Sep 20, 2012

ராஜபக்‌ஷே, ப்ளீஸ் வெளியே போ



மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் புத்த பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்ட ராஜபக்‌ஷேவை அழைத்திருக்கிறார்கள். புத்தனுக்கும் ராஜபக்‌ஷேவுக்கும் என்ன சம்பந்தம்? எந்தத் தகுதியின் அடிப்படையில் சிங்களத்து கோமகனை அழைத்திருக்கிறார்கள்? கோமகனாக இருந்தாலும் அந்த மனிதன் கொலைகாரன் தானே?.  

இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இனவெறி இராணுவத்திற்கு உத்தரவிட்ட அதிபர் ராஜபக்க்ஷே. ஒவ்வொரு சுண்டுவிரல் அசைவிலும் ஓராயிரம் பேரையாவது கருக்கிய அயோக்கியத் தனத்தை செய்தவர். தமிழ் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு குழந்தைகளின் உடல்கள் இலங்கையின் தெருக்களில் சிதறவிடப்பட்டுக் கொண்டிருந்த போது முகம் நிறைய பவுடரும் வாய் நிறைய புன்னகையுமாக நிழற்படங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தவர்.

ஐரோப்பிய நாடுகளில் கால் வைத்த இடங்களில் எல்லாம் எதிர்ப்பின் உஷ்ணம் தாளாமல் தலையில் துண்டு போட்டுக் கொண்டு ஓடி வந்தவரை இந்த தேசம் மட்டும் ஏன் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கிறது? போர்க்குற்றவாளி என அறிவிக்க உலகத் தமிழர்களோடு சேர்ந்து சில நாடுகள் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்க என்ன காரணத்திற்காக இந்த மனிதனை இந்தியா காப்பாற்றுகிறது?

இந்தக் கேள்விகள் இயல்பாக எழக் கூடிய கேள்விகள். காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அரசியல் காரணங்கள். காரணங்கள் இருக்கட்டும். அதிகார வர்க்கம் அப்படித்தான். ஆனால் சொந்த இனத்தை வெட்டிக் கொன்றவன் நம் வீட்டிற்குள் காலடி வைத்தால் அதை ஏற்றுக் கொண்டு சமாதானமாக போவோம் என்பது மடத்தனம் இல்லையா? குறைந்தபட்ச எதிர்ப்புணர்வையாவது காட்டுவதுதானே சரியாக இருக்கும்?

இத்தகைய ராஜபக்‌ஷேவை இந்தியாவிற்குள் அனுமதித்தால் என்ன தவறு என்ற ரீதியில் சில கருத்துக்களை பார்க்க வேண்டியிருப்பதுதான் வேதனையாக இருக்கிறது.

நம் சகோதரன்- அவன் எத்தகைய குற்றம் செய்தவனாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே- அவனை நேர்மையற்ற முறையில் ஒருவன் கொன்றிருந்தால் அந்தக்கொலைகாரனை எந்தக் காலத்திலாவது நம்மால் மன்னிக்க முடியுமா? அதே நிலைப்பாடுதானே ராஜபக்‌ஷே மீதும் இருக்க வேண்டும். 

இந்த நேரத்தில் ராஜபக்‌ஷேவிற்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு படையைத் திரட்டிக் கொண்டு மத்திய பிரதேசத்தில் முகாமிட்டிருக்கும் அர்பணிப்பு உணர்விற்காக  வைகோவை பாராட்ட வேண்டும். இந்த எதிர்ப்புணர்வும் இல்லையென்றால் நூறு கோடி மக்கள் வாழும் தேசத்தில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் வந்து சென்றான் ஒரு கொலைகாரன் என்ற பெருமையோடு ராஜபக்‌ஷே திரும்பியிருக்கக் கூடும்.

அதிகார வர்க்கத்தின் ஊதுகுழல் ஊடகங்கள் வைகோவின் போராட்டத்தையும் எதிர்ப்பையும் புறக்கணிக்கின்றன. மத்தியப்பிரதேச அரசு வைகோவை சாஞ்சி நகரை நோக்கிச் செல்ல அனுமதிக்க மறுக்கிறது. நள்ளிரவில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து சாலையில் அமர்ந்து தர்ணா நடத்துகிறார்கள் வைகோவும் அவரது தொண்டர்களும். விடியும் வரை தொடர்ந்து கொண்டிருக்கும் தர்ணாவிற்கு பிறகும் அனுமதியில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். கைது செய்துவிடக் கூடும். அது பிரச்சினை இல்லை. எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். 

இந்த எதிர்ப்புணர்வு தமிழர்கள் அனைவரிடமும் எதிரொலித்திருக்க வேண்டும். இங்கிலாந்தில் துரத்தப்பட்டத்தைப் போல ராஜபக்‌ஷே துரத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழனின் விதி- நிலக்கரி ஊழலும், டீசல் விலையுயர்வும், விநாயகர் சதுர்த்தியும், பாரத் பந்த்தும், அரசியல் பாகுபாடுகளும் அவனை தொடர்ந்து அலைகழித்துக் கொண்டிருக்கின்றன. இடையில் சுந்தர பாண்டியன் படம் வேறு. இத்தனை பிரச்சினைகளையும் தாண்டி ஈழத்தை எங்கே நினைக்கப்போகிறோம்.

தமிழர்களின் பிரதிநிதியாக ராஜபக்‌ஷேவின் வருகையை எதிர்க்க மத்தியப்பிரதேசத்தில் போராடிக் கொண்டிருக்கும் வைகோவிற்கு அவரது தொண்டர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

6 எதிர் சப்தங்கள்:

அருள் said...

இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக எழுதியமைக்கு நன்றி.

இதையும் படித்துப் பார்க்கவும்:

"இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தொடரும் போராட்டம் - பசுமைத் தாயகத்தின் நீதிக்கான பயணம்!"

http://arulgreen.blogspot.com/2012/09/UN-Human-Rights-Council-SriLanka.html

Anonymous said...

நன்றி மணிகண்டன்.

Vaa.Manikandan said...

நன்றி அருள்.வாசிக்கிறேன்.

bandhu said...

//ஆனால் தமிழனின் விதி- நிலக்கரி ஊழலும், டீசல் விலையுயர்வும், விநாயகர் சதுர்த்தியும், பாரத் பந்த்தும், அரசியல் பாகுபாடுகளும் அவனை தொடர்ந்து அலைகழித்துக் கொண்டிருக்கின்றன. இடையில் சுந்தர பாண்டியன் படம் வேறு.//
இதில் கடைசி வரியில் தொனித்த கிண்டல்.. ஒன்றும் செய்ய முடியாத இயலாமையின் மொத்த வெளிப்பாடு!

பட்டிகாட்டான் Jey said...

எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்தமைக்கு நன்றி மணிகண்டன். செல நேரங்களில் இயலாமையின் காரணமாக நம் மீதே வெறுப்பு வருகிறது.

Uma said...

ராஜபக்‌ஷே,’ப்ளீஸ்’ வெளியே போ

ராஜபக்‌ஷேவை இந்தியாவிற்குள் அனுமதித்தால் என்ன தவறு என்ற ரீதியில் சில கருத்துக்களை பார்க்க வேண்டியிருப்பதுதான் வேதனையாக இருக்கிறது.

தமிழனின் விதி--இவை எல்லாவற்றிலும் மனதின் வலி தெரிகிறது இந்த வலி எல்லா தமிழனிடமும் உள்ளது உண்மைத்தமிழன் வைகோ அவர்களுக்கு வாழ்த்துக்களும் ஆத்ரவும்.