கவிஞர் தேவதச்சனுக்கு இந்த ஆண்டின் விளக்கு விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. தனித்துவமான கவிதை மொழியில் தமிழின் நவீன கவிதையை உயிர்ப்புடன் முன்னகர்த்திச் செல்லும் முன்னோடிக் கவிஞர் தேவதச்சன்.
எனக்கு முதலில் அறிமுகமான தேவதச்சனின் கவிதை
என்
அன்பின் சிப்பியை
யாரும்
திறக்க வரவில்லை
கடல்களுக்குக் கீழ்
அவை
அலைந்து கொண்டிருக்கின்றன
ஓட்டமும் நடையுமாய்
முதல் வாசிப்பிற்கு மிக எளிமையாகத் தோன்றும் இந்தக் கவிதை தரும் அனுபவத்தை என்னால் என்றைக்குமே விவரிக்க முடிந்ததில்லை. அன்பும் பிரியமும் உதாசீனப்படுத்தப்படும் போதெல்லாம் இந்தக் கவிதைதான் மனதின் படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கிறது. தனிமையில் கசங்கிக் கிடந்த இரவுகளில் எல்லாம் இந்த வரிகளை யோசித்ததுண்டு. இரண்டு அல்லது மூன்று வரிகளில் எழுதப்படும் கவிதைகள் நல்ல அனுபவத்தை தருவதில்லை என்று வாதிடும் நண்பர்களை தர்க்க ரீதியாக தோல்வியடையச் செய்வதற்கு இந்தக் கவிதையை முன் வைத்திருக்கிறேன். ஆனால் இந்தக் கவிதை மட்டுமே தேவதச்சனின் நல்ல கவிதையன்று.
தனக்கும் முன்பும் தனக்குப் பின்னாலும் இல்லாத கவிதையின் வடிவத்தில், அடர்த்தியில், பாடுபொருளில் தனித்தன்மையான கவிதைகளால் நிரம்பியிருக்கிறது தேவதச்சனின் கவிதை உலகம். கவிஞர் மிகச் சாதாரணமான கவிதைக் காட்சிகளில் சிக்கலான புதிர்களை உருவாக்குகிறார். நவீன வாழ்வின் அபத்தங்களையும் சிக்கல்களையும் புதிர்களாகக் கொண்டிருக்கும் இந்தக் கவிதைகள் விடுகதைகளைப் போன்றவை. இந்தப் புதிர்களின் விடைகளைக் கண்டறிவதில் இருக்கும் சுவாரசியத்தைத்தான் வாசக மனம் விரும்புகிறது. தேவதச்சனின் துண்டிக்கப்பட்ட கவிதைக் காட்சிகளை இணைத்துப் பார்ப்பதே புதிர்களின் சிண்டுகளை நீக்குவதைப் போலத்தான் இருக்கிறது.
தனக்குள் வரும் உயிரிகளை வெளியேற முடியாதபடி மூடி அவற்றை நொதிக்கச் செய்யும் 'நெப்பந்தெஸ்(Nepenthes)'தாவரத்தின் செயற்பாடுக்கு எந்தவிதத்திலும் சளைக்காததாகத்தான் தேவதச்சனின் கவிதைகளை என்னால் மதிப்பிட முடிகிறது. தனக்குள் வரும் வாசகனை திரும்பத் திரும்ப பேசச் செய்வன இக்கவிதைகள். இந்த நொதித்தல் குறுகுறுப்பான நொதித்தல். அந்த குறுகுறுப்பு மனம் விரும்பும் குறுகுறுப்பு.
ஊட்டியில் நித்யா கவிதை அரங்கில் தேவதச்சனோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. கவிதையியலைப் பற்றி மிக நுணுக்கமாக வெகு நேரம் பேசக் கூடிய ஆளுமைகளில் தேவதச்சனை மிக முக்கியமானவராகக் கருதுகிறேன். கவிதை அரங்கு முடிந்து மேட்டுப்பாளையம் வரும் வரையில் அவரோடு பயணித்தேன். வெற்றிலைக் குதப்பலின் மணத்தோடு வீசிய கவிதைகளை இன்னமும் சில கணங்களில் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
தேவதச்சனுக்கு வாழ்த்துக்களும், தகுதியானவருக்கு விருதைச் சூடிய அமைப்பினருக்கு பாராட்டுகளும்.
(தேவதச்சன் கவிதைகள் குறித்து எழுதிக் கொண்டிருக்கும் விரிவான கட்டுரையில் இருந்து ஒரு பகுதி)
3 எதிர் சப்தங்கள்:
தேவதச்சன் கவிதைகள் எனக்கும் மிக மிகப் பிடித்தமானவை மணி. அவற்றின் எளிய மொழி, பூடகம், நீங்கள் குறிப்பிடும் அந்த நிரந்தரக் குறுகுறுப்பு வேறு யாரிடமும் எனக்கு இந்த அளவு கிடைக்கவில்லை. மிக வித்தியாசமான கவிமனம் அவருடையது. விருதுக்கு மகிழ்வும், கொடுப்பவர்களுக்கு நன்றியும்.
நிச்சயம் தேவதச்சன் கவிதைகள் பற்றி விரிவாக எழுதுங்க மணி. நீங்களும் இந்த வருடம் நிறைய எழுத முயலுங்கள். புத்தாண்டு வாழ்த்துகள்.
நல்ல கட்டுரை மணி.முழு கட்டுரைக்காக காத்திருக்கிறேன்.
"இன்னும் தன் அம்மாவிடம்
சொல்லவில்லை
தான் குழந்தை உண்டாயிருப்பதை
ஓரிரு நாளில் அவள்
சொல்லிவிடக்கூடும்
அம்மாவிடம்
அம்மா சொல்வதற்கு
என்ன இருக்கிறது
இருக்கத்தான் செய்கிறது
எப்போதும்
இலையின் பின்பக்கம்
முன்பக்கத்திடம் சொல்வதற்கு
ஏதோ ஒன்று
எப்போதும் இருக்கிறது.
பின்பக்கம்
முன்பக்கத்திடம் சொல்ல முடியாத ஏதோஒன்று.
-தேவதச்சன்
- "இரண்டு சூரியன்" தொகுப்பிலிருந்து.
தனக்கும் முன்பும் தனக்குப் பின்னாலும் இல்லாத கவிதையின் வடிவத்தில், அடர்த்தியில், பாடுபொருளில் தனித்தன்மையான கவிதைகளால் நிரம்பியிருக்கிறது தேவதச்சனின் கவிதை உலகம்.
சொல்லிய விதம் அருமை
Post a Comment