Mar 28, 2011

செளமியாவின் மரணம்



நேற்று காலை 10.30 மணியளவில்
இறந்ததாகக் கருதப்படும்
செளமியாவை
குளிர்ந்த மெழுகென
பிணவறையில்
கிடத்தி வைத்திருக்கிறார்கள்

ஆடை நேர்த்தியாகவும்
தலைமுடி கலையாமலும்
இருக்கிறது

இரத்தம் வழிந்திருக்கவில்லை
என்றாலும்
முகத்தில் ஈக்கள் அமர்ந்திருக்கின்றன

மாத்திரைகளோ
விஷப் புட்டியோ
பூச்சி மருந்தோ
இல்லாத
உள்ளறையில்
நாற்காலியில்
அமர்ந்தவாறு கிடந்தவளை
யாரேனும் கொன்றிருக்கலாம்
என சந்தேகிக்கிறார்கள்

பிணவறைக்கு வெளியில்
இருப்பவர்களுக்கு
உடைபடும் ஓசை
கேட்டுக் கொண்டிருந்தபோது
அவளோடான
முதல் ஸ்பரிசம்
முதல் முத்தம்
முதல் சண்டையை
நினைத்துக் கொண்டிருந்தான்
அவன்.
விசாரிக்க வேண்டும்
என
அந்தக் காவலர் அழைக்கிறார்.

ஒரு காகத்தையும்
ஒரு ஓணானையும்
பார்த்துக் கொண்டே
பின் தொடர்கிறான் -

எப்பொழுதும்
ஒரு சொல்
அல்லது
ஒரு வாக்கியம்தான்
உறவின் விரிசலுக்கு காரணமாகிறது
என
செளமியா சொன்னதை
திரும்பத் திரும்ப
நினைத்துக் கொண்டு.

5 எதிர் சப்தங்கள்:

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

பாதிக்கிறது! :-(

எல் கே said...

மனதை கனக்க வைத்தது

சாகம்பரி said...

உறவின் விரிசல் பத்து வருட முந்தைய வார்த்தை , உடைந்தே விடுகிறது. ஒன்று மிக அவசியம் - நாட்கணக்கில் காத்திருந்து சரி செய்யமுடிந்தது - இப்போது நொடி நேரம் கூட காத்திருக்க முடியவில்லை. Fast food யுகம்.

இராஜராஜேஸ்வரி said...

எப்பொழுதும்
ஒரு சொல்
அல்லது
ஒரு வாக்கியம்தான்
உறவின் விரிசலுக்கு காரணமாகிறது//
பாதிக்கிறது!

rvelkannan said...

திகைத்து நிற்கிறேன் மணி ,
//எப்பொழுதும் ஒரு சொல்அல்லதுஒரு வாக்கியம்தான் உறவின் விரிசலுக்கு காரணமாகிறது//
எல்லா உறவுக்கும், பிரிந்த பிரிந்து போன எல்லா உறவுகளையும் நினைத்து கொள்கிறேன்