Sep 20, 2016

மண்டையோட்டு வாழ்வு

கவிதை எழுதுவதற்கான மனநிலையைத் தக்க வைப்பது சிரமமான காரியம். கண்டதையெல்லாம் எழுத ஆரம்பித்த பிறகும் கவிதையை கவிதையாகவே எழுதுவது லேசுப்பட்ட விஷயமில்லை. இப்பொழுதெல்லாம் கவிதையை கவிதையாகவே எழுதிக் கொண்டிருக்கிறவர்களைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.

கவிதை என்ற வடிவில் எழுதுகிற அத்தனை பேரும் கவிதையை எழுதுவதில்லை. தமிழில் எழுத்துச் சூழலைப் பொறுத்தவரையில் எழுதுகிறவர்களுக்கு ஒரு ‘ப்ராண்ட்’ உருவாகிவிடுகிறது. பிறகு என்னதான் குப்பையை எழுதினாலும் அதைக் கவிதை என்றும் சிறுகதையென்றும் என்று ஒத்துக் கொள்ள ஒரு கூட்டம் இருக்கும். ‘இது கவிதையா?’ என்று அவர்களிடம் திரும்பக் கேட்கவும் முடியாது. பிறாண்டிவிடுவார்கள். பிடிக்கவில்லையென்றால் அமைதியாக இருந்துவிடுவது உத்தமம். 

இப்பொழுதெல்லாம் கவிதைக்கான விமர்சனம் என்று ஏதாவது கண்ணில்படுகிறதா? அப்படியெல்லாம் எதுவும் எழுதப்படுவதேயில்லை. எழுதியவன் தமக்கு அறிமுகமானவனாக இருந்தால் சொறிந்துவிடுவார்கள். இல்லையென்றால் கிணற்றில் போட்ட கல் மாதிரி கிடக்கும். அவ்வளவுதான்.

கவிதை குறித்தான விரிவான உரையாடல், கவிதையைப் பரவலாகக் கொண்டு செல்வதற்கான எத்தனங்கள் என்றெல்லாம் எதுவும் இங்கு நடப்பதில்லை. சில 'ஆல் பர்ப்பஸ் அங்கிள்' கவிஞர்கள் இருக்கிறார்கள். கவிதை குறித்துப் பேசுகிறேன் பேர்வழி என்ற பெயரில் பெண் கவிஞர்களை மட்டும் தூக்கிக் கொண்டாடுவார்கள். கொண்டாடிவிட்டுப் போகட்டும். இவர்கள் சொன்னார்களே என்று சில கவிதைத் தொகுப்புகளை வாங்கி மூச்சுத் திண்றல் வந்ததுதான் மிச்சம்.

இதையெல்லாம் நாம் பேசினால் வெட்டி வம்புதான். 

நுட்பமாகக் கவனித்துப் பார்த்தால் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் கவிதை உருமாறிக் கொண்டே வந்திருக்கிறது. ஆனால் உருமாறுகிற நுட்பங்கள், எந்த இடத்தில் கவித்துவம் பிடிபடுகிறது, எங்கே தவறிப் போய் வெறும் சொற்கூட்டமாக நிற்கிறது என்பதையெல்லாம் சமீபமாக நாம் விரிவாகப் பேசுவதேயில்லை. அப்படிப் பேசாமலும் விவாதிக்காமலும் கவிதைகளுக்கான வாசகப்பரப்பை அதிகரிக்கவும் முடியாது; ஆழமாக்கவும் முடியாது.

இதைச் சொன்னால் ‘கவிதைக்கான வாசகப்பரப்பை அதிகரிக்க வேண்டியதில்லை; கூட்டம் சேர்த்து அதை நீர்த்துப் போகச் செய்யவும் வேண்டியதில்லை’ என்று கூட சொல்வார்கள். இப்படியே வறட்டுத்தனமாகப் பேசிக் கொண்டிருந்தால் ‘நூறு காப்பி கூட விக்கிறதில்லை’ என்றுதான் புலம்ப வேண்டியிருக்கும்.

கவிதைத் தொகுப்புகளைப் பொறுத்தவரைக்கும் விற்பனையைப் பொருட்படுத்த வேண்டியதில்லைதான். ஆனால் குறைந்தபட்ச உரையாடலையேனும் சாத்தியப்படுத்துவதற்கான சூழலே இங்கே இல்லை என்பதுதான் உண்மை. இங்கே கவிஞன்தான் வாசகன்; வாசகன்தான் கவிஞன் என்பார்கள். அதாவது ஒரு கவிஞனின் கவிதையை இன்னொரு கவிஞன்தான் வாசிக்க வேண்டும். வாசகன் என்றெல்லாம் வெளியிலிருந்து யாரும் வரமாட்டார்களாம். அப்படியும் பெரிய அளவு ஆறுதல் கொள்ள முடியாது. முக்கால்வாசிக் கவிஞர்கள் சக கவிஞர்களின் தொகுப்புகளை நுகர்ந்து கூட பார்ப்பதில்லை. நம்பிக்கையில்லையென்றால் பதிப்பாளர்களை விசாரித்துப் பார்க்கலாம். ஓசியில் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள். அதையும் வாசிக்க மாட்டார்கள். காசு கொடுத்தெல்லாம் புத்தகம் வாங்கி....ம்ஹூம். வாய்ப்பேயில்லை. 

கவிதையின் சூழலைப் பற்றிப் பேசுவது கச்சடாவைப் பற்றி பேசுவது மாதிரி. நாற்றமெடுத்துக் கிடக்கிறது. கவிதையைப் பற்றிப் பேசுவது கச்சடாவுக்குள் முளைத்த தாமரை குறித்துப் பேசுவது மாதிரி. நல்ல கவிதைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் நல்ல கவிதைகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. நாம்தான் அதிகக் கவனம் கொடுத்துக் கவனிப்பதில்லையோ எனத் தோன்றுகிறது.

சித்த மருத்துவர்களிடம் பேசும் போது ஒரு தத்துவத்தைச் சொல்வார்கள். தினம் இரண்டு; வாரம் இரண்டு; மாதம் இரண்டு; வருடம் இரண்டு என்று. இரண்டு என்பது எதைக் குறிக்கிறது என கூகிளிடம் விசாரித்துப் பார்க்கவும். கண்டுபிடிக்கமுடியவில்லையென்றால் மட்டும் நானே பதிலைச் சொல்கிறேன். இந்த இரண்டு சமாச்சாரங்களுடன் கவிதையையும் சேர்த்துக் கொள்ளலாம். எப்பொழுதெல்லாம் மனச்சோர்வு வருகிறதோ அப்பொழுதெல்லாம் ஒரு கவிதையை வாசித்துப் பார்க்கலாம்.

முழுத் தொகுப்பையும் வாசிப்பதைவிடவும் ஏதாவதொரு தொகுப்பை அவ்வப்பொழுது எடுத்து ஒரு கவிதையை வாசித்துவிட்டு மூடி வைத்துவிட வேண்டும். கவிதை வாசிப்பதில் இந்த நுட்பம் நிச்சயம் பலனளிக்கும். ஒரு கவிதையை வாசிக்க ஆரம்பித்து அது பெரிய அளவில் ஈர்க்கவில்லையென்றால் அடுத்த கவிதைக்குச் சென்றுவிடலாம். அதுவும் பிடிக்கவில்லையென்றால் மற்றொரு கவிதை. இப்படி நமக்கு எந்தக் கவிதை பிடிக்கிறதோ அதை மட்டும் வாசித்துவிட்டு மூடி வைத்துவிடலாம். வேறொரு நாள் அதே தொகுப்பை வாசிக்கும் போது தொகுப்பில் முன்பு பிடிக்காத அதே கவிதைகள் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கக் கூடும். இதுதான் கவிதையின் பலமும் அதேசமயம் பலவீனமும். வாசிக்கிறவனின் மனநிலைக்கு ஏற்ப ஒரு கவிதை அவனுடன் நெருங்கும். இன்னொரு கவிதை அவனிலிருந்து விலகும். 

விலகியது வேறோரு நாள் நெருங்குவதும் நெருங்கியது பிறிதொரு நாள் விலகுவதும் கவிதை வாசிப்பில் இயல்பானது.

சொற்களோடு விளையாடுவது என்றால் அது கவிதைதான். மொழியின் வடிவத்தில் கவிதைதான் உச்சம் என்று முன்னவர்கள் சொல்லியதைத் தயங்காமல் ஏற்றுக் கொள்ளலாம். வழவழவென்று எழுதுவது வேறு. கத்தி வைத்து வெட்டுவது மாதிரி செதுக்குவது வேறு. சொற்களைப் பற்றி லா.ச.ரா சொல்வது கச்சிதமாகப் பொருந்தும்- ‘சொல்லைக் குறுக்கக் குறுக்க, அதுக்கு ஒரு அசாத்திய பிரஷர் ஏற்படும்’. கவிதைகளில் இது சூட்சமம். நறுக்குத் தெறித்த மாதிரியான கவிதைகளில் அபாரமான சுவாரசியமுண்டு.

பாலைநிலவனின் கவிதையொன்று கண்ணில்பட்டது. 

இல்லத்திற்கு துறவி வந்திருந்தார்
வாழ்வின் புதிர் பற்றிக் கேட்டேன்
பவ்யமான நகைப்போடு
நாயின் மண்டையோட்டை
அறையில் வைத்துவிட்டுப் போய்விட்டார்
அதை சாம்பல் கிண்ணமாக்கியபின் சொல்கிறேன்
வாழ்வு நாயின் மண்டையோடாக இருக்கிறது
நிரப்புவதுதான்
வேட்கையாகயிருக்கிறது.

ஒரு துறவி வருகிறார். வாழ்க்கையைப் பற்றி இவர் கேட்கிறார். துறவி எதுவும் சொல்லாமல் நாயின் மண்டையோட்டை வைத்துவிட்டுப் போய்விடுகிறார். வாழ்க்கை என்பது அந்த மண்டையோடு. அதில் எதையாவது நிரப்பிவிட வேண்டும் என்பதுதான் ஆசை. பணம், புகழ் என்று எதையாவது நிரப்பிக் கொள்வதற்காகத்தானே வெறியெடுத்து அலைகிறோம்? என்னதான் சேர்த்து நிரப்பினாலும் அத்தனையும் வெறும் சாம்பல்தான். அதைப் புரிந்து கொள்ளாமல்தான் இத்தனை அலைச்சலும், வேகமும், ஓட்டமும். இல்லையா?

வெகு நேரம் யோசிக்க வைக்கக் கூடிய கவிதை. 

Mar 18, 2016

கதிர் அறுக்கும் கைகள்

சமீபத்தில் நாச்சியாள் சுகந்தியின் கவிதையொன்று வாசிக்கக் கிடைத்தது. உடுமலைப்பேட்டையில் நிகழ்ந்த ஆணவக் கொலையின் தொடர்ச்சி இந்தக் கவிதை. 

சமகாலத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் பிரச்சினைகளை கவிதைகளில் பதிவு செய்வது என்பது அவசியமான செயல்பாடு. அதுவும் எளிமையான மொழியில் நேரடியாக எழுதப்பட்ட இந்தக் கவிதை மனதுக்குள் ஒட்டிக் கொண்டது. பொதுவாகவே சாதாரணமான மொழியில் உண்மைத் தன்மையுடன் எழுதப்படும் கவிதைகள் சமகால நிகழ்வுகளைச் சொல்லும் போது அழுத்தம் மிக்கதாக மாறிவிடும்.

எனக்குப் பிடித்தமான இந்தக் கவிதையை வாசித்துவிட்டு சில நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட போது அவர்களும் பாராட்டினார்கள். பொதுவாகவே அரசியல் மற்றும் சமூகக் கவிதைகள் மிக அருகிவிட்ட காலமிது. பெரும்பாலான கவிஞர்கள் ‘நமக்கேன் வம்பு?’ என்கிற மனநிலையில் வண்ணத்துப் பூச்சி மழையில் நனைந்தது, எங்கள் வீட்டு காகம் கறுப்பு நிறம் என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். நிகழ்காலத்தின் சாரமில்லாத அத்தகையை கவிதைகளையே வாசித்துக் கொண்டிருப்பதற்கு வழவழா கொழகொழாவாக இருக்கிறது. உண்மையைச் சொன்னால், தமிழில் கவிதைகள் அந்தந்த வட்டத்துக்கானவையாக சுருங்கிக் கிடக்கின்றன. ஒரு வட்டத்தில் இருக்கும் கவிஞர் எழுதியதை அந்தந்த வட்டத்துக் கவிஞர்கள் சிலாகிப்பார்கள். மற்ற கவிஞர்கள் கண்டு கொள்ளமாட்டார்கள். கவிதை பரவலாகப் பேசப் பட வேண்டும். ‘விமர்சகர்கள் பேசட்டும்’ என்றெல்லாம் தப்பித்துக் கொள்ள முடியாது. கவிதைகளைப் பற்றி கவிஞர்களும் பேச வேண்டும். சாமானியனையும் பேசச் செய்ய வேண்டும். அப்படி சாமானியன் பேச வேண்டுமானால் அவன் பாதிக்கப்படும் நிகழ்வுகள் கவிதைகளில் பதிவாக வேண்டும். அப்பொழுதுதான் கவிதை அடுத்த கட்டத்துக்கு நகரும். 

கவிதைகள் பொதுஜனங்களுக்கான உரையாடல் களமாக மாற்றுவதற்கான எந்தவிதமான எத்தனிப்புகளும் முன்னெடுப்புகளும் இங்கே இல்லை என்பது துக்ககரமானது. கவிதைகளை முன்வைத்து கறாராக யாரும் பேசுவதில்லை. கவிதையின் பாடுபொருள், தளம், அதன் மொழி குறித்தெல்லாம் விரிவானதும் வெளிப்படையானதுமான விவாதங்கள் எதுவும் கண்களில் படுவதில்லை. சமூக ஊடகங்களில் கூட இத்தகைய உரையாடல்கள் நடப்பதில்லை. தம்முடைய நண்பர்களின் கவிதைகளை மட்டும் ‘ஆஹா ஓஹோ பிரமாதம்’ என இலக்கிய மொழியில் தூக்கி நிறுத்திவிட்டு மற்ற கவிதைகளைக் கண்டு கொள்ளாதவர்கள் நிறைந்து கிடக்கிறார்கள்.

நாச்சியாள் சுகந்தியின் இந்தக் கவிதை பொது மனிதனுக்கானது-

சேலையின் மாராப்பு கிழிந்திருக்கிறது
தைத்துக்கொள்ளவாவது
கொஞ்சம் நேரம் கொடுங்கள்
இப்பத்தான் தண்டவாளத்தில்
வெட்டிப் போட்டவனின் வீட்டில்
ஒப்பாரி வைத்துவிட்டு வந்தேன்
உடனே அடுத்த ஊருக்கு
முக்காடு போட்டு ஓட வைக்கிறீர்கள்
அங்கு போய் சேருவதற்குள்
இன்னொரு ஊரில் நடுரோட்டில்
என் பிள்ளையை வெட்டிப் போடுகிறீர்கள்
ஒரு ஊரிலாவது நான் முழுசா
ஒப்பாரி வைக்க வேண்டாமா?
எத்தனை நாள் இப்படி
ஓங்கியழுது ஒப்பாரிவைக்க
ஊரூராக..இல்லை..சேரிசேரியாக
ஓட வைத்துக்கொண்டு இருப்பீர்கள்
இனி ஒப்பாரிகளுக்கு வார்த்தைகளில்லை என்னிடம்
கதிர் அறுக்கும் கைகள்தானே என்னுடையவை
அவளுடையவை
அவனுடையவை
நம்முடையவை

இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என்று தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் தமிழகத்தில் வரிசையாகக் கொல்லப்பட்டதை முன்னிறுத்தும் இந்தக் கவிதையில், பாதிக்கப்பட்ட பெண் தனக்கான மொழியில் பேசுகிறாள். அந்த இளைஞர்களை தன்னுடைய மகன்களாகக் கருதிக் கொள்ளும் அவள் கொலை செய்யப்படும் ஒவ்வொரு சேரியாகச் சென்று அழுது களைத்திருக்கிறாள். இனி தன்னிடம் வார்த்தைகளில்லை என்று சொல்வதோடு கவிதை முடிந்துவிடுகிறது. அந்த இடத்தில் கவிதை தன்னுடைய அழுத்தத்தை பதித்துவிடுகிறது. ஆனால் கவிதை தொடர்கிறது. ‘ஆனால் எவ்வளவு நாட்களுக்குத்தான் நாங்களும் அழுது கொண்டேயிருப்போம்? எங்களிடமும் அரிவாள் இருக்கிறது’ என்கிற தொனி தெறிக்கும் அடுத்த நான்கு வரிகள் கவிதையின் போக்கையே மாற்றிவிடுகிறது. 

ஒருவேளை இதைத்தான் கவிஞர் தீர்வாக முன் வைக்கிறாரா என்று தெரியவில்லை. இப்படியான விவகாரங்களில் நேரடியான தீர்வை முன்வைக்கும் போது கவிதை ஒரு பக்கமாக சாய்ந்துவிடுகிறது. இப்படியான முடிவுகளை எழுதுவது கவிஞருக்கான உரிமை என்றாலும் வாசகன் விவாதிப்பதற்கான இடத்தை கவிஞன் விட்டுவைக்க வேண்டும் என்பேன். 

Oct 30, 2015

தோட்டாக்கள் பாயும் வெளி

பக்கத்து வீட்டில் ஒரு குழந்தை இருக்கிறது. பால்கனி, வீட்டின் உட்புறம் என்று ஓரிடத்தையும் விட்டு வைப்பதில்லை. பென்சிலை எடுத்து தனது கைத்திறமையைக் காட்டிவிடுகிறது. அது வாடகை வீடு. உரிமையாளர் கடுப்பாகிவிடுகிறாராம். எப்பொழுதோ ஒரு சமயம் அப்பாவிடம் புகார் அளித்துக் கொண்டிருந்தார். ‘ஆடு மாடு இலை தழைன்னு கண்டதையும் கிறுக்கி வெச்சுடுது சார்’. பார்த்து பார்த்து கட்டிய வீடு. ‘கனவுல கூட ஆடு மாடு வரும் போல இருக்கும்’ என்றார். சிரிப்பு வந்துவிட்டது. ஆடு, மாடு என்றால் பிரச்சினையில்லை. வீட்டு உரிமையாளரின் கனவில் வருகிறதென்றால் குழந்தையிடம் சொல்லி பேய்ப் படத்தை வரையச் சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டேன். மாநகரங்களில் இந்த வீட்டு உரிமையாளர்கள் தொல்லை பெருந்தொல்லை.

குழந்தையின் ஓவியங்களிலிருப்பவை உயிர் பெறுகின்றன என்பதே fantasy கற்பனை. என்னதான் கடுப்பில் இருந்தாலும் அந்த வீட்டு உரிமையாளரின் கற்பனை அபாரமானது. ஒருவேளை குழந்தைகளின் ஓவியங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும்? விசித்திரமான ஜந்துக்களும் முக்கோண வடிவ முகமுடைய மனிதர்களும் பெரும்பற்களுடன் சாலைகளில் நடந்து கொண்டிருப்பார்கள். மலைகளும் பாதி உதயமான சூரியன்களும் தெருவெங்கும் நிறைந்திருக்கும். அற்புதமான வண்ணக் கலவைகளால் இந்த உலகம் வேறொன்றாக இருந்திருக்கும். இல்லையா?

இந்தச் சுவர் கிறுக்கல் ஞாபகத்திற்கு வரக் காரணம் ந. பெரியசாமியின் கவிதைத் தொகுப்பான ‘தோட்டாக்கள் பாயும் வெளி’. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிந்தவுடன் தொகுப்பை வாசித்துவிட வேண்டும் என்று தோன்றியது. ஒரு விருது குறிப்பிட்ட படைப்பை கவனம் பெறச் செய்கிறது. ‘அப்படியென்ன இருக்கிறது?’ என்று வாசகனுக்குள் ஒருவிதமான குறுகுறுப்பை உருவாக்குகிறது. இத்தனைக்கும் பெரியசாமி ஓசூரில்தான் இருக்கிறார். நிறையப் பேசிக் கொள்வதுண்டு. ஆனால் வாசிக்காமல் விட்டிருக்கிறேன்.


கவிதைத் தொகுப்பில் வீட்டு உரிமையாளரைப் போலவே fantasy கற்பனையுடனான கவிதைகள் இருக்கின்றன. குழந்தைகள் வரையும் ஓவியங்கள் உயிர்பெறுகின்றன. ஆடு, மாடுகள் அந்தரத்தில் பறக்கின்றன. பொம்மை மான்கள் உயிரோடு அலைகின்றன. பால்ய நினைவுகள் கவிதைகளுக்குள் வந்து வந்து போகின்றன. இப்படி நாம் பெரும்பாலும் பொருட்படுத்தாத நம்முடைய ஆழ்மன விருப்புகளை மெல்லிய சீண்டல்களுடன் கவிதைகளாக்குவதை பெரியசாமி தனது பாணியாக்கியிருக்கிறார். 

உப்பு நீரில் ஊற வைத்து
கழுவிய திராட்சையை
தின்றிடத் துவங்குகையில்
நரி வந்து கேட்டது
நாலைந்து ஆய்ந்து கொடுத்தேன்
புலி வந்தது
சிறு கொத்தை ஈந்தேன்
குட்டிக்கரணம் இட்டவாறு 
குரங்கு வந்ததைத் தொடர்ந்து
ஆடு மாடு கோழி பூனையென
மகனின் படையெடுப்புகள்

எனக்கேதும் வேண்டாமென
கொடுத்த திராட்சையின் சாயலை
விழுங்கிக் கொண்டிருந்தேன்

இது பெரியசாமியின் கவிதைகளில் ஒன்று. திராட்சை தின்று கொண்டிருப்பவனிடம் மகனின் படைப்புகள் வந்து திராட்சைகளை வாங்கிச் சென்றுவிடுகின்றன. ‘எனக்கு திராட்சை இல்லைன்னாலும் பரவாயில்லை’ என்று எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு திராட்சையின் சாயலை விழுங்கிக் கொண்டிருக்கிறான். இதுதான் கவிதை.

இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறதா? இதெல்லாம் சாத்தியமேயில்லை. இப்படி சாத்தியமில்லாத ஒன்றை ஏன் கவிதையாக்க வேண்டும்? கவிதையுடன் அறிமுகமில்லாத ஒருவன் வாசித்தால் இது புரியுமா? புரியாத ஒன்றை ஏன் எழுத வேண்டும்?

இப்படியெல்லாம் கேள்விகள் எழ வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த உலகில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் உண்டு. ஒருவேளை நமக்கு பதில் தெரியாமல் இருக்கலாமே தவிர பதில் இல்லாத கேள்விகள் என்று எதுவுமேயில்லை. இந்தக் கேள்விகளும் அப்படியானவைதான். இன்னொருவர் பதில் சொல்லி சமரசம் ஆவதைவிட கேள்விகளுக்கான பதிலை நாமே கண்டடைந்து சமரசமாவதுதான் சாலச் சிறந்தது. 

‘மகனின் படைப்புகளில் இருந்து விலங்குகள் உயிர் பெறுகின்றன’ என்று இந்தக் கவிதையைப் புரிந்து கொள்கிறேன். அவ்வளவுதான். இந்த ஓர் அடிப்படையைப் புரிந்து கொண்டால் போதும். அதற்கு மேல் நம் கற்பனையைப் பொறுத்து கவிதை நம்மை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுவிடும். எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இந்த ஒரு கவிதையை வைத்துக் கொண்டு கற்பனை செய்யலாம். நம் வீட்டில், நம் குழந்தை வரையும் படங்கள் உயிர்பெறுவதிலிருந்து அப்படியெல்லாம் நடந்தால் என்னவாகும் என்பது வரை என்னனென்னவோ யோசிக்கலாம். இப்படியொரு பொறியைத் தட்டிவிடுவதுதான் கவிதையின் வேலை. அதற்கு மேல் கவிதையிடம் நிறைய எதிர்பார்க்க வேண்டியதில்லை.

இன்னொரு கவிதையையும் பார்த்துவிடலாம்.

பிளந்த மாதுளையிலிருந்து
உதிர்ந்தன சிவந்த கண்ணீர் துளிகள்
எறும்பு ஒன்று
ஒரு துளியை இழுத்துச் செல்ல
மீந்ததைப் பங்கிட்டனர் மகன்கள்
எதிர் இல்ல யுவதி
பிணி நீக்க
எடுத்துச் சென்றாள் தொலிகளை.

கழுவினேன் 
கையிலிருந்த பிசுபிசுப்பை.

இந்தக் கவிதைக்கு விளக்கம் கொடுப்பது சாத்தியமேயில்லை. ஒரேயொரு காட்சிதான் கவிதையாகியிருக்கிறது. ஒரு வீட்டில் மாதுளம் பழத்தை பிளந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டும்தான். கண்ணீர், பிணி, பிசுபிசுப்பு இந்தச் சொற்கள் கவிதையை வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றுவிடுகின்றன. பிசுபிசுப்பு என்று இந்தக் கவிதை எதைக் குறிப்பிடுகிறது? மாதுளம் பழத்தின் பிசுபிசுப்பை மட்டுமா? எதனால் மாதுளம் பழத்தின் சாறு கண்ணீர் துளியாகத் தெரிகிறது? எதிர் வீட்டு பிணியின் காரணமாகவா? தொலிகளைக் கூட இவர்கள் வீட்டில் வந்து வாங்கிச் செல்லும் யுவதியின் ஏழ்மையின் காரணமாகவா? அப்படியென்றால் இவனது குற்றவுணர்ச்சிதான் பிசுபிசுப்பா? இப்படி கேள்விகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கலாம். 

இதுதான் கவிதையின் சூட்சமம். மிகச் சாதாரணமான வரிகள்தான். ஆனால் அந்தக் காட்சியும் சொற்களும் நம்மைப் புரட்டிக் கொண்டேயிருக்கும் வலிமையை உடையவை. 

கவிதை வாசிப்பதால் என்ன பலன் என்பது க்ளிஷேவான கேள்வி. வெவ்வேறு ஆளுமைகள் வெவ்வேறு பதில்களைச் சொல்லியிருந்தாலும் தொகுத்துப் பார்த்தால் அவையும் க்ளிஷேவான பதில்களாகத்தான் இருக்கும். ஆராய்வது விமர்சகர்களின் வேலை. அனுபவிப்பது வாசகர்களின் வேலை. கவிதையின் ரசிகனாக கவிதைகளை அனுபவித்துக் கொண்டிருந்தால் போதும். இத்தகைய கவிதைகள் அனுபவிப்பதற்கானவை. 

இன்னுமொரு கவிதையுடன் முடித்துக் கொள்ளலாம்-

துளிகளை அனுப்பி
சன்னல் வழியே அழைத்து
தன் ஆட்டத்தை துவங்கியது 
மழை

வேடிக்கை பார்க்கக்
காமக் களியாட்டத்தில் மனம்

விருது பெற்றிருக்கும் ந.பெரியசாமிக்கும் தொகுப்பை வெளியிட்ட புது எழுத்து பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள்.

ந.பெரியசாமி: 9487646819/na.periyasamy@gmail.com

Feb 18, 2013

நீர்த்துளிகள் ஒட்டாத மின்னுகிற கருஞ்சரீரம்


கவிதைகள் பற்றி பேசும் போது “கவிதைக்கான வரையறை இருக்கிறதா?” என்ற கேள்வியும் கூடவே திரிந்து கொண்டிருக்கும். இது முக்கியமான கேள்வியும் கூட. கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பேசுவதும், எழுதுவதும் கவிதையை பற்றி புரிந்து கொள்வதற்கான முயற்சிதானேயொழிய “இதுதான் கவிதை” என்று யாராலும் வரையறை செய்துவிட முடியாது என்று நம்புகிறேன். அப்படி செய்யப்பட்ட வரையறைகள் கூடிய விரைவாக நெகிழ்ந்துவிடக் கூடும் அல்லது புதிய வாசகன் அனாயசமாக தாண்டிவிடக் கூடும். ஒரு கட்டுரையின் முதல் பத்தியை தொடங்குவதற்கான சம்பிரதாயமான வரிகளாக இதைச் சேர்க்கவில்லை. 

அபி மதியழகனின் “நினைவுகள் சுமந்தலையும் யாத்ரீகன்” தொகுப்பின் கவிதைகளை வாசிக்கும்போது தோன்றியதுதான் இது. நவீன கவிதைகளுக்கான வரையறைகள் என சிலவற்றை கற்பிதம் செய்து வைத்திருக்கிறேன். எனக்கு நானே உருவாக்கிக் கொண்ட அல்லது பிறரிடமிருந்து கற்றுக் கொண்ட பல கோட்பாடுகளாலான வரையறை இது. ஆனால் எனது கோட்பாடுகளுக்குள் அடக்கிவிட முடியாத கவிதைகளாக மதியின் கவிதைகள் இருக்கின்றன. பிறகு எப்படி இவற்றை நவீன கவிதைகள் என்று முன்வைத்து பேச முடியும் என்ற குழப்பம் வந்தது. 

இதே குழப்பம் முன்பொரு சமயம் வந்திருக்கிறது. அது மு.சுயம்புலிங்கத்தின் கவிதைகளை வாசிக்கும் போது. அப்படியானால் சுயம்புலிங்கத்தின் கவிதைகளுக்கும், அபி மதியழகனின் கவிதைகளுக்கும் இடையில் சம்பந்தம் இருக்கிறததுதானே? ஆமாம் இருக்கிறது. இரண்டும் மண்ணின் கவிதைகள். அதாவது மனிதர்கள் வாழும் கவிதைகள். ஆனால் இந்த இடத்தில் சுயம்புலிங்கம் பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை. எதற்காக இந்த சம்பந்தத்தை குறிப்பிடுகிறேன் என்றால், சுயம்புலிங்கத்தை எந்த விதத்தில் பிடித்த கவிஞராக ஏற்றுக் கொள்கிறேனோ அதே காரணத்திற்கான பல அம்சங்களை மதியின் கவிதைகளில் பார்க்கிறேன் என்பதை சொல்வதற்காக.

மதியின் கவிதைகள் மொத்தமும் மண்ணின் கவிதைகள் என்று சொல்ல முடியாது. ஆனால் என்னளவில் அவைதான் முக்கியமான கவிதைகளாக இருக்கின்றன. அம்மா என்னும் ஓர் ஊழியக்காரி (அ) குல தெய்வப்படையல் என்னும் ஒரு கவிதை ஒன்று போதும்- உதாரணமாகச் சொல்வதற்கு. நகரத்திற்கு குடியேறி வந்துவிட்ட மகனுக்கும், தனது ஊரை விட்டு வராமல் இருமலோடு போராடிக் கொண்டிருக்கும் தாய்க்குமான தொலைபேசி வழி உரையாடல்தான் கவிதை. பேச்சு வழக்கில் நகரும் இந்தக் கவிதை வெறும் ‘செண்டிமெண்ட்’ தெறிப்பாக தொக்கிவிடுவதற்கான அத்தனை வாய்ப்புகள் இருந்தும் தாண்டி வந்திருக்கிறார் மதியழகன். தாண்டி வருதலுக்குத் தேவையான Poetic essence ஐ துல்லியமாக கவிதையில் சேர்த்திருக்கிறார். 

அதே போல அதென்ன வாரி என்ற கவிதையை lighter poetry என்பதற்கான உதாரணமாக சுட்டிக்காட்டலாம். அவர்களது ஊரில் இருக்கும் ஒரு இடத்தை அம்பட்டன் வாரி என்கிறார்கள். “அம்பட்டன் வாரிகிட்ட நில்லு” “அம்பட்டன் வாரில போய் குளிச்சிக்கலாம்” என பெரும்பாலும் அம்பட்டன் வாரியைத்தான் அடையாளமாகச் சொல்கிறார்கள். அந்தக்காலத்தில் முதன்முதலாக ரோடு போட்டதில் ஆரம்பித்து கலியன் என்ற அம்பட்டனின் வாழ்க்கைவரை நிறைய செய்திகள் கவிதையில் இருக்கின்றன. இவையாவும் சுவாரசியமான செய்திகள். ஏதோ ஒரு நிலப்பிரச்சினைக்காக தென்னார்க்காடு ஜில்லாவின் பழைய மேப் ஒன்றை பார்க்கிறார் கவிதை சொல்லி. மேப்பில் அந்த இடம் ஹாமில்டன் வாரி என்றிருக்கிறது. அப்படியானால் அம்பட்டன் வாரி என்பது என்ன? இரண்டும் ஒன்றேதான். ஹாமில்ட்டன் வாரி என்பதுதான் மருவி அம்பட்டன் வாரி என்றாகியிருக்கிறது. கவனித்துப்பார்த்தால் கடைசி வரி மட்டும்தான் கவிதைக்கான அடிப்படை. ஆனால் இந்தக் கவிதையில் தான் ஆறாம் வகுப்பு படித்த போது இருந்த ஊரின் சித்திரத்தை கொண்டு வந்திருக்கிறார். மிக எளிமையாக இருக்கிறது. வாசிக்கும் போது ஆசுவாசமாகவும் இருக்கிறது. அதனால்தான் இந்தக் கவிதையை Lighter poetry என்று சொல்ல முடிகிறது.  

இரண்டு பத்திகளுக்கு முன்பாக மதி மண்ணின் கவிதைகள் தவிர்த்து வேறு வகைக் கவிதைகளையும் முயன்றிருக்கிறார் என்று சொன்னேன் அல்லவா? அது பற்றியும் ஓரிரு வரிகள் சொல்லிவிட விரும்புகிறேன். இத்தகைய கவிதைகள் நுட்பங்களால் ஆனவை. சொற்த்தேர்ச்சி, வரிகளின் அமைவு போன்ற கவிதையியல் பொறியியலால் ஆனவை. ஆனால் இவ்வகைக் கவிதைகளை பிரதிநிதித்துவப்படுத்தி இவரது மண்ணின் கவிதைகளை நிழலுக்கு நகர்த்திவிட விரும்பவில்லை. அவற்றை பிறிதொரு சமயத்தில் பேச விரும்புகிறேன். 

கவிதையின் நுட்பங்கள் என்று பேசினோம் அல்லவா? இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட மனம் விரும்புகிறது. கவிதையின் நுட்பங்களைப் பற்றி கவிஞன் கவலை கொள்ள வேண்டியதில்லை. கவிதையின் நுட்பங்கள் எனச் சொல்வது Poetic Engineering அல்லது Poetic Technology போன்றவற்றை. கவிதையின் நுட்பங்களை கவிஞன் தெரிந்து கொள்ளும் போது அவனது கவித்துவத்தையும் மீறி நுட்பங்கள்தான் வெளியில் பிதுங்கத் துவங்குகின்றன. கவிதையில் இருக்க வேண்டியது கவிஞனின் மனம்தானே தவிர அவனது அறிவு இல்லை. கவிஞன் ஒரு போதும் அறிவாளியாகவும் இருக்க வேண்டியதில்லை. என்னளவில் கவிஞனின் மடத்தனம்தான் படைப்பின் உச்சம். இந்தத் தொகுப்பிலிருந்து நான் புரிந்து கொள்வது மதி கவிதையின் நுட்பம் தெரியாதவராக இருந்திருக்கிறார். இது அவரது பலம். சில கவிதைகளில் 'கவிதையின் நுட்பங்கள்' என பலரால் முன்வைக்கப்பட்டிருப்பனவற்றை முயன்று பார்த்திருக்கிறார். அது அவரது பலவீனம்.  

மண்ணின் கவிதைகள் என்று சொல்லும் போது வெற்றிபெற்றவர்களின் பட்டியலில் சுயம்புலிங்கம் வருவதைப் போல தோல்வியுற்றவர்களின் பட்டியல் எடுத்தால் நிறைய கவிஞர்களை சேர்த்துவிட முடியும். ‘பறவீரன்’ என்ற ஆகச்சிறந்த கவிதையை எழுதிய பழமலய் கூட பிறகு கவிதைகளில் தடம் பதிக்க முடியவில்லை. அதற்கும் காரணம் அவர் எழுதிய மண்ணின் கவிதைகள்தான். இந்த வகைக்கவிதைகளில் பயணிப்பது மிக ஆபத்தானது. மிகச் சிறந்த கவிதையாக வந்திருக்க வேண்டியவையும் கூட சில தவறுகளால் மிக தட்டையானவையாக தெரியக் கூடும். அபியின் இந்தத் தொகுப்பில் சில கவிதைகளில் இத்தகைய தோல்வியைத் தழுவியிருக்கிறார். தாத்தா (சொன்ன) கதை ஒரு உதாரணம். முனியப்ப சாமியின் வேட்டையையும் அவர் வேட்டையாண்ட மனிதர்களையும் முன்வைத்து மிகுந்த உத்வேகத்தோடு தொடங்கும் கவிதை கடைசியில் சாதாரண ஒரு ‘தொடுப்பு’ உறவு பற்றிய உரையாடலாக முடிந்துவிடுகிறது. இந்தக் கவிதையை வாசிக்கும் வாசகன் தனக்கான இடம் என இந்தக் கவிதையில் எதைக் கருத முடியும் என்ற கேள்வியைக் கேட்டால் இந்தக் கவிதை தோல்வியடைந்துவிடும். கவிதை முடிந்த பிறகும் வாசகனின் சிந்தனையோட்டம் முடிந்துவிடாமல் தொடர்வதற்கான நீட்சியை கவிதை தர வேண்டும் என என் மனம் விரும்புகிறது.

இந்தக் கவிதையை சுட்டிக்காட்டியமைக்கு காரணம் மதியின் கவிதைகளில் இருக்கும் குறைபாடுகளை Expose செய்வதற்காக இல்லை. கவிதையில் வாசகனுக்கான இடம் என்பதை விளக்குவதற்காகத்தான். சிற்சில குறைகள் இல்லாத ஒரு தொகுப்பைக் கூட பார்க்க முடியாது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அந்த வகையில் இந்தத் தொகுப்பிலும் குறைகள் உண்டு. தனக்கான மொழியையும், கருவையும் கண்டடைந்துவிட்ட மதிக்கு தனது பாதை சரியானதாக இருக்கிறதா என்பதில் குழப்பம் இருந்திருக்க வேண்டும். அதனாலேயே வேறு சில வகைக் கவிதைகளையும் முயன்றிருக்கிறார். இந்தக் குழப்பங்கள் முதல் தொகுப்பில் இயற்கானவை என்றே நினைக்கிறேன். அடுத்து வரும் தொகுப்பில் இந்த குழப்பங்களை நீக்கிவிடுவார் என நம்பலாம். மற்றபடி என்னளவில் இந்தத் தொகுப்பை நல்லதொரு தொகுப்பாக முன் வைக்கிறேன்.

Apr 11, 2012

கவிதையில் புறச்சூழல்-ஓசூர் கவிதையுரையாடல்


ஓசூரில் ஏப்ரல் 08 ஆம் நாள் நிகழ்ந்த கவிதை உரையாடலில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை தமுஎகச-புது எழுத்து இணைந்து உருவாக்கித் தந்திருந்தார்கள். றியாஸ் குரானாவின் ”நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு” சாகிப் கிரானின் “வண்ணச்சிதைவு” ஆகிய தொகுப்புகள் உரையாடலுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. சாகிப்கிரானின் தொகுப்பு குறித்தான கட்டுரையை சமயவேல் மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருக்க, அந்தக் கட்டுரையை முகிலன் வாசித்தார். அதைத் தொடர்ந்து றியாஸின் தொகுப்பு குறித்து எச்.பீர் முகமது கட்டுரை வாசித்தார். ஒவ்வொரு தொகுப்பு குறித்தும் இருவர் பேசுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது என்பதனால் இவர்களைத் தொடர்ந்து ”வண்ணச்சிதைவு” பற்றிய கட்டுரையை சம்பு வாசிக்க, நான் “நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு” குறித்து கட்டுரை வாசித்தேன்.

கட்டுரை வாசிப்பினைத் தொடர்ந்து உரையாடல் நிகழ்ந்தது. நான் கலந்துகொண்ட வரையிலும் ஓசூரில் நிகழும் இலக்கிய உரையாடல்கள் எப்பொழுதுமே இதமானதாக இருந்திருக்கின்றன. ஆதவன் தீட்சண்யா, பா.வெங்கடேசன் உரையாடல்களை சுவாரசியமாக்கிக் கொண்டிருப்பார்கள். ஸ்ரீனிவாசன்,பெரியசாமி,முகிலன்,சம்பு போன்றவர்கள் மிகுந்த அன்புடன் பழகுவார்கள். வீடு திரும்பும் போது ஏதோ ஒன்று குறித்து “உருப்படியாக” பேசிய திருப்தி இருக்கும். 

கூட்டத்தில் புது எழுத்து மனோன்மணி அவர்களை நீண்டகாலத்திற்கு பிறகாக சந்திக்க முடிந்தது. இந்தப்பருவத்தில் வெளியான கவிதைத் தொகுப்புகளில் கவனம் பெற்ற தொகுப்புகளான வெய்யிலின் “குற்றத்தின் நறுமணம்”, றியாஸ் குரானாவின் “நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு”, சபரிநாதனின் “களம் காலம் ஆட்டம்”, பாம்பாட்டிச் சித்தனின் “இஸ்ரேலியம்” ஆகிய தொகுப்புகளை புது எழுத்துதான் வெளியிட்டிருக்கிறது என்பது கவிதையின் வாசகனாக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்பதனை கட்டுரை வாசிப்பதற்கு முன்பாக சுட்டிக் காட்டி சந்தோஷம் அடைந்து கொண்டேன்.

ஓசூர் நண்பர்களைத் தவிர்த்து பெங்களூரிலிருந்து ராம் சின்னப்பயல், கிருஷ்ணகுமார், திரு, கன்னட கவிஞர் கோவிந்தராஜ் ஆகியோரும், பெயர் பரிச்சயமில்லாத இன்னும் பல நண்பர்களும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.

                                                                 ****

இலக்கிய அரங்குகளில் கட்டுரை வாசிப்பதோடு நின்றுவிடுகிறேன். உரையாடலில் நான் அதிகமும் கலந்துகொள்வதில்லை. ‘கொள்வதில்லை’ என்ற சொல்லுக்கு பதிலாக ‘கொள்ளமுடிவதில்லை’ என்பது பொருந்திவரக்கூடும். 

விவாதத்தில் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த விவாதத்திற்கான பதிலை அல்லது எனது கருத்தை வெளிப்படுத்துவதற்குத் தேவையான தரவுகளை பதட்டத்துடன் மனதிற்குள் கோர்க்கத் துவங்கிவிடுகிறேன். கோர்த்து முடித்து பேசத் தயாராகும் போது விவாதம் வேறு ஒரு தளத்திற்கு நகர்ந்திருக்கும். பிறகு அமைதியாகிவிடுகிறேன். நண்பர்களுடன் தனித்து இருக்கும் போது நீண்ட நேரம் கவிதைகள் குறித்து பேசும் என்னால் கூட்டத்தில் பேச முடியாதது வியப்பாகவே இருந்துகொண்டிருக்கிறது. கோர்த்த தரவுகள் பிறிதொரு சமயம் கட்டுரையாக எழுதிவிடுவதற்கு பயன்படுகின்றன என்பதே விவாதத்தை முழுக்கவனத்துடன் கவனிக்கச் செய்யும் உந்துதலை அளித்துக் கொண்டிருக்கிறது.

இந்தக் கூட்டத்திலும் ஆதவன் தீட்சண்யாவும், பா.வெங்கடேசனும் முன்வைத்த கருத்து ஒன்றிற்கு பதிலளிக்க வேண்டும் என விரும்பினாலும் அதிகம் பேசாமல் மெளனமாக இருந்தேன். றியாஸ் குரானாவின் கவிதைகளை வாசிக்கும் வாசகரால், றியாஸ் வாழ்ந்த காலத்தின் புறச்சூழலையோ அந்தச் சூழல் எதிர்கொண்ட நெருக்கடிகளையோ காண முடியவில்லை என்று ஆதவன் தீட்சண்யா குறிப்பிட்டார். கவிஞனின் சூழல் சார்ந்த நெருக்கடி அல்லது புறச்சூழல் குறித்தான எந்தவிதமான சுவடுகளும் இந்தத் தொகுப்பில் இல்லை என்று பா.வெங்கடேசன் பதிவு செய்தார். 

கவிதையில் புறச்சூழல் குறித்தான பதிவு அவசியமில்லை என்பது என் நிலைப்பாடு. புறச்சூழல் பற்றிய பிம்பத்தை வாசகனுக்கு அந்தக் கவிதை உருவாக்கினால் அதில் மறுப்பதற்கு ஏதுமில்லை. ஆனால் புறச்சூழல் கவிதையில் இடம் பெறாத போது ’ஏன் புறச்சூழலை கவிதை பேசவில்லை’ என்று கவிஞனைப் பார்த்து கேட்கத் தேவையில்லை என நினைக்கிறேன்.

கவிஞன் வாழும் சூழலில் அவன் கவிதையாக்கிவிடுவதற்கான ஆயிரமாயிரம் அனுபவங்களும் காட்சிகளும் விரிந்துகொண்டேயிருக்கின்றன. அவற்றில் எவற்றை கவிதையாக்க வேண்டும் என்பதும் எவற்றை தவிர்த்துவிட வேண்டும் என்பதும் கவிஞனின் படைப்பு சார்ந்த உரிமை. கவிஞன் காலத்தின் பிரதிநிதியாகவோ அல்லது நிலத்தின் பிரதிநிதியாகவோ இருக்க வேண்டியதான அவசியமில்லலை என்பதைப் போலவே கவிதையும் காலத்தையும் நிலத்தையும் பதிவு செய்ய வேண்டிய தரவுகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

கவிதையின் வழியாக கவிஞன் தன் சிந்தனாமுறையையும்(Thought Process) அதனூடாக தன் அந்தரங்க அனுபவத்தையும் வெளிப்படுத்திக் கொள்கிறான். அந்த வெளிப்பாடு கவிஞன் என்ற மனித ஆத்மாவின் அந்தரங்கத்தின் வெளிப்பாடுதான். அந்த அந்தரங்க வெளிப்பாட்டை கவிஞனின் பெயரோடு சேர்த்து வாசிக்க வேண்டிய தேவையில்லை. கவிதையை வெறும் பிரதியாகக் காண்பதும்,  அந்தப்பிரதியின் வழியாக பெயரற்ற ஒருவனின் சிந்தனை வெளிப்பாட்டு முறையையும், அனுவத்தையும் புரிந்து கொள்வதும், அந்தப் பிரதி வாசகனின் அனுபவத்தில் உருவாக்கும் சலனத்தையும், வாசக மனதிற்குள் கலைத்துப் போடும் வர்ணங்களையும்தான் கவிதை தரக்கூடிய வாசிப்பனுவம் என்று நம்புகிறேன்

அந்தரங்கமான அனைத்து செயல்பாடுகளையும் அல்லது ஆசைகளையும் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் தனிமனிதனுக்கு இல்லாதது போலவேதான் கவிஞனுக்கும் தான் சார்ந்த அனைத்துச் சூழல்/அனுபவம் குறித்து வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. 

நேரடியாகச் சொல்ல முடியுமானால் பெயரற்ற அல்லது அடையாளமற்ற இருவருக்கு இடையிலான அந்தரங்கமான மெளனித்த பரிபாஷனையாக மட்டுமே கவிதை இருந்தால் போதும் என்றும் அது புறம், காலம், நிலம் என்ற எந்தக் கூறு குறித்தும் பிரதிநிதித்துவப் படுத்த தேவையில்லை எனவும் கவிதையின் வாசகனாக முழுமையாக நம்பிக் கொண்டிருக்கிறேன்.

றியாஸ் ஏன் போர்ச்சூழலை கவிதையில் கொண்டு வரவில்லை என்ற வினாவிற்கான பதில் “அது அவரின் உரிமை” என்பதாக இருக்கக் கூடும். அவர் தன் போர்ச்சூழலை எழுதாமல் தவிர்த்திருப்பதே கூட போரில் இருந்து தன்னை விலக்கிக் கொள்வதற்கான கருவியாக தம் கவிதைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று எடுத்துக் கொள்கிறேன்.


Apr 4, 2012

திசை எனும் வாகனங்கள்

இலங்கையின் பொத்துவில் என்னும் ஊரிலிருந்து அகமது பைசால் என்னும் நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். தனது அடுத்த கவிதைத் தொகுப்பிற்கான முன்னுரை எழுதித் தரக் கேட்டபோது எனக்கு தயக்கமாக இருந்தது. அவரின் கவிதைகள் எனக்கு இதுவரை அறிமுகமானவை இல்லை என்பது அடிப்படையான காரணம். கவிதைகள் மனதுக்கு நெருக்கமானவையாக இருப்பின் நிச்சயம் கவிதைகள் குறித்து எழுதுவதாக உறுதியளித்திருந்தேன். கவிதைகளை பிரித்து அனுப்பிக் கொண்டிருக்கிறார். விட்டுவிட்டு பெய்யும் மழை போல. 

திசை எனும் வாகனங்கள்” என்ற ஒரு கவிதை இது.

திசைகள்
தன் கால்களையும், கைகளையும்
அகல விரித்து தெருவெல்லாம் கிடக்கின்றன 


நான் திசைகளைப் பாதங்களில் அணிகிறேன்
அது பராக்குக் காட்டி என்னை கூட்டிச்செல்கின்றன


போகும் வழியில்
பள்ளிக்கால நண்பனைக் கண்டு  
கொஞ்சம் அவனோடு பேசிக்கொண்டிருக்கிறேன்
விடைபெறும் நேரத்தில்
அவனிடமும் ஒரு திசையை வாங்கிக்கொண்டேன்
அது வைத்திய சாலைக்குப் போகும் திசை


என் எதிரில் ஒரு திசை
மண்ணில் உருண்டு புரண்டு என் முகத்தை ஆவலாகப் பார்க்கிறது
அது என் காதலியின் வீட்டுக்குப்போகும் திசை
அது என் கழுத்தை இறுக்கி என்னைக் கைது செய்கின்றது


இப்போது நான் 
திசைகளை கடலில் கொண்டுபோய் கரைக்கின்றேன்
கடலுக்குள் இறங்கிய ஒரு திசை
முதலாம் கடலை முதுகில் ஏற்றிக்கொண்டு 
சீனா செல்கின்றது
அங்கேயும் ஒருவன்
கடல் நீரில் திசைகளைக் கரைத்துவிட்டு
வெளிறிய கால்களுடன் திரும்பிச் செல்கின்றான்


புதிய திசைகள் 
அவனது கால்களில் ஒட்டிக்கொள்கின்றன

கடலைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் தங்களின் திசைகளை கடலினுள் கரைத்துவிடுகிறார்கள். கடல் அத்தனை திசைகளையும் தனக்குள் அமிழ்த்திக் கொண்டு திசையற்றதாகவும், திசைகள் குறித்த எந்தவிதமான பிரக்ஞையுமற்றதாகவும் தன் நீல அமைதியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. திசைகளின் மீதான கடலின் தீர்க்கவே முடியாத பசி பற்றிய சிந்தனையை இந்தக் கவிதை உருவாக்கியது. இனி எப்பொழ்து கடலை பார்த்தாலும் இந்தக் கவிதை நினைவுக்கு வரக்கூடும். நண்பனிடம் பெற்றுக் கொண்ட வைத்தியசாலைக்கான திசை, காதலியின் இல்லம் அமைந்திருக்கும் திசை, சீனத்தில் திசையைக் கரைக்கும் இன்னொருவன் என்பவை இக்கவிதையில் கிளை புனைவுகள். கவிதை வாசித்த கணத்திலிருந்து இந்த கிளை புனைவுகள் வெவ்வேறு மனநிலையை உருவாக்கி அலைவுறச் செய்து கொண்டிருக்கின்றன.

பைசால் அகமதுவின் இன்னும் சில கவிதைகளை நிலத்தோடு பேசுகிறேன் என்னும் வலைத்தளத்தில் வாசிக்கலாம்.

Jan 2, 2012

காலில் காட்டைத் தூக்கிக் கொண்டு அலையும் வண்ணத்துப்பூச்சி

கவிஞர் தேவதச்சனுக்கு இந்த ஆண்டின் விளக்கு விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. தனித்துவமான கவிதை மொழியில் தமிழின் நவீன கவிதையை உயிர்ப்புடன் முன்னகர்த்திச் செல்லும் முன்னோடிக் கவிஞர் தேவதச்சன். 

எனக்கு முதலில் அறிமுகமான தேவதச்சனின் கவிதை 

என்
அன்பின் சிப்பியை
யாரும்
திறக்க வரவில்லை
கடல்களுக்குக் கீழ்
அவை
அலைந்து கொண்டிருக்கின்றன
ஓட்டமும் நடையுமாய்

முதல் வாசிப்பிற்கு மிக எளிமையாகத் தோன்றும் இந்தக் கவிதை தரும் அனுபவத்தை என்னால் என்றைக்குமே விவரிக்க முடிந்ததில்லை. அன்பும் பிரியமும் உதாசீனப்படுத்தப்படும் போதெல்லாம் இந்தக் கவிதைதான் மனதின் படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கிறது. தனிமையில் கசங்கிக் கிடந்த இரவுகளில் எல்லாம் இந்த வரிகளை யோசித்ததுண்டு. இரண்டு அல்லது மூன்று வரிகளில் எழுதப்படும் கவிதைகள் நல்ல அனுபவத்தை தருவதில்லை என்று வாதிடும் நண்பர்களை தர்க்க ரீதியாக தோல்வியடையச் செய்வதற்கு இந்தக் கவிதையை முன் வைத்திருக்கிறேன். ஆனால் இந்தக் கவிதை மட்டுமே தேவதச்சனின் நல்ல கவிதையன்று.

தனக்கும் முன்பும் தனக்குப் பின்னாலும் இல்லாத கவிதையின் வடிவத்தில், அடர்த்தியில், பாடுபொருளில் தனித்தன்மையான கவிதைகளால் நிரம்பியிருக்கிறது தேவதச்சனின் கவிதை உலகம். கவிஞர் மிகச் சாதாரணமான கவிதைக் காட்சிகளில் சிக்கலான புதிர்களை உருவாக்குகிறார். நவீன வாழ்வின் அபத்தங்களையும் சிக்கல்களையும் புதிர்களாகக் கொண்டிருக்கும் இந்தக் கவிதைகள் விடுகதைகளைப் போன்றவை. இந்தப் புதிர்களின் விடைகளைக் கண்டறிவதில் இருக்கும் சுவாரசியத்தைத்தான் வாசக மனம் விரும்புகிறது. தேவதச்சனின் துண்டிக்கப்பட்ட கவிதைக் காட்சிகளை இணைத்துப் பார்ப்பதே புதிர்களின் சிண்டுகளை நீக்குவதைப் போலத்தான் இருக்கிறது.

தனக்குள் வரும் உயிரிகளை வெளியேற முடியாதபடி மூடி அவற்றை நொதிக்கச் செய்யும் 'நெப்பந்தெஸ்(Nepenthes)'தாவரத்தின் செயற்பாடுக்கு எந்தவிதத்திலும் சளைக்காததாகத்தான் தேவதச்சனின் கவிதைகளை என்னால் மதிப்பிட முடிகிறது. தனக்குள் வரும் வாசகனை திரும்பத் திரும்ப பேசச் செய்வன இக்கவிதைகள். இந்த நொதித்தல் குறுகுறுப்பான நொதித்தல். அந்த குறுகுறுப்பு மனம் விரும்பும் குறுகுறுப்பு.
ஊட்டியில் நித்யா கவிதை அரங்கில் தேவதச்சனோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. கவிதையியலைப் பற்றி மிக நுணுக்கமாக வெகு நேரம் பேசக் கூடிய ஆளுமைகளில் தேவதச்சனை மிக முக்கியமானவராகக் கருதுகிறேன். கவிதை அரங்கு முடிந்து மேட்டுப்பாளையம் வரும் வரையில் அவரோடு பயணித்தேன். வெற்றிலைக் குதப்பலின் மணத்தோடு வீசிய கவிதைகளை இன்னமும் சில கணங்களில் நினைத்துக் கொண்டிருக்கிறேன். 

தேவதச்சனுக்கு வாழ்த்துக்களும், தகுதியானவருக்கு விருதைச் சூடிய அமைப்பினருக்கு பாராட்டுகளும்.

(தேவதச்சன் கவிதைகள் குறித்து எழுதிக் கொண்டிருக்கும் விரிவான கட்டுரையில் இருந்து ஒரு பகுதி)

Dec 23, 2011

நவீன கவிதையும், புதுக்கவிதையும் ஒன்றா?

வணக்கம்

என்னுடைய பெயர் சா.பாலமுருகன்.

குடந்தை அரசினர் கலைக் கல்லூரியில் ''தமிழ்க் கவிதைகள் - ஓரு மதிப்பீடூ''
என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டிருக்கிறேன். உங்களூடைய கலாப்ரியா குறித்த கட்டுரையை பார்வையிட நேர்ந்தது. மிகவும் நன்றாக இருந்தது

வினா : நவீன கவிதையும், புதுக்கவிதையும் ஒன்றா? வேறுபாடுகள் இருந்தால் சுட்டவும்

நன்றி
**************************
அன்புள்ள பாலமுருகன்,

வணக்கம்.

மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட கவிதைகளை Modern Poetry என்கிறார்கள்.

Modern Poetry என்ற சொல்லை நவீன கவிதை என்றும் அல்லது புதுக்கவிதை என்றும் மொழி பெயர்க்க முடியும் என்றாலும்- தமிழ் கவிதைச் சூழலில் நவீன கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் அந்தச் சொற்களின் புழக்கத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் இருக்கின்றன.

புதுக்கவிதை என்ற சொல் வாரமலரின் கடைசிப்பக்கத்தில் வரும் கவிதைக்கும், திரைக்கவிஞர்களின் கவிதைகளுக்கும், மேடைக் கவிதைகளுக்கும் பொதுவானவையாக இருக்கின்றன. மரபை உடைத்த கவிதைகளில் பெரும்பாலானவை கூச்சல்கள் நிறைந்தவையாகவும், அலங்காரத்திற்கு முக்கியத்துவம் தருவனவாகவும் இருக்கின்றன. சில கவிதைகள் பிரச்சார தொனியிலானவை. இக்கவிஞர்கள் 'கவிதைக்கு பொய்யழகு' என வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டார்கள்.

தமிழ் கவிதையியலில் நவீன கவிதை என்பது ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, நகுலன், பிரமிள், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், பசுவய்யா,சி.மணி,கலாப்ரியா,கல்யாண்ஜி, தேவதேவன், தேவதச்சன், சுகுமாரன், சமயவேல், மனுஷ்ய புத்திரன் என்ற கவிஞர்களின் தொடர்ச்சியாக வரும் கவிதைகளை குறிப்பிடவே பயன்படுத்தப்படுகிறது. Contemporary Poetry என்ற ஆங்கிலச் சொல் இந்தக்கவிதைகளுக்கு சரியாக பொருந்தும். இக்கவிதைகள் மேற்சொன்ன புதுக்கவிதைக்கு நேர்மாறானவை. நவீன கவிதைகளில் கவிஞன் துருத்திக் கொண்டிருப்பதில்லை. பிரச்சார நோக்கத்திற்காகவும் கவிதை பயன்படுவதில்லை.இங்கு கவிதை வாசகனுடன் நேரடியாக உரையாடுகிறது. நவீன கவிதையில் வாசகனுக்கும் கவிதைக்கும் இடையில் கவிஞன் என்பவன் வெறும் கருவி மட்டுமே.

கவிதைகள் தரக்கூடிய வாசிப்பனுபவம் என்பதையும் இந்தக் இரு வகையான கவிதைகளைப் பற்றி பேசும் போது கவனத்தில் கொள்ள வேண்டும். எதுகை மோனை போன்ற மொழி அலங்காரங்களும், நிறுத்தற்குறிகள் போன்ற பிளவுகளும் புதுக்கவிதையின் பிரதான அம்சங்களாக இருக்கின்றன. இவை மனித மனதின் மேல்மட்ட உணர்ச்சிகளை எளிதில் தூண்டக்கூடியவை. ஆனால் ஆழ்மனதில் உருவாக்கும் சலனம் என்பது எதுவுமில்லை.

நவீன கவிதைகளில் 'படிமம்' என்ற நுட்பம் பரவலாக பயன்படுகிறது. உதாரணத்திற்கு 'உடைந்த பாறை' என்பது ஒரு படிமம். கவிஞன் பாறை என்பதனை கவிதையில் ஒரு குறியீடாக பயன்படுத்தியிருக்கக் கூடும். இங்கு பாறை என்பது வெறும் கற்பாறை மட்டுமே இல்லை. அது சிதைந்த ஆளுமையைக் குறிப்பிடவோ, நொறுங்கிய மனதினைக் குறிப்பிடவோ கூட இருக்கலாம். என் அனுபவம் சார்ந்து அந்த படிமத்தை நான் 'எதுவாக' வேண்டுமானாலும் புரிந்துகொள்ளக் கூடும். அனுபவம் சார்ந்து கவிதை உருவாக்கும் சலனம் ஆழ்மனதோடு தொடர்புடையது. இதனை நவீன கவிதையின் முக்கியமான அம்சம் என நான் நம்புகிறேன்.

'படிமம்' என்பது மட்டுமே நவீன கவிதையின் நுட்பமில்லை. எல்லாக்கவிதைகளிலும் படிமம் இருக்க வேண்டிய அவசியமுமில்லை. மிக எளிமையான, நேரடியான நவீன கவிதைகள் இருக்கின்றன. அப்படியானால் இவை 'புதுக்கவிதை'யின் பிரிவில் வரக்கூடியனவா என்ற வினா எழலாம். இந்த இடத்தில் கவிதையின் வடிவம், அதன் உள்ளடக்கம் ஆகியவை கவனிக்கத் தக்கவை. (துருத்தலின்மை, கூச்சலின்மை போன்றவையும்). இந்த வித்தியாசத்தை தொடர்ச்சியான கவிதை வாசிப்பின் மூலமாக மிக விரைவில் புரிந்துகொள்ள முடியும்.

இந்த விளக்கம் மிகச் சிறிய குறிப்பு மட்டுமே. உங்களின் வினாவுக்கான பதிலை இன்னமும் விரிவாக்க முடியும்.

நன்றி.

வா.மணிகண்டன்.

Oct 18, 2011

கவிதை மொழி

கோவையில் “அருவி” அமைப்பினர் அக்டோபர் 16-2011 அன்று ஒழுங்கு செய்திருந்த சந்திப்பில் ’கவிதை மொழி’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையாடலின் “பவர் பாய்ண்ட்” வடிவம்.

இந்தக்கூட்டத்தில் தமிழ்க்கவிதை குறித்தான என் புரிதல்களையும், கவிதையோடு எனது அனுபவம் பற்றியும் பேசுவது என்று முடிவு செய்திருந்தேன். இவை இதுவரை கவிதைகள் பற்றி நான் எழுதிய குறிப்புகளின் சாராம்சம்தான்.


1) தமிழ்ச் சூழலில் கவிதை பொதுவாக எந்த வழிமுறைகளில் நமக்கு அறிமுகமாகிறது என்பது பற்றியும், அவை எதனால் முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறித்து ஆரம்பம் அமைந்தது.


2) கவிதையின் பெரும் பிரிவுகளாக நமக்கு அறிமுகமானவை குறித்து

மரபுக் கவிதை வாசிக்க ஆரம்பித்த பள்ளிப்பருவத்தில் புறநானூற்றின் சூழலுக்குள் தன்னை பொருத்திக் கொள்ள முடியாமையும், அகப்பாடல்கள் குறிப்பிடும் தனக்கு அனுபவம் இல்லாத வயதும், அந்த பருவத்தில் அக்கவிதைகளை விட்டு விலகச் செய்கின்றன.

புதுக்கவிதையின் அதீத ஓசைகளும் அதன் துருத்திக் கொண்டிருக்கும் உணர்ச்சிகளும் புதுக்கவிதையை விட்டு விலகச் செய்கின்றன.

இந்நிலையில் நவீன கவிதை அறிமுகமாகிறது. நவீனத்துவம் என்றால் என்ன  என்பதை தேடிச் செல்ல மனம் ஆயத்தமாகிறது.


3) நவீனத்துவத்திற்கான அடிப்படையும், அதன் துவக்கமும் குறித்து


4) நவீனத்துவம்: சிறு குறிப்பு


5) புதுக்கவிதையிலிருந்து நவீன கவிதைக்கான நகர்தல் குறித்து


6) கவிதைக்கான வரையறை


7) எனக்கான கவிதை


8) கவிதையில் உண்மைத்தன்மை


9) கவிதையில் இருண்மை: 

கவிதையின் இருண்மைத் தன்மைக்கு நகுலனின் கவிதைகளை முன் வைத்தும், ஜெயமோகன் சமீபத்தில் நகுலன் படைப்புகள் குறித்து எழுப்பிய விமர்சனத்திற்கு எதிர்வினையாற்றவும் இந்த இடம் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.  எனக்கு நகுலன் கவிதைகள் உருவாக்கும் இருண்மையும், அதில் உருவாகும் வாசகனுக்கான இடமும் மிக முக்கியமானவை. அதனாலேயே எனக்கு நகுலன் மிக முக்கியமான படைப்பாளி.

10) கவிதையில் உருவாக்கப்படும் காட்சிகள்
           நேரடியான காட்சிகளில் இருக்கும் பிரச்சினை -ஸ்டேட்மெண்ட்           
           பூடகமான காட்சிகளில் இருக்கும் சிக்கல்- புதிர்த்தன்மை


11) தமிழ்க் கவிதைகளில் நாம் எதிர்கொள்ளும் படிமங்கள், அது உருவாக்கும் புரிதல்கள்

12) கவிதை வாசிப்பும் மனநிலையும்:

தன் மனநிலையிலிருந்து கவிதையை புரிந்து கொள்ளுதலில் மனநிலை இரு விதமான நிலையில் இருக்கலாம்- அமைதியான மனநிலை அல்லது கொதிநிலை


13) கவிதை என்பதன் சுயம்


14) தனித்துவத்துடன் அமையும் கவிதைகள்


15) கவிதையை அணுகுதல்: ரசனை சார்ந்து அல்லது கோட்பாடு சார்ந்து


16) கவிஞன் x கவிதாளுமை





17) இன்றைய கவிஞர்களுக்கு முன் இருக்கும் சவால்கள்


18) கவிஞனின் தெளிவற்ற தன்மை



குறிப்புகள்:

’அருவி’ அமைப்பு குறித்து:

அருவி அமைப்பு கோவையில் சூரி,ஸ்ரீநி,சுரேஷ் ஆகிய மூன்று நண்பர்களால் நடத்தப்படுகிறது. இவர்கள் கல்லூரிக்காலத்தில் (1981-1986) இல் “உயிர்மெய்” என்ற சிற்றிதழை நடத்தியவர்கள்( 8 இதழ்கள்)

இவர்களோடு சேர்ந்து இன்னொரு நண்பரும் இயங்குகிறார். அவரோடு அதிகம் பேசவில்லை- பெயரும் நினைவில் இல்லை.

இணையதளம்: www.aruvikovai.com

கூட்டம் குறித்து:

1) நவீன கவிதை குறித்து பேசும் போது ந.பிச்சமூர்த்தி, நகுலன்,பசுவய்யா,ஆத்மாநாம்,தேவதேவன்,தேவதச்சன்,சுகுமாரன் போன்ற பெயர்களை குறிப்பிட்டு பேச வேண்டியிருந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்ட ’வானம்பாடிகள்’ கவிஞர் அக்னிபுத்திரன், இத்தனை கவிஞர்களை குறிப்பிட்டவன் ஏன் இன்குலாப்பின் பெயரை சேர்க்கவில்லை என்றார். இன்குலாப், மு.மேத்தா ஆகியோர் என நான் பதில் சொல்ல ஆரம்பிக்கும் போது “இன்குலாப்பையும் மு.மேத்தாவையும் ஒரே தட்டில் வைக்கும் போதே உங்களுக்கு அந்தக் கவிதைகளில் பரிச்சயம் இல்லை” என்றார். நான் பதில் சொல்லவில்லை- என்னிடமிருந்த பதில் அந்த கூட்டத்தை திசையிருப்பிருக்ககூடும்.
     
பதில் இதுதான்:
ந.பி, சு.ரா,தேவதச்சன் வரிசையில் கவிதை வாசித்து அவற்றைக் கொண்டாடுபவனுக்கு இன்குலாப்பும் ஒன்றுதான், மு.மேத்தாவும் ஒன்றுதான், கருணாநிதியும் ஒன்றுதான்.

2) திருவள்ளுவருக்குப் பிறகு இரண்டாயிரம் ஆண்டுகளில் பாரதியாரில்தான் கவிதை நிற்கிறது என்ற போது பொதியவெற்பன் “பக்தி இலக்கியம், சித்தர் பாடல்கள், கம்பராமாயணம்” எல்லாம் கவிதைகள் இல்லையா என்றார்.

3) கவிதையை ரசனை சார்ந்து அணுகுதல் அல்லது கோட்பாடு சார்ந்து அணுகுதல் பற்றி விவாதிக்கும் போது பொதியவெற்பன் படைப்பில் ரசனை சார்ந்து மட்டுமே அணுகினால் உனக்கு அடுத்தவன் கவிதையை விமர்சிக்கும் யோக்கிதை இல்லையென்றார். கவிஞனாக நான் ரசனை சார்ந்து மட்டுமே அணுகுவேன், கவிதை ப்ரியனாகவும் நான் அதையே செய்வேன். கோட்பாட்டிற்காக கவிதையை பிரிப்பது எனது படைப்பு மனநிலையை சிதைக்கிறது. எனது யோக்கியதை பற்றிய சான்றுக்காக நான் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது.

4) கவிஞர்கள் உதிரிகளாக இருந்தாலே போதும் அவர்கள் தங்களை எந்த நிறுவனத்துடனும் இணைத்துக்கொள்ளத் தேவையில்லை என்றபோது மனிதன் உதிரியாக இருக்க முடியாது என்றும் அவன் பிறரோடு சேர்ந்தே இருக்க வேண்டும் என அக்னிபுத்திரன் சொன்னார். “மனிதன் சேர்ந்து இருக்கலாம் ஆனால் படைப்பாளி உதிரியாக இருக்கலாம்” என்றேன்.

5) அமரநாதன் என்பவர் என் கவிதைகளைப் பற்றிய கருத்துக்களைச் சொல்லி என்னை சந்தோஷ அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

6) இசை,இளங்கோ கிருஷ்ணன், தென்பாண்டியன்,அவை நாயகன்,சம்யுக்தா ஆகிய படைப்பாளிகள் உட்பட தோராயமாக முப்பது பேர் கலந்து கொண்டார்கள்.

7) ஆனந்த், வீரராகவன் ஆகியோர் உரையாடலில் பங்குபெற்றார்கள்.

8) சில மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.

9) முந்தைய நாள் முகநூலில் நான் எழுதிய அருவி நிகழ்ச்சி குறித்தான செய்தியில் தன் பெயரை குறிப்பிடாதது குறித்தான வருத்தத்தை இளஞ்சேரல் தொலைபேசியில் அழைத்து பகிர்ந்து கொண்டார். அவர் இளவேனில் சார்பாகவும் பேசுவதாகச் சொன்னார். அந்த செய்தியில் பெயர் குறிப்பிடாமல் விட்டதில் எந்த அரசியலும் இல்லை அது ஒரு தற்செயல் என்று விளக்க வேண்டியிருந்தது.

10) நிகழ்ச்சியை தொகுத்த மாணவியின் பெயர் மறந்துவிட்டது.

--------
கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்: vaamanikandan@gmail.com

Dec 1, 2010

நின்று பெய்யும் மழை- செல்வராஜ் ஜெகதீசன்

கவிதை என்ற பெயரில் கவிதைகள் இல்லாதவையும் முன்வைக்கப்படுகின்றன என்று விமர்சிக்கும் போது எதிர்கொள்ளும் முக்கியமான எதிர்வினை "கவிதை என்ற பெயரில் கவிதைகள் இல்லாதவை முன்வைக்கப்படுவதைப் போலவே பிற இலக்கிய வடிவங்களிலும்(சிறுகதை,புதினம்) அவற்றிற்கு சம்பந்தமில்லாத வடிவங்களில் குப்பைகள் நிறைவது நிகழ்கின்றது" என்பது. இந்தக் கூற்றை முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன். என்றாலும் பிற இலக்கிய வடிவங்களைப் பற்றி பேசுவதற்கான திறனும் பயிற்சியும் இல்லாததால் அவற்றைப் பற்றி நான் விவாதிப்பதில்லை. அதே சமயம், கவிதையின் மீதான பிரியத்தினால் கவிதைகளில் நிரம்பும் குப்பைகளைப் பற்றி பேசாமல் இருப்பதில்லை.

கவிதைகளைக் கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகும் போது நவீனத்துவம், பின் நவீனத்துவம், யதார்த்தவாதம், மாய யதார்த்தவாதம் என்றெல்லாம் வகைப்படுத்தி விடமுடியும். ஆனால் ரசனையின் அடிப்படையில் கவிதைக்கு துல்லியமான வரைகோடுகளை வரைவது அசாத்தியமானது. ரசனை,கவிஞனையும் வாசகனையும் கவிதையியல் கோட்பாடுகளைத் தாண்டி - கவிதையில் அவர்கள் பெறும் அனுபவத்தின் ரீதியாக இணைக்கிறது.எனவே கவிஞனுக்கும், கவிதையின் வாசகனுக்கும் கோட்பாடுகள் பற்றிய எந்த அக்கறையும் தேவையில்லை என நான் உறுதியாக நம்புகிறேன்.

கோட்பாடுகளை மனதில் வைத்துக் கொண்டு எழுதப்படும் கவிதை பத்தாம் வகுப்பு மாணவன் வானவியல் கேள்விகளுக்கு பதில் எழுதுவதைப் போல அனுபவ வறட்சியோடு அமைந்துவிடலாம். அதேபோல கோட்பாடுகளின் அடிப்படையில் கவிதையை நெருங்கும் வாசகன் கவிதையில் இருக்கும் கவித்துவத்தை இழந்துவிடலாம். இதனை அழுத்தமாகச் சொல்வதற்காகத்தான், இவர்கள் கவிதையியல் கோட்பாடுகள் பற்றி வருத்திக் கொள்ளத் தேவையில்லை என்கிறேன். ஆனால் கவிதையியலில் கோட்பாடுகளே அவசியம் இல்லை என்பதல்ல எனது நிலைப்பாடு.

கவிஞன் 'விதிகள் அல்லது கோட்பாடுகள்' பற்றிய எந்தப் பிரக்ஞையுமின்றி தனது கவிதையை எழுதி விடுகிறான். வாசகனால் கவிதை வாசிக்கப்படும் கணத்தில் கவிஞன் அக்கவிதையிலிருந்து வெளியேறிவிடுகிறான். கவிதைக்கும் வாசகனுக்குமான பிணைப்பு கவிஞன் கவிதையிலிருந்து வெளியேறும் இந்தப் புள்ளியில்தான் உருவாகிறது. கவிஞன் வெளியேறிய பின்பு, கவிதையை வகைமைப்படுத்துதலை கோட்பாட்டாளர்கள் செய்வார்கள். இந்த வகைமைப்படுத்துவதில் கவிஞனுக்கோ, ரசனை அடிப்படையிலான கவிதை வாசகனுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை. அதே சமயம், கவிதை தனது அடுத்த தளத்தை நோக்கி நகர்வதற்கான விவாதத்தை தொடங்க கோட்பாடுகள் உதவுகின்றன என நம்புகிறேன். இதுவே கவிதை வாசகனாக கோட்பாடுகள் பற்றி நான் கொண்டிருக்கும் மதிப்பீடு.

கவிதையியல் கோட்பாடுகள் பற்றிய அக்கறை கவிஞனுக்கு தேவையில்லை என்று சொல்லும் போது கவிதையின் வடிவம் பற்றிய வினா எழுகிறது. கவிஞனுக்கு கோட்பாடுகளைப் பற்றிய கவனம் தேவையில்லையென்றாலும், கவிதையின் வடிவம் பற்றிய சிந்தனை அவசியமாகப் படுகிறது. இந்த வடிவம் என்பது ஹைக்கூ, லிமெரிக் போன்று 'வரையறுக்கப்பட்ட' வடிவம் இல்லை- சொற்களையும், வரிகளையும் தகுந்த இடங்களில் பயன்படுத்தி கவிதையின் வடிவத்தை மாற்றியமைத்தல்.

கவிஞன் தனது வாழ்வியல் அனுபவத்தை கவிதையில் அடர்த்தியாக தர முயற்சிக்கிறான். அனுபவத்தை அதீத அடர்த்தியாக்குவதற்கு கவிதையின் வடிவத்தில் மேற்கொள்ளப்படும் சில மாறுதல்கள் உதவக் கூடும். வார்த்தைகளை நீக்குதல், மாற்றியமைத்தல், வரிகளை மடக்குதல் போன்ற யுக்திகளை கவிஞன் தனது கவிதையைச் செறிவாக்கும் பொருட்டே செய்கிறான். பயிற்சியுடைய கவிஞன் ஒருவனால் கவிதைக்குள்ளாக சில சொற்களை மாற்றியமைத்து கவிதை தரும் மொத்த அனுபவத்தையும் திசை திருப்ப முடியும்.

கவிதையின் வடிவம் பற்றி பேசுவதற்கு செல்வராஜ் ஜெகதீசனின் இந்த ஒரு கவிதை உதவக் கூடும்.

சிற்சில
துரோகங்கள்
சிரிப்போடு
விலகிய ஒரு காதல்
நெருங்கிய நண்பரின்
நடுவயது மரணம்
நாளொரு கதை
சொல்லும் பாட்டியின்
நள்ளிரவு மரணம்
நண்பனொருவனின்
நயவஞ்சகம்
இதுவரைக்கும்
எதுவும் அதுவாய்
கடந்து போனதில்லை.

'சிற்சில துரோகங்கள்' என ஒரே வரியில் இருப்பதற்கும் 'சிற்சில/துரோகங்கள்' என்பதற்கும் இருக்கும் வேறுபாடு நுட்பமானது. ஒரு வரியிலிருந்து இன்னொரு வரிக்கு வரும் போது கிடைக்கும் இடைவெளியில் உள்ள வெறுமை அல்லது மெளனம் அந்தக் காட்சியை அழுத்தமாக்குகிறது. இந்த மெளனத்தை வெற்றிடம் என்றும் பொருட்படுத்தலாம்.

'சிரிப்போடு விலகிய காதல்' என்பதைவிடவும் 'சிரிப்போடு விலகிய ஒரு காதல்' என்பது வேறு பொருளைத் தருகிறது. அனைத்துக் காதல்களும் சிரிப்போடு விலகுவதில்லை. இந்த ஒரு காதல் மட்டும்தான் சிரிப்போடு விலகியது என்பதை 'ஒரு' என்ற சொல் சுட்டுகிறது.

'எதுவும் அதுவாய்/கடந்து போனதில்லை' - நம் வாழ்வில் எதிர்கொள்ளும் இயல்பான நிகழ்வுகளுக்கு முரணான வரி இது.

நேரம், மகிழ்ச்சி, தோல்வி,அழுகை என்ற எல்லாமும் அதுவாகவே நம்மை கடந்து போகின்றன என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த வரி சற்று யோசிக்க வைக்கிறது. சில நிகழ்வுகள் நம்மை விட்டு விலகுவதேயில்லை. 'எதுவும் சில காலம்' என்று தத்துவார்த்தமாகச் சொல்லி நாம் எல்லாவற்றையும் மறந்துவிடுவோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது நிதர்சனம் இல்லை. நம்மைச் சுற்றிலும் ஞாபகங்கள் கூடு கட்டிக் கொண்டே இருக்கின்றன. நவீன உலகத்தின் வேகமான இயங்குதலில் சிலவற்றை அவ்வப்போது நினைக்காமல் விட்டுவிடுகிறோம். ஆனால் மின்னல் வெட்டுவதைப் போல சில ஞாபகத் துணுக்குகள் நெஞ்சைக் குத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

சில துரோகங்களை மிகுந்த பிரையாசைப்பட்டே மறக்கிறோம் அல்லது மறந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறோம். ஜெகதீசனுக்கு கதை சொல்லும் பாட்டியின் மரணத்தை மறக்க முடியவில்லை என்றால் இன்னொருவருக்கு முதன் முதலாய் பாலியல் கதைகளைச் சொன்ன பக்கத்துவீட்டு லலிதா அக்கா தூக்கிலிட்டுக் கொண்டதை மறக்க முடியாமல் இருக்கலாம். கவிதை சொல்லிக்கு நண்பனின் நயவஞ்சகம் பதிந்து இருப்பதைப் போல இன்னொருவருக்கு வேறு ஏதேனும் நினைவில் இருந்து அழிக்கமுடியாததாக இருக்கலாம்.

கவிதை வாசித்தல் செய்தி வாசித்தலும் இல்லை, கவிதை என்பது வரிகளை மடக்கிப் போட்டு ஒரே வரியை இரண்டு முறை வாசிப்பதுமில்லை என்பதால் கவிதையின் ஒவ்வொரு வார்த்தையுமே முக்கியமானதாகிறது. தேவையற்ற சொற்களை தயவுதாட்சண்யமில்லாமல் வெட்டிவிடுவதும், பொருத்தமான சொல் கிடைக்காத போது கவிஞன் 'அந்தச்' சொல்லுக்காக காத்திருத்தலும் பயனுடையதாகவே இருக்கிறது.

இந்த 'கச்சிதம்' மேற்சொன்ன கவிதையில் சரியாக வந்திருப்பதாகப் படுகிறது.

கவிஞன் இந்த நகரத்தின் தூசி அடர்ந்த தெருக்களிலும், நகரத்தின் அரிதாரத்தை மிக வேகமாக பூசிக் கொண்டிருக்கும் கிராமங்களின் மரங்களுக்க்கு அடியிலும் தன் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் சராசரி மனிதன். தன் சாதாரண அனுபவங்களை சாதாரண காட்சிகளாக கவிதையில் பதிவு செய்தும் கவிஞன் வெற்றி பெறுகிறான் அல்லது சாதாரணக் காட்சிகளை பூடகமான காட்சிகளாக கவிதையாக்கியும் வெற்றியடைகிறான். ஆனால் பதிவு செய்யப்படும் அந்த அனுபவத்தின் செறிவுதான் கவிதையின் இடத்தை நிர்மாணிக்கிறது.

கவிஞன் துருத்திக் கொண்டிருக்கும் பெரும்பாலான கவிதைகள் வலிமையிழந்துவிடுகிறது என்பது என் அபிப்பிராயம். கவிதை முடியும் புள்ளியில் கவிஞன் கவிதையிலிருந்து உதிர்ந்து விட வேண்டும். இந்தப் புள்ளியிலிருந்து கவிதையின் முழு உரிமையும் வாசகனுக்குத்தான். கவிஞன் விடாமல் தொற்றிக் கொண்டிருந்தால் அந்தக் கவிதையை வாசகன் உதிர்த்துவிடுவான். செல்வராஜ் ஜெகதீசனின் பின்வரும் கவிதை அந்த ரகம் தான்.

இருந்தபடியேதான் இருந்தாள்
அந்த எழுபது வயதுக் கிழவி.

வருவோர் போவோர் தரும்
இரண்டிரண்டு பிஸ்கட்கள்

அவ்வப்போது யாராவது தரும் - ஒரு
அரை டம்ளர் தேநீர் சகிதம்

இருந்தபடியேதான் இருந்தாள்
அந்த எழுபது வயதுக் கிழவி.

அந்த வங்கி வாசல் தேநீர் கடை
அவளின் வாடிக்கை வாழ்க்கை போல.

இடது கையில் இரண்டாயிரம்
சொச்ச விலை ஷூவுடன்

இருந்தேன் நானும் அந்த
இடத்தில் ஒரு தேநீருடன்.

ஒன்றிரண்டு நிமிடங்கள்
ஒருவாறாய் சிந்தித்தவன்

பர்சில் பளபளத்த
பல வண்ண நோட்டுக்களில்

ஒரு நூறைக் கொடுத்துவிட்டு வந்து
ஒரு வாரம் ஆன பின்னும்

குனிந்து அணியும்போதெல்லாம்
இன்னமும் உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது
இந்த இரண்டாயிரத்து சொச்ச விலை ஷூ.

மிக நல்ல கவிதையாக வந்திருக்க வேண்டிய இந்தக் கவிதையில், கவிதையின் முக்கிய பாத்திரமான எழுபது வயதுக் கிழவியின் மீதாக குவிய வேண்டிய வாசக கவனத்தை தனது இரண்டாயிரம் ரூபாய் மீதான ஷூவின் மீது நிறுத்திவிடுகிறார் கவிஞர். இந்தக் கவிதையை வாசிக்கும் வாசகன் தன்னை கவிஞனின் இடத்தில் நிறுத்தி அந்தக் கிழவியைப் பற்றி யோசிப்பதற்கான இடத்தை கவிதையில் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் இந்தக் கவிதையின் வாசகன் கிழவியை மறந்து கவிஞன் என்ன நினைக்கிறான் என்ற இடத்திற்கு வந்துவிடுகிறான். இதனை இன்னொரு விதமாகச் சொன்னால் கவிதையில் உருவாக்கிய காட்சியில் கவிஞன் நின்று கொண்டிருக்கிறார். தான் எடுக்கும் நிழற்படங்களில் தானும் இருக்க வேண்டும் என்று கேமராக்காரன் விரும்புவது எத்தனை அபத்தமாக அமைந்துவிடுமோ அதேபோலத்தான் கவிதைகளில் கவிஞன் நின்றுவிடுவதும்.

செல்வராஜ் ஜெகதீசன் தொடர்ந்து நேரடியான கவிதைகளையே முயன்றிருக்கிறார். கவிதையுலகுக்கு புதியவர்கள் கவிதையை வாசிப்பதில் இருக்கும் சிக்கல்களை இவரது கவிதைகளில் காண முடிவதில்லை. கவிதையின் நேரடித்தன்மை அல்லது எளிமைத்தன்மையை கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்; அவை கவிதைகளே அல்ல வெறும் காட்சிகள் மட்டுமே என்று விமர்சிப்பவர்களும் உண்டு.

கவிதை எளிமையை நோக்கி நகர்ந்து விட்டது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்படிச் சொல்பவர்கள் நேரடியான கவிதைகளை எதிர்பார்க்கிறார்கள். கவிதையில் நேரடித்தன்மையும் பூடகமும் சம அளவில் வரவேற்கப்பட வேண்டியதுதான். நேரடிக் காட்சிகளை கவிதையாக்கும் போது மிகுந்த கவனம் தேவை. கவிதைக் காட்சி வாசகனுள் என்ன தாக்கதை உண்டாக்குகிறது என்பதை வைத்தே அந்தக் கவிதை வெற்றியடைகிறது. வெறும் காட்சியை மட்டும் பதிவு செய்வதற்கு கவிஞன் அவசியமில்லை. ஜெகதீசன் நேரடிக் கவிதைகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார். வெறும் சொல்லாடல்களாக்கி பல கவிதைகளில் தோல்வியும் அடைந்திருக்கிறார்.

நின்று சலித்த
நீள் பயணமொன்றில்
மென்று விழுங்கிய
பார்வையோடு நீ
விட்டுச் சென்ற
இருக்கையில்
இன்னமும்
உன் சூடு.

இந்தக் கவிதை எனக்கு விருப்பமானதாக இருக்கிறது. இடம்,காலம் என்ற எந்தக் குறிப்புகளும் இல்லாத இந்த எளிமையான கவிதையில் ஒருவன்/ஒருத்தி இருக்கையை விட்டு எழுந்து சென்றிருக்கிறான்/ள். அந்தச் சூட்டை கவிதை சொல்லி உணர்கிறான். இதுதான் காட்சி.

வெறும் பேருந்து/தொடர்வண்டிப்பயணமாக மட்டுமே இந்தக் கவிதை இருக்க வேண்டியதில்லை. ஒரு தோல்வியடைந்த காதல் கவிதையாக நான் வாசிக்கிறேன்.

நின்று சலித்த/நீள் பயணமொன்றில்- சலிப்படைந்து நகர்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்வில்
மென்று விழுங்கிய/பார்வையோடு நீ - பிரிவின் துக்கத்தோடு நீ பிரிந்து சென்றாய்
விட்டுச் சென்ற/இருக்கையில்/இன்னமும்/உன் சூடு - உன் நினைவுகள் எனக்குள்ளாக இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது.

ஒரு நேரடிக் காட்சியை இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா என்று பல்வேறு கோணங்களில் கவிதையை அணுகுவது நல்ல வாசிப்பனுபவத்தை தரும் என்றாலும் வாசகன் தனது மனதுக்கு நெருக்கமான அனுபவத்தோடு கவிதையை அணுகுவதே மிகச் சிறந்த கவிதானுபவமாக அமைகிறது.

செல்வராஜ் ஜெகதீசன் தனது கவிதைகளில் தேர்ந்தெடுத்தவற்றை தொகுப்பாக வெளியிடுவதில் ஆர்வமாக இருக்கிறார். தனது முந்தைய மூன்று தொகுப்புகளிலிருந்து எண்பத்தாறு கவிதைகளை அனுப்பி வைத்திருந்தார். மூன்று ஆண்டுகளில் மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் ஒரு கவிஞர்- இத்தனை அவசரமாக தொகை நூலினை கொண்டுவருவதில் எனக்கு ஒப்புதலில்லை. இன்னும் தன் கவிதைகளை மேம்படுத்துவதற்கான அத்தனை வாய்ப்புகளையும் கொண்டிருக்கும் கவிஞன் சற்று பொறுத்திருக்கலாம் என்று தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.

அதே சமயம் தனது கவிதை சார்ந்து செல்வராஜ் ஜெகதீசன் இயங்கும் வேகம் மகிழ்ச்சியளிக்கக் கூடியது. சிற்றிதழ்களிலும், இணைய இதழ்களிலும் தனது கவிதைகளை தொடர்ந்து பிரசுரிக்கச் செய்கிறார். கவிதை தன்னைச் சார்ந்து இருப்பவனை எல்லா நேரத்திலும் துடிப்புடன் இருக்க அனுமதிப்பதில்லை. ஒருவனை சமயங்களில் உச்சபட்ச வேகத்துடன் வைத்திருக்கும் கவிதை அவனை இன்னொரு கணத்தில் மந்தமானவனாக்கிவிடுகிறது. ஆனால் ஜெகதீசனை கவிதை வேகத்துடனயே வைத்திருக்கிறது. இந்த வேகத்துடன் இன்னமும் செறிவான கவிதைகளை செல்வராஜ் ஜெகதீசன் எழுத வேண்டும் என்று விரும்புகிறேன்.
நன்றி: சொல்வனம்

Nov 17, 2010

நின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா

நவீன கவிதைகள் புரிவதில்லை என்று நண்பர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இன்றைய சூழலுக்கு, தமிழில் வெளிவரும் கவிதைகளை ‘நவீன கவிதைகள்’ என ஏதேனும் குறிப்பிட்ட கோட்பாடுகளுக்குள்ளாகவோ அல்லது வடிவத்திற்குள்ளாகவோ அடக்க முடியும் என்று தோன்றவில்லை.

ரசனையுடன் கவிதையை அவதானிக்கும் போது ‘பக்குவப்பட்ட, உண்மைத்தன்மையுடையன’ அல்லது ‘அலங்காரம் செய்யப்பட்ட சொற்க் கூட்டங்கள்’ என்று இரண்டு வகைகளுக்குள்ளாகவே கிட்டத்தட்ட அனைத்துக் கவிதைகளையும் மற்றும் கவிதை என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்டவைகளையும் உள்ளடக்கிவிடலாம். பக்குவப்பட்ட உண்மைத் தன்மையுடன் உள்ளனவற்றை கவிதை என்று தயக்கமில்லாமல் சொல்லிவிடலாம். மற்றவற்றை ‘கழிசடை’ என்று நிராகரித்துவிடலாம்.

இந்தத் தரம்பிரித்தல் பரிந்துரைகளின் மூலமாகவோ அல்லது மேதாவித்தனத்தாலோ செய்யக் கூடியதில்லை. தொடர்ந்து கவிதைகளை அணுகுவதாலேயே நிகழ முடியும். கவிதைகளை அணுகுதல் தொடர்ச்சியான வாசிப்பின் மூலமாக நிகழ வேண்டும். வாசிப்பின் மூலமாகவே வாசகன் உண்மையான கவிதைகளை நெருங்க முடியும். ஒரு கவிதை வாசகனுக்கு உண்மையான கவிதைகளை நெருங்குதல் எத்தனை முக்கியமானதோ அதே அளவுக்கு முக்கியமானது, போலிகளை விட்டு விலகுதலும்.

கவிதையுலகம், வாசகனுக்கும் தனக்கும் இடையில் இருக்கும் வெண் புகை மூட்டத்திற்கு அப்பாலிருக்கிறது. வாசகன் அந்த வெண்புகையைத் தாண்டி கவிதையை பார்க்க முயற்சிக்கிறான். ஒவ்வொரு வாசகனுக்கும் கவிதை தன் வேறுபட்ட வடிவங்களைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்த வடிவம் வாசகன் தன் மனதிற்குள் சேகரித்து வைத்திருக்கும் அனுபவங்களில் இருந்தே உருவாகிறது. கவிதைகள் பற்றிய கட்டுரைகளால் வாசகனுக்கும் கவிதையுலகத்திற்கும் இருக்கும் புகை மூட்டத்தை விலக்கிவிட முடியாது என்றாலும் ஒரு சிறு வெளிச்சத்தைப் பாய்ச்சி திசையை வேண்டுமானால் காட்டலாம்.

ஈரமேறிய மண்ணில் நின்று கொண்டிருப்பவனின் கால்களை நனைத்துச் செல்லும் ஓடையாக கவிதைகள் இருக்கின்றன. கவிதையின் மீதாக விருப்பம் இருப்பவர்கள் குனிந்து தங்களின் கைகளில் கொஞ்சம் கவிதைகளை அள்ளிக் கொள்கிறார்கள்.அவரவரின் கை வடிவத்திற்கு ஏற்ப அள்ளிய நீர் வடிவம் பெறுவதைப் போலவே, வாசகனின் அனுபவத்திற்கும் மனநிலைக்கும் ஏற்ப கவிதைகள் அவனுக்குள் வடிவம் பெறுகின்றன. தன்னை யாரும் அள்ளி எடுப்பதில்லை என்பதற்காக எந்தக் கவிதையும் நின்றுவிடுவதில்லை.

கவிதைப் புத்தகங்கள் விற்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு வருடமும் புதிய கவிஞர்கள் எழுதி வைத்திருக்கும் கவிதைகளோடு தங்களின் புத்தகக் கனவை சுமந்து திரிகிறார்கள். பதிப்பாளர்கள் கவிதைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கவிதை பற்றி யாராவது பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உலோகத் துணுக்குகளை ஈர்த்து தன் மீது ஒட்ட வைத்துக் கொள்ளும் காந்தமாகவே கவிதை இருந்து வருகிறது. கவிதைகளைப் பற்றி பேச எத்தனிக்கும் போதெல்லாம் கவிதையோடு ஒட்டிக் கொண்டு கிடக்கும் ஒரு உலோகத் துணுக்காக என்னைக் கற்பிதம் செய்து கொள்கிறேன்.

கவிதைகளைப் பிரித்து அர்த்தம் சொல்வதோ அல்லது கவிதைகளுக்கு விளக்கம் சொல்வதோ அந்தக் கவிதையின் எல்லைகளைச் சுருங்கச் செய்வதாகவே இருக்கும். இந்த ‘அருஞ்சொற்பொருள்’ கூறலை விடவும் வேறு விதத்தில் கவிதையை தரம் தாழ்த்திவிட முடியாது. கவிதையைப் பற்றி எழுதுவதால் என்ன பயன் என்று கேட்கத் தேவையில்லை. கவிதைகளைப் பற்றி அவ்வப்போது எழுதிய போதெல்லாம் குறைந்தபட்சம் நான் புரிந்து வைத்திருக்கும் ‘கவிதை’ என்பதிலிருந்து இன்னொரு பரிமாணத்தை நோக்கி நகர்வதற்கு அது உதவிகரமாகவே இருந்திருக்கிறது.

கவிதையில் புரியாத அம்சம் என்ன இருக்கிறது என்று பார்ப்பதை விடவும், கவிதையில் புரிந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது என்பதை அலசுவதுதான் பொருத்தமானதாக இருக்க முடியும்.

விரித்த என் பாயில்
மீதமிருந்த இடத்தில்
படுத்து ஒடுங்குகிறது குளிர்காலம்.
பூக்கள்
ஒரு புன்னகையின்
தொடக்கமா முடிவா
என்றுதான் நான் கேட்டேன்.
அது என்னைக் கட்டியிறுக்கி
காலோடு கால் பின்னிக் கொண்டது.
அடுப்பில் விறகு அணைந்திருக்கிறது
எழுப்பிவிடட்டுமா என்று கேட்டேன்.
கைகளையும் பின்னிக்கொண்டது.
இரவு தீர என்னோடு
உறங்கிக் கிடந்தது.
சூரியசாட்டையிலிருந்து
மஞ்சள் ரத்தம் பரவியபோது
ஒரு முத்தத்தை உடைக்கமுடியாமல்
இரண்டு உதடுகள் திணறின
காட்டுக்கு வெளியே.


பிரான்சிஸ் கிருபாவின் இந்தக் கவிதையை ஐந்து காட்சிகளாக பிரித்து வாசிக்கலாம்.

விரித்த என் பாயில்
மீதமிருந்த இடத்தில்
படுத்து ஒடுங்குகிறது குளிர்காலம்.

இந்த வரிகள் நேரடியானவை- குளிர்காலத்தில் பாயில் படுத்துக் கிடக்கிறான் கவிஞன். குளிர் எப்பொழுதும் விரவித்தான் கிடக்கும், ஆனால் தன்னுடன் பாயில் படுத்து ஒடுங்குகிறது என்ற வரிகள் கவிஞனின் தனிமையை பிரதிபலிக்கிறது. அவனுக்கு யாருமில்லை- அந்தப் பருவத்தைத் தவிர.

பூக்கள்
ஒரு புன்னகையின்
தொடக்கமா முடிவா
என்றுதான் நான் கேட்டேன்.
அது என்னைக் கட்டியிறுக்கி
காலோடு கால் பின்னிக் கொண்டது.

இது இரண்டாவது காட்சி. பூக்கள் பற்றி பேசும் போது எதற்காக குளிர்காலம் கவிதைசொல்லியின் கால்களோடு காலை வைத்து பின்னிக் கொள்கிறது என்பதற்கு நேரடியான விளக்கம் கவிதையில் இல்லை. குளிர்காலத்தையும் பூக்களையும் சம்பந்தப்படுத்தியும், குளிர்காலத்தையும் புன்னகையையும் சம்பந்தப்படுத்தியும் அல்லது வேறு இணைப்புகளோடும் கவிதையைப் பற்றி வாசகன் யோசிக்கத் துவங்குகிறான். இந்த யோசனையில் ஒரு விடையை அவன் கண்டுபிடித்துவிட்டால் இந்த வரிகள் வாசகனுக்கு நெருக்கமானதாக ஆகிவிடுகிறது.

ஒரு கவிதை வாசகனாக நான் இந்த வரிகளை இப்படி புரிந்து கொள்கிறேன்- குளிர்காலத்தில்,வெறும் பாயில், தனிமையில் படுத்துக்கிடக்கிறான் கவிஞன்.அது தனிமையில் நடுங்கிக் கிடப்பவனின் துக்ககரமான ஒரு இரவு. இந்த நேரத்தில் பூக்களைப் பற்றியும் அல்லது புன்னகையைப் பற்றியும் அவன் யோசிப்பதற்கான அவசியமே இல்லை. அந்தச் சூழலின் அழுத்தமே இந்த வரிகளில் வெளிப்படுத்தப் படுகிறது.

அடுப்பில் விறகு அணைந்திருக்கிறது
எழுப்பிவிடட்டுமா என்று கேட்டேன்.
கைகளையும் பின்னிக்கொண்டது.
இரவு தீர என்னோடு
உறங்கிக் கிடந்தது.


அடுப்பில் அணைந்திருக்கும் நெருப்பினை எழுப்பிவிடும் போது, வெம்மை சூழத் துவங்கும். வெப்பம் பரவினால் குளிர்காலம் அந்த இடத்தில் இருக்க முடியாது என்பதால் நெருப்பை எழுப்பிவிடுவானோ என்று குளிர்காலம் பயந்து கவிஞனின் கைகளை பின்னிக் கொள்கிறது. இது இந்தக் கவிதையில் இருக்கும் இன்னொரு நேரடிக் காட்சி.

சூரியசாட்டையிலிருந்து
மஞ்சள் ரத்தம் பரவியபோது

சூரியச் சாட்டை, மஞ்சள் ரத்தம் என்ற சொற்பிரயோகங்கள் விடியலை கவித்துவமாகச் சொல்வதாக இருக்கிறது. ‘மஞ்சள் ரத்தம்’ என்ற சொல்லை விட்டு விலகுவதற்கு கண நேரம் பிடித்தது.

ஒரு முத்தத்தை உடைக்கமுடியாமல்
இரண்டு உதடுகள் திணறின
காட்டுக்கு வெளியே.

இந்த வரிகள் கவிதையில் மீண்டும் வரும் புதிரான வரிகள்.

விடியும் போது முத்தத்தை உடைக்க முடியாமல் திணறுபவர்கள் யார்? இரண்டு உதடுகள் என்பது இரண்டு பேர்களின் உதடுகளா அல்லது யாருக்கோ முத்தமிட முயன்று தோற்றுக் கொண்டிருக்கும் ஒருவனின் இரண்டு உதடுகளா? அப்படியெனில் யார் யாருக்கு முத்தமிட முயன்று கொண்டிருக்கிறார்?

இரண்டு பேர்களின் உதடுகள் என்றால் யார் அந்த இரண்டு பேர்கள்? கவிஞனும் குளிர்காலமுமா? அல்லது வேறு யாரேனுமா? இந்தக் கவிதையில் வேறு யாருக்கும் இடமில்லை. அதனால் கவிஞனும் குளிர்காலமும் முத்தத்தை உடைக்க முயல்கிறார்கள். இது எளிமையான புரிதல். சிறு சீண்டலோடு ஒரு காட்சியாக கவிதை நின்றுவிடுகிறது.

வேறு மாதிரியாக யோசித்தால்- கவிஞன் குளிர்காலத்தை எதற்கு முத்தமிட வேண்டும்? குளிர்காலம் என்பதும் இங்கு வேறொரு மனிதன்தான். குளிர்காலம் என்பது பெண்ணாக இருக்கலாம் அல்லது ஆணாகவும் இருக்கலாம். இப்படி யோசித்தால் கவிதை மீண்டும் தொடங்குகிறது. கவிதையை மீண்டும் வாசித்தால் பூக்களுக்கும், நெருப்புக்கும் வேறு பொருள் வருகிறது.

அல்லது முற்றும் வேறுமாதிரியாக இன்னொரு வாசகன் யோசிக்கலாம்.

இப்பொழுது கவிதை வாசகனோடான தனது கண்ணாமூச்சி ஆட்டத்தை தொடங்குகிறது.
நன்றி: சொல்வனம்

Jul 21, 2010

ரமேஷ்-பிரேமின் "உப்பு" தொகுதியில் இருந்து இரண்டு கவிதைகள்

(1)
பறம்பு மலை
பேரரசர்களால் சுற்றி வளைக்கப்பட்டது

கபிலன்
குழந்தைகளை அள்ளிக் கொண்டு
ரகசிய மலைப்பாதை வழியாக வெளியேறுகிறான்

மலையுச்சிக் குடிலில்
பாரி
சிறைபட மறுத்து
கபிலன் விட்டுச் சென்ற
எழுத்தாணியால் தொண்டைக் குழியில்
குத்திக்கொள்கிறான்

தமிழ் நிலத்தின்
முதல் காவியம் எழுதப்படுகிறது

(2)
அழகு பற்றிய எல்லாவிதமாயைகளும் உடைந்துவிட்டன
அவளும் அவனும் மலங்கழிக்க
நிலவுக்குச் சென்ற அன்று

May 11, 2010

கலாப்ரியா கவிதைகள்: என் பார்வை


வாசிக்கத் துவங்கிய காலத்தில் வார இதழ்களிலும், நூலகத்தில் கிடைக்கும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியிருந்த கவிதைகளை படித்துவிட்டு என்னை ஒரு தீவிரமான கவிதைப் பிரியனாக சிலாகித்துக் கொண்டிருந்த காலகட்டத்தை நினைத்துக் கொள்கிறேன். அப்பொழுது புதிது புதிதாக நான் அறிந்து கொண்ட கவிஞர்களின் பெயர்களை பட்டியலிட்டு நண்பர்களிடத்தில் என்னை நிரூபித்துக் கொண்டிருந்தேன். கைவசத்தில் ஆத்மாநாம், பசுவய்யா, மனுஷ்ய புத்திரன் போன்ற வித்தியாசமான பெயர்கள் இருந்தால் சற்று அதிகமாகவே பயமுறுத்தலாம். அந்தப் பட்டியல் தயாரித்த போதே வித்தியாசமான பெயர் என்ற வரிசையில் கலாப்ரியா என்ற பெயர் அறிமுகம் ஆகியிருந்தது.

அந்தப் பள்ளிப் பருவத்தில் இருந்து கலாப்ரியா என்ற பெயர் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. கலாப்ரியா என்பவள் ஒரு அழகான இளம்பெண் என்ற நினைப்புதான் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது. அந்தக் கவிதைகளில் தெறிக்கும் பாலியல் குறியீடுகளும் ஈர்ப்புக்கு இன்னொரு காரணமாக இருந்தது. ஆனால் அந்தச் சமயத்தில் வாசித்திருந்த கலாப்ரியாவின் வெகு சில கவிதைகளில், யாவுமே ஆணின் பார்வையில் அமைந்த கவிதைகளாக இருந்தன. இது கலாப்ரியா ஆணா பெண்ணா என்ற குழப்ப நிலையிலேயே என்னை வைத்திருந்தது.

அந்த நாட்களில் கலாப்ரியாவின் சில கவிதைகளையே வாசித்திருந்தாலும் அவை அந்த வயதுக்கும், அந்த வயதில் கிடைத்திருந்த வாசிப்பனுவத்துக்கும் ஏற்ப சிலாகிக்கத்தக்க கவிதைகளாக இருந்த சாதாரண கவிதைகள்தான். அவரது முக்கியமான கவிதை எதையும் வாசித்திருக்கவில்லை. உதாரணத்திற்கு பின்வரும் கவிதையை குறிப்பிடலாம்.

அழகாயில்லாததால்
அவள் எனக்குத்
தங்கையாகிவிட்டாள்.

இப்பொழுது வாசிக்கும் போது இந்தக் கவிதை எந்த விதமான கவிதானுபவத்தையும் தருவதில்லை. இது ஒரு துணுக்கு மட்டுமே. ஆனால் பதினாறு வயது நிரம்பியவனுக்கு இது துள்ளலான கவிதையாக இருக்கும்- எனக்கு இருந்தது.

நான் படித்துக் கொண்டிருந்த கல்லூரியில் விழா ஒன்றிற்கு வந்திருந்த கவிஞர் ஒருவர் "கலாப்ரியாவை படிங்க" என்று சொன்னது ஞாபகம் இருக்கிறது. ஆனால் அப்பொழுது கவிதை குறித்த பெரிய தேடல் எதுவும் இருக்கவில்லை. அதனால் கலாப்ரியா கவிதைகளை தேட வேண்டும் என்ற உத்வேகம் எதுவும் எனக்குள் உருவாகியிருக்கவில்லை.அதற்கு பிறகாக சென்னை வந்து நவீன கவிதைகளை வாசிக்க ஆரம்பித்த போதுதான் கலாப்ரியாவின் கவிதைகள் பெருமளவில் வாசிக்கக் கிடைத்தது. முப்பது ஆண்டுகளில் இவர் எழுதியிருக்கும் கவிதைகளின் எண்ணிக்கையும், கவிதைகளில் தொட்டிருக்கும் தளங்களும் பரந்துபட்டது.

தமிழில் நவீன கவிதைகளை வாசிக்க ஆரம்பித்த போது அவை புரிவதில்லை என்ற கருத்து மெல்ல மண்டையில் ஏறிக் கொண்டிருந்தது. எந்தக் கவிதையும் தான் சொல்ல வந்ததை நேரடியாகப் பேசாமல் சுற்றி வளைத்து இருப்பதாகவே நினைப்பு உருவானது. அந்தச் சமயத்தில் உயிர்மை பதிப்பகத்தில் "நவீன கவிதை:ஓர் அறிமுகம்" என்ற சிறு புத்தகத்தை வெளியிட்டிருந்தார்கள். முக்கியமான தமிழ் கவிதாளுமைகளின் கவிதைகள் அந்தத் தொகுப்பில் இருந்தது.

என்னளவில் இந்தக் கவிதைகளுக்கான திறப்பு என கலாப்ரியாவின் விதி என்ற கவிதையை குறிப்பிடத் தோன்றுகிறது.

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.
எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை

நவீன கவிதைகள் என்பது புரியவில்லை என்ற முடிவுடன் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு இந்தக் கவிதை தரக் கூடிய வெளிச்சம்தான் இந்தக் கவிதையின் வெற்றி. இந்தக் கவிதை தன்னளவில் எந்தவிதமான உணர்ச்சியையும் கொண்டிருக்கவில்லை. இந்தக் கவிதையில் எந்தவிதமான புலம்பலும் நேரடியாக இல்லை. ஆனால் ஆழ்ந்த துக்கத்தை, உடனடி பதற்றத்தை வாசகனின் விரல்களுக்குள் பாய்ச்சுகிறது. இந்த 'அமைதியான உணர்ச்சி மாற்றம்தான் நவீன கவிதை' என இந்தக் கவிதையை வைத்து என்னளவில் ஒரு வரையறையை உருவாக்கிக் கொள்ள முடிந்தது. இதன் பிறகாகவே நான் வாசிக்க வேண்டிய கவிஞர்களின் பட்டியலை தயாரிக்க முடிந்தது. நவீன கவிதை என்ற பெருங்கடலின் சூட்சுமங்களை நோக்கி நகர்ந்தவனுக்கு சிக்கல்களை அவிழ்க்கும் சூத்திரங்கள் நிரம்பிய கவிதைகளை அறிமுகமாகத் துவங்கின.

கலாப்ரியாவின் கவிதைகளில் வாசகன் எதிர்நோக்கும் நேரடித் தன்மையும், எளிமையும்தான் இந்தக் கவிதைகளின் தனித்துவமாகத் தெரிகிறது. காட்சிகளையும், இயல்பான பேச்சினிடையே தெறித்த சொற்களையும் அவற்றின் துல்லியம் மாறாமல் கவிதைகளாக்கியிருக்கிறார். வைப்பாட்டி வீடு 'போய்த்' திரும்பும் நெல்லையப்ப முதலியார் ஈரக்காலுடன் நுழைவதும், மூன்றாம் வகுப்போடு படிப்பையும் தோழியையும் பிரிந்த தக்ஷிணாமூர்த்தி எழுத்துக் கூட்டி தந்திப்பேப்பர் பார்க்கும் சலூன் கடை வாசலும் பிசிறில்லாமல் கவிதைகளாகியிருக்கிறது. தமிழில் நவீன கவிதைகள் இறுக்கத்திலிருந்து இன்றைய எளிமையை நோக்கி மிக மெதுவாகவே நகர்ந்து வந்திருக்கின்றன. தமிழ்க் கவிதையின் இந்தப் பயணத்திற்கு- எளிமை நோக்கிய பயணத்திற்கு கலாப்ரியா தன் கவித்தோள்களை கொடுத்திருக்கிறார் என்பதற்கான சாட்சியங்கள்தான் அவரது கவிதைகள்.


சொன்னான், "நெடுநாளாய் ஒரு கவிதைக்காய் காத்திருக்கிறதாய்-" என்ற ஒரு வரியை எழுதியிருக்கிறார். அனுபவங்களை கவிதையாக்குவதற்கான மனநிலை அமையாமல் கவிதைக்காக காத்திருப்பதும் உண்டு, கவிதைக்கணங்களை அனுபவிக்காது 'எதையாவது' கவிதை ஆக்கிவிடுவதற்காகக் காத்திருப்பதும் உண்டு. கலாப்ரியாவின் இந்த காத்திருப்பை முதல் வகையானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது வகை காத்திருப்பிற்கு காரணம் அனுபவ வறட்சி. இந்த அனுபவ வறட்சிதான் கவிதை வருவதற்காக இரவு முழுவதும் பேனா மூடியை திறந்து வைத்து காத்திருக்க வேண்டிய நிர்பந்தத்தை சில கவிஞர்களுக்கு கொடுக்கிறது. ஆனால் அனுபவமின்றி கவிதையின் வருகைக்காக காத்திருப்பதற்கான தடயம் எதுவும் கலாப்ரியா கவிதைகளில் தென்படுவதில்லை.

அன்றாட வாழ்வில் எதிர் கொள்ளும் மின்னல் கணங்களில் இருந்தே கலாப்ரியாவின் ஒவ்வொரு கவிதையும் எழுகின்றன. அது பிள்ளைகளை வசைபாடும் அம்மை என்றாலும் சரி, ஞாயிறு தாம்பத்யத்தை நெருங்கி வந்து பார்க்கும் மழையென்றாலும் சரி. சோமசுந்தரத்தின் நிகழ்கணங்களில் இருந்து வந்துதான் கலாப்ரியாவின் கவிதைக்குள்ளாக அமர்கிறார்கள். நினைவின் தாழ்வாரங்களை வாசித்துவிட்டு அவரது கவிதைகளை வாசிக்கும் போது அவரது வாழ்வு சார்ந்த அனுபவங்களையே கவிதைகளாக்கியிருப்பதை கவனிக்கலாம். நினைவின் தாழ்வாரங்களில் கலாப்ரியா என்ற கவிஞனுக்கு இடம் இல்லை. அங்கு சோமசுந்தரம் மட்டுந்தான் வாழ்கிறார். மாறாக கலாப்ரியாவின் கவிதைகளில் சோமசுந்தரத்துக்கு அதிகபட்ச இடத்தை கலாப்ரியா கொடுத்திருக்கிறார். தி.ஜானகிராமப் பிராமணத்திகளின் இடுப்புச் சதை பார்ப்பதும், குழாயடிச் சண்டையில் கறுத்த முண்டையின் மயிர்ப்பிடி உலுக்கலில் முலைதெறிக்க நின்ற-சிவப்பு மூளிப் பறச்சியைப் பார்ப்பதும் சோமசுந்தரம்தான். அந்தப் பார்வையைத்தான் கலாப்ரியா கவிதைகளாக்கியிருக்கிறார்.

கவிதையை கவிதையாக மட்டுமே வாசிப்பதா என்பதும் அல்லது கவிஞனின் ஊடாகவே அந்தக் கவிதையை வாசிக்க வேண்டுமா என்று யோசித்ததுண்டு. விமர்சனக் கோட்பாடாகச் சொன்னால் கவிதையை கவிதையாக மட்டுமே வாசிப்பது என்பதை Close Reading என்கிறார்கள். இந்த வாசிப்பில் கவிஞனுக்கு இடம் இல்லை.கவிதையில் 'இருப்பதை' மட்டுமே கவனிக்கும் போது வாசகனுக்கும் கவிதைக்கும் மட்டுமே நேரடித் தொடர்பு உருவாகிறது.
கவிதையை வாசிக்கும் போது கவிஞனின் உணர்ச்சி,மனநிலை போன்றவற்றை படைப்பின் வழியாகத் தேடுதல் என்பது இன்னொரு வாசிப்பு முறை. இப்படி கவிஞனோடு சேர்த்து கவிதையை வாசிப்பது என்பதில் வாசகன் உணர்வுப் பூர்வமாக(Emotional) படைப்பை அணுகக் கூடும். முதலில் சொன்ன Close Reading -இலும் உணர்வுப் பூர்வமாக படைப்பை அணுக முடியும் என்றாலும், இரண்டாவதில்தான் உணர்ச்சிப்பூர்வ அணுகலுக்கு வாய்ப்புகள் அதிகம். அப்படி உணர்வுப் பூர்வமாக படைப்பை அணுகும் போது, கவிதை என்ன சொல்ல வருகிறது என்பதனை துல்லியமாக நிர்ணயிக்க முடியாமல் போய்விடலாம். இந்தத் துல்லியமில்லாத வாசிப்பினை உணர்வுப்பூர்வ பிழை(Affective Fallacy) எனக் கோட்பாடுகள் குறிக்கின்றன.

இரண்டில் எந்த வகை வாசிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் பெரிய குழப்பம் தேவையில்லை. அது தனிப்பட்ட வாசகனின் விருப்பம் என்பதுதான் என் முடிவு. எனக்கு அமைப்பியல்,கோட்பாடுகள் ரீதியாக கவிதையை அணுகுவதில் விருப்பமில்லை. துல்லியத் தன்மை இருக்க வேண்டும் என்று வாதிடுவதற்கு கவிதை என்பது அறிவியல் இல்லை. மனதோடு கவிதை நிகழ்த்தும் அனுபவ விளையாட்டுதான் பிரதானமாகப் படுகிறது.

கலாப்ரியா என்ற கவிஞரோடு பழகியிருக்கிறேன் என்பதால் அவரது கவிதைகளில் கலாப்ரியாவையும், சோமசுந்தரத்தையும் பார்க்க முயற்சிக்கிறேன். நான் பழகியிராத ஆத்மாநாமும், ஞானக்கூத்தனும், கல்யாண்ஜியும் எழுதிய கவிதைகளில் நான் அவர்களைத் தேடுவதில்லை. அங்கு அந்தக் கவிதைகளை மட்டுமே உள்வாங்குகிறேன். அதுதான் சாத்தியமும் கூட.

கலாப்ரியாவை தேடும் மனம் கலாப்ரியோவோடு சேர்த்து கவிதையை வாசிக்கும் போது ஒரு வாசிப்பனுபவத்தையும், கலாப்ரியாவை விடுத்து கவிதையை மட்டும் வாசிக்கும் போது இன்னொரு வாசிப்பனுபவத்தையும் அடைகிறது. எந்த விமர்சனக் கோட்பாடுகளையும் தவிர்த்துவிட்டு கவிதையின் ரசிகனாக எனக்கு இந்த இரண்டு அனுபவங்களுமே சந்தோஷம் அளிப்பதாகவே இருக்கின்றன. இந்த இரண்டு வித அனுபவத்தைப் பெறுவதும் கூட கலாப்ரியாவின் கவிதையில் இருக்கும் நேரடித்தன்மையால்தான் சாத்தியமாகியிருக்கிறது என்று தோன்றுகிறது.

கலாப்ரியாவின் கவிதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது பல கவிதைகளில் பழைய வாசம் இருப்பதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. உதாரணமாகக் கவிதை சொல்லியோடு உறவு கொள்வதற்கு குழந்தையை வைத்திருக்கும் பிச்சைக்காரி/விபச்சாரி அவ்வப்போது கவிதைகளில் தென்படுகிறாள்.

நமது மனம் கைக்குழந்தையுடையவளை பரிதாபமான அல்லது இரக்கம் காட்டப்படவேண்டிய ஜீவனாக கட்டமைத்திருக்கிறது. அவளை காமத்தோடு பார்ப்பதும் கூட பாவமான செயல் என்று மனம் சொல்கிறது.

தன் காமத்தை வெல்ல வழியில்லாதவனாக, எந்தப் பெண் என்றாலும் உறவுக்கு தயார் என்னும் மனநிலையில் கவிதை சொல்லி இருக்கிறான் என்னும்படியான தொனியில் கவிதையை வாசிக்கும் போது இரண்டு நுட்பங்கள் புலப்படுகிறது. ஒன்று, தன் காமத்தின் அளவினை கவிதையில் வெளிப்படுத்த கவிஞன் கொடுக்கும் அழுத்தம் என்று சொல்லலாம் அல்லது (இரண்டாவதாக) செண்டிமெண்டலாக தன் பார்வையாளனை தன்னை நோக்கி திரும்ப வைக்கும் வெகுஜன சினிமா அல்லது வெகுஜன பத்திரிக்கைக் கதையின் நுட்பமாக ஒப்பிடலாம். இதைக் குறிப்பிடும் போது, தன்னை வெகுஜனத் தளங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள விரும்பாத கவிதை ஆளுமை கலாப்ரியா என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. வெகுஜன ஊடகத்தின் மீது விருப்பம் கொண்டிருந்த சோமசுந்தரம், அந்த ஊடகத்தின் சில குணாதிசயங்களை தன்னை அறியாமலேயே தனக்குள் உள்வாங்கிக் கொண்டதன் விளைவே கலாப்ரியாவின் கவிதையில் தென்படும் அதீத அழகியலும், இரக்கம் வேண்டி நிற்கும் கவிதைகளும் என எடுத்துக் கொள்ள முடிகிறது.

கலாப்ரியாவின் மொத்தக் கவிதைளின் வடிவம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது. வடிவம் என்பது கவிதை சொல்லும் பாங்கு(Pattern). வடிவத்தில் வெள்ளம் தொகுப்பில் தொடங்கி வனம்புகுதல் தொகுப்பின் வரையிலும் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கவில்லை. மொத்தத் தொகுப்பாக வாசிக்கும் போது ஒரே வடிவக் கவிதைகளில் உண்டாகக் கூடிய சலிப்பு இந்தக் கவிதைகளில் ஒரு சில இடங்களில் தோன்றினாலும், இந்தக் கவிதைகளின் பெரும் பலமாக இருப்பது தொடர்ந்து புதுப்பிக்கப்படும் கவிதையின் காட்சிகள்தான். இந்த புதுப்பித்தல் வாசகனை உற்சாகமான மனநிலையில் நிறுத்தும் பொறுப்பினை எடுத்துக் கொள்கின்றன. இந்த புதுப்பித்தல்தான் கலாப்ரியாவை தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்திருக்கிறது எனவும் நம்புகிறேன்.

ஒரே வடிவந்தான் என்றாலும் இந்தக் கவிதைகளுக்குள்ளாக நிகழ்த்தப்பட்டிருக்கும் புதுமைகளை தொடர்ந்து அவதானிக்க முடிகிறது. ஒரு கவிதையின் தலைப்பு π=22/7. இன்னொரு கவிதையின் துவக்கத்தில் 6 மீட்டர் நீளமுள்ள கயிற்றால் கட்டப்பட்ட மாடு மேயக்கூடிய பரப்பினைக் கண்டுபிடிக்கச் சொல்லும் ஒரு வினாவும் அதைத் தொடர்ந்த கணக்குப் போடாமல் அடிவாங்கி எஸ்.எஸ்.எல்.சி முடிக்கும் சங்கரனின் வாழ்க்கை கவிதையாக்கப்பட்டிருக்கிறது.

அகம் சுற்றியே நிகழ்ந்த தமிழ்க் கவிதைகளை புறத்திற்கு எடுத்து வந்த முக்கியமான ஆளுமை கலாப்ரியா. கவிதைகளை தன்னில் மட்டுமே நிகழ்த்தாமல் பொதுவில் நிகழ்த்துகிறார் . இவரது கவிதைகளில் பேருந்து நிலையம்,ஆற்றோரம், வாய்க்கால் வரப்பு, ரயிலடிகள் என காட்சிகள் இடத்தையும் உணர்ச்சியையும் தொடர்ந்து இடம் மாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கவிதைகளில் சாமானிய, நடுத்தர மனிதன் கடக்கும் சகல இடங்களும், சகல உணர்ச்சிகளும், எதிர்கொள்ளும் சகல நிகழ்வுகளும் கவிதையாக்கப்படுகின்றன. கலாப்ரியா நிகழ்த்திய இந்த அக/புற மாற்றம் நவீன கவிதையின் பயணத்தில் மிக முக்கிய இடம் பெறுகிறது.

தொண்ணூறுகளின் மத்திய பகுதிக்குப் பிறகாக தமிழ் நவீன கவிதையில் அதன் வடிவம், உள்ளடக்கம், இயங்குதளம் என பலவற்றில் நிகழ்ந்த பெரும் பாய்ச்சலை கலாப்ரியாவின் கவிதைகளில் காண முடியவில்லை என்பது கவிதை வாசகர்களுக்கு மிகப் பெரிய இழப்பு. தமிழ்க் கவிதையின் தொடக்கம் முதல் இன்றைய தினம் வரை காலவரிசையில் வாசிக்கும் வாசகனுக்கு கலாப்ரியா ஒரு மிகப் பெரிய பொக்கிஷம். எதிர்திசையில், அதாவது இன்றைய கவிதைகளில் இருந்து பின்னோக்கி நகர்பவனுக்கு கலாப்ரியாவின் கவிதைகள் தரும் தாக்கம் என்ன என்பது விவாதிக்கப்பட வேண்டியது.

கவிதை கலாப்ரியாவைத் தாண்டிச் சென்றிருக்கிறது. அதேசமயம் தமிழ்க் கவிதையின் வரலாற்றில் கலாப்ரியா என்னும் கவிதாளுமைக்கான இடம் என்பது நிராகரிக்கப்பட முடியாத இடம்.