Aug 13, 2010

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு தேவையா என்பது இரண்டாம் பட்சம் துல்லியமான கணக்கெடுப்பை நிகழ்த்த முடியுமா என்பதுதான் பெரிய சவால். இந்த முறை மக்கள் தொகை கணக்கெடுக்கச் சென்றிருந்த ஆசிரியர்களிடம் நிறையப் பேர் வீட்டில் இருக்கும் வசதிகளை மறைத்தார்களாம். கணினி வீட்டில் இருக்கிறதா? டிவி வீட்டில் இருக்கிறதா போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் 'இல்லை'. அது வீட்டில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி.

இந்த அரசாங்கங்களின் இலவசத்திட்டங்கள்தான் இந்த பொய்களுக்குக் காரணம். என் வீட்டில் அது இருக்கிறது இது இருக்கிறது என்று தகவல் கொடுத்தால் நாளை இலவசமாக வர வேண்டிய பொருள் ஏதாவது வராமல போய்விட்டால் என்ன செய்வது என்ற ஏடாகூடமான பயம்தான் காரணம். இதே நிலைதான் ஜாதியக் கணக்கெடுப்பிலும் இருக்கும். தன் உண்மையான ஜாதியைச் சொல்வதால் ஏதேனும் சலுகைகளை தானோ தன் குடும்பமோ இழக்கக் கூடும் என்ற எண்ணத்தில் மாற்றிச் சொல்லும் போது துல்லியமான எண்ணிக்கையில் கணக்கெடுப்பு இருக்குமா என்று தெரியவில்லை.

புள்ளியியலில் இப்படி நேரும் தவறுகளையும் கணக்கில் வைத்துத்தான் கணக்கீடுகளைச் செய்வார்கள் என்றாலும் இந்த கணக்கெடுப்பு முறை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

இந்தக் ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவாக குரல் எழுப்பவர்கள் சொல்லும் காரணம் இட ஒதுக்கீடு போன்ற சலுகைகள் சரியான மக்களுக்கு சரியான விகிதத்தில் கிடைக்க உதவும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளலாம் என்பது. இவர்கள் சொல்லும் வாதத்தில் உண்மை இருந்தாலும், இப்போதிருக்கும் இட ஒதுக்கீடு முறைகளில் அமலாக்கப்பட வேண்டிய மாற்றங்கள் பற்றி ஏன் யாருமே குரலெடுப்பதில்லை என்று தெரியவில்லை.

உதாரணமாக தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்து அரசாங்க அதிகாரிகளாக இருக்கும் தம்பதியரின் மகனுக்கோ அல்லது மகளுக்கோ கிடைக்கும் அதே சலுகைதான் சேரியில் இருந்து கொண்டு கூலி வேலை செய்யும் தம்பதியினரின் மகனோ அல்லது மகளுக்கோ கிடைக்க வேண்டுமா?

ஆதிக்க சாதிகள் பெரும்பாலானவை பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பிரிவில் வருகின்றன. இந்த ஆதிக்க சாதியில் பிறந்த வசதியானவரின் குழந்தைக்கு எதற்காக இட ஒதுக்கீட்டில் சலுகை கிடைக்க வேண்டும்?

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என பெரு மொத்தமாகப் பேசுவது கதைக்கு உதவாது. எந்த பெரு விவசாயியும் இந்த நாட்டில் வரி கட்டுவதில்லை. எந்தத் தொழிலதிபரும் தன் வருமானத்தை வெளிப்படையாகச் சொல்வதில்லை. பிறகு எதனடிப்படையில் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு சாத்தியம்?

சாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பதில் குறைகளும் அல்லது பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு அளிப்பதில் நிறைய சிக்கல்களும் இருக்கின்றன. இதைப்பற்றிய எந்தவிதமான வெளிப்படையான விவாதமும் நடத்த எந்த அரசியல் கட்சியும் ஜாதீய அமைப்புகளும் தயாரில்லை. எல்லாம் வாக்கரசியல்.

7 எதிர் சப்தங்கள்:

கல்வெட்டு said...

.

மக்கள் பொய் சொல்கிறார்கள். இதை யாரலும் ஒன்றும் செய்யமுடியாது. இந்தியாவில் 99.9 % சதவீதம் கடவுள் நம்பிக்கையாளர்கள். அவர்கள் பொய் சொன்னால் கடவுளே ஒன்றும் செய்ய முடியாதபோது யாரும் ஏதும் செய்ய முடியாது.

தனக்கு உண்மையாக இல்லாதவன் மனிதனே இல்லை.

******

ஜாதி கணக்கெடுப்பு

‌1. ஜாதி என்ற ஒன்று சமூகத்தில் இருந்தால் அது பதிவு செய்யப்பட வேண்டும்.

2. ஜாதி கணக்கெடுப்பு வேண்டால் என்றால், சமூகத்தில் ஜாதி என்ற ஒன்று அழிந்ததாக இருக்க வேண்டும்.

3. இருக்கும் ஒன்றை கணக்கெடுப்பது அவசியம். அதை எப்படி எதற்கு பயன்படுத்துகிறோம் என்பது அடுத்த கேள்வி.

4. சாதி என்பது ஒரு நோய் என்று கொண்டால் அந்த நோய் உள்ளவர்கள் யார் எத்தனை பேர் என்று அறியப்படவேண்டும்.

http://dharumi.blogspot.com/2010/05/392.html?showComment=1273694345835#comment-6116402700169595325


*****

சாதீ அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் நோக்கம் யாருக்கும் தெரிவது இல்லை. பெத்த அறிவாளிகளுக்கும். :-((((

பெரியார் காலத்தில் இருந்த பார்ப்பனீயக் கொடுமைகள் இன்றுவரை அப்படியே உள்ளது.அதன் உக்கிரம் தேவர் /பிள்ளை Vs தலித் என்று தெரிந்தாலும் இன்னும் அய்யர் / அய்யங்கார் Vs மற்றவர்கள் என்ற நுண்ணிய பார்ப்பனீய அடிப்படை அப்படியே உள்ளது.

வர்ணாசிரமத்தால் சமூகத்தில் அடக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டவர்களை, எப்படி அதே சமூகத்தால் மதிக்கச் செய்து சமுதாயச் சமநிலைக்கு கொண்டு வருவது? என்று உண்டான சிந்தனையில் தோன்றிய பல திட்டங்களில் ஒன்றுதான் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு.

அதுபோல் சமுதாய சம நிலைக்காக தோன்றிய மற்ற திட்டங்கள் தேர்தல் இட ஒதுக்கீடு
ஆலய நுழைவு
முலை வரி அகற்றல்
....என்று பல திட்டங்கள் உண்டு.

இவை எல்லாவற்றின் அடிப்படை நோக்கம், "வர்ணாசிரமத்தால் சமூகத்தில் அடக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டவர்களை எப்படி அதே சமூகத்தால் மதிக்கச் செய்து சமுதாயச் சமநிலைக்கு கொண்டு வருவது"

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு மட்டுமே
வர்ணாசிரமத்தால் சமூகத்தில் அடக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டவர்களை, மீண்டும் அதே சமூகத்தால் மதிக்கச் செய்து சமுதாயச் சமநிலைக்கு கொண்டுவரும் என்று சொல்லமுடியாது. அதன் பொருட்டே மற்ற சட்டங்களும்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கொடுப்பதால் வர்ணாசிரமத்தால் கேவலப்படுத்தப்பட்டவர்கள் நல்ல பதவி மற்றும் பொருளாதர நிலையை அடையும்போது மற்ற ஆதிக்க சமுதாயம் இவர்களையும் மதிக்கும் , அப்படி நடக்கும் பட்சத்தில் படிப்படியாக வர்ணாசிரமம் அழிந்துவிடும் என்ற நம்பிக்கையில் ஏற்படுத்தப்பட்டதே கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு.

***

ஆனால் இந்த கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டினால் வர்ணாசிரமத்தால் கேவலப்படுத்தப்பட்டவர்களின் பொருளாதர நிலை உயர்ந்தாலும் அவர்களின் சமூக அந்தஸ்தது மாறவில்லை.


இன்னும் தாழ்த்தப்பட்ட ஒருவர் பஞ்சாயத்து தலைவரானால் அவரிடம் வேலை செய்ய ஆதிக்க சக்தி தயாராக இல்லை.

இன்னும் வாயில் பீ ஊற்றத்தான் செய்கிறார்கள்.

இன்னும் கோவிலில் கருவறையில் நுழைய சண்டை போட வேண்டியுள்ளது.


****

எனவே "பொருளாதரத்தை உயர்த்துவதால் ( இந்த கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு) வர்ணாசிரமத்தால் கேவலப்படுத்தப்பட்டவர்களின் சமுதாய அந்தஸ்து மற்றவர்களுக்குச் சமமானதாக மாறும்" என்ற நம்பிக்கையில் தோன்றிய இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டங்கள் உண்மையில் அதன் நோக்கத்தை நிறைவேற்றவில்லை.

:-((((

எப்படி நடார் கிறித்துவரான பிறகு கிறித்துவ நாடார் ஆக மாறினாரோ அதே போல பொருளாதர வசதியற்ற தாழ்த்தப்பட்டவர்கள் இப்போது வசதியான தாழ்த்தப்பட்டவர்களாக உள்ளார்கள். சமுதாய தாழ்தப்பட்ட நிலை அப்படியேதான் உள்ளது.


***


மனிதன் அனைவரும் ஒன்று எண்ணி பெருவாரியாக கலப்பு மணங்களும் மக்களின் மனத்தடைகளும் உண்மையில் நீங்காதவரை எல்லா இடஒதுக்கீடுகளும் அதன் உண்மையான நோக்கத்தை (சம சமூக அந்தஸ்து) உண்டாக்கப்போவது இல்லை.

ஒதுக்கீடுகள் எல்லாம் சாதி ரீதியான சலுகையாகவே மக்களால் அறியப்படுகிறது. பயன் அனுபவிப்பர்களுக்கே அந்த சலுகையின் உண்மையான நோக்கம் தெரிவது இல்லை. பயனடந்தவர்களே நாளடைவில் நவீன பார்ப்பனியளாரகா மாறி தங்களுக்கு கீழ் அடுத்த ஒரு தாழ்த்தப்பட்ட அடுக்கை தோற்றுவித்து இவர்கள் நவீன / புதிய எஜமானர்களா மாறிவிடுகிறார்கள்.

சாதி/மதப் பார்வையில் இந்தியா உருப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

சாணக்கியன் said...

buzz-இல் போட்டதை இங்கே மறுபடியும் இடுகிறேன்...

கடைசியில் நீங்கள் எதையும் முன்வைக்கவில்லையே? ஏற்கனவே பேசியதைத்தான் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்லியுள்ள பிரச்சனைகளில் ஒன்றைப் போக்கத்தான் க்ரீமி லேயர் இடஒதுக்கீட்டில் ஒதுக்கப்படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொன்னது. வாக்குவங்கி ஆட்சியாளர்கள் அதற்கு தயாரில்லை. பிறப்பால் உயர்வுதாழ்வு பார்ப்பது தவறு என்று சொல்பவர்கள் பிறப்பால் உயர்குடியில் பிறந்தவன் எவ்வளவு ஏழையானாலும் அவனுக்கு எந்த உதவியும் இல்லை என்கிறார்கள். அவன் எவ்வளவு ஸ்காலரானாலும் அவனுக்கு எந்த ஸ்காலர்ஷிப்பும் கிடைக்காது!

கணக்கெடுப்பின்போது ஜாதியை மாற்றிச்சொல்லாமலிருக்க சாதிச்சான்றிதழை காட்டச்சொல்லலாம். ரேஷன் கார்டிலேயே ஜாதியை குறிப்பிடலாம்!

Vaa.Manikandan said...

கல்வெட்டு,

சாதியக் கணக்கெடுப்பு தேவை என்பதே என் கருத்தும். ஆனால் அதனை அறிவியல் பூர்வமாக இந்த அரசாங்கம் செயல்படுத்த வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு போல தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடம் ஒரு காகிதத்தை தந்து கணக்கெடுத்து வாருங்கள் என்பது சரியான முடிவு அல்ல.

இருக்கும் போது ஒன்றை கணக்கெடுப்பது அவசியம் என்பதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தவறான புள்ளி விவரங்கள் சரியான சலுகைகள் தவறானவர்களுக்கு கிடைப்பதற்கான வழிவகையைச் செய்துவிடும்.

உதாரணமாக பிற்படுத்தப்பட்ட சாதி 'அ' 17% இருப்பதாக கணக்கு வருகிறது, ஆனால் உண்மையில் அந்த சாதி 15% தான் என்று வைத்துக் கொள்ளலாம். பிறகு சாதிவாரியான இட ஒதுக்கீடு என்ற பெயரில் இந்த சாதி சற்று அதிக சலுகைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதனை மறுப்பதற்கில்லை.

இந்த கணக்கெடுப்பு முறையை சரியான படி நடத்த வேண்டும் என்பது என் விருப்பமாக இருக்கிறது.

சாணக்கியன்,

நான் ட்விட்டர்,பஸ்ஸ் ஆகியவற்றில் புழங்குவதில்லை. அதனால் அதில் எழுப்ப்படும் வினாக்கள் என் கவனத்திற்கு வருவதில்லை.

க்ரீமி லேயர் என்பதெல்லாம் கண் துடைப்பு சமாச்சாரம். இந்தியாவில் எந்த விவசாயி அல்லது தொழிலதிபர் சரியான வருமானத்தைக் காட்டுகிறார் என்ற வினா இருக்கிறது. எதனடிப்படையில் க்ரீமி லேயர் என்று பிரிப்பது?

சாதிச் சான்றிதழைக் காட்டு என்று கணக்கெடுக்கச் செல்பவர் கேட்கும் போது, என்னிடம் சாதிச் சான்று இல்லை என்ற பதில் வரும் போது என்ன செய்ய முடியும்?

Unknown said...

சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு மிகத் தேவை. எந்த ஒரு கணக்கெடுப்பிலும் மிகத்துல்லியமான விபரங்களை பதிவு செய்ய முடியாது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்க்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் உண்மையான பதில்களை மக்கள் கொடுக்கவில்லை என்பது தெரிந்தும் அந்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லையா? சாதிவாரி கணக்கெடுப்பிலும் உண்மைக்கு மாறான விபரங்கள் கொடுக்கப்படலாம். அப்படி சில பாதகங்களை மனதில் கொண்டு மொத்தமாக சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டுமா என கேட்பது தவறானது என்பது என் கருத்து. மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது கணினி இல்லை, குளிர்சாதன பெட்டி இல்லை என்று பொய் சொல்லுவது போல, சாதியிலும் பொய் சொல்லி கணக்கெடுப்பு தோல்வி அடையும் என கற்பனை செய்வது வேடிக்கையாகவே உள்ளது. இப்போதைக்கு சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்.

உங்களிடம் சில கேள்விகள்,
1 . சாதிவாரி கணக்கெடுப்பை அறிவியல் பூர்வமாக செயல்படுத்துவது என்றால் எப்படி?

2 . //சாதாரணமாக பிற்படுத்தப்பட்ட சாதி 'அ' 17% இருப்பதாக கணக்கு வருகிறது, ஆனால் உண்மையில் அந்த சாதி 15% தான் என்று வைத்துக் கொள்ளலாம்// இதற்கான சாத்திய கூறு என்ன? கணக்கெடுப்பில் 17% என கணக்கு வரும் போது உண்மையில் 15% தான் என எந்த கணக்கெடுப்பின் படி அறிவீர்கள்? மேலும், ஏன் அது 15%-கு பதிலாக 20%-ஆக இருக்க கூடாது?

Vaa.Manikandan said...

அன்பின் ஜெயகர்,

நான் கல்வெட்டு சொல்லியிருக்கும் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். அதாவது, இருக்கும் ஒன்றை கணக்கெடுப்பது அவசியம். ஆனால் அதை சாதாரண மக்கள் தொகை கணக்கெடுப்பது போல எடுப்பதை எதிர்க்கிறேன்.
1) சாதிவாரி கணக்கெடுப்பை அறிவியல் பூர்வமாக செய்வது எப்படி என்ற வினாவிற்கு முழுமையான பதில் என்னிடம் இல்லை. ஆனால் பின்வரும் முறைகள் ஓரளவு உதவலாம்.

அ) கிராம நிர்வாக அதிகாரியும் அவரது உதவியாளரும் கட்டாயம் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். ஒருவருக்கு புதிதாக சாதிச்சான்றிதழ் வழங்க இவர்கள் எவ்வளவு சிரத்தை எடுக்கிறார்களோ அதே அளவிற்கான சிரத்தையை ஜாதிவாரி கணக்கெடுப்பில் காட்ட வேண்டும்

ஆ) கவுன்சிலர்கள் போன்ற உள்ளாட்சி அமைப்பைச் சார்ந்தவர்கள் இந்தப் பணிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

இ) கலப்புத் திருமணம் செய்தவர்களின் எண்ணிக்கை முழுமையாக பதிவு செய்யப்படல் வேண்டும்.

ஈ) வெளி மாநில நகரங்களில் உதாரணமாக பெங்களூரில் கணக்கெடுக்கப்படும் போது தமிழகத்தில் மிகச் சிறிய விகிதத்தில் இருக்கும் நரம்புகட்டி கவுண்டர் போன்ற சிறிய சாதிகளைச் சார்ந்தவர் இருப்பின், அவரை "மற்றவர்" என்ற பிரிவில் ஒதுக்காமல் நரம்புகட்டி கவுண்டர் என்றே கணக்கிடல் வேண்டும்.

உ) காலக்கெடுவை குறுக்கி கணக்கெடுப்பவரின் தலை மீது அழுத்தம் தரக்கூடாது. இது எப்படியாவது கணக்கெடுப்பை முடித்தால் சரி என்ற மனநிலைக்கு அவரைக் கொண்டு வந்துவிடும்.

ஊ) கணக்கிடல் துல்லியமாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஊடகங்களில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து உண்மையான தகவல்களை அளிக்கும்படி கோரலாம்.

இவை யாவுமே என் சிற்றறிவுக்கு எட்டியவைதான். நாடு தழுவிய விவாதம் மேற்கொள்ளப்படும் போதும் புள்ளியல் நிபுணர்களும் மிகச் சிறந்த ஆலோசனைகளை அளிக்கக் கூடும்.

2) 15% இருக்க வேண்டிய இடத்தில் 17% இருந்தாலும் தவறுதான், 12% இருந்தாலும் தவறுதான். அந்த தவறுதான் இருக்கக் கூடாது.

Unknown said...

மேலே சொன்ன கருத்துக்கள் கட்டுரையிலும் இருந்திருந்தால் முதல் கேள்விக்கான அவசியம் இருந்திருக்காது!

//நாடு தழுவிய விவாதம் மேற்கொள்ளப்படும் போதும் புள்ளியல் நிபுணர்களும் மிகச் சிறந்த ஆலோசனைகளை அளிக்கக் கூடும்.// இந்த நம்பிக்கை நமக்கு இருப்பின் நான் கேட்ட இரண்டாவது கேள்வியும், அதற்கான உங்கள் பதிலும் அவசியமற்றதாகி விடுகிறது. ஆக, எந்த விதத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு தவறில்லை. அது நடத்தப்பட வேண்டும்.

(மனுதர்மத்தின் அதிஉன்னத வெற்றியை தெரிந்துக்கொள்ளவும் நான் ஆவலாய் இருக்கிறேன்!!!)

Anonymous said...

ஆண்டுகளில் கிடைத்த இட ஒதுக்கீட்டில் முன்னேறாத மக்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பளிப்பது மற்ற மக்களை முட்டாளாக்கும் செயல்