Aug 23, 2010

சு....தந்திரம்

மீண்டும் ஒரு சுதந்திர தினம் வந்துவிட்டது. மூவர்ணக் கொடி குத்தி வரிசையில் நின்று சல்யூட் அடித்து ஆரஞ்சு மிட்டாயை வாங்கி சப்பிக்கொண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடியதை மனதில் ஓடவிட்டு, சிறப்பு நிகழ்ச்சியாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டாடினோம்.

சுதந்திரம் என்ன சுக்கா? மிளகா? என்றெல்லாம் கவிதை எழுதிவிட்டார்கள். சுக்கும் இல்லை, மிளகும் இல்லை என்பதை மெதுவாகச் சொன்னால் கூட தேசியவாதிகள் பிழிந்து எடுத்துவிடுவார்கள். ஆனால் இந்த வெங்காய பஜ்ஜி அல்லது சுதந்திரத்தைப் பற்றிக் கொஞ்சமாவது பேசத் தோன்றுகிறது.

நாம் கொண்டாடும் சுதந்திர தினம் வெள்ளையர்கள் வெளியேறிய நினைவு நாள் என்பதனைத் தவிர்த்து, சுதந்திரம் என்பதற்கான எந்தவிதமான பொருளும் அதற்கு இல்லை. சுதந்திரம் என்ற பெயரில் வெள்ளையர்களை வெளியேற்றிவிட்டு மக்களையும் அவர்களின் உழைப்பினையும் சுரண்டிக் கொள்ளும் உரிமையை உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் கொடுத்திருக்கிறோம்.

வெள்ளையன் வாழ்ந்தபோது அவனை எதிர்த்துப் பேசியவர்களை சிறைகளில் அடைத்தார்கள், கல் உடைக்கச் செய்தார்கள், செக்கிழுக்க வைத்தார்கள் என்று பாடப்புத்தகங்களில் படித்ததுண்டு. இன்றைய சுதந்திர தேசத்தில் அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் பேசுபவர்கள் மீது வெள்ளையன் காலத்தில் பாய்ந்ததை விடக் கொடூரமாக சட்டம் பாய்கிறது . அதோடு சேர்ந்து ரவுடிகளும் பாய்கிறார்கள்.

இந்த அடக்குமுறை ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்து இன்று வரையிலும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்திற்கும் சுதந்திர ஆட்சி முறைக்கும் அடக்குமுறை மட்டுமே ஒற்றுமையில்லை. ஆனால் இந்த அடக்குமுறைதான் சுதந்திரம் என்ற சொல்லின் பொருளுக்கு எந்தவித அர்த்தமும் இல்லாமல் செய்வது.

சுதந்திரம் பெற்றதன் மிகப் பெரிய வெற்றியே பரந்த அளவிலான முதலாளித்துவ சமூகத்தையும் மொன்னையான நடுத்தர வர்க்கத்தையும் நாடு முழுவதுமாக பரவச் செய்ததுதான். ஆரம்ப காலங்களில் அமைச்சர்களும் இன்னபிற அதிகாரிகளும் உள்நாட்டு முதலாளிகளுக்கு தரகர்களாகச் செயல்பட்டு அவர்களின் தொழிலும் வியாபாரமும் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் கம்பளம் விரித்தார்கள். அதற்குப் பிரதிபலனாக கமிஷன் பெற்றுக் கொண்டிருந்தார்கள். தொண்ணூறுகளில் உலக மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் என்ற பெயரில் உள்நாட்டு முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை விட பன்மடங்கு வரவேற்பு வெளிநாட்டு முதலாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்தக் கட்டம் வரைக்கும் தரகர்களாகச் செயல்பட்டு வந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அவர்தம் குடும்பங்களும், துணிந்து தாங்களும் 'சுதந்திர நாட்டில்' தொழில் தொடங்கினார்கள். இப்பொழுது ஜனநாயகம் பட்டொளி வீசிப் பறக்க சுதந்திர தேசம் என்ற பெயரில் ஒரு முழுமையான முதலாளித்துவ அல்லது நியோ காலனிய நாட்டில் வசித்து வருகிறோம்.

நடுத்தர வர்க்கத்திற்கு ஒரு வித்தியாசமான குணம் உண்டு. சமூகத்தில், அரசியலில் அல்லது தன்னைச் சுற்றி நிகழும் எந்த எதிர்மறையான விஷயங்களைப் பார்த்தாலும் இந்த நடுத்தரச் சமூகம் கோபம் கொள்ளும். ஆனால் அதே சமயத்தில் அந்தக் கோபத்தை அடுத்தவனுக்குக் கூடத் தெரியாமல் மறைத்துக் கொள்ளும். எதிலும் துணிந்து கருத்துச் சொல்லவோ, அப்படியே கருத்துச் சொல்லிவிட்டாலும் சொன்ன கருத்திலிருந்து பின்வாங்காமல் சாலையில் இறங்கிப் போராடவோ தைரியமில்லாத ஒரு சமூகம் அது. இந்த மொன்னையான சமூகத்தை 'சுதந்திர' தேசம் முழுவதும் பரவச் செய்ததில் சுதந்திர நாட்டின் அரசாங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் பெரும் பங்கு இருக்கிறது.

இந்த மொன்னைச் சமூகத்தை உருவாக்குவது மிக எளிது. சிறுவயதிலிருந்தே எந்தவிதமான சமூகப் பிரக்ஞையும் இல்லாத, தான் வாழும் ஊர் பற்றியோ அல்லது பகுதி பற்றியோ எந்த அறிவினையும் தராத தட்டையான பாடங்களைக் கற்கச் செய்ய வேண்டும். உண்மையான வரலாறுகள் மறைக்கப்பட்டு போலித்தலைவர்களும், விளம்பரதாரிகளும் தலைவர்களாகவும் தியாகிகளாகவும் சித்தரிக்கப்பட்ட பாட முறை அமைய வேண்டும். அதற்கு ஆளும் வர்க்கத்துக்கு ஜால்ரா அடிக்கும் கல்வியாளர்களைப் பாடத்திட்டக் குழுவில் நியமனம் செய்யவேண்டும். தன் முன்னோர்களின் வாழ்வியல், தனித்துவமான விவசாய முறைகள் போன்றவற்றைப் பற்றி எந்த அறிவும் இல்லாத ஒரு சமூகம் உருவாக்கப்பட்டால் அந்தச் சமூகம் ஆளும் வர்க்கத்திடம் கேட்பதற்கென எந்தக் கேள்வியும் இருக்காது.

கற்கும்போது பாடங்களைப் புரிந்துக் கொண்டு படிப்பவனை விடவும் மொத்தமாக மனப்பாடம் செய்து தேர்வில் வாந்தி எடுப்பவனை ஊக்குவிக்கும் விதமாகத் தேர்வு முறைகள் அமையவேண்டும். இவ்வாறு படிக்கும்போது மாணவர்களின் சிந்திக்கும் திறனை, பெருமளவில் மழுங்கடிக்கச் செய்யமுடியும். இப்படி உருவாகும் மழுங்கல் தன்மையுடையவர்களுக்கு ஓரளவுக்கு சம்பளத்துடன் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளை முதலாளிகளுடன் சேர்ந்து உருவாக்கித் தந்துவிட வேண்டும். அவ்வளவுதான், அரசாங்கத்தின் பணி. வாங்கும் சம்பளத்தில் ஒரு இடம் வாங்கி வீடு கட்டி, குழந்தைகளைப் படிக்க வைத்து, அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து என்று அவன் தன் கடமைகளில் மூழ்கி உருண்டு கொண்டிருப்பான். காலப்போக்கில் இவ்வாறாக எதைப் பற்றியும் கண்டுகொள்ளாத அல்லது கண்டுகொள்ளும் பட்சத்தில் அமைதியாக இருக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கிவிட முடியும். இதைத்தான் இந்த அரசாங்கங்கள் அறுபதாண்டுகளில் வெற்றிகரமாகச் செய்திருக்கின்றன.

இந்த மொன்னையர்களுக்கு தங்களால் சாதனைகள் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஒரு அரிப்பு தொடர்ந்து கொண்டிருக்கும். அதுபற்றி அரசாங்கம் பெரியதாகக் கவலைப்படத் தேவையில்லை. அதை இந்த தேசத்தின் பொழுதுபோக்கு வியாபாரிகள் பார்த்துக் கொள்வார்கள். சினிமா கதாநாயகன் வெறித்தனமாக வில்லனைக் குத்தும் போது தானே குத்துவதாக மொன்னையர்கள் ஆசுவாசமடைந்து கொள்வார்கள். பற்றாக்குறைக்கு தொடையும் தொப்புளும் தெரிய ஒரு நடிகையை மழை நீரில் ஆட விடும்போது ஆர்த்தெழுந்து அடங்குவார்கள்.

ஓரிரண்டு பேர் ஆங்காங்கே அரசாங்கத்தை எதிர்த்துப் பேசினாலோ அல்லது எழுதினாலோ பல பாதுகாப்புச் சட்டங்களில் ஏதாவது ஒன்றில் சிறையில் அடைத்தல் போன்ற பணிகளைக் காவல்துறையினர் செவ்வனே செய்வார்கள். அவர்களுக்கான அந்த அதிகாரங்களை சுதந்திர தேசம் கொடுத்திருக்கிறது. பேசுபவர்களைச் சிறையில் அடைப்பதை அரசாங்கத்தின் மீதான குறையாகச் சொல்ல முடியாது. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இந்த தேசத்தை ஆள்பவர்கள் மீது சேறு வாரி இறைப்பது என்பது இந்த நாட்டு மக்களின் மீது சேறு வாரி இறைப்பதுதானே. அதைத்தான் இந்த அரசாங்கம் தடுக்கிறது.

சாதிகள் எல்லாம் இந்த தேசத்தின் அடையாளங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகவே தலித்தியப் பெண்களை மேல்சாதியினர் வன்புணர்வதும், இரட்டைக் குடுவை முறை, ஆதிக்க சாதியினரின் வன்முறை, சாதி மாறிய கலப்புத் திருமணத்திற்காகத் தம்பதிகளை எரித்து அல்லது அடித்துக் கொல்வது போன்றவை எல்லாம் இந்த தேசத்தின் அடையாளத்தைக் காப்பாற்றும் முயற்சியாகப் பார்க்க வேண்டும். சுதந்திரத்திற்கும் இந்த பிரச்சினைகளுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை.

புரட்சி, கலகம் போன்றவற்றைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கமும் அதன் உளவுத்துறையும் எடுக்கின்றன. சிலர் உரிமை அல்லது தங்களின் மீதான சுரண்டலுக்கான எதிர்ப்பு என்ற பெயரில் புரட்சி செய்வதும் ஆயுதம் எடுப்பதும் மற்றவர்களுக்குத் தொந்தரவு என்பதால் அரசாங்கம் இவர்களைச் சுட்டுக் கொல்கிறது என்றே புரிந்துகொள்ள வேண்டும். தேவைப்பட்டால் விமானப்படையைப் பயன்படுத்தி அவர்கள் குண்டு வீசலாம் என்ற அனுமதியும் இன்றிலிருந்து வழங்கப்படுகிறது. சுதந்திர தேசத்தில் இந்த தேசத்தைச் சேர்ந்தவர்களே கொல்லப்படுகிறார்கள் என்று விசனப்பட்டு நீங்கள் நக்சலைட் ஆதரவாளர்கள் என்ற கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சுதந்திரம் என்பதன் அளவுகோலை மீறுவதாக இந்த அரசாங்கம் அபிப்பிராயப்படுகிறது.

பேச்சுவார்த்தை என்பதை விடவும் ஆயுதங்களே சிறந்தது என்பதை இந்த சுதந்திர அரசாங்கம் நன்கு உணர்ந்திருக்கிறது. பரப்பளவில் உலகின் ஏழாவது இடத்தில் இருக்கும் இந்தியா போன்ற பெரிய தேசத்தில் மூலைக்கொரு பக்கமாகப் புரட்சி, கலகம் என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தால் ஒவ்வொருவரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது இயலக்கூடிய காரியமா என்று சிந்திக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று இடங்களில் மூர்க்கத்தனமாக நசுக்கினால் நான்காவது இடத்தில் போராட்டம் என்பதைக் கூட யாரும் யோசிக்க மாட்டார்கள். இந்தியாவுக்குத் தெற்கே இருக்கும் ஒரு தீவில் அமைதியைக் கொண்டுவர உதவிய இந்த அரசுக்கும், இராணுவத்துக்கும் உள்நாட்டில் அமைதி கொண்டு வரத் தெரியாதா? விமானப்படை வரப்போகிறது. இனிப்பாருங்கள்.

போபால் விஷவாயு உயிரிழப்புக்கு தார்மீகக் காரணமான ஆண்டர்சன் ஆகட்டும், சென்னையில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவாகட்டும் எத்தனை சுதந்திரமாக இந்த தேசத்துக்கு வந்து போகிறார்கள். இதைவிடவும் சுதந்திரத்திற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்?

போபால் விவகாரம் இருபத்தைந்து ஆண்டுகளாக நீதிமன்றங்களில் நடைபெற்று சொற்ப தண்டனையை, குற்றவாளிகளுக்கு அளிக்கிறார்கள். இதைப் போன்ற எண்ணற்ற வழக்குகளைச் சுட்டிக் காட்டலாம். வழக்கு முடிய இருபத்தைந்து ஆண்டுகளா என்றும், அதுவரை பாதிக்கப்பட்டவர்கள் காத்திருக்க வேண்டுமா என்றெல்லாம் சாமானியர்கள் கருதக் கூடும். மெத்தப்படித்து நீதி பரிபாலனம் செய்யும் நீதித்துறையினர் இதை யோசிக்காமல் இருப்பார்களா?

அவசர அவசரமாக விசாரணையை நடத்தி குற்றவாளிகளுக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை என முன்னரே தீர்ப்பளித்தால் குற்றவாளிகள் தண்டனையை முடித்துவிட்டு சுற்றிக் கொண்டிருப்பார்கள். இருபத்தைந்து ஆண்டுகள் இழுத்தடித்தால் குற்றவாளிகளுக்கு மன உளைச்சல் கிடைக்குமல்லவா? அந்த முறையில் நீதிபதிகள் இவர்களைத் தண்டிக்கிறார்கள். இது இந்த தேசத்தில் நீதித்துறைக்கு இருக்கும் சுதந்திரம்.

இப்படி ஒவ்வொரு கூறிலும் இந்தத் தேசத்தில் சுதந்திரம் இருக்கிறது. சுதந்திரத்தை அதன் எல்லைகளுக்குட்பட்டு அனுபவிக்கத் தெரியாதவர்கள்தான் சுதந்திரம் பற்றி எதிர் மறைக் கருத்துக்களை உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றபடி சுதந்திரம் என்பதற்கான அத்தாட்சியாக இரவுக் கேளிக்கை விடுதிகளும், மசாஜ் பார்லர்களும், சாராயக்கடைகளும் அனைத்து மாநிலங்களிலும் கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் இருக்கின்றன. இவை பெரும்பாலும் அரசாங்க அனுமதி பெற்றவை. மக்களின் சந்தோஷத்திற்காக அரசாங்கத்தின் ஆசி பெற்ற உள்ளூர் பெரிய மனிதர்கள் நடத்துகிறார்கள். மக்கள் இங்கு சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம்.

இத்தனை எழுதியிருக்கும் நீ எதற்கேனும் எதிராக ஒரு துரும்பை எடுத்து வீசியிருக்கிறாயா என்ற ரீதியிலான எந்த வினாவுக்கும் என் ஒரே பதில்: ஜெய் ஹிந்த்!
நன்றி: உயிரோசை

1 எதிர் சப்தங்கள்:

vinu said...

இத்தனை எழுதியிருக்கும் நீ எதற்கேனும் எதிராக ஒரு துரும்பை எடுத்து வீசியிருக்கிறாயா என்ற ரீதியிலான எந்த வினாவுக்கும் என் ஒரே பதில்: ஜெய் ஹிந்த்!


repeeetaiiiiiiiiiiii