Apr 12, 2010

நாட்டு நடப்பு

டந்த சில ஆண்டுகளில் மக்கள் மத்தியில் அரசியல் தலைவர்கள் குறித்தான ஒரு மந்தமான மனநிலை வந்திருப்பதை கவனிக்கலாம். எவனாவது எப்படியாவது தொலையட்டும் எனக்கு எந்தப் பிரச்சினையும் வராமல் இருக்கும் வரை சரி என்பதான மனநிலை. இந்த மனநிலை அரசியல் தலைவர்களைப் பற்றியது மட்டுமில்லை. அனைத்து விஷயங்களிலும் அப்படித்தான் இருக்கிறோம். பொதுவாகவே சுரணையற்ற நம் மந்த நிலைதான் சமீப காலங்களில் இன்னும் அதிகமாக மரத்துப் போயிருக்கிறது. எருமை மீது பெய்யும் மழைக் கணக்காவே ஆகியிருக்கிறோம்.

கிட்டத்தட்ட அத்தனை தலைவர்களும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். பதவியையும், அதிகாரத்தையும் கைப்பற்றுதல், தன் வாரிசுகளுக்கான இடங்களை உறுதிப்படுத்துதல், பணம் சேர்த்தல் போன்றவை அவர்களுக்கு அடிப்படைக் கொள்கையாக இருக்கிறது. இந்த கொள்கை நிலை வார்டு கவுன்சிலர் தொடங்கி, தேசிய அளவிலான பெரிய தலைவர்கள் வரை ஒரே மாதிரிதான் இருக்கிறது. விதிவிலக்குகள் என்று யாரும் இல்லை. நாமும் இதை ஏற்றுக் கொள்ளப் பழகிவிட்டோம். அதை விடுங்கள்.

ரு நிகழ்வுக்கு தார்மீகப் பொறுப்பேற்று தன் பதவியை அமைச்சர் ராஜினாமா செய்வது என்பதெல்லாம் பழங்கதை. நிகழ்வுக்கு அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று யாரும் அதை எதிர்பார்ப்பதுமில்லை. அரசியல் தலைவர்கள் தார்மீகம் என்ற அடிப்படையில் பதவியை விட்டுக் கொடுக்க முட்டாள்களில்லை என்பதும் மக்களுக்குத் தெரியும்.

இந்த நிலையில் தந்தேவாடா பகுதியில் மத்திய ரிசர்வ் படையினரை குருவி சுடுவதைப் போல சுட்டுத் தள்ளிய நக்சலைட்டுகளின் கொள்கை நிறைவேற விட மாட்டோம் என்று முஷ்டி முறுக்கிய கையோடு சில பல அறிவிப்புகளை வெளியிட்ட மாண்புமிகு உள்துறை அமைச்சர், ராஜினாமா செய்ய விரும்புவதாக கடிதம் எழுதியிருக்கிறார்.

அடுத்து என்ன நடக்கும் என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான், சிதம்பரம்ஜி யின் சேவை நாட்டுக்கு மிக அவசியம் என்று மன்மோகன் சிங் ராஜினாமாவை ஏற்க முடியாது என்பார் என்பதும், சோனியா அவருக்கு ஆதரவாக பேசுவார் எபன்பதையும் யாரும் ஊகித்திருப்பார்கள். பிறகு எதற்கு ராஜினாமா செய்கிறேன் என்று சொல்கிறார் என்றுதான் புரியவில்லை.

தனக்கு உள்துறை வேண்டாம், நிதியமைச்சராக இருப்பதில் மட்டுமே விருப்பம் என்று சூசகமாக தெரிவிப்பதாகக் கூட இருக்குமோ?

ரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் திரும்பிய பக்கமெல்லாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு விளம்பரங்கள்தான் கண்ணில்படுகிறது. பேருந்துகளில் திருவள்ளுவரை வரைந்துவிட்டார்கள். 'சூன்' 23-27இல் கோயமுத்தூர் வந்து சேருங்கள் என்று பேருந்தின் பயணச்சீட்டின் பின்புறம் கூட எழுதி வரவேற்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் கொங்குப் பகுதியில் வாங்கிய அடியை ஈடுகட்டத்தான் கோவையை தேர்ந்தெடுத்தார்கள் என்று யாரோ ஒரு சமயத்தில் சொன்ன போது பெரிதாக உறைக்கவில்லை.

ஆனால் இப்பொழுது பார்த்தால் திமுக மாநாடு என்ற பெயரை மட்டும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று மாற்றிவிட்டார்களோ என்று தோன்றுகிறது. வீதிக்கு வீதி கழகக் கண்மணிகள் வினைல் தட்டி வைத்திருக்கிறார்கள். தரணியை ஆளும் தலைவனும் தங்க தமிழ் மகனும் அழைக்கிறார்கள்- வேங்கைப் புலியின் தலைமையில் அணி திரள்வோம் என்கிறார்கள் அல்லது கர்ஜிக்கும் சிங்கத்தின் தலைமையில் கோவையை அதிரச் செய்வோம் என்கிறார்கள்.

கனிமொழி ஆங்காங்கே இடம் பெறுகிறார். அவருக்கு அளிக்கப்பட்ட பல்வேறு வினோத பட்டங்களில் கலைத்தாயின் செல்லமகள் என்ற பட்டம் மனதில் நிற்கிறது. விடுவார்களா அடுத்தவர்கள்? கவித்தாய் கயல்விழி அழைக்கிறார் என்று எதிர் சுவற்றில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

கலைஞருக்கு இப்படி நடப்பதெல்லாம் தெரியாமல் இருக்குமா அல்லது அவரேதான் செய்யச் சொல்கிறாரா?

3 எதிர் சப்தங்கள்:

Raju said...

\\கலைஞருக்கு இப்படி நடப்பதெல்லாம் தெரியாமல் இருக்குமா அல்லது அவரேதான் செய்யச் சொல்கிறாரா?\\

எனக்கு இந்த அப்ரோச் புடிச்சுருக்கு ஓய்!!

கிரி said...

//அடுத்து என்ன நடக்கும் என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான், சிதம்பரம்ஜி யின் சேவை நாட்டுக்கு மிக அவசியம் என்று மன்மோகன் சிங் ராஜினாமாவை ஏற்க முடியாது என்பார் என்பதும், சோனியா அவருக்கு ஆதரவாக பேசுவார் எபன்பதையும் யாரும் ஊகித்திருப்பார்கள். பிறகு எதற்கு ராஜினாமா செய்கிறேன் என்று சொல்கிறார் என்றுதான் புரியவில்லை//

வழிமொழிகிறேன்.. அப்புறம் எப்படித்தான் யோக்கியன்!! என்று காட்ட முயல்வது :-)
----
தமிழுக்காக செய்கிறார்களோ இல்லையோ! இவர்கள் அரசியலால் கோவை கொஞ்சம் மாற்றம் பெற்று இருந்தால் சந்தோசம்.

Vaa.Manikandan said...

ராஜூ,

நன்றி ஓய்! :)

கிரி,

நன்றி. என்னதான் வேஷம் போட்டாலும் நம்பவா போகிறார்கள்?

கோவை ஒன்றும் பயனடைவது மாதிரி தெரியவில்லை. இருக்கிற மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்க்கிறார்கள்-சாலைகளை அகலம் செய்கிறோம் என்ற பேரில். அவிநாசியில் கூட மரங்களை வெட்டுவதை பார்த்தேன். அப்புறம் ஏன் தமிழகத்தில் வெயில் 100 டிகிரியை தாண்டாது?