Feb 14, 2011

செவ்வாய்க்கிழமையின் மதுச்சாலை

வெயில் வடியத் துவங்கும்
செவ்வாய்க் கிழமையின் மாலையில்
வாகனங்கள் நெருக்கும் சாலையிலிருந்து
விலகி
சாராயக் கடைக்குள் நுழைகிறோம்.

வெறுமை படிந்து கிடக்கும்
கடை
ஆயாசத்தைத் தருகிறது.
துளி நிம்மதியையும்.

இரண்டு குடுவைகளில்
உனக்கும் எனக்குமான
மதுவை
ஊற்றுவதிலிருந்து தொடங்குகிறது
நம்
இருவருக்குமிடையேயான உறவு

இப்பொழுதுதான்
முதன்முதலாக
மதுவைச் சுவைப்பதாய்
நீ
சொன்னதற்கு பிறகாக
மதுவோடான எனது பரிச்சயத்தை
பட்டியலிடத் துவங்கினேன்.

மயானத்தில்
சிட்டுக்குருவியொன்றை
வறுத்து
சாராயத்துக்கு தொட்டுக்கொண்டதை
குறிப்பிட்டபோது
ஒளியேறிய உன் கண்கள்
குருவியின்
மிரண்ட கண்களில் தெறித்த
கருணையை நினைவூட்டியது.

இரண்டாம் முறை
மதுவை நிரப்பிவிட்டு
நம் காதல்களைப் பற்றி
பேசத் துவங்குகிறோம்.

முதல் காதலின் பரவசம்
பின் வந்த
காதல்களில் இல்லை.

இப்பொழுது
உறிஞ்சியதில் மிச்சமிருந்த
மதுவில்
நம்
பழைய காதலர்களின்
முகங்கள்
துடிக்கத் துவங்கின

போதை
நம்மை பிணைத்துக் கொண்டிருக்கிறது
குழறி விழும் சொற்கள்
நம் அன்பின் துண்டுகளை
சேகரித்துக் கொண்டிருக்கின்றன.

மூன்றாவது முறை
குடுவையை நிரப்ப அனுமதிக்காத
நீ
நள்ளிரவில்
உன்னை விடுதியில் விடுத்துச்
சென்றவனென நினைத்து
என்னை
முத்தமிட விரும்புகிறாய்

உதடுகளை ஈரப்படுத்தி
தயாராகிறேன்.

நெருங்கி வந்து
விசும்ப ஆரம்பித்தவள்
ஆக்ரோஷமாக
விலகிச் செல்கிறாய்
முத்தமிடாமல்.

இப்பொழுதும்-
இடியுடன் மழை பெய்யும்
நாட்களில்
முழுக்கை சட்டையணிந்து
மறைத்துக் கொள்கிறேன்.

எனது வலது கையில்
முளைக்கும்
இரு
சிறு முலைகளை.

7 எதிர் சப்தங்கள்:

Mythees said...

Good post.....

அகநாழிகை said...

மணிகண்டன், கவிதை அருமை.
என்னுடைய அமுதகுடி என்ற கவிதையும் இதே கருத்தைப் பற்றியது.

உங்கள் பார்வைக்கு :

அமுதகுடி
.........

விசித்திரமான சுவையைப்
புனைந்திருக்கிறது நம் நட்பு

கொண்டு வந்து வைத்திருக்கும் மதுவில்
நிராசை புலப்படுவதாய்க்கூறி
விடுதியை விட்டு வெளியேறும் நான்
காலம் நேரமற்று மதுகுப்பியை ஏந்த
எந்த நேரத்திலும் தயாராக இருக்கும் நீ

பரஸ்பரம் நட்புதான் நமது
சந்தேகிக்கின்றனர்
எப்படி வெளிப்படுகிறது
நட்பு இவர்களுக்குள் என்று
கூடிக்கூடி பேசுகின்றனர்
சுற்றிலும் நம்மைப்பற்றி
நட்பின் ரகசியம் அறியாமல்

ஒரு நாதாங்கியின் தள்ளலில்
உலகையே மூடிவிட்டதாய் எக்காளமிட்டு
பரவசத்தில் உடல் நடுங்க
விரிந்திருக்கிறோம் நாம்
மதுகோப்பைகளின் முன்பு

திரண்டெழுந்த மருவைப்போல
புடைத்திருக்கிறது மூக்கு
திறக்கப்பட்ட மதுவின் மனம் சுவைத்து

நினைவற்றுக்
கிடப்பதைபோல பெருமகிழ்ச்சி உள்ளதா

மிதக்கும் கேள்விகளுடன் அலைகிறோம்
குடிமயக்கம் தழுவ
வெடித்துப்பரவுகிறது
உண்மைகளின் விதைகள்
ஒப்பனைகளைக்கலைத்து

மூடிய அறைகதவுகளுக்கிடையேயான
நீள் கோட்டுத்துவாரங்களில் கசிகிறது
தொங்கிக்கொண்டிருக்கும்
செவிகளின் நிழல்கள்
கூர்ந்து கவனிக்கின்றன
நாம் பேசுவதை.

Ramesh said...

அருமை இதுவே நான் வந்த முதல் முறை. அலாதியாய் இருக்கிறது. தொடரூந்தாகிறேன்.....

இன்றைய கவிதை said...

நிசப்தம் ரொம்ப சத்தமாக இருக்கிறது நண்பரே

நல்லா இருக்கு

நன்றி

ஜேகே

Anonymous said...

http://fouruseofgooglereaderintamil.blogspot.com/2011/02/google-reader-4.html

குறையொன்றுமில்லை. said...

நல்ல பதிவு.

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை ஓக்கே .. கடைசி 3 வரிகள் புரியல..