Apr 21, 2017

தையல் ஊசி விற்பவன்

நான்கு வழிச் சாலைகள் வந்த பிறகு இந்தியர்களின் வாழ்க்கைப் போக்கே மாறிவிட்டது. கிபி இரண்டாயிரம் வரைக்கும் கூட சாலை வழியாக இருநூறு கிலோமீட்டர் என்பதும் பெரும் தொலைவு. விடிய விடிய பயணிக்க வேண்டும். இரு வழிச் சாலைகளில் நமக்கு எதிரில் வாகனங்கள் வரும் போது சற்று வேகத்தைக் குறைத்து ஒதுங்கி வழி விட வேண்டும். ஊர்களைக் கடக்கும் போது யாராவது குறுக்கே வருவார்கள். கால்நடைகள் சாலையைக் கடக்கும். நாய்கள் குறுக்குமறுக்குமாக ஓடும். வேகத்தைக் குறைக்க வேண்டும். 

இப்பொழுதெல்லாம் அப்படியில்லை. கிட்டத்தட்ட வேகம் குறையாமலே ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊரை அடைந்துவிட முடிகிறது. வழுக்கும் சாலைகளில் தொலைவுகள் சுருங்கிவிட்டன. எங்கள் தேசத்தின் வளர்ச்சி என்று நாம் சொல்லிக் கொள்வதற்கு சாலைகள் அடையாளக் குறிகளாக மாறியிருக்கின்றன.

இது ஒரு கோணம். 

இந்த வளர்ச்சியை அடைவதற்குத்தானே இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் நிலங்களை இழந்திருக்கிறார்கள்? பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது? பல நூறு ஊர்களுக்கு நடுவில் கறுப்பு எல்லைக் கோடுகளாக சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளும் முதியவர்களும் கால்நடைகளும் கடக்கவே முடியாத பெரும் பாம்புகளாக அவை ஊர்களுக்கு நடுவில் படுத்திருக்கின்றன. தினசரி தேசிய நெடுஞ்சாலைகளில் அடிபட்டுச் சாகும் நாய்களின் எண்ணிக்கை மட்டுமே பல்லாயிரக்கணக்கில் இருக்கும். இவையெல்லாம் வலி இல்லையா? பதிவு செய்யப்படாத வலிகள்.

வளர்ச்சி என்று ஒரு பக்கம் இருந்தால் அதற்கான இழப்புகள் இன்னொரு பக்கம் இருக்கும். யவனிகா ஸ்ரீராமின் கவிதைகள் அந்த இழப்புகளைச் சுட்டிக்காட்டக் கூடியவை. நம்மைச் சுற்றிலும் பின்னப்படும் நுண்ணரசியலைப் பேசக் கூடியவை. உலகமயமாதலும் வணிகமயமாதலும் சாமானியர்கள் வாழ்வில் நிகழ்த்துகின்ற பகடையாட்டங்களை தனது கவிதை மொழியின் வழியாக தொடர்ந்து பதிவு செய்யும் கவிஞர் யவனிகாவின் இந்தக் கவிதையும் அத்தகைய நுட்பம் மிக்கது.


பழைய, செப்பனிடப்பட்ட பேருந்து ஒன்று காட்சிப்படுத்தப்படும் கவிதையை ஒரு முறை வாசிக்கலாம்-

பலமுறை செப்பனிடப்பட்ட பழைய பேருந்தினுள்
அதன் கண்ணாடி சன்னல்கள் தகரங்கள்
மற்றும் இருக்கைகளும் நடுங்க
எளிய மக்களுடன் குறைந்த கட்டணத்தில் பயணிப்பது
ஒரு நான்குவழிச் சாலையின் அழகிற்கு
சற்றுப் பொருத்தமில்லாததுதான்
தனது நிறுத்தத்தில் இறங்க அக்கிழவர்
கால்களில் வலுவற்று இருந்தார்
அவரின் நிலம் கைமாறி இருக்கலாம்
இரண்டு ரூபாய்க்கு ஏழு தையல் ஊசிகளை
விற்பவன் உற்சாகமாக இறங்கிப் போயிருந்தான்
இன்னுமிருக்கிறதா கிழிந்த துணிகள்
பழக்கூடைகள் பள்ளிச் சிறார்கள்
தலை வறண்ட பெண்கள் இடையே
ஏதோ நடத்துனர் தன் கால்களால் பேருந்தை
உந்தி ஓட்டுபவர் போல சிரமமாகத் தெரிகிறார்
எத்தனைமுறை செப்பனிடப்பட்டாலும் அப்பேருந்து
நான்குவழிச் சாலையின் மேம்பாலத்தில்
தோன்றும்போது இருபுறமும்
தொலைந்துபோன தன் கிராமத்தையேதான்
திடுக்கிட்டுத் தேடிச் செல்லும் போல
சாலையின் நடுவே நீளமாக வைத்த அரளிகள்
இளம்சிவப்பில் பூத்திருக்கின்றன.

அதுவொரு பழைய பேருந்து. பலமுறை செப்பனிட்டிருக்கிறார்கள். எவ்வளவுதான் செப்பனிட்டாலும் கருகருவென நீண்டிருக்கும் அழகிய நான்கு வழிச்சாலைக்கும் அந்தப் பேருந்துக்கும் துளி கூட பொருத்தமில்லாமல் இருக்கிறது. அந்தப் பேருந்திலிருந்து வலுவில்லாமல் இறங்கிச் செல்கிறார் ஒரு முதியவர். ஒருவேளை தமது நிலத்தை விற்ற துக்கத்தில் அவர் இருக்கக் கூடும். அதே பேருந்திலிருந்துதான் ஊசி விற்கிறவன் ஒருவன் உற்சாகமாக இறங்கிச் செல்கிறான் - இடையில் ‘ஏம்ப்பா நாமதான் வளர்ந்த நாடாச்சே....இங்கே இன்னமும் பழைய துணிகள் இருக்கின்றனவா?’ என்று கவிஞனின் நக்கல். அந்தப் பேருந்தின் கூட்டத்தில் நடத்துனர் வெகு சிரமப்படுகிறார். ஆனால் பாருங்கள்! எவ்வளவுதான் செப்பனிட்டு நான்கு வழிச்சாலைக்கு ஏற்ற பேருந்தாக மாற்ற முயன்றாலும் தனது பழைய பாதையையும் தொலைந்து போன கிராமத்தையுமேதான் இந்தப் பேருந்து தேடிக் கொண்டிருக்கிறது.

கவிதையின் அரசியலை எளிமைப்படுத்தி புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். 

நான்கு வழிச்சாலைகளை அமைத்து கார்போரேட் நிறுவனங்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும், அவர்களின் சொகுசுக் கார்களுக்கும், சரக்கு வண்டிகளுக்கும் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தாலும் கூட இந்த தேசத்தில் நிலத்தை விற்றுக் கொண்டிருக்கும் முதியவர்களும், இரண்டு ரூபாய்க்கு ஏழு ஊசிகளை விற்றுக் கொண்டிருப்பவர்களும், தலை வறண்ட பெண்களும், பழக்கூடையைச் சுமந்து திரிகிறவர்களும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். பகட்டான வளர்ச்சி மேக்கப் வெளிச்சத்தில் சாமானியர்கள் மறைக்கப்பட்டுவிடுகிறார்கள். எளிய மனிதர்களின் அவலங்கள் வளர்ச்சி பிம்பத்தின் நிழலில் ஒளிந்து கொண்டாலும் கூட அவர்கள்தான் இந்த தேசத்தின் நிதர்சனம். இல்லையா? இன்னமும் சாமானிய மக்கள் வறுமையில் சிக்குண்டுதான் கிடக்கிறார்கள். சாலைகள், மால்கள், ஒளி கூசும் சோடியம் விளக்குகள், கணினி நிறுவனங்கள், ஜீன்ஸ், டீஷர்ட் என எல்லாவற்றையும் தாண்டி இந்த மண்ணின் மனிதர்களைச் சுட்டிக் காட்டுவதாக இக்கவிதையை எடுத்துக் கொள்ளலாம். அவர்களைப் பார்க்கச் சொல்லி வாசகனைக் கோருகிறது யவனிகாவின் இந்தக் கவிதை.

எல்லாவற்றையும் மறைத்துவிட்டு சாலையின் நடுவில் இளஞ்சிவப்பில் பூத்திருக்கும் அரளியைப் பார்த்து பூரித்துக் கொண்டிருக்கிறோம்.

Apr 17, 2017

தற்கொலையைப் பரிசளிக்கும் விஞ்ஞானிகள்

புளூட்டோ கோள் கண்டுபிடிக்கப்பட்ட தினத்திலிருந்து ‘அது கோளே கிடையாது’ என்று அறிவிக்கப்பட்ட தினம் வரைக்கும் ஒரு முறை கூட அது சூரியனை சுற்றி முடிக்கவில்லை என்ற குறிப்பு கண்ணில்பட்டது. புளூட்டோ சூரியனைச் சுற்றி வர 248 ஆண்டுகள் ஆகும். 1930 ஆண்டு கண்டுபிடித்து 2006 இல் ‘உன்னை கோள்ன்னு சொல்ல முடியாதுப்பா’ என்று அறிவித்துவிட்டார்கள். அமைச்சர் பதவி கொடுப்பதாகச் சொல்லிவிட்டு பதவியேற்பதற்கு முன்பாகவே திருப்பி அனுப்புவது போலத்தான். ஆனால் புளூட்டோ இதையெல்லாம் கண்டுகொள்ளவா போகிறது? ‘நீங்க என்னவோ சொல்லிட்டு போங்க...நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்க்கிறேன்’ என்று அதுவாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது.

ஒரே செய்திதான். ஆனால் இந்தச் செய்தியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பார்க்கக் கூடும்.  

வீட்டுப்பாடத்தை
பாதியில் கைவிட்டு
போட்டது போட்டபடி
உறங்கிக் கொண்டிருக்கிறாள் சிறுமகள்

அவள் விரித்துவைத்த பக்கத்தில்
படபடக்கிறது சூரியக்குடும்பம்

யா.....ருப்பா அத வெலக்குனது
பா....வம்பா புளூட்டோ

அவளது தழுதழுப்பின் வார்த்தைகள்
இந்த அறையில்தான் உறைந்திருக்கின்றன

தனது கடைக்குட்டியை இழந்த சோகத்தில்
தனக்குத்தானே தீ வைத்துக்கொள்ள
திகுதிகுவென வளர்கிறது தீ.

தனது தாயைக் காப்பாற்றச் சொல்லிக்
கதறியபடியே சுற்றிச் சுற்றி வருகின்றன
மீதி எட்டுப்பிள்ளைகளும்.

- லிபி ஆரண்யாவின் உபரி வடைகளின் நகரம் தொகுப்பிலிருந்து

வீட்டுப்பாடத்தை எழுதிக் கொண்டிருக்கும் போதே உறங்கிப் போன சிறுமகள் புளூட்டோவின் மீது பரிதாபப்படுகிறாள். ‘அதை ஏன் கோள் இல்லைன்னு சொன்னாங்க’ என்று தூக்கத்திலேயே தனது வருத்தத்தை வெளிப்படுத்துகிறாள். அது குழந்தையின் மனம். அப்படித்தான் இருக்கும்.

இதே செய்தியைக் கவிஞனின் மனம் Fantasy கவிதையாக்குகிறது. அதைத் துருத்தல் இல்லாமல் செய்வதுதான் தனிச்சிறப்பு.

சூரியனுக்கு ஒன்பது குழந்தைகள். அவற்றில் ஒன்றை இழந்துவிடுகிறது. தனது கடைக்குட்டியை இழந்துவிட்ட சோகத்தில் சூரியன் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு எரிகிறது. ‘அய்யோ எங்க அம்மாவைக் காப்பாத்துங்க’ என்று மீதமுள்ள எட்டுக் குழந்தைகளும் கதறிச் சுற்றி வருகிறார்கள்.

புரிந்து கொள்ள எளிது என்றாலும் மனதில் சித்திரமாக்கி ரசிப்பதற்கு ஏற்ற சுவாரஸியமான கவிதை இது.


கவிதை நேரடியானதாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. அது தனது வாசகனை யோசிக்கச் செய்யலாம். பெரும்பாலும் Fantasy கவிதைகளிலிருந்து அவன் தனக்கான சித்திரம் ஒன்றை உருவாக்குகிறான். அவன் சுயமாக உருவாக்கிக் கொள்ளும் அந்த உலகிற்குள் சில கணங்கள் பயணித்து வெளியேறுகிறான். லிபி ஆரண்யாவின் இக்கவிதை அந்தப் பயணத்தை மிக இயல்பாக சாத்தியப்படுத்துகிறது. சூரிய உலகிற்குள் வாசகனை உள்ளிழுத்து வெளியே அனுப்புகிறது.  

நேர்த்தியாக இத்தகைய கண்ணாமூச்சி விளையாட்டுக்களை நிகழ்த்தும் கவிதைகள் ஒரு புதுவெளியை வாசகனுக்கு அறிமுகப்படுத்துகின்றன. அப்படியான வெளிகளை உண்டாக்குவதில் லிபி வித்தகர்.
                              
                                                                    ***

கல்லூரியொன்றில் முதலாமாண்டு மாணவர்களுக்கு நவீன கவிதையை அறிமுகம் செய்யும்படியாக சிறு தொகுப்பை உருவாக்கித் தரும் பணியைத் தந்திருக்கிறார்கள். கவிதை, கவிதை குறித்தான சிறு அறிமுகம், கவிஞர் பற்றிய குறிப்பு என்றிருக்க வேண்டும் என்றார்கள். தமிழில் பல நூறு கவிஞர்கள் இருக்கிறார்கள். பதினைந்து பேர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது சிரமமான காரியம். அதனாலேயே தாமதப்படுத்திக் கொண்டிருந்தேன். நேற்று பயணத்தின் போது திடீரென்று தோன்றியது-  எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல் வெகு அமைதியாக கவிதையுலகில் அற்புதமாக இயங்கிக் கொண்டிருக்கிற கவிஞர்கள் தமிழில் இருக்கிறார்கள். கண்டராதித்தன், லிபி ஆரண்யா, ஸ்ரீ நேசன் உள்ளிட்ட கவிஞர்களை மனதில் மனதில் வைத்திருக்கிறேன். அவர்களின் எளிமையான கவிதைகளைத் தொகுத்து மாணவர்களுக்குக் கொடுத்துவிடலாம்.

Nov 17, 2016

ஸ்ரீமான் ஷண்முகசுந்தரம்

வித்வான் ஷண்முகசுந்தரம் ஒரு தவில் கலைஞர்
அவர் எல்லோராலும் முட்டாளாக 
மதிக்கப்படுபவரென்றால் அது மிகையாகாது
குறிப்பாக அவரது மூத்த சகோதரர் பாலண்ணன்
எவ்வளவு நேர்த்தியாக அடித்தாலும்
ஒரு அடி பிந்திவிடுவது ஷண்முகத்தின் வழக்கம்
அப்போதெல்லாம் பாலண்ணன் லாவகமாக
நாதஸ்வரத்தில் ஒரு இடியிடிப்பார்
சிலர் இவரை ‘தனித்தவில் கலைஞர்’ என்றும்
நகைச்சுவையாகக் கூறுவதுண்டு
அன்று மாவட்ட எல்லையில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி
வாசித்துக் கொண்டிருந்த நூறு வித்வான்களில் 
ஸ்ரீமான் ஷண்முகசுந்தரம் 
ஒன்று, முதலாக இருந்தார்
அல்லது 
கடைசியாக இருந்தார்
நிகழ்ச்சி முடிந்து
செம கடுப்பில்
அவரை அம்போவென கைவிட்டுக் கிளம்பினர்
தான் ஒரு முட்டாள் என்பதையறியாத
ஷண்முகசுந்தரம்
உண்மையாகவே தனித் தவிலடித்தபடி
நெடுஞ்சாலையில் நடக்கிறார்
டாரஸ் லாரியில் வந்த கடவுள்
நிறுத்தி 
வருகிறீர்களா என்று கேட்டார்
அப்போது
ஸ்ரீமான் ஷண்முகசுந்தரத்திற்கு பெருமை பிடிபடவில்லை.

சமீபத்தில் வாசித்த கவிதைகளில் வெகுவாக தொந்தரவு செய்த கவிதை இது. கவிஞர் கண்டராதித்தன் எழுதியிருக்கிறார்.

     (கவிஞர் கண்டராதித்தன்)

இரவில் கவிதையை உள்ளுக்குள் போட்டுக் குதப்பிக் கொண்டிருந்தேன். மனம் எங்கெங்கோ அலைந்து திரிந்தது. ஷண்முகசுந்தரத்திற்கு ஒரு உருவம் உண்டானது. பாலண்ணன், வரவேற்பு நிகழ்ச்சி, சுற்றுப்புறம், நூறு கலைஞர்கள், லாரியில் வந்த கடவுள், லாரியின் நிறம் என்று எல்லாமுமாகச் சேர்ந்து மனதுக்குள் சிறு நாடகத்தை உருவாக்குகினார்கள்.

சமீபத்தில் ஒரு நண்பர் ‘வாசிப்புக்கும் படம் பார்ப்பதற்குமான வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா?’ என்றார். 

இருக்கிறது. 

திரைப்படம் பார்ப்பதற்கும் வாசிப்பதற்குமான பெருத்த வித்தியாசம் என்றால் மனதின் அலைதலைச் சொல்லலாம். திரை நமது மொத்த கவனக் குவியத்தையும் தன்னை நோக்கி இழுத்துப் பிடித்துக் கொள்கிறது. திரையில் உயரமாக, கறுத்த, வேஷ்டியை மடித்துக் கட்டிய ஒருவர் ஷண்முகசுந்தரமாக வந்தால் மனம் அவரோடு ஒட்டிக் கொள்ளும். வேறு யாரையும் நினைத்துக் கூட பார்ப்பதில்லை. காட்சியில் சாலையின் இருமருங்கிலும் பசுமை தென்பட்டால் அப்படியே மனம் ஏற்றுக் கொள்கிறது. காய்ந்த பூமியில் இந்த வரவேற்பு நிகழ்ந்தால் எப்படியிருந்திருக்கும் என்று கூட நினைப்பதில்லை. ஆனால் வாசிப்பு அப்படியில்லை. ஒவ்வொரு வரிக்குமிடையில் மனம் கிளறப்படுகிறது. வாசிக்கிறவனை யோசிக்கச் செய்கிறது. வாசிப்பின் பெரும்பலம் என்று இதைத்தான் சொல்ல வேண்டும். பாத்திரம், காட்சி என ஒவ்வொன்றையும் வாசகனின் ஆழ்மனமே முடிவு செய்கிறது. தனது கற்பனைக்கு ஏற்ப ஒவ்வொன்றையும் அவனே சிருஷ்டிக்கிறான். இதைத் திரையனுபவம் எந்தக் காலத்திலும் கொடுப்பதில்லை. திரையில் மிளிரும் கதாபாத்திரங்கள்தான் நம் மொத்த எண்ணத்தையும் ஆக்கிரமித்து வழி நடத்துகிறார்கள். அவர்கள் செல்லும் பாதையிலேயே நாமும் பின்னகர்கிறோம். நகர்கிறோம் என்பதைவிட கட்டுண்டபடியே ஓடுகிறோம். கட்டுண்டு கிடத்தலுக்கும் சிறகை விரிப்பதற்குமான பெரும் வித்தியாசம் வாசித்தலுக்கும் படம் பார்த்தலுக்கும் இருக்கிறது.

கண்டராதித்தனின் இந்தக் கவிதையின் ஒவ்வொரு வரியும் மனக் கிளறலை நிகழ்த்துகிறது. வாசிக்க வாசிக்க மனம் தானாகவே கிறுக்கிக் கிறுக்கி நாடகத்தை நடத்தி முடிக்கும் போது ஷண்முகசுந்தரத்தின் மீது பரிதாபம் வராமல் இல்லை. ஆனால் அந்த பரிதாபம் அவசியமேயில்லை எனத் தோன்றியது. 

ஸ்ரீமான் ஷண்முகசுந்தரமே எதைப் பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை. சந்தோஷமாக இருக்கிறார். எவனைப் பற்றியும் கவலைப்படாமல் உற்சாகமாகத் தன்னந்தனியாக தவில் வாசிக்கிறார். அவரே அலட்டிக் கொள்ளாதபோது நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? அவரை அரவணைக்கவும் இந்த உலகில் ஏதாவதொரு கடவுள் இருக்கிறது. இல்லையா?

யோசித்துப் பார்த்தால் நாம் ஒவ்வொருவருமே ஷண்முகசுந்தரம்தான். நம்மை அனுசரிக்கும் ஒவ்வொருவருமே கடவுள்தான்.

இங்கே யார்தான் முட்டாள் இல்லை? ஒவ்வொருவருமே முட்டாள்தான். என்னையும் உங்களையும் வசைபாடவும், எள்ளி நகையாடவும் உலகின் ஏதோ ஒரு மூலையில் சில நாக்குகள் துடித்துக் கொண்டேதான் இருக்கின்றன. எப்பொழுதுமே யாரோ சிலர் வார்த்தைகளைத் தேடிக் கொண்டேயிருப்பார்கள். கண்ணடித்து சிரித்துக் கொண்ருடேயிருப்பார்கள். அந்த உரையாடல்களுக்குள்ளாக நம் பெயரும் அறிவும் திறமையும் சிக்கி நிர்வாணப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால் எதைப் பற்றியும் அறியாமல் நாம் தனித் தவில் வாசித்துக் கொண்டிருக்கிறோம். என்னை அரவணைக்க நீங்களும் உங்களை அரவணைக்க நானுமாகச் சந்தோஷமாகத்தானே இருக்கிறோம்?

உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் இது பொருந்தும்.

நவீன உலகின் வினோதம் இது. வசவுகளுக்கும் அவமானங்களுக்கும் தப்பி வாழ்கிற மனிதன் என்று ஒருவனையும் கடைத்தேற்ற முடியாது. எல்லோருமே முட்டாள்கள். எல்லோருமே பைத்தியகாரர்கள். எல்லோருமே மடையர்கள்தான். உலகில் கொண்டாடப்படுகிற ஒவ்வொரு மனிதனையும் முட்டாள் என்றும் மடையன் என்றும் பைத்தியகாரன் என்றும் சொல்வதற்கு தனிக் கூட்டம் உண்டு. ‘அவனெல்லாம் ஒரு ஆளா’ என்று எப்பேர்ப்பட்ட மனிதனையும் இடது கையால் விசிறிவிடுகிற அறிவாளிகள் பெருத்த பூமி இது. 

உலகம் அப்படித்தான்.

தம்மை கலைஞன் என்றும், எழுத்தாளன் என்றும், அறிவாளி என்றும் கிட்டத்தட்ட ஒவ்வொருவருமே கருதிக் கொள்கிற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு அடுத்தவர்கள் முட்டாள்கள்தான் - ஷண்முகசுந்தரம் மாதிரி.

பாராட்டாக இருந்தாலும் சரி; வசையாக இருந்தாலும் சரி- வெளிப்படையாகச் சொல்லாத கூட்டம் பெருகிக் கொண்டேயிருக்கிறது. அவர்கள் நம் முதுக்குப் பின்னால் நம்மைத் திட்டுவார்கள். அலட்சியப்படுத்துவார்கள். அம்போவெனவிடுவார்கள். அந்தப் பக்கமாகச் சென்று நம்மை வசைபாடுவார்கள். நம் நிழலையும் பிம்பத்தையும் கீழே தள்ளிவிட்டு மிதிப்பார்கள். கண்டுகொள்ளாத வரைக்கும் நாம்தான் மிகப்பெரிய வித்வான்கள். நாம்தான் உலகின் அதிசிறந்த ஆளுமைகள். அடுத்தவர்கள் சொல்வது காதில் விழுந்தால் அதோடு கதை முடிந்தது. 

வெகு நுட்பமாகப் புரிந்து கொள்ள வேண்டிய  கவிதை இது.

நமக்கான மிகச் சிறந்த பாடம் ஒன்றையும் புதைத்து வைத்திருக்கிறது. அடுத்தவனின் செய்கையையும் சொற்களையும் சட்டை செய்யாத ஷண்முகசுந்தரங்களுக்கானது இந்த உலகின் சந்தோஷங்கள். அவமானங்களை உதாசீனப்படுத்தும் ஸ்ரீமான்களுக்கானது இந்த உலகின் பாடல்கள்.

என்றைக்காவது ஒரு நாள் ஷண்முகசுந்தரம் சரியாக வாசித்துவிடக் கூடும். அன்றைய தினம் வரைக்கும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தனித்தவில் வாசித்துக் கொண்டேதான் இருப்பார். அவரை லாரியில் வரும் கடவுள்கள் அழைத்துக் கொண்டேதான் இருப்பார்கள். 

அட்டகாசம் கண்டராதித்தன்!

Feb 6, 2016

தூர் - மகள்

சில கவிதைகள் திடீரென வெளிச்சம் பெற்றுவிடும். கவிஞர் மகுடேசுவரின் கவிதையொன்றை பாராட்டி கமல் ட்விட்டரில் எழுத அது இப்பொழுது மிகப்பிரபலமான கவிதையாகிவிட்டது. கவிதைகளில் ஒரு வகையுண்டு. சற்றே நெகிழச் செய்யக் கூடிய கவிதைகள். அவை பெரும்பாலும் வாசிப்பு பழக்கமில்லாதவர்களைக் கூட உணர்ச்சிவசப்படச் செய்து ஈர்த்துவிடும். இந்தக் கவிதை அப்படியானது. பல அடுக்குளாலான நம் மனதின் மேல் அடுக்குகளில் மெலிதாகக் கீறச் செய்து ‘அருமை’ என்று சொல்லச் செய்துவிடுகிறது. புரிந்து கொள்ள எந்தச் சிக்கலுமில்லாததால் வாசிக்கிறவர்கள் திணறுவதில்லை. முடிக்கும் போது நெக்குருகிப் போகிறார்கள்.

கவிதை இதுதான் - 

உங்கள் திருமணத்தன்று 
நான் எங்கிருந்தேன்?
மகளின் கேள்விக்கு 
விடைகூற முயன்றேன்.

அந்தத் தீயின் 
நடுச்சுடராக ஒளிர்ந்திருந்தாய்.

எம் தலைமீது தூவப்பட்ட 
அட்சதையில் 
ஒரு மணியாக இருந்தாய்.

சூடிய மாலை நறுமணத்தில் 
இருந்ததும் நீதான்.

தாத்தா பாட்டியரின் 
கண்களில் 
நீர்த்துளியாக நீ திரண்டு நின்றாய்.

உன் தாயைக் கரம்பற்றிய 
என் உள்ளங்கைக்குள் 
வெப்பமாக இருந்ததும் 
நீயே.

கவிதையில் உண்மை இருக்க வேண்டும் என்பார்கள். திருமணத்தின் போது அந்தக் குழந்தை எங்கேயிருந்தது என்று சொல்லவேயில்லை; பிறகு எப்படி கவிதையில் உண்மை இருக்கிறது என்று யாராவது கேட்கக் கூடும். மகள் தந்தையிடம் வந்து ‘நான் எங்கே இருந்தேன்?’ என்று கேட்கும் போது இப்படியான மேம்போக்கான பதிலைத்தான் பெரும்பாலான தந்தையரால் சொல்ல முடியும். அந்த உண்மையைத்தான் இந்தக் கவிதை பதிவு செய்கிறது. ஆக இந்தக் கவிதையில் உண்மையில்லை என்றெல்லாம் நிராகரிக்க முடியாது. வாசிக்கிறவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தக் கேள்வியைத் தங்களின் குழந்தைகளிடமிருந்து எதிர்கொண்டிருக்கக் கூடும். அந்த வகையில் வாசகரின் அனுபவத்தோடு நெருங்குகிறது. 

இந்தக் கவிதை பெறுகிற வெளிச்சத்தைப் பார்க்கும் போது நா.முத்துக்குமாரின் ‘தூர்’ என்ற கவிதை நினைவுக்கு வருகிறது. கணையாழி விழாவொன்றில் சுஜாதா முத்துக்குமாரின் கவிதையையும் கவிஞரையும் வெகுவாகப் பாராட்ட முத்துக்குமாருக்குத் தனித்த கவனம் கிடைத்தது. 

வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டு கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒரு முறை
விஷேசமாக நடக்கும்.

ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்...
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்தக் கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...
எடுப்போம் நிறையவே                                                                             

‘சேறுடா சேறுடா’ வென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

படை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்.

இன்று வரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.

கடைசி வரை அப்பாவும்
மறந்தேப் போனார்
மனசுக்குள் தூர் எடுக்க.

தூர் கவிதையும், மகுடேசுவரனின் கவிதையும் கிட்டத்தட்ட ஒரே வகையிலான கவிதைகள்தான். கவிதைகளின் நுட்பங்கள் எதுவும் திறமையாகக் கையாளப்படாமல் ஒரு சம்பவத்தை அல்லது ஒரு உரையாடலை அதீத மிகையுணர்ச்சி இல்லாமல் பதிவு செய்கின்றன. கவிதைகளின் வெளியில் இத்தகைய மனப்பதிவுகளுக்கும் இடமுண்டு அல்லது காட்சிப்பதிவு என்றும் சொல்லலாம். கவிதை முடிகிற இடத்தில் வாசிக்கிறவனை ‘அட’ என்று சொல்ல வைக்கின்றன.

கவிதையின் வடிவமைப்பு, நுட்பம் போன்ற கவிதைகளுக்கான கருவிகளுடன் விமர்சன ரீதியில் இத்தகைய கவிதைகளை அணுகும் போது சிலாகிக்க ஏதுமில்லை என்றுதான் தோன்றும். ஆயினும், இத்தகைய கவிதைகளை இடது கையில் புறந்தள்ள வேண்டியதில்லை என நினைக்கிறேன். தம்மை இலக்கிய மிராஸ்தார்களாக நினைத்துக் கொள்கிறவர்கள் இத்தகைய கவிதைகளை நோக்கி பழிப்புக் காட்டக் கூடும். அது அவசியமற்றது. கவிதை மீதான பாராமுகம் கொண்டவர்களைக் கூட கவிதையை நோக்கித் திரும்பிப் பார்க்கும் வித்தையை இத்தகைய கவிதைகளால்தான் செய்ய முடியும். நவீன கவிதைக்கும், வெறும் உணர்ச்சிவசப்படுதலான கவிதை மாதிரிகளுக்கும் இடைப்பட்ட வகையிலானதான இத்தகைய கவிதைகள் பாலத்தின் வேலையைச் செய்கின்றன. அந்தப் பக்கமாக நிற்கும் சிலரைப் பிடித்து கவிதையின் உலகத்துக்குள் இழுத்துவிடுகின்றன. அதன் பிறகு பொறுமையும் ஆர்வமும் இருக்கக் கூடிய வாசகன் நல்ல கவிதைகளைத் தேடிக் கொள்வான். 

அந்த விதத்தில் இத்தகைய கவிதைகள் எப்பொழுதும் வரவேற்கத்தக்கவை. 

Jan 29, 2016

என் கடவுள்

கவிதைகளிலிருந்து நாம் எதை எடுத்துக் கொள்வது என்று கேட்டால் என்ன பதிலைச் சொல்வது என்று குழப்பமாகத்தான் இருக்கிறது. ‘இதுதான்’ என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஒரு குழந்தை அழுவதைப் பார்ப்பதைப் போல, ஓர் இலை உதிர்தலை கவனிப்பதைப் போல, சலனமில்லாத குளத்து நீரை உற்று நோக்குவதைப் போல, யாருமற்ற கடற்கரையில் கால்களை வந்து தொட்டுச் செல்லும் அலைகளை பார்த்துக் கொண்டிருப்பது போல- ‘இது மட்டும்தான்’ என்று சொல்ல முடியாத- ஆனால் மனதுக்கு நெருக்கமான உணர்ச்சி அது.

கவிதைகள் புரியவில்லை என்பதுதான் அடிப்படையான குற்றச்சாட்டு. கவிதை என்ற சொல் இருந்தாலே அடுத்தப் பக்கத்துக்குத் தாவிவிடுவேன் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறவர்கள் அதிகம். அப்படி தவிர்த்துவிடுவதால் கவிதைக்கு எந்த நஷ்டமுமில்லை. தன்னுடைய கவிதையை யாராவது முப்பது பேர் வாசித்தாலே அது பெரிய விஷயம் என்பது பெரும்பாலான கவிஞர்களுக்கும் தெரியும். கவிஞர்களே கூட அடுத்த கவிஞர்களின் கவிதைகளை வாசிப்பதில்லை. தமிழ்நாட்டில் தன்னுடைய கவிதைகளைத் தவிர பிறருடைய கவிதைகளை வாசிக்காத கவிஞர்கள்தான் அதிகம். நம்பிக்கையில்லையென்றால் ஆராய்ச்சி செய்து பார்த்து முடிவுக்கு வந்துவிடலாம். ஆக, நாம் வாசிக்காமல் விடுவதால் கவிதை மூலையில் அமர்ந்து முக்காடிட்டு அழப் போவதில்லை.

கவிதையை வாசிக்க விரும்புகிறவர்கள் எளிமையான கவிதைகளிலிருந்து ஆரம்பிக்கலாம். சுகுமாரனிடம் முதன் முதலில் பேசிய போது இந்த அறிவுரையைத்தான் சொன்னார். ‘அட, இவ்வளவுதானா?’ என்று நினைக்க வைக்கிற கவிதைகளாகத் தேர்ந்தெடுத்து வாசிக்க வேண்டும் என்றார்.  அத்தகையை கவிதைகளை வாசித்துப் பழகிவிட்டால் அடுத்தடுத்த எட்டு வைப்பதற்கு எளிமையாக இருக்கும். எடுத்த உடனேயே பிரம்மராஜனின் கவிதைகளை வாசித்துவிட்டு ‘சோலி சுத்தம்’ என்று மூடி வைத்தால் ஒன்றும் செய்வதற்கில்லை. 

எளிமையான கவிதைகளை எப்படிப் பிடிப்பது? ரொம்பச் சுலபம். முதல் மூன்று வரிகளில் பிடிபட்டுவிடும். மூன்றாவது வரியிலேயே கவிதை புரியத் தொடங்கிவிட்டால் தைரியமாகத் தொடர்ந்து வாசிக்கலாம். இல்லையென்றால் தாண்டி ஓடி விடுவது உசிதம். தபசியின் இந்தக் கவிதை அப்படியானதுதான்.



கடவுள்
எந்த ரூபத்தில்
காட்சி தருவார் என்பது
யாருக்குமே தெரியாது.

நேற்றுப் பாருங்கள்
கடவுள்
ஒரு Eureka Forbes நிறுவன
விற்பனைப் பிரதிநிதியாய்
வீட்டிற்கு வந்திருந்தார்.

வீடு பெருக்கித் துடைக்கும்
ஒரு இயந்திரத்தைக் காட்டி
அதன் செயல் நுணுக்கங்களை
விளக்கினார்.
எப்படியோ
கடவுளின் புண்ணியத்தில்
ஒரு பத்தாயிரம் ரூபாய்
கடனாளியானேன்.

கடவுளை
ஒரு லிமிசி ஏஜெண்டாக
நினைத்துப் பார்ப்பது
கொஞ்சம் துரதிஷ்டவசமானதுதான்
என்றாலும்,
வாழ்வையும், சாவையும் பற்றிப் பேச
அவரை விடப் பொருத்தமான ஆள்
வேறு யார் இருக்க முடியும்?

கடவுள்
பெண்கள் ரூபத்திலும் வரலாம்.
சில நேரம்
என் மனைவி குளித்துவிட்டு
மஞ்சள் பூசி
என் முன் வரும் போது,
கை எடுத்து வணங்கத் தோன்றும்.

இப்போதெல்லாம்
கடவுள்
செல்போன் திருடனாக வருகிறார்.

வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி
மோசடி செய்யும்
'டிப்டாப்' ஆசாமியாக வருகிறார்.

பல வருடங்களாக
ஊர்ப் பக்கமே திரும்பாத கடவுளை
ஓட்டுக் கேட்க வந்தபோது
எங்கள் ஊர் மக்கள்
மரத்தில் கட்டி வைத்து உதைத்தது
தனி ஒரு கதை.

எனக்கொரு சிறு சந்தேகம்
கடவுளுக்கு ஏதும்
உணர்ச்சி இருக்குமா என்று?
இருக்கத்தான் வேண்டும்
இல்லையென்றால்
மேலதிகாரி திட்டும் போது
எனக்கேன் கோபம் வர வேண்டும்?

தபசி

புரிந்து கொள்ள எந்தச் சிக்கலும் இல்லாத கவிதை. வாசித்து முடித்தவுடன் உதட்டருகில் மென் புன்னகையை வரவழைக்கிறது அல்லவா? இப்படியான கவிதைகள்தான் கவிதை உலகத்திற்குள்ளான படிக்கட்டு. வாசித்துவிட்டுச் சொல்லுங்கள். பேசலாம்.

Oct 30, 2015

தோட்டாக்கள் பாயும் வெளி

பக்கத்து வீட்டில் ஒரு குழந்தை இருக்கிறது. பால்கனி, வீட்டின் உட்புறம் என்று ஓரிடத்தையும் விட்டு வைப்பதில்லை. பென்சிலை எடுத்து தனது கைத்திறமையைக் காட்டிவிடுகிறது. அது வாடகை வீடு. உரிமையாளர் கடுப்பாகிவிடுகிறாராம். எப்பொழுதோ ஒரு சமயம் அப்பாவிடம் புகார் அளித்துக் கொண்டிருந்தார். ‘ஆடு மாடு இலை தழைன்னு கண்டதையும் கிறுக்கி வெச்சுடுது சார்’. பார்த்து பார்த்து கட்டிய வீடு. ‘கனவுல கூட ஆடு மாடு வரும் போல இருக்கும்’ என்றார். சிரிப்பு வந்துவிட்டது. ஆடு, மாடு என்றால் பிரச்சினையில்லை. வீட்டு உரிமையாளரின் கனவில் வருகிறதென்றால் குழந்தையிடம் சொல்லி பேய்ப் படத்தை வரையச் சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டேன். மாநகரங்களில் இந்த வீட்டு உரிமையாளர்கள் தொல்லை பெருந்தொல்லை.

குழந்தையின் ஓவியங்களிலிருப்பவை உயிர் பெறுகின்றன என்பதே fantasy கற்பனை. என்னதான் கடுப்பில் இருந்தாலும் அந்த வீட்டு உரிமையாளரின் கற்பனை அபாரமானது. ஒருவேளை குழந்தைகளின் ஓவியங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும்? விசித்திரமான ஜந்துக்களும் முக்கோண வடிவ முகமுடைய மனிதர்களும் பெரும்பற்களுடன் சாலைகளில் நடந்து கொண்டிருப்பார்கள். மலைகளும் பாதி உதயமான சூரியன்களும் தெருவெங்கும் நிறைந்திருக்கும். அற்புதமான வண்ணக் கலவைகளால் இந்த உலகம் வேறொன்றாக இருந்திருக்கும். இல்லையா?

இந்தச் சுவர் கிறுக்கல் ஞாபகத்திற்கு வரக் காரணம் ந. பெரியசாமியின் கவிதைத் தொகுப்பான ‘தோட்டாக்கள் பாயும் வெளி’. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிந்தவுடன் தொகுப்பை வாசித்துவிட வேண்டும் என்று தோன்றியது. ஒரு விருது குறிப்பிட்ட படைப்பை கவனம் பெறச் செய்கிறது. ‘அப்படியென்ன இருக்கிறது?’ என்று வாசகனுக்குள் ஒருவிதமான குறுகுறுப்பை உருவாக்குகிறது. இத்தனைக்கும் பெரியசாமி ஓசூரில்தான் இருக்கிறார். நிறையப் பேசிக் கொள்வதுண்டு. ஆனால் வாசிக்காமல் விட்டிருக்கிறேன்.


கவிதைத் தொகுப்பில் வீட்டு உரிமையாளரைப் போலவே fantasy கற்பனையுடனான கவிதைகள் இருக்கின்றன. குழந்தைகள் வரையும் ஓவியங்கள் உயிர்பெறுகின்றன. ஆடு, மாடுகள் அந்தரத்தில் பறக்கின்றன. பொம்மை மான்கள் உயிரோடு அலைகின்றன. பால்ய நினைவுகள் கவிதைகளுக்குள் வந்து வந்து போகின்றன. இப்படி நாம் பெரும்பாலும் பொருட்படுத்தாத நம்முடைய ஆழ்மன விருப்புகளை மெல்லிய சீண்டல்களுடன் கவிதைகளாக்குவதை பெரியசாமி தனது பாணியாக்கியிருக்கிறார். 

உப்பு நீரில் ஊற வைத்து
கழுவிய திராட்சையை
தின்றிடத் துவங்குகையில்
நரி வந்து கேட்டது
நாலைந்து ஆய்ந்து கொடுத்தேன்
புலி வந்தது
சிறு கொத்தை ஈந்தேன்
குட்டிக்கரணம் இட்டவாறு 
குரங்கு வந்ததைத் தொடர்ந்து
ஆடு மாடு கோழி பூனையென
மகனின் படையெடுப்புகள்

எனக்கேதும் வேண்டாமென
கொடுத்த திராட்சையின் சாயலை
விழுங்கிக் கொண்டிருந்தேன்

இது பெரியசாமியின் கவிதைகளில் ஒன்று. திராட்சை தின்று கொண்டிருப்பவனிடம் மகனின் படைப்புகள் வந்து திராட்சைகளை வாங்கிச் சென்றுவிடுகின்றன. ‘எனக்கு திராட்சை இல்லைன்னாலும் பரவாயில்லை’ என்று எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு திராட்சையின் சாயலை விழுங்கிக் கொண்டிருக்கிறான். இதுதான் கவிதை.

இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறதா? இதெல்லாம் சாத்தியமேயில்லை. இப்படி சாத்தியமில்லாத ஒன்றை ஏன் கவிதையாக்க வேண்டும்? கவிதையுடன் அறிமுகமில்லாத ஒருவன் வாசித்தால் இது புரியுமா? புரியாத ஒன்றை ஏன் எழுத வேண்டும்?

இப்படியெல்லாம் கேள்விகள் எழ வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த உலகில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் உண்டு. ஒருவேளை நமக்கு பதில் தெரியாமல் இருக்கலாமே தவிர பதில் இல்லாத கேள்விகள் என்று எதுவுமேயில்லை. இந்தக் கேள்விகளும் அப்படியானவைதான். இன்னொருவர் பதில் சொல்லி சமரசம் ஆவதைவிட கேள்விகளுக்கான பதிலை நாமே கண்டடைந்து சமரசமாவதுதான் சாலச் சிறந்தது. 

‘மகனின் படைப்புகளில் இருந்து விலங்குகள் உயிர் பெறுகின்றன’ என்று இந்தக் கவிதையைப் புரிந்து கொள்கிறேன். அவ்வளவுதான். இந்த ஓர் அடிப்படையைப் புரிந்து கொண்டால் போதும். அதற்கு மேல் நம் கற்பனையைப் பொறுத்து கவிதை நம்மை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுவிடும். எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இந்த ஒரு கவிதையை வைத்துக் கொண்டு கற்பனை செய்யலாம். நம் வீட்டில், நம் குழந்தை வரையும் படங்கள் உயிர்பெறுவதிலிருந்து அப்படியெல்லாம் நடந்தால் என்னவாகும் என்பது வரை என்னனென்னவோ யோசிக்கலாம். இப்படியொரு பொறியைத் தட்டிவிடுவதுதான் கவிதையின் வேலை. அதற்கு மேல் கவிதையிடம் நிறைய எதிர்பார்க்க வேண்டியதில்லை.

இன்னொரு கவிதையையும் பார்த்துவிடலாம்.

பிளந்த மாதுளையிலிருந்து
உதிர்ந்தன சிவந்த கண்ணீர் துளிகள்
எறும்பு ஒன்று
ஒரு துளியை இழுத்துச் செல்ல
மீந்ததைப் பங்கிட்டனர் மகன்கள்
எதிர் இல்ல யுவதி
பிணி நீக்க
எடுத்துச் சென்றாள் தொலிகளை.

கழுவினேன் 
கையிலிருந்த பிசுபிசுப்பை.

இந்தக் கவிதைக்கு விளக்கம் கொடுப்பது சாத்தியமேயில்லை. ஒரேயொரு காட்சிதான் கவிதையாகியிருக்கிறது. ஒரு வீட்டில் மாதுளம் பழத்தை பிளந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டும்தான். கண்ணீர், பிணி, பிசுபிசுப்பு இந்தச் சொற்கள் கவிதையை வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றுவிடுகின்றன. பிசுபிசுப்பு என்று இந்தக் கவிதை எதைக் குறிப்பிடுகிறது? மாதுளம் பழத்தின் பிசுபிசுப்பை மட்டுமா? எதனால் மாதுளம் பழத்தின் சாறு கண்ணீர் துளியாகத் தெரிகிறது? எதிர் வீட்டு பிணியின் காரணமாகவா? தொலிகளைக் கூட இவர்கள் வீட்டில் வந்து வாங்கிச் செல்லும் யுவதியின் ஏழ்மையின் காரணமாகவா? அப்படியென்றால் இவனது குற்றவுணர்ச்சிதான் பிசுபிசுப்பா? இப்படி கேள்விகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கலாம். 

இதுதான் கவிதையின் சூட்சமம். மிகச் சாதாரணமான வரிகள்தான். ஆனால் அந்தக் காட்சியும் சொற்களும் நம்மைப் புரட்டிக் கொண்டேயிருக்கும் வலிமையை உடையவை. 

கவிதை வாசிப்பதால் என்ன பலன் என்பது க்ளிஷேவான கேள்வி. வெவ்வேறு ஆளுமைகள் வெவ்வேறு பதில்களைச் சொல்லியிருந்தாலும் தொகுத்துப் பார்த்தால் அவையும் க்ளிஷேவான பதில்களாகத்தான் இருக்கும். ஆராய்வது விமர்சகர்களின் வேலை. அனுபவிப்பது வாசகர்களின் வேலை. கவிதையின் ரசிகனாக கவிதைகளை அனுபவித்துக் கொண்டிருந்தால் போதும். இத்தகைய கவிதைகள் அனுபவிப்பதற்கானவை. 

இன்னுமொரு கவிதையுடன் முடித்துக் கொள்ளலாம்-

துளிகளை அனுப்பி
சன்னல் வழியே அழைத்து
தன் ஆட்டத்தை துவங்கியது 
மழை

வேடிக்கை பார்க்கக்
காமக் களியாட்டத்தில் மனம்

விருது பெற்றிருக்கும் ந.பெரியசாமிக்கும் தொகுப்பை வெளியிட்ட புது எழுத்து பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள்.

ந.பெரியசாமி: 9487646819/na.periyasamy@gmail.com

Mar 10, 2015

இக்ரான்

அவதார் படத்தில் மிகப்பெரிய பறவை வருமல்லவா? இக்ரான். நாயகன் பேண்டாரோ கிரகத்துக்குச் சென்ற பிறகு நாயகி அவனுக்கு எல்லாவிதமான பயிற்சிகளையும் அளிப்பாள். குதிப்பது, ஓடுவது, வேட்டையாடுவது என அத்தனையும் அடங்கிய பயிற்சி. பயிற்சியின் இறுதிக்கட்டமாக இக்ரானைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இக்ரான் நாவிகளுக்கு மிக முக்கியம். அந்தப் பறவைதான் நாவிகளைத் தூக்கிக் கொண்டு அவர்கள் விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்லும். 

நாயகன் தனக்கான இக்ரானைத் தேர்ந்தெடுப்பதற்காக மிகச் சிரமப்பட்டு மிதக்கும் மலைகளின் மீது ஏறுவார்கள். அங்கு நிறைய இக்ரான்கள் இருக்கும். ‘எப்படி தேர்ந்தெடுப்பது?’ என்பான். 

‘அதுவே உன்னைத் தேர்ந்தெடுக்கும்’ என்பாள் நாயகி. 

‘என்னைத் தேர்ந்தெடுத்துவிட்டது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?’ என்ற கேள்விக்கு ‘அது உன்னைக் கொல்லவரும்’ என்பாள். 

நாயகன் ஒரு இக்ரானைக் கண்டுபிடித்துவிடுவான். நாயகனும் இக்ரானும் பயங்கர ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள். கடைசியில அது அடங்கிவிடும். இனி வாழ்நாள் பூராவும் அவனோடுதான் அந்த இக்ரான் பறக்கும்.

‘கவிதைக்குள் நுழையவே முடிவதில்லை’ என்று யாராவது சொன்னால் இந்த இக்ரான் கதையைச் சொல்லலாம். தொடர்ந்து நிறையக் கவிதைகளை வாசித்துக் கொண்டேயிருக்க வேண்டும். ஏதாவதொரு கவிதை நம்மை தேர்ந்தெடுத்துவிடும். முதலில் ஆக்ரோஷமான சண்டையெல்லாம் வரும். சலிப்பு தட்டும். ஆனால் விடாமல் கீழே தள்ளி அழுத்தி அடக்கிவிட்டால் வாழ்நாள் முழுவதும் பறக்கலாம். நமக்கான அந்தக் கவிதையை எதிர்கொள்ளும் வரைக்கும் நிறையக் கவிதைகளைப் புரட்டிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கும்.

அப்படியான ஒரு கவிதை இது. சமயவேலின் கவிதை. 

பார்த்துக் கொண்டிருக்கிறார். குட்டி மகள் ஓடிக் கொண்டிருக்கிறாள். ‘நில்’ என்று சொல்லச் சொல்ல- அதைக் கேட்காமல் ஓடிய குட்டிமகள் மாடிப்படிகளில் உருண்டு விழுகிறாள். அந்த கணத்தில்- அரைக்கணம் கூட இல்லை- அரைக்கணத்தின் துணுக்கில் அவரால் அவள் விழுவதை பார்க்க மட்டும்தான் முடிகிறது. உயிர் உணர்வு அத்தனையும் அற்றுப் போய்விடுகிறது அந்த மனிதனுக்கு. வெறும் சடலமாக அந்தக் கணத்தில் ஓடுகிறார். நெற்றியில் அடியுடன் வீறிட்டு அழும் அந்தக் குட்டிமகளை அள்ளுகிறார். 

அரைக் கணத்தின் புத்தகம் என்ற அந்தக்கவிதையை வாசித்துவிடலாம்-

ஏய், நில், நில்லு-
சொல்லி முடிப்பதற்குள்
மாடிப்படிகளில் என் குட்டி மகள்
உருண்டுகொண்டிருக்கிறாள்
பார்த்துக்கொண்டு
அந்த அரைக் கணத்தின் துணுக்கில்
அவள் உருள்வதை நான்
பார்த்துக்கொண்டு மட்டும்.
அவளது சொந்த கணம்
அவளை எறிந்துவிட
அவள் உருண்டுகொண்டிருக்கிறாள்.
என் சகலமும் உறிஞ்சப்பட்டு
ஒன்றுமற்ற உடலமாய் நான்
அந்த அரைக் கணத்தின் முன்
ஓடிக்கொண்டிருக்கிறேன்.
ஒரு வீறலுடன் அக்கணம் உடைய
நெற்றியில் அடியுடன்
அழும் மகளை அள்ளுகிறேன்
- கணங்களின் மீட்சி
என் பிரபஞ்சத்தை சேராத
அந்த அரைக் கணத்தை ஒரு
நோட்டுப் புத்தகத்தில் குறித்துவைத்தேன்.
ஒரு சொடுக்கில், இழுப்பில், புரட்டலில்
முழுச் சித்திரமே மாறிவிடும்
வினோதப் புத்தகம் அது.


கவிதையின் முதல்பகுதியை புரிந்து கொள்வதில் பெரிய சிரமம் இருக்காது. ஆனால் கடைசி நான்கு வரிகள் சற்று திணறடிக்கக் கூடும். ஆனால் திரும்பத் திரும்ப வாசிக்கும் போது ஒருவாறு பிடிபட்டுவிடும். அந்தக் குழந்தைக்கு என்ன ஆனது என்பது குறித்து கவிதை வெளிப்படையாக எதுவும் சொல்வதில்லை. அள்ளுவதோடு முடிந்துவிடுகிறது. ஆனால் அடுத்த வரியில் ‘என் பிரபஞ்சத்தைச் சேராத’ என்ற வரியிருக்கிறது. அந்த அரைக்கணத்தின் மீது இவருக்கு கசப்பு படிந்து கிடக்கிறது என்று தெரிகிறது. அப்படியென்றால் ஏதோ விபரீதம் நடந்திருப்பதாக புரிந்து கொள்ளலாம். அதை ஏன் ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைக்கிறார்? தவிர்க்கவே முடியாத கணம் அது. எந்தவிதத்திலும் மறக்க முடியாத கணமாக மாறிக் கிடக்கிறது. அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையே அந்தக் கணத்தில்தான் புரட்டிப் போடப்பட்டிருக்கிறது என்பதான அர்த்தத்தில் புரிந்து கொள்ளலாம்.

கவிதை அப்பட்டமாக எதைச் சொல்ல வருகிறது என்று ஒரே மாதிரியாகவே எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு புரிதல். இந்தக் கவிதை உருவாக்கும் சித்திரத்தை நினைத்துப் பார்த்தால் போதும். மனம் கனத்துவிடும். இதுவரை கவிதையே வாசிக்காமலிருந்து இதை வாசித்த பிறகு மனம் கனத்தால் இக்ரானை ஓரளவு அடையாளம் கண்டுபிடித்துவிட்டதாக அர்த்தம். இல்லையென்றாலும் பிரச்சினையில்லை. விட்டுவிட்டு அடுத்த இக்ரானைத் தேடிச் செல்லலாம்.

Dec 12, 2014

அவ்வளவு கஷ்டமா?

பத்து வருடங்களுக்கு முன்பாக ஃபேஸ்புக், ட்விட்டர் என்றெல்லாம் இல்லாத சமயத்தில் தமிழ் மின்னஞ்சல் குழுக்களில் ஒரு பெயர் மிகப் பிரபலமாகியிருந்தது. நிலாரசிகன். அட்டகாசமான நிழற்படங்களின் மீது காதல் ரஸம் சொட்டும் கவிதைகள் எழுதப்பட்டு அது ஏகப்பட்ட பேரால் ஃபார்வேர்ட் செய்யப்படும். அதை நிலாரசிகன் கிட்டத்தட்ட ஒரு ட்ரெண்டாக மாற்றியிருந்தார். நிறையப் பேர் அவரைப் போலவே ஆவதற்கு முயன்று கொண்டிருந்தார்கள். அவரது புகழைப் பார்த்து எனக்கெல்லாம் பொறாமையாக இருக்கும். அவ்வளவு விசிறிகள் அவருக்கு- குறிப்பாக அவரது பெண் ரசிகைகள்தான் பொறாமைக்கு முக்கியக் காரணமாக இருந்தார்கள்.

சில வருடங்களுக்குப் பிறகு திடீரென்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு ‘விடுகதையா இந்த வாழ்க்கை’ என்கிற ரேஞ்சில் நவீன கவிதைகளை எழுதத் தொடங்கியிருந்தார். கோணங்கி பற்றியும் தேவதச்சன் பற்றியும் மிகத் தீவிரமாக விவாதிக்கும் மனநிலைக்கு வந்திருந்தார். கேட்டால் ‘இதுதான் நல்லா இருக்கு பாஸ்’ என்பார். உண்மையில் அவர் ஆரம்பத்தில் எழுதிக் கொண்டிருந்தது கவிதைகள் இல்லை. விடலைகளின் மனநிலையைச் சீண்டுகிற வித்தை அது. மயங்கிக் கிடந்தார்கள். 

பொழுதுபோக்காக நிலாரசிகன், நரன், வெய்யில், கதிர்பாரதி என்று கவிஞர்களின் பெயரை கூகிளில் தேடிக் கொண்டிருந்தேன். நிலாரசிகனின் பழைய கவிதைகள் வந்து கொட்டுகின்றன.

நவீன கவிதைகள் எழுதத் தொடங்கிய பிறகு நிலாரசிகனின் போக்கு முற்றாக மாறிவிட்டது. மென்மையான கவிதைகளில் மிக அழுத்தமான விஷயங்களை எழுதுவது அவருக்கு சாத்தியமாகியிருக்கிறது. ‘கவிதைகளின் மொழியிலும் கூட திருகலும் அழுத்தமும் இருக்க வேண்டும்’ என்கிற கட்சியினரும் உண்டு. ஆனால் அது அவசியமில்லை. கவிதை அழுத்தமானதாக இருக்கட்டும். ஆனால் கவிதையின் மொழி மிக எளிமையாக இருக்கலாம். ஒரே வாசிப்பில் புரிந்துவிடும்படி இருந்தால் இன்னமும் நல்லது. 

நிலாரசிகனின் இந்தக் கவிதை அப்படித்தான் - 

இரு அறைகளை 
மட்டுமே தனக்குள் 
நிறைத்திருந்த அச்சிறு
வீட்டின் ஓர் அறையின்
மூலையில் ஒடுங்கியிருந்தேன்,
அடுத்த அறையிலிருந்து
துவங்கிய 
நீர் சொட்டும் ஒலி
பின்னிரவைக் கடந்து
வைகறையிலும் கேட்டது.
அதிகாலையில் அடங்கியிருந்தது
எனக்குள் மட்டுமே 
ஒலித்த ஓலம்.

இரண்டே அறைகள்தான் இருக்கின்றன. இவர் ஒரு அறையில் படுத்திருக்கிறார். இன்னொரு அறையிலிருந்து குழாயில் நீர் சொட்டுகிறது. அது விடிய விடியக் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. இவ்வளவுதான் கவிதை. இந்தக் கவிதையில் இரவு, தனிமை, பயம், ஓலம் என அத்தனையையும் கொண்டு வந்துவிடுகிறார். எல்லோருக்குமே இத்தகைய ஒரு அனுபவம் இருக்கும். யாருமில்லாத சமயத்தில் வீட்டில் தனித்திருக்கும் போது ஒருவிதமான பதற்றம் உருவாகும் அல்லவா? அதுவும் இரவில் உருவாகும் பதற்றம். அதை பயம் என்று கூடச் சொல்ல முடியும். அதை இந்தக் கவிதை நேர்த்தியாக சித்திரப்படுத்துகிறது. 

இந்தக் கவிதையை எளிதாக visualize செய்துவிட முடியும். மனதுக்குள் சினிமா ஓட்டுவது போல. இரவு முழுவதும் பயந்து கொண்டேயிருக்கிறான். அதிகாலையில் வாசல் பெருக்கும் சத்தம், பால்காரரின் சத்தம் எல்லாம் நீர் சொட்டு ஓசையை மறைக்கிறது என்பது மாதிரியான காட்சிப்படுத்துதலைச் சொல்கிறேன்.

இன்னொரு கவிதை-

கால்கள் இழந்த கிழவனொருவன்
ஊர்ந்து செல்லும் வழியெங்கும்
கற்களைப் பொறுக்கியபடியே செல்கிறான்.
அவனது கூடையை நிரப்புகின்றன
கருங்கற்கள்.
நதிக்கரையை அடைந்தவுடன் ஒவ்வொரு
கற்களாக நீரில் எறிந்து மகிழ்கிறான்
கற்கள் எழுப்பும் அலைகளில்
மெல்ல கால் முளைத்து
பால்யத்திற்குள் நுழைகிறான்
தாய்மையின் 
சாயலுடன் மிதந்தபடி நகர்கிறது
அந்நதி.

ஒரு கிழவன். அவனுக்கு கால்கள் இல்லை. கருங்கற்களைப் பொறுக்கிச் சென்றவன் நதியினுள் வீசுகிறான். அந்த அலை அவனது பால்யத்தை நினைவுபடுத்துகிறது. அவனது கற்பனையில் அவனுனுக்கு கால்கள் முளைக்கின்றன. அவனை பால்யத்துக்கு அழைத்துச் சென்ற அந்த நதியில் தாய்மையின் சாயல் தெரிகிறது. நதி அப்படியேதான் இருக்கிறது. அந்தக் கிழவன் தான் நதியை தன் தாயாக நினைத்துக் கொள்கிறான். அல்லது நாம் அந்த நதியை அவனது தாயாக உருவகப்படுத்திக் கொள்கிறோம்.

இந்தக் கவிதைகளைப் புரிந்து கொள்வதில் என்ன சிக்கல்? அவ்வளவுதான் கவிதை. 

‘அய்யய்யோ...கவிதை என் ஏரியாவே இல்லை’ என்று யாராவது பேசினால் அவரைப் பிடித்து ஒரு அறையில் அடைத்து பத்து நாட்களுக்கு திரும்பத் திரும்ப கவிதைகளையே சொல்லித் தர வேண்டும் என நினைத்துக் கொள்வேன். அவ்வளவு பெரிய கஷ்டமா என்ன? கவிதை புரியாது, கவிதை கஷ்டம் என்றெல்லாம் புரளியைக் கிளப்பி நிறையப்பேரை கவிதைப் பக்கமே வராமல் செய்துவிட்டார்கள். ஒரு கோயமுத்தூர்க்காரர் ஃபோன் செய்யும் போதெல்லாம் ‘கவிதைக்கும் எனக்கும் ஆகாதுங்க’ என்கிறார். முதலில் அவரைத்தான் கடத்தி கவிதை சொல்லித் தருவதாகத் திட்டம். ‘ஆபரேஷன் க’. இந்த ‘க’வை கவிதை என்றும் எடுத்துக் கொள்ளலாம். கதறடித்தல் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

Oct 29, 2014

அங்க என்ன சத்தம்?

கணவன் மனைவிக்கிடையில் என்னவோ சண்டை.  கணவன் சந்தேகக்காரன். சண்டை நடந்த இரவில் அந்தப் பெண் தூங்கிக் கொண்டிருக்கும் போது குரல்வளை மீது காலை வைத்து மிதித்தே கொன்றுவிட்டான். சென்னையில்தான் நடந்திருக்கிறது. பேசிக் கொண்டிருக்கும் போதே அடித்துக் கொன்றிருந்தால் கூட கோபத்தில் செய்துவிட்டான் என்று சொல்லலாம். சண்டையெல்லாம் முடிந்து அவள் தூங்கிய பிறகு கொன்றுவிட்டு போலீஸில் சரணடைந்திருக்கிறான். குடும்ப வாழ்க்கையின் அடிப்படையே தெரியாதவனாக இருந்திருக்கிறான்.

சோலி முடிந்தது. 

சண்டையும் பூசலும் இருக்க வேண்டியதுதான். கணவன் மனைவிக்கு இடையில் சண்டை இல்லையென்றால் என்ன சுவாரஸியமிருக்கிறது? ‘எங்களுக்குள்ள சண்டையே வராது’ என்று யாராவது சொன்னால் ஒன்று கதை விடுகிறார்கள் என்று அர்த்தம் இல்லையென்றால் அவர்கள் வாழ்க்கையை வாழவே இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். அதெப்படி சாத்தியம்? துளி உரசல் கூடவா வராது? 

கணவன் மனைவி சண்டை என்பது காலங்காலமாகத்தான் இருக்கிறது. அடித்துக் கொள்வோம். பிறகு சமாதானம் ஆகிக் கொள்வோம். சங்ககால இலக்கியத்தை எடுத்துக் கொள்ளலாம். கூடலை விடவும் ஊடலுக்குத்தான் மவுசு அதிகம். இப்பொழுதுதான் சண்டை வந்த மூன்றாவது நாளே ‘இவ ஒத்து வரமாட்டா...டைவேர்ஸ் வாங்கிக்கிறேன்’ என்று முடிவெடுத்துவிடுகிறார்கள். ஈகோ. யார் பெரியவர் என்ற அகங்காரம். நானும் அடங்கமாட்டேன் நீயும் அடங்க வேண்டாம் என்கிற திமிர்.

இதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசினால் அது வேறொரு இடத்துக்கு இழுத்துச் சென்றுவிடும். அதனால் வேண்டாம்.

சண்டையின் போதும் சில நுட்பங்கள் இருக்கின்றன அல்லவா? திருப்தியாக வாழ்ந்து முடித்தவர்களிடம் கேட்டால் தெரியும். இருவருமே அடங்கிப் போவதிலும் சரி. இருவருமே நாயும் பூனையுமாக நிற்பதிலும் சரி. த்ரில்லே இல்லை. ஒருவர் அடங்கும் இடத்தில் இன்னொருவர் எகிற வேண்டும். இன்னொருவர் எகிறும் போது மற்றவர் அடங்கிக் கொள்ள வேண்டும். எந்த இடத்தில் அடங்கிப் போனால் விழும் அடியின் வீச்சு குறைவாக இருக்கும் என்பதைப் புரிந்து வைத்துக் கொண்டு அடங்க வேண்டிய இடத்தில் அடங்குவதில்தான் குடும்ப வாழ்க்கையின் வெற்றி சூட்சமமே இருக்கிறது.

சண்டையின் போதும் சண்டை முடிந்த பிறகும் வாயைத் திறக்காமல் மனதுக்குள்ளேயே திட்டுவதில் ஒரு தனி சுகம் இருக்கிறது. எதிராளியின் மனதுக்குள் நம்மை எப்படி எல்லாம் திட்டிக் கொண்டிருப்பார் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். “கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டிருப்பாளோ? ச்சே..ச்சே இத்துனூண்டு சண்டைக்கு கெட்டவார்த்தையிலா திட்டுவாள்? இவளை நம்ப முடியாது. கண்டிப்பாக கெட்டவார்த்தையாகத்தான் இருக்கும். திட்டினால் திட்டட்டுமே. நமக்கா தெரியாது? நாமும் திட்டலாம்” என்று அந்த வசைக்கு சரியான எதிர் வசையை நம் மனதுக்குள்ளேயே சொல்லிப் பார்த்துக் கொள்ள வேண்டும். 

இதெல்லாம்தான் த்ரில். இதெல்லாம்தான் சுவாரஸியம்.

மீறிப்போனால் இருவரும் இழுத்துக் கொண்டு ஒரு நாள் கிடக்க வேண்டியிருக்கும். பிறகு சமாதானம். அவ்வளவுதான். 

கணவனும் மனைவியும் வாயைவிட்டு வார்த்தையை விடாமல் திட்டிக் கொள்வதை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கவிதையை வாசியுங்கள். கடலை மனைவியாகவும், பூனையைக் கணவனாகவும் நினைத்துக் கொள்ளலாம். கவிதையை வாசிக்கும் போதே சிரிப்பு வந்துவிடும். 

யாருமற்ற கடற்கரையில்
ஈரத்தடத்தில் கால்பதிய
நடந்து கொண்டிருக்கிறது பூனை

பூனை மிகவும் சோகமாக இருக்கிறது
ஆனால் கம்பீரமாக நடந்து செல்கிறது
கடலுக்கு முன் அப்படித்தானே இருக்கமுடியும்

கடலைப்போல மோசமான வாயாடி
இந்த உலகத்தில் வேறு இல்லை என்று
பூனை நினைக்கிறது

நினைத்துக் கொள்ளட்டுமே

கடலைப்போல கேவலமான வேசி
இந்த உலகத்தில் வேறு இல்லை என்று
பூனை நினைக்கிறது

தன் நினைப்பு அதற்குத் தெரியாதா என்ன 
என்று உள்ளுக்குள் நகைத்துக் கொள்கிறது

இருந்தாலும் பூனை சோகமாக இருப்பது கண்டு
தன் ஆர்ப்பாட்டங்களைக் குறைத்துக் கொண்ட கடல்
மிக நளினமாக நெளிந்தபடி
பூனையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது

பாவம் பூனை
தன் உலகத்தில் அதற்கு இடமில்லையே என்று
உள்ளுக்குள் தானும் நகைத்துக் கொள்கிறது கடல்
சோகப்படுவது போன்ற குறும்புத்தனத்தோடு முகத்தை வைத்தபடி

ரமேஷ்-பிரேமின் கவிதை இது. அவர்கள் கணவன் மனைவியை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கவிதையை எழுதியிருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் எங்கேயோ தினத்தந்தி செய்தியை வாசிக்கிறோம். கணவன் மனைவி சண்டையில் வெற்றியடையும் நுட்பங்களைப் பற்றி யோசிக்கிறோம். அதே சமயம் கவிதையை வாசிக்கிறோம். இந்த மூன்றையும் சேர்த்துக் கொள்ளும் போது நமது மனம் பரபரப்படைகிறது. சந்தோசமாகவோ அல்லது கனமாகவோ உணர்கிறோம் அல்லவா? இது கவிதையைப் புரிந்து கொள்ளுதலின் அடிப்படை.

Oct 28, 2014

பிரம்மஹத்தி தோஷம்

பத்து வருடங்களுக்கு முன்பாக பக்கத்து வீட்டில் ஒரு குழந்தை இருந்தது. திடீர் திடீரென்று எங்கள் வீட்டிற்குள் ஓடி வரும். நுழைந்ததும் முதல் வேலையாக மடியில் ஏறிக் கொள்ளும். குழந்தைதான். ஏழெட்டு வயது இருக்கும். எப்படியும் இருபது கிலோவாவது இருக்கும். தொடையே வலித்தாலும் அதை இறக்கிவிட முடியாது. வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டால் அழத் தொடங்கிவிடும். அது அழுது கொண்டே போனால் அந்த வீட்டுக்காரர்கள் என்ன நினைப்பார்களோ என்று யோசனையாக இருக்கும்.  ‘குழந்தையை மடியில் வைத்திருக்க முடியாதா? படுபாவி’ என்று திட்டமாட்டார்களா?

அலுவலகத்தில் ஒரு பையன் இருக்கிறான். ஜூனியர். தெலுங்குக்காரன். விடவே மாட்டான். மதியம் கூடவே வருவான். டீ குடிக்கச் சென்றால் ஒட்டிக் கொள்வான். அலுவலக வேலையின் போது அவ்வப்பொழுது வந்து நச்சரிப்பான். ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும் போது அருகில் வந்து நின்று கொள்வான். ‘போடா’ என ஜாடை காட்டினாலும் புரிந்து கொள்ள மாட்டான். ஓங்கி மண்டையிலேயே சாத்த வேண்டும் போலிருக்கும். சாத்தினாலும் சிரிப்பான் என நினைக்கிறேன்.

ஆயா உயிரோடு இருந்த காலத்தில் அவரது சொந்தக்காரப் பையன் ஒருவன் திரிந்து கொண்டிருந்தான். வேலை வெட்டியெல்லாம் எதுவும் இல்லை. சொந்தக்காரர்கள் வீடுகளாகத் தேடிச் சென்று உண்டுவிட்டு வருவான். அவன் வந்தால் ஆயாவுக்கு பற்றிக் கொண்டு வரும். ஒருவேளை சோறுதான். போட்டுவிடலாம். ஆனால் வீட்டில் ஒரு விஷயம் பேச முடியாது. மணிக்கணக்கில் அமர்ந்திருப்பான். தெரியாத்தனமாக ஏதாவது பேசினால் ஊர் முழுக்க தண்டோரா போட்டுவிடுவான். ஒரு அம்மிணியைப் பற்றி ஆயா ஏதோ உளறி வைக்க பற்ற வைத்துவிட்டான். அவ்வளவுதான். ஆயாவும் அந்த அம்மிணியும் வருடக்கணக்கில் காதில் புகைவிட்டுக் கொண்டு திரிந்தார்கள். இத்தனைக்கு பிறகும் வீட்டுக்கு வந்து கொண்டுதான் இருந்தான்.

சொல்லிக் கொண்டே போகலாம்.

நம் ஒவ்வொருவருக்கும் இப்படி ஏதாவது பத்து விஷயங்களையாவது நினைவுக்கு கொண்டு வந்துவிட முடியும். வெளிப்படையாகச் சொல்ல முடியாவிட்டாலும் அந்தரங்கமான ஒன்றாக இருக்கக் கூடும். ‘இந்தப் பழக்கத்தை எப்படியாவது விட்டுடலாம்ன்னு நினைக்கிறேன்’ என்கிற மாதிரியான விவகாரங்கள். பெங்களூர் நண்பர் ஒருவர் இருக்கிறார். முப்பத்தைந்து வயதாகிறது. திருமணம் செய்து கொள்ளவில்லை. கஞ்சா பழக்கம் உண்டு. ஒவ்வொரு சனிக்கிழமை மட்டும் உறிஞ்சுவார். அடுத்த நாள் முழுவதும் தூக்கத்திலேயே கிடப்பார். ‘விட முடியலையே’ என்பார்.

பிரம்மஹத்தி தோஷம் மாதிரி. பிடித்துக் கொண்டால் விடாது. நாம் தவிர்க்க விரும்பினாலும் விட்டுவிடாமல் நாய்க்குட்டிகளைப் போலத் தொடரும் இவற்றை என்ன செய்வது? அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அடுத்த மனிதராக இருக்கலாம். நம் பழக்கவழக்கமாக இருக்கலாம். ஏதாவதொன்று. தவிர்க்க விரும்புகிறோம். ஆனால் தவிர்க்க முடிவதில்லை.

இதற்கான தீர்வு எதுவும் என்னிடமில்லை. ஆனால் ஒரு கவிதை இருக்கிறது.

நரன் எழுதிய கவிதை. 

அவனுக்கு இந்த நாய்க்குட்டியை பிடிக்கவில்லை
அதன் உடலிலிருந்து
உண்ணிகளும் முடிகளும் உதிர்கின்றன
வாயிலிருந்து உமிழ்நீர் வடிகிறது
அதனால் வெளியே தள்ளிக் கதவைச் சாத்துகிறான்
வெளியே என்றால்
அந்த வீட்டின் வெளியே
அந்தக் கதவுக்கு அப்பால்
அல்லது
அவன் பார்வையின் குருட்டுப் பகுதிக்கு
அவனால் இந்த நாயை
உலகத்தின் வெளியே தள்ளி
கதவைச் சாத்த இயலவில்லை
உள்ளே அழைத்து உருட்டுக்கட்டையால்
நடுமண்டையில் அடிக்கிறான்
இப்போது வேகமாக ஓடுகிறது அது
உலகத்தின் கதவுகளை நோக்கி.

இந்தக் கவிதையைப் புரிந்து கொள்வதில் சிக்கல் எதுவும் இல்லை. அந்த நாயை அவனுக்கு பிடிக்கவேயில்லை. அடித்துத் துரத்த விரும்புகிறான். அப்படியே துரத்தினாலும் அந்த வீட்டுக்கு வெளியேவோ அல்லது கதவுக்கு அப்பால்தான் தள்ள முடிகிறது. உலகத்தை விட்டு தள்ள முடியுமா? முடியாமல் என்ன? உள்ளே இழுத்து உருட்டுக்கட்டையால் நடுமண்டையை பார்த்து அடிக்கிறான். இப்பொழுது ஓடுகிறது பாருங்கள்- உலகத்தின் கதவுகளை நோக்கி- சாகிறது.

இந்தக் கவிதையில் வரும் நாய் என்பது நாய்தானா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நாம் தவிர்க்க விரும்பும் என்னவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம் அல்லவா? தம் அடிப்பதை நிறுத்த வேண்டும். சரக்கடிப்பதை நிறுத்த வேண்டும். பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். இப்படி ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.

ஆனால் அந்த பக்கத்து வீட்டுக் குழந்தையையும், ஆயாவின் சொந்தக்காரப்பையனையும் எப்படி நாயாக நினைக்க முடியும்? அவர்களை வீட்டிற்குள் விட்டு நடுமண்டையில் சாத்தினால் அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் போலீஸ்காரர்கள் நம்மை ஜட்டியோடு அமர வைத்துவிடுவார்கள். 

ஆக, இந்தக் கவிதையில் வரும் நாயை வெறும் நாயாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. இன்னொரு மனிதனோடும் ஒப்பிட வேண்டியதில்லை. ஆனால் நம் அந்தரங்கமான சிக்கலாக எடுத்துக் கொள்ளலாம். அந்தச் சிக்கலை நம்மை விட்டுத் துரத்த விரும்புகிறோம். அதைச் சும்மா சும்மா வெளியே அனுப்பி கதவைச் சாத்தி பிரயோஜனமில்லை. திரும்பத் திரும்ப உமிழ்நீரை ஒழுக்கியபடி நம்மிடம் வந்து ஒட்டிக் கொள்ளும். வீட்டிற்குள் விட்டு ஓங்கி நடுமண்டையிலேயே சாத்த வேண்டும். ஒரே அடி. அவ்வளவுதான். 

Oct 21, 2014

படுக்கையில் ஒரு பிணமா?

எதுகை மோனையாக எழுதினாலே கவிதைதானே? என ஒருவர் கேட்டிருந்தார். இப்படியெல்லாம் அப்பாவியாக நம்பிக் கொண்டிருப்பதால்தான் தமிழில் கவிஞர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாகிவிட்டது. எதுகை மோனை இருந்தால் கவிதை, வார்த்தை ஜாலம் காட்டினால் கவிதை என்று யாரோ புரளியைக் கிளப்பிவிட்டார்கள். அதை அப்படியே நம்பும் தினத்தந்தியும் வாரமலரும் கர்மசிரத்தையாக பக்கங்களை ஒதுக்குகிறார்கள்.  அதில் பிரசுரமாகி வருவதையெல்லாம் நம்மவர்கள் கவிதை என்று நம்பிக் கொள்கிறார்கள். ஒரு கவிதையை அச்சில் பார்த்துவிட்டால் ‘கவிஞர்’ என்ற அடைமொழியை அழுந்தப் பற்றிக் கொள்கிறார்கள். அப்புறம் கவிதைத் தொகுப்பு வெளியிட்டு, விமர்சனக் கூட்டம் நடத்தி, விரைவில் முதலமைச்சராகிவிடலாம் என்று முடிவு செய்துவிடுகிறார்கள்.

அப்படி எழுதி கவிஞர்களாக ஃபார்ம் ஆகிவிட்டவர்களிடம் பேசிப் பார்க்க வேண்டும். ‘புரியாம எழுதறதெல்லாம் கவிதைங்களா? நவீனத்துவம், பின் நவீனத்துவம், சைடு நவீனத்துவம் என்று கொல்கிறார்கள்’ என்பார்கள். பின் நவீனத்துவத்தை நக்கலடித்தால் சைடு நவீனத்துவம் என்ற வார்த்தையை default ஆக சேர்த்துக் கொள்வார்கள். அதற்குமேல் அதை கலாய்க்கத் தெரியாது. அவர்கள்தான் அப்படி கலாய்க்கிறார்கள் என்றால் உருப்படியாக எழுதும் நம் கவிஞர்கள் அதற்கு மேல் இருப்பார்கள். ‘எழுதுவதோடு என் வேலை முடிந்துவிட்டது. அதைப் பற்றியெல்லாம் நான் பேசிக் கொண்டிருக்க மாட்டேன்’ என்று உச்சாணிக்கு ஏறிவிடுவார்கள். நல்ல கவிதைக்கு தமிழில் மொத்தமே நூற்றி பதின்மூன்று வாசகர்கள்தான். அவர்களிடம் கெத்துக் காட்டுகிறார்களாம்.

அவர்கள் பேசாவிட்டால் என்ன? நாம் பேசலாம்.

கவிதையில் புரியவில்லை என்கிற வார்த்தைக்கே இடமில்லை. புரியவில்லை என்றால் அதை skip செய்துவிட வேண்டும். யாராவது கேட்டால் ‘அதை நான் வாசிக்கவே இல்லை’ என்று கப்ஸா அடித்துவிட வேண்டும். அவ்வளவுதான். பிறகு ஓரளவுக்கு கவிதையின் நுட்பங்களை மோப்பம் பிடித்துவிட்டால் போதும். விட்டதையும் பிடித்துவிடலாம். 

முதல் பத்தியின் கேள்விக்கே வந்துவிடலாம். எதுகை மோனையாக எழுதினாலே கவிதைதானே? இல்லை. கவிதைக்கும் மொழியியல் அழகுக்கும் சம்பந்தமே இல்லை. ஒரு நிழற்படத்தை poetic என்கிறோம். ஒரு ஓவியத்தைப் பார்த்துவிட்டு ‘கவிதை கவிதை’ என்கிறோம். எப்படி? அதிலெல்லாம் எதுகை மோனை இருக்கிறதா என்ன? அப்படித்தான் கவிதையும். வாசித்தவுடன் நமக்குள் ஏதோ ஒரு ரஸவாதத்தை செய்கிறது. ‘அட ஆமாம்ல’ என்று சொல்ல வைக்கிறது. ‘இப்படிக் கூட இருக்குமோ?’ என்று யோசிக்க வைக்கிறது. அதுதான் கவிதை.

கவிஞன் பயன்படுத்தியிருக்கும் நுட்பமான மொழியை விடவும், கவர்ச்சியான வார்த்தைகளைவிடவும்,  அந்தக் கவிதை சொல்ல வருகிற விஷயம்தான் முக்கியம். அது பேசுகிற பொருள் முக்கியம். 

உதாரணத்திற்காக இந்தக் கவிதையைப் பார்க்கலாம்-

மீண்டும் ஒரு இரவு வந்தது

நாம் காதலிக்கிறோம் என்று 
சொல்லிக் கொள்வதை நிறுத்தி 
வெகுநாட்களானது
வழக்கம்போல்
நினைவுக்கு வந்தது

சோரம் போயிருந்த 
கனவு காலங்கள்
இருளை நீலமாக்கின

படிப்படியாய் 
பழக்கம் மறந்த
உடல்கள் சாதிக்கும்
கோர மவுனத்தை
அகந்தைகள்
தின்று கொறித்திருந்தன

உறங்கி எழும்
ஒவ்வொரு காலையிலும்
நம்மிடையே ஒரு பிரேதம் கிடக்கிறது
வெளியில் யாரும் அறியாமல்
அதை அப்புறப்படுத்துவதில்
அக்கறை செலுத்துகிறோம்

பகல்கள் பெரும்பாலும்
சிரமம் கொடுப்பதில்லை

இந்தக் கவிதையில் இடம் பிடித்திருக்கும் பாத்திரங்களை கணவன் மனைவி என்றே வைத்துக் கொள்ளலாம். காதலன் - காதலியாகக் கூட இருக்கலாம்தான். ஆனால் நம் சூழலுக்கு பொருந்தி வராது. திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம் அல்லவா?  

இரவு வருகிறது. இருவருக்குமிடையில் ‘ஐ லவ் யூ’ ‘ஐ மிஸ் யூ’வெல்லாம் எதுவும் இல்லை. இரண்டு பேரும் பேசிக் கொள்வதே இல்லை. இரவில் மெளனமாகக் கிடக்கிறார்கள். இரண்டு பேருக்குமே ஈகோ. அந்த அகந்தையினால் விளைந்த மெளனம் அது.  இரவு முழுவதும் இப்படியே விறகுக்கட்டை மாதிரி கிடக்கிறார்கள். கிட்டத்தட்ட பிணம் மாதிரிதான். அடுத்த நாள் மற்றவர்களுக்குத் தெரிந்துவிடுவதற்குள் தங்களுக்கிடையேயான அந்த மெளனத்தை- அதைப் பிரேதம் என்கிறார்- தங்களிடையே இருந்து நீக்க முயற்சிக்கிறார்கள். அதாவது மற்றவர்களின் முன்பாக இயல்பாக நடிக்கிறார்களாம்.

இரவில்தான் இந்தப் பிரச்சினை. எதிரியுடன் அல்லது நமக்கு பிடிக்காதவருடன் ஒரே படுக்கையைப் பகிர்ந்து கொள்வதுதான் சங்கடம். ஆனால் பகலில் இந்தப் பிரச்சினை இருப்பதில்லை. சுற்றிலும் நிறையப் பேர் இருக்கிறார்கள். மற்றவர்களின் முன்பாக இயல்பாக நடித்துவிட முடிகிறது.

இதுதான் கவிதை. மிக எளிமையான கவிதை.

சலித்துப் போன கணவன் மனைவி உறவை மிக இயல்பாகச் சொல்கிறது இந்தக் கவிதை. இந்தக் கவிதையில் என்ன எதுகை மோனை இருக்கிறது? என்ன ஜிகினா வேலை இருக்கிறது? எதுவுமே இல்லை. ‘சோரம் போயிருந்த கனவு காலங்கள் இரவை நீலமாக்கின’ என்ற வரி கொஞ்சம் யோசிக்கச் செய்கிறது. ஏன் நீலமாகியது என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. ‘கோர மவுனத்தை அகந்தைகள் தின்று கொறித்தன’ என்பது ஒரு சிறு மொழி விளையாட்டு. அதே போல ‘பழக்கம் மறந்த உடல்கள்’ என்று எந்தப் பழக்கத்தைச் சொல்கிறார் என்று தெளிவாகத் தெரிகிறது. 

சிறிய கவிதைதான். அதில் ஒரு இயல்புத் தன்மை இருக்கிறது. அதில் வாசகனை யோசிக்கச் செய்யும் சில வரிகள் இடம்பெறுகின்றன. கவிதைக்குள் உயிர் இருக்கிறது. அவ்வளவுதான். மனதுக்குள் பதிந்துவிடுகிறது. 

லீனா மணிமேகலையின் கவிதை இது. 

தமிழில் நிறைய பெண் கவிஞர்கள் எழுதுகிறார்கள். எழுதினார்கள். பெரும்பாலானவர்கள் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அமைதியாகிவிடுகிறார்கள். இது பெண் கவிஞர்களுக்கான பிரச்சினையில்லை. ஆண் கவிஞர்களுமே அப்படித்தான். ஆனால் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டும் உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் சில பெண் கவிஞர்களின் பெயர்களைச் சொல்லச் சொன்னால் லீனா மணிமேகலையின் பெயர்தான் முதலில் ஞாபகத்திற்கு வருகிறது. சரியோ தவறோ தனக்கு தோன்றுவதை எந்தத் தயக்கமும் இல்லாமல் நெற்றியில் அடிப்பது போலச் சொல்வதாலேயே லீனாவுக்கு நண்பர்களும் அதிகம் எதிரிகளும் அதிகம். லீனாவின் எல்லாக் கருத்துக்களுமே எனக்கு உவப்பானவை அல்ல. மிகச் சமீபத்தில் கூட பெண்களின் ஜீன்ஸ் பற்றி யேசுதாஸ் கருத்துச் சொன்னதற்காக Fuck Yesudass என்றார். லீனா சொன்னது தவறு என்பேன். ஆனால் தவறாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அதைச் சொல்வதற்கு லீனாவினால் மட்டும்தான் முடியும் என நினைக்கிறேன்.

Oct 14, 2014

எதையாவது விட்டு வைக்கிறோமா?

‘ரெண்டு பேர் உரையாடுற மாதிரிதானே இருக்குது? அதை எப்படி கவிதைன்னு சொல்ல முடியும்?’ இப்படி ஒரு நண்பர் கேட்டார். கவிதையே வாசிக்கமாட்டேன் என்று சொல்லியபடியே இரண்டு பேர் இந்தக் கவிதையைப் பற்றி பேசிவிட்டார்கள். சந்தோஷமாக இருந்தது. இப்படியே தினமும் ஒருவரையாவது குழிக்குள் தள்ளிவிட முடியும் போலிருக்கிறது. இரண்டு லட்சியம். ஒன்று நிச்சயம். 

அவர் குறிப்பிட்டது முகுந்த் நாகராஜனின் கிருஷ்ணராஜபுரம் ஸ்டேஷன் பற்றிய கவிதையை. அந்தக் கவிதை உரையாடல்தான். பாசாங்கு இல்லாத, தனது அறிவை வெளிப்படுத்தும்படியான தொனியில்லாத சாதாரணமான உரையாடல். ஆனால் அதை எல்லாவிதத்திலும் கவிதை என்று ஏற்றுக் கொள்ள முடியும். 

எப்படி?

ஊர் என்றால் அது வெறும் கல்லும் மண்ணும் மட்டுமில்லை அல்லவா? ஆறு, ஓடை, குளம், குட்டை தாண்டி எவ்வளவோ இருக்கின்றன. கிசுகிசுக்கள், சண்டைகள், கொண்டாட்டங்களையெல்லாம் தாண்டி என்னவோ இருக்கிறது. ஒவ்வொரு ஊருக்கும் ஆழமான கதை உண்டு. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நிறமிருக்கிறது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வாசனை இருக்கிறது. இதையெல்லாம் விட ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஆன்மா உண்டு. 

எவ்வளவுதான் காய்ந்து கிடந்தாலும் ஏன் நமக்கு சொந்த ஊரை மிகப் பிடித்துவிடுகிறது? ஏன் எப்பொழுதுமே ஒரு ஊர் ஸ்பெஷலாக இருக்கிறது? ஆறு மாதம்தான் வாழ்ந்திருப்போம் ஆனால் அந்த ஊரை மறக்கவே முடியாது. ஏன்? இந்தக் கேள்விகளுக்கு துல்லியமான பதிலைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிடிக்கிறது. அவ்வளவுதான். 

இப்படி காரணமேயில்லாமல் ஒரு ஊரைப் பிடித்துப் போவதற்கு என்ன காரணமாக இருக்கும்? ரயிலிலிலும் பேருந்திலும் பயணிக்கிறோம். நூற்றுக்கணக்கான ஊர்களைத் தாண்டித் தாண்டிச் செல்கிறோம். ஆனால் எத்தனை ஊர்கள் நம்மை கவனிக்கச் செய்கின்றன? ஒவ்வொரு ஊருக்குமே ஒரு வரலாறு இருக்கிறதுதான். கிட்டத்தட்ட அத்தனை ஊர்களுமே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக லட்சக்கணக்கான மனிதர்களைச் சந்தித்து வந்தவைதான். ஆனால் அவையெல்லாம் நம்மை சிலிர்க்கச் செய்வதில்லை. மாநகரங்களும், வரலாற்று சிறப்பு வாய்ந்த ஊர்களும் உருவாக்கவியலாத சிலிர்ப்பை நமது கிராமத்தால் உண்டாக்கிவிட முடியும். எப்படி? எந்த ஊரின் ஆன்மாவோடு நாம் பிணைந்திருக்கிறோமோ அந்த ஊர் நம்மை சிலிர்க்கச் செய்கிறது. அந்த ஊர் நம்மை மகிழ்வடையச் செய்கிறது அல்லது நெகிழ்வடையச் செய்கிறது. 

சரி..முகுந்த்தின் கவிதைக்கும் இந்த ஆன்மா விவகாரத்திற்கும் என்ன சம்பந்தம்? 

இந்தக் கவிதையை வாசித்துக் கொண்டிருந்த போது இதுதான் தோன்றியது. அதே பெங்களூர் கிருஷ்ணராஜபுரத்தில்தான் முதன்முதலாக புது மனைவியோடு வந்து இறங்கினேன். அங்குதான் ஒன்றரை வருடங்கள் குடியிருந்தோம். அப்பொழுதெல்லாம் யோசிக்காத கே.ஆர்.புரத்தைப் பற்றி நேற்று யோசித்துக் கொண்டிருந்தேன். கே.ஆர்.புரம் என்றில்லை கே.ஆர்.புரத்துக்கு பதிலாக நமக்குத் தெரிந்த வேறு எந்த ஊரின் பெயரையும் அந்தக் கவிதையில் இட்டும் வாசித்துப் பார்க்க முடியும். இப்படி ஏதோ ஒரு ஊரின் நினைவுகளை எந்தப் பிசிறுமில்லாமல் கிளறிவிட்டுப் போகிறது என்பதாலேயே அந்தக் கவிதை பிடித்தமானதாக இருந்தது.

இதுவரை போரடிக்கவில்லை என்றால் இன்னும் ஒரேயொரு விஷயத்தைச் சேர்த்துக் கொள்கிறேன்.

மிளிர்கல் நாவலில் கண்ணகி கோவலன் நடந்த பாதையிலேயே பயணிக்க வேண்டும் என்று டெல்லியிலிருந்து கிளம்பி வரும் முல்லை பூம்புகாரில் தனது நண்பனோடு சுற்றுவாள். அவள் எதிர்பார்த்து வந்த எதுவுமே பூம்புகாரில் இருக்காது. கண்ணகியின் வீடும், நாளங்காடியும், படகுத்துறையும் என அவள் எதிர்பார்த்த எதுவுமே இருக்காது. சலித்துப் போய் இனி திரும்பிவிடலாம் என்று முடிவு செய்வாள். அன்றைய தினம் அவளது கனவில் ‘நீ பார்க்க வந்தது வெறும் ஊரைத்தானா? அந்த ஊருக்கான ஆன்மாவை இல்லையா?’ என்று யாரோ கேட்பார்கள். துள்ளி எழுவாள். அதிலிருந்து நாவல் தொடங்கும்.

முகுந்த்தின் கவிதையை வாசித்துவிட்டு நாவலின் இந்தப் பகுதியையும் நினைத்துக் கொண்டேன். ஆழ்ந்து வாசிக்கப்படும் ஒரு நல்ல கவிதையால் இன்னொரு படைப்பு குறித்தான யோசனையையும் கிளறிவிட முடியும் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

இனி சங்கர ராம சுப்ரமணியனின் கவிதை ஒன்று-

மரத்தின் மெல்லிய
உச்சிக்கிளையில்
தியானத்தில்
உறைந்திருக்கும்
கொக்கின் சமநிலை குறித்து
சந்தேகங்கள் எழுப்பினோம்.
பறவையின் உடல் தகவமைப்பு
மற்றும் 
அவற்றின் எடைபகிர்வை
அவர்
கையை நீட்டி காற்றில் விளக்கியபோது
மரத்தின் உச்சிக்கிளைகள்
சடசடக்க
கால்கள் தடுமாறி
கொக்கோடு
மரமும் 
நடுங்குவதைப் பார்த்தபடி
நின்றோம்.

ஒரு கொக்கு, அதுபாட்டுக்கு சிவனே என்று அமர்ந்திருக்கிறது. இந்த சித்தோட்டு மைனர் தனக்குத் தெரிந்த அறிவையெல்லாம் காட்டுவதற்காக கையை வடக்கும் தெற்குமாக ஆட்டி அசைக்கிறார். கொக்கு பதறாதா? விடுங்கடா சாமிகளா என்று பறந்துவிடுகிறது. போகிற போக்கில் மரத்தையும் சேர்த்து அசைத்துவிட்டுப் போகிறது.

இதுதானே நமது இயல்பு? எதையாவது சமநிலையில் விட்டு வைக்கிறோமா? எதுவுமே அமைதியாக இருந்துவிடக் கூடாது. தஞ்சாவூர் ஜில்லா அமைதியாக இருக்கிறதா? மீத்தேன் வாயு இருக்கிறது என்போம். கிருஷ்ணகிரி அமைதியாக இருக்கிறதா? கிரானைட் இருக்கிறதென மலைகளுக்கெல்லாம் வெடி வைப்போம். எதையும் விட்டு வைப்பதில்லை. நமது அசுரப்பசிக்கு எதை வேண்டுமானாலும் அசைத்துப் பார்க்கிறோம். எங்கு வேண்டுமானாலும் சலனம் உண்டாக்குகிறோம். எத்தனை நாளைக்குத்தான் இந்த வானமும் பூமியும் கொக்குவைப் போல தியானத்தில் இருக்கும்? மொத்த மரமும் நடுங்கப் போகிறது.

இப்படியும் இந்தக் கவிதையின் தளத்தை மாற்றலாம்தான்.

இல்லை இல்லை. இவ்வளவு தூரம் அந்தக் கவிதையை நோண்ட வேண்டியதில்லை. இன்னமும் எளிமையாக- ஜென் நிலையில் கூட பார்க்கலாம் என்று யாராவது சண்டைக்கு வந்தால் ஆமாம் சாமி போட்டுவிடலாம்.

Oct 13, 2014

கிருஷ்ணராஜபுரத்தில் என்ன ஃபேமஸ்?

கவிதை என்றாலே பதறியடித்து ஓடுபவராக இருந்தாலும் கூட இந்த இரண்டு கவிதைகளை வாசித்துப் பார்க்கலாம். உங்களுக்கு பிடித்துவிடும். பிடிக்கவில்லையென்றால் 9663303156 என்ற எண்ணில் அழைத்துத் திட்டுங்கள். வாங்கிக் கொள்கிறேன்.

இவை முகுந்த் நாகராஜனின் கவிதைகள். 

தமிழில் கவிதைகளை மிக மிக இலகுவாக்கியவர் முகுந்த் நாகராஜன். அவரது கவிதைகளை புரிந்து கொள்ள எந்தச் சிரமமும் இருக்காது - நேரடியான கவிதைகள். தனது கவிதைகளை கிட்டத்தட்ட குழந்தைகளின் மனநிலையிலிருந்து எழுதுகிறார் அல்லது பெரியவர்களின் பார்வையில் குழந்தைகளின் உலகத்தை கவனித்து துல்லியமாக எழுதுகிறார். இவரது ‘அகி கவிதைகள்’ என்ற தொகுப்பு 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த போது தாறுமாறாக சிலாகித்தார்கள்.  ‘இதுதான்யா கவிதை’ ‘கவிதையில் நிகழ்ந்த புதுப்பாய்ச்சல்’ என்றெல்லாம் எழுதப்பட்ட வாக்கியங்கள் மிரளச் செய்தன. பிரம்மராஜன், தேவதச்சன், தேவதேவன் போன்றவர்களின் கவிதைகள் மட்டுமே கவிதைகள் என்று நம்பியிருந்த என்னைப் போன்ற பொடியன்களுக்கு முகுந்தின் கவிதைகள் உண்மையிலேயே கவிதைகள்தானா என்ற குழப்பம் உண்டானது.

இந்த இடத்தில் கவிதைக்கும் கவிதையைப் போல எழுதப்பட்ட போலிகளுக்குமிடையில் இருக்கும் வித்தியாசத்தை குறிப்பிட்டுவிட வேண்டும்.

ரொம்ப சிம்பிள். 

கவிதையில் எப்படியாவது பொய்யை விரட்டியடித்துவிட்டு உண்மை இடம்பெற்றுவிடும். ‘அந்த நிலாவை உனக்கு பிடித்துத் தரணும்ன்னு ஆசையாத்தான் இருக்கு..ஆனா அது எப்படி என்னால முடியும்?’ என்று உண்மையை ஒத்துக் கொண்டால் அது கவிதை. அதுவே ‘ஒரு ராக்கெட் செஞ்சு உனக்காக அந்த நிலாவுக்கு போயே தீருவேன்’ என்று உடான்ஸ் விட்டால் அது கவிதையைப் போல எழுதப்பட்ட போலி. கவிதையின் சிறப்பம்சமே அதன் உண்மைத்தன்மைதான். ஆனால் நம்மவர்கள் இருக்கிறார்கள் அல்லவா? ‘கவிதைக்கு பொய்யழகு’ என்று யாரோ அடித்துவிட்டு போனதை நம்பிக் கொண்டு இல்லாததும் பொல்லாததுமாக எழுதிக் குவித்து கவிதை என்று நம்ப வைத்துவிட்டார்கள். 

ஒரு காட்சி அல்லது உரையாடல் அல்லது நிகழ்வை எந்தவிதமான ஜிகினா வேலையுமில்லாமல் முகுந்த கவிதையாக்கினார். அதனாலேயே அவை கவிதைகளாக மின்னின. அவரது மொழியில் இருந்த நேரடியான தன்மையும் திருகல் இல்லாத நடையும் அவரை நோக்கித் திரும்பிப் பார்க்கச் செய்தன. Reading Pleasure என்பதை இவரது கவிதைகளில் முழுமையாக உணர முடியும். முகுந்த்தின் கவிதைகளை வெளிப்படையாக யாரும் எதிர்மறை விமர்சனம் செய்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் வாய்ப்பேச்சில் ‘அதெல்லாம் கவிதையே இல்லை’ என்று சில பெரிய கவிஞர்கள் சொன்னார்கள்.

இப்பொழுது யோசித்துப் பார்த்தால் அந்த பெரிய கவிஞர்கள் சொன்னதை நிராகரித்துவிடலாம் என்றுதான் தோன்றுகிறது. இவ்வளவு எளிமையாகவும் கவிதை எழுத முடியும் என்று  கவிதையின் போக்கில் ஒரு சலனத்தை உருவாக்கியவர் முகுந்த நாகராஜன். அடுத்தடுத்து அவரது ஒன்றிரண்டு தொகுப்புகள் வெளி வந்தன. ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது, க்ருஷ்ணன் நிழல் ஆகியன எனக்குத் தெரிந்த தொகுப்புகள். இவை தவிர வேறு ஏதேனும் தொகுப்புகள் வந்திருக்கின்றனவா என்று தெரியவில்லை. இப்பொழுது அவர் எங்கிருக்கிறார் என்று கூட தகவல் இல்லை. அவர் தொடர்ந்து எழுதாதது தமிழ் கவிதைக்கு ஒருவிதத்தில் இழப்புதான். பெரிய இழப்பு.

                                                                      (1)

கிருஷ்ணராஜபுரத்தில் என்ன ஃபேமஸ்?

‘இது என்ன ஸ்டேஷன்’ என்று கேட்டார்,
இரவுப் பயணம் முடிவை நெருங்கிய அதிகாலையில்.
‘கிருஷ்ணராஜபுரம்’ என்றேன் வெளியே பார்த்து.
‘இங்கே என்ன ஃபேமஸ்’ என்று கேட்டார் சகஜமாக.
திடுக்கிட்டேன் நான்.
இன்னொரு முறை கேட்டார்.
என்னவாக இருக்கும்?
மலைக் கோயிலா, அருவியா,
மத்திய அமைச்சரா,
இனிப்புப் பலகாரமா,
நாடி ஜோசியமா...
என்னவாக இருக்கும்?
இறங்கி உள்ளே போய்,
ஊர்க்காரன் எவனையாவது பிடித்துக் கேட்கலாம்.
ஆனால், ஒன்றுமே ஃபேமஸ் இல்லாவிட்டால்
அவமானத்தில் அவன் மனம் உடைந்துவிடக் கூடும்.
இல்லாவிட்டால், சனிக்கிழமைதோறும் கூடும்
சாதாரணச் சந்தையைப் பற்றி உற்சாகமாக
ஒரு மணி நேரம் பேசவும் கூடும்.
ரயிலோ இரண்டு நிமிஷம்தான் நிற்கும்.
அட, வெட்கம் கெட்ட கிருஷ்ணராஜபுரமே,
உனக்கெல்லாம் ஒரு ஸ்டேஷன் ஒரு கேடா?

                                                                (2)

உனக்குத் தெரிந்தால்

நீ எழுதிவிட்டுத் திருப்பித் தந்த பேனாவையும்
ஃபோன் செய்ய என்று பொய் சொல்லி
உன்னிடமிருந்து நான் வாங்கிய
ஒரு ரூபாய் நாணயத்தையும் 
இன்னும் வைத்திருக்கிறேன் பத்திரமாய்
அவ்வப்போது 
தொட்டுப் பார்த்துக் கொண்டும்
முத்தம் கொடுத்துக் கொண்டும்
இதெல்லாம் 
கல்யாணம் ஆகிக் குழந்தைகள் பெற்று
அம்மாவாகிப் போன உனக்குத் தெரிந்தால்
சந்தோஷப்படுவாய்தான்
ஆனால்..