Aug 20, 2012

மிஞ்சிய குழந்தை



உனக்கும் எனக்குமான அத்தனை தொடர்புகளையும்
துண்டிக்கிறேன்.

உனது ஞாபகங்களை புதைத்துவிடுவேன்
என்ற போது
அது சாத்தியமா என நீ சிரித்த கணத்தை
ஒரு முறை நினைத்துக்கொண்டு புதைக்கிறேன்

உனக்கான கண்ணீரை கொஞ்சம் மிச்சம் வைத்திருந்தேன்
அதை வற்றிய இந்தக் குளத்தில் ஊற்றிய போது
குளத்தின் காய்ந்த கண்களில் தெரிந்த கருணை
நமது முதல் ரகசிய முத்தத்தை நினைவூட்டியது தற்செயலானதுதான்

நம் மாலைப் பொழுதுகளை
தீர்த்த
இந்த ஆலமரத்தை வெட்டச் சொல்லி ஏற்பாடுகள் செய்தாகிவிட்டது

படுக்கையை யாரோ ஒருத்திக்கு கையளித்தாயிற்று
தலையணை
மெத்தை
படுக்கை விரிப்புகள்-
நாம் பகிர்ந்து கொண்ட சகலமும்
எரிந்து கொண்டிருக்கின்றன

புன்னகைகளை அழிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை
விட்டுவிட்டேன்

உனது உடைமைகளை பிரித்து எடுத்துக் கொண்டாய்

எனது முதல் வாழ்த்துமடலை
நீ கசக்கிய போது
நம்மிடம் எந்தச் சலனமுமில்லை
இப்பொழுது கடைசியாக
இந்த வீட்டில் மிடறு தண்ணீரை
அருந்திக் கொள்கிறோம்

சிலிண்டரை திறந்துவிட்டு
பூட்டியாகிவிட்டது

ஒரு தீக்குச்சியை உள்ளே வீசப் போகிறேன்

கடைசியாக மிஞ்சும் இந்தக் குழந்தையை
எரியும் வீட்டிற்குள் வீசுவதா
அல்லது
கைப்பைக்குள் வைத்திருக்கும் ப்ளேடை எடுப்பதா
என
நீ யோசித்துக் கொண்டிருக்கிறாய்.
நானும்.

நன்றி: மலைகள் இணைய இதழ்

3 எதிர் சப்தங்கள்:

Yaathoramani.blogspot.com said...

கவிதை என்றால் மென்மை /அழகு/
ஆனந்தம்/வசீகரம் என நினைத்துக் கொண்டிருப்போர்
இக்கவிதையைப் படித்தால் நிச்சயம்
நொறுங்கிப்போவார்கள்
உணர்வுபூர்வமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

மனதை வருத்தப்பட வைத்தது வரிகள்... (TM 2)

Seeni said...

kavalai!