ஐ.நாவின் மனித உரிமைகள் சபையில் ஸ்ரீலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்தான தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்திருக்கும் நிலையில் தீர்மானம் வெற்றிபெற்றால் மகிந்த ராஜபக்சேவும் அவரது சகாக்களும் சாகும் வரை தூக்கிலிடப்படக்கூடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். ஜெயலலிதாவும், கருணாநிதியும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கச் சொல்லி இந்திய அரசாங்கத்தை வலியுறுத்திய வேகத்தில் நான் இன்னும் கொஞ்சம் உற்சாகமடைந்து ராஜபக்சேவை எண்ணெய் கொப்பரையில் தலைகீழாகத் தொங்கவிட்டுவிடுவார்கள் என்று நம்பிவிட்டேன்.
நல்லவேளையாக அமெரிக்கா,சீனா, இந்திய வல்லரசுகள் ஒரு நாட்டின் அதிபரையோ அல்லது வேறு ஒரு அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியையோ தண்டிக்கும் அளவிற்கு கல்நெஞ்சம் படைத்தவைகள் அல்ல என்பது ஆறுதலான செய்தி. இத்தீர்மானத்தைச் சுற்றி நிகழும் களேபரங்கள், ஒரு குஞ்சுக்கோழியை நடுவில் வைத்துக் கொண்டு இரு பெரும் யானைகள் மோதிக்கொள்வதைப் போன்று ’பாவ்லா’ காட்டுவதான பிம்பத்தை உருவாக்குகிறது. இங்கே குஞ்சுக்கோழிகள் இலங்கையின் தமிழ் மக்கள்.
அமெரிக்காவின் இந்த ‘திடீர்’ செயல்பாட்டை ”சீனாவுடன் மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்காவின் மீதான அமெரிக்காவின் ராஜதந்திர நெருக்குதல்” என்று குறிப்பிடுகிறார்கள். சீனாவுடன் இலங்கை நெருங்குவதை பல வழிகளிலும் அமெரிக்கா தடுத்து பார்த்தது. ஆனால் இலங்கை ஒருபோதும் அமெரிக்காவின் எதிர்ப்பினை காதிலேயே போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஸ்ரீலங்காவில் மிக உக்கிரமாக போர் நடந்து கொண்டிருந்த நிலையிலும், இலட்சக்கணக்கான அப்பாவி மனிதர்கள் இரவும் பகலுமாக கொன்றழிக்கப்பட்ட போதும் எந்தவிதமான சலனத்தையும் காட்டிக் கொள்ளாத ஒபாமாவின் அரசு, இப்பொழுது மட்டும் ஸ்ரீலங்காவின் மனித உரிமைகள் குறித்து விழித்துக் கொள்வதற்கு வேறு ஏதேனும் சிறப்புக்காரணத்தை அமெரிக்காவே நினைத்தாலும் கூட வெளிப்படுத்த முடியாது என்பதுதான் நிதர்சனம்.
இந்தியாவிற்கும் சீனா-இலங்கை நெருக்கத்தில் உடன்பாடில்லையென்றாலும் இலங்கையை மிரட்டி, சீனா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் எதிர்ப்பினை ஒரே சமயத்தில் சமாளிக்கும் தெம்பில்லை. உலக அரங்கில் சீனாவின் தோளில் கைபோட்டுக் கொண்டு இலங்கை சுற்றக்கூடாது என்பதனை வலியுறுத்தவே அமெரிக்காவின் பின்னால் ஒளிந்துகொண்டு இந்தத் தீர்மானம் குறித்து தன் மெளனத்தை கடைபிடிக்கிறது இந்தியா என்ற பேச்சும் உலவுகிறது. அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் எனக் கருணாநிதியும், ஜெயலலிதாவும் இந்திய அரசாங்கத்தை வற்புறுத்தியதைக் கூட இதனுடன் முடிச்சுப் போட்டு பார்க்கலாம். இலங்கையை மிரட்ட இந்தியாவின் அரசுக்கு உதவியது போலும் ஆகிவிட்டது; தமிழகத்தில் ஈழ ஆதரவாளர் என்ற முகமூடியை அணிந்துகொள்ளவும் உதவிவிட்டது.
ஆடு நனைய ஓநாய் அழுவது நினைவுக்கு வந்தாலும் இப்படியாகவேனும் ஸ்ரீலங்கா நிகழ்த்திய கொடூரங்களின் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பக்கூடும் என்பதான ஆறுதல் உண்டாகிறது. அதே சமயம் உலகநாடுகளின் இந்தக் கவனத்தைத் தவிர வேறு ஏதேனும் பலன்கள் உண்டா எனவும் யோசிக்கத் தோன்றுகிறது.
போருக்குப் பிறகாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ”கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு”(Lessons Learned and Reconciliation Commission-LLRC)வினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும் என்பதுதான் அமெரிக்கத் தீர்மானத்தின் முக்கியமான அம்சமாக இருக்கிறது. இந்த LLRC யின் அறிக்கையில்தான், போர் நிறுத்தப் பகுதிகளில் பாதுகாப்பு படைகள் குடிமக்களின் மீது வேண்டுமென்றே தாக்குதல் எதுவும் நடத்தவில்லை என்று குறிப்பிட்டு பாதுகாப்பு படையினருக்கு “ரொம்ப நல்லவர்கள்” சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதே சமயம், இந்த அறிக்கையின் சில பரிந்துரைகளை குறிப்பிட்டாக வேண்டும் - போரில் குடிமக்கள் இறந்தது குறித்தான விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், தேசிய நில ஆணையம்(National Land commission) அமைக்கப்படல் வேண்டும், போரில் இறந்தவர்களுக்கு தக்க நிவாரணங்கள் வழங்கப்படல் வேண்டும் என்பதானவற்றை குறிப்பிடலாம். அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி பெறுவதன் பலனாக ஸ்ரீலங்கா இந்ந்தப்பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டிய சூழல் உருவாகுமெனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அநேகமாக பயன் கிட்டலாம்.
அமெரிக்கா முன் வைத்திருக்கும் தீர்மானம் ஸ்ரீலங்காவை LLRC யின் பரிந்துரைகளை அமல்படுத்தச் செய்ய வலியுறுத்துவதோடு, பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் வழிமுறைகளை அறிக்கையாகத் தரச்சொல்கிறது மேலும் போரின் போது அனைத்துலக சட்டங்களை மீறிய செயல்களை அறிந்துகொண்டு அவை மீதான நடவடிக்கைளை ஸ்ரீலங்கா அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் எனவும் கோருகிறது. மேற்சொன்ன பரிந்துரைகளை செயல்படுத்தும் போது ஐ.நா மனித உரிமைகள் சபையின் வழிகாட்டுதல்களை ஸ்ரீலங்கா அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.
இந்தத் தீர்மானம் ஒருவேளை நிறைவேற்றப்பட்டு-[சீனா,ரஷ்யா மற்றும் பாகிஸ்தானின் எதிர்ப்புகளை மீறி தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்பது அடிப்படையான சந்தேகம்], ஸ்ரீலங்கா அதை மீறினால் அமெரிக்கா அந்நாட்டுடனான தனது இருதரப்பு வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டு பொருளாதாரத்தடைகளையும் மேற்கொள்ளக் கூடும். அதற்கு மிக நீண்டகாலம் ஆகலாம் என்றாலும் இதை எதுவும் அமெரிக்கா செய்யப்போவதில்லை என்றே தோன்றுகிறது- அமெரிக்காவின் அத்தனை மறைமுகமான மிரட்டல்களையும் சீனாவின் நிழலில் அண்டிக்கொண்டு உதாசீனப்படுத்திய ஸ்ரீலங்காவிற்கு இத்தீர்மானம் என்பது அமெரிக்கா விடுக்கும் நேரடியான மிரட்டல். ஒருவேளை தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டுவிட்டாலும் கூட சீனாவின் ஆதரவு தரக்கூடிய தெம்பில் இலங்கை அமெரிக்காவிற்கு பயப்படாமல் இருக்கக் கூடும், அப்படியில்லாமல் தீர்மானம் தோல்வியடைந்துவிட்டால் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஆட்டமும் கொட்டமும் இன்னமும் கூடுதலாகலாம்.
அமெரிக்காவின் தீர்மானத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான உரிமையை மூன்றாம் நாடு அல்லது மூன்றாம் அமைப்பிற்கு அளிக்க வேண்டும் என கோரப்படவில்லை என்பதும், போர்க்குற்றவாளிகளுக்கான தண்டனைகள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை என்பதும் தீர்மானம் வெற்றிபெற்றாலும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்கள், குற்றவாளிகளுக்கு அளிக்கப்படக் கூடிய தண்டனைகள் ஆகியவற்றின் மீதான சந்தேகத்தை எழுப்புகிறது. இந்தச் சந்தேகத்தை தொடக்கப்புள்ளியாகக் கொண்டு சற்று ஆழமாக யோசித்தால் இத்தீர்மானமே கூட மூன்றாம் உலகநாடுகளின் அழுத்தத்திலிருந்து இலங்கை தப்புவதற்கும், அதன் தலைவர்கள் போர்குற்ற தண்டனைகளிலிருந்து நழுவுவதற்குமான உபாயமாக இலங்கையின் நட்பு நாடுகளின் கூட்டுச் சதியாக இருக்கலாம் என்ற மற்றுமொரு சந்தேகத்தை உருவாக்காமல் இல்லை. ஒருவன் அடிப்பது போல் அடிக்க, இன்னொருவன் தடுப்பது போல தடுக்க, இலங்கை அழுவது போல நடிக்க வேண்டும் என்பது இதன் சாராம்சமாக இருக்கக் கூடும்.
எப்படியிருப்பினும், சக தமிழனாக நீங்களும் நானும் இலங்கையின் கொடூரிகள் பெற வேண்டிய தண்டனை என நம் மனதில் நினைத்துக் கொண்டிருப்பனவற்றில் ஒரு சதவீதத்தைக் கூட இந்தத் தீர்மானம் பெற்றுத் தரப்போவதில்லை என்று தெளிவாகத் தெரிகிறது.
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment