Aug 20, 2012

மிஞ்சிய குழந்தை



உனக்கும் எனக்குமான அத்தனை தொடர்புகளையும்
துண்டிக்கிறேன்.

உனது ஞாபகங்களை புதைத்துவிடுவேன்
என்ற போது
அது சாத்தியமா என நீ சிரித்த கணத்தை
ஒரு முறை நினைத்துக்கொண்டு புதைக்கிறேன்

உனக்கான கண்ணீரை கொஞ்சம் மிச்சம் வைத்திருந்தேன்
அதை வற்றிய இந்தக் குளத்தில் ஊற்றிய போது
குளத்தின் காய்ந்த கண்களில் தெரிந்த கருணை
நமது முதல் ரகசிய முத்தத்தை நினைவூட்டியது தற்செயலானதுதான்

நம் மாலைப் பொழுதுகளை
தீர்த்த
இந்த ஆலமரத்தை வெட்டச் சொல்லி ஏற்பாடுகள் செய்தாகிவிட்டது

படுக்கையை யாரோ ஒருத்திக்கு கையளித்தாயிற்று
தலையணை
மெத்தை
படுக்கை விரிப்புகள்-
நாம் பகிர்ந்து கொண்ட சகலமும்
எரிந்து கொண்டிருக்கின்றன

புன்னகைகளை அழிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை
விட்டுவிட்டேன்

உனது உடைமைகளை பிரித்து எடுத்துக் கொண்டாய்

எனது முதல் வாழ்த்துமடலை
நீ கசக்கிய போது
நம்மிடம் எந்தச் சலனமுமில்லை
இப்பொழுது கடைசியாக
இந்த வீட்டில் மிடறு தண்ணீரை
அருந்திக் கொள்கிறோம்

சிலிண்டரை திறந்துவிட்டு
பூட்டியாகிவிட்டது

ஒரு தீக்குச்சியை உள்ளே வீசப் போகிறேன்

கடைசியாக மிஞ்சும் இந்தக் குழந்தையை
எரியும் வீட்டிற்குள் வீசுவதா
அல்லது
கைப்பைக்குள் வைத்திருக்கும் ப்ளேடை எடுப்பதா
என
நீ யோசித்துக் கொண்டிருக்கிறாய்.
நானும்.

நன்றி: மலைகள் இணைய இதழ்

May 7, 2012

பாதை தொலைத்த நாய்கள்




கிராமத்தை
நெடுக்காக பிளந்து செல்லும்
நெடுஞ்சாலையை
கடக்க காத்திருக்கும்
அவள்
நேற்றைய மழையில் துளிர்த்த
பசுந்தளிர் ஒன்றைக் கிள்ளி
உள்ளங்கையில் வைத்திருக்கிறாள்
வியர்வையில் கசங்கிக் கொண்டிருக்கும் அது
நசுங்கிக் கிடந்த நாயொன்றை நினைவுபடுத்துகிறது
பதட்டத்தில் தளிரை வீசியெறிந்தவள்
நெடுஞ்சாலைகளில் மரிக்கும் நாய்களுக்காக
ஒரு கணம் மெளனிக்கிறாள்
மணிக்கு நூற்றியிருபது கிலோமீட்டர் வேகத்தில்
அவளைக் கலைக்கிறது
கறுப்பு நிற ஸ்கார்ப்பியோ.


படம்: Michel Keck

Apr 25, 2012

பருவம் மாறும் பிரியம் அல்லது வேறெதுவும்



அது துவக்கத்தில் மிக எளிதானதாக இருந்தது
உறைந்த தேங்காய் எண்ணெயில் கீறப்படும் கோடு என
நீங்கள் குறிப்பிட்டபோது
வண்ணத்துப்பூச்சிகள் அமர்ந்த ரோஜாப்பதியனின் பனித்துளிகளை
மென்சுண்டுதலில் சிதறடித்துக் கொண்டிருந்தது ஞாபகத்தில் இருக்கிறது

அதுவே பிறகு சற்று கடுமையானதானது
கறிவேப்பிலை மரத்தில் பூச்சி பிடித்திருந்த அந்தப் பருவத்தில்
வெடித்திருந்த பாதைகளில்
நடந்து களைத்திருந்தேன்
தாகம் உதடுகளை வறண்டுவிடச் செய்கையில்
அந்த ஈ
முகத்தில் விளையாடிக்கொண்டிருந்தது
நாம் பற்கள் தெரியாமல் புன்னகைத்துக் கொண்டோம்

இப்பொழுதெல்லாம் மிகச் சிக்கலானதாகிவிட்டது
முறுக்கேறி கன்னங்கள் பிளந்து கிடக்கின்றன
அவ்வப்பொழுது இரத்தம் போன்ற திரவம் பிசுபிசுத்து அப்பியிருக்கிறது
இந்த அவலத்தை நீங்கள் பார்த்துவிட வேண்டாம்
உங்களிடம் சொல்வதற்கு எதுவுமில்லாத
நான்
அழுவது குறித்தான நம்பிக்கையையும் இழந்துவிட்டேன்.

Apr 16, 2012

டைனோசர்களுடன் வாழ்பவன்


டைனோசர்களை வளர்க்கும்
என் பக்கத்து வீட்டுக்காரரின் பற்களில்
கண்கள் முளைத்திருக்கிறதென
வெளியூர்களிலிருந்து வந்து பார்க்கிறார்கள்
அவர்களிடம்
தன் பற்களைக் காட்டும் அந்த மனிதன்
ஒருபோதும் டைனோசர்களைக் காட்டுவதில்லை
தெருவோரம் கிடந்த டைனோசர் குட்டியை
முதன் முதலாக
அவர் எடுத்து வந்தபோது
அருகாமையில் எதிர்த்தார்கள்
அக்குட்டி வளர்கையில்
இரத்த கவிச்சை வீச குறையத் துவங்கியது
எதிர்த்தவர்களின் எண்ணிக்கை
இப்பொழுது நிறைய டைனோசர்களை வளர்க்கிறார்
அவைகளுக்கென வீடுகளை
வாடகைக்கு பிடிக்கிறார். வீடு தராதவர்களை
அவைகளுக்கு உணவாக்கி விடுவதாக மிரட்டுவதும் உண்டு
அதன்பிறகாக வாடகை தருவதில்லை
டைனோசர்கள் அவர் மீது மிகுந்த அன்பு செலுத்துவதை
அவரின் பாதத்தை தம் சொர சொர நாவினால் தடவுவது உட்பட-
ஜன்னலில் ஒளிந்து பார்த்திருக்கிறேன்
சமீபமாக
வீடுகளுக்கு அதிக சேதாரமில்லாமல்
அவை
அடங்கி வாழக் கற்றுக் கொண்டதாக டீக்கடைக்காரரிடம் சொல்லியிருக்கிறார்
டைனோசர்களுடன் வாழ்வது எப்படி என்ற புத்தகம் வாசிப்பதை 
தினசரி வழக்கமாக்கிக் கொண்ட எனக்கு
டைனோசர்களின் அருகில்
அவன்
என் குழந்தையயை தூக்கிச் சென்றதாக கேள்விப்பட்ட
வெள்ளிக்கிழமையிலிருந்து
விரல்கள் சில்லிட்டுக் கிடக்கின்றன
எதிர்க்கவே முடியாத மனிதனிடம்
மறுப்பு சொல்வதற்கான வழிமுறைகளை
கூகிளில் தேடி
இரவுகள் தீர்ந்து கொண்டிருக்கின்றன
இதுவரை கடுமை காட்டப்படாத குழந்தையிடம்
இனி அவனிடம் போகக்கூடாது என மிரட்டிய கணம்
அதன் பற்கள் சிமிட்டியதை பார்த்தேன்.


நன்றி: 361 டிகிரி சிற்றிதழ்

Mar 22, 2012

மூன்று தினங்களாக உங்களை அழைத்துக் கொண்டிருப்பவன்


மூன்று தினங்களாக
உங்களை அழைத்துக் கொண்டிருக்கும் அவனுக்கு
பெயர் எதுவுமில்லை
ஓவ்வொருவரின் பெயரையும்
அவர்கள் திரும்பிப்பார்க்கும் வரை உச்சரித்துவிட்டு
பிறகு சலனமில்லாமல் நகர்ந்துவிடுகிறான்
இதுவரை நீங்கள் திரும்பிப்பார்க்காதது குறித்த
எந்த வருத்தமுமற்ற அந்த மனிதன்
தன்
ஈரம் வற்றிய குரலில்
உங்களின் பெயரை
கமறிக் கொண்டிருக்கிறான்
உங்களை அழைப்பதற்கு முன்பாக
எதிர்வீட்டு கணித ஆசிரியரை அழைத்திருந்தான்
குழப்பத்தில் ஸ்கூட்டரில் இருந்து விழுந்தவர்
டெட்டால் வாசனை வீசிக்கொண்டிருக்கும்
மண்டை காயத்துடன் பரிந்துரைக்கிறார்
அவனை நீங்கள் திரும்பிப்பார்க்க வேண்டுமென
எதைப்பற்றியும் கவலையுறாத
நீங்கள்
நெற்றியில் மூன்றாவது கண் முளைக்கத் தொடங்கும்
என நம்பிக் கொண்டிருக்கையில்
நிலவும் வெள்ளியும்
இன்றிரவு
நேர்கோட்டில் வருவதாகச் சொல்லிக்கொண்டிருப்பவர்
பெட்ரோலை ஊற்றி முடித்திருந்தார்
உங்களின் தலையுச்சியில்


நன்றி: கல்கி வார இதழ்

Mar 8, 2012

மூக்குத்தி தேவதை



விபத்துகளில் தப்பித்துக் கொண்டிருந்த
அவனிடம்
மூன்று கேள்விகளை கேட்க விரும்பிய கடவுள்
முதலில்
ஒரு பன்றிக்குட்டியை தூது அனுப்பினார்
தொந்தரவுகளை விரும்பாதவன்
முதல் கேள்வியே புரியவில்லை என்று திருப்பியனுப்பியதில்
கோபமுற்ற கடவுள்
முதல் கேள்வியைத் தவிர்த்துவிட்டு
இரண்டாம் கேள்விக்கான பதிலை தரச்சொல்லி
குழந்தையை அனுப்பியிருந்தார்
அக்குழந்தைக்கு இனிப்பொன்றை கொடுத்து
பதிலின்றி அனுப்பி வைத்தான்
அவமானமுற்ற கடவுள்
மூன்றாம் கேள்வியுடன் அவன் இடத்தை அடைந்தபோது
அவன் காணாமல் போய்விட்டதாகச் சொன்னார்கள்
217 வருடங்களாக
அவனைத் தேடிக் கொண்டிருக்கும் கடவுளின்
கேள்விகளை கண்டறிய
தவமிருக்கும்
இந்த மூக்குத்தி தேவதைக்கு தெரிய வாய்ப்பில்லை
அந்தக் கேள்விகள் உங்களிடம் இருக்கிறதென.

Jan 7, 2012

நம் மழைக்காலம்

உள்துறை இலாகவை என் அமைச்சரவையில் சேர்ப்பதற்கான அழைப்பிதழில் எழுதப்பட்டிருந்த கவிதை. Irreversible dent :-)




உன் ப்ரியம்
படர்ந்த
நாட்களின் நடனத்தில்
கரைகிறது
தீராத் தனிமை

சாரலில்
நிறமழியாமல் பறக்கும்
வண்ணத்துப் பூச்சிகளின்
வாழ்த்துகளில் தொடங்கும்
நம்
மழைக்காலத்தில்
உன் கரங்களை
பற்றிக் கொள்கிறேன் -

ஆயிரம் ஆண்டுகளுக்கான
தீரா
ப்ரியங்களுடன்.

Dec 19, 2011

குழந்தையின் ஒற்றை நாணயம்



ஒற்றை நாணயத்தை
சுண்டிக் கொண்டிருக்கும்
குழந்தையின் அருகில்
அசிரத்தையாக பேசிக்கொண்டிருந்தார்கள்-
அவன்
மார்கழியில் குளிர் அதிகமாகிவிட்டதாகச் சொன்ன போது
ஒவ்வொரு வருடமும் இதையே சொல்கிறார்கள் என்றான்
இன்னொருவன்
வலதுகையில் புதிதாகத் தோன்றியிருக்கும் கரும்புள்ளியைக் காட்டியவனை
அசட்டை செய்தவன்
நேற்றைய மதுவிற்கு கடித்துக் கொண்ட மாமிசத்துண்டு
நன்றாக வெந்திருக்கவில்லை என்ற கணம்
அவள்
குங்குமப்பூ நிறச் சுடிதாரில் கடந்து சென்றாள்
கண்களை மட்டும் அவள் மீது திருப்பியவர்கள்
தேநீர் அருந்த விரும்புகிறார்கள்
சிகரெட் பற்றவைக்காத அந்தத் தருணத்தில்
அவனது செல்போன் அழைத்தது
சில வார்த்தைகளுக்குப் பிறகாக முகம் இருண்டவன்
பாதி நிரம்பியிருந்த தேநீர் குடுவையை வைத்துவிட்டு
ஓடத் துவங்குகையில்
குழந்தை நாணயத்தை
மீண்டும் சுண்டியது
ஒரு முறை கூட சுழலாத நாணயத்தை
திரும்பத் திரும்ப சுண்டியது
பூவும் தலையும் இடம்மாறினால்
அவனின் வானமும் பூமியும்
மாறிவிடக் கூடும் என நினைத்தவன்
வெறுமையின் சாயலோடு சிகரெட்டை பற்றவைத்தான்.

Nov 22, 2011

என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி



கருமுகில் திரண்டு நிற்கும்
இந்த மழைக்கால மாலையில்
மிக மூர்க்கமாக முயன்று கொண்டிருக்கிறேன்
செம்மண்ணைக் குழப்பி 
ஒரு குருவியைச் செய்துவிட-

தன் 
அழகின்மையின் துக்கத்தை 
கண்களில் சேகரித்திருக்கும் 
தவிட்டுக்குருவியைத்தான் உருவாக்கவிருக்கிறேன்

சின்னஞ்சிறு மஞ்சள் அலகில்
வயல்வெளியைத் தூக்கிச் செல்லும்
என் குருவி
தன் தலையை சிலுப்பி 
ஒரு நதியை இடம் மாற்றும்

அதன் 
சிறகுகளின் சாம்பல் நிறத்திற்காக
இந்நகரத்தின் இல்லாத வனங்களை பொசுக்கி வைத்திருக்கிறேன்
அலகுகளின் நிறத்திற்கு
சோடியம் விளக்கின் செம்மஞ்சள் ஒளியை சேகரித்திருக்கிறேன்
சீரற்ற அதன் பாடலுக்கு
வாகன இரைச்சலை பயன்படுத்திக் கொள்வேன்

தனக்கான போட்டியாளனை விரும்பாத
கடவுள்
பறக்கவே முடியாத இந்நகரத்தில்
குருவியின்
எளிமையான முதல் சிறகசைப்பு குறித்து
கேலி செய்கையில்
https://mail.google.com/mail/images/cleardot.gif
அவனை செருப்பால் அடித்து 
விரட்டிய கணம்
குழைத்த சேற்றுக்குள்
விழுகிறது
முதல் மழைத்துளி

Nov 15, 2011

பறத்தலை மறந்த புறா


மெஜஸ்டிக் சிக்னலில்
இரண்டரை மாதங்களுக்கு முன்னதாக
கட் அவுட் ஒன்றை நிறுத்தினார்கள்-
ஜன்னல் திறந்த வீட்டில்
நடுங்கும் மெழுகுவர்த்தியென
காற்றசைவுக்கு சிறகை அசைக்கும்
32 அடி புறாவின்
நிறம் நீலம்
அதன்
கண்களுக்கு நேரெதிரில்
தன் பின்புறத்தை
கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருக்கும்
உள்ளாடையணிந்த
‘ஹாட் மாம் க்ளப்’க்காரியின் பெரும்படத்தை
நேற்றிரவு பொருத்தியிருக்கிறார்கள்
தன்னை யாரும் கவனிப்பதில்லை என்பதை
இன்று காலையில் புரிந்து கொண்ட புறா
தன் சிறகசைப்பை நிறுத்தி கண்களை மூடியது
சலனமற்ற இருப்பை தவமாக்கிய புறாவின் மீது
முன்னிரவு ஏழேகாலுக்கு சூடான பெருமூச்சை சொரிந்தாள்
க்ளப்காரி
தான் சிங்கமாக இருந்திருந்தால்
கட்டுகளை பிய்த்தெறிந்திருக்க முடியும் என நம்புகிறது
புறா
பறத்தலின் நுட்பத்தை மறந்துவிட்டிருந்தால்
விழுந்து நொறுங்கக் கூடும் என்று தயங்கிக் கொண்டிருக்கிறது
நீங்களும் நானும்
இந்த ஊரும் அடங்கிப்போன ஒரு கணத்தில்
பிங்க் நிற உள்ளாடையிலிருந்தவள்
பச்சை நிறத்திற்கு மாறுகிறாள்
புறா அந்த நொடியில் என்ன நினைத்தது
என்று யோசிக்கிறீர்கள்
தன் கண்களைத் திறந்திருந்தது
மறுநாள் காலை.

Sep 5, 2011

துளிகள்


(1)
ஹெல்மெட்
கண்ணாடி வழியே
பார்த்துக் கொண்டிருக்கிறான்-
நசுங்கிய கால்.


(2)
எந்த நடிகையும்
அழுவதில்லை-
என் அறைச் சுவர்களில்

(3)
வியர்வையில்
நெளிகிறாள்-
நிறமேற்றப்பட்டவள்.

(4)
மூடாத விழிகளில்
வானம் நோக்குகிறது-
அநாதைப் பிணம்

Aug 29, 2011

கொலை மேடைக் குதிரைகள்


பாலையின் புதைமணலில்
ஓடிக் களைத்த குதிரைகள்
மூச்சிரைத்துக் கிடக்கின்றன

வன்மத்தின் நோய்மை
விரவிக் கிடக்கும் லாயத்தில்
கறுப்பு முகமூடிக் காவலர்கள்
விஷ ஊசிகளை ஒளித்து வைத்திருக்கிறார்கள்

வெப்பத்தின் கசகசப்பில்
முகமூடியை நீக்காமல் சிகரெட்டைப் பற்றவைக்கிறான் அவன்
திரும்பி நின்று சிறுநீர் கழிக்கிறான் இன்னொருவன்
நேற்றிரவு
நீலப்படம் பார்த்து வந்தவன்
குதிரையின் கால்களை இறுகக் கட்டுகிறான்
கொஞ்சம் எதிர்ப்பைக் காட்டிய குதிரைகள்
இயலாமல் விம்முகின்றன.

வாழ்நாளை
பாலையின் வெம்மையிலும்
கொடுமணலின் வாதையிலும்
கழித்த குதிரைகள்
இனி இறக்க வேண்டுமென
அரசி அறிவித்ததை தெரிவிக்கிறார்கள்.

எந்தக் குதிரையும் அசையவில்லை இப்பொழுது

கட்டப்பட்ட கால்களை வெறித்துப் பார்த்த
ஒரு குதிரையின் கண்கள்
கசிந்து கொண்டிருக்கின்றன
தன் முதுகில் தீட்டப்பட்ட வரலாற்றின் வடுக்களில்
ஈக்கள் மொய்த்திருப்பதை ஒரு குதிரை உணர்கிறது
சொடுக்கப்பட்ட சவுக்குகளை நனைத்த குருதி
சுவர்களில் தோய்ந்துகிடக்கிறது

எலும்புகளை இசிக்க
காத்திருக்கின்றன வேட்டை நாய்கள்
அந்நாய்களின்
குரூரக் கண்கள்
குதிரைகளின் கண்களில்
பிரதிபலிக்கின்றன

ஊசிகளை எடுத்துவருகிறான்
ஒரு முகமூடிக்காரன்
இனி
குதிரைகள்
ஓடிக் களைக்க வேண்டியதில்லை
வெளியுலகத்தின் வண்ணக் கனவுகளில் ஏங்க வேண்டியதில்லை

கழுகு வட்டமிடத் துவங்குகிறது

இப்பொழுது
ஏற்றுகிறார்கள்
அஹிம்சையின் கொடிக்கம்பத்தில்
ரத்தம் நனைத்த
வெள்ளைத் துணியொன்றை.

Aug 16, 2011

பிசிறில்லாத பாடல்


நீங்கள் நடந்த பாதைகளில்
என்னை நடக்கச் சொல்கிறீர்கள்.
பதற்றத்தோடு
அலைந்து கொண்டிருக்கிறேன்.

நீங்கள் பொறுக்கிய முத்து ஒன்றினை
என்னிடம் கையளிக்கிறீர்கள்
சிரத்தையோடு
பற்றிக் கொள்கிறேன்

நீங்கள் பாடிய பாடல்களை
எனக்கு கற்றுத் தருகிறீர்கள்
பிசிறில்லாமல்
இசைத்துக் கொண்டிருக்கிறேன்

நீங்கள் கொய்திய தலைகளை
எண்ணச் சொல்கிறீர்கள்
அடுக்கிக் கொண்டிருக்கிறேன்

நீங்கள் ஊட்டிய
விஷங்களின் குறிப்புகளை
தொகுக்க உத்தரவிடுகிறீர்கள்
என் மேசை முழுவதும்
மரணக் குறிப்புகள்.

துளி விஷம்
கூரிய கத்தி
கொஞ்சம் வன்மம்

போதுமானதாயிருக்கிறது-

உங்களின் பிரியத்திற்கும்
என் காமத்திற்கும்

Jul 1, 2011

புனிதக் காதல்


பேருந்து நிறுத்தத்திற்கும்
மதுக்கடைக்கும்
இடையில் ஓடிய
மூத்திர நதியில்
மிதந்து கொண்டிருந்தது
அன்றைய நிலவு

நுரைத்து
தளும்பிய நதியில்
எச்சில் மீன்களை
நான்
சிதறடித்தபோதுதான்
நாம்
முதலில் சந்தித்துக் கொண்டோம்.

இரண்டாவது வாரத்தின்
ஆறாம் நாளில்
நம்
முதல் முத்தத்தை
பரிமாறியபோது
பீடி மணக்கிறதென
சிரித்தாய்.

என்
காதல் புனிதமானது
என்ற போதெல்லாம்
உன்
பழைய காதல்களை
வரிசைப்படுத்தினாய்

நீ
என்னை காதலிப்பதாய்
நெகிழ்ந்த போதெல்லாம்
என்
காதலிகளின் பெயர்களை
உதிர்த்தேன்

சனிக்கிழமையின்
மாலைகளில்
வியர்வைக் கசகசப்பில்
நாம்
ஒதுங்கிய சாலையோரங்களில்
இன்று
பெரும் வீடுகளின்
ஜன்னல்திரைகள் அசைந்து
கொண்டிருக்கின்றன

நாள்
தள்ளிப்போவதாய்
நீ
அழுது நுழைந்த
மருத்துவமனையில்
இன்று
குழந்தைகளின் பள்ளி
நடக்கிறது.

சாந்தி தியேட்டரின்
முத்தக்காட்சிகள் உறைந்து கிடக்கும்
என் டைரியை
இப்பொழுது
வாசித்துக் கொண்டிருக்கிறாள்
இவள்

உதிர்ந்து கொண்டிருக்கும்
அந்தரங்கத்தின்
வெடிச்சிரிப்பில்
நடுங்கிக் கொண்டிருக்கிறேன்
நான்.

வரிகளுக்கிடையில்
சிரித்துக் கொண்டிருக்கும்
உன்னை
எரிக்கத் துவங்குகிறாள்

குழந்தையின்
வெட்டுப்பட்ட விரலென
இரத்தச் சகதியில்
துடித்துக் கொண்டிருக்கிறது
உனக்கும் எனக்குமான
உறவு

vaamanikandan@gmail.com

Jun 14, 2011

இது விபத்து நடந்த பகுதி



கருணையில்லாத
இந்நகரத்தின் மழைக்கால சாலைகள்
விபத்தில்
இறந்தவர்களின் கதைகளை
வட்டமிட்டு காட்டுகின்றன

மார்கெட் சாலையின்
மூன்றாவது திருப்பத்தில்
ஷோபனா
விழுந்துகிடந்த இடத்தில்
வட்டத்தினை
வரைந்து கொண்டிருந்தார்கள்

வட்டத்திலிருந்து
ஐந்தரையாவது அடியில்
அமர்ந்திருந்த
ஒரு கிழவி
மூன்று வயது நவ்நீத்தை
தவிக்கவிட்டுவிட்டாள்
என வஞ்சித்துக் கொண்டிருந்தாள்

துடைக்க
எந்தக் கையும்
நீளாத வெறுமையில்
ஈரமான கண்களுடன்
உறங்கிக் கொண்டிருக்கிறான்
நவ்நீத்.

முடிவுறாத கோடை நாளின்
மதியத்தில்
அவனுக்கான பாடல் ஒன்றை
இசைத்துக் கொண்டிருக்கிறது
தூரத்து தனிப்பறவை

வெறிச்சோடிக் கிடக்கும்
வசந்தகாலத்தின் சாலைகளில்
இவன்
அசைவில்
பதறி எழுகிறது
ஒரு செம்பறவை

பொம்மைகள் கிறுக்கப்பட்டிருக்கும்
அறையின் சுவர்களில்
வழிந்து கொண்டிருக்கிறது
தனிமையின் குளிர்

பேய்க்காற்று அவனுக்கான
கதைகளை சுமந்து
அலையும்
இன்று
ஷோபனாவின் வட்டத்திற்கு
அருகில்
இன்னொரு வட்டத்தை வரைகிறார்கள்.

ஒரு பருவத்தில்
இருந்து
இன்னொரு பருவத்திற்கான
இடைவெளியில்
இறந்து பிறக்கிறான்
நவ்நீத்
நீங்களும்
நானும் அறியாமல்.

Jun 10, 2011

மழைக் காமம்



இரவே வராத
இந்த நகரத்தில்
இரண்டாவது
பன்னிரெண்டு மணியின்
முப்பத்திரண்டாவது நிமிடத்தில்
அவன்
கரிய நிறப்பறவையொன்று
நசுங்கிக் கிடந்த சாலையில்
நடந்து கொண்டிருக்கிறான்

பசித்துக் கிடக்கும்
அவனை
பெய்யத் துவங்கும் மழையின்
முதல்துளி
தின்னத்துவங்குகிறது.

யாருமே ஸ்பரிசிக்காத அவனை
மழை ஸ்பரிசிக்கிறது

யாருமே நனைய விரும்பாத
இந்த நகரத்தில் அவன் மட்டுமே
நனைந்து கொண்டிருக்கிறான்

யாருமே பெயர் சொல்லி அழைக்காத
அவனை
மழை அழைத்தது

ஒரு
மின்னலைத் தொடர்ந்து
பெருங்குரலெடுத்து அழுத மழை
தன்
காமத்தை தீர்க்கச் சொல்லி
இவனை
யாசிக்கிறது.

பரிகாசிக்கிறான்.

கொஞ்சமாக
ஓய்ந்து-
கெஞ்சுகிறது
மழை

மழையின்
காதலும் காமமும்
அதீதமானது மட்டுமில்லை
மிக மூர்க்கமானதும்

இவனை மிரட்டத்துவங்கிய மழை
இந்த நகரத்தை புரட்டிப்போடுகிறது

நகரம் திணறத் துவங்குகையில்
ஒதுங்க முடியாத
இவன்
தப்பிக்க இயலாதவனாய்
சரணடைகிறான்

இப்பொழுது
மழை
இவனை
அணைக்கத் துவங்குகிறது

மூர்க்க மழையிடமிருந்து
காக்க
ஒரு தேவதை உதிக்கிறாள்

நனைந்தவளின்
நடனத்தில்
அசைவுறும் அங்கங்கள்
மழையினை சலனமுறச் செய்கின்றன

ஆண் மீதான
காமத்தை
பெண் மீதாக மாற்றுகிறது
மழை.

இப்பொழுது
மழையைத் தோற்கடிக்க
அவளுக்கு
ஒரு தீக்குச்சி
போதுமானதாக இருக்கிறது.

Apr 28, 2011

35 நிமிடங்கள் காலதாமதமாக வந்து சேர்ந்த தொடரூர்தி


8.25 க்கு திருப்பூரை வந்தடைய வேண்டிய
தொடரூர்தி
இன்று
35 நிமிடங்கள் காலதாமதமாக வந்து சேர்ந்தது.

நடிகையொருத்தியின் படம்
நிர்வாணமாக வரையப்பட்டிருக்கும்
கழிப்பறையையுடைய
S7 பெட்டியின்
35 வது இருக்கையில்
அமர்ந்திருக்கிறாள் ப்ரவீணா
நளினமாக
பாப்கார்ன் தின்று கொண்டிருக்கும்
அவளின் குழந்தை
தண்ணீர் குழாயை
திருகி
விளையாட விரும்புகிறது

தொப்பூரைத் தாண்டிய 13வது நிமிடத்தில்
கருப்புக் கிடாவை வெட்டிய காட்சி
கண நேரம் வந்து போனது
அவனுக்கு.

தலை துண்டிக்கப்படுவதை கவனித்த
அவனால்
குருதியின் நிறத்தை பார்க்க முடியவில்லை.

சிவப்பாகத்தானிருக்கும் என்கிறான்
கதவருகில் நின்றிருந்தவரிடம்.

சிரித்துக் கொள்கிறார்கள் இருவரும்.

நீலம் பாரிய முட்டைக் கோசு செடிகளை
வழியெங்கும்
பார்த்துக் கொண்டிருந்தவனிடம்
கழிப்பறைக் குழாயில்
பச்சை ரத்தம் வழிவதாக
சொல்லிக் கொண்டிருந்தது குழந்தை

ப்ரவீணா
குழந்தையின்
நனைந்த கைகளை
பார்த்துக் கொண்டிருந்தாள்

எந்தச் சலனமும்
இல்லாமல்
36வது இருக்கையில் இருந்தவன்
ஒரு புத்தகத்தில்
217வது பக்கத்தின் நுனியை
மடித்துவிட்டு
உறங்க எத்தனிக்கிறான்.

Apr 21, 2011

குடையின் கீழ் தனித்துக் கிடக்கும் கடிதம்



உலர்த்துவதற்காக விரித்து வைக்கப்பட்டிருக்கும்
குடையின் கீழ்
தனித்துக் கிடக்கும்
இந்தக் கடிதத்தில்தான்
என் தோல்வியடைந்த காதல்கள்
ஆவணமாக்கப்பட்டிருக்கின்றன

சலனமில்லாத தொலைக்காட்சிக்கு
நேரெதிராகப் படபடக்கும்
அந்த கடிதத்தில்தான்
நம் துரோகங்களின் சாட்சிகள்
பட்டியலிடப்பட்டிருக்கின்றன

நள்ளிரவில் அணைக்கப்படாத
விளக்கு வெளிச்சத்தில்
பதற்றத்தோடு ஓடிக்கொண்டிருக்கும்
கரப்பான் பூச்சியொன்று
கண நேரம் நின்று சென்ற
இந்தக் கடிதத்தின்
மூன்றாம் பத்தியில்தான்
உன் சல்லாபங்கள் தொடங்குகின்றன

பிரியத்தின் சொற்களால் நிரம்பிக் கொண்டிருந்த
கடிதம்
பதினோராவது பத்தியின் மூன்றாம் சொல்லிலிருந்து
துரோகத்தின் கசப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறது.

தீராத நடுக்கத்தில்
பகல்களையும்
இரவுகளையும்
பெளர்ணமிகளையும் தாண்டி
இந்தக் கடிதத்தை எழுதியவன்
முடிக்க எத்தனிக்கையில்
முகத்தில் வியர்வை பெருக்கெடுத்தது

கொஞ்சம்
தண்ணீர் அருந்தினான்.

தீர்க்கவே முடியாத கணக்குகளை
மீண்டும்
வரிகளாக்கத் துவங்கியவன்
உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின்
நடுவிரலைக் கீறி
கொஞ்சம் குருதியை பருகினான்

பின்னர்
முடிவே இல்லாத இந்தக் கடிதத்தை
முகவரி எழுதாமல் வீசினான்

அவன் கிழிக்காமல் எறிந்த
அந்தக் கடிதம்
இப்பொழுது
உலர்த்துவதற்காக விரித்து வைக்கப்பட்டிருக்கும்
குடையின் கீழ்
தனித்துக் கிடக்கிறது.

Mar 28, 2011

செளமியாவின் மரணம்



நேற்று காலை 10.30 மணியளவில்
இறந்ததாகக் கருதப்படும்
செளமியாவை
குளிர்ந்த மெழுகென
பிணவறையில்
கிடத்தி வைத்திருக்கிறார்கள்

ஆடை நேர்த்தியாகவும்
தலைமுடி கலையாமலும்
இருக்கிறது

இரத்தம் வழிந்திருக்கவில்லை
என்றாலும்
முகத்தில் ஈக்கள் அமர்ந்திருக்கின்றன

மாத்திரைகளோ
விஷப் புட்டியோ
பூச்சி மருந்தோ
இல்லாத
உள்ளறையில்
நாற்காலியில்
அமர்ந்தவாறு கிடந்தவளை
யாரேனும் கொன்றிருக்கலாம்
என சந்தேகிக்கிறார்கள்

பிணவறைக்கு வெளியில்
இருப்பவர்களுக்கு
உடைபடும் ஓசை
கேட்டுக் கொண்டிருந்தபோது
அவளோடான
முதல் ஸ்பரிசம்
முதல் முத்தம்
முதல் சண்டையை
நினைத்துக் கொண்டிருந்தான்
அவன்.
விசாரிக்க வேண்டும்
என
அந்தக் காவலர் அழைக்கிறார்.

ஒரு காகத்தையும்
ஒரு ஓணானையும்
பார்த்துக் கொண்டே
பின் தொடர்கிறான் -

எப்பொழுதும்
ஒரு சொல்
அல்லது
ஒரு வாக்கியம்தான்
உறவின் விரிசலுக்கு காரணமாகிறது
என
செளமியா சொன்னதை
திரும்பத் திரும்ப
நினைத்துக் கொண்டு.

Feb 14, 2011

செவ்வாய்க்கிழமையின் மதுச்சாலை

வெயில் வடியத் துவங்கும்
செவ்வாய்க் கிழமையின் மாலையில்
வாகனங்கள் நெருக்கும் சாலையிலிருந்து
விலகி
சாராயக் கடைக்குள் நுழைகிறோம்.

வெறுமை படிந்து கிடக்கும்
கடை
ஆயாசத்தைத் தருகிறது.
துளி நிம்மதியையும்.

இரண்டு குடுவைகளில்
உனக்கும் எனக்குமான
மதுவை
ஊற்றுவதிலிருந்து தொடங்குகிறது
நம்
இருவருக்குமிடையேயான உறவு

இப்பொழுதுதான்
முதன்முதலாக
மதுவைச் சுவைப்பதாய்
நீ
சொன்னதற்கு பிறகாக
மதுவோடான எனது பரிச்சயத்தை
பட்டியலிடத் துவங்கினேன்.

மயானத்தில்
சிட்டுக்குருவியொன்றை
வறுத்து
சாராயத்துக்கு தொட்டுக்கொண்டதை
குறிப்பிட்டபோது
ஒளியேறிய உன் கண்கள்
குருவியின்
மிரண்ட கண்களில் தெறித்த
கருணையை நினைவூட்டியது.

இரண்டாம் முறை
மதுவை நிரப்பிவிட்டு
நம் காதல்களைப் பற்றி
பேசத் துவங்குகிறோம்.

முதல் காதலின் பரவசம்
பின் வந்த
காதல்களில் இல்லை.

இப்பொழுது
உறிஞ்சியதில் மிச்சமிருந்த
மதுவில்
நம்
பழைய காதலர்களின்
முகங்கள்
துடிக்கத் துவங்கின

போதை
நம்மை பிணைத்துக் கொண்டிருக்கிறது
குழறி விழும் சொற்கள்
நம் அன்பின் துண்டுகளை
சேகரித்துக் கொண்டிருக்கின்றன.

மூன்றாவது முறை
குடுவையை நிரப்ப அனுமதிக்காத
நீ
நள்ளிரவில்
உன்னை விடுதியில் விடுத்துச்
சென்றவனென நினைத்து
என்னை
முத்தமிட விரும்புகிறாய்

உதடுகளை ஈரப்படுத்தி
தயாராகிறேன்.

நெருங்கி வந்து
விசும்ப ஆரம்பித்தவள்
ஆக்ரோஷமாக
விலகிச் செல்கிறாய்
முத்தமிடாமல்.

இப்பொழுதும்-
இடியுடன் மழை பெய்யும்
நாட்களில்
முழுக்கை சட்டையணிந்து
மறைத்துக் கொள்கிறேன்.

எனது வலது கையில்
முளைக்கும்
இரு
சிறு முலைகளை.