Apr 4, 2012

திசை எனும் வாகனங்கள்

இலங்கையின் பொத்துவில் என்னும் ஊரிலிருந்து அகமது பைசால் என்னும் நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். தனது அடுத்த கவிதைத் தொகுப்பிற்கான முன்னுரை எழுதித் தரக் கேட்டபோது எனக்கு தயக்கமாக இருந்தது. அவரின் கவிதைகள் எனக்கு இதுவரை அறிமுகமானவை இல்லை என்பது அடிப்படையான காரணம். கவிதைகள் மனதுக்கு நெருக்கமானவையாக இருப்பின் நிச்சயம் கவிதைகள் குறித்து எழுதுவதாக உறுதியளித்திருந்தேன். கவிதைகளை பிரித்து அனுப்பிக் கொண்டிருக்கிறார். விட்டுவிட்டு பெய்யும் மழை போல. 

திசை எனும் வாகனங்கள்” என்ற ஒரு கவிதை இது.

திசைகள்
தன் கால்களையும், கைகளையும்
அகல விரித்து தெருவெல்லாம் கிடக்கின்றன 


நான் திசைகளைப் பாதங்களில் அணிகிறேன்
அது பராக்குக் காட்டி என்னை கூட்டிச்செல்கின்றன


போகும் வழியில்
பள்ளிக்கால நண்பனைக் கண்டு  
கொஞ்சம் அவனோடு பேசிக்கொண்டிருக்கிறேன்
விடைபெறும் நேரத்தில்
அவனிடமும் ஒரு திசையை வாங்கிக்கொண்டேன்
அது வைத்திய சாலைக்குப் போகும் திசை


என் எதிரில் ஒரு திசை
மண்ணில் உருண்டு புரண்டு என் முகத்தை ஆவலாகப் பார்க்கிறது
அது என் காதலியின் வீட்டுக்குப்போகும் திசை
அது என் கழுத்தை இறுக்கி என்னைக் கைது செய்கின்றது


இப்போது நான் 
திசைகளை கடலில் கொண்டுபோய் கரைக்கின்றேன்
கடலுக்குள் இறங்கிய ஒரு திசை
முதலாம் கடலை முதுகில் ஏற்றிக்கொண்டு 
சீனா செல்கின்றது
அங்கேயும் ஒருவன்
கடல் நீரில் திசைகளைக் கரைத்துவிட்டு
வெளிறிய கால்களுடன் திரும்பிச் செல்கின்றான்


புதிய திசைகள் 
அவனது கால்களில் ஒட்டிக்கொள்கின்றன

கடலைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் தங்களின் திசைகளை கடலினுள் கரைத்துவிடுகிறார்கள். கடல் அத்தனை திசைகளையும் தனக்குள் அமிழ்த்திக் கொண்டு திசையற்றதாகவும், திசைகள் குறித்த எந்தவிதமான பிரக்ஞையுமற்றதாகவும் தன் நீல அமைதியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. திசைகளின் மீதான கடலின் தீர்க்கவே முடியாத பசி பற்றிய சிந்தனையை இந்தக் கவிதை உருவாக்கியது. இனி எப்பொழ்து கடலை பார்த்தாலும் இந்தக் கவிதை நினைவுக்கு வரக்கூடும். நண்பனிடம் பெற்றுக் கொண்ட வைத்தியசாலைக்கான திசை, காதலியின் இல்லம் அமைந்திருக்கும் திசை, சீனத்தில் திசையைக் கரைக்கும் இன்னொருவன் என்பவை இக்கவிதையில் கிளை புனைவுகள். கவிதை வாசித்த கணத்திலிருந்து இந்த கிளை புனைவுகள் வெவ்வேறு மனநிலையை உருவாக்கி அலைவுறச் செய்து கொண்டிருக்கின்றன.

பைசால் அகமதுவின் இன்னும் சில கவிதைகளை நிலத்தோடு பேசுகிறேன் என்னும் வலைத்தளத்தில் வாசிக்கலாம்.

0 எதிர் சப்தங்கள்: