Dec 2, 2012

என்கவுண்ட்டரும் டாஸ்மாக்கும் அரசாங்கத்தின் ஆயுதங்கள்“தப்பித்து ஓடினார்கள்; சுட்டுக் கொன்றுவிட்டோம்” சாதாரணமாகத்தான் செய்தியைக் கொடுக்கிறார்கள். 

“அடிச்சு கொன்னு இருக்கானுக சார். போலீஸ்காரன் நெஞ்சு மேலேயே கல்லைப் போட்டு கொன்னு இருக்கானுக. இப்படி செஞ்சாத்தான் அடுத்தவனுக்கு பயம் வரும்” நாமும் உணர்ச்சி பொங்க பேசுகிறோம். 

எஸ்.ஐ ஆல்வின் சுதனின் குடும்பம் பெரியது. நோய்வாய்ப்பட்ட பெற்றோர், தம்பி, தங்கை என மொத்தக் குடும்பமும் அவரது வருமானத்தை நம்பி இருந்திருக்கிறது. சம்பவத்தின் போது இரண்டு போலீஸாரை சில ரவுடிகள் சேர்ந்து ராகிங் செய்து கொண்டிருந்தபோது தடுக்க போயிருக்கிறார் ஆல்வின் சுதன். போதையில் இருந்தவர்கள் அவரைக் கீழே தள்ளி பாறாங்கல்லை போட்டு கொன்றுவிட்டார்கள் என்று ஒரு கட்டுரை இணையத்தில் கிடைக்கிறது. எப்படி கொன்றார்கள் என்பது முக்கியமான விஷயமாகத் தெரியவில்லை. கொன்றவர்கள் போதையில் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் உறுத்துகிறது. இப்பொழுது வரும் கொலைச் செய்திகள் பெரும்பாலானவற்றில் கொலையாளிகள் போதையில் இருக்கிறார்கள் என்பதை கவனிக்க முடியும்.

அப்படியானால் போதைதான் குற்றங்களுக்கு அடிப்படையான காரணமாக மாறிக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழும் போதும் அதை முற்றாக நிராகரிக்க முடிவதில்லை. கல்வி முறையில் ஒழுக்க நெறிகள் போதிக்கப்படுவதில்லை என்பதில் தொடங்கி இளைஞர்களுக்கு சரியான தொழில்கள் அமைவதில்லை, வேலை இல்லை, எளிதில் கிடைக்கும் போதை வஸ்துக்கள் என சமூகக் குற்றங்களுக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த ஒவ்வொரு காரணத்திலும் குற்றவாளியாக அரசாங்கம்தான் பல்லிளிக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

கொல்வதற்கு முன்னால் கொலைகாரனுக்கு கிடைக்கும் துணிச்சல் போதையின் வழியாகக் கிடைக்கிறது அல்லது கொல்வதற்கு தேவையான மடத்தனத்தை போதை கொடுக்கிறது என்றால் அந்த போதையை சமூகத்திற்கு வெற்றிகரமாக கொடுத்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தைதான் குற்றவாளி ஆக்க வேண்டும். குடிப்பதை ஒரு சமூகத்தின் கலாச்சாரமாக்கிக் கொண்டிருக்கின்றன இந்த அரசாங்கங்கள். சில காலத்திற்கு முன்பாக  ‘குடிகாரன்’ என்பது ஒருவனை அவமானப்படுத்துவதற்கான குறிச்சொல். இப்பொழுது அதுவே ஒருவன் தன்னை ‘கெத்து’ ஆனவனாகக் காட்டிக் கொள்ளுவதற்கான சொல்லாக மாறியிருக்கிறது. சமூகத்தின் அடையாளங்களை இந்த மதுபானக் கடைகள் மாற்றிக் கொண்டிருக்கின்றன. வீதிக்கு வீதி முதுபானக் கடைகளைத் திறந்து வைத்திருக்கும் அரசை நோக்கி துப்பாக்கியை நீட்ட வேண்டியதில்லை குறைந்தபட்சம் விரல்களையாவது நீட்ட வேண்டிய காலம் இது. 

ஆல்வின் சுதனின் கொலைகாரர்களை சுட்டுக் கொன்றது சரியா தவறா என்பதற்காக இந்தக் குறிப்பை எழுதவில்லை.

சமூகத்தின் பெரும்பாலான குற்றங்களின் முகங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன என்பதை கவனிக்கத் தவறிக் கொண்டிருக்கிறோம். இனியும் கவனிக்காமல் விட்டால் மிகக் கொடூரமான சூழலுக்கு நம் சமூகம் தள்ளப்ப்பட்டுவிடும். இப்பொழுதே மனிதாபிமானம் என்ற சரடு அறுந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. யாருக்கும் யார் மீதும் அன்போ அக்கறையோ இல்லாத சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாரை வேண்டுமானாலும் ஒரு கேள்வி கூட கேட்காமல் அடித்துக் கொல்லும் ஒரு வறண்ட சமூகம் இது. 

ஒவ்வொரு கொலையிலும் ஒருவனைக் கொல்வதற்கு ஏதோ ஒரு காரணம் போதுமானதாக இருக்கிறது. கள்ளக்காதல், கொலைகாரன், வன்புணர்ச்சியாளன், தப்பித்து ஓடினான், போலீஸைத் தாக்கினான், பொதுமக்களைக் கொன்றான் இப்படி ஏதோ ஒரு காரணம் கிடைத்துவிடும்.

ஒருவனைக் கொல்வதற்கு ஏதோ ஒரு ஆயுதம் போதுமானதாக இருக்கிறது. அரிவாள், கத்தி, பாறாங்கல், துப்பாக்கி என ஏதோ ஒன்று கிடைத்துவிடுகிறது.

ஒருவனைக் கொன்றபிறகு டைம்பாஸூக்கு தேவையான செய்தி ஒன்று நமக்கு கிடைத்துவிடுகிறது. இது சைக்கிள். இந்தச் செய்தியை மறந்த பிறகு வேறொரு கொலை, பதில் கொலை, செய்தி, டைம்பாஸ் என இந்த சைக்கிள் சுற்றிக் கொண்டேயிருக்கும்.

ஆனால் பிரச்சினை ஒருவனைக் கொல்வதில் இல்லை என்பதை நாம் ஒருபோதும் புரிந்து கொள்ளப்போவதில்லை. சமூகத்தின் அடிப்படையான சிக்கல்களைக் களையாமல் குற்றவாளிகளையெல்லாம் கொல்ல வேண்டுமானால் இருக்கும் அத்தனை தொழிற்சாலைகளையும் துப்பாக்கித் தொழிற்சாலைகளாக மாற்ற வேண்டியிருக்கும். போலீஸ்துறையில் என்கவுண்ட்டர் டிபார்ட்மெண்ட் என்று தொடங்க வேண்டியிருக்கும். வெள்ளைத்துரைக்கும், சைலேந்திரபாபுவுக்கும் எப்பொழுதும் வேலை இருந்து கொண்டேயிருக்கும்.

11 எதிர் சப்தங்கள்:

Kumky said...

well said.

good article.

ஹம்துன்அஷ்ரப் said...

அருமை.............உண்மையை சொன்னீர்கள்

புரட்சி தமிழன் said...

குடிப்பதையும் அடிப்பதையும் பெண்களை தொந்தரவு செய்வதையும் ஒரு கலாச்சாரமாக மாற்றுவதில் அரசும் சினிமாவும் முழு பங்கு வகிக்கின்றன.பருத்தி வீரன் படத்தில் எந்த நேரமும் போதையில் திரிபவனை பொதுமக்களை தொந்தரவு செய்பவனை போலீஸ்காரனோட பேண்ட்டை உருவுவதை ஒரு பெருமையாக சித்திரிக்கிறது அந்த படம் அந்த படத்தை வெற்றியின் உச்சத்திற்க்கே கொண்டு செல்கிறது ரசிகர் கூட்டம். இந்த படத்தைப்பார்த்து இன்று இதே தொனியில் திரியும் இளைஞர்களையும் மாணவர்களையும் நான் கண்கூட பார்க்க நேர்கிறது. யாராவது மணதை தொட்டுச் சொல்லட்டும் இந்த படத்தின்மூலம் இளைஞர்களின் நடவடிக்கையில் ஒருவரிடமும் எந்த பாதிப்பையும் ஏற்ப்படுத்தவில்லை என்று. யாராவது எங்கோ ஒன்றிரண்டு நபர்கள் இப்படி இருப்பதற்கு ஒட்டுமொத்தமாக குற்றம் சொல்வதாக கூறினால் அந்த ஒண்றிரண்டு நபர்கள்தான் இது போன்ற செயல்களை செய்பவர்கள்.

ஹம்துன்அஷ்ரப் said...

குற்றசெயல்களை செய்வதற்க்கு முழுமுதற் காரணியாக விளங்க்கும் 'மது"வை விற்க்கும் அரசுகளே ...நாட்டில் குற்றங்கள் நடைப்பெறுவதற்க்கு முக்கிய காரணம்.எனவே நாட்டின் வளர்சிக்காக மதுவை தடை செய்யவேண்டியது அவசர அவசியம்.

Anonymous said...

மக்களை மதி மயக்குவதில் குடி முக்கயப் பங்காற்றுகின்றன. ஆனால் கொலைக்கும், வன்முறைக்கும் குடி மட்டுமே காரணமாகாது, சமூக சிக்கல்கள், அதிகார அழுத்தங்கள், சாதிய வெறிகள் என பலக் காரணங்கள் உள்ளன. ஒரு காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை என்றால் பொதுமக்களின் நிலை என்ன என்பதை நாம் உணர வேண்டும்.

semmalai akash said...

கொல்வதற்கு முன்னால் கொலைகாரனுக்கு கிடைக்கும் துணிச்சல் போதையின் வழியாகக் கிடைக்கிறது அல்லது கொல்வதற்கு தேவையான மடத்தனத்தை போதை கொடுக்கிறது என்றால் அந்த போதையை சமூகத்திற்கு வெற்றிகரமாக கொடுத்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தைதான் குற்றவாளி ஆக்க வேண்டும்##############3

இந்தவரிகள் நூத்துக்கு நூறு உண்மைகள், அருமையான விழிப்புணர்வு கட்டுரை. வாழ்த்துகள் நண்பரே!

Vijay said...

மயக்கத்திலிருப்போரை மீட்டெடுக்கும் பதிவு

திண்டுக்கல் தனபாலன் said...

சரியாகச் சொன்னீர்கள்...

Vaa.Manikandan said...

நண்பர்களுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

/சமூகத்தின் அடிப்படையான சிக்கல்களைக் களையாமல் /

எப்போது இதில் அக்கறை செலுத்த ஆரம்பிக்கிறோமோ அப்போதுதான் நாட்டுக்கு விடிவு பிறக்கும்.

Anonymous said...

mikka nanru