கருமுகில் திரண்டு நிற்கும்
இந்த மழைக்கால மாலையில்
மிக மூர்க்கமாக முயன்று கொண்டிருக்கிறேன்
செம்மண்ணைக் குழப்பி
ஒரு குருவியைச் செய்துவிட-
தன்
அழகின்மையின் துக்கத்தை
கண்களில் சேகரித்திருக்கும்
தவிட்டுக்குருவியைத்தான் உருவாக்கவிருக்கிறேன்
சின்னஞ்சிறு மஞ்சள் அலகில்
வயல்வெளியைத் தூக்கிச் செல்லும்
என் குருவி
தன் தலையை சிலுப்பி
ஒரு நதியை இடம் மாற்றும்
அதன்
சிறகுகளின் சாம்பல் நிறத்திற்காக
இந்நகரத்தின் இல்லாத வனங்களை பொசுக்கி
வைத்திருக்கிறேன்
அலகுகளின் நிறத்திற்கு
சோடியம் விளக்கின் செம்மஞ்சள் ஒளியை
சேகரித்திருக்கிறேன்
சீரற்ற அதன் பாடலுக்கு
வாகன இரைச்சலை பயன்படுத்திக் கொள்வேன்
தனக்கான போட்டியாளனை விரும்பாத
கடவுள்
பறக்கவே முடியாத இந்நகரத்தில்
குருவியின்
எளிமையான முதல் சிறகசைப்பு குறித்து
கேலி செய்கையில்

அவனை செருப்பால் அடித்து
விரட்டிய கணம்
குழைத்த சேற்றுக்குள்
விழுகிறது
முதல் மழைத்துளி
15 எதிர் சப்தங்கள்:
அழகான கவிதை வாழ்த்துக்கள்.
ரொம்ப நல்லா இருக்கு.
தரமான கவிதை .. வியந்து போகிறேன் .. படைப்புக்கு வாழ்த்துகள்
NICE
வணக்கம் நண்பரே! நல்ல பதிவு. விரும்பிப் பார்த்தேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.
//அதன்
சிறகுகளின் சாம்பல் நிறத்திற்காக
இந்நகரத்தின் இல்லாத வனங்களை பொசுக்கி வைத்திருக்கிறேன்
அலகுகளின் நிறத்திற்கு
சோடியம் விளக்கின் செம்மஞ்சள் ஒளியை சேகரித்திருக்கிறேன்
சீரற்ற அதன் பாடலுக்கு
வாகன இரைச்சலை பயன்படுத்திக் கொள்வேன்//
தவிட்டுக்குருவி உருக்கொண்டுவிட்டது மனதில், மணிகண்டன் சார்!
\\பறக்கவே முடியாத இந்நகரத்தில்
குருவியின்
எளிமையான முதல் சிறகசைப்பு குறித்து\\
பறக்கவே முடியாத நகரம் என்பதும் எளிமையான முதல் சிறகசைப்பு என்பதும் எதிர் பொருள் கொண்ட பதங்கள்.பறக்கவே முடியாத நகரத்தை கடக்க எளிமையான சிறகசைப்புகள் என்றுமே உதவ போவதில்லை. அதேசமயம் எளிய உணர்ச்சிகள் சுலபத்தில் அடங்கிவிடுவதும் இல்லை. இதுபோன்ற நுட்பமான காட்சியமைப்புகளை உண்மையான கவிதைகளில்- போலிகள் அடர்ந்த பிரதேசத்தில் வெறுமனே கவிதை என்று சொன்னால் அது கெட்டவார்த்தை போலாகிவிடுகிறது:( -மட்டுமே கண்டுணர முடியும். அருமையான கவிதை பாஸ்.
\\கருமுகில் திரண்டு நிற்கும்
இந்த மழைக்கால மாலையில்\\
இது போன்ற விவரணைகள் இனியும் தமிழ் கவிதைகளில் தொடரத்தான் வேண்டுமா? (ஓர் எளிய வாசகனின் ஐயம்)
நண்பர்களுக்கு நன்றி. துரோணா, இந்த வகையான வர்ணனைகள் தேவையா என்ற வினா யோசிக்கச் செய்கிறது.தேவை என்று விளக்கம் தந்தால் அது நான் எழுதியிருப்பது சரிதான் என்று என்னை நிரூபிப்பதற்கான Justification ஆகத்தான் இருக்கும். இந்த மழைக்கால மாலையில் என்று தொடங்கினாலும் இந்தக் கவிதை முழுமை பெறுகிறது. தொகுப்பாக வரும் போது திருத்திவிடுகிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
நல்ல கவிதை வாழ்த்துக்கள்.....
தங்களின் தவிட்டுக்குருவியை பொலிவிழந்த நகரத்து வனாந்திரத்தில் பறக்கவிட்டிருப்பதும் அதன் துக்கத்திற்கு காரணமாயிருக்கலாம் தவிர சல்பர் ஆக்சைடுகளை உட்கிரகித்து ஊர் புறத்திற்கு விரையும் மேகங்களை அங்கேயே அவிழ்த்துவிட்டதில் துக்கம் மறக்கலாம் தவிட்டுக் குருவி. வாழ்த்துக்கள். மிக்க அன்புடன் இயற்கைசிவம், வெயில்நதி வலைப்பூ , செஞ்சி, தமிழ்நாடு.
தங்களின் தவிட்டுக்குருவியை பொலிவிழந்த நகரத்து வனாந்திரத்தில் பறக்கவிட்டிருப்பதும் அதன் துக்கத்திற்கு காரணமாயிருக்கலாம் தவிர சல்பர் ஆக்சைடுகளை உட்கிரகித்து ஊர் புறத்திற்கு விரையும் மேகங்களை அங்கேயே அவிழ்த்துவிட்டதில் துக்கம் மறக்கலாம் தவிட்டுக் குருவி. வாழ்த்துக்கள். மிக்க அன்புடன் இயற்கைசிவம், வெயில்நதி வலைப்பூ , செஞ்சி, தமிழ்நாடு.
குருவிகளை அரிதாக்கிக்கொண்டிருக்கும் சமகாலத்தின் வாழ்முறைக்கும் நல்ல செருப்படிதான் மணிகண்டன்
அருமையான கவிதை..
பல தளங்களுக்கு மனதை கொண்டு சென்று உறைய செய்கிறது கவிதை.....நன்றி...!
Nalla Irukku mani..
Post a Comment