Nov 15, 2011

பறத்தலை மறந்த புறா


மெஜஸ்டிக் சிக்னலில்
இரண்டரை மாதங்களுக்கு முன்னதாக
கட் அவுட் ஒன்றை நிறுத்தினார்கள்-
ஜன்னல் திறந்த வீட்டில்
நடுங்கும் மெழுகுவர்த்தியென
காற்றசைவுக்கு சிறகை அசைக்கும்
32 அடி புறாவின்
நிறம் நீலம்
அதன்
கண்களுக்கு நேரெதிரில்
தன் பின்புறத்தை
கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருக்கும்
உள்ளாடையணிந்த
‘ஹாட் மாம் க்ளப்’க்காரியின் பெரும்படத்தை
நேற்றிரவு பொருத்தியிருக்கிறார்கள்
தன்னை யாரும் கவனிப்பதில்லை என்பதை
இன்று காலையில் புரிந்து கொண்ட புறா
தன் சிறகசைப்பை நிறுத்தி கண்களை மூடியது
சலனமற்ற இருப்பை தவமாக்கிய புறாவின் மீது
முன்னிரவு ஏழேகாலுக்கு சூடான பெருமூச்சை சொரிந்தாள்
க்ளப்காரி
தான் சிங்கமாக இருந்திருந்தால்
கட்டுகளை பிய்த்தெறிந்திருக்க முடியும் என நம்புகிறது
புறா
பறத்தலின் நுட்பத்தை மறந்துவிட்டிருந்தால்
விழுந்து நொறுங்கக் கூடும் என்று தயங்கிக் கொண்டிருக்கிறது
நீங்களும் நானும்
இந்த ஊரும் அடங்கிப்போன ஒரு கணத்தில்
பிங்க் நிற உள்ளாடையிலிருந்தவள்
பச்சை நிறத்திற்கு மாறுகிறாள்
புறா அந்த நொடியில் என்ன நினைத்தது
என்று யோசிக்கிறீர்கள்
தன் கண்களைத் திறந்திருந்தது
மறுநாள் காலை.

6 எதிர் சப்தங்கள்:

anujanya said...

நல்லா இருக்கு மணி. எப்படி இருக்கீங்க?

அனுஜன்யா

இராஜராஜேஸ்வரி said...

பறத்தலின் நுட்பத்தை மறந்துவிட்டிருந்தால்
விழுந்து நொறுங்கக் கூடும் என்று தயங்கிக் கொண்டிருக்கிறது
பறத்தலை மறந்த புறா"

சலனம் கொண்டிருக்கிறது!

ஓசூர் ராஜன் said...

பொதுவாக கவிதைகளைநேசிக்கும் மனம் எனக்கு குறையும்போது... இதுபோலொரு கவிதைவந்து புத்துணர்வு தரும்! இப்போது இந்த கவிதை!

Unknown said...

//ஜன்னல் திறந்த வீட்டில்
நடுங்கும் மெழுகுவர்த்தியென
காற்றசைவுக்கு சிறகை அசைக்கும்
32 அடி புறா//

மிக ரசித்த வரிகள். மேலும், கட் அவுட் = 32' புறா, என்று தொடர்பு படுத்தியிருப்பது இன்னும் பரவசப்படுத்துகிறது, வாழ்த்துகள் மணிகண்டன் சார்.

Vaa.Manikandan said...

நன்றி அனு.நலமே. எப்பொழுது தென் திசை விஜயம்?

நன்றி இராஜஇராஜேஸ்வரி,ஓசூர் ராஜன்,தியாகு.

J S Gnanasekar said...

நன்று