Apr 11, 2012

கவிதையில் புறச்சூழல்-ஓசூர் கவிதையுரையாடல்


ஓசூரில் ஏப்ரல் 08 ஆம் நாள் நிகழ்ந்த கவிதை உரையாடலில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை தமுஎகச-புது எழுத்து இணைந்து உருவாக்கித் தந்திருந்தார்கள். றியாஸ் குரானாவின் ”நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு” சாகிப் கிரானின் “வண்ணச்சிதைவு” ஆகிய தொகுப்புகள் உரையாடலுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. சாகிப்கிரானின் தொகுப்பு குறித்தான கட்டுரையை சமயவேல் மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருக்க, அந்தக் கட்டுரையை முகிலன் வாசித்தார். அதைத் தொடர்ந்து றியாஸின் தொகுப்பு குறித்து எச்.பீர் முகமது கட்டுரை வாசித்தார். ஒவ்வொரு தொகுப்பு குறித்தும் இருவர் பேசுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது என்பதனால் இவர்களைத் தொடர்ந்து ”வண்ணச்சிதைவு” பற்றிய கட்டுரையை சம்பு வாசிக்க, நான் “நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு” குறித்து கட்டுரை வாசித்தேன்.

கட்டுரை வாசிப்பினைத் தொடர்ந்து உரையாடல் நிகழ்ந்தது. நான் கலந்துகொண்ட வரையிலும் ஓசூரில் நிகழும் இலக்கிய உரையாடல்கள் எப்பொழுதுமே இதமானதாக இருந்திருக்கின்றன. ஆதவன் தீட்சண்யா, பா.வெங்கடேசன் உரையாடல்களை சுவாரசியமாக்கிக் கொண்டிருப்பார்கள். ஸ்ரீனிவாசன்,பெரியசாமி,முகிலன்,சம்பு போன்றவர்கள் மிகுந்த அன்புடன் பழகுவார்கள். வீடு திரும்பும் போது ஏதோ ஒன்று குறித்து “உருப்படியாக” பேசிய திருப்தி இருக்கும். 

கூட்டத்தில் புது எழுத்து மனோன்மணி அவர்களை நீண்டகாலத்திற்கு பிறகாக சந்திக்க முடிந்தது. இந்தப்பருவத்தில் வெளியான கவிதைத் தொகுப்புகளில் கவனம் பெற்ற தொகுப்புகளான வெய்யிலின் “குற்றத்தின் நறுமணம்”, றியாஸ் குரானாவின் “நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு”, சபரிநாதனின் “களம் காலம் ஆட்டம்”, பாம்பாட்டிச் சித்தனின் “இஸ்ரேலியம்” ஆகிய தொகுப்புகளை புது எழுத்துதான் வெளியிட்டிருக்கிறது என்பது கவிதையின் வாசகனாக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்பதனை கட்டுரை வாசிப்பதற்கு முன்பாக சுட்டிக் காட்டி சந்தோஷம் அடைந்து கொண்டேன்.

ஓசூர் நண்பர்களைத் தவிர்த்து பெங்களூரிலிருந்து ராம் சின்னப்பயல், கிருஷ்ணகுமார், திரு, கன்னட கவிஞர் கோவிந்தராஜ் ஆகியோரும், பெயர் பரிச்சயமில்லாத இன்னும் பல நண்பர்களும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.

                                                                 ****

இலக்கிய அரங்குகளில் கட்டுரை வாசிப்பதோடு நின்றுவிடுகிறேன். உரையாடலில் நான் அதிகமும் கலந்துகொள்வதில்லை. ‘கொள்வதில்லை’ என்ற சொல்லுக்கு பதிலாக ‘கொள்ளமுடிவதில்லை’ என்பது பொருந்திவரக்கூடும். 

விவாதத்தில் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த விவாதத்திற்கான பதிலை அல்லது எனது கருத்தை வெளிப்படுத்துவதற்குத் தேவையான தரவுகளை பதட்டத்துடன் மனதிற்குள் கோர்க்கத் துவங்கிவிடுகிறேன். கோர்த்து முடித்து பேசத் தயாராகும் போது விவாதம் வேறு ஒரு தளத்திற்கு நகர்ந்திருக்கும். பிறகு அமைதியாகிவிடுகிறேன். நண்பர்களுடன் தனித்து இருக்கும் போது நீண்ட நேரம் கவிதைகள் குறித்து பேசும் என்னால் கூட்டத்தில் பேச முடியாதது வியப்பாகவே இருந்துகொண்டிருக்கிறது. கோர்த்த தரவுகள் பிறிதொரு சமயம் கட்டுரையாக எழுதிவிடுவதற்கு பயன்படுகின்றன என்பதே விவாதத்தை முழுக்கவனத்துடன் கவனிக்கச் செய்யும் உந்துதலை அளித்துக் கொண்டிருக்கிறது.

இந்தக் கூட்டத்திலும் ஆதவன் தீட்சண்யாவும், பா.வெங்கடேசனும் முன்வைத்த கருத்து ஒன்றிற்கு பதிலளிக்க வேண்டும் என விரும்பினாலும் அதிகம் பேசாமல் மெளனமாக இருந்தேன். றியாஸ் குரானாவின் கவிதைகளை வாசிக்கும் வாசகரால், றியாஸ் வாழ்ந்த காலத்தின் புறச்சூழலையோ அந்தச் சூழல் எதிர்கொண்ட நெருக்கடிகளையோ காண முடியவில்லை என்று ஆதவன் தீட்சண்யா குறிப்பிட்டார். கவிஞனின் சூழல் சார்ந்த நெருக்கடி அல்லது புறச்சூழல் குறித்தான எந்தவிதமான சுவடுகளும் இந்தத் தொகுப்பில் இல்லை என்று பா.வெங்கடேசன் பதிவு செய்தார். 

கவிதையில் புறச்சூழல் குறித்தான பதிவு அவசியமில்லை என்பது என் நிலைப்பாடு. புறச்சூழல் பற்றிய பிம்பத்தை வாசகனுக்கு அந்தக் கவிதை உருவாக்கினால் அதில் மறுப்பதற்கு ஏதுமில்லை. ஆனால் புறச்சூழல் கவிதையில் இடம் பெறாத போது ’ஏன் புறச்சூழலை கவிதை பேசவில்லை’ என்று கவிஞனைப் பார்த்து கேட்கத் தேவையில்லை என நினைக்கிறேன்.

கவிஞன் வாழும் சூழலில் அவன் கவிதையாக்கிவிடுவதற்கான ஆயிரமாயிரம் அனுபவங்களும் காட்சிகளும் விரிந்துகொண்டேயிருக்கின்றன. அவற்றில் எவற்றை கவிதையாக்க வேண்டும் என்பதும் எவற்றை தவிர்த்துவிட வேண்டும் என்பதும் கவிஞனின் படைப்பு சார்ந்த உரிமை. கவிஞன் காலத்தின் பிரதிநிதியாகவோ அல்லது நிலத்தின் பிரதிநிதியாகவோ இருக்க வேண்டியதான அவசியமில்லலை என்பதைப் போலவே கவிதையும் காலத்தையும் நிலத்தையும் பதிவு செய்ய வேண்டிய தரவுகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

கவிதையின் வழியாக கவிஞன் தன் சிந்தனாமுறையையும்(Thought Process) அதனூடாக தன் அந்தரங்க அனுபவத்தையும் வெளிப்படுத்திக் கொள்கிறான். அந்த வெளிப்பாடு கவிஞன் என்ற மனித ஆத்மாவின் அந்தரங்கத்தின் வெளிப்பாடுதான். அந்த அந்தரங்க வெளிப்பாட்டை கவிஞனின் பெயரோடு சேர்த்து வாசிக்க வேண்டிய தேவையில்லை. கவிதையை வெறும் பிரதியாகக் காண்பதும்,  அந்தப்பிரதியின் வழியாக பெயரற்ற ஒருவனின் சிந்தனை வெளிப்பாட்டு முறையையும், அனுவத்தையும் புரிந்து கொள்வதும், அந்தப் பிரதி வாசகனின் அனுபவத்தில் உருவாக்கும் சலனத்தையும், வாசக மனதிற்குள் கலைத்துப் போடும் வர்ணங்களையும்தான் கவிதை தரக்கூடிய வாசிப்பனுவம் என்று நம்புகிறேன்

அந்தரங்கமான அனைத்து செயல்பாடுகளையும் அல்லது ஆசைகளையும் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் தனிமனிதனுக்கு இல்லாதது போலவேதான் கவிஞனுக்கும் தான் சார்ந்த அனைத்துச் சூழல்/அனுபவம் குறித்து வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. 

நேரடியாகச் சொல்ல முடியுமானால் பெயரற்ற அல்லது அடையாளமற்ற இருவருக்கு இடையிலான அந்தரங்கமான மெளனித்த பரிபாஷனையாக மட்டுமே கவிதை இருந்தால் போதும் என்றும் அது புறம், காலம், நிலம் என்ற எந்தக் கூறு குறித்தும் பிரதிநிதித்துவப் படுத்த தேவையில்லை எனவும் கவிதையின் வாசகனாக முழுமையாக நம்பிக் கொண்டிருக்கிறேன்.

றியாஸ் ஏன் போர்ச்சூழலை கவிதையில் கொண்டு வரவில்லை என்ற வினாவிற்கான பதில் “அது அவரின் உரிமை” என்பதாக இருக்கக் கூடும். அவர் தன் போர்ச்சூழலை எழுதாமல் தவிர்த்திருப்பதே கூட போரில் இருந்து தன்னை விலக்கிக் கொள்வதற்கான கருவியாக தம் கவிதைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று எடுத்துக் கொள்கிறேன்.


0 எதிர் சப்தங்கள்: