Nov 17, 2010

நின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா

நவீன கவிதைகள் புரிவதில்லை என்று நண்பர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இன்றைய சூழலுக்கு, தமிழில் வெளிவரும் கவிதைகளை ‘நவீன கவிதைகள்’ என ஏதேனும் குறிப்பிட்ட கோட்பாடுகளுக்குள்ளாகவோ அல்லது வடிவத்திற்குள்ளாகவோ அடக்க முடியும் என்று தோன்றவில்லை.

ரசனையுடன் கவிதையை அவதானிக்கும் போது ‘பக்குவப்பட்ட, உண்மைத்தன்மையுடையன’ அல்லது ‘அலங்காரம் செய்யப்பட்ட சொற்க் கூட்டங்கள்’ என்று இரண்டு வகைகளுக்குள்ளாகவே கிட்டத்தட்ட அனைத்துக் கவிதைகளையும் மற்றும் கவிதை என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்டவைகளையும் உள்ளடக்கிவிடலாம். பக்குவப்பட்ட உண்மைத் தன்மையுடன் உள்ளனவற்றை கவிதை என்று தயக்கமில்லாமல் சொல்லிவிடலாம். மற்றவற்றை ‘கழிசடை’ என்று நிராகரித்துவிடலாம்.

இந்தத் தரம்பிரித்தல் பரிந்துரைகளின் மூலமாகவோ அல்லது மேதாவித்தனத்தாலோ செய்யக் கூடியதில்லை. தொடர்ந்து கவிதைகளை அணுகுவதாலேயே நிகழ முடியும். கவிதைகளை அணுகுதல் தொடர்ச்சியான வாசிப்பின் மூலமாக நிகழ வேண்டும். வாசிப்பின் மூலமாகவே வாசகன் உண்மையான கவிதைகளை நெருங்க முடியும். ஒரு கவிதை வாசகனுக்கு உண்மையான கவிதைகளை நெருங்குதல் எத்தனை முக்கியமானதோ அதே அளவுக்கு முக்கியமானது, போலிகளை விட்டு விலகுதலும்.

கவிதையுலகம், வாசகனுக்கும் தனக்கும் இடையில் இருக்கும் வெண் புகை மூட்டத்திற்கு அப்பாலிருக்கிறது. வாசகன் அந்த வெண்புகையைத் தாண்டி கவிதையை பார்க்க முயற்சிக்கிறான். ஒவ்வொரு வாசகனுக்கும் கவிதை தன் வேறுபட்ட வடிவங்களைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்த வடிவம் வாசகன் தன் மனதிற்குள் சேகரித்து வைத்திருக்கும் அனுபவங்களில் இருந்தே உருவாகிறது. கவிதைகள் பற்றிய கட்டுரைகளால் வாசகனுக்கும் கவிதையுலகத்திற்கும் இருக்கும் புகை மூட்டத்தை விலக்கிவிட முடியாது என்றாலும் ஒரு சிறு வெளிச்சத்தைப் பாய்ச்சி திசையை வேண்டுமானால் காட்டலாம்.

ஈரமேறிய மண்ணில் நின்று கொண்டிருப்பவனின் கால்களை நனைத்துச் செல்லும் ஓடையாக கவிதைகள் இருக்கின்றன. கவிதையின் மீதாக விருப்பம் இருப்பவர்கள் குனிந்து தங்களின் கைகளில் கொஞ்சம் கவிதைகளை அள்ளிக் கொள்கிறார்கள்.அவரவரின் கை வடிவத்திற்கு ஏற்ப அள்ளிய நீர் வடிவம் பெறுவதைப் போலவே, வாசகனின் அனுபவத்திற்கும் மனநிலைக்கும் ஏற்ப கவிதைகள் அவனுக்குள் வடிவம் பெறுகின்றன. தன்னை யாரும் அள்ளி எடுப்பதில்லை என்பதற்காக எந்தக் கவிதையும் நின்றுவிடுவதில்லை.

கவிதைப் புத்தகங்கள் விற்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு வருடமும் புதிய கவிஞர்கள் எழுதி வைத்திருக்கும் கவிதைகளோடு தங்களின் புத்தகக் கனவை சுமந்து திரிகிறார்கள். பதிப்பாளர்கள் கவிதைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கவிதை பற்றி யாராவது பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உலோகத் துணுக்குகளை ஈர்த்து தன் மீது ஒட்ட வைத்துக் கொள்ளும் காந்தமாகவே கவிதை இருந்து வருகிறது. கவிதைகளைப் பற்றி பேச எத்தனிக்கும் போதெல்லாம் கவிதையோடு ஒட்டிக் கொண்டு கிடக்கும் ஒரு உலோகத் துணுக்காக என்னைக் கற்பிதம் செய்து கொள்கிறேன்.

கவிதைகளைப் பிரித்து அர்த்தம் சொல்வதோ அல்லது கவிதைகளுக்கு விளக்கம் சொல்வதோ அந்தக் கவிதையின் எல்லைகளைச் சுருங்கச் செய்வதாகவே இருக்கும். இந்த ‘அருஞ்சொற்பொருள்’ கூறலை விடவும் வேறு விதத்தில் கவிதையை தரம் தாழ்த்திவிட முடியாது. கவிதையைப் பற்றி எழுதுவதால் என்ன பயன் என்று கேட்கத் தேவையில்லை. கவிதைகளைப் பற்றி அவ்வப்போது எழுதிய போதெல்லாம் குறைந்தபட்சம் நான் புரிந்து வைத்திருக்கும் ‘கவிதை’ என்பதிலிருந்து இன்னொரு பரிமாணத்தை நோக்கி நகர்வதற்கு அது உதவிகரமாகவே இருந்திருக்கிறது.

கவிதையில் புரியாத அம்சம் என்ன இருக்கிறது என்று பார்ப்பதை விடவும், கவிதையில் புரிந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது என்பதை அலசுவதுதான் பொருத்தமானதாக இருக்க முடியும்.

விரித்த என் பாயில்
மீதமிருந்த இடத்தில்
படுத்து ஒடுங்குகிறது குளிர்காலம்.
பூக்கள்
ஒரு புன்னகையின்
தொடக்கமா முடிவா
என்றுதான் நான் கேட்டேன்.
அது என்னைக் கட்டியிறுக்கி
காலோடு கால் பின்னிக் கொண்டது.
அடுப்பில் விறகு அணைந்திருக்கிறது
எழுப்பிவிடட்டுமா என்று கேட்டேன்.
கைகளையும் பின்னிக்கொண்டது.
இரவு தீர என்னோடு
உறங்கிக் கிடந்தது.
சூரியசாட்டையிலிருந்து
மஞ்சள் ரத்தம் பரவியபோது
ஒரு முத்தத்தை உடைக்கமுடியாமல்
இரண்டு உதடுகள் திணறின
காட்டுக்கு வெளியே.


பிரான்சிஸ் கிருபாவின் இந்தக் கவிதையை ஐந்து காட்சிகளாக பிரித்து வாசிக்கலாம்.

விரித்த என் பாயில்
மீதமிருந்த இடத்தில்
படுத்து ஒடுங்குகிறது குளிர்காலம்.

இந்த வரிகள் நேரடியானவை- குளிர்காலத்தில் பாயில் படுத்துக் கிடக்கிறான் கவிஞன். குளிர் எப்பொழுதும் விரவித்தான் கிடக்கும், ஆனால் தன்னுடன் பாயில் படுத்து ஒடுங்குகிறது என்ற வரிகள் கவிஞனின் தனிமையை பிரதிபலிக்கிறது. அவனுக்கு யாருமில்லை- அந்தப் பருவத்தைத் தவிர.

பூக்கள்
ஒரு புன்னகையின்
தொடக்கமா முடிவா
என்றுதான் நான் கேட்டேன்.
அது என்னைக் கட்டியிறுக்கி
காலோடு கால் பின்னிக் கொண்டது.

இது இரண்டாவது காட்சி. பூக்கள் பற்றி பேசும் போது எதற்காக குளிர்காலம் கவிதைசொல்லியின் கால்களோடு காலை வைத்து பின்னிக் கொள்கிறது என்பதற்கு நேரடியான விளக்கம் கவிதையில் இல்லை. குளிர்காலத்தையும் பூக்களையும் சம்பந்தப்படுத்தியும், குளிர்காலத்தையும் புன்னகையையும் சம்பந்தப்படுத்தியும் அல்லது வேறு இணைப்புகளோடும் கவிதையைப் பற்றி வாசகன் யோசிக்கத் துவங்குகிறான். இந்த யோசனையில் ஒரு விடையை அவன் கண்டுபிடித்துவிட்டால் இந்த வரிகள் வாசகனுக்கு நெருக்கமானதாக ஆகிவிடுகிறது.

ஒரு கவிதை வாசகனாக நான் இந்த வரிகளை இப்படி புரிந்து கொள்கிறேன்- குளிர்காலத்தில்,வெறும் பாயில், தனிமையில் படுத்துக்கிடக்கிறான் கவிஞன்.அது தனிமையில் நடுங்கிக் கிடப்பவனின் துக்ககரமான ஒரு இரவு. இந்த நேரத்தில் பூக்களைப் பற்றியும் அல்லது புன்னகையைப் பற்றியும் அவன் யோசிப்பதற்கான அவசியமே இல்லை. அந்தச் சூழலின் அழுத்தமே இந்த வரிகளில் வெளிப்படுத்தப் படுகிறது.

அடுப்பில் விறகு அணைந்திருக்கிறது
எழுப்பிவிடட்டுமா என்று கேட்டேன்.
கைகளையும் பின்னிக்கொண்டது.
இரவு தீர என்னோடு
உறங்கிக் கிடந்தது.


அடுப்பில் அணைந்திருக்கும் நெருப்பினை எழுப்பிவிடும் போது, வெம்மை சூழத் துவங்கும். வெப்பம் பரவினால் குளிர்காலம் அந்த இடத்தில் இருக்க முடியாது என்பதால் நெருப்பை எழுப்பிவிடுவானோ என்று குளிர்காலம் பயந்து கவிஞனின் கைகளை பின்னிக் கொள்கிறது. இது இந்தக் கவிதையில் இருக்கும் இன்னொரு நேரடிக் காட்சி.

சூரியசாட்டையிலிருந்து
மஞ்சள் ரத்தம் பரவியபோது

சூரியச் சாட்டை, மஞ்சள் ரத்தம் என்ற சொற்பிரயோகங்கள் விடியலை கவித்துவமாகச் சொல்வதாக இருக்கிறது. ‘மஞ்சள் ரத்தம்’ என்ற சொல்லை விட்டு விலகுவதற்கு கண நேரம் பிடித்தது.

ஒரு முத்தத்தை உடைக்கமுடியாமல்
இரண்டு உதடுகள் திணறின
காட்டுக்கு வெளியே.

இந்த வரிகள் கவிதையில் மீண்டும் வரும் புதிரான வரிகள்.

விடியும் போது முத்தத்தை உடைக்க முடியாமல் திணறுபவர்கள் யார்? இரண்டு உதடுகள் என்பது இரண்டு பேர்களின் உதடுகளா அல்லது யாருக்கோ முத்தமிட முயன்று தோற்றுக் கொண்டிருக்கும் ஒருவனின் இரண்டு உதடுகளா? அப்படியெனில் யார் யாருக்கு முத்தமிட முயன்று கொண்டிருக்கிறார்?

இரண்டு பேர்களின் உதடுகள் என்றால் யார் அந்த இரண்டு பேர்கள்? கவிஞனும் குளிர்காலமுமா? அல்லது வேறு யாரேனுமா? இந்தக் கவிதையில் வேறு யாருக்கும் இடமில்லை. அதனால் கவிஞனும் குளிர்காலமும் முத்தத்தை உடைக்க முயல்கிறார்கள். இது எளிமையான புரிதல். சிறு சீண்டலோடு ஒரு காட்சியாக கவிதை நின்றுவிடுகிறது.

வேறு மாதிரியாக யோசித்தால்- கவிஞன் குளிர்காலத்தை எதற்கு முத்தமிட வேண்டும்? குளிர்காலம் என்பதும் இங்கு வேறொரு மனிதன்தான். குளிர்காலம் என்பது பெண்ணாக இருக்கலாம் அல்லது ஆணாகவும் இருக்கலாம். இப்படி யோசித்தால் கவிதை மீண்டும் தொடங்குகிறது. கவிதையை மீண்டும் வாசித்தால் பூக்களுக்கும், நெருப்புக்கும் வேறு பொருள் வருகிறது.

அல்லது முற்றும் வேறுமாதிரியாக இன்னொரு வாசகன் யோசிக்கலாம்.

இப்பொழுது கவிதை வாசகனோடான தனது கண்ணாமூச்சி ஆட்டத்தை தொடங்குகிறது.
நன்றி: சொல்வனம்

3 எதிர் சப்தங்கள்:

anujanya said...

நான் இந்தக் குளிர் காலத்தை ஊடல் அல்லது தீவிர கோபம் கொண்டிருக்கும் துணையாகத்தான் கற்பனை செய்துகொண்டேன். மஞ்சள் ரத்த வெளிச்சத்தில் நான் புரிந்து கொண்டது இப்படி :)

தொடர்ந்து கவிதைகள் பற்றி நீங்கள் எழுதி வருவது மிகவும் பிடித்திருக்கிறது மணி. இதனை buzz இல் போடலாமே? இல்லாவிட்டால் நான் re-share செய்யலாமா?

அனுஜன்யா

ஜெயசீலன் said...

ஒரு ஆய்வு அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது... மிக நேர்த்தியாக கவரும் அற்றல் உங்கள் எழுத்தில் தெரிக்கின்றது... உங்களுக்காக எழுந்து நின்று கைத்தட்டினேன்... அருமை... அருமை... தொடருங்கள்... வணக்கம்.

சர்வோத்தமன் சடகோபன் said...

ஒரு முத்தத்தை உடைக்கமுடியாமல்
இரண்டு உதடுகள் திணறின
காட்டுக்கு வெளியே.

இதை வாசித்த போது மொட்டுகளாகக்கூட இருக்கலாம் அப்படியாக மொத்த கவிதையும் மனிதர்கள் அற்றதாக இருப்பதாக பட்டது.