Apr 24, 2012

வருங்கால குடியரசுத்தலைவர் அப்துல்கலாம்: வாழ்த்துக்கள்அப்துல்கலாமை மீண்டும் குடியரசுத்தலைவர் ஆக்க வேண்டும் என்ற குரல்கள் கேட்கத் துவங்கியிருக்கின்றன. தமிழர், விஞ்ஞானி, சிறுபான்மை சமூகத்தவர், குழந்தை நேசன் என்ற பல்வேறு முகமூடிகளை வெற்றிகரமாக அணிந்துகொண்டிருக்கும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதைத் தவிர வேறு எதைச் சொன்னாலும் உங்களை நோக்கி தேசத்துரோகி என்று குரல்கள் ஒலிக்கத் துவங்கலாம் என்பதனால் எதிர்ப்பதையெல்லாம் விட்டுவிட்டு இந்திய வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக தமிழனொருவன் குடியரசுத்தலைவர் ஆவதாக புளாங்கிதம் அடையலாம்; 2020 இல் இந்தியாவை வல்லரசாக்க துடிக்கும் விஞ்ஞானி மீண்டும் ஒருமுறை குழந்தைகளை வழிநடத்த வரவிருப்பதாக உற்சாகம் கொள்ளலாம் அல்லது எளிமையின் எவரெஸ்ட், கனவுகளால் கட்டப்பட்ட பிரம்மச்சாரி ஒருவர் மீண்டும் இந்த தேசத்தை கனவு காணச் சொல்ல வருகிறார் என விசில் அடிக்கலாம்.

அதேசமயம் பிரதீபா பாட்டிலுக்கு முன்பாக குடியரசுத்தலைவராக இருந்த அப்துல்கலாம் அந்த ஐந்து ஆண்டுகள் காலமும் என்ன சாதனைகளைச் செய்தார் என்ற கேள்வியை அப்துல்கலாமின் எதிர்ப்பாளர்கள் எழுப்பக்கூடும். அதற்கான பதிலை இந்தியவாத ஊடகங்கள் இன்னும் சில தினங்களில் கர்மசிரத்தையாக தங்களின் பக்கங்களில் கசியச் செய்வார்கள். வழவழப்பான தாளில் புன்னகை சிந்தப்போகும் அப்துல்கலாமின் படங்களுக்குக் கீழாக அவர் ஏவுகணை செலுத்தியதையும், பொக்ரானில் அணுகுண்டை வெடித்து பாகிஸ்தானுக்கு பராக்கு காட்டியதையும் எழுதி நம்மை மெய்சிலிர்க்கச் செய்வார்கள். 

தன் பதவிக்காலம் முடிந்த போது தன்னையே அடுத்த முறையும் குடியரசுத்தலைவர் ஆக்குவார்கள் என ஏங்கிக் கொண்டிருந்ததை நாசூக்காக மறைத்து தான் பதவிகள் மீது விருப்பமற்றவன் என்றும், ஏவுகணை செய்வதைவிடவும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு எடையற்ற செயற்கைக் கால்கள் செய்ததே தனது பெரும் சாதனை என்றும் தன் பிரதாபங்களை அடுக்கும் அப்துல்கலாமை சந்தேகிப்பவனை தெருவில் நிறுத்தி சுடுவதை விடவும் வேறு எந்த தண்டனை பொருத்தமானதாக இருக்க முடியும்?

இந்தச் சாதனையை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு அப்துல்கலாமின் பிற சாதனைகளைத் தேடினால் தன் பதவிக்காலம் முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகளைச் சந்தித்திருக்கிறார் என்பதனைத் தவிர வேறு எதுவும் ஞாபகத்தில் வந்து தொலைக்க மறுக்கிறது. 2002 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்த்தப்பட்ட குஜராத் படுகொலைகளுக்குப் பிறகாக அதே ஆண்டு ஜூலையில் ராஷ்டிரபதி பவனின் நாற்காலியை அலங்கரிக்கத் துவங்கிய அப்துல்கலாம் இந்தக் கலவரத்திற்கெதிராக அரசுக்கு என்ன அறிவுறுத்தல்களை மேற்கொண்டார் என்ற கேள்வியும் துருத்திக் கொண்டு நிற்கிறது. தனது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் இருந்து 18 கடல் மைல் தூரத்தில் கசக்கியெறியப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக குறைந்தபட்ச குரலையாவது உயர்த்தினாரா இந்தத் தமிழர் என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.

இந்துத்துவ தேசியவாத அமைப்புகள், ஒரு முஸ்லீம் இந்தியாவில் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகின்றனவோ அந்த எதிர்பார்ப்பிலிருந்து துளிபிசகாமல் வாழும், பகவத் கீதையை தினந்தோறும் வாசிக்கும் “இசுலாமியராக” இருப்பதைத் தவிர அப்துல்கலாமை ஆதரிக்க பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு காரணமும் வெளியில் தெரிய மறுக்கிறது. உத்தரப்பிரதேசத்திலும், மஹாராஷ்டிராவிலும் முஸ்லீம்கள் மற்றும் நடுத்தர மக்களின் வாக்குகளை பெறுவதற்கான ஆயுதமாக பயன்படுத்துவதைத் தவிர சமாஜ்வாடியின் முலாயம் சிங் யாதவக்கும், சரத்பவாருக்கும் அப்துல்கலாமின் வேறு எந்த சாதனைகள் கண்ணை உறுத்துகின்றன என்பதை அவர்கள் தெளிவுப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

தேசியவாதம் பேசிக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் இங்கு ஒரு முகத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த முகம் இந்த தேசத்தில் பெரும்பான்மையாக இருக்கும் படித்த, நடுத்தர மனோபாவத்திற்கு ’இந்திய ரத்தத்தை’ பாய்ச்சுவதற்கும், துப்பாக்கியில் நிரப்புவதற்கு ரவை தீர்ந்து கிடக்கும் இந்திய ராணுவத்தை உலகின் பெரும்பலம் வாய்ந்த ராணுவம் என பொய்யாக சித்தரிப்பதற்கும் உதவும் முகமாக இருக்க வேண்டும். அரசியல் கட்சியைச் சாராதவர் என்ற பிம்பம் அந்த முகத்திற்கு பொருத்தமானதாக இருக்கும். படித்த நடுத்தர மக்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பின் இன்னும் உசிதம். அதிர்ஷ்டவசமாக இந்த ஆட்சியாளர்களுக்கு அப்துல்கலாமின் முகம் ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது. 

குழந்தைகளிடம் கனவு காணச்சொல்லும் அப்துல்கலாம் இந்த நாட்டின் கல்விமுறைகளில் நிகழ்த்தப்பட வேண்டிய மாறுதல்கள் குறித்தான திட்டம் எதுவும் கொண்டிருக்கிறாரா என்பதும், கிராமப்புற குழந்தைகளின் மேம்பாட்டிற்கான என்ன திட்டங்களை முன்னெடுத்தார் என்பதும் பதில் இல்லாத வேறு சில கேள்விகள் என்றாலும் ஒரு தேசியவாதியின் செயல்பாடு குறித்து சந்தேகிப்பவர்களை பிரிவினைவாதி என்றோ கலகக்காரன் என்றோ உதாசீனப்படுத்திவிடலாம்.

அவர் குடியரசுத்தலைவராக இருந்த போதுதான் வடகிழக்கு மாநிலங்களில் அரசபயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டது என்பதும் மஹாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மாண்டு போனதும் ஞாபகத்திற்கு வருகிறது. 

குடியரசுத்தலைவருக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான பணிகள் மற்றும் ஆட்டோகிராப் வாங்கவும், கைகுலுக்கவும் காத்திருக்கும் இலட்சக்கணக்கான குழந்தைகளின் முகம் இத்தகைய ’சின்னச்சின்ன’ பிரச்சினைகளை அவரிடம் இருந்து மறைத்திருக்கக்கூடும் என்பதை நீங்களும் நானும் புரிந்துகொள்வதே பொருத்தமானதாக இருக்கும்.

குடியரசுத்தலைவராக இல்லாத போது அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானது என்று அத்தாட்சி வழங்குவதற்கும், அணுமின் நிலையங்களே இந்தியா வல்லரசாகுவதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள் என்ற பிம்பத்தை உருவாக்குவதற்கும் ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்ட அப்துல்கலாம் என்னும் ’விஞ்ஞானி’ அணுமின் நிலையங்களால் பாதிக்கப்படவிருக்கும் மக்களுக்கான மாற்றுவழிகள் எதையும் முன்வைக்க மறந்துபோயிருக்கிறார். ஆனால் நாம் கவலைப்பட வேண்டியதில்லை குடியரசுத்தலைவர் ஆனபிறகு ’மாற்றுவழிகள்’ பற்றிய கனவுகளைக் காண்பதற்கான வழிகளை நமக்குச் சொல்லித்தர காத்திருக்கிறார் வருங்கால வல்லரசின் வருங்கால மேதகு குடியரசுத்தலைவர்.

ஜெய் ஹிந்த்!


1 எதிர் சப்தங்கள்:

புதியவன் பக்கம் said...

அருமையான கட்டுரைக்கு எதனால் ஒரு பின்னூட்டமும் இல்லை என்பதற்கான காரணத்தை வியப்புடன் ஊகிக்க முடிகிறது.
புதியவனஅ