Sep 11, 2012

பாஸ்!அணு ஆற்றல் ரொம்ப அவசியம்


கூடங்குளம் கலவர பூமியாக மாறியிருக்கிறது. அரசுக்கு ஆதரவளிக்கு ஊடகங்கள் பிரச்சினையை ஒரு திசையில் அணுகுகின்றன. அணு உலை எதிர்ப்பாளர்களை ஆதரிக்கும் ஊடகங்களும், சமூக ஊடகங்களில் இயங்கும் தனிமனிதர்களும் அணு உலையை வேறு மாதிரியாக அணுகுகிறார்கள். அடிப்படையில் இந்தப்பிரச்சினை பன்முகத் தன்மையுடையது. தனிமனிதனால் இதன் முழுப்பரிமாணத்தையும் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றவில்லை. 

இந்த பிரச்சினையின் துவக்கப்புள்ளி ஒற்றைச் சொல்தான். அது "வளர்ச்சி" . இந்தச் சொல் மட்டுமே முதலாளித்துவ அரசுகளின் முழு சிந்தனையாக இருக்கிறது. தேசம் முழுவதும் தொழிற்சாலைகளும், வணிகவளாகங்களும் நிரம்பி வழிய வேண்டும் என்னும் முதலாளிகளின் ஆசைகளை பூர்த்தி செய்ய விரும்பும் அரசுக்கு மின் சக்தி அடிப்படைத் தேவையாகியிருக்கிறது. உண்மையில் இது அரசின் ஆசை மட்டுமில்லை. ஆறு இலக்க சம்பளமும், அதிநவீன வாழ்க்கை முறையும் வேண்டும் என விரும்பும் ஒவ்வொரு குடிமகனின் ஆசை.  இந்த ஆசை கொழுந்துவிட்டு எரிய "மின்சாரம்" தேவை. 

பெரிய பிரச்சினை எதுவும் இல்லாமல் மின்சாரம் தயாரிக்க வேண்டுமானால் நீர் மின்சாரம் ஒரு வரப்பிரசாதம். ஆனால் தேவைக்கும் வளர்ச்சி வேகத்திற்கும் அதனால் ஈடுகொடுக்க முடிவதில்லை. நீர் நிலைகளில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு குறையக் குறைய அனல்மின்சாரம் தயாரிக்க நிலக்கரியையும் இயற்கை எரிவாயுவையும் எரிப்பது அதிகரிக்கிறது. எரிக்கப்படும் நிலக்கரி வெளியிடும் மாசுகலந்த வாயுக்களும் வெப்பநிலையும் 'க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட்' என்னும் புவிவெப்பமயமாதலுக்கு தீனி போடுகின்றன. புவிவெப்பமயமாதலைத் தடுத்தாக வேண்டிய கட்டாயமும் அரசுக்கு உருவாகிறது.

பாம்பும் சாகக் கூடாது தடியும் முறியக் கூடாது. அடுத்த வழி? பெருகிவரும் மின் தேவைகளுக்கு மாற்றாக அணு ஆற்றலை அரசு முன்வைக்கிறது. அணு ஆற்றல் தயாரிப்பதற்கு தேவையான உலைகளும், உபகரணங்களும் மிக அதிக அளவிலான முதலீடு கோருபவை. இருப்பினும் அரசாங்கங்கள் இதை முன்னெடுக்க சில காரணங்கள் உண்டு. குறைந்த அளவிலான அணு எரிபொருள் போதுமானது, மிக அதிக அளவிலான மின்சாரம் தயாரிக்க முடியும் என்பன சில. இவை விஞ்ஞானப்பூர்வமான காரணங்கள். அரசியல் ரீதியான காரணங்களும் பின்ணணியில் இருக்கக் கூடும். அது உலக நாடுகள் தரக்கூடிய அழுத்தம், இந்த அணு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்காக அதிகார வர்க்கத்தின் மட்டத்தில்  பரிமாறிக்கொள்ளப்படும் இலஞ்சம் என்பவை சில காரணங்களாக இருக்கலாம்.

"அணு ஆற்றல் வேண்டாம்" வேண்டும் என்று குரல் எழுப்புவதற்கு உலகம் முழுவதுமே ஆட்கள் உண்டு. அவர்கள் சில வாதங்களை முன்வைக்கிறார்கள். அணு ஆற்றலை தவிர்த்து காற்றாலை, சூரியவெளிச்சம் போன்ற மாற்று எரிபொருட்களை பயன்படுத்தலாம் என்பதும், தற்போதைய மின் இழப்பை தவிர்ப்பது, மின் திருட்டை தடுப்பது போன்ற செயல்களின் மூலம் மின் தேவையை சரிகட்டலாம் போன்றவை அவற்றில் சில. 

ஆய்வுப்பூர்வமாக விவாதித்தால் அணு ஆற்றலுக்கான இணையான மாற்று என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சோலார், காற்றாலை போன்றவை தற்போதையை மின்தேவையை பூர்த்தி செய்வதற்கு உதவலாம். ஆனால் "வளர்ச்சி" என்ற மாயவலைக்குள் சிக்கியிருக்கும் உலகின் அகோரமான ஆற்றல் பசிக்கு இவையெல்லாம் சோளப்பொறிதான். இன்னும் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தேவை பன்மடங்கு அதிகரித்திருக்கும். மின் இழப்பை குறைப்பதும், மின் திருட்டை தடுப்பதும் (ஒருவேளை முழுமையாகச் செயல்படுத்தினால்) மட்டும் போதுமானதில்லை. எதிர்காலத்தில் தேவை அதிகரிக்கும் போது மாற்று ஆற்றலுக்கான வழியை கண்டுபிடித்தே தீரவேண்டும்.

மும்பை போன்ற பெருநகரங்களின் மின்தேவையை வருடக்கணக்கில் பூர்த்தி செய்ய சில அவுன்ஸ் யுரேனியம் போதுமானதாக இருக்கும். அதே சமயத்தில் தூத்துக்குடி போன்ற சிறு நகரத்தின் மின்தேவையை சில நாட்களுக்கு பூர்த்தி செய்வதற்கும் கூட பல சதுர மைல்களுக்கு 'சோலார் பேனல்கள்' அமைக்கப்பட வேண்டியிருக்கும். சோலார் தகடுகள் இத்தனை பெரிய பரப்பளவில் அமைப்பது மட்டும் பெரிய காரியமில்லை. அவற்றிற்கான பாதுகாப்பு? பராமரிப்புப்பணிகள்? ஆகவே அணு ஆற்றலுக்கு மாற்று என்ற வாதத்தை அறிவியல் ரீதியிலும் Practical ஆகவும் நிரூபிக்க முடியாது என நம்புகிறேன். 

அதே சமயம் கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது. அது  "பாதுகாப்பு". விபத்து என்று நிகழ்ந்துவிட்டால் இலட்சக்கணக்காணோரை காவு வாங்குவதுடன் கொள்ளுப்பேரன்களையும் கூட விட்டுவைக்காது. பிரதமரோ, முதலமைச்சரோ அல்லது மத்திய அமைச்சரோ வெளியிடும் அறிக்கைகளில் "கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது" என்ற பொதுவான அறிக்கையைத் தவிர்த்து "எப்படி" பாதுகாப்பானது என்பதை நிரூபிக்கும் முனைப்பு இல்லாதது வருத்தத்திற்குரியது. விபத்து நடக்காது என்றே நம்புவோம். ஒருவேளை விபத்து ஏற்படுமெனில் அதற்கான பொறுப்பு யாரைச் சாரும்?  போபால் விபத்தில் யூனியன் கார்பைடு 'கை கழுவி'விட்டு போனது போல ஒவ்வொருவரும் நழுவிவிட்டால் தமிழக அரசு தரும் மரணமடைந்தவர்களுக்கான 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கான ஐம்பதாயிரம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும்தான் நஷ்ட ஈடாக இருக்கும்.  

மேலும் அணு உலைக் கழிவுகளை என்ன செய்யப்போகிறார்கள்? அவை கடலோர மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் செய்யப்படும் என்பதை மாநில அரசு எவ்வாறு உறுதி செய்கிறது? போன்ற கேள்விகளுக்கான பதிலை வெளிப்படையாக அரசாங்க அறிவிக்க வேண்டுமே தவிர தடியடியும் துப்பாக்கிச் சூடும் நடத்தி கூடங்குளம் மக்களையும் அவர்களது உரிமைகளையும் கடற்கரை மணலில் புதைக்கக் கூடாது.

9 எதிர் சப்தங்கள்:

சுவாதி ச முகில் said...

நேர்மையான நியாயமான கேள்வியுடன் முடிந்திருக்கிற கட்டுரை.

KARTHIK said...

// பல சதுர மைல்களுக்கு 'சோலார் பேனல்கள்' அமைக்கப்பட வேண்டியிருக்கும். சோலார் தகடுகள் இத்தனை பெரிய பரப்பளவில் அமைப்பது மட்டும் பெரிய காரியமில்லை. //

ஆனா இதுதாங்க நிரந்தரத்தீர்வா இருக்க முடியும்,ஜெர்மனி போன்ற நாடுகளப்போல வீடுகளுக்கு தனித்தனி சோலார் சிஸ்ட்டம் கொண்டுவரனும்,காற்றாலை,புனல்,சூரிய சக்தி,முறைப்படி எடுத்தா இதுவே போதுமானாதா இருக்கும்....

அவனுக்கு அணுவுலை விக்கனும்,இவனுக்கு யுரேனியம் விக்கனும்...அதுக்கு நாம அணுக்கழிவுகள திங்கனும் :-(

Innocent said...

மாற்றில்லை என்பதனால், அனுமதித்துத் தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்த்த்தைக் கொண்டு தான் ஒரு அறிவியல் இயக்கம் நடைபெறுகிறது என்றால், அது அறிவியலின் குறைபாடு தானே தவிர, அதை மறுப்பவர்களின் அறிவின்மை ஆகாது. முற்றிலுமாக ஆபத்தில்லை என்ற பொழுதில் மட்டுமே அதை பொது உபயோகத்திற்குக் கொண்டு வரலாமே தவிர, அதை அப்படியே புழக்கத்தில் விடுவது அறிவியலின் ஆக்க பூர்வமான செயல்பாடாக இருக்க முடியாது.

இதை முழுவதுமாக புரிந்து, இந்த ஆபத்தை விளங்கிக் கொண்டு தான் இத்தகைய ‘வினையை’க் கையாள வேண்டும். நம்முடைய அரசிற்கு அத்தகையத் தகுதி இல்லை என்பதே உண்மை. போபால் சமாச்சாராம் இன்றளவும் மனசாட்சியை உறுத்திக் கொண்டிருக்கிறது தானே?

Genocide என்று பெருவாரியாக மனிதர்கள் கொல்லப்பட்ட எந்த சமூகமும் இந்த உலகிடமிருந்து தனக்கான நீதியைப் பெற்றதாக வரலாறே இல்லை. யூதர்களைத் தவிர. துருக்கிய அரசின் ஆர்மீனிய படுகொலைகள், ஈராக்கின் குர்தீஷ் படுகொலைகள், வியட்நாம் யுத்த்த்தின் மூலம் அமெரிக்காவால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், ஈழத்தமிழர் படுகொலைகள், என எல்லாமே நியாயத்திற்காக இன்றளவும் போராடிக் கொண்டே இருக்கின்றன, மௌனம் காக்கும் உலகின் முன்.

இந்திய அளவிலே எடுத்துக் கொண்டால் கூட, போபால் விபத்திற்கு பதில் சொல்ல எவருமில்லாமலிருக்கிறது. 5000 சீக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்ட்தற்கு, ஒரே ஒருவரைக் கூட கைது செய்ய இயலாமல் அரசியல் உறுதியற்ற ஆட்சியாளர்கள் தானே இந்தியாவில் இருக்கின்றனர்?

அணு உலைகள் எதிர்க்கப்படுவதற்கு முதல் காரணம், ஒரு அறிவியல் வினையாக தன்னை முற்றிலும் பாதுகாப்பதானதாக செயல்முறைப் படுத்த இய்லாமை ஒன்று என்றால், அரசியல் செயல்பாட்டு இயலாமை கொண்ட அரசின் மீதான நம்பிக்கையின்மை மற்றொன்று. இரண்டுமே மிக மிக நியாயமான காரண காரியங்களாக இருக்கின்றன. இதை அறிவியலை எதிர்ப்பத்தாகவோ, இறையாண்மையை எதிர்ப்பதாகவோ திரிப்பதே நேர்மையின்மை. இத்தகைய நேர்மையின்மைக்குத் துணை போக்க் கூடாது என்பதே பலரின் பதைபதைப்பு.

இந்த பதைபதைப்பை உங்கள் கட்டுரை சற்று மிதமாகச் சொல்கிறது. இன்னும் கூட கொஞ்சம் வலுவாகவே சொல்லுங்கள்.

அன்புடன்,
நண்பன் ஷாஜி.

Uma said...

இவ்வளவு செலவு செய்யும் அரசு கொஞ்சம் செலவு அதிகம்மானாலும் பரவாயில்லை என முடிவெடுத்து மக்கள் குடியிருப்பு இல்லாத இடத்தில் அணு உலையை நிறுவலாம் இல்லையா?

அருண் said...

அட்டகாசம்.

ஜீவ கரிகாலன் said...

well balanced information.... brave attempt boss

purushothaman.p said...

அடச்சே, நானே ஒரு நிமிசம் கன்வின்ஸ் ஆயிருந்திருப்பேன், மணி அதற்க்கு உங்கள் எழுத்து காரணம்.

எத்தனை குவாண்டிட்டியை காண்பித்தாலும் அணு உலை கூடாதே, குறிப்பாக சூரிய ஒளி ஆற்றலை பயன்படுத்துவது தொடர்பாக தாங்கள் எழுதியிருப்பது அயற்ச்சியை தந்துவிடும், சூரிய ஒளி ஆற்றல் மூலமாக எல்லா நேரமும் பவர் கிடைக்க வேண்டுமென்பதில்லை, எவ்வளவு முடியுமோ அவ்வளவு கிடைக்கட்டும், மற்ற கன்வென்சனல், நான் கன்வென்சனல் முறைகளில் கிடைப்பது சூரிய ஆற்றலை பயன்படுத்துவதை அதிகப்படுத்துவதன் மூலம் அணு உலைகளை சுத்தமாக நிறுத்தலாம், மற்ற கன்வென்சனல் முறையில் கிடைக்கும் பவரை குறைக்கலாம்...

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் மேலே தற்போது சூரிய ஆற்றல் மூலம் பவர் கிடைக்கும் பேனல்கள் நிறுவப்பட்டு மின்சாரம் எடுக்கப்படுகின்றது, புதிதாக வரும் பேருந்துகளில் பேனல்கள் பொறுத்தப்பட்டுள்ளன, அட அதிலிருந்து கிடைக்கும் பவர் அந்த பஸ்ஸை இயக்க வேண்டுமென்பதில்லை, அந்த பஸ்சின் 2 லைட்டை எரிய வைத்தால் கூட அதற்கான டீசல் செலவு மிச்சம் தானே..

Indian said...

//அரசு கொஞ்சம் செலவு அதிகம்மானாலும் பரவாயில்லை என முடிவெடுத்து மக்கள் குடியிருப்பு இல்லாத இடத்தில் அணு உலையை நிறுவலாம் இல்லையா?//

அந்த எடம் எங்க இருக்குங்க? அடர்ந்த கானகமா இல்ல தார் பாலைவனமா இல்ல நடுக்கடலா?

//முற்றிலுமாக ஆபத்தில்லை என்ற பொழுதில் மட்டுமே அதை பொது உபயோகத்திற்குக் கொண்டு வரலாமே தவிர, அதை அப்படியே புழக்கத்தில் விடுவது அறிவியலின் ஆக்க பூர்வமான செயல்பாடாக இருக்க முடியாது.

இதை முழுவதுமாக புரிந்து, இந்த ஆபத்தை விளங்கிக் கொண்டு தான் இத்தகைய ‘வினையை’க் கையாள வேண்டும். நம்முடைய அரசிற்கு அத்தகையத் தகுதி இல்லை என்பதே உண்மை. போபால் சமாச்சாராம் இன்றளவும் மனசாட்சியை உறுத்திக் கொண்டிருக்கிறது தானே? //

அணு ஆலைகளை பிரான்சில் எவ்வாறு நிர்வகிக்கிறார்கள்? அங்கு 75% மின்சாரத் தேவையை அணு சக்தி மூலம் நிறைவு செய்கிறார்கள். ஏன் அங்கு ஒரு செர்னோபில்லோ, ஃபுக்குஷிமாவோ நடைபெறவில்லை?
அந்த மாடலை ஏன் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக்கூடாது?

//அணு உலைகள் எதிர்க்கப்படுவதற்கு முதல் காரணம், ஒரு அறிவியல் வினையாக தன்னை முற்றிலும் பாதுகாப்பதானதாக செயல்முறைப் படுத்த இய்லாமை ஒன்று என்றால், அரசியல் செயல்பாட்டு இயலாமை கொண்ட அரசின் மீதான நம்பிக்கையின்மை மற்றொன்று. இரண்டுமே மிக மிக நியாயமான காரண காரியங்களாக இருக்கின்றன. //


இந்தியாவைப் பொறுத்தவரையில் இரண்டாவதுதான் உண்மையான காரணம்.

Seeni said...

thelivaana paarvai!