வணக்கம்
அன்புள்ள பாலமுருகன்,
என்னுடைய பெயர் சா.பாலமுருகன்.
குடந்தை அரசினர் கலைக் கல்லூரியில் ''தமிழ்க் கவிதைகள் - ஓரு மதிப்பீடூ''
என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டிருக்கிறேன். உங்களூடைய கலாப்ரியா குறித்த கட்டுரையை பார்வையிட நேர்ந்தது. மிகவும் நன்றாக இருந்தது
வினா : நவீன கவிதையும், புதுக்கவிதையும் ஒன்றா? வேறுபாடுகள் இருந்தால் சுட்டவும்
நன்றி
**************************அன்புள்ள பாலமுருகன்,
வணக்கம்.
மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட கவிதைகளை Modern Poetry என்கிறார்கள்.
Modern Poetry என்ற சொல்லை நவீன கவிதை என்றும் அல்லது புதுக்கவிதை என்றும் மொழி பெயர்க்க முடியும் என்றாலும்- தமிழ் கவிதைச் சூழலில் நவீன கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் அந்தச் சொற்களின் புழக்கத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் இருக்கின்றன.
புதுக்கவிதை என்ற சொல் வாரமலரின் கடைசிப்பக்கத்தில் வரும் கவிதைக்கும், திரைக்கவிஞர்களின் கவிதைகளுக்கும், மேடைக் கவிதைகளுக்கும் பொதுவானவையாக இருக்கின்றன. மரபை உடைத்த கவிதைகளில் பெரும்பாலானவை கூச்சல்கள் நிறைந்தவையாகவும், அலங்காரத்திற்கு முக்கியத்துவம் தருவனவாகவும் இருக்கின்றன. சில கவிதைகள் பிரச்சார தொனியிலானவை. இக்கவிஞர்கள் 'கவிதைக்கு பொய்யழகு' என வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டார்கள்.
தமிழ் கவிதையியலில் நவீன கவிதை என்பது ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, நகுலன் , பிரமிள், ஆத்மாநாம், ஞானக்கூத் தன், பசுவய்யா,சி.மணி,கலாப்ரியா,கல்யாண்ஜி, தேவதேவன், தேவதச்சன், சுகுமாரன், சமயவேல், மனுஷ்ய புத்திரன் என்ற கவிஞர்களின் தொடர்ச்சியாக வரும் கவிதைகளை குறிப்பிடவே பயன்படுத்தப்படுகிறது. Contemporary Poetry என்ற ஆங்கிலச் சொல் இந்தக்கவிதைகளுக்கு சரியாக பொருந்தும். இக்கவிதைகள் மேற்சொன்ன புதுக்கவிதைக்கு நேர்மாறானவை. நவீன கவிதைகளில் கவிஞன் துருத்திக் கொண்டிருப்பதில்லை. பிரச்சார நோக்கத்திற்காகவும் கவிதை பயன்படுவதில்லை.இங்கு கவிதை வாசகனுடன் நேரடியாக உரையாடுகிறது. நவீன கவிதையில் வாசகனுக்கும் கவிதைக்கும் இடையில் கவிஞன் என்பவன் வெறும் கருவி மட்டுமே.
கவிதைகள் தரக்கூடிய வாசிப்பனுபவம் என்பதையும் இந்தக் இரு வகையான கவிதைகளைப் பற்றி பேசும் போது கவனத்தில் கொள்ள வேண்டும். எதுகை மோனை போன்ற மொழி அலங்காரங்களும், நிறுத்தற்குறிகள் போன்ற பிளவுகளும் புதுக்கவிதையின் பிரதான அம்சங்களாக இருக்கின்றன. இவை மனித மனதின் மேல்மட்ட உணர்ச்சிகளை எளிதில் தூண்டக்கூடியவை. ஆனால் ஆழ்மனதில் உருவாக்கும் சலனம் என்பது எதுவுமில்லை.
நவீன கவிதைகளில் 'படிமம்' என்ற நுட்பம் பரவலாக பயன்படுகிறது. உதாரணத்திற்கு 'உடைந்த பாறை' என்பது ஒரு படிமம். கவிஞன் பாறை என்பதனை கவிதையில் ஒரு குறியீடாக பயன்படுத்தியிருக்கக் கூடும். இங்கு பாறை என்பது வெறும் கற்பாறை மட்டுமே இல்லை. அது சிதைந்த ஆளுமையைக் குறிப்பிடவோ, நொறுங்கிய மனதினைக் குறிப்பிடவோ கூட இருக்கலாம். என் அனுபவம் சார்ந்து அந்த படிமத்தை நான் 'எதுவாக' வேண்டுமானாலும் புரிந்துகொள்ளக் கூடும். அனுபவம் சார்ந்து கவிதை உருவாக்கும் சலனம் ஆழ்மனதோடு தொடர்புடையது. இதனை நவீன கவிதையின் முக்கியமான அம்சம் என நான் நம்புகிறேன்.
'படிமம்' என்பது மட்டுமே நவீன கவிதையின் நுட்பமில்லை. எல்லாக்கவிதைகளிலும் படிமம் இருக்க வேண்டிய அவசியமுமில்லை. மிக எளிமையான, நேரடியான நவீன கவிதைகள் இருக்கின்றன. அப்படியானால் இவை 'புதுக்கவிதை'யின் பிரிவில் வரக்கூடியனவா என்ற வினா எழலாம். இந்த இடத்தில் கவிதையின் வடிவம், அதன் உள்ளடக்கம் ஆகியவை கவனிக்கத் தக்கவை. (துருத்தலின்மை, கூச்சலின்மை போன்றவையும்). இந்த வித்தியாசத்தை தொடர்ச்சியான கவிதை வாசிப்பின் மூலமாக மிக விரைவில் புரிந்துகொள்ள முடியும்.
இந்த விளக்கம் மிகச் சிறிய குறிப்பு மட்டுமே. உங்களின் வினாவுக்கான பதிலை இன்னமும் விரிவாக்க முடியும்.
நன்றி.
வா.மணிகண்டன்.
8 எதிர் சப்தங்கள்:
நல்ல தீவிரமான அலசல். இன்னும் ஆழ்ந்துப் படிக்கவில்லை. படித்துவிட்டு பின்னோட்டம் இடுகிறேன்.
ஒரு வாசகர் உங்களுக்கு எழுதிய கடிதத்தை வெளியீடுகிறீர்கள். அவரின் அனுமதி இதற்கு உண்டா? தமிழ்சூழலில் பலரும் இப்படி செய்வதால் இது தவறு என்பதே பலருக்கு தெரிவதில்லை.மற்றபடி விளக்கம் நன்றாக இருந்தது. சர்வோத்தமன்
நன்றி சர்வோத்தமன். எனக்கு வரும் கடிதங்களில் எதையும் இதுவரை பிரசுரித்ததாக ஞாபகம் இல்லை. இந்தக் கடிதம் கவிதை பற்றிய பொதுவான சந்தேகத்தை கொண்டிருந்ததால் வெளியிட்டேன். ஆனால் அவரின் அனுமதி பெறாமல் வெளியிட்டது தவறுதான். அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறேன். அவர் என் செயலை தவறாக நினைக்கும்பட்சத்தில் என் வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவிக்கிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
புதுக்கவிதை என்பது மரபிலிருந்து வேறுபட்டு கவிதைகள் எழுதப்படத் துவங்கிய காலகட்டத்தில் அதன் வடிவ மாறுபாட்டிற்காக அப்படி அழைக்கப்பட்டதாகவும் (வானம்பாடிகள் போன்ற குஞ்சுகள் கூவித்திரிந்து அதன் தொடர்ச்சியாக நீங்கள் சொன்னது போல வாரப்பத்திரிகைகளில் குவிகிற குப்பைகளையும் அந்தப் பெயரில் அழைக்கிறார்கள். இந்த கடைசிப்பக்க, நடுப்பக்க 50 ரூபாய் பரிசுக் கவிதைகள் வானம்பாடிகள் மற்றும் பிரச்சார கவிதைகளின் இழிவான போலச்செய்தல்). அதன் வடிவ சுதந்திரத்தை இன்னும் செம்மை செய்து அதனோடு இருத்தலியல், நவீனத்துவ காலகட்டத்தின் நெருக்கடிகளை கவிதைகளின் உள்ளடக்கமாகக் கொண்டு எழுதப்படுபவற்றை நவீனக் கவிதைகள் என்லாமா? (புதுக்கவிதை என்பது வெறும் வடிவ மாற்றத்தை குறித்த சொல்லாகவும், நவீனக்கவிதை என்பதை அதன் உள்ளடக்கத்தில் நிகழ்ந்த மாற்றமாகவும் பார்க்க முடியுமா?)
நன்றி பாலசுப்ரமணியன்- தெளிவான குறிப்புக்கு.
நல்ல கேள்வி, சிறப்பான விளக்கம்.
பதிலிலிருந்து நிறைய புரிந்திருக்கும் நண்பருக்கு.
முக்கியமான இடுகை மணி சார்.
உண்மை தான் மணிகண்டன் வலைப்பூவில் புதிதாய் இணைந்திருக்கும் என்னைப்போன்றவர்களின்
பெருந்தாகத்திர்க்கு நீங்கள் குறைவாகவே பருகக் கொடுத்தீர்கள், எனினும் பாடிகார்ட் முனிஸ்வரன்
நீங்கள் விரும்பியதை தருவாராக.
ஒரு கேள்வி.
வலைப்பூவின் வாசகர்கள் மிகப்பெரும்பாலும் அடுத்தடுத்த இடுகைகளுக்கு சென்று வாசிக்காமல்
இருக்கும் மனநிலைக்கு என்ன காரணமாக இருக்க முடியும், இந்த நிலை மாறுமா, மாற்றமுடியுமா ?
( படைப்புகளின் தரம் என்ற காரணம் நானும் அறிந்தது )
புது என்பதன் சமற்கிருத மொழிபெயர்ப்பு தான் நவீனம். ஆக சொல்லளவில் ஒன்றே தான். ஆனால் அதை குறிக்கின்ற, எடுத்துக்காட்டுகிற பொருள் விளக்கத்தில் மாறுகிறது
Post a Comment