
பேருந்து நிறுத்தத்திற்கும்
மதுக்கடைக்கும்
இடையில் ஓடிய
மூத்திர நதியில்
மிதந்து கொண்டிருந்தது
அன்றைய நிலவு
நுரைத்து
தளும்பிய நதியில்
எச்சில் மீன்களை
நான்
சிதறடித்தபோதுதான்
நாம்
முதலில் சந்தித்துக் கொண்டோம்.
இரண்டாவது வாரத்தின்
ஆறாம் நாளில்
நம்
முதல் முத்தத்தை
பரிமாறியபோது
பீடி மணக்கிறதென
சிரித்தாய்.
என்
காதல் புனிதமானது
என்ற போதெல்லாம்
உன்
பழைய காதல்களை
வரிசைப்படுத்தினாய்
நீ
என்னை காதலிப்பதாய்
நெகிழ்ந்த போதெல்லாம்
என்
காதலிகளின் பெயர்களை
உதிர்த்தேன்
சனிக்கிழமையின்
மாலைகளில்
வியர்வைக் கசகசப்பில்
நாம்
ஒதுங்கிய சாலையோரங்களில்
இன்று
பெரும் வீடுகளின்
ஜன்னல்திரைகள் அசைந்து
கொண்டிருக்கின்றன
நாள்
தள்ளிப்போவதாய்
நீ
அழுது நுழைந்த
மருத்துவமனையில்
இன்று
குழந்தைகளின் பள்ளி
நடக்கிறது.
சாந்தி தியேட்டரின்
முத்தக்காட்சிகள் உறைந்து கிடக்கும்
என் டைரியை
இப்பொழுது
வாசித்துக் கொண்டிருக்கிறாள்
இவள்
உதிர்ந்து கொண்டிருக்கும்
அந்தரங்கத்தின்
வெடிச்சிரிப்பில்
நடுங்கிக் கொண்டிருக்கிறேன்
நான்.
வரிகளுக்கிடையில்
சிரித்துக் கொண்டிருக்கும்
உன்னை
எரிக்கத் துவங்குகிறாள்
குழந்தையின்
வெட்டுப்பட்ட விரலென
இரத்தச் சகதியில்
துடித்துக் கொண்டிருக்கிறது
உனக்கும் எனக்குமான
உறவு
vaamanikandan@gmail.com
10 எதிர் சப்தங்கள்:
வாவ்...
வித்தியாசமான மற்றும் எதார்த்ததை உணர்த்தும் கவிதை....
எளிடைய நடையோடு எளிமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளது கவிதைக்கு பலம்...
ஒரு சமூக அவலம் கவிதையில் இழையோடியிருக்கிறது..
வாழ்த்துக்கள்..
இயல்பான வரிகளை கொண்டு
நல்லதொரு சமூக கவிதை.. வாழ்த்துக்கள்
கறைபடியாத காதல் எங்கிருக்கிறது நடுக்கித் தொலைக்க..!
//என் காதல் புனிதமானது என்ற போதெல்லாம் உன் பழைய காதல்களைவரிசைப்படுத்தினாய்
நீ என்னை காதலிப்பதாய் நெகிழ்ந்த போதெல்லாம்என் காதலிகளின் பெயர்களைஉதிர்த்தேன்//
இங்கே இருவருக்கும் இடையை
ஏற்பட்டது காதல் அல்ல காமம். அதை வீதி ஒரங்களில் தணித்துக் கொண்டதும்
மிக நாகரீகமாக தெரிவித்துள்ளீர்
இயல்பான நடை அருமை
புலவர் சா இராமாநுசம்
அசத்தல் கவிதை
குழந்தையின்
வெட்டுப்பட்ட விரலென
இரத்தச் சகதியில்
துடித்துக் கொண்டிருக்கிறது
உனக்கும் எனக்குமான
உறவு
அட அட அட...சூப்பர்...
எளிமையான வரிகளில் அசத்தலான சமூக கவிதை
Wow.
Stunning.
The dreaded moments.
வாழ்த்துக்கள் ! வித்தியாச விதை.
இவை கவிதை அல்ல
Post a Comment