Sep 29, 2010

அயோத்தி விவகாரம்- வேலையற்றவர்களின் வீண் வேலை.

பெரியாரின் 132 வது ஆண்டு பிறந்த மாதத்தில் நிகழும் அசிங்கங்களைப் பார்ப்பதற்கு வெட்கமாக இருக்கிறது.

மதத்தின் பெயரால் இத்தனை கீழ்த்தரமான செயல்களை நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி என்பது பற்றியெல்லாம் இதுவரைக்கும் எந்தவிதமான பிரக்ஞையும் இல்லாத தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் வண்ணக் கலவைகளால் மெருகூட்டப்பட்ட பிரம்மாண்ட சிலைகளை நிறுத்தி வைத்து சினிமாப் பாடல்களை முழங்கவிட்டு வீட்டுக்கு வீடு பத்து,இருபது என வசூல் செய்து கொஞ்சம் செலவை விநாயகனுக்கும் மீதியை குவார்ட்டருக்கும் செலவு செய்து திளைக்கும் வாலிப வயோதிகர்களை இந்து அமைப்புக்கள் கொம்பு சீவி விடுகின்றன.

இந்து அமைப்புகளுக்கு இருக்கும் பெரும்பயம் அல்லேலூயாக்காரர்கள் வெளிநாட்டு டாலரையும் யூரோவையும் கொடுத்து சுப்பிரமணியை சூசையாகவும் மாரியம்மாளை மேரியாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது.

ஒவ்வொரு டிசம்பர் ஆறாம் தேதியும் தேசம் முழுவதும் 'ரெட் அலர்ட்' பிறப்பிக்கப்படுகிறது. சோதனைச் சாவடிகளில் ஒவ்வொரு வாகனமும் அலசப்படுகிறது. ஒவ்வொரு இசுலாமியனும் இந்த தேசத்தின் விரோதியாகப் பார்க்கப்படுகிறான்.

இந்த தேசத்தில் நிகழும் மத சம்பந்தமான எந்த ஒரு விவாகரத்திலும் மதத்தையும் கடவுளையும் விடவும் பணமும் அரசியலுமே பிரதானமாக விளங்குகிறது. மதம் என்பதை வெறும் கருவியாகப் பயன்படுத்தி தங்களின் வயிறு வளர்க்கும் கூட்டம்தான் எங்கு திரும்பினாலும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தியானம் கற்றுத்தருகிறேன், வாழ்வதை கற்றுத்தருகிறேன், பாவத்தை நீக்குகிறேன், கர்ப்பமாவதைக் கற்றுத்தருகிறேன் என்று மதவாதிகள் செய்து வரும் சில்லரைத்தனங்களை அடக்க முடியாத அரசு, அயோத்தி இடம் யாருக்கு என்ற தீர்ப்பு நாளைக்கு வருவதால் நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடப்போகிறது. பதற்றமான இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. வேட்டைநாய்கள் அமைதிகாக்கச் சொல்லி அறிக்கை விடுகின்றன.

அரைசெண்ட் இடம் உனக்கா அல்லது எனக்கா என இந்த தேசம் முழுவதும் இலட்சக்கணக்கான சாமானியர்கள் தங்கள் வழக்குகளை நீதிமன்றங்களில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் பல பேர்களுக்கு அந்த பிரச்சினைக்குரிய இடம் வாழ்வாதாரமாக இருக்கிறது. இந்த அரை செண்ட் இடம் அந்த சாமானியனுக்கு அளிக்கும் பலனில் ஒரு சதவீத பலனையாவது இந்த 'அயோத்தி' ஏதேனும் ஒரு சாமானியனுக்கு அளித்திருக்கிறதா?

'அயோத்தி' நாடு முழுவதும் சர்ச்சையையும் வன்முறையையும் கிளப்பியதைத் தவிர வேறு ஏதேனும் உருப்படியாகச் செய்திருக்கிறதா என்று தெரியவில்லை. அந்த இடத்திற்காக வக்பு வாரியமும் இந்து மகா சபையும் வழக்கு நடத்துகிறார்கள். இந்த இரண்டு அமைப்புகளின் இட விவகாரத்திற்காக ஒட்டுமொத்த தேசத்திலும் நூற்றுப்பத்து கோடி மனிதர்களிலும் பதற்றம் தொற்றிக்கொள்ள விடுவதுதான் இந்த தேசத்தின் அவலம்.

இந்தப் பிரச்சினையை மத்திய அரசு தனது வலிமையைக் கொண்டு நீதி மன்றத்திற்கு வெளியிலேயே முடித்திருக்க வேண்டும். அமைப்புகள் ஒத்துவராத பட்சத்தில் அரசு கையகப்படுத்தி மருத்துவமனையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு கட்டடத்தையோ கட்டியிருக்க வேண்டும். இதைச் செய்து முடிக்க எந்த அரசுக்கும் திராணியில்லை. அதுதான் நமது பெருமைமிகு ஜனநாயகத்தின் கையலாகாத்தனம்.

இந்த மத சம்பந்தமான விவகாரங்களை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய எந்த அரசியல் அமைப்பும் தயாரில்லை. ஏதேனும் விதத்தில் தனக்கு நன்மை சேர்ந்துவிடாத என கசாப்புக் கடையின் முன்பாக காத்திருக்கும் வெறிநாய்களாகவே அவை இருக்கின்றன.

விநாயக சதுர்த்தி ஊர்வலத்துக்கு பாதுக்காப்பு, டிசம்பர் 6 க்கு பாதுகாப்பு, இனி அயோத்தி 'உயர் நீதி மன்ற தீர்ப்பு வெளிவந்த நாளுக்குப் பாதுகாப்பு', அப்புறமாக 'உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த நாளுக்குப் பாதுகாப்பு' என அரசு ஆண்டு முழுவதும் 'ரெட் அலர்ட்' அளிக்கப்போகிறதா என்று தெரியவில்லை.
மத ரீதியான கட்டடங்களை விடவும் மருத்துவமனைகளும், கல்விக் கூடங்களும், தொழிற்சாலைகளும், குறைந்தபட்ச வசதிகளுடன் மயானமும்தான் நமக்கு அவசியம்.
இதில் எதையாவது ஒன்றை கட்டித் தொலையுங்கள். மனிதர்களை அமைதியாக வாழவிடுங்கள்.

12 எதிர் சப்தங்கள்:

priyamudanprabu said...

MY FIRST VISIT
NICE POST

Mohan said...

Well Said!

Anonymous said...

செருப்ப கலட்டி அடி.கொய்யால உன் ஊட்ல பூந்து இடிச்சி நாசமாக்கி என் ஊடுன்னு ஒருத்தன் சொன்ன சும்மா இருப்பிய.பெரிய அறிவு ஜீவி மாதிரி பேசாம.வேலைய பாரு

சாணக்கியன் said...

/* இந்தப் பிரச்சினையை மத்திய அரசு தனது வலிமையைக் கொண்டு நீதி மன்றத்திற்கு வெளியிலேயே முடித்திருக்க வேண்டும். அமைப்புகள் ஒத்துவராத பட்சத்தில் அரசு கையகப்படுத்தி மருத்துவமனையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு கட்டடத்தையோ கட்டியிருக்க வேண்டும். இதைச் செய்து முடிக்க எந்த அரசுக்கும் திராணியில்லை. அதுதான் நமது பெருமைமிகு ஜனநாயகத்தின் கையலாகாத்தனம். */

இந்த வரிகளைத்தவிர மற்ற அனைத்தும் மிகவும் தட்டையான ரெடிமேட் கருத்துகள். ஒரு நடிகன் செத்துப்போனதற்கே உணர்ச்சிவசப்பட்டு பெங்களூரே கொந்தளித்துப்போனது. காவிரி தீர்ப்பு, தர்மபுரி பஸ் எரிப்பு என மக்களும் அதிலிருந்து முளைக்கும் தலைவர்களும் தொண்டர்களும் இருக்கும் வரை இவற்றை மாற்ற முடியாது. இவற்றோடு ஒப்பிடுகையில் மதம் என்பது பெரிய விசயம்தான். அது அவனது வாழ்வியலோடு கலாச்சாரத்தோடு வரலாற்றோடு கலந்தது. அதனால் கட்டாயம் உணர்ச்சிவயப்படுவான். இனத்துக்காக தீக்குளிப்பதும் இத்தகையதே. பொதுவாகவே நாம் உணர்ச்சிகளில் கட்டுப்பாடுடையவர்களாக இருக்கவேண்டுமே ஒழிய இதில் ஒன்று தியாகம் மற்றொன்று முட்டாள்தனம் என்பதை ஏற்க முடியாது.

UFO said...

நல்ல பதிவு.

//'உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த நாளுக்குப் பாதுகாப்பு'//--அப்படி ஒரு தீர்ப்பு நாள் நிகழும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

எனக்கு நாளையே கூட 'அல்லாஹபாத் உயர் நீதி மன்ற தீர்ப்பு' என்று ஒன்று வராது என்று முழு நம்பிக்கை இன்னும் உள்ளது.

எப்பாடுபட்டாவது தீர்ப்பை தடுத்து விடுவார்கள் பாருங்களேன். தீர்ப்பு என்று ஒன்று வந்து விட்டால் அப்புறம் எதை வைத்து அரசியல் பிழைப்பு நடைத்துவதாம்?

மதவெறி அரசியல், சாதிவெறி அரசியல், மொழிவெறி அரசியல், மாநிலவெறி அரசியல் என்று ஒழிக்கப்படவேண்டிய பல அரசியல் சைத்தான்கள் நம் நாட்டில் உண்டு.

இதையெல்லாம் மீறி மனிதனாய் இங்கு வாழ்ந்து காட்டுவதே நம் முன்னே உள்ள சவால். அதனை வென்று காட்டுவதே நம் ஒவ்வொரு 'வெறியற்ற மனிதம் நிறைந்த' இந்தியனுக்கும் கடமை.

Vaa.Manikandan said...

நன்றி பிரபு,மோகன்,கல்வெட்டு,UFO.

அனானிமஸ்,
நான் பொதுவாகவே பின்னூட்டங்களுக்கு பதில் எழுதாத சோம்பேறியாக இருந்து வந்திருக்கிறேன்.

முக்காடு போட்டு வந்து செருப்பைக் கழட்டி அடித்தும், செருப்பில் பீயைத் தடவி அடித்தும், காறித்துப்பிவிட்டு போகும் உங்களுக்கு எதை எழுதுவது என்றுதான் யோசிக்கிறேன்.

smart said...

//இந்தப் பிரச்சினையை மத்திய அரசு தனது வலிமையைக் கொண்டு நீதி மன்றத்திற்கு வெளியிலேயே முடித்திருக்க வேண்டும். அமைப்புகள் ஒத்துவராத பட்சத்தில் அரசு கையகப்படுத்தி மருத்துவமனையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு கட்டடத்தையோ கட்டியிருக்க வேண்டும். இதைச் செய்து முடிக்க எந்த அரசுக்கும் திராணியில்லை. அதுதான் நமது பெருமைமிகு ஜனநாயகத்தின் கையலாகாத்தனம்//
ஆம் இதைத் தவிர மற்றவைஎல்லாம் நுனிப்புல் போல மேய்ந்துள்ளீர்கள்.

//ஒவ்வொரு இசுலாமியனும் இந்த தேசத்தின் விரோதியாகப் பார்க்கப்படுகிறான்.//
என்று ஒவ்வொரு இந்தியனையும் அவமானப்படுத்துவது உங்களுக்குத் தெரியவில்லை. நீங்கப் பண்ணா அது பகுத்தறிவா?

smart said...

Your comment has been saved and will be visible after blog owner approval. Hope Blogger won't be in a நிசப்தம்

Vaa.Manikandan said...

Smart நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. இசுலாமியனை இந்த தேசத்தின் விரோதியாகத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?

Marimuthu Murugan said...

//அமைப்புகள் ஒத்துவராத பட்சத்தில் அரசு கையகப்படுத்தி மருத்துவமனையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு கட்டடத்தையோ கட்டியிருக்க வேண்டும். இதைச் செய்து முடிக்க எந்த அரசுக்கும் திராணியில்லை. அதுதான் நமது பெருமைமிகு ஜனநாயகத்தின் கையலாகாத்தனம்// சரியாகச் சொன்னீர்கள்..

smart said...

//இசுலாமியனை இந்த தேசத்தின் விரோதியாகத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?//
உங்கள் பார்வை தவறு தற்போதைய இந்திய துணை ஜானதிபதியே முஸ்லீம். சின்ன சின்ன இடர்பாடுகளைஎல்லாம் வைத்து எல்லாரும் அப்படித்தான் என்றால். இதுவே எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முசராப் தனது அறிக்கையில் சில தினங்களுக்கு முன் இந்தியாவிற்கு எதிராக இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்ததை ஒத்துக் கொண்டுள்ளார்.
என்பது உங்களுக்கு தர்மசங்கடத்தை தரலாம்.

Vaa.Manikandan said...

ஒரு இசுலாமியனை துணை ஜனாதிபதி ஆக்குவதற்கும் ஜனாதிபதி ஆக்குவதற்கும் இந்த நாட்டில் இசுலாமியர்களுக்கு தரப்படும் மரியாதை காரணம் என்றா சொல்கிறீர்கள்? எனக்கு வாக்கு அரசியல்தான் காரணம் என்று தோன்றுகிறது.

//முசராப் தனது அறிக்கையில் சில தினங்களுக்கு முன் இந்தியாவிற்கு எதிராக இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்ததை ஒத்துக் கொண்டுள்ளார்//

பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கா? இசுலாமிய தீவிரவாதிகளுக்கா?

எவனோ வடக்கில் இருப்பவன் செய்ததற்காகவே மங்கலத்தில் இருக்கும் சலீமையும், நல்லகவுண்டம்பாளையத்தில் இருக்கும் ஜமாலுதீனையும் விரோதியாகப் பார்க்கும் மனப்பான்மையைத்தான் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.