Dec 22, 2012

டெல்லி வன்புணர்வு மட்டும்தான் நம் பிரச்சினையா?



ஓடும் பேருந்தில் பெண்ணொருத்தியை கற்பழித்துவிட்டு நாப்கினைப் போல எறிந்துவிட்டு போகிறார்கள்.கொடூரமாகத்தான் இருக்கிறது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவனை திகார் சிறையில் அடைத்த போது அங்கிருந்த கைதிகள் அவனை அடித்து உதைத்து சிறுநீர் குடிக்க வைத்து மனித மலத்தை தின்ன வைத்திருக்கிறார்கள். “சாவடிக்கட்டும்” என்ற மனநிலையில் இருக்கிறோம்.

உண்மையில் இந்த மனநிலை ஊடகங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக வடநாட்டு ஊடகங்களால். இந்த ஊடகங்கள் தங்களின் சேனலுக்கான ‘எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோரி’யை தயாரிக்கும் போதே அந்த நிகழ்ச்சியை பார்த்த பின்னர் பார்வையாளர்கள் எத்தகைய மனநிலையை அடைய வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்கின்றன. அது கோபம், அறச்சீற்றம், பீதி என சீஸனுக்குத் தகுந்த மனநிலையாக இருக்கும். டெல்லி விவகாரத்தில் நமது மனநிலை மாற்றம் குறித்து ஒரு Graph வரைந்தால் அது அந்த பெண்ணின் மீதான பரிதாபத்தில் ஆரம்பித்து காமுகர்களின் மீதான கோபத்தை நோக்கி நகரும்.

கவனித்துப்பார்த்தால் இத்தகைய ஊடகங்களின் டார்கெட் ‘மிடில் கிளாஸ்’. இந்த மிடில் கிளாஸ் மாதவன்கள் பொங்கி வரும் தங்களின் உணர்ச்சியை சமூக ஊடகங்களில் கொட்டிவிட்டு சைலண்ட் ஆகிவிடும் போராளிகள். அதிகபட்சமாக வார இறுதி நாட்களில் ஏதேனும் ஒரு பொது இடத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி போராடிவிட்டு கே.எஃப்.சியில் சிக்கன் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போகும் போலியான போராளிகளை இந்த ஊடகங்கள் வெற்றிகரமாக உருவாக்கி வருகின்றன.  இந்த நவீன போராளிகளிடம் ஒரு பிரச்சினை இருக்கிறது. ஊடகங்களில் எந்தச் செய்தி‘ஹைலைட்’ செய்யப்படுகிறதோ அதைப்பற்றி மட்டுமே கவனம் செலுத்துவார்கள். அதற்கு முந்தைய பிரச்சினையை மறந்திருப்பார்கள்.

சில மாதங்களுக்கு முன்பாக ‘ஊழலை ஒழிப்போம்’ என்று அன்னா ஹசாரேவை ஊடகங்கள் தூக்கிப்பிடித்தன. ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் அன்னாவின் கொடி பறந்தது. பிறகு அவர் ஒரு ‘டம்மி பீஸ்’ என்றான பிறகு எந்த உயரத்தில் பிடித்திருந்தார்களோ அங்கிருந்து கீழே விட்டார்கள். அதுவரை ஊழலை ஒழிப்போம் என்று நாலுகால் பாய்ச்சலில் பாய்ந்த போராளிகளை பூதக்கண்ணாடி வைத்துத் தேடினாலும் இப்பொழுது கண்டுபிடிக்க முடியாது. அதே போராளிகள்தான் இப்பொழுது வன்புணர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனைகள் பற்றியும், இனி எப்படி இந்தப்பிரச்சினைகளை கையாள வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கபடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த பிரச்சினை ‘ஹைலைட்’ ஆகும் போது இதை விட்டுவிட்டு அதைத் தூக்கிக் கொள்வார்கள். 

ஒன்றுமேயில்லாத சப்பை மேட்டரான பறவைக்காய்ச்சலுக்கு வடக்கத்திய ஊடகங்கள் கொடுத்த பில்ட்-அப் ஞாபகமிருக்கிறதா? அது மக்களின் மத்தியில் அந்தச் சமயத்தில் ஒருவித பீதியை கிளப்பிவிட்டிருந்தது. மிச்சம் மீதியாகிப்போன  பறவைக்காய்ச்சலுக்கான தடுப்பூசி ஸ்டாக்கை காலி செய்வதற்கு மருத்துவக் கம்பெனிகள் விரித்த சதிக்கு நமது ஊடகங்களும் உடந்தையாக இருந்தன. மக்கள் பதறியடித்துக் கொண்டு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டார்கள். மருத்துவக் கம்பெனிகளின் ஸ்டாக் தீர்ந்த பிறகு பறவைக்காய்ச்சலை ஊடகங்கள் மறந்துவிட்டன.

டெல்லி பெண்ணுக்கு நடந்த கொடுமை யாராலும் ஜீரணிக்க முடியாததுதான். அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அதே சமயம் மற்ற முக்கியமான பிரச்சினைகளை ஏன் ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை?

தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் போது இதே அளவு முக்கியத்துவத்தை இந்த ஊடகங்கள் ஏன் அளிப்பதில்லை என்று புரிவதேயில்லை. மிகச் சமீபத்தில் வினோதினி என்ற பெண்ணின் மீது ஆசிட் ஊற்றப்பட்டு அவள் தனது பார்வையை முழுமையாக தொலைத்துவிட்டாள். எத்தனை சேனல்கள் இது பற்றிய கவனத்தை உருவாக்கின? 

2004 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் 94 குழந்தைகள் எரிந்த தீ விபத்து தேசிய அளவில் எந்தச் சலனத்தையும் உருவாக்கவில்லை. ஆனால் நொய்டாவில் 2008 ஆம் கொல்லப்பட்ட ஒன்பது வகுப்பு மாணவியான ஆருஷி வழக்கு பற்றிய விவாதங்களை இன்னமும் ஆங்கிலச் சேனல்களில் கவனிக்க முடியும். 1999 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட மாடல் அழகியான ஜெஸிக்காவை இன்னமும் நாம் மறக்காமல் இருக்கக் காரணம் ஊடகங்கள்தான். ஆருஷி, ஜெஸிக்காவை விடக் கொடுமையான நரபலிகள் இந்த நாட்டின் மற்ற பகுதிகளில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஊடகங்கள்தான் தலைநகரை விட்டு வெளியில் வருவதில்லை. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடந்த வன்புணர்வு சம்பவம் கோயமுத்தூரிலோ அல்லது எர்ணாகுளத்திலோ நடந்திருந்தால் இத்தகைய சலனத்தை உருவாக்கியிருக்குமா என்ற கேள்வி முக்கியமானது? பதில் எல்லோருக்குமே தெரிந்ததுதான்.

வடநாட்டு பிரச்சினைகளை மட்டுமே தேசியப் பிரச்சினையாக காட்டிக் கொண்டிருப்பதை ஊடகங்கள் எந்தக் காலத்திலும் மாற்றிக் கொள்ளப்போவதில்லை. அது வன்புணர்ச்சியாக இருந்தாலும் சரி, கொலையாக இருந்தாலும் சரி டெல்லியில் நடந்தால்தான் சலனமுண்டாக்கும் செய்தியாக மாறும் போலிருக்கிறது. 

எனக்கு சமூகப்போராட்டம் நடத்த செய்தி கிடைத்தால் சரி அந்த பிரச்சினை எங்கு நடந்தால் எனக்கு என்ன?

“கற்பழித்தவனை தூக்கில் போடு” 

“போராடுவோம்! போராடுவோம்!! அடுத்த நியூஸ் வரும் வரைக்கும் போராடுவோம்”

9 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

அருமை மணிகண்டன்.

Anonymous said...

நீங்களும் நானும் ஏற்கிறோமோ இல்லையோ இந்தியா என்பதை வரைபடத்தில் உள்ளவாறு ஏற்றுக்கொள்கிறோம்.. தில்லியை நமது தலையகமாககிக் கொள்கிறோம்...இந்தியாவின் எந்த மூலையில் உள்ளவனுக்கும் தில்லியை அறிந்திருப்பான்.. (பார்த்திருப்பனோ இல்லையோ)... மூன்றில் ஒரு பங்கு தில்லியில் கால் பதித்திருபபான்.. (கொட்டாம்பட்டியில் அனைத்து இந்தியக் கால்கள் பதிந்திருக்காது.. அதனால்மட்டமில்லை என்பது வேறு விசயம்) ஆக அதற்காகவாது தில்லியும் அங்கு நடைபெறும் சமூக பிரச்சனைகளும் பிரதானமாகிறது... நீங்களே ஜீரணிக்க முடியாத சம்பவம் என்றும் சொல்கிறீர் .. இருந்தாலும் என்று இழுக்கிறீர்.. உங்களிடம் குழப்பம் இருக்கிறது...ஊடங்களோ வட இந்தியர் கையில் உள்ளது.. அவர் பிரதானமாக அதைப் பற்றித்தான்பேசுவார்கள் அதில் தவறு எங்குள்ளது...? நீங்கள் வேண்டுமானாலும் கண்களை மூடிக் கொள்ளலாம்.. ,அல்லது தனியாக டிவியை தொடங்கலாம்.. தமிழ்நாடு தனியாக இருக்கவேண்டும் எனலாம்.. இல்லாவிட்டால் பிளாக் எழுதி எல்லோரையும் திட்டலாம்...

R.Puratchimani said...

சரியான சிந்தனை..........
இந்த தொலைக்காட்சிகளின் தலைமையிடம் அங்கே இருப்பதால் அவர்களுக்கு இப்படி செய்வது வசதியாக இருக்கிறதா அல்லது தில்லியும்,மும்பையும் மட்டுமே இந்தியா என்று நினைத்து கொள்கிறார்களா என தெரியவில்லை.

Robert said...

இது ஒரு சிறப்பான கட்டுரை நண்பா. அதீத ஆதங்கத்தின் வெளிப்பாடு. வெளுத்ததெல்லாம் பால் என்ற நிலைக்குத்தான் மக்களை தள்ளிக்கொண்டு வந்து விட்டனர். ஒரு தெளிவான, தொலை நோக்கு பார்வை உள்ள தலைமையைத்தான் தேடுகின்றனர் மக்கள். நாட்டில் நடக்கும் ஒரு அநீதிக்கு எதிராக யாராவது குரல் கொடுக்கும் போது அதை ஆமோதிக்கும் நிலையில்தான் நாம் உள்ளோம்.(அன்னா ஹாசரேக்கு சேர்ந்த கூட்டமும் இதன் அடிப்படையில்தான்) இதை நாம் மரணித்து விடாத உணர்ச்சி என்றுதான் கருத வேண்டுமென நினைக்கிறேன் நண்பா. ஊடகங்கள் மலிவான செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட இது போன்றவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் மிகவும் குறைவானதே. ஊழலுக்கு எதிராக மெழுகுவர்த்தி ஏற்றி உறுதிமொழி எடுத்ததை கிண்டலடித்து உள்ளீர்கள். அந்த நிகழ்வில் எத்தனை ஆயிரம் பள்ளி சிறார்கள் கலந்து கொண்டார்கள் அவர்கள் மனதில் இது ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் அல்லவா? ஒரு சாதாரண தனி மனிதனிடமிருந்து இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும். ஏன் வட இந்திய மீடியாக்களை குறை சொல்ல வேண்டும்? தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை எத்தனை தமிழ் ஊடகங்கள் எத்தனை முக்கியத்துவம் கொடுத்து சொல்கின்றன??? இங்கு நடக்கப்படும் நிகழ்வுகளுக்கு ஒரு தொடர் கவனம் உண்டா?


கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடந்த வன்புணர்வு சம்பவம் கோயமுத்தூரிலோ அல்லது எர்ணாகுளத்திலோ நடந்திருந்தால் இத்தகைய சலனத்தை உருவாக்கியிருக்குமா என்ற கேள்வி முக்கியமானது?//
இது போன்ற சம்பவங்கள் கோயம்பத்தூரிலோ அல்லது சேலத்திலோ நடந்திருந்தால் தான் ஒரு நாள் கூத்துடன் நின்று போயிருக்கும். எர்ணாகுளத்தில் நடந்து இருந்தால் தெரிந்து இருக்கும் சேதி!!!!?????

Vaa.Manikandan said...

அனானிமஸ்,

தமிழ்நாடு தனியாக வேண்டும் என்று எங்கே எழுதியிருக்கிறேன்?

நன்றி புரட்சிமணி.

நன்றி ராபர்ட்.

Anonymous said...

நண்பரே! இது பிராந்திய ரீதியிலான பிரச்சினை என்பதை விட இந்திய அளவிலான பிரச்சினை என்பதே சரியாக இருக்கும். ஒரு நல்ல விஷயத்துக்காகப் போராட்டம் நடக்கிறது என்றால் எங்கு நடந்தால் என்ன? நேற்று முன் தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏழாம் வகுப்பு மாணவி கற்பழித்துக் கொல்லப் பட்டாள். இங்குள்ள ஊடகங்கள் என்ன செய்தன? நானும் நீங்களும் கணினி முன் உட்கார்ந்து கொண்டு புரட்சி பண்ணிக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கே தெருவில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களை வாழ்த்துங்கள். மனமில்லையென்றால் திட்டாதீர்கள். இதே வட இந்திய ஊடகங்கள் தமிழ் நாட்டு ஊழல், சாதிப் பிரச்சினைகள், இன்ன பிறவற்றை காமிக்க ஆரம்பித்தாலும் நீங்கள் வாளாவிருக்கப் போவதில்லை. "இதெல்லாம் உங்கள் ஊரில் நடக்க வில்லையா? எங்களை மட்டும் ஏன் cover செய்கிறீர்கள்?" என்பீர்கள். நம்மால் போராட முடியவில்லை என்றால் போராடுபவர்களை வாழ்த்துங்கள். அக்னிக் குஞ்சாக இருக்கக் கூடும். காடு வெந்து தணியக் கூடும். பெரும்பான்மையிலிருந்து வேறுபட வேண்டும் என்று இது மாதிரி எழுதுவதைத் தவிர்த்தல் நன்று

சிவக்குமார் said...

மணிகண்டன், கற்பழிப்பு என்று எழுத்துக்களால் வன்புணர்ச்சி செய்யாம்ல், வன்புணர்வு என்று தலைப்பு வைத்ததற்கு உங்களை பாராட்டியே ஆகவேண்டும். டெல்லி போன்ற வட இந்திய மாநிலங்களில்தான் பெண்கள் மீதான் வன்கொடுமைகள் அதிகமாக இருக்கிறது. அதற்கே இப்போதுதான் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது வெறும் பரபரப்பு விற்பனைதான். ஊடகங்களின் தனமை தெரிந்ததுதானே. நடிகர்கள் பிறந்த நாளுக்கு கொடுக்கும் அதே பரபரப்பு இதற்கும். ப்ளாக்கில் எழுதிக் கொண்டிருக்கும் நம்மை விட மெழுகுவர்த்திப் போராட்டம் ஓரடி முன்னாலிருக்கிறது.

Anonymous said...

இது அனைத்துத் தளங்களிலும் இருந்த/இருக்கின்ற எண்ணவோட்டம் தான்.

'The History of Indian Film Music' என்றொரு புத்தகத்தை ஒரு நூலகத்தில் ஹைதையில் பார்த்தேன். ஒரு தென்னிந்திய ஆசாமியும் இல்லை. உற்றுப் பார்த்தால், புத்தகப் பெயரின் அடியில் துளியூண்டு எழுத்துக்களில் ‘Hindi' என்று எழுத்து.

Vaa.Manikandan said...

நன்றி நண்பர்களே.

அனானிமஸாக எழுதப்படும் கமெண்ட்களுக்கு பதில் எழுதக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன்.

சில அனானிமஸ் கருத்துக்கள் நல்ல விவாதத்தை உருவாக்குவதற்கான பின்னூட்டங்களாக இருப்பினும் வேறு சில அனானிமஸ் கமெண்ட்கள் மட்டமான வசைகளுடன் இருக்கின்றன. இத்தகைய வசையாளர்களை ஊக்குவிக்க கூடாது என்பதற்காகவே நல்ல கருத்துக்களுடன் வரும் அனானிமஸ் கருத்துக்களுக்கும் சேர்த்து பதில் எழுதப் போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.

ஆனால் எந்த பின்னூட்டத்தையும் பப்ளிஷ் செய்யாமல் அழிப்பதில்லை என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்.

எவ்வளவு மோசமான வசையாக இருப்பினும் பப்ளிஷ் செய்துவிடுகிறேன். ஆனால் தயவு செய்து பதிலை எதிர்பார்க்க வேண்டாம்.

புரிந்துணர்வுக்கு நன்றி.