Oct 6, 2010

ராமன் ஆண்டாலும் பாபர் ஆண்டாலும்..

ஒரு பொதுவான விஷயத்தைக் குறிப்பிட்டு என்னுடைய கருத்தை ஒருவர் கேட்கிறார் என்பது எனக்கு வினோதமாக இருக்கிறது.

"அயோத்தி தீர்ப்பு பற்றி உங்களின் கருத்து என்ன? தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்" என்று எனக்கு ஒரு கேள்வியை மின்னஞ்சலில் அனுப்பி அதிர்ச்சியைக் கொடுத்த நண்பர் சாதிக் அவர்களுக்கு நன்றி.
--
அயோத்தி தீர்ப்பு வரப்போகிறது என்று செய்திகள் வரத்துவங்கிய போது, இத்தகைய சிக்கலான விஷயங்களில் அரசியல் அழுத்தம் இல்லாமல் தீர்ப்பளிக்க முடியுமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சப்பையான தீர்ப்பாக இருந்தால் மட்டுமே பிரச்சினை எதுவும் இல்லாமல் இருக்கும் என்றாலும் நீதிமன்றம் என்பது நாட்டாமையின் ஆலமரத் திண்ணையில்லை என்பதால் ஏதேனும் ஒரு பக்கத்திற்குதான் நியாயம் சொல்வார்கள் என நம்பிக் கொண்டிருந்தேன்.

இந்த தீர்ப்பு விவகாரம் கிட்டத்தட்ட நாடகம் போலவே இருந்தது.

செப்டம்பர் 24 ஆம் தேதி தீர்ப்பு வழங்க வேண்டிய நிலையில், அதற்கு முந்தைய நாட்களில் மத்திய மாநில அரசுகள் 'அமைதி காக்கும்படி' வேண்டுகோள் விடுத்து, பல்க் எஸ்.எம்.எஸ் அனுப்புவதை தடை செய்து, அலுவலகங்களுக்கும் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து, கால்களில் வெந்நீரை ஊற்றிக் கொண்ட ஆங்கில சேனல்கள் கோர்ட்டில் யாராவது உச்சா போனால் கூட 'ப்ரெக்கிங் நியூஸ்' ஆகப் போட்டு என தேசம் முழுவதும் கவுண்ட் டவுன் பரபரப்பு உண்டாகியிருந்தது.

பலூனில் ஏறிக் கொண்டிருந்த 'டென்ஷன்' காற்றை உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை என்ற பெயரில் ஊசியை வைத்துக் குத்திவிட்டது. பேச்சுவார்த்தைக்கு 1 சதவீத இடம் இருந்தாலும் அதை நிராகரிக்கக் கூடாது என்ற தொனியில் அந்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பேச்சுவார்த்தைக்கு இடமே தரவில்லை போலிருக்கிறது என நினைத்துக் கொண்டேன்.

தீர்ப்பு வழங்கலாமா கூடாதா என்பதை 28 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும் என்றார்கள். அதற்குள் என்ன அவசரமோ அடுத்த மாதத்திற்கு கூட ஒத்தி வைத்திருக்கலாம் என்று யோசிக்க ஆரம்பிக்கும் போதே மறுபடியும் ஊடகக்காரர்கள் ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு நீதிபதி அக்டோபர் 30இல் ஓய்வு பெறுகிறார் எனவே தீர்ப்பு என்ன ஆகும் என விடிய விடிய விவாதம் செய்தார்கள்.

எதிர்பார்த்தைப் போலவே 28 ஆம் தேதி தடையை நீக்குகிறார்கள்.
30 ஆம் தேதி தீர்ப்பு வரும் என அறிவித்தார்கள். 24 ஆம் தேதியில் இருந்த பயத்தில் பாதி கூட 30 ஆம் தேதியன்று இல்லை. சாலைகள் முழுக்க காவல்துறையினரும் துணை ராணுவமும் ரோந்து சுற்றினார்கள். எப்படியான கலவரத்தையும் அடக்கிவிடும் அளவுக்கு இந்த இடைவெளியில் அரசுகள் தயாராகிவிட்டன.

அயோத்தி தீர்ப்பு வந்த தினம் மதியம் இரண்டு மணிக்கு கிளம்பிவிடவும் என்ற எச்சரிக்கையை அலுவலகத்தில் வெளியிட்டிருந்தார்கள். ஒன்றரை மணிக்கெல்லாம் அலுவலகம் காலியாகிவிட்டது. மூன்று மணிக்கு சாலைகளில் சென்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்- அத்தனை அமைதி. பெங்களூர் போன்று போக்குவரத்து நெரிசலில் பிதுங்கும் நகரங்களில் இப்படி வெறிச்சோடிய சாலைகளை வாழ்நாளில் இன்னொரு முறை பார்க்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

நான்கு மணிக்கு வீட்டிற்கு போய்ச்சேர்ந்தேன். தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் வெளியில் வந்த வழக்கறிஞர்கள் கிட்டத்தட்ட மாஸ் ஹீரோக்களைப் போல இருந்தார்கள். அத்தனை மைக்குகள், அத்தனை வீடியோக்களும், கேமரா ப்ளாஷ்கள். இடது ஓரத்தில் இருந்த பெண் வக்கீல் தன் முகத்தை துடைத்துக் கொண்டேடேடேடேடேடே இருந்தார்.

ஒரு சிறுவனிடம் இருந்த நூறு ரூபாயை இன்னொரு சிறுவன் பறித்துக் கொள்கிறான். நீதி வேண்டும் என்று என்னிடம் இரண்டு பேரும் வருகிறார்கள். நான் இரண்டு பேரும் சண்டை பிடிக்கக் கூடாது, சமர்த்தாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை சொல்லிவிட்டு, இந்த நூறு ரூபாய் அவனுடையது என அவன் நம்புகிறான், இப்போதைக்கு இவனிடம் இருக்கிறது. எனவே அவனுக்கு முப்பது மூன்றே கால் ரூபாயும், இவனுக்கு முப்பத்து மூன்றே கால் ரூபாயும், அந்த சந்நியாசிக்கு முப்பத்து மூன்றேகால் ரூபாயும் கொடுத்துவிடலாம் என்று தீர்ப்பளித்துவிடுகிறேன். அவ்வளவுதான். கேஸ் முடிந்தது.

நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பளிப்பபது என்றால் நீதிமன்றங்களும் சட்டங்களும் வழக்கறிஞர்களும் தேவையில்லை என்பது என் கருத்து.

அயோத்தியில் ராமன் பிறந்து அங்கிருந்த கோயிலை பாபர் இடித்து மசூதி கட்டியிருந்தால் நிச்சயமாக அந்த இடம் இந்துக்களுக்குச் சொந்தம். அப்படியில்லையெனில் பாபர் கட்டிய கட்டடம் என்ற அடிப்படையில் இசுலாமியர்களுக்கு சொந்தம். இந்த இரண்டில் ஒன்றுதான் தீர்ப்பாக இருந்திருக்க முடியும்.

தீர்ப்பை ஏதேனும் ஒரு அமைப்பின் பக்கமாக அளித்தால் நாட்டில் கலவரம் உண்டாகும், பிரச்சினைகள் வெடிக்கும் என்பதைப் பற்றியெல்லாம் நீதிமன்றங்களும் நீதிபதிகளும் கவலைப்படத் தேவையில்லை. அதை பார்த்துக் கொள்ள அரசாங்கம் இருக்கிறது.

நீதி தேவை என இரு அமைப்புகள் கோர்ட் வாசலுக்கு வரும் போது தரவுகளை ஆராய்ந்து எந்தவிதமான பாரபட்சமும் தயவுதாட்சண்யமும் இல்லாமல் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்கள்தான் தேவை. கழுவிய மீனில் நழுவிய மீனாக கொழ கொழ வழ வழ என்று தீர்ப்பு சொல்ல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.
---
நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் என்பதால் இந்தத் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்வோம். அதே பாலிசிதான்! கழுவு நழுவு..
- இது மணிகண்டன் என்ற சாமானியனின் பார்வை. இந்த சிறு குறிப்பை எழுதிவிட்டு வழக்கறிஞர் கிருஷ்ணனிடம் பேசிய போது வேறொரு பரிமாணம் கிடைத்தது. இதே வழக்கில் நீங்கள் நீதிபதியாக இருந்தால் என்ன தீர்ப்பை அளித்திருப்பீர்கள் என்ற கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை என்றார். நானும் அதே பதில் சொல்ல முடியாத பட்டியலில்தான் இருக்கிறேன். இந்த கோணத்தில் இந்த விவகாரத்தை அணுகுவதற்கு நிறைய உழைப்பு தேவைப்படும். அதற்கான பொறுமையும் உழைப்பும் என்னிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

(இப்படி ஒருவரின் கேள்வியை பிரசுரம் செய்வது எனக்கு நானே தேடிக் கொள்ளும் சுய விளம்பரமாகத் தெரிகிறது என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்)

8 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள் விளக்குத் தூன்(மதுரை) பகுதியிலும் முருகன் இட்லி கடை துறப்பார்கள்.

மேல மாசி வீதி கடை அளவுக்கு டேஸ்ட்டும் கொண்டு வந்து விடுவார்கள் என்றே நம்புவோம்.

நம்பிக்கை தானே வாழ்க்கை.

”சைவ” சேதுபதி
ஜெய்ஹிந்த்புரம்.

ராஜ நடராஜன் said...

பலகாரம் சூடா இல்லையோ? கடைல ஒரு ஆள் கூட இல்ல!

அட!அனானி ஒருத்தர் டீ குடிக்கிற மாதிரி தெரியுதே:)

ராஜ நடராஜன் said...

தோ!எனக்கு பலகாரம்ன்னா அனானிக்கு இட்லி வேணுமாம்:)

Vaa.Manikandan said...

சார், நான் கை அரிப்புக்கு எழுதிட்டு இருக்கேன். யாரு வர்றாங்க, யாரு போறாங்க, எத்தனை பேரு கமெண்ட் போட்டாங்கன்னு நானே கண்டுக்கறதில்லை. நீங்க ஏன் சொறிய வர்றீங்க?

உங்களுக்கும் எங்கேயாச்சும் அரிப்பு இருக்கா சார்?

இ.வெள்ளத்துரை said...

பதிவுகள் அருமை...தொடர்ந்து பதிவேற்றவும்.....நன்றி

Mahesh M said...

நீங்கள் சொல்வது போல் தீர்ப்பு ஒரு தலை பட்சமாக இருந்திருந்தால் அது இன்னும் ஒரு 2000 பேரை காவு வாங்கி இருக்கும்...அதற்கு இது தேவலாம்..

Vaa.Manikandan said...

நன்றி வெள்ளத்துரை.

மகேஷ்,

நன்றி. ஒரு பின்விளைவுக்கு பயந்து கொண்டு தீர்ப்பை மாற்றிச் சொல்ல வேண்டுமானால் எதற்காக நீதிபதிகளும், விசாரணைகளும், நீதி மன்றங்களும்?

எதைப்பற்றியும் யோசிக்காமல் சரியான நீதி என்பதை மட்டும் சொல்வதற்குத்தானே?

Mahesh M said...

நன்றி.ஒரு பின்விளைவுக்கு பயந்து கொண்டு தீர்ப்பை மாற்றிச் சொல்ல கூடாது. ஆனால், ஒரு காணி நிலத்திற்காக பிரிவினைவாதத்தை தூண்டி அதில் இன்னும் பல உயிர் பலி வாங்கி நாம் பெறப்போவது என்ன? நீங்கள் சொல்வது போல் அதை தடுப்பதும் அரசங்கத்தின் கவலை தான்.ஆனால் எவ்வளவு நாளைக்கு 144 உத்தரவு போட்டு முடங்கி கிடக்க போகிறோம்.எல்லாம் சென்ட்டிமெண்ட் ;)...