அறிக்கையாகத் தரச்சொல்கிறது மேலும் போரின் போது அனைத்துலக சட்டங்களை மீறிய செயல்களை அறிந்துகொண்டு அவை மீதான நடவடிக்கைளை ஸ்ரீலங்கா அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் எனவும் கோருகிறது. மேற்சொன்ன பரிந்துரைகளை செயல்படுத்தும் போது ஐ.நா மனித உரிமைகள் சபையின் வழிகாட்டுதல்களை ஸ்ரீலங்கா அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.

இந்தத் தீர்மானம் ஒருவேளை நிறைவேற்றப்பட்டு-[சீனா,ரஷ்யா மற்றும் பாகிஸ்தானின் எதிர்ப்புகளை மீறி தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்பது அடிப்படையான சந்தேகம்], ஸ்ரீலங்கா அதை மீறினால் அமெரிக்கா அந்நாட்டுடனான தனது இருதரப்பு வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டு பொருளாதாரத்தடைகளையும் மேற்கொள்ளக் கூடும். அதற்கு மிக நீண்டகாலம் ஆகலாம் என்றாலும் இதை எதுவும் அமெரிக்கா செய்யப்போவதில்லை என்றே தோன்றுகிறது- அமெரிக்காவின் அத்தனை மறைமுகமான மிரட்டல்களையும் சீனாவின் நிழலில் அண்டிக்கொண்டு உதாசீனப்படுத்திய ஸ்ரீலங்காவிற்கு இத்தீர்மானம் என்பது அமெரிக்கா விடுக்கும் நேரடியான மிரட்டல். ஒருவேளை தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டுவிட்டாலும் கூட சீனாவின் ஆதரவு தரக்கூடிய தெம்பில் இலங்கை அமெரிக்காவிற்கு பயப்படாமல் இருக்கக் கூடும், அப்படியில்லாமல் தீர்மானம் தோல்வியடைந்துவிட்டால் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஆட்டமும் கொட்டமும் இன்னமும் கூடுதலாகலாம்.

அமெரிக்காவின் தீர்மானத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான உரிமையை மூன்றாம் நாடு அல்லது மூன்றாம் அமைப்பிற்கு அளிக்க வேண்டும் என கோரப்படவில்லை என்பதும், போர்க்குற்றவாளிகளுக்கான தண்டனைகள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை என்பதும் தீர்மானம் வெற்றிபெற்றாலும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்கள், குற்றவாளிகளுக்கு அளிக்கப்படக் கூடிய தண்டனைகள் ஆகியவற்றின் மீதான சந்தேகத்தை எழுப்புகிறது. இந்தச் சந்தேகத்தை தொடக்கப்புள்ளியாகக் கொண்டு சற்று ஆழமாக யோசித்தால் இத்தீர்மானமே கூட மூன்றாம் உலகநாடுகளின் அழுத்தத்திலிருந்து இலங்கை தப்புவதற்கும், அதன் தலைவர்கள் போர்குற்ற தண்டனைகளிலிருந்து நழுவுவதற்குமான உபாயமாக இலங்கையின் நட்பு நாடுகளின் கூட்டுச் சதியாக இருக்கலாம் என்ற மற்றுமொரு சந்தேகத்தை உருவாக்காமல் இல்லை. ஒருவன் அடிப்பது போல் அடிக்க, இன்னொருவன் தடுப்பது போல தடுக்க, இலங்கை அழுவது போல நடிக்க வேண்டும் என்பது இதன் சாராம்சமாக இருக்கக் கூடும். 

எப்படியிருப்பினும், சக தமிழனாக நீங்களும் நானும் இலங்கையின் கொடூரிகள் பெற வேண்டிய தண்டனை என நம் மனதில் நினைத்துக் கொண்டிருப்பனவற்றில் ஒரு சதவீதத்தைக் கூட இந்தத் தீர்மானம் பெற்றுத் தரப்போவதில்லை என்று தெளிவாகத் தெரிகிறது.

Apr 27, 2011

நம்பிக்கையின் ஒளிக்கீற்று

ஈழத்தில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை வெறியாட்டங்களும், போரின் பெயரால் அரங்கேற்றப்பட்ட அக்கிரமங்களும், சிங்கள இராணுவத்தின் ஊடாக வல்லரசுகள் அவிழ்த்துவிட்ட இன அழிப்பும் சில ஊடகங்களைத் தவிர பெரும்பாலானவற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டன அல்லது அங்கு வன்முறைகளே நிகழவில்லை என்ற கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டு உலகச் சமூகத்தின் கண்களிலிருந்து இக்கொடுமைகள் திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டன.

நிர்வாணப்படுத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டவனும், உடல் சிதைக்கப்பட்டு மாண்டு போனவளும், குண்டுகளால் மண்ணுள் புதைந்து போன சிறுவனும், துப்பாக்கி ரவைகளால் துளைக்கப்பட்ட சிறுமியும், வாழ்ந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாமல் அழித்தொழிக்கப்பட்ட மனிதனும் இன்று நம்மிடம் வேண்டுவது அவர்களின் மரணத்திற்கான சிறு பதிலை மட்டுமே.

சிங்கள இராணுவத்தினரால் சூறையாடப்பட்ட தமிழினத்தின் அடையாளங்கள் கருமை படிந்த சுவடுகளாக இணையத்தில் பதிந்து கிடக்கின்றன. ஈழத்தில் என்ன நடந்தது என்பதை பதைபதைப்புடன் தேடிய ஒவ்வொரு இதயமும் கொஞ்சம் கசிந்ததோடு தனக்குத்தானே கேட்டுக்கொண்ட வினா "இந்த அரக்கர்களுக்கு எந்த தண்டனையுமே கிடையாதா?" என்பதுதான்.

உலகத்தலைவர்கள் தங்களிடம் வினவியவர்களுக்கு மெளனத்தை பரிசளித்தார்கள். வல்லரசுகளை நோக்கி எழுப்பப்பட்ட இந்த வினாவுக்கு நமுட்டுச் சிரிப்பு பதிலாக்கப்பட்டது. இந்த கொடூரங்களின் சாட்சிகள் யாவும் ஈழத்தமிழனோடு சேர்த்தே புதைக்கப்பட்டுவிட்டன என சோர்ந்திருந்த தருணத்தில் சிங்கள இராணுவம் ஈழத்தில் நிகழ்த்திய அட்டூழியங்கள் குறித்தான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக வந்திருக்கிறது.

குற்றவாளிகளை காப்பதற்கென வல்லோன்களும் வகுத்தவர்களும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். வெகுமக்களின் அழுத்தம் இருந்தால் மட்டுமே குற்றவாளிகள் கூண்டிலேற்றப்படுவார்கள். இவர்கள் கழுவிலேற்றப்பட வேண்டியவர்கள்- இப்பொழுதுதான் நாம் கூண்டிலேற்றுவது பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஈழத்துக்காக எரிந்த முத்துக்குமார் எழுதி வைத்த "காலம் கடந்த நீதி அநீதிக்குச் சமமானது" என்ற வரிதான் எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Oct 6, 2010

ராமன் ஆண்டாலும் பாபர் ஆண்டாலும்..

ஒரு பொதுவான விஷயத்தைக் குறிப்பிட்டு என்னுடைய கருத்தை ஒருவர் கேட்கிறார் என்பது எனக்கு வினோதமாக இருக்கிறது.

"அயோத்தி தீர்ப்பு பற்றி உங்களின் கருத்து என்ன? தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்" என்று எனக்கு ஒரு கேள்வியை மின்னஞ்சலில் அனுப்பி அதிர்ச்சியைக் கொடுத்த நண்பர் சாதிக் அவர்களுக்கு நன்றி.
--
அயோத்தி தீர்ப்பு வரப்போகிறது என்று செய்திகள் வரத்துவங்கிய போது, இத்தகைய சிக்கலான விஷயங்களில் அரசியல் அழுத்தம் இல்லாமல் தீர்ப்பளிக்க முடியுமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சப்பையான தீர்ப்பாக இருந்தால் மட்டுமே பிரச்சினை எதுவும் இல்லாமல் இருக்கும் என்றாலும் நீதிமன்றம் என்பது நாட்டாமையின் ஆலமரத் திண்ணையில்லை என்பதால் ஏதேனும் ஒரு பக்கத்திற்குதான் நியாயம் சொல்வார்கள் என நம்பிக் கொண்டிருந்தேன்.

இந்த தீர்ப்பு விவகாரம் கிட்டத்தட்ட நாடகம் போலவே இருந்தது.

செப்டம்பர் 24 ஆம் தேதி தீர்ப்பு வழங்க வேண்டிய நிலையில், அதற்கு முந்தைய நாட்களில் மத்திய மாநில அரசுகள் 'அமைதி காக்கும்படி' வேண்டுகோள் விடுத்து, பல்க் எஸ்.எம்.எஸ் அனுப்புவதை தடை செய்து, அலுவலகங்களுக்கும் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து, கால்களில் வெந்நீரை ஊற்றிக் கொண்ட ஆங்கில சேனல்கள் கோர்ட்டில் யாராவது உச்சா போனால் கூட 'ப்ரெக்கிங் நியூஸ்' ஆகப் போட்டு என தேசம் முழுவதும் கவுண்ட் டவுன் பரபரப்பு உண்டாகியிருந்தது.

பலூனில் ஏறிக் கொண்டிருந்த 'டென்ஷன்' காற்றை உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை என்ற பெயரில் ஊசியை வைத்துக் குத்திவிட்டது. பேச்சுவார்த்தைக்கு 1 சதவீத இடம் இருந்தாலும் அதை நிராகரிக்கக் கூடாது என்ற தொனியில் அந்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பேச்சுவார்த்தைக்கு இடமே தரவில்லை போலிருக்கிறது என நினைத்துக் கொண்டேன்.

தீர்ப்பு வழங்கலாமா கூடாதா என்பதை 28 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும் என்றார்கள். அதற்குள் என்ன அவசரமோ அடுத்த மாதத்திற்கு கூட ஒத்தி வைத்திருக்கலாம் என்று யோசிக்க ஆரம்பிக்கும் போதே மறுபடியும் ஊடகக்காரர்கள் ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு நீதிபதி அக்டோபர் 30இல் ஓய்வு பெறுகிறார் எனவே தீர்ப்பு என்ன ஆகும் என விடிய விடிய விவாதம் செய்தார்கள்.

எதிர்பார்த்தைப் போலவே 28 ஆம் தேதி தடையை நீக்குகிறார்கள்.
30 ஆம் தேதி தீர்ப்பு வரும் என அறிவித்தார்கள். 24 ஆம் தேதியில் இருந்த பயத்தில் பாதி கூட 30 ஆம் தேதியன்று இல்லை. சாலைகள் முழுக்க காவல்துறையினரும் துணை ராணுவமும் ரோந்து சுற்றினார்கள். எப்படியான கலவரத்தையும் அடக்கிவிடும் அளவுக்கு இந்த இடைவெளியில் அரசுகள் தயாராகிவிட்டன.

அயோத்தி தீர்ப்பு வந்த தினம் மதியம் இரண்டு மணிக்கு கிளம்பிவிடவும் என்ற எச்சரிக்கையை அலுவலகத்தில் வெளியிட்டிருந்தார்கள். ஒன்றரை மணிக்கெல்லாம் அலுவலகம் காலியாகிவிட்டது. மூன்று மணிக்கு சாலைகளில் சென்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்- அத்தனை அமைதி. பெங்களூர் போன்று போக்குவரத்து நெரிசலில் பிதுங்கும் நகரங்களில் இப்படி வெறிச்சோடிய சாலைகளை வாழ்நாளில் இன்னொரு முறை பார்க்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

நான்கு மணிக்கு வீட்டிற்கு போய்ச்சேர்ந்தேன். தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் வெளியில் வந்த வழக்கறிஞர்கள் கிட்டத்தட்ட மாஸ் ஹீரோக்களைப் போல இருந்தார்கள். அத்தனை மைக்குகள், அத்தனை வீடியோக்களும், கேமரா ப்ளாஷ்கள். இடது ஓரத்தில் இருந்த பெண் வக்கீல் தன் முகத்தை துடைத்துக் கொண்டேடேடேடேடேடே இருந்தார்.

ஒரு சிறுவனிடம் இருந்த நூறு ரூபாயை இன்னொரு சிறுவன் பறித்துக் கொள்கிறான். நீதி வேண்டும் என்று என்னிடம் இரண்டு பேரும் வருகிறார்கள். நான் இரண்டு பேரும் சண்டை பிடிக்கக் கூடாது, சமர்த்தாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை சொல்லிவிட்டு, இந்த நூறு ரூபாய் அவனுடையது என அவன் நம்புகிறான், இப்போதைக்கு இவனிடம் இருக்கிறது. எனவே அவனுக்கு முப்பது மூன்றே கால் ரூபாயும், இவனுக்கு முப்பத்து மூன்றே கால் ரூபாயும், அந்த சந்நியாசிக்கு முப்பத்து மூன்றேகால் ரூபாயும் கொடுத்துவிடலாம் என்று தீர்ப்பளித்துவிடுகிறேன். அவ்வளவுதான். கேஸ் முடிந்தது.

நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பளிப்பபது என்றால் நீதிமன்றங்களும் சட்டங்களும் வழக்கறிஞர்களும் தேவையில்லை என்பது என் கருத்து.

அயோத்தியில் ராமன் பிறந்து அங்கிருந்த கோயிலை பாபர் இடித்து மசூதி கட்டியிருந்தால் நிச்சயமாக அந்த இடம் இந்துக்களுக்குச் சொந்தம். அப்படியில்லையெனில் பாபர் கட்டிய கட்டடம் என்ற அடிப்படையில் இசுலாமியர்களுக்கு சொந்தம். இந்த இரண்டில் ஒன்றுதான் தீர்ப்பாக இருந்திருக்க முடியும்.

தீர்ப்பை ஏதேனும் ஒரு அமைப்பின் பக்கமாக அளித்தால் நாட்டில் கலவரம் உண்டாகும், பிரச்சினைகள் வெடிக்கும் என்பதைப் பற்றியெல்லாம் நீதிமன்றங்களும் நீதிபதிகளும் கவலைப்படத் தேவையில்லை. அதை பார்த்துக் கொள்ள அரசாங்கம் இருக்கிறது.

நீதி தேவை என இரு அமைப்புகள் கோர்ட் வாசலுக்கு வரும் போது தரவுகளை ஆராய்ந்து எந்தவிதமான பாரபட்சமும் தயவுதாட்சண்யமும் இல்லாமல் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்கள்தான் தேவை. கழுவிய மீனில் நழுவிய மீனாக கொழ கொழ வழ வழ என்று தீர்ப்பு சொல்ல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.
---
நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் என்பதால் இந்தத் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்வோம். அதே பாலிசிதான்! கழுவு நழுவு..
- இது மணிகண்டன் என்ற சாமானியனின் பார்வை. இந்த சிறு குறிப்பை எழுதிவிட்டு வழக்கறிஞர் கிருஷ்ணனிடம் பேசிய போது வேறொரு பரிமாணம் கிடைத்தது. இதே வழக்கில் நீங்கள் நீதிபதியாக இருந்தால் என்ன தீர்ப்பை அளித்திருப்பீர்கள் என்ற கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை என்றார். நானும் அதே பதில் சொல்ல முடியாத பட்டியலில்தான் இருக்கிறேன். இந்த கோணத்தில் இந்த விவகாரத்தை அணுகுவதற்கு நிறைய உழைப்பு தேவைப்படும். அதற்கான பொறுமையும் உழைப்பும் என்னிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

(இப்படி ஒருவரின் கேள்வியை பிரசுரம் செய்வது எனக்கு நானே தேடிக் கொள்ளும் சுய விளம்பரமாகத் தெரிகிறது என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்)

Sep 29, 2010

அயோத்தி விவகாரம்- வேலையற்றவர்களின் வீண் வேலை.

பெரியாரின் 132 வது ஆண்டு பிறந்த மாதத்தில் நிகழும் அசிங்கங்களைப் பார்ப்பதற்கு வெட்கமாக இருக்கிறது.

மதத்தின் பெயரால் இத்தனை கீழ்த்தரமான செயல்களை நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி என்பது பற்றியெல்லாம் இதுவரைக்கும் எந்தவிதமான பிரக்ஞையும் இல்லாத தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் வண்ணக் கலவைகளால் மெருகூட்டப்பட்ட பிரம்மாண்ட சிலைகளை நிறுத்தி வைத்து சினிமாப் பாடல்களை முழங்கவிட்டு வீட்டுக்கு வீடு பத்து,இருபது என வசூல் செய்து கொஞ்சம் செலவை விநாயகனுக்கும் மீதியை குவார்ட்டருக்கும் செலவு செய்து திளைக்கும் வாலிப வயோதிகர்களை இந்து அமைப்புக்கள் கொம்பு சீவி விடுகின்றன.

இந்து அமைப்புகளுக்கு இருக்கும் பெரும்பயம் அல்லேலூயாக்காரர்கள் வெளிநாட்டு டாலரையும் யூரோவையும் கொடுத்து சுப்பிரமணியை சூசையாகவும் மாரியம்மாளை மேரியாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது.

ஒவ்வொரு டிசம்பர் ஆறாம் தேதியும் தேசம் முழுவதும் 'ரெட் அலர்ட்' பிறப்பிக்கப்படுகிறது. சோதனைச் சாவடிகளில் ஒவ்வொரு வாகனமும் அலசப்படுகிறது. ஒவ்வொரு இசுலாமியனும் இந்த தேசத்தின் விரோதியாகப் பார்க்கப்படுகிறான்.

இந்த தேசத்தில் நிகழும் மத சம்பந்தமான எந்த ஒரு விவாகரத்திலும் மதத்தையும் கடவுளையும் விடவும் பணமும் அரசியலுமே பிரதானமாக விளங்குகிறது. மதம் என்பதை வெறும் கருவியாகப் பயன்படுத்தி தங்களின் வயிறு வளர்க்கும் கூட்டம்தான் எங்கு திரும்பினாலும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தியானம் கற்றுத்தருகிறேன், வாழ்வதை கற்றுத்தருகிறேன், பாவத்தை நீக்குகிறேன், கர்ப்பமாவதைக் கற்றுத்தருகிறேன் என்று மதவாதிகள் செய்து வரும் சில்லரைத்தனங்களை அடக்க முடியாத அரசு, அயோத்தி இடம் யாருக்கு என்ற தீர்ப்பு நாளைக்கு வருவதால் நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடப்போகிறது. பதற்றமான இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. வேட்டைநாய்கள் அமைதிகாக்கச் சொல்லி அறிக்கை விடுகின்றன.

அரைசெண்ட் இடம் உனக்கா அல்லது எனக்கா என இந்த தேசம் முழுவதும் இலட்சக்கணக்கான சாமானியர்கள் தங்கள் வழக்குகளை நீதிமன்றங்களில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் பல பேர்களுக்கு அந்த பிரச்சினைக்குரிய இடம் வாழ்வாதாரமாக இருக்கிறது. இந்த அரை செண்ட் இடம் அந்த சாமானியனுக்கு அளிக்கும் பலனில் ஒரு சதவீத பலனையாவது இந்த 'அயோத்தி' ஏதேனும் ஒரு சாமானியனுக்கு அளித்திருக்கிறதா?

'அயோத்தி' நாடு முழுவதும் சர்ச்சையையும் வன்முறையையும் கிளப்பியதைத் தவிர வேறு ஏதேனும் உருப்படியாகச் செய்திருக்கிறதா என்று தெரியவில்லை. அந்த இடத்திற்காக வக்பு வாரியமும் இந்து மகா சபையும் வழக்கு நடத்துகிறார்கள். இந்த இரண்டு அமைப்புகளின் இட விவகாரத்திற்காக ஒட்டுமொத்த தேசத்திலும் நூற்றுப்பத்து கோடி மனிதர்களிலும் பதற்றம் தொற்றிக்கொள்ள விடுவதுதான் இந்த தேசத்தின் அவலம்.

இந்தப் பிரச்சினையை மத்திய அரசு தனது வலிமையைக் கொண்டு நீதி மன்றத்திற்கு வெளியிலேயே முடித்திருக்க வேண்டும். அமைப்புகள் ஒத்துவராத பட்சத்தில் அரசு கையகப்படுத்தி மருத்துவமனையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு கட்டடத்தையோ கட்டியிருக்க வேண்டும். இதைச் செய்து முடிக்க எந்த அரசுக்கும் திராணியில்லை. அதுதான் நமது பெருமைமிகு ஜனநாயகத்தின் கையலாகாத்தனம்.

இந்த மத சம்பந்தமான விவகாரங்களை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய எந்த அரசியல் அமைப்பும் தயாரில்லை. ஏதேனும் விதத்தில் தனக்கு நன்மை சேர்ந்துவிடாத என கசாப்புக் கடையின் முன்பாக காத்திருக்கும் வெறிநாய்களாகவே அவை இருக்கின்றன.

விநாயக சதுர்த்தி ஊர்வலத்துக்கு பாதுக்காப்பு, டிசம்பர் 6 க்கு பாதுகாப்பு, இனி அயோத்தி 'உயர் நீதி மன்ற தீர்ப்பு வெளிவந்த நாளுக்குப் பாதுகாப்பு', அப்புறமாக 'உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த நாளுக்குப் பாதுகாப்பு' என அரசு ஆண்டு முழுவதும் 'ரெட் அலர்ட்' அளிக்கப்போகிறதா என்று தெரியவில்லை.
மத ரீதியான கட்டடங்களை விடவும் மருத்துவமனைகளும், கல்விக் கூடங்களும், தொழிற்சாலைகளும், குறைந்தபட்ச வசதிகளுடன் மயானமும்தான் நமக்கு அவசியம்.
இதில் எதையாவது ஒன்றை கட்டித் தொலையுங்கள். மனிதர்களை அமைதியாக வாழவிடுங்கள்.

Sep 2, 2010

மரண தண்டனை

மரண தண்டனை குறித்தான தீர்ப்புகள் செய்திகளில் வரும் போது மட்டும் மரண தண்டனை தேவையா என்பது குறித்தான விவாதம் உருவாகி பின்னர் மறைந்துவிடுகிறது. மரண தண்டனை தேவையா தேவையில்லையா என்பது குறித்தான எந்த விவாதமும் தேவையில்லை. மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். மரண தண்டனையின் ஆதரவாளர்கள்(இந்த ஆதரவாளர்கள் பட்டியலில் அரசும், நீதியமைப்பும் அடக்கம்) மரண தண்டனை இந்தச் சமூகத்தில் உருவாக்கும் விளைவு என எதனை குறிப்பிட முடியும்?

தண்டனைகள் என்பது குற்றவாளிகள் தனது குற்றங்களை குறித்து மனம் வருந்துவதற்கான வாய்ப்பாகவும் அவன் திருந்தி வாழ்வதற்கான வழியினை உருவாக்குபவனவாகவுமே இருக்க வேண்டும். மரணத்தின் பெயரால் குற்றவாளிளை பழிவாங்குவதை பக்குவப்பட்ட அரசாங்கம் நியாயப்படுத்த முடியாது. மனிதனின் அடிப்படை உரிமையான 'வாழ்தலை' நிராகரிக்கும் அரசு பக்குவப்பட்ட அரசாக இருக்க முடியாது.

தண்டனைகளுக்கு இன்னொரு முக்கியத்துவம் உண்டு. ஒரு குற்றத்தை செய்வதற்கு முன்னதாக அவன் தனக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று பயந்து குற்றத்தைச் செய்ய தயங்கச் செய்வதாக இருக்க வேண்டும். இதனால் இந்தச் சமூகத்தில் குற்றங்கள் குறையும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கையை முழுவதுமாக தவறு என்று நிராகரிக்க முடியாது. ஆனால் இந்த பயத்தை மரண தண்டனைதான் உருவாக்க வேண்டும் என்பதில்லை.

மரண தண்டனை என்பது காட்டுமிராண்டித்தனமானது. குற்றவாளிக்கான அதிகபட்ச தண்டனை என்பது மரண தண்டனையாகத்தான் இருக்க முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. வேறு விதமான தண்டனைகள் மூலமும் குற்றவாளியை தண்டிக்க முடியும்.

ஒருவனை அரசாங்கமும் சட்டமும் சேர்ந்து கொல்வது என்பது அந்தக் குற்றவாளியை மட்டும் தண்டிப்பதில்லை. குற்றவாளி உயர்நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், ஜனாதிபதி என்று தொடர்ச்சியாக மேல் முறையீடு செய்யும் காலத்திலும் தண்டனை நிறைவேற்றப்படும் வரையிலும் குற்றவாளியோடு சேர்த்து அவனது குடும்பத்தையும் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தண்டிக்கப்படுகிறார்கள். குற்றவாளியுடன் சேர்த்து அவனது குடும்பம் தண்டிக்கப்படுதலை சட்டம் எந்தவிதத்தில் நியாயப்படுத்தும்?

வெளிநாடுகளில் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு மின் நாற்காலி, விஷ ஊசி,விஷவாயு அறை என்ற பல முறைகளைக் கையாள்கிறார்கள். ஆனால் எந்த முறையானாலும் ஒரு மனிதனை சட்டம் மற்றும் நீதியின் பெயரால் கொல்வது என்பது மனிதத்தன்மையற்ற செயல். குற்றம் புரிந்தவனை அரசாங்கம் திட்டமிட்டு கொல்லுதல் என்பதனை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடிவதில்லை.

குற்றவாளிகள் இந்தச் சமூகத்தில் வாழ்வதற்கான தகுதியற்றவர்கள் என இந்த சட்டம் முடிவு செய்கிறது என்றாலும் எந்தக் குற்றவாளியும் தனது மரண தண்டனை நிறைவேறும் காலத்தில் தனது குற்றங்களுக்காக மனம் வருந்துபவனாகவே மாறியிருக்கிறான். அவன் குற்றங்களுக்காக மனம் வருந்துபவன் எனும் போதே அவன் வாழ்வதற்கான தகுதியுடையவனாக மாறிவிடுகிறான்.

சமீபத்தில் மும்பை தீவிரவாத தாக்குதல் கசாப்புக்கும், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கைதாகியுள்ளவர்களுக்கும் வழங்கப்பட்ட மரண தண்டனை குறித்தான செய்திகளின் கீழ் இருந்த பின்னூட்டப்பகுதிகளில் மிக அதிகப்படியானவர்கள் உணர்ச்சிவசப்பட்டு 'தீர்ப்பு சரி', 'கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்', 'தீயில் இட வேண்டும்' போன்ற இன்னபிற கருத்துக்களையும் எழுதியிருந்தார்கள்.

மரண தண்டனைகள் இந்தச் சமூகத்தில் உருவாக்கும் வன்முறையாகவே இதனைப் பார்க்கிறேன். "மன்னிப்பு" என்பதற்கான எந்தவிதமான மனநிலையும் நம் மக்களிடையே காண முடிவதில்லை. பேருந்தில் தன் காலை மிதித்தவனைக் கூட ஜென்மவிரோதியாகவே பார்க்கும் மனநிலைக்கு இந்தச் சமூகம் ஏற்கனவே வந்துவிட்டது. இந்த கோபத்தையும் வன்மத்தையும் சற்றேனும் சாந்தப்படுத்துவதற்கான முயற்சிகளைத்தான் இந்த அரசாங்கம் எடுக்க வேண்டுமே தவிர, குற்றவாளியைப் 'பழி வாங்கும்' நோக்கில் சமூகத்தில் வன்முறையை ஊன்றுவது பற்றி சிந்திக்க வேண்டிய தருணமாகவே இதை உணர வேண்டும்.

Aug 23, 2010

சு....தந்திரம்

மீண்டும் ஒரு சுதந்திர தினம் வந்துவிட்டது. மூவர்ணக் கொடி குத்தி வரிசையில் நின்று சல்யூட் அடித்து ஆரஞ்சு மிட்டாயை வாங்கி சப்பிக்கொண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடியதை மனதில் ஓடவிட்டு, சிறப்பு நிகழ்ச்சியாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டாடினோம்.

சுதந்திரம் என்ன சுக்கா? மிளகா? என்றெல்லாம் கவிதை எழுதிவிட்டார்கள். சுக்கும் இல்லை, மிளகும் இல்லை என்பதை மெதுவாகச் சொன்னால் கூட தேசியவாதிகள் பிழிந்து எடுத்துவிடுவார்கள். ஆனால் இந்த வெங்காய பஜ்ஜி அல்லது சுதந்திரத்தைப் பற்றிக் கொஞ்சமாவது பேசத் தோன்றுகிறது.

நாம் கொண்டாடும் சுதந்திர தினம் வெள்ளையர்கள் வெளியேறிய நினைவு நாள் என்பதனைத் தவிர்த்து, சுதந்திரம் என்பதற்கான எந்தவிதமான பொருளும் அதற்கு இல்லை. சுதந்திரம் என்ற பெயரில் வெள்ளையர்களை வெளியேற்றிவிட்டு மக்களையும் அவர்களின் உழைப்பினையும் சுரண்டிக் கொள்ளும் உரிமையை உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் கொடுத்திருக்கிறோம்.

வெள்ளையன் வாழ்ந்தபோது அவனை எதிர்த்துப் பேசியவர்களை சிறைகளில் அடைத்தார்கள், கல் உடைக்கச் செய்தார்கள், செக்கிழுக்க வைத்தார்கள் என்று பாடப்புத்தகங்களில் படித்ததுண்டு. இன்றைய சுதந்திர தேசத்தில் அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் பேசுபவர்கள் மீது வெள்ளையன் காலத்தில் பாய்ந்ததை விடக் கொடூரமாக சட்டம் பாய்கிறது . அதோடு சேர்ந்து ரவுடிகளும் பாய்கிறார்கள்.

இந்த அடக்குமுறை ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்து இன்று வரையிலும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்திற்கும் சுதந்திர ஆட்சி முறைக்கும் அடக்குமுறை மட்டுமே ஒற்றுமையில்லை. ஆனால் இந்த அடக்குமுறைதான் சுதந்திரம் என்ற சொல்லின் பொருளுக்கு எந்தவித அர்த்தமும் இல்லாமல் செய்வது.

சுதந்திரம் பெற்றதன் மிகப் பெரிய வெற்றியே பரந்த அளவிலான முதலாளித்துவ சமூகத்தையும் மொன்னையான நடுத்தர வர்க்கத்தையும் நாடு முழுவதுமாக பரவச் செய்ததுதான். ஆரம்ப காலங்களில் அமைச்சர்களும் இன்னபிற அதிகாரிகளும் உள்நாட்டு முதலாளிகளுக்கு தரகர்களாகச் செயல்பட்டு அவர்களின் தொழிலும் வியாபாரமும் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் கம்பளம் விரித்தார்கள். அதற்குப் பிரதிபலனாக கமிஷன் பெற்றுக் கொண்டிருந்தார்கள். தொண்ணூறுகளில் உலக மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் என்ற பெயரில் உள்நாட்டு முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை விட பன்மடங்கு வரவேற்பு வெளிநாட்டு முதலாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்தக் கட்டம் வரைக்கும் தரகர்களாகச் செயல்பட்டு வந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அவர்தம் குடும்பங்களும், துணிந்து தாங்களும் 'சுதந்திர நாட்டில்' தொழில் தொடங்கினார்கள். இப்பொழுது ஜனநாயகம் பட்டொளி வீசிப் பறக்க சுதந்திர தேசம் என்ற பெயரில் ஒரு முழுமையான முதலாளித்துவ அல்லது நியோ காலனிய நாட்டில் வசித்து வருகிறோம்.

நடுத்தர வர்க்கத்திற்கு ஒரு வித்தியாசமான குணம் உண்டு. சமூகத்தில், அரசியலில் அல்லது தன்னைச் சுற்றி நிகழும் எந்த எதிர்மறையான விஷயங்களைப் பார்த்தாலும் இந்த நடுத்தரச் சமூகம் கோபம் கொள்ளும். ஆனால் அதே சமயத்தில் அந்தக் கோபத்தை அடுத்தவனுக்குக் கூடத் தெரியாமல் மறைத்துக் கொள்ளும். எதிலும் துணிந்து கருத்துச் சொல்லவோ, அப்படியே கருத்துச் சொல்லிவிட்டாலும் சொன்ன கருத்திலிருந்து பின்வாங்காமல் சாலையில் இறங்கிப் போராடவோ தைரியமில்லாத ஒரு சமூகம் அது. இந்த மொன்னையான சமூகத்தை 'சுதந்திர' தேசம் முழுவதும் பரவச் செய்ததில் சுதந்திர நாட்டின் அரசாங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் பெரும் பங்கு இருக்கிறது.

இந்த மொன்னைச் சமூகத்தை உருவாக்குவது மிக எளிது. சிறுவயதிலிருந்தே எந்தவிதமான சமூகப் பிரக்ஞையும் இல்லாத, தான் வாழும் ஊர் பற்றியோ அல்லது பகுதி பற்றியோ எந்த அறிவினையும் தராத தட்டையான பாடங்களைக் கற்கச் செய்ய வேண்டும். உண்மையான வரலாறுகள் மறைக்கப்பட்டு போலித்தலைவர்களும், விளம்பரதாரிகளும் தலைவர்களாகவும் தியாகிகளாகவும் சித்தரிக்கப்பட்ட பாட முறை அமைய வேண்டும். அதற்கு ஆளும் வர்க்கத்துக்கு ஜால்ரா அடிக்கும் கல்வியாளர்களைப் பாடத்திட்டக் குழுவில் நியமனம் செய்யவேண்டும். தன் முன்னோர்களின் வாழ்வியல், தனித்துவமான விவசாய முறைகள் போன்றவற்றைப் பற்றி எந்த அறிவும் இல்லாத ஒரு சமூகம் உருவாக்கப்பட்டால் அந்தச் சமூகம் ஆளும் வர்க்கத்திடம் கேட்பதற்கென எந்தக் கேள்வியும் இருக்காது.

கற்கும்போது பாடங்களைப் புரிந்துக் கொண்டு படிப்பவனை விடவும் மொத்தமாக மனப்பாடம் செய்து தேர்வில் வாந்தி எடுப்பவனை ஊக்குவிக்கும் விதமாகத் தேர்வு முறைகள் அமையவேண்டும். இவ்வாறு படிக்கும்போது மாணவர்களின் சிந்திக்கும் திறனை, பெருமளவில் மழுங்கடிக்கச் செய்யமுடியும். இப்படி உருவாகும் மழுங்கல் தன்மையுடையவர்களுக்கு ஓரளவுக்கு சம்பளத்துடன் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளை முதலாளிகளுடன் சேர்ந்து உருவாக்கித் தந்துவிட வேண்டும். அவ்வளவுதான், அரசாங்கத்தின் பணி. வாங்கும் சம்பளத்தில் ஒரு இடம் வாங்கி வீடு கட்டி, குழந்தைகளைப் படிக்க வைத்து, அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து என்று அவன் தன் கடமைகளில் மூழ்கி உருண்டு கொண்டிருப்பான். காலப்போக்கில் இவ்வாறாக எதைப் பற்றியும் கண்டுகொள்ளாத அல்லது கண்டுகொள்ளும் பட்சத்தில் அமைதியாக இருக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கிவிட முடியும். இதைத்தான் இந்த அரசாங்கங்கள் அறுபதாண்டுகளில் வெற்றிகரமாகச் செய்திருக்கின்றன.

இந்த மொன்னையர்களுக்கு தங்களால் சாதனைகள் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஒரு அரிப்பு தொடர்ந்து கொண்டிருக்கும். அதுபற்றி அரசாங்கம் பெரியதாகக் கவலைப்படத் தேவையில்லை. அதை இந்த தேசத்தின் பொழுதுபோக்கு வியாபாரிகள் பார்த்துக் கொள்வார்கள். சினிமா கதாநாயகன் வெறித்தனமாக வில்லனைக் குத்தும் போது தானே குத்துவதாக மொன்னையர்கள் ஆசுவாசமடைந்து கொள்வார்கள். பற்றாக்குறைக்கு தொடையும் தொப்புளும் தெரிய ஒரு நடிகையை மழை நீரில் ஆட விடும்போது ஆர்த்தெழுந்து அடங்குவார்கள்.

ஓரிரண்டு பேர் ஆங்காங்கே அரசாங்கத்தை எதிர்த்துப் பேசினாலோ அல்லது எழுதினாலோ பல பாதுகாப்புச் சட்டங்களில் ஏதாவது ஒன்றில் சிறையில் அடைத்தல் போன்ற பணிகளைக் காவல்துறையினர் செவ்வனே செய்வார்கள். அவர்களுக்கான அந்த அதிகாரங்களை சுதந்திர தேசம் கொடுத்திருக்கிறது. பேசுபவர்களைச் சிறையில் அடைப்பதை அரசாங்கத்தின் மீதான குறையாகச் சொல்ல முடியாது. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இந்த தேசத்தை ஆள்பவர்கள் மீது சேறு வாரி இறைப்பது என்பது இந்த நாட்டு மக்களின் மீது சேறு வாரி இறைப்பதுதானே. அதைத்தான் இந்த அரசாங்கம் தடுக்கிறது.

சாதிகள் எல்லாம் இந்த தேசத்தின் அடையாளங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகவே தலித்தியப் பெண்களை மேல்சாதியினர் வன்புணர்வதும், இரட்டைக் குடுவை முறை, ஆதிக்க சாதியினரின் வன்முறை, சாதி மாறிய கலப்புத் திருமணத்திற்காகத் தம்பதிகளை எரித்து அல்லது அடித்துக் கொல்வது போன்றவை எல்லாம் இந்த தேசத்தின் அடையாளத்தைக் காப்பாற்றும் முயற்சியாகப் பார்க்க வேண்டும். சுதந்திரத்திற்கும் இந்த பிரச்சினைகளுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை.

புரட்சி, கலகம் போன்றவற்றைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கமும் அதன் உளவுத்துறையும் எடுக்கின்றன. சிலர் உரிமை அல்லது தங்களின் மீதான சுரண்டலுக்கான எதிர்ப்பு என்ற பெயரில் புரட்சி செய்வதும் ஆயுதம் எடுப்பதும் மற்றவர்களுக்குத் தொந்தரவு என்பதால் அரசாங்கம் இவர்களைச் சுட்டுக் கொல்கிறது என்றே புரிந்துகொள்ள வேண்டும். தேவைப்பட்டால் விமானப்படையைப் பயன்படுத்தி அவர்கள் குண்டு வீசலாம் என்ற அனுமதியும் இன்றிலிருந்து வழங்கப்படுகிறது. சுதந்திர தேசத்தில் இந்த தேசத்தைச் சேர்ந்தவர்களே கொல்லப்படுகிறார்கள் என்று விசனப்பட்டு நீங்கள் நக்சலைட் ஆதரவாளர்கள் என்ற கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சுதந்திரம் என்பதன் அளவுகோலை மீறுவதாக இந்த அரசாங்கம் அபிப்பிராயப்படுகிறது.

பேச்சுவார்த்தை என்பதை விடவும் ஆயுதங்களே சிறந்தது என்பதை இந்த சுதந்திர அரசாங்கம் நன்கு உணர்ந்திருக்கிறது. பரப்பளவில் உலகின் ஏழாவது இடத்தில் இருக்கும் இந்தியா போன்ற பெரிய தேசத்தில் மூலைக்கொரு பக்கமாகப் புரட்சி, கலகம் என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தால் ஒவ்வொருவரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது இயலக்கூடிய காரியமா என்று சிந்திக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று இடங்களில் மூர்க்கத்தனமாக நசுக்கினால் நான்காவது இடத்தில் போராட்டம் என்பதைக் கூட யாரும் யோசிக்க மாட்டார்கள். இந்தியாவுக்குத் தெற்கே இருக்கும் ஒரு தீவில் அமைதியைக் கொண்டுவர உதவிய இந்த அரசுக்கும், இராணுவத்துக்கும் உள்நாட்டில் அமைதி கொண்டு வரத் தெரியாதா? விமானப்படை வரப்போகிறது. இனிப்பாருங்கள்.

போபால் விஷவாயு உயிரிழப்புக்கு தார்மீகக் காரணமான ஆண்டர்சன் ஆகட்டும், சென்னையில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவாகட்டும் எத்தனை சுதந்திரமாக இந்த தேசத்துக்கு வந்து போகிறார்கள். இதைவிடவும் சுதந்திரத்திற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்?

போபால் விவகாரம் இருபத்தைந்து ஆண்டுகளாக நீதிமன்றங்களில் நடைபெற்று சொற்ப தண்டனையை, குற்றவாளிகளுக்கு அளிக்கிறார்கள். இதைப் போன்ற எண்ணற்ற வழக்குகளைச் சுட்டிக் காட்டலாம். வழக்கு முடிய இருபத்தைந்து ஆண்டுகளா என்றும், அதுவரை பாதிக்கப்பட்டவர்கள் காத்திருக்க வேண்டுமா என்றெல்லாம் சாமானியர்கள் கருதக் கூடும். மெத்தப்படித்து நீதி பரிபாலனம் செய்யும் நீதித்துறையினர் இதை யோசிக்காமல் இருப்பார்களா?

அவசர அவசரமாக விசாரணையை நடத்தி குற்றவாளிகளுக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை என முன்னரே தீர்ப்பளித்தால் குற்றவாளிகள் தண்டனையை முடித்துவிட்டு சுற்றிக் கொண்டிருப்பார்கள். இருபத்தைந்து ஆண்டுகள் இழுத்தடித்தால் குற்றவாளிகளுக்கு மன உளைச்சல் கிடைக்குமல்லவா? அந்த முறையில் நீதிபதிகள் இவர்களைத் தண்டிக்கிறார்கள். இது இந்த தேசத்தில் நீதித்துறைக்கு இருக்கும் சுதந்திரம்.

இப்படி ஒவ்வொரு கூறிலும் இந்தத் தேசத்தில் சுதந்திரம் இருக்கிறது. சுதந்திரத்தை அதன் எல்லைகளுக்குட்பட்டு அனுபவிக்கத் தெரியாதவர்கள்தான் சுதந்திரம் பற்றி எதிர் மறைக் கருத்துக்களை உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றபடி சுதந்திரம் என்பதற்கான அத்தாட்சியாக இரவுக் கேளிக்கை விடுதிகளும், மசாஜ் பார்லர்களும், சாராயக்கடைகளும் அனைத்து மாநிலங்களிலும் கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் இருக்கின்றன. இவை பெரும்பாலும் அரசாங்க அனுமதி பெற்றவை. மக்களின் சந்தோஷத்திற்காக அரசாங்கத்தின் ஆசி பெற்ற உள்ளூர் பெரிய மனிதர்கள் நடத்துகிறார்கள். மக்கள் இங்கு சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம்.

இத்தனை எழுதியிருக்கும் நீ எதற்கேனும் எதிராக ஒரு துரும்பை எடுத்து வீசியிருக்கிறாயா என்ற ரீதியிலான எந்த வினாவுக்கும் என் ஒரே பதில்: ஜெய் ஹிந்த்!
நன்றி: உயிரோசை

Aug 13, 2010

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு தேவையா என்பது இரண்டாம் பட்சம் துல்லியமான கணக்கெடுப்பை நிகழ்த்த முடியுமா என்பதுதான் பெரிய சவால். இந்த முறை மக்கள் தொகை கணக்கெடுக்கச் சென்றிருந்த ஆசிரியர்களிடம் நிறையப் பேர் வீட்டில் இருக்கும் வசதிகளை மறைத்தார்களாம். கணினி வீட்டில் இருக்கிறதா? டிவி வீட்டில் இருக்கிறதா போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் 'இல்லை'. அது வீட்டில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி.

இந்த அரசாங்கங்களின் இலவசத்திட்டங்கள்தான் இந்த பொய்களுக்குக் காரணம். என் வீட்டில் அது இருக்கிறது இது இருக்கிறது என்று தகவல் கொடுத்தால் நாளை இலவசமாக வர வேண்டிய பொருள் ஏதாவது வராமல போய்விட்டால் என்ன செய்வது என்ற ஏடாகூடமான பயம்தான் காரணம். இதே நிலைதான் ஜாதியக் கணக்கெடுப்பிலும் இருக்கும். தன் உண்மையான ஜாதியைச் சொல்வதால் ஏதேனும் சலுகைகளை தானோ தன் குடும்பமோ இழக்கக் கூடும் என்ற எண்ணத்தில் மாற்றிச் சொல்லும் போது துல்லியமான எண்ணிக்கையில் கணக்கெடுப்பு இருக்குமா என்று தெரியவில்லை.

புள்ளியியலில் இப்படி நேரும் தவறுகளையும் கணக்கில் வைத்துத்தான் கணக்கீடுகளைச் செய்வார்கள் என்றாலும் இந்த கணக்கெடுப்பு முறை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

இந்தக் ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவாக குரல் எழுப்பவர்கள் சொல்லும் காரணம் இட ஒதுக்கீடு போன்ற சலுகைகள் சரியான மக்களுக்கு சரியான விகிதத்தில் கிடைக்க உதவும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளலாம் என்பது. இவர்கள் சொல்லும் வாதத்தில் உண்மை இருந்தாலும், இப்போதிருக்கும் இட ஒதுக்கீடு முறைகளில் அமலாக்கப்பட வேண்டிய மாற்றங்கள் பற்றி ஏன் யாருமே குரலெடுப்பதில்லை என்று தெரியவில்லை.

உதாரணமாக தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்து அரசாங்க அதிகாரிகளாக இருக்கும் தம்பதியரின் மகனுக்கோ அல்லது மகளுக்கோ கிடைக்கும் அதே சலுகைதான் சேரியில் இருந்து கொண்டு கூலி வேலை செய்யும் தம்பதியினரின் மகனோ அல்லது மகளுக்கோ கிடைக்க வேண்டுமா?

ஆதிக்க சாதிகள் பெரும்பாலானவை பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பிரிவில் வருகின்றன. இந்த ஆதிக்க சாதியில் பிறந்த வசதியானவரின் குழந்தைக்கு எதற்காக இட ஒதுக்கீட்டில் சலுகை கிடைக்க வேண்டும்?

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என பெரு மொத்தமாகப் பேசுவது கதைக்கு உதவாது. எந்த பெரு விவசாயியும் இந்த நாட்டில் வரி கட்டுவதில்லை. எந்தத் தொழிலதிபரும் தன் வருமானத்தை வெளிப்படையாகச் சொல்வதில்லை. பிறகு எதனடிப்படையில் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு சாத்தியம்?

சாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பதில் குறைகளும் அல்லது பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு அளிப்பதில் நிறைய சிக்கல்களும் இருக்கின்றன. இதைப்பற்றிய எந்தவிதமான வெளிப்படையான விவாதமும் நடத்த எந்த அரசியல் கட்சியும் ஜாதீய அமைப்புகளும் தயாரில்லை. எல்லாம் வாக்கரசியல்.

Jun 9, 2010

புலி, பண்ணாரி வனம்

ஈரோட்டில் 29-05-2010 இல் சேகர் தத்தாத்ரியின் "புலி: ஒளிரும் ரகசியங்கள்" என்ற குறும்படத்தின் திரையிடலுக்கு கோவையைச் சேர்ந்த ஓசை என்ற சூழலியல் செயல்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். சேகர் தத்தாத்ரியும் வந்திருந்தார்.சூழலியல் சார்ந்த ஆவணப்படங்களை எடுத்து வருபவர் என்ற அளவில் எனக்கு இந்தப் பெயர் ஏற்கனவே அறிமுகமாகியிருந்தது. உலக அளவில் சூழலியல் சார்ந்த செயல்பாடுகளில் மிக முக்கியமான பெயரும் கூட.

அரங்கத்தில் நாற்பது சதவீதத்திற்கும் அதிகமான இடம் குழந்தைகளால் நிரப்பப்பட்டிருந்தது.

படம் 40 நிமிடங்களுக்கு ஓடுகிறது. புலி தன் இரையை வேட்டையாடல், இணை சேர்தல்,குட்டிகளோடான அதன் உறவு, காட்டில் புலிகளின் அன்றாட செயல்பாடுகள் என்று நகரும் படத்தில் புலிகள் தற்சமயம் எதிர்கொள்ளும் வாழ்வு சார்ந்த வேதனைகளை சற்று விரிவாக அலசுகிறார்கள். வேட்டையாளர்களின் கருணையற்ற தன்மை குறும்படத்தில் விரிவாக்கப்படுகிறது.

படம் முடிந்த பிறகு சேகர் தத்தாத்ரியுடனான உரையாடல் நிகழ்ந்தது.

தரவுகள் அதிகமாகவும் பிரச்சார யுக்திகள் குறைவாகவும் இருத்தல் வேண்டும் என்று ஆவணப்படம் என்பதற்கு என்னளவில் ஒரு வரையறை இருக்கிறது. அப்படி எந்த வரையறையும் இருக்கத் தேவையில்லை என்பது சேகர் தத்தாத்ரியின் கூற்று. இந்தக் குறும்படம் என் வரையறைக்கு நேர் எதிர்.

புலி குறித்தான புரிதலையும், அவை மீதான கருணையையும் இந்தக் குறும்படம் பார்வையாளர்களுக்கும் உருவாக்கியிருந்தது என்பது உறுதி.

மேலதிக தகவல்களை பின்வரும் தளத்தில் அறியலாம்: http://truthabouttigers.org/ -புலி: ஒளிரும் ரகசியங்கள் குறும்படத்தை இந்தத் தளத்தில் பதிவு செய்பவர்களுக்கு இலவசமாக அனுப்பியும் வைக்கிறார்கள்.
===
வழக்கமாக பெங்களூரிலிருந்து செல்லும் போது ஈரோட்டில் இறங்கி கோபி செல்லும் பேருந்தை பிடிக்க வேண்டும். அந்த இரவு நேரத்திலும் பேருந்தில் இடம் பிடிக்க துக்கினியூண்டு சண்டை நடக்கும். இந்த வாரம் இரவில் ஒன்றே முக்காலுக்கு வந்த மைசூரு பேருந்தில் வீரப்பிரதாபங்களை காண்பித்து ஒரு இடத்தை பிடித்துவிட்டேன்.

வழக்கமாக ஏழு மணி நேரப் பயணத்தில் உறக்கம் வருவதில்லை. விஜய் போக்கிரியாகவோ அல்லது சிவகாசியாகவோ வந்து மகிழ்விப்பார். மைசூரு பேருந்தில் இதற்கு வழியில்லாததால் கண்ணைச் சுழற்றியது. விழிப்பு வந்த போது காட்டுக்குள் பேருந்து சென்று கொண்டிருந்தது. "நடத்துனரிடம் கோபி வந்துடுச்சா சார்?" என்றதற்கு, "கோபி போச்சு, சத்தி போச்சு, பண்ணாரி வர்து" என்று தமின்னடத்தில் மாத்தாடினார்.

பண்ணாரி கோயிலில் இறங்கி நின்றால் சுற்றிலும் அடர்ந்த இருட்டுதான் இருந்தது. கொஞ்ச நேரத்தில் மைசூரிலிருந்து வந்த இன்னொரு பேருந்தில் ஏறிக் கொண்டேன்.

என்னுடைய நல்ல நேரமாகத்தான் இருக்க வேண்டும். பண்ணாரி தாண்டிய வனப்பகுதியில் மூன்று யானைகள் நடுச் சாலையில் நின்று கொண்டிருந்தன. விளக்குகளை அணைத்துவிட்டு வெகு தூரமாக ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டார். பெரும்பாலான பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். சாலையில் வேறு எந்த வண்டிகளும் இல்லை. சற்று நேரத்தில் எல்லாம் ஆஜானுபாகுவான யானைகள் வெகு மெதுவாக சாலையைக் கடந்து வனத்திற்குள் புகுந்தன.பயம் கலந்த சிலிர்ப்பாக இருந்தது.

இதைப் பார்ப்பதற்காகவே கூட ஒவ்வொரு முறையும் பண்ணாரி வரலாம் போலிருக்கிறது.

குறிப்பு: இந்திய அளவில் புலிகள் காணப்படும் பகுதிகள் எனக் குறிக்கப்படும் வரைபடத்தில்(மேப்) இந்த வனப்பகுதி முதன்முதலாக இடம்பெற்றிருக்கிறது.

Apr 12, 2010

நாட்டு நடப்பு

டந்த சில ஆண்டுகளில் மக்கள் மத்தியில் அரசியல் தலைவர்கள் குறித்தான ஒரு மந்தமான மனநிலை வந்திருப்பதை கவனிக்கலாம். எவனாவது எப்படியாவது தொலையட்டும் எனக்கு எந்தப் பிரச்சினையும் வராமல் இருக்கும் வரை சரி என்பதான மனநிலை. இந்த மனநிலை அரசியல் தலைவர்களைப் பற்றியது மட்டுமில்லை. அனைத்து விஷயங்களிலும் அப்படித்தான் இருக்கிறோம். பொதுவாகவே சுரணையற்ற நம் மந்த நிலைதான் சமீப காலங்களில் இன்னும் அதிகமாக மரத்துப் போயிருக்கிறது. எருமை மீது பெய்யும் மழைக் கணக்காவே ஆகியிருக்கிறோம்.

கிட்டத்தட்ட அத்தனை தலைவர்களும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். பதவியையும், அதிகாரத்தையும் கைப்பற்றுதல், தன் வாரிசுகளுக்கான இடங்களை உறுதிப்படுத்துதல், பணம் சேர்த்தல் போன்றவை அவர்களுக்கு அடிப்படைக் கொள்கையாக இருக்கிறது. இந்த கொள்கை நிலை வார்டு கவுன்சிலர் தொடங்கி, தேசிய அளவிலான பெரிய தலைவர்கள் வரை ஒரே மாதிரிதான் இருக்கிறது. விதிவிலக்குகள் என்று யாரும் இல்லை. நாமும் இதை ஏற்றுக் கொள்ளப் பழகிவிட்டோம். அதை விடுங்கள்.

ரு நிகழ்வுக்கு தார்மீகப் பொறுப்பேற்று தன் பதவியை அமைச்சர் ராஜினாமா செய்வது என்பதெல்லாம் பழங்கதை. நிகழ்வுக்கு அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று யாரும் அதை எதிர்பார்ப்பதுமில்லை. அரசியல் தலைவர்கள் தார்மீகம் என்ற அடிப்படையில் பதவியை விட்டுக் கொடுக்க முட்டாள்களில்லை என்பதும் மக்களுக்குத் தெரியும்.

இந்த நிலையில் தந்தேவாடா பகுதியில் மத்திய ரிசர்வ் படையினரை குருவி சுடுவதைப் போல சுட்டுத் தள்ளிய நக்சலைட்டுகளின் கொள்கை நிறைவேற விட மாட்டோம் என்று முஷ்டி முறுக்கிய கையோடு சில பல அறிவிப்புகளை வெளியிட்ட மாண்புமிகு உள்துறை அமைச்சர், ராஜினாமா செய்ய விரும்புவதாக கடிதம் எழுதியிருக்கிறார்.

அடுத்து என்ன நடக்கும் என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான், சிதம்பரம்ஜி யின் சேவை நாட்டுக்கு மிக அவசியம் என்று மன்மோகன் சிங் ராஜினாமாவை ஏற்க முடியாது என்பார் என்பதும், சோனியா அவருக்கு ஆதரவாக பேசுவார் எபன்பதையும் யாரும் ஊகித்திருப்பார்கள். பிறகு எதற்கு ராஜினாமா செய்கிறேன் என்று சொல்கிறார் என்றுதான் புரியவில்லை.

தனக்கு உள்துறை வேண்டாம், நிதியமைச்சராக இருப்பதில் மட்டுமே விருப்பம் என்று சூசகமாக தெரிவிப்பதாகக் கூட இருக்குமோ?

ரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் திரும்பிய பக்கமெல்லாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு விளம்பரங்கள்தான் கண்ணில்படுகிறது. பேருந்துகளில் திருவள்ளுவரை வரைந்துவிட்டார்கள். 'சூன்' 23-27இல் கோயமுத்தூர் வந்து சேருங்கள் என்று பேருந்தின் பயணச்சீட்டின் பின்புறம் கூட எழுதி வரவேற்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் கொங்குப் பகுதியில் வாங்கிய அடியை ஈடுகட்டத்தான் கோவையை தேர்ந்தெடுத்தார்கள் என்று யாரோ ஒரு சமயத்தில் சொன்ன போது பெரிதாக உறைக்கவில்லை.

ஆனால் இப்பொழுது பார்த்தால் திமுக மாநாடு என்ற பெயரை மட்டும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று மாற்றிவிட்டார்களோ என்று தோன்றுகிறது. வீதிக்கு வீதி கழகக் கண்மணிகள் வினைல் தட்டி வைத்திருக்கிறார்கள். தரணியை ஆளும் தலைவனும் தங்க தமிழ் மகனும் அழைக்கிறார்கள்- வேங்கைப் புலியின் தலைமையில் அணி திரள்வோம் என்கிறார்கள் அல்லது கர்ஜிக்கும் சிங்கத்தின் தலைமையில் கோவையை அதிரச் செய்வோம் என்கிறார்கள்.

கனிமொழி ஆங்காங்கே இடம் பெறுகிறார். அவருக்கு அளிக்கப்பட்ட பல்வேறு வினோத பட்டங்களில் கலைத்தாயின் செல்லமகள் என்ற பட்டம் மனதில் நிற்கிறது. விடுவார்களா அடுத்தவர்கள்? கவித்தாய் கயல்விழி அழைக்கிறார் என்று எதிர் சுவற்றில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

கலைஞருக்கு இப்படி நடப்பதெல்லாம் தெரியாமல் இருக்குமா அல்லது அவரேதான் செய்யச் சொல்கிறாரா?

Nov 20, 2009

அதற்கு மேல் ஒன்றுமில்லை

நீண்ட நாட்களாக இருந்து வந்த வலைப்பதிவின் வடிவத்தை மாற்றியாகிவிட்டது.

மாற்றிவிட்டு பார்க்கும் போது வெயிலில் அலைந்து கசங்கியவன் வெதுவெதுப்பான வெந்நீரில் குளித்துவிட்டு வருவதை போல இதமாக இருக்கிறது.

இது ரசனையும் அழகியலும் சார்ந்த விஷயம். அழகு என்பதன் வரையறை கூடவும் ஆளுக்குத் தகுந்தவாறுதானே?."பொண்ணு வெள்ளையா பளிச்சுன்னு வேணும்" என்று சொல்வதில் கூடவும் அரசியல் இருக்கிறது. மரங்களும், உதிரும் மலர்களும் அழகு என்று நினைத்து வடிவமைத்திருக்கிறேன். கற்பனாவாதம் என்றும் சொல்லலாம்.

அதைப் பற்றி எல்லாம் யோசிக்கவில்லை.

இலவசமாக கிடைத்த வடிவமைப்பில், இதுதான் கண்ணுக்கு பிடித்ததாகவும், எளிமையாகவும், டெக்னிக்கலாக பிரச்சினை செய்யாததாகவும் இருந்தது.
====
ஒரு வலைப்பதிவில் "பின்னூட்டமிட்டால் அதற்கு பதிலிடும் நல்ல பழக்கத்தை பின் பற்றுங்கள்" என்று அந்த வலைப்பதிவாளருக்கு அறிவுறுத்தியிருந்தார்கள். இது எனக்கான பின்னூட்டம் இல்லை என்றாலும், உறுத்துகிறது.

பெரும்பாலான பின்னூட்டங்களுக்கு பல சமயங்களில் பதிலிடாமல் இருந்திருக்கிறேன். அடிப்படை நாகரிகம் கூட இல்லையோ? பதிலிட வேண்டும். இல்லையென்றால் பின்னூட்ட வசதியை நீக்கிவிடலாம்.

ஒவ்வொருவருக்கும் பதிலிடுவதிலேயே பின்னூட்டத்தின் எண்ணிக்கையை அதிகமாக்கி காட்டாமல் இருந்தால் சரி.
===
இந்த வாரம் சென்னையில் வலைப்பதிவர் சந்திப்பு ஏதும் உண்டா?. இந்த சனி,ஞாயிறு சென்னையில்தான் டேரா. (09663303156) யாரேனும் தெரியப்படுத்தினால் மிக்க மகிழ்ச்சி.
===
உலகப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப்பாதையில் திரும்பிவிட்டதாக சொல்கிறார்கள். பெரும்பாலான ஐடி நிறுவனங்களும், இன்ன பிற தனியார் நிறுவனங்களும் இரண்டாண்டு கால மந்தநிலையைக்காட்டி ஊதிய உயர்வை நிறுத்தி வைத்திருக்கின்றன. இந்திய ஐடி நிறுவனங்கள் இந்தச் சூழலை பயன்படுத்தி உறிஞ்சி எடுக்கின்றன. வேலை போய்விடலாம் என்ற பயத்திலேயே வாய் திறவாமல் செக்கு மாடுகளை விடவும் அதிகமாக, செய்த வேலையையே திரும்பச் செய்யும் ஐடி நண்பர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது.

ஐடி காரனுகளுக்கு சம்பளம் அதிகம், அவர்களால் விலைவாசி உயர்ந்துவிட்டது என்றெல்லாம் போராடி அரசு ஊழியர்கள் 40% ஊதிய உயர்வு என்பதெல்லாம் சாதாரணம் என்ற நிலையை அடைந்துவிட்டார்கள். நல்ல ஊதியமும் பெறுகிறார்கள்.

ஐடிக்காரனும் அரசு ஊழியனும் பெறும் வருமானத்தில் எத்தனை சதவீதம் கூலி வேலை செய்பவனுக்கும், தனியார் மில்லில் வேலை செய்பவனுக்கும் கிடைக்கிறது என்று பார்த்தால் சதவீத அடிப்படையில் பெரும் வித்தியாசம் இருக்கிறது.

இந்த வித்தியாசம் தொடருமானால் வாழ்க்கைத்தரத்தில் பெரும் வித்தியாசங்களை உடைய சமூகங்கள் உருவாகும்.

எப்பொழுதுமே பெரும்பாலான பிரச்சினைகளுக்கு சமூகத்தினுள் நிலவும் வேறுபாடுகளே காரணமாக இருந்திருக்கின்றன.
====
மது கோடா நோட்டுக்களை எண்ணுவதற்கு மட்டும் நான்கு மெஷின்களை வைத்திருந்தாராம். அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியிலும் குடை பிடிப்பான் என்ற கதைதான் இது. சுயேட்சை எம் எல் ஏவாக இருந்து, அடித்த காற்றில் கோபுரம் ஏறி முதல்வரும் ஆகிவிட்ட குப்பை மது கோடா.

கிடைத்ததே சமயம் என்று வாரிச்சுருட்டியிருக்கிறார். பல அரசியல்வாதிகளின் வருமானத்தில் ஒப்பிடும் போது 2500 கோடி என்பது ஜுஜுபி மேட்டர். மற்றவர்களுக்கு எப்படி சிக்காமல் கை வைக்க வேண்டும் என்று தெரிகிறது. மது கோடாவுக்கு தெரியவில்லை.

ஏதோ அறுபதாயிரம் கோடி ஊழல் என்றார்களே. அது எந்த ஊழல்???