Jul 21, 2015

ஓடு

‘Run all night பார்த்தீங்களா?’ என்று அலுவலக நண்பர் கேட்ட போது படத்தை பார்த்திருக்கவில்லை. 'சமீபத்தில் வந்த படம். தவிர்க்கவிடக் கூடாத படம்' என்றார்.  2015 ஆம் ஆண்டு வந்த படம்தான்.


படத்தின் கதையை ஒற்றைவரியில் மிகச் சுலபமாகச் சொல்லிவிடலாம். அப்பனும் மகனும் ஓர் இரவு முழுவதும் காவல்துறையிடமிருந்தும் ஒரு தாதாவிடமிருந்தும் தப்பிப்பதற்காக எப்படி ஓடுகிறார்கள் என்பதுதான் கதை. இந்த ஒற்றை வரியில் சிண்டுகளைச் சேர்த்து திரைக்கதையைச் செதுக்கி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வார்த்தெடுத்து பார்வையாளனை கட்டிப் போட்டுவிடுகிறார்கள். கட்டிப் போட்டுவிடுகிறார்கள் என்று போகிற போக்கில் சொல்லவில்லை. 

ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆள் குண்டு அடிபட்டுக் கிடக்கிறார். அவர் தனது கதையை ஈனஸ்வரத்தில் முனகுகிறார். அந்தக் கணத்திலிருந்து பதினாறு மணி நேரங்களுக்கு முன்பாக படம் ஆரம்பிக்கிறது. அந்த மனிதருக்கு ஊரிலேயே மிகப்பெரிய தாதாவுடன் நல்ல நட்பு இருக்கிறது. அந்த தாதா ஒரு காலத்தில் போதைப் பொருளைக் கடத்தும் வேலையைச் செய்தவர். தாதாவுக்கு மகன் உண்டு. அவன் இன்னொரு போதைப் பொருள் கடத்தும் கும்பலுடன் தொடர்பில் இருக்கிறான். ‘எங்கப்பாகிட்ட சொல்லுறேன்...உங்க சரக்கை அவர் மாத்தித் தருவார்’ என்று சொல்லி பெரிய தொகையாக வாங்கிக் கொள்கிறான். நம்பிக்கையோடு அந்தக் கும்பலை தன் அப்பாவிடம் அழைத்தும் செல்கிறான். தாதா கைவிரித்துவிடுகிறார். ‘அந்த வேலையை எப்பவோ விட்டுவிட்டேன்’ என்று சொல்லிவிடுகிறார். கடுப்பாகும் கும்பல் மகனிடம் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்கிறது. அவனுக்கு மாலை வரை நேரம் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். 

மாலையில் கும்பல் திரும்ப வருகிறது. ஒரு வாடகைக்காரில் வருகிறார்கள். வாடகைக்காரின் டிரைவராக வருபவனின் அப்பாதான் முதல் காட்சியில் குண்டடிபட்டுக் கிடப்பவர்- இந்தக் கதை ப்ளாஷ்பேக்கில் நடக்கிறது- தாதாவின் மகனைப் பார்க்கச் செல்லும் கும்பலை மகன் சுட்டுக் கொன்றுவிடுகிறான். அதை டிரைவர் பார்த்துவிடுவதால் அவனையும் போட்டுத் தள்ள துரத்துகிறான். டிரைவரைத் துரத்திக் கொண்டே வருகிறான். சுடப்போகும் தருணத்தில் டிரைவரின் அப்பா தாதாவின் மகனைச் சுட்டுக் கொன்றுவிடுகிறார். அதோடு நில்லாமல் தாதாவை அழைத்துச் சொல்லியும் விடுகிறார். தாதாவுக்கு அழுகை பொங்குகிறது. ‘எம்பையனுக்கு என்ன நடந்ததோ அது உம்பையனுக்கும் நடக்கும்’ என்று கறுவ ‘அதுக்கு நான் விட்டுவிடுவேனா?’ என்று இவர் முறைக்க படம் ஓட்டம் பிடிக்கிறது. விறுவிறுப்பான படம்.

போதைக் கும்பல் கொல்லப்பட்ட இடத்தில் இருந்த தடயங்களை மாற்றி கொலைப்பழி டிரைவர் மீது விழும்படி தாதா ஏற்பாடு செய்கிறான். இரண்டு போலீஸாரை வளைத்து டிரைவர் மீது குற்றம் இறுகும்படி பார்த்துக் கொள்கிறான். அந்தப் போலீஸ்காரர்கள் டிரைவரை முரட்டுத்தனமாக இழுத்துச் செல்லும் போது டிரைவரின் அப்பா ஒரு காரை எடுத்துக் கொண்டு துரத்துகிறார். ஊரே வேடிக்கை பார்க்கிறது. இப்படி காட்சிகளும் சாட்சிகளும் இவர்களுக்கு எதிராக அமைகின்றன. போலீஸ்காரர்கள் விடுவார்களா? அதுவும் அமெரிக்க போலீஸ். இரண்டு பேரையும் குறி வைத்துத் துரத்துகிறார்கள். போலீஸார் ஒரு பக்கம் துரத்த தாதாவோ தன் பங்குக்கு ஒரு கொலைகாரனை அழைத்து அப்பனையும் மகனையும் வீசச் சொல்கிறான். ‘முதலில் மகனைக் கொல்ல வேண்டும்’ என்பதுதான் நிபந்தனை. மகனை இழந்து தான் பெற்ற வேதனை பெறுக தன் நண்பனும் என்று நினைக்கிறான். கொலைகாரன் வெறித்தனமாக துப்பாக்கியை எடுத்துக் கொண்டு துரத்துகிறான்.

ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும்- டிரைவருக்கும் அவனுடைய அப்பாவுக்குமான உறவு சாதாரண அப்பா-மகன் உறவைப் போன்றில்லை. அப்பன் சட்டத்திற்கு புறம்பானவன் என்று மகனுக்குத் தெரியும். அதனால் சிறு வயதிலிருந்தே அப்பனை பிடிப்பதில்லை. இப்பொழுதும் பிடிப்பதில்லைதான். ஆனால் ‘இந்த ஒரு ராத்திரி மட்டும் நான் சொல்லுறதைக் கேளு’ என்று அப்பா சொல்வதற்கு செவி மடுக்கிறான். ஓடுகிறார்கள். ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். இரவு முழுக்கவும் ஓடுகிறார்கள். அதுதான் படத்தின் டைட்டில்- Run all night. இந்தச் சிக்கலில் இருந்து எப்படித் தப்பிப்பது என்று இருவருக்குமே தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு வாய்ப்பிருக்கிறது.  தாதாவின் மகன் போதைக் கும்பலைச் சுடும் போது டிரைவரின் காருக்குள் அவனுடைய நண்பனான ஒரு சிறுவன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறான். துப்பாக்கிச் சூட்டை அவன் படமும் எடுத்து வைத்திருக்கிறான். அவனைப் பிடித்தால் ஏதாவது காரியம் ஆகக் கூடும் என்று அந்த இரவில் அவனைத் தேடி அப்பனும் டிரைவரும் செல்கிறார்கள். பெரிய அபார்ட்மெண்ட் அது. அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் அந்தச் சிறுவன் இருக்கிறான் என்று தெரியும். ஆனால் எந்த வீடு என்று சரியாகத் தெரியாது. நிறைய வீடுகளைத் தட்டுகிறார்கள். இவர்களின் முகங்களைத்தான் தொலைக்காட்சிகளில் காட்டிக் கொண்டிருக்கிறார்களே! இவர்கள் உள்ளே நுழைந்ததும் ஒரு கிழவி காவல்துறைக்குத் தகவல் தந்துவிடுகிறாள்.  ‘அமுக்கிவிடலாம்’ என்று காவல்துறை கட்டிடத்தை சூழ்ந்து கொள்கிறது. இதுவொரு பிரமாண்டமான காட்சிதான் என்றாலும் சற்று அதீத மிகைப்படுத்தலாக இருப்பது மட்டும்தான் படத்தின் ஒரே பலவீனம். ஆனால் வழக்கமான ஹாலிவுட் படங்களில் இருக்குமளவுக்கு பில்ட் அப் இல்லை என்பதையும் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். 

தப்பித்து ஓடுகிறார்கள்.

ஓடும் போது தாதா அனுப்பி வைத்த கொலைகாரனையும் சுட்டுத் தள்ளுகிறார்கள். அவனும் இவர்களைத் தேடித்தான் வந்திருக்கிறான். இனி தாதாவைக் கொன்றுவிட்டால் பிரச்சினையிலிருந்து தப்பித்துவிடலாம் என்று அப்பன்காரன் நினைக்கிறான். தனது மகனை அழைத்து அவனது மனைவியும் குழந்தைகளும் இருக்கும் இடத்திற்குச் செல்லச் சொல்கிறான். ஏற்கனவே அவர்களை வேறொரு இடத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். டிரைவர் அவர்களிடம் போய்ச் சேர்ந்து காவல்துறையை அழைத்து அத்தனை விவரங்களையும் சொல்லிவிடுகிறான். அவர்கள் அந்த இடத்துக்கு வருவதாகச் சொல்கிறார்கள். இந்தச் சமயத்தில் அப்பன்காரன் தாதாவைக் கொன்றுவிடுகிறான். எல்லாம் முடிந்துவிட்டது என்ற நம்பிக்கையில் தனது மகனும அவனது குடும்பமும் இருக்குமிடத்திற்கு வந்து சேர்கிறான். தானும் சரணடைய விரும்புவதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போது இவர்கள் சுட்டுத் தள்ளினார்கள் அல்லவா? தாதாவின் கொலை ஆள். அவன் அப்பனைச் சுட்டுவிடுகிறான். அவன் செத்திருக்கவில்லை. அப்பன் சுருண்டு விழுந்த பிறகு டிரைவரையும் அவனது குடும்பத்தையும் துரத்துகிறான். குண்டடிபட்டுக் கிடக்கும் இந்த அப்பன் தான் முதற்காட்சியில் குண்டு அடிபட்டுக் கிடக்கும் ஐம்பது வயது மதிக்கத் தக்க ஆள். படம் எங்கு ஆரம்பிக்கிறதோ அந்தக் காட்சியில் வந்து நிற்கிறது.

அவர்தான் ஈனஸ்வரத்தில் தனது கதையை முனகிக் கொண்டிருக்கிறார். இனி என்ன ஆகும்? அதுதான் க்ளைமேக்ஸ்.

படபடவென்று வெகு வேகாக நகரும் திரைக்கதை மிகப்பெரிய பலம் என்றால் இசையும் காட்சியமைப்புகளும் தூள் கிளப்பியிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். அப்பன் மகன் உறவு, டிரைவரும் அவனைப் புரிந்து கொள்ளாத மனைவி போன்ற துணைக்கதைகள் ஒரு பக்கம் கதையின் வலுவைக் கூட்டும் போது பெரும்பாலான நடிகர்களின் மிகையில்லாத நடிப்பும் இரவுக் காட்சிகளும் இன்னொரு பக்கம் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன. 

வழக்கமாக படங்களை இரவு நேரத்தில் பார்த்துவிட்டு அதோடு விட்டுவிடுவேன். இந்தப் படத்தை விடிந்தவுடன் இரண்டாவது முறையும் பார்த்து அலுவலகத்திற்கு தாமதமாகச் சென்று மேலாளரிடம் வழிய வேண்டியிருந்தது.

ஆக்‌ஷன் பட பிரியர்களுக்கு இந்தப் படம் மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும் தைரியமாகச் சொல்லாம்.

Jul 14, 2015

துப்பாக்கி எழுதிய தீர்ப்பு

ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாடுகளில் உள்ள பகுதிகளில் என்ன மாதிரியான அழிச்சாட்டியங்களைச் செய்கிறார்கள் என்பதை விளக்கும் சலனப்படம் ஒன்று யூடியூப்பில் கிடைத்தது. தங்களின் ஆதிக்கத்திற்குள் வரும் பகுதிகளில் இருக்கும் பழங்கால நினைவுச்சின்னங்களை அழிப்பதிலிருந்து சாமானியர்களுக்கும் எதிரிகளுக்கும் மிகக் குரூரமான தண்டனைகளை வழங்குவது வரையிலானவற்றை காட்சிப்படுத்திய சலனப்படம் அது. முட்டாள்களிடம் ஆயுதமும் அதிகாரமும் கிடைத்தால் என்ன நடக்கும் என்பதை அப்பட்டமாக்கியிருந்த அந்தக் காட்சிகளைப் பார்த்துவிட்டு இந்த ஐ.எஸ் தீவிரவாதிகளைப் பற்றிய திரைப்படங்கள் ஏதேனும் வந்திருக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்த போது டிம்புக்டு என்ற படம் கிடைத்தது. டிம்புக்டு(Timbuktu) பழங்கால நகரம். மேற்கு ஆப்பிரிக்காவிலிருக்கு ஒரு நகரத்தின் பெயர் இது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமும் கூட. இப்பொழுது அப்படியில்லை. சிதைந்து போயிருக்கிறது. வறுமையின் வறட்சி.


இந்த நகரம்தான் கதை நடக்கும் இடம். முதல் காட்சியில் மான் ஒன்று வேகமாக ஓடி வருகிறது. ஜீப்பில் துப்பாக்கியை ஏந்தியபடி சுட்டுக் கொண்டே வரும் தீவிரவாதிகளிடமிருந்து அது மூச்சு வாங்க ஓடித் தப்பிக்கிறது. அந்தத் தீவிரவாதிகள் மணற்பாங்கான பாலை நிலத்தில் இருக்கும் பழங்காலச் சின்னங்களைச் சுட்டு வீழ்த்துவதாக படம் ஆரம்பிக்கிறது. ஊர் முழுவதும் மணல்தான். ஒரேயொரு இடத்தில் குளம் இருக்கிறது. அந்தக் குளத்தில் ஒரு மீனவன் இருக்கிறான். இளைஞன். அவன் வலைகளை விரித்து வைத்து மீன்கள் சிக்குவதற்காகக் காத்திருக்கிறான். ஆனால் அவன் படத்தின் நாயகன் இல்லை. நாயகனுக்கு மாடு மேய்ப்பதுதான் தொழில். எட்டு மாடுகள் வைத்திருக்கிறான். அவனுடைய பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் தீவிரவாதிகள் வந்த பிறகு வெகு தூரத்திற்குச் சென்றுவிட்டார்கள். இவன் மட்டும் தனது குடும்பத்தோடு- மனைவி, பனிரெண்டு வயது மகள்- பாலை நிலத்தில் டெண்ட் அடித்து குடியிருக்கிறான். இவனது மாடுகளை ஒரு சிறுவன் பார்த்துக் கொள்கிறான்.

பிரச்சினை இந்த மாடுகளினால் வருகிறது. மேய்ந்துவிட்டு நீர் அருந்தச் செல்லும் மாடுகளில் ஒன்று தண்ணீருக்குள் இறங்கி மீன் வலையை அறுத்துவிடுகிறது. சிறுவன் தடுக்க முயற்சிக்கிறான். ஆனால் ஓடுகிற மாட்டை தடுக்கவா முடியும்? கோபத்தில் ஒரு கூரான குச்சியை எடுத்து மீனவன் மாட்டின் மீது எறிய அது அந்த இடத்திலேயே செத்து போய்விடுகிறது. பையன் அழுது கொண்டே ஓடிச் சென்று முதலாளியிடம் சொல்கிறான். அவன் கோபம் பொங்க வர இப்பொழுது என்ன நடக்கும் என்று யூகித்திருப்பீர்கள் அல்லவா? அதேதான். மீனவனின் ஆயுள் முடிந்துவிடுகிறது. அவனைக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் மாட்டுக்காரன் நினைத்திருக்கவில்லை. இருவரும் ஆள் மாற்றி ஆள் தள்ளிக் கொள்கிறார்கள். அதில் மீனவன் விழுந்து முடிந்து போகிறான்.

ஏற்கனவே ஊரில் ஷரியா சட்டத்தைக் கொண்டு வந்து ஐஎஸ்காரர்கள் அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஊரில் இசை இருக்கக் கூடாது. மீறிக் கேட்டால் கசையடி. பெண்களின் கைகள் கூட வெளியே தெரியக் கூடாது. தெரிந்தால் கைது. காதலிக்கக் கூடாது. காதலித்தால் கல்லால் அடித்துக் கொல்வது என்று வரிசையான கட்டுப்பாடுகள். இந்த லட்சணத்தில் கொலை செய்தால் விட்டு வைப்பார்களா? மாட்டுக்காரனை கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். வழக்கு நீதிபதியின் முன்பாக வருகிறது. நீதிபதியென்றால் கருப்பு கவுன் அணிந்த நீதிபதியில்லை. பள்ளிக் கூட வகுப்பறை மாதிரி ஒரு அறை. அதில் பெஞ்ச் போட்டு ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர்தான் நீதிபதி. மொழிபெயர்ப்புக்கு ஒரு உதவியாள். அப்புறம் குற்றவாளி. விசாரணை நடக்கிறது. ‘எனது மகளை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது...உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா?’ என்றெல்லாம் பேசிப் பார்க்கிறான். எதுவும் ஒத்து வருவதில்லை. தண்டனையாக நாற்பது மாடுகளைக் கொடுக்க வேண்டும் என்று நீதிபதி கேட்கிறார். செத்துப் போன மாடு தவிர்த்து இப்பொழுது ஏழு மாடுகள்தான் அவனிடம் இருக்கின்றன. அதனால் அதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அதைத் தவிர இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. இறந்து போனவனின் குடும்பம் மன்னிப்பு வழங்கினால் தப்பித்துவிடலாம். மீனவனின் குடும்பத்தை அழைத்து வைத்துக் கேட்கிறார்கள். மீனவனின் அம்மா மன்னிக்க மறுத்துவிடுகிறாள்.

மாட்டுக்காரனின் மனைவியும் மகளும் அநாதைகளாகப் போகிறார்கள். பனிரெண்டு வயதுக் குழந்தை திக்குத் தெரியாமல் திணறப் போகிறாள். துவக்கத்திலிருந்தே மாட்டுக்காரனின் மனைவி மீது அந்த ஐஎஸ் குழுவின் முக்கியப் பிரமுகருக்கு ஒரு கண். அவள் அவனுக்கு சம்மதம் சொன்னால் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. கணவனின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அவளது கனவுகளில் நாற்பது மாடுகள் வந்து போகின்றன. வேறு வழியில்லை. துணிந்து அந்த முக்கியப் பிரமுகருக்கு ஃபோன் செய்கிறாள். ஆனால் இவள் அழைத்த நேரத்தில் கிட்டத்தட்ட தீர்ப்பு எழுதப்பட்டுவிட்டது. இனிமேல் தன்னால் குற்றவாளியைக் காப்பாற்ற முடியாது என்று சொல்லிவிடுகிறான். இனி மரணம் மட்டும்தான் ஒரே கதி. மாட்டுக்காரன் தனது மனதை தயார் செய்து கொள்கிறான். மரணம் பற்றிய பயம் எதுவுமில்லையென்றும் தனது மகளுக்காகத்தான் வருந்துகிறேன் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறான். 

அவனை மரண மேடைக்கு அழைத்துச் செல்கிறார்கள். தீவிரவாதிகளில் ஒருவன் தனது இருசக்கர வாகனத்தில் மாட்டுக்காரனின் மனைவியை அழைத்து வருகிறான். க்ளைமேக்ஸ் சில வினாடிகளில் முடிந்துவிடுகிறது. க்ளைமேக்ஸ் காட்சி முடிந்த பிறகு மாட்டுக்காரனின் மகள் பாலைவனத்தில் ஓடுகிறாள். முதல் காட்சியில் ஓடிய அதே மான் மூச்சு வாங்க ஓடுகிறது. படம் முடிகிறது.

ஒன்றரை மணி நேரம்தான் படம். படத்தின் இசையும், காட்சிப்படுத்துதலும், துருத்தல் இல்லாத நடிப்பும், கதைக்களத்தின் பின்னணியும் மிகச் சிறந்த படமாக மாற்றியிருக்கின்றன. மிக எளிய மனிதர்கள். எந்தவிதச் சிக்கலுமில்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்களைச் சுற்றிலும் நிகழும் அதிகாரப் போட்டியும் தம் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும் அந்த எளிய மனிதர்களுக்குள் மன அழுத்தத்தை உருவாக்குகின்றன. அவர்களின் வாழ்க்கை முறை வெகுவாக மாறிப் போகிறது. இந்த அழுத்தம் அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகிறது. அடுத்தவன் மீதான உக்கிரம் கொலையில் முடிகிறது. சட்டமும் வாயைத் திறந்து காத்திருக்கிறது. விழுகிறவனை அப்படியே விழுங்குகிறது. அதைத்தான் இந்தப் படம் பிரதானப்படுத்துவதாகத் தோன்றுகிறது.

படத்தில் அரபி, ப்ரெஞ்ச் உட்பட நான்கு மொழிகளில் பேசுகிறார்கள். அதனால் சப்டைட்டில்தான் கை கொடுக்கிறது. படத்தின் முக்கியமான அம்சமே ஒரு நேர்கோட்டிலான கதையும் அதற்கு சம்பந்தமேயில்லாத பிற பாத்திரங்களும், அந்தப் பாத்திரங்கள் அனைத்தும் கதை நடக்கும் மண்ணோடு பிணைக்கப்பட்டிருப்பதும்தான். உதாரணமாக மீன் விற்கும் பெண்ணிடம் வந்து தீவிரவாதிகள் கையுறை அணியச் சொல்லி வலியுறுத்துகிறார்கள். அவள் மறுக்கிறாள். அவளுக்கும் கதையின் முக்கிய பாத்திரங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. படத்தின் போக்கில் அவள் துண்டிக்கப்பட்ட பாத்திரம்தான். ஆனால் தீவிரவாதிகளை அந்த மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை காட்சிப்படுத்துவதற்கு அவள் அவசியமானவளாக இருக்கிறாள். அதே போலத்தான் கால்பந்து. அதுவும் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த ஊரின் இளைஞர்கள் பந்து இருப்பதாக கற்பனை செய்தபடியே விளையாடுவது அற்புதமான காட்சி. இந்த தீவிரவாதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் உள்ளூர் இசுலாமிய பெரியவர், தனது மகளைத் திருமணம் செய்து கொடுக்க மறுக்கும் பெண்மணி- இப்படி துண்டிக்கப்பட்ட பாத்திரங்களையும் காட்சிகளையும் படத்தின் முக்கியமான கதையுடன் கோர்த்து சிறந்த படமாக்கியிருக்கிறார்கள். அந்தவிதத்தில் டிம்புக்டு அற்புதமான திரைப்படம். 

Mar 13, 2015

Fifty shades of Grey

நேற்றிரவு இரண்டு மணி இருக்கும். தூங்கப் போவதற்கு முன்பாக ஃபேஸ்புக்கை புரட்டிய போது Fifty shades of Grey படத்தைப் பற்றி சில பெண்கள் பேசியது டைம்லைனில் ஓடிக் கொண்டிருந்தது. இந்தப் புத்தகம் நாவலாக வந்த போது தெரியும். பெங்களூர் இலக்கியத் திருவிழாவில் இ.எல்.ஜேம்ஸின் இந்த நாவலைப் பற்றிய விவாதம் நடந்தது. சுற்றிலும் இளம்பெண்களாக அமர்ந்திருந்தார்கள் அதனாலேயோ என்னவோ ஆர்வமாக கலந்து கொண்டேன். புத்தகத்திலிருந்து நான்கைந்து பக்கங்களை வாசித்துக் காட்டினார்கள். அப்பொழுதுதான் சங்கடமாக போய்விட்டது. வெகுநாட்களுக்கு ஸ்வப்னா புத்தகக் கடையில் அதிகம் விற்கும் புத்தகங்களில் இந்த நாவல் இடம் பிடித்திருந்தது. இந்த நாவலைப் பற்றித் தெரியும் என்றுதானே சொல்லியிருக்கிறேன். இவ்வளவுதான் தெரியும். வாசிக்கவெல்லாம் இல்லை.

இப்பொழுது அந்தப் படத்தை பார்த்தே தீர வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை. ‘படம் முழுக்க BDSMதான்’ என்று ஒருவர் சொன்ன போதுதான் சுள்ளென்றானது. அப்படியென்றால் என்னவென்றே தெரியாமல் முப்பத்தியிரண்டு வருடங்களை விழுங்கியிருக்கிறேன். தேடிப்பார்த்தால் விக்கிப்பிடீயாவில் தனியாகவே ஒரு பக்கம் ஒதுக்கியிருக்கிறார்கள். தெரிந்து கொண்ட பிறகுதான் ஒரு பூரணத் தன்மை. காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டேன். இவ்வளவு தூரம் வந்தாயிற்று. படத்தையும் பார்த்துவிட வேண்டியதுதானே? பார்த்தாகிவிட்டது. ஆன்லைனிலேயே கிடைக்கிறது. 

க்ரேவுக்கு இளம் வயது. பெரும் பணக்காரன். தனது கல்லூரி இதழுக்காக நேர்காணல் நடத்த வேண்டியவ பெண்ணொருத்தி காய்ச்சலின் காரணமாக தனக்கு பதிலாக நாயகியை அனுப்பி வைக்கிறாள். ஸ்ருதிஹாசன் சாயலில் இருக்கும் நாயகியை க்ரேவுக்கு பிடித்துப் போய்விடுகிறது. அவளுக்கும் அவன் மீது ஈர்ப்புதான். அவன் இதுவரை பதினைந்து பெண்களுடன் உறவு கொண்டவன். ஆனால் நாயகி தனக்கானவனுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள். இன்னமும் கன்னி. நாயகன் படுக்கையறையில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறவன். அதற்காகவே தனியாக அறையொன்றை வைத்திருக்கிறான். கட்டி வைப்பதற்கும் அடிப்பதற்கும் தேவையான பொருட்கள் அந்த அறை முழுவதும் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த அறையில் தனக்குக் கீழாகச்ச் செயல்படச் சம்மதமெனில் ஒரு ஒப்பந்தத்தைக் காட்டி கையொப்பமிடச் சொல்கிறான். பெண்ணைக் கட்டி வைத்து, துன்புறுத்தி உறவு கொள்பவன் அவன். அவள் ஒப்பந்தங்களில் சில திருத்தங்களைச் சொல்கிறாள். அவனுடன் ஒத்துழைக்கிறாள். கடைசியாக ஒப்பந்தங்களை மீறினால் என்ன தண்டனை கொடுப்பாய் எனத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்கிறாள். அவன் குனிய வைத்து பெல்ட்டால் விளாசுகிறான். வெறுப்புற்று பிரிந்து போய்விடுகிறாள்.

பெண்களை வெறும் உடலாக பார்க்கும் மட்டமான கதை என்று எதிர்தரப்பினர் விமர்சிக்கிறார்கள். படம் அப்படித்தான் இருக்கிறது. ‘இந்த சித்ரவதைகளினால் உனக்கு இன்பம் கிடைக்கும்’ என்று இரண்டு மூன்று முறையாவது சொல்லிவிடுகிறான். அவளும் அந்தச் அத்தகைய பாலியல் உறவை மிகுந்த கிளர்ச்சியுடன்அனுபவிப்பது போலவே காட்டியிருக்கிறார்கள். ஒரு போர்னோ படமளவுக்கு மோசமான படம் என்று சொல்லிவிட முடியாது. நாயகியாக நடித்திருக்கும் பெண் அவனிடம் காதலுக்காக ஏங்குவதும், அவன் எல்லாவிதத்திலும் அவளை தனது ஒப்பந்தம் நோக்கியே இழுப்பதும் படம் முழுக்கவே சுவாரஸியத்தை உண்டாக்குகிறது. இந்த சுவாரஸியம் என்ன வகையான சுவாரஸியம் என்று தெரியவில்லை. அடுத்த படுக்கையறைக் காட்சி எப்பொழுது வரும் என்று ஆழ்மனம் ஏங்குகிறது. அப்படித்தானே?

எப்படியோ தொலையட்டும். கல்லா கட்டிவிட்டார்கள். வசூல் கொடி கட்டிப் பறக்கிறதாம். 

நம் ஊரில்தான் தடை செய்துவிட்டார்கள். இல்லையென்றால் A முத்திரை குத்தி பெருநகரங்களின் ஷாப்பிங் மால்களில் ஓடியிருக்கும். அவிநாசியிலும் தேனியிலும் பாளையங்கோட்டையிலும் வெளிவந்திருக்குமா என்று தெரியவில்லை. அப்படியே வெளிவந்திருந்தாலும் கத்தரி போட்டுத்தான் வெளியிட்டிருப்பார்கள். 

பள்ளிக்காலத்தில் அலெக்ஸண்ட்ரா மாதிரியான படங்களை பார்த்திருக்கிறேன். எத்தனை வயதில் என்று சொல்லலாம்தான். நான்கு பேரின் பற்களுக்கிடையில் சிக்கி வசை வாங்க வேண்டியிருக்கும். அப்பொழுதெல்லாம் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக தியேட்டருக்குள் உள்ளே நுழைந்து அதே திருட்டுத்தனத்துடன் அடுத்தவர்களின் கண்களிலும் பட்டுவிடாமல் வெளியேற வேண்டும். இடைவேளையின் போது கூட இருட்டுக்குள்ளேயே பம்மிக் கொண்டிருக்க வேண்டும். ஒரு சமயம் ஈரோடு அபிராமி தியேட்டரில் நானும் ஒரு நண்பனும் பள்ளிச்சீருடையுடன் சென்று சிக்கிக் கொண்டோம். அவன் மிக நைச்சியமாக வெளியேறிவிட்டான். நான் மாட்டிக் கொண்டேன். அந்தக் கிழவர் அறிவுரை சொல்லி சாவடித்துவிட்டார். ‘இந்தப் படத்தை நீங்க மட்டும் பாக்கலாமா?’ என்று கேட்க முயற்சித்து தோற்றுக் கொண்டேயிருந்தேன். அரை மணி நேர்மாவது அறுத்திருப்பார். வெளியில் வந்து முடிவு செய்து கொண்டோம்- இனி எந்தக் காரணத்தினாலும் சீருடையில் படம் பார்க்கச் செல்லக் கூடாது என்று. 

நாங்கள் சிக்கிக் கொண்டது முக்கியமான விஷயம் இல்லை. ஆனால் அந்தச் சமயத்திலேயே கூட வழக்கத்திற்கு மாறான இத்தகைய பாலியல் திரைப்படங்கள் வந்து போய்க் கொண்டிருந்தன என்பது முக்கியம். இதெல்லாம் கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு முன்பாக. அப்பொழுது இணையம், செல்போன் என்ற எதுவுமே இல்லை. படங்கள் மட்டும்தான் ஒரே வழி. அதைவிட்டால் பின் அடித்த ப்ளாட்பார புத்தகங்களில் தெளிவில்லாத கருப்பு வெள்ளைப்படங்கள் இருக்கும். அப்பொழுதே கூட இத்தகைய படங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்பொழுது அத்தனை வசதிகளும் இருக்கின்றன. ஏகப்பட்ட பாலியல் வலைத்தளங்களில் சலனப்படங்களாகக் குவிந்து கிடக்கின்றன. எதை நினைத்தாலும் பார்த்துவிட முடிகிறது. பிறகு ஏன் தடை செய்கிறார்கள்?

எவ்வளவோ காரணங்கள் இருக்கக் கூடும். இந்தப் படத்தை புரிந்து கொள்கிற அளவுக்கு நம்மிடையே பாலியல் பக்குவம் இல்லை என்பதை ஒத்துக் கொண்டுதான் தீர வேண்டும். சென்ற வாரத்தில் ஒரு செய்தி வந்திருந்தது. தினமும் நீலப்படங்களைப் பார்த்துவிட்டு மனைவியை அப்படிச் செயல்படச் சொல்லி ஒருவன் தொந்தரவு செய்து கொண்டிருந்தானாம். தூங்கிக் கொண்டிருந்தவனின் குரல்வளையை அறுத்துவிட்டாள். பெங்களூரில்தான் நடந்திருக்கிறது. மற்றதையெல்லாம் விட்டுவிட்டு ஏன் குரல்வளைய அறுத்தாள் என்று வெகுநேரமாக யோசித்துக் கொண்டிருந்தேன்.  தன் இச்சை, தன் மோகம், தன் இன்பம் என்று ஒற்றைப்படையாக மட்டுமே யோசிக்கிற ஆட்கள் வாழ்கிற நம் நாட்டில் இத்தகைய படங்களை எந்தத் தடையுமில்லாமல் அனுமதித்தால் இதைச் செய்வது பெரிய சாதனையாக நினைத்து மனைவியின் கைகளைக் கட்டிப் போடுவதற்கு கயிறுகளோடு வீடு திரும்பும் கணவன்களின் எண்ணிக்கை அதிகமானால் விபரீதம் ஆகிவிடக் கூடும் என்று அரசாங்கம் யோசித்திருக்கக் கூடும்.

தேடுகிறவர்கள் எப்படியிருந்தாலும் தேடிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் இதைப்பற்றியெல்லாம் தெரியாத ஒரு மனிதனுக்கு தெரிய வைத்த பாவம் வந்து சேர்ந்துவிடும் என்று அர்சாங்கம் நினைத்திருக்கலாம். எவ்வளவோ பேர் ‘இதெல்லாம் கூட சாத்தியமா?’ என்று யோசிக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நினைப்பதை தடுப்பதாக அரசாங்கம் பாவனை செய்கிறது. உண்மையில் இருள் சூழ்ந்த பகுதியைச் சுற்றி இன்னொரு திரையைத்தான் அரசு இழுத்துவிடுகிறது.

ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது. ‘பணமுள்ள பர்ஸை மனைவியிடம் நம்பிக் கொடுக்கும் ஆண்களுக்கு... செல்போனை கொடுக்கதான் மனமிருப்பதில்லை’ என்று கிர்த்திகா தரன் எழுதியிருந்தார். ஏகப்பட்ட பேர் ஆமோதித்திருந்தார்கள். இத்தகைய பிரச்சினைகள் எங்கேயிருந்து தொடங்குகின்றன? கணவன் மனைவிக்கிடையிலான புரிதலில் எங்கே சிடுக்கு விழுகிறது? வெளிப்படைத்தன்மையில்லாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன? Possessiveness என்று சப்பைக்கட்டு கட்டலாம். ஆனால் உண்மையில் அது insecurity. ஒருவித பயம். இந்த பயத்தை நவீன தொழில்நுட்ப சாதனங்கள் பன்மடங்கு பெருக்கிவிடுகின்றன. அதுதான் கணவன் மனைவிக்கிடையில் ஒரு சுவரை எழுப்பிக் கொண்டேயிருக்கிறது. எதுவாக இருந்தாலும் மறைக்கத் தொடங்குகிறார்கள். காதலர்களாக அந்நியோன்யமாக இருப்பவர்கள் கூட திருமணத்திற்கு பிறகு சுவரை எழுப்பிக் கொள்கிறார்கள். 

‘இதையெல்லாம் மனைவியிடம் பேசக் கூடாது’ என்ற விதையை யார் எப்பொழுது தூவினார்கள்? ‘இதையெல்லாம் பேசினால் தவறில்லை’ என்று மனைவி ஏன் ஏற்றுக் கொள்வதில்லை? இதுதான் வேலி தாண்டச் செய்கிறது. கணவன்- மனைவி என்கிற பிம்பங்கள் நமக்குள் காலங்காலமாக ஊறிக் கிடக்கின்றன. இதைத்தான் பேச வேண்டும் இதையெல்லாம் பேசக் கூடாது என்று சில தடுப்புகள் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதை உடைத்து வெளியில் வருவதுதான் மிகப்பெரிய பிரச்சினை. கணவன் - மனைவி பேசிக் கொள்ளாத விஷயங்களை வேறு யாருடைய மனைவி-கணவனிடம் பேசுவதற்கான சுதந்திரத்தை நவீன சாதனங்கள் உருவாக்கித் தருகின்றன. விளைவாக, கணவன் மனைவி என்கிற கோட்பாடே சிதைந்து கொண்டிருக்கிறது. தனிப்பட்ட பாலியல் சுதந்திரங்களை, இச்சைகளை கணவன் மனைவிக்குள்ளாக மனம்விட்டுப் பேசுகிற சூழல் இல்லாதபட்சத்தில் இத்தகைய படங்கள் தனிமனித உணர்ச்சிகளை கிளறிவிடும் வேலையைத்தான் செய்கின்றன.

அரசாங்கம் இதையெல்லாம் தடை செய்து விளம்பரத்தை உருவாக்கித் தர வேண்டியதில்லை. அடுத்தவர்களின் படுக்கையறை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வதான தொனிதான் இத்தகைய தடைகள். அது இரு மனிதர்களுக்கிடையிலான புரிதல்தானே? அதில் அரசாங்கம் மூக்கை நுழைக்க வேண்டியதில்லை.

ஆனால் அரசாங்கம் ஒன்றைச் செய்தாக வேண்டும். இந்தப் படம் வெளியானால் உருவாக்கக் கூடிய சலனங்களை ஏன் நம் சமூகத்தால் கையாள முடியாது என இந்த அரசாங்கம் நினைக்கிறதோ அதற்கான தீர்வுகளைப் பற்றி யோசிக்க வேண்டிய சூழல் இது. நமக்கென பண்பாடு இருக்கிறது. நமக்கென சில வரைமுறைகள் இருக்கின்றனதான். ஆனால் நவீன தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் நாம் பண்பாடு, வரையறைகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிற விவகாரங்களில் ஓரளவு நெகிழ்வுத்தன்மை இருந்தாக வேண்டும். இல்லையென்றால் உள்ளேயே பொங்கிப் புழுங்கிக் கொண்டிருக்கும் புழுக்கமேறிய சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். அதன் விளைவுகளை உணரத் தொடங்கியிருக்கிறோம். பாலியல் வன்முறைகள் அதன் நீட்சிதான். இவை குறித்தான மிக வெளிப்படையான விமர்சனங்களையும் விவாதங்களையும் நடத்த வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். வெறும் தடைகளும் திரைமறைப்பு வேலைகளும் நமது பண்பாடு சிதையாமல் காக்கப்படுவதற்கு எந்தவிதத்திலும் உதவாது. மாறாக Bigbang என்னும் பெருவெடிப்பு தியரியை நோக்கித்தான் இழுத்துச் செல்லும். வெறும் தாலியில் மட்டுமே நம் பண்பாடு இருக்கிறது என்று நினைத்தால் அது நம் புரிதலின் குறைபாடுதான்.

Mar 11, 2015

காமம் காதலாகிக் கசிந்துருகி


மோனிகா பெலுச்சியைப் பற்றி எசகுபிசகான செய்திகளாகத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நடிப்பில் தூள் கிளப்புவார் என்றெல்லாம் தெரியாது. 2000 ஆம் ஆண்டு வந்த ஒரு படத்தைப் பார்த்தேன். Malena என்று பெயர். இத்தாலியப் படம். பதின்ம வயதுப் பொடியன் ஒருவன் மோனிகாவின் மீது காமம் பெருக்கெடுத்துத் திரிகிறான். அதை அவ்வளவு நுட்பமாக படமாக்கியிருக்கிறார்கள்.

1940களில் கதை நடக்கிறது. இரண்டாம் உலகப்போர் சமயம் அது. பாசிஸ கட்சியின் முசோலினி இத்தாலியைக் கோலோச்சுகிறார். இரண்டாம் ட்யூஸ்( முசோலினியை அப்படித்தான் அழைத்தார்கள்) வானொலியில் பேசினால் அத்தனை பேரும் வானொலியைக் கேட்டாக வேண்டும் என்று உத்தரவிடுகிற சர்வாதிகார ஆட்சி. அந்தச் சமயத்தில் பொடியன் ரெனேட்டோவுக்கு ஒரு மிதிவண்டி கிடைக்கிறது. எடுத்துக் கொண்டு பறக்கிறான். கடற்கரையில் இவனையொத்த பையன்கள் இவனை தங்களோடு ஏற்றுக் கொள்வதாகச் சொல்கிறார்கள். முதல் வேலையே மலேனாவை சைட் அடிப்பதுதான். அவள் வீட்டிலிருந்து நடந்து செல்லும் பாதை முழுக்க அவளுக்கு முன்பாக சைக்கிளை மிதித்துச் சென்று பெருமூச்சு விடுவார்கள். 

மலேனா ராணுவ வீரனின் மனைவி. அவனை இத்தாலிய அரசு ஆப்பிரிக்காவில் நடக்கும் போருக்காக அனுப்பி வைத்துவிடுகிறது. அதனால் அவள் தனியாகத்தான் இருக்கிறாள். அந்த நகரத்திலேயே அழகான பெண் இவள்தான் என்பதால் அத்தனை ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களும் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள். யாரையும் கவனிப்பதில்லை. ஆனால் ஊர் வாயை மூட முடியுமா? அவளுக்கு நிறைய ரகசியக் காதலர்கள் இருப்பதாக பேசுகிறார்கள். ஊர் முழுக்க இவளைப் பற்றிய வதந்திதான். ரெனட்டோ படிக்கும் பள்ளியில் ஆசிரியராக இருப்பவரின் மகள்தான் மலேனா. அவருக்கு காது கேட்காது. வருகைப் பதிவு எடுக்கும் போது ‘உங்க பெண்ணை.....’ என்று ஏதாவது வக்கிரமாகத்தான் மாணவர்கள் பேசுகிறார்கள். அவரும் வருகைப் பதிவுதான் கொடுக்கிறான் என்று நினைத்து தலையாட்டுகிறார். 

இப்படியான சேட்டைகள் படம் முழுக்க உண்டு. இந்த சுண்டைக்காயன்கள் கடற்கரையில் அமர்ந்து தங்களது உறுப்பை அளவு பார்த்துவிட்டு ‘யார் பெரியவர்?’ என்ற சண்டையெல்லாம் போட்டுக் கொள்வார்கள். ஆனால் அதை ஆபாசம் என்றெல்லாம் ஒதுக்கிவிட முடியாது.

ரெனட்டோவுக்கு மலேனா மீது காதல். அதைக் காதல் என்று சொல்ல முடியாது. காமம்தான். அவளை நினைத்து சுய இன்பத்தில் ஈடுபடுகிறான். மற்றவர்களைக் கழற்றிவிட்டுவிட்டு இவன் மட்டும் அவளைப் பின் தொடர்கிறான். அவளது அறையை எட்டிப் பார்க்கிறான். உள்ளாடையைத் திருடிச் சென்று அடுத்த நாள் காலையில் அவனது அப்பாவிடம் சிக்கி ஊமைக்குத்து வாங்குகிறான். ஆனால் ஊர் பேசுகிற மாதிரி அவள் மோசமானவள் இல்லை என்றும் தனது கணவனுக்காக உண்மையானவளாகத்தான் இருக்கிறாள் என்று புரிந்து கொள்கிறான். ஆனால் ஊர் அவளைப் பற்றி ஏசுவதை நிறுத்துவதில்லை. அவள் தினமும் நடந்து செல்வதே கூட அவளது ரகசியக் காதலனைச் சந்திக்கத்தான் என்று நம்புகிறார்கள். அதைக் கண்டுபிடிக்க ரெனெட்டோ பின் தொடர்கிறான். ஆனால் அவள் தனியாக வசிக்கும் தனது தந்தைக்குச் சேவகம் செய்யத்தான் செல்கிறான் என்று புரிந்து கொண்டு சர்ச்சில் ‘இந்த ஊரிடமிருந்து அவளைக் காக்கச் சொல்லி’ வேண்டிக் கொள்கிறான். ஆனால் கடவுளால் கூட இந்த ஊர் வாயிடமிருந்து அவளைக் காப்பாற்ற முடிவதில்லை. அவளது அழகும் அவளது தனிமையும்தான் இந்த ஊரை அவளுக்கு எதிராக திரண்டு நிற்கச் செய்கிறது.

ஆண்கள் அத்தனை பேரும் தங்களது படுக்கைக்கு அவளைத் தூக்கி வர விரும்புகிறார்கள். பெண்கள் அத்தனை பேரும் பொறாமைப்படுகிறார்கள். 

யாரோ அவளது தந்தைக்கு மொட்டைக் கடிதம் அனுப்புகிறார்கள். ஊருக்கே அவள் விபச்சாரியாக இருப்பதாக அந்தக் கடிதம் சொல்கிறது. மனம் உடைந்து போகும் அவர் வேலையை ராஜினாமா செய்துவிடுகிறார். தந்தை மகள் உறவு தகர்ந்து போகிறது. மலேனா தனிமையில் தள்ளப்படுகிறாள். இந்தச் சமயத்தில் அவளுடைய கணவன் போரில் இறந்துவிட்டதாக செய்தி வருகிறது. அவளைத் தவிர ஊரே சந்தோஷமடைகிறது. இனி அவளை அடைந்துவிடலாம் என்று அத்தனை ஆண்களும் மகிழ்ச்சியடைகிறார்கள்.

இந்த ஊரின் கொடூரம் துளித் துளியாக வெளியாகத் துவங்குகிறது. எந்தப் பற்றுக் கோலும் இல்லாத மலேனாவுக்கு ஒரு லெப்டினெண்ட்டுடன் காதல் வருகிறது. ஆனால் அவன் இதை உடைத்துவிட்டுச் சென்றுவிடுகிறான். ஏமாந்து போகும் மலேனாவை ஒரு பல் மருத்துவரின் மனைவி நீதிமன்றத்துக்கு இழுக்கிறாள். தனது கணவரை மலேனா வளைக்கிறாள் என்பதுதான் குற்றச்சாட்டு. ஆனால் அதில் உண்மை இல்லை. ஒரு வழக்கறிஞர மலேனாவுக்காக வாதாடி ஜெயிக்கிறான். அதற்கு பதிலாக வழக்கறிஞர் அவளை வன்புணர்வு செய்கிறான். அத்தனையையும் ரெனோட்டா பார்த்துக் கொண்டேயிருக்கிறான். அந்த வன்புணர்வு சம்பவம் உட்பட.

ஊர் நினைப்பதைப் போன்று மலேனா மோசமான பெண் இல்லை என்று ரெனேட்டாவுக்குத் தெரியும். ஆனால் அவளைப் பற்றிய மோசமான சித்திரத்தை அவளால் மாற்றவே முடிவதில்லை. ரெனேட்டாவால் எதுவும் செய்ய முடிவதில்லை. அப்பனின் பேண்ட்டைக் கத்தரித்து தனக்கு அளவான பேண்ட்டாக மாற்றிக் கொண்டால் மட்டும் பெரியவன் என்று இந்த ஊர் ஏற்றுக் கொள்ளுமா? ஆனால் ரெனேட்டா அப்படியெல்லாம்தான் முயற்சிக்கிறான்.

மலேனாவுக்கான வாய்ப்புகள் அடைபட்டுப் போகின்றன. பசிக்கு உணவு கிடைக்காமல் சிரமப்படுகிறாள். போர் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு குண்டு வீச்சில் அவளது அப்பாவும் இறந்துவிடுகிறாள். அவளுக்கு உணவு கொண்டு வந்து தருபவன் அதற்கு பதிலாக அவளது உடலைக் கேட்கிறான். இப்படியே இந்தச் சமூகம் அவளை ஒரு மூலைக்கு தள்ளுகிறது. கடைசியில் விபச்சாரத்தில் விழுகிறாள்.

இரண்டாம் உலப்போர் சமயத்தில் முசோலினியின் இத்தாலியும் ஹிட்லரின் ஜெர்மனியும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. அதன்படி ஜெர்மானியப் படைகள் இந்தக் கதை நடந்து கொண்டிருக்கும் சிசிலி நகரத்துக்குள் வருகிறார்கள். அவர்களுக்கு மலேனா விருந்தாகிறாள். இப்படியே நகரும் கதையில் மலேனாவும் ரெனேட்டாவும் பேசிக் கொள்வதேயில்லை. போருக்குப் பிறகாக - இத்தாலி வீழ்ந்துவிடுகிறது- ஊர்ப் பெண்கள் அடித்து அவளை மொட்டையாக்குகிறார்கள். அடித்து உதைக்கிறார்கள். ரத்தம் வழிகிறது. அவள் ரயிலேறி எங்கேயோ சென்றுவிடுகிறாள்.

இதையும் ரெனேட்டோ பார்த்துக் கொண்டேயிருக்கிறான். அப்பொழுதும் அவனால் எதுவுமே செய்ய முடிவதில்லை. 

கதையின் திருப்பமாக மலேனாவின் கணவன் திரும்பி வருகிறான். அவன் தனது கையை மட்டும்தான் இழந்திருக்கிறான். ஆனால் அவன் இறந்துவிட்டதாக தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. ஊரில் யாருமே அவனிடம் பேசுவதில்லை. மலேனாவும் அவனும் வாழ்ந்த வீடு அகதிகள் கூடாரமாகியிருக்கிறது. எப்படி தனது மனைவியைத் தேடுவது என்று தெரியாமல் அலைகிறான். அவனுக்கு ஒரு மொட்டைக் கடிதம் வழியாக மலேனாவின் இருப்பிடத்தை ரெனேட்டா சொல்கிறான். மலேனாவும் கணவனும் திரும்பவும் சிசிலிக்கு வருகிறார்கள். 

கதையை முழுக்க எழுதக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் அது இயலவில்லை. அப்படியான கதை இது. ஆங்காங்கே சில காட்சிகளை மட்டும் விழுங்கிக் கொண்டேன். எல்லாவற்றையும் எழுதிவிட்டு மிச்சத்தை திரையில் காண்க என்று எழுதுவதைப் போன்ற துரோகம் வேறு இருக்க முடியாது என்றாலும் இந்தக் கதையை முழுமையாகச் சொல்லிவிடுவதால் பெரிய பாதகம் இல்லை. நேர்கோட்டில் செல்லும் எளிமையான கதைதான். பெரிய திருப்பங்களைச் சொல்லி சஸ்பென்ஸ் எதையும் உடைக்க முடியாது என்பதால் ஓரளவு சொல்லிவிட்டேன்.

இந்தப் படத்தை பார்ப்பதற்கு முன்பாக இரண்டாம் உலகப்போரில் இத்தாலி, முசோலினி போன்ற விஷயங்களைத் துளி தெரிந்து வைத்துக் கொண்டால் படத்தின் பரிணாமங்கள் இன்னமும் விரிவடைகின்றன. அதெல்லாம் அவசியமே இல்லைதான். நேரடியாகவே புரிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு படத்தை வெறும் படமாக மட்டுமே பார்க்க வேண்டியதில்லை அல்லவா? நாற்பதுகளில் இத்தாலி அதன் conservative தன்மை என எல்லாவற்றையும் ஓரளவு உள்வாங்கிக் கொள்ளலாம்.

இது ஒரு காமம் சார்ந்த படம் என்ற குறிப்பை படித்துவிட்டுத்தான் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். அப்படிச் சொல்வதைப் போன்ற அபத்தம் வேறு இருக்க முடியாது. படத்தில் சில நிர்வாணக்காட்சிகள் உண்டு. ஒன்றிரண்டு படுக்கையறைக் காட்சிகளும் உண்டு. ஆனால் வழக்கமாக இருக்கும் விலாவாரியான காட்சிகள் இல்லை.

ஒரு பெண், அவளைச் சுற்றி இந்தச் சமூகம் உருவாக்கும் கட்டுக்கதைகள், அவளது தனிமை, சோற்றுக்கு வழியில்லாமல் விபச்சாரத்தில் விழுவது, இந்த நகரம் அவளை தண்டிப்பது என அத்தனையும் ரெனோடாவின் பதின்ம வயதுக் கண்களின் வழியாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன, தன்னை விட மூத்த பெண்ணுடனான அவனது காம இச்சைகள், அது உருமாறி அவளுடனான காதலாக மாறுவது, பிறகு பரிதாபமாக வடிவெடுப்பது என பின்னியெடுத்திருக்கிறார்கள். 

மிகச் சிறந்த படம் இது. Malena ஆன்லைனில் கிடைக்கிறது.

கடைசியில் படம் இப்படி முடியும்-  ‘அவளுக்குப் பிறகு ஏகப்பட்ட பெண்களை காதலித்திருக்கிறேன். அவர்கள் என்னை மறந்துவிடுவாயா என்று கேட்பார்கள். மறக்க மாட்டேன் என்றுதான் சொல்வேன். ஆனால் மறந்துவிடுவேன். ஒரேயொருவளை மட்டும் மறக்கமுடிவதில்லை. அவள் ‘என்னை மறந்துடுவியா?’ என்று எப்பொழுதுமே கேட்காதவள்’. 

படத்தைப் பார்த்துவிட்டு படுத்தால் மோனிகாதான் கனவு  முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தார். இது அந்த மாதிரியான கனவு இல்லை என்று சத்தியம் கூடச் செய்வேன்.

(முன்பு இயங்கிக் கொண்டிருந்த ஒரு வலைத்தளத்துக்காக எழுதிய கட்டுரை. சில திருத்தங்களுடன்)

Feb 23, 2015

கெட்டவன்

முந்தாநாள் சென்னையில் நடந்த நிகழ்வில் கொரிய இயக்குநரான கிம் கி டுக்கின் Bad Guy என்ற படம் பற்றி பேச வேண்டும் என்பதுதான் எனக்குத் தரப்பட்டிருந்த வேலை. கிம் என்பது குடும்பப் பெயராம். கடைசியில் இருக்கும் K எழுத்தும் Silence. கி டோ என்றுதான் அந்தப் பெயரை உச்சரிக்க வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் ஒருவர் சுட்டிக்காட்டினார். சுட்டிக்காட்டியவர் கொரியாவில் ஆராய்ச்சியாளராக பணியாற்றிவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். சரியாகத்தான் இருக்கும். கி டோவின் வாழ்க்கையே சுவாரஸியமானதுதான். கிறித்துவப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தவருக்கு ஓவியம் நன்றாக வரும். ஒரு கட்டத்தில் பிரான்ஸுக்குச் சென்றுவிட்டார். அங்கு தனது ஓவியங்களை விற்று காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தவர் அங்குதான் முதன்முறையாக திரைப்படங்களை பார்க்கத் துவங்கினார் என்றொரு குறிப்பை வாசித்தேன். அதன் பிறகு படங்களின் மீது உண்டான ஆர்வத்தின் காரணமாக கொரியாவிற்கு திரும்ப வந்து திரைப்படங்களை எடுக்கத் துவங்கினார். முதல் ஆறேழு படங்களுக்கு கொரியாவில் பெரிய மரியாதை இல்லை. Badguy தான் கி டோவுக்கு கொரியாவில் கவனம் பெற்றுத் தந்த முக்கியமான படம்.


அதையும் கூட ஒரு நேர்காணலில் ‘அந்தப் படத்தில் நாயகனாக நடித்தவருக்காகத்தான் கொரியர்கள் பார்த்தார்கள். இல்லையென்றால் வேறு மாதிரியான முடிவு கிடைத்திருக்கக் கூடும்’ என்று கி டோ சொல்லியிருந்தார். அவ்வளவு தன்னடக்கம். அவர் சொல்வதும் சரிதான். படம் மொத்தமாகச் சேர்ந்து ஒரேயொரு காட்சியில்தான் நாயகன் பேசுவார். வெறும் உடல்மொழியிலேயே படம் முழுவதும் மிரட்டியிருக்கிறார் அந்த நாயகன். 

நாயகி ஒரு கல்லூரிச் சாலையில் அமர்ந்திருப்பாள். அந்த வழியாக வரும் நாயகன் அவளை முறைத்துப் பார்ப்பான். வெகுஜனம் வெறுத்து ஒதுக்குகிற மாதிரியான பொறுக்கித்தனமான தோற்றமுடையவன் அவன். இந்தப் பெண்ணும் ஒருவிதமான அசூசையை பார்வையிலேயே காட்டுகிறாள். அப்பொழுது அவளின் நண்பன் வருகிறான். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது நாயகன் அவளை இழுத்து முத்தம் கொடுத்துவிடுகிறான். அவர்களைப் பிரித்துவிடுவதற்கு அவளது நண்பன் முயற்சி செய்வான் ஆனால் அது சாத்தியமாகாது. அந்த வழியாக வரும் மூன்று படைவீரர்கள் நாயகனை உதைத்து அவளிடம் மன்னிப்பு கேட்கச் சொல்வார்கள். அப்பொழுதும் அவன் பேசுவதில்லை. அவளையே பார்த்துக் கொண்டிருப்பான். அவள் காறி முகத்தின் மீது உமிழ்ந்துவிட்டுச் செல்வாள்.

இந்தப் படத்திற்கான டிவிடி பெங்களூரில் கிடைக்கவில்லை. ஸ்வப்னா, ப்ளானெட் எம் போன்ற பெரிய கடைகளிலும் தேடிய போதும் சரி, ப்ளாட்பாரக் கடைகளில் தேடிய போதும் சரி- ஏமாற்றம்தான் மிஞ்சியது. யூடியூப்பில் நிறைய கொரியப்படங்கள் இருக்கின்றன. ஆனால் இந்தப் படத்தின் பிரதி கிடைக்கவில்லை. கடைசியில் dailymotion.com தளத்தில் பிடித்துவிட்டேன். Nappeun namja என்ற அதன் கொரியப்பெயரில் தேடினால் கிடைத்துவிடும். படத்திற்கான ஆங்கில சப்டைட்டில் இல்லை ஆனால் இந்தப் படத்திற்கு அது தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன். முதல் முறை பார்த்துவிட்டு கி டோவின் நேர்காணல்கள், இந்தப் படத்திற்கான விமர்சனங்கள் போன்றவற்றைத் தேடி படித்துவிட்டு இரண்டாம் முறை பார்த்த போது வேறுவிதமான புரிதல் கிடைத்தது.

ஒரு நேர்காணலில் ‘நாயகன் எதற்கு மாணவர்கள் நிறைந்திருந்த அந்தச் சாலைக்குச் சென்றான்? அவனுடைய தோற்றத்துக்கும் வேலைக்கும் அந்தக் கல்லூரிச்சாலையில் எந்த வேலையும் இருப்பதாகத் தெரியவில்லை. லாஜிக்கலாக உதைக்கிறதே’ என்று கேட்டிருந்தார்கள். அதற்கு கி-டோ சரியான பதிலைச் சொல்லியிருக்கவில்லை. ‘ஏன் அவன் அங்கு போகக் கூடாதா?’ என்று திரும்பக் கேட்டிருந்தார். அந்தக் கேள்வி சரியானதுதான். இரும்படிக்கிற இடமாகத்தான் அது தெரிந்தது. இந்த ஒரு தட்டையான காட்சிக்குப் பிறகு படம் சூடு பிடித்துக் கொள்ளும்.

நாயகன் விபச்சாரத் தரகன். தன்னை அவமானப்படுத்தியவளை பழி வாங்குவதற்கென அவளை Trap செய்கிறான். புத்தகக் கடையொன்றில் அவள் கண் படும்படியாக ஒரு பணப்பையை நாயகனின் ஆள் ஒருவன் விட்டுச் செல்கிறான். இவள் அதை அவசரமாக கழிவறைக்குத் எடுத்துச் சென்று அதில் இருக்கும் பணத்தையெல்லாம் எடுத்துக் கொள்கிறாள். இதை எதிர்பார்த்துக் காத்திருந்த ஒருவன் அவளைத் துரத்தி பிடித்துவிடுகிறான். அதில் பத்தாயிரம் கொரியன் பணம் இருந்ததாகச் சொல்கிறான். அதில் இரண்டாயிரத்து ஐந்நூறுதான் இருந்தது. ஆனால் அவன் ஒத்துக் கொள்வதில்லை. ‘போலீஸூக்குச் செல்லலாம்’ என்று இழுக்கிறான் அல்லது தனது அழகையும் உடலையும் அவள் தர வேண்டும் என்கிறான். இரண்டாவதாகச் சொன்னதை அவள் தேர்ந்தெடுத்துக் கொள்கிறாள். ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

கொரிய நகரின் விபச்சார விடுதியில் அவள் சிக்குகிறாள். 

கி டோ இதுவரையில் இருபது படங்களை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை உளவியல் ரீதியாக கவனிக்க வேண்டும் என்கிறார்கள். அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு முரடன் கொலை செய்கிறான் என்று ஒரு பாத்திரத்தை உருவாக்குவதில் சிக்கல் இல்லை. அன்பானவொருவன் உருகி உருகி காதலிக்கிறான் என்று காட்டுவதில் பெரிய சவால்கள் இல்லை. ஆனால் ஒரு வன்மம் மிகுந்தவனுக்கு வரக் கூடிய காதலையும் அதை உள்ளடங்கிய குரலில் காட்டுவதிலும் மிகப்பெரிய சவால் இருப்பதாகத் தோன்றுகிறது. அவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட உணர்ச்சிகள். அந்த இரண்டையும் கதாபாத்திரத்தோடு பொருத்துவது சிரமம்தான். மனிதன் என்பவன் உணர்ச்சிகளின் கலவைதானே? வன்முறை, அன்பு, காமம், கோபம், நகைச்சுவை எனக் கலவைகளால்தான் அத்தனை மனிதர்களும் ஆகியிருக்கிறோம். ஆனால் அத்தனை உணர்ச்சிகளிலும் ஒன்று predominant ஆகத் தெரியும். பெரும்பாலான படைப்புகளில் இந்த Predominant உணர்ச்சிதான் காட்டப்பட்டிருக்கும். ஆனால் இந்த உணர்ச்சிக்கு எதிர்நிலையிலான உணர்ச்சி ஒன்றும் அவனிடம் ததும்பிக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டும்விதத்தில் கி டோ தன்னை ஒரு கலைஞன் என்று நிரூபிக்கிறார்.

நாயகியாக நடித்த பெண்ணும் சளைத்தவள் இல்லை. விடுதியின் மற்ற பெண்கள் எல்லாம் வாடிக்கையாளர்களை கை நீட்டி அழைக்கும் போது இவள் ஆரம்பத்தில் அமைதியாக அமர்ந்திருக்கிறாள். கன்னித்தன்மையை தனது நண்பனுக்கு அளிக்க வேண்டும் என விரும்புகிறாள். அது சாத்தியமாவதில்லை. எவனோ ஒருவனால் வலுக்கட்டாயமாக புணரப்படுகிறாள். அழுது கொண்டே ஏற்றுக் கொள்கிறாள். அடுத்து வருபவனிடம் பெரிய எதிர்ப்புக் காட்டுவதில்லை. அடுத்தடுத்து தானாகவே கவர்ச்சியான ஆடையை அணிந்து கொண்டு வாடிக்கையாளர்களை அழைக்கத் தொடங்குகிறாள்.

நாயகியின் அழகினால் வாடிக்கையாளர்கள் அவளையே தேர்ந்தெடுக்கிறார்கள் என சக பெண்கள் அவளிடம் வெறுப்புக் கொள்வது, நாயகனுக்கும் வேறொரு குழுவினருக்குமான பகைமை, கொலை முயற்சிகள், நாயகனின் நண்பனொருவன் அவள் மீது மோகம் கொண்டு அவளோடு ஒரு முறை உறவு கொண்டு அவளைத் தப்பிக்க வைக்க முயற்சிப்பது, அவளை நாயகன் மீண்டும் இழுத்து வருவது என படம் முழுக்கவும் சுவாரஸியமாக நகர்கிறது. 

இடையில் ஒரு காட்சி உண்டு. தப்பித்துச் செல்பவளை இழுத்து வரும் போது இரண்டு பேரும் கடற்கரையில் அமர்ந்திருப்பார்கள். கிழிக்கப்பட்ட நிழற்படத்தை ஒரு பெண் புதைத்துவிட்டு எழுந்து சென்று கடலில் குதித்துவிடுவாள். நாயகி அந்தப் படங்களை எடுத்து ஒட்டிப்பார்ப்பாள். அது காதலர்களின் படம். ஆனால் முகம் மட்டும் இருக்காது. இதை எப்படிப் புரிந்து கொள்வதில்லை என்று சரியாகத் தெரியவில்லை. தனது பழைய வாழ்க்கை இறந்து போனதாகவும் இது ஒரு புதிய வாழ்க்கை என்று நாயகி நினைத்துக் கொள்வதாகவும் எடுத்துக் கொண்டேன்.

படத்தில் ஒரு முக்கியமான அம்சம் இருக்கிறது- நாயகியின் படுக்கையை ஒரு பக்கக் கண்ணாடி வழியாக நாயகன் கவனித்துக் கொண்டேயிருப்பான். அவளுக்கு கண்ணாடிக்குப் பின்பாக அவன் இருக்கிறான் என்பது தெரியாது. ஆனால் பார்வையாளர்களுக்குத் தெரியும். தன்னை உதாசீனப்படுத்தியவளை எவனெல்லாம் அனுபவிக்கிறான் என்பதைப் பார்த்து பழி தீர்த்துக் கொள்கிறான் என்றும் புரிந்து கொள்ளலாம் அல்லது நீலப்படம் பார்த்து இன்பம் அடைவதைப் போன்ற voyeurism என்றும் புரிந்து கொள்ளலாம். நாயகி வருவதற்கு முன்பாகவிருந்தே அந்தக் கண்ணாடி அங்குதான் இருக்கிறது.

நாயகிக்கும் அவன் மீது கொஞ்சம் கொஞ்சமாக பிரியம் வருகிறது. அவளுக்கு வேறு வழியும் இல்லை. காதலனை விட்டு பிரிந்தாகிவிட்டது. குடும்பம் இல்லை. வாடிக்கையாளர்களாக வருபவர்கள் எல்லோருமே உடலைத்தான் துய்க்கிறார்கள். இவன் மட்டும்தான் வேறுவிதமான உணர்வுகளுடன் நெருங்கி வருகிறான். அவளுக்கு அவன் மீது அன்பும் பிரியமும் உண்டு என்பதை சில காட்சிகள் உணர்த்திவிடும். நாயகனும் நாயகியும் முதன் முறையாகச் சந்தித்துக் கொண்ட அதே சாலையில் அதே பெஞ்ச்சில் அமர்வார்கள். அப்பொழுது இருவரின் கரங்களும் மென்மையாக வருடிக் கொள்ளும்.

அதோடு படம் முடிந்துவிடுவதில்லை. அவளை விபச்சார விடுதியில் இருந்து அழைத்துச் சென்றுவிடுவான். கி டோவின் படங்கள் கெட்டவர்கள் திருந்தி சமூகத்தோடு ஒத்து வாழ வேண்டும் என்கிற மாதிரியான போதனைகளையெல்லாம் கற்பிப்பதில்லை. மீனவர்களின் குடிசைப்பகுதியில் டெம்போ போன்றதொரு வண்டியை நிறுத்தி வண்டியைத் திரைச்சீலைகளால் மறைப்பான். பிறகு தள்ளி வந்து அமர்ந்து கொள்வான். அப்பொழுது அவள் தனது புதிய வாடிக்கையாளருடன் வண்டிக்குள் செல்வாள். அவளது வாழ்க்கை இனி அப்படித்தான் தொடரப் போகிறது. அவன் Pimp ஆகவே இருக்கப் போகிறான் என்கிற விதத்தில் படம் முடிவுக்கு வரும்.

வன்மம் என்பதும் ஒரு உணர்ச்சிதானே? யாரிடம் வன்மம் இல்லை? எல்லோரிடமும்தான் இருக்கிறது. நம்மை கொன்றுவிடுவதான வெறியில் சுற்றிக் கொண்டிருப்பவன் கூட நேர் பேச்சில் புன்னகைக்கிறான். தனது விஷம் அத்தனையையும் பற்களுக்குப் பின்னால் ஒளித்துக் கொள்கிறான். நமக்கும் அவனைப் பற்றித் தெரியும். ஆனால் நாம் சிரிப்பதில்லையா என்ன? இந்தச் சமூகம் விரும்பாத உணர்ச்சிகளை நாசூக்காக மறைத்துக் கொள்கிறோம். சமூகம் போற்றுகிற உணர்ச்சிகளான அன்பு, பிரியம் என்பதையெல்லாம் எச்சில் ஒழுகுவதைப் போல அடுத்தவர்களுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறோம். இது ஒரு உலக மகா நடிப்பு. ஆனால் இந்தப் படத்தின் நாயகன் அப்படியில்லை. தனது வன்மத்தையும் குரூரத்தையும் மறைத்துக் கொள்வதில்லை. எதிர்மறையான சிந்தனைகளையெல்லாம் ஒழித்துவிட்டு அன்பை விதைப்போம் என்று நாடக்கத்தனமாக போதிப்பதற்கு கி டோவும் சராசரி இயக்குநர் இல்லை என்பதை இந்த படத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.     

Oct 24, 2013

பாலியலில் வறண்ட சமூகம்

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக எங்கள் ஊரில் வீட்டுக்கு வீடு பஞ்சாயத்து போர்ட் தண்ணீர் குழாய் இருக்காது. இரண்டு வீதிகளுக்கு சேர்த்து ஒரு பொதுக் குழாய் இருக்கும். அதில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் தண்ணீர் வரும். அதுவும் ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ தான். அந்தச் சமயங்களில் பெரும்பாலும் சண்டை நடக்கும். பெண்கள் பின்னியெடுத்துவிடுவார்கள். சண்டை என்றால் சாதாரணச் சண்டை இல்லை. கிட்டத்தட்ட செவி வழிப் புணர்ச்சி- சிறு திருத்தம்- அது செவி வழி வன்புணர்ச்சி. நாறடித்துவிடுவார்கள். 

சண்டையை வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அது வெறும் ஒரு குடம் தண்ணீர் பிரச்சினைதான். ஆனால் அந்தப் பெண்களைப் பொறுத்தவரைக்கும் அது தண்ணீர் பிரச்சினையே இல்லை. ஈகோ சார்ந்த போராட்டம்; யார் பெரியவள் என்ற போட்டி; தனது அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் நிலை நாட்டக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு. மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள்.

அப்பொழுதெல்லாம் எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதுதான் இருக்கும். அம்மா வீட்டில் இருந்தால் தண்ணீர் வரும் நேரத்தில் அந்தப் பக்கமே விட மாட்டார். கெட்டுப் போய்விடுவேனாம். அப்படியே அந்தப் பக்கம் போனாலும் முக்கியமான வார்த்தைகளைத் தவிர மற்றதெல்லாம் புரியாது. ஆனால் சிலவற்றை விஷூவலைஸ் செய்துவிட முடியும். ‘அறுத்து தோரணம் கட்டிவிடுவேன்’என்ற வசனம் இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அப்படியொரு தோரணத்தை நினைத்துக் கற்பனைக் குதிரை தறிகெட்டு ஓடிய பருவம் அது. 

வயது கூடக் கூட பெண்களை விட்டு விலகத் துவங்கியிருந்தேன். விடலைப் பருவம் முழுவதும் ஆண்கள் பள்ளியிலேயே கரைந்து போயிற்று. திரும்பிய பக்கமெல்லாம் தண்டுவன்கள்தான். மல்லிகை வாசமே இல்லாத பதின்ம பருவத்தை விடக் கொடுமையான ஒன்று வேறு இருக்க முடியாது. அப்படியே வளர்ந்த பிறகு ‘பெண்களும் கெட்டவார்த்தைகளும்’ என்பது எனக்கு ஃபேன்டஸியான விஷயமாக மாறிப் போயிருந்தது. இது அனேகமாக சிறுவயது விஷூவலைசிங்கின் பாதிப்பாக இருக்கக் கூடும். கல்லூரியில் படிக்கும் காலத்தில் ‘பெண்கள் கெட்டவார்த்தை பேசுவார்களா?’ என்று தெரிந்து கொள்ள படு ஆர்வமாகத் திரிந்தேன். ஆனால் கண்டுபிடிக்கவே முடிந்ததில்லை. எந்தப் பெண்ணும் ஆண்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு கெட்ட வார்த்தை பேசுவதில்லை. இருபது வருடங்களில் பெண்களின் அகராதியிலிருந்தே கெட்டவார்த்தை அழிந்து போய்விட்டது போலத் தோன்றியது. ஆங்கிலப் படங்களில் ‘Fuck' என்று பெண்ணின் வாயிலிருந்து வந்துவிட்டால் போதும். அதுவே உத்வேகமடைய போதுமானதாக இருந்தது. இந்த உத்வேகத்திற்காகவே கொட்டக் கொட்ட ஆங்கிலச் சேனல்களை வெறித்துக் கொண்டிருந்த காலம் ஞாபகத்தில் இருக்கிறது.

இதே போலத்தான் பதினைந்து வருடங்களுக்கு முன்பாக செக்ஸ் கதை படிக்க வேண்டுமென்றாலும் அவ்வளவு எளிதில்லை- பழுப்பு நிறத்தில் மட்டமான தாளில் கிடைத்த சரோஜாதேவி புத்தகத்தை நீளமான கணக்கு நோட்டில் வைத்து மறைத்துத்தான் படிக்க வேண்டும். நம் செளகரியத்துக்கு ஏற்ப வீட்டிற்கு எடுத்துப் போய் படிப்பது ரிஸ்க். அதுவும் இல்லாமல் அரை மணி நேரம்தான் நமக்கு ஒதுக்கப்பட்ட நேரமாக இருக்கும். அதற்குள் வேகமாக படித்துவிட்டு ‘க்யூ’வில் நிற்பவனிடம் கொடுத்தாக வேண்டும். அதனால் வகுப்பறை அல்லது டியூஷனிலேயே பாராயணத்தை நடத்தியாக வேண்டும். நம் நேரம் கெட்டுக் கிடந்து தெரியாத்தனமாக அப்புச்சாமி வாத்தியாரிடமோ, டியூஷன் மாஸ்டர் கர்ணனிடமோ சிக்கிக் கொண்டால் சோலி சுத்தம். குரல்வளையிலேயே கால் வைத்து மிதிப்பார்கள். இத்தனை கட்டுக்காவல்களையும் மீறி நம் அறிவை வளர்த்துக் கொண்ட காலம் அது.

ஆனால் இப்பொழுது நிலைமை அப்படியா இருக்கிறது? பாலியல் குறித்த தேடல் என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. பெண்கள் கெட்டவார்த்தை பேசுவார்களா என்று தெரிந்து கொள்ள விரும்பினால் வெறும் யூடியூப் போதுமானதாக இருக்கிறது. சகட்டு மேனிக்கு பேசுகிறார்கள். அதுவும் தமிழிலேயே வெளுத்துக் கட்டிய ஆடியோக்கள் கிடைக்கின்றன. கேட்டு சலித்துப் போய்விட்டது. இப்பொழுது அது ஃபேன்டஸியாகவும் இல்லை; க்ரேஸியாகவும் இல்லை- நம்மையும் அறியாமல் இதில் அடுத்த படி என்ன என்று மனம் யோசிக்கத் தொடங்கிவிடுகிறது. இதுவொரு பரிணாம வளர்ச்சி போலிருக்கிறது.

இன்றைக்கு இணையமும், ஸ்மார்ட் ஃபோனும் இவற்றையெல்லாம் மிக எளிதாக மாற்றிவிட்டன. பாலியல் தேடல்கள் எவ்வளவு எளிதாகிவிட்டனவோ அதே அளவிற்கு தொடர்புகளும் எளிதாக மாறிவிட்டன. அந்தக் காலத்தில் ‘ஒரு வார்த்தை பேச ஒரு வருடம் காத்திருந்தார்கள்’. டைப்ரைட்டிங் செண்டரிலோ, வகுப்பறையிலோ, வாய்க்கால் மேட்டிலோ சைகையில் ஆரம்பித்து, சிரிப்புக்கு வந்து பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்குள் வீட்டில் திருமண பேச்சைத் தொடங்கியிருப்பார்கள். 

இப்பொழுதெல்லாம் ஒரு மிஸ்டு கால் போதும். பிறகு அந்த மிஸ்டு கால் நம்மை சொர்கத்திற்கு அழைத்துச் செல்லக் கூடும். தகவல் தொடர்பியலில் ஏற்பட்டிருக்கும் இந்த எளிமையாக்கல் சமூகத்தில் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை கவனிக்கிறோமா இல்லையா என்று தெரியவில்லை. தொழில்நுட்பத்தின் அசுரத்தனமான வளர்ச்சி என்பது சமூகத்தில் இருண்ட மனநிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ‘இருண்ட மனநிலை’ என்பது அடுத்தவருக்கு தெரியாத ‘secret பக்கங்கள்’.

ஒவ்வொரு மனிதனுக்கும் மிக ரகசியமான ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அந்தரங்கங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறன. நாம் உருவாக்கி வளர்த்துக் கொண்டிருக்கும் அந்தரங்கமான உறவுகளைப் பற்றி நமக்கு மிக நெருக்கமான- கணவனுக்கோ, மனைவிக்கோ, அம்மா அப்பாவுக்கோ அல்லது மகன் மகளுக்கோ கூட தெரிவதில்லை-இந்த அந்தரங்கமான தொடர்புகளில் இருப்பவர்களை பார்த்திருக்கக் கூட மாட்டோம். ஆனால் எந்த extreme எல்லைக்கும் சென்றும் உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருப்போம். இது பெரிய உணர்வுபூர்வமான உறவு நிலையும் கிடையாது. ஏதோ ஒரு கட்டத்தில் கசந்துவிடும் போது இந்த தொடர்புகளை விட்டுவிட்டு இன்னொரு புதிய தொடர்புகளை கண்டுபிடித்துவிடுகிறோம். அவ்வளவுதான்.

நகரங்களில் நடைபெறும் கொலைகளாகட்டும், தற்கொலைகளாகட்டும்- தொண்ணூறு சதவீத விசாரணை கள்ளக்காதலில்தான் போய் நிற்கின்றன. அதிலும் இந்த குற்றச்செயல்களின் பிண்ணனியை ஆராய்வதற்கு தொண்ணூற்றொன்பது சதவீதம் செல்போன்கள்தான் உதவியாக இருக்கின்றன. அவனுக்கு அவள் இத்தனை எஸ்.எம்.எஸ்கள் அனுப்பியிருந்தாள். இவன் அவளோடு இத்தனை முறை ஃபோனில் பேசியிருந்தாள் என்று அறிக்கை விடுகிறார்கள் விசாரணை அதிகாரிகள். 

எதற்காக இந்த உறவுகள் தேவைப்படுகின்றன? நம்மைச் சுற்றிலும் திரும்பிய திசைகளிலெல்லாம் நமது உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றன. இந்த தூண்டப்பட்ட உணர்ச்சிகளுக்கு ஏதோவொரு விதத்தில் வடிகால்களைத் தேடத் துவங்குகிறது மனம். இந்த தேடியலையும் மனதுக்கு இணையமும் தகவல் தொடர்பியலும் ஏதோவொரு விதத்தில் நமக்கு ‘வெர்ச்சுவல் பார்ட்னராக’ மாறிவிடுகிறது அல்லவா? இதுதான் சிக்கல்.  உண்மையில் இத்தகைய தொடர்புகள் நமக்குள் கசடுகளை மட்டுமே உருவாக்குகின்றன. நம்மைவிட்டு வெளியேறாத கசடுகள் இவை. 

நமக்குத் தெரிகிறது- இவையெல்லாம் கசடுகள் என்று. ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் இவற்றிலிருந்து தப்பித்துவிட முடியாது என்று நினைக்கிறேன். மிகப் பெரிய ட்ராப் இது. ஆனால் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக அப்பாவின் நெம்பருக்கு ஒரு அழைப்பு வந்தது. அன்றைக்கு அம்மா எடுத்தார். ‘சுமதிங்களா?’ என்று கேட்டிருக்கிறான். ‘இல்லைங்க சுப்புலட்சுமி’ என்றிருக்கிறார். ‘திண்டுக்கல்லிலா இருக்கறீங்க?’ என்று அடுத்த கேள்விக்கு அம்மாவும் தெரியாத்தனமாக ‘இல்லைங்க பெங்களூரில் இருக்கிறோம்’ என்று உளறியிருக்கிறார்.

அம்மாவின் வாயிலிருந்தே தகவல்களை வாங்கிக் கொண்டவன் ‘நான் அடிக்கடி ஓசூர் பக்கம் வருவேன், நீங்க ஃப்ரீயா இருந்தீங்கன்னா சொல்லுங்க’ என்று மூன்றாவது வாக்கியத்திலேயே கேட்டிருக்கிறான். எதிர்முனையில் இருப்பவருக்கு என்ன வயது இருக்கும், எப்படி இருப்பார் என்ற எந்த அக்கறையும் அவனுக்கு இல்லை. அவனுக்குத் தேவையானதெல்லாம் ஒரு பெண்ணின் குரல்- அது மட்டும்தான். அம்மா மூர்ச்சையாகாத குறை. அதிர்ச்சியாகிவிட்டார். அதன் பிறகு நான் அழைத்து திட்டிய பிறகு ‘சாரி சார், ராங் நெம்பர்’என்று துண்டித்துவிட்டான். அது ராங் நெம்பர் எல்லாம் இல்லை. வேண்டுமென்றே பேசிய ராங் பேச்சு. 

இப்படி கைக்கு வந்த எண்ணிற்கு டயல் செய்து பேசுவது, ஒருவேளை பெண்கள் பேசினால் தூண்டில் வீசிப்பார்ப்பது என்று திரிகிறார்கள். 

பிறகு என் நெம்பரில் இருந்து ‘நான் நித்யா’ என்று அவனுக்கு மெசேஜ் அனுப்பினேன். எந்த ஊர்? வயது என்ன? என்ற இரண்டு கேள்விகளுக்கு பிறகு ‘உனக்கு என்ன ரேட்?’ என்று மெசேஜ் அனுப்புகிறான். இவனை எல்லாம் என்ன செய்வது? தொடர்ந்து மெசேஜ் அனுப்பினால் தனக்கு திருமணமாகிவிட்டது, குழந்தை இருக்கிறது என்றெல்லாம் பேசுகிறான்.

இவனை போலீஸில் பிடித்துக் கொடுக்கலாம்தான். கொடுத்தால் என்ன நடக்கும்? நாலு சாத்து சாத்துவார்கள். அதனால் இந்த சமூகம் திருந்திவிடுமா என்ன? இவனைப் போல இன்னும் ஏகப்பட்ட பேர்கள் இருப்பார்கள். தனிப்பட்ட ஒருவனை அடித்து திருத்துவதால் எதுவும் நடக்கப் போவதில்லை. சமூகத்தின் பெரும்பகுதி இப்படித்தான் சிதைந்து கொண்டிருக்கிறது. அவனுக்கு திருமணமாகிவிட்டது, குழந்தை இருக்கிறது, குடும்பம் நடக்கிறது. எல்லாம் இருந்தும் என்ன பயன்? வறண்டு கிடக்கிறான். யாரையாவது தேடுகிறான். இதுதான் பாலியலில் வறண்ட சமூகம் என்பது. எல்லா உணர்ச்சிகளும் தூண்டப்பட்டுவிட்டது, ஆனால் இந்த சமூகத்தின் உணர்ச்சிகளுக்கு வடிகால்தான் இல்லை. இதை எப்படி தனிமனிதனின் பிரச்சினை என்று ஒதுக்குவது?

Apr 5, 2013

ராஜபோதை


ராஜ போதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

உயிரோசை இணையத்தளத்தில் போதைப் பொருட்களைப் பற்றி எழுதும் போது இந்தப் பெயர் அறிமுகமானது. இந்த மாதிரி ஐட்டங்களை எல்லாம் “ஏதாச்சும் எழுதணுமே” என்று எழுதினால் பல்லிளித்துவிடும். அப்படித்தான் பல்லிளிக்க வைத்தேன். இந்த சமாச்சாரங்களை அனுபவித்து எழுத வேண்டும் அப்படியில்லையென்றால் விட்டுவிட வேண்டும். குமுதத்திலோ, ரிப்போர்ட்டரிலோ எழுதுவார்கள். தெரிந்து கொள்ளலாம்.

ராஜபோதை என்றால் வேறொன்றுமில்லை- குட்டிப்பாம்பை நாக்கின் மீது கடிக்க விடுவார்கள். Yes,சரியாகத்தான் படிக்கிறீர்கள். குட்டிப் பாம்புதான் கடிக்கும். பாம்பும் நாக்கை கடித்தால் என்ன ஆகும்? விஷம் உச்சந்தலைக்கு எகிறி மூச்சை அடைக்கும். இதயத்துடிப்பு, மூச்சை எல்லாம் இழந்துவிட்டு இரண்டு நிமிடங்களுக்கு இறந்துவிடுவார்கள். குட்டித் தூக்கம் மாதிரி, இது இரண்டு நிமிடங்கள் மட்டுமே இறந்து போகும் Mini death. பின்னர் அதிர்ஷ்டம் இருந்து எழுந்தால் இரண்டு நாளைக்கு ஆல்ஹகால் வாடை இல்லாமல் போதையில் மிதக்கலாம். இந்த போதையைத்தான் ராஜ போதை என்கிறார்கள்.

கஞ்சா, ஹெராயின் எல்லாம் அடித்தால் டாப் கியரில் போதை எகிறினாலும் கூட சில ‘போதாதிபதிகளுக்கு’ அளவு போதாதாம். இன்னும் கொஞ்சம் ஏத்திக்கலாமே என்று நினைத்து பாம்பை கொத்தவிட்டு கிறுகிறுத்து கிடப்பார்களாம். Boost up plan மாதிரி. 

பெரும்பாலும் பணக்கார பார்ட்டிகளில் கும்மாளத்திற்கு மெருகூட்ட பாம்பாட்டிகளைக் கூட்டி வருகிறார்கள்.  “நீ போய் நேர்ல பார்த்தியா?” என்று கேட்கக் கூடாது. இண்டர்நெட்டில் அப்படித்தான் யாரோ எழுதி வைத்திருந்தார்கள்.

குறிப்பிட்ட வகை பாம்புகள், அதுவும் குறிப்பிட்ட வயதிற்குள்ளான குட்டிப் பாம்புகளையே கடிக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். உதாரணத்திற்கு ராஜ நாகத்தில் இருக்கும் விஷம் Neuro Toxic. நரம்படி நாராயணன். சற்று வயதான பாம்புகளில் இந்த விஷத்தின் வீரியம் அதிகமாக இருக்கும். இத்தகைய விஷம் அதிகமுள்ள பாம்பைத் தேர்ந்தெடுத்தால் மூச்சை நிறுத்தி ஆளை மொத்தமாக முடித்துவிடும். சிலவகைப் பாம்புகளில் இருக்கும் விஷம் ஹீமோஸ்டாட்டிக் விஷம். இந்த வகை விஷம் உடனடியாக இரத்தத்தைக் கட்டியாக்கி உயிரை முடித்துவிடும். இந்த‌ மாதிரியான‌கார‌ண‌ங்க‌ளால் பாம்பினைத் தேர்ந்தெடுப்ப‌தில் மிகுந்த‌க‌வன‌ம் தேவை. இந்தியாவில் பெரும்பாலும் குட்டி நாகபாம்புகளையும், மரத்தில் இருக்கும் பச்சைப் பாம்புகளையும் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் பாம்புக்க‌டி என்ப‌து நீண்ட‌கால‌மாக‌ இருந்து வ‌ருகிறது. சில‌ இந்து சாதுக்கள் ம‌த‌ ரீதியான‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ நாகப்‌பாம்பினைத் த‌ங்க‌ள் நாக்குக‌ளில் கொத்த‌ச் செய்கிறார்க‌ள். மும்பையின் தென் ப‌குதிக‌ளில் மிக‌ப் ப‌ர‌வ‌லாக போதைக்குப் பாம்புக்கடியைப் பயன்படுத்துவது உண்டு. ஒரு க‌டிக்கு ஐம்ப‌து ரூபாய் என்ற‌ அள‌வில் கிடைக்கிற‌து. சென்னையிலும் உண்டாம். ஒரு க‌டிக்கு இர‌ண்டாயிர‌த்து ஐநூறு ரூபாயாம்.

கட்டுரை மொத்தத்தையும் டவுன்லோட் செய்து எழுதிவிட்டான் என்று பல் மீது நாக்கை போட்டு யாரும் சொல்லிவிடக் கூடாது அல்லவா? அதனால் துக்கினியூண்டு இதுபற்றி விசாரித்தும் வைத்திருந்தேன். 

போதை மறுவாழ்வு மையம் ஒன்றில் இது பற்றி கொஞ்சம் தகவல்களைக் கொடுத்தார்கள். ராயப்பன் என்ற பவர்ஸ்டார் ஒருவரின் அறிமுகமும் கிடைத்தது. ராய‌ப்ப‌ன் எழுப‌துக‌ளின் ம‌த்தியிலிருந்து (த‌ன‌து 20 வ‌ய‌தில்) இன்று வ‌ரை பாம்புக் க‌டியின் ச‌ந்தோஷ‌த்தில் திளைத்து வ‌ருகிறார். ஆரம்பத்தில் க‌ஞ்சா அடிக்க‌ ஆர‌ம்பித்திருக்கிறார், போதை இன்னமும் அதிகம் கிடைக்கும் என்று யாரோ சொன்னதற்காக‌ பாம்புக் க‌டியையும் கூட‌ச் சேர்த்திருக்கிறார். ஆர‌ம்ப‌த்தில் 18 ம‌ணி முத‌ல் 20 மணி நேர‌ம் ம‌ய‌க்க‌த்தில் கிடப்பாராம். நாட்க‌ள் ஆக ஆக‌ 12 ம‌ணி முத‌ல் 14 ம‌ணி நேர‌மாக‌ போதை நேர‌ம் குறைந்திருக்கிற‌து. என்ன நினைத்தாரோ தெரியவில்லை எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்று சிகிச்சை எடுத்து வருகிறார்.

ஹெராயினைத் தொட‌ர்ந்து உட்கொள்ப‌வ‌ரை திடீரென‌ நிறுத்த‌ச் செய்தால் அத‌ன் விளைவு கொடூர‌மான‌தாக‌ இருக்கும். இத‌ற்கு Withdrawal Symptoms என்று பெய‌ர். ஹெராயின் கிடைக்காத‌ அந்த‌நேர‌த்தில் கிட்ட‌த்த‌ட்ட‌ பைத்திய‌ நிலையை அடைவ‌ர். தொட‌ர்ச்சியான‌ ப‌தட்டம், விய‌ர்வை, போதைக்காக பின் விளைவுகள் குறித்து யோசிக்காம‌ல் எதையும் செய்த‌ல் போன்ற‌வை சில. தமிழ்/தெலுங்கு படங்களில் போதைக்கு அடிமையான பெண்கள் போதை வேண்டும் என்பதற்காக எதுவும் செய்வார்கள் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்குமே, அப்படி. இது போன்ற ‌Withdrawal Symptoms பாம்புக்க‌டிக்கு இல்லை.

பாம்புக்கடிக்குப் பழகியவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இதை நிறுத்திக் கொள்ள முடியும் என்ப‌தால் இத‌னை "அடிமையாக்கும் போதை" என்று சொல்ல‌முடியாது. நேரம் கெட்டுக் கிடந்தால் "ஆளை முடிக்கும் போதை" என்று வேண்டுமானால் சொல்லலாம்.

Nov 28, 2012

சீமான் - சிதைந்த நம்பிக்கைகள்



தமிழகத்தையும் ஈழத்தையும் உய்விக்க வந்தவர் என்று ஒரு காலத்தில் சீமானை நம்பியிருந்தேன். அரசியல் புரிந்த மேதையாகவோ அல்லது தீர்க்கதரிசியாகவோ இருந்திருந்தால் ‘இவரும் இன்னொரு அரசியல்வாதி’ என்று தொடக்கத்திலேயே முடிவு செய்திருக்கலாம். தந்தி பேப்பரை அக்குளில் இடுக்கிக் கொண்டு சலூனிலும் டீக்கடையிலும் அரசியல் பேசும் என்னால் அப்படியெல்லாம் நிராகரிக்க முடிவதில்லை. அதிமுக,  திமுக தவிர்த்து யார் வந்தாலும் நல்லவர் என்று நம்பிக் கொள்கிறேன். விஜயகாந்த்தைக் கூட அப்படி நம்பியவனால் சீமானை எப்படி ஒதுக்க முடியும்? நாற்பதாண்டுகளுக்கும் மேலாக வாக்கரிசி பொறுக்கும் அரசியல்வாதிகளுக்கிடையே அல்லாடும் தமிழர்களுக்கு கிடைத்த போராளியாகத்தான் சீமான் தெரிந்தார்.

ஈழப்போராட்டமும் அதன் வழியாக  தமிழ் சாம்ராஜ்யமும் சரிந்து கொண்டிருந்த சமயத்தில் கிழிந்து தொங்கிய தமிழக அரசியல்வாதிகளின் முகமூடிகளைத் தாண்டி தான் மட்டுமே விடிவெள்ளியென்ற பிம்பத்தை சீமானால் மிகச் சுலபமாக உருவாக்க முடிந்தது. அவரது கூட்டங்களில் தெறித்த தீக்கங்குகளையும், வெறித்தனமாக அவர் பின்னால் சுற்றிய தம்பிமார்களையும் பார்க்கும் போது நரம்புகளை உருவியெறிந்துவிட்டு TMT முறுக்குக் கம்பிகளை செருகிக் கொண்டு சுற்றுகிறார்களோ என்று நினைத்ததில் ஆச்சரியம் ஏதும் இருக்க முடியாது.

ஈழத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு அவர் விடுத்த எச்சரிக்கைகள் நெஞ்சுக்குள் தீ மூட்டின. இந்த பேச்சுக்களை கேட்டுவிட்டு இந்த நொடியில் நெஞ்சு வெடித்துச் செத்தாலும் சம்மதமே என்று சமாதானம் ஆகிக் கொள்வேன். காங்கிரஸை கறுவறுப்பேன் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் அவர் கர்ஜித்த போதும் கேட்ட விசில் சப்தங்கள் இன்னமும் காதுக்குள் ஒலிக்கிறது. அரசியலில் கொடி கட்டப்போகும் சீமான் அதே சமயத்தில் தமிழுணர்வை பழுக்கக் காய்ச்சி நம் ஆங்கில மோகத்தின் புட்டத்தில் சூடு போடப் போகிறார் என்றுதான் அசிரீரி ஒலித்தது. ப்ளாஸ்டிக் என்ற சொல்லுக்கு பதிலாக ‘நெகிழி’ என்போம் என்றெல்லாம் தமிழுணர்வு விதைகளை விதைத்த போது இனி தமிழனின் வாழ்வில் எல்லாம் சுகமே என்றுதான் நம்பினேன்.

தேர்தல் வரைக்கும் சுற்றிச் சுற்றி வந்தவரை கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாகவே காண முடியவில்லை.நமது நம்பிக்கைக்குரியவர்கள் எதைச் செய்தாலும் நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்வோம் இல்லையா? அப்படித்தான் என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். தமிழர்களுக்காக தனது தொழிலான சினிமாவை விட்டுவிட்டு சில வருடங்களாக போராடியதால் வருமானமில்லாமல் சாப்பாட்டுக்கும் கூட கஷ்டபட்டிருப்பார் எனவும் மீண்டும் சில படங்களை இயக்கியோ அல்லது நடித்தோ நல்ல உணவு உண்டுவிட்டு மீண்டும் மைக் பிடிப்பார் என ஆறுதல் படுத்திக் கொண்டேன். 

தென் மாவட்டங்களில் இரத்த ஆறு ஓடிய போது உண்ட களைப்பில் தூங்கியிருக்கக் கூடும் என நம்பியது அதே ஆறுதலின் நீட்சிதான். தமிழகத்தின் பிரச்சினைகள் என வந்த போதெல்லாம் அவரை எதிர்பார்ப்பதும் அவர் வராமல் இருப்பதும் வழக்கமாகிப்போனது. அப்பொழுதெல்லாம் சினிமா ஷூட்டிங்கிற்காக வெளிநாட்டில் இருப்பார் என ஏற்றுக் கொண்டதும் அதே நம்பிக்கையில்தான். 

தர்மபுரியில் அரிவாளும் நெருப்பும் நடனம் புரிந்த போதும் ஒரு ‘வழவழா’ அறிக்கையோடு அமைதியாகியிருக்கிறார். இப்பொழுதும் கூட அவர்தான் விடிவெள்ளி என நம்புவதில் எனக்கு ஒரு பைசா இழப்பு கூட இல்லை. ஆனால் சில கேள்விகள் அரித்துக் கொண்டிருக்கின்றன. அவை சிதைந்து கொண்டிருக்கும் நம்பிக்கைகளின் காரணமாக எழும் கேள்விகள்.

‘நம்பிக்கைகளை சிதைப்பதைவிட நம் மீது நிகழ்த்தப்படும் ஆகப்பெரிய வன்முறை என்று வேறு எதுவும் இல்லை’ என்று கவிஞர் கோசின்ரா சொன்னபோது சீமானின் முகம்தான் வந்து வந்து போனது. இலட்சக்கணக்கான தமிழர்களின் நம்பிக்கைகளை சிதைத்திருக்கிறார் சீமான். அவரைப் பின் தொடர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை நட்டாற்றில் விட்டிருக்கிறார்.என்னைப் போன்ற மிடில்க்ளாஸ் மாதவன்களின் தலையில் மிளகாய் அரைத்திருக்கிறார்.

மிளகாய் அரைப்பது என்பது பணத்தை திருடிக் கொண்டு போய்விட்டார் என்பதோ அல்லது சொத்தை பறித்துக் கொண்டார் என்பதோ இல்லை. அவர் உருவாக்கியா அல்லது அவரது பேச்சினால் நாமாக உருவாக்கிக் கொண்ட பிம்பத்தை சிதைப்பதும் கூட மிளகாய் அரைப்பதுதான். 

சீமான் ஒருபோதும் தமிழர்களின் தலைவனாக மாறப்போவதில்லை. அப்படி அவர் நினைத்துக் கொண்டிருந்தால் அதைவிட காமெடி வேறு ஒன்றும் இருக்க முடியாது. மூன்று வருடங்களில் சில நூறு கூட்டங்களில் கழுத்து நரம்பு புடைக்க பேசிவிட்டால் தலைவன் ஆகிவிட முடியும் என்றால் நாஞ்சில் சம்பத்தோ அல்லது தீப்பொறி ஆறுமுகமோ எப்பொழுதோ தலைவர்கள் ஆகியிருப்பார்கள். 

சீமானோ அல்லது இன்னமும் அவரை  நம்பும் தம்பிகளோ என்ன விளக்கம் வேண்டுமானாலும் தரலாம். ஆனால் குறைந்தபட்சம் என்னளவில் சீமானின் பிம்பத்தைச் சிதைத்துக் கொண்டேன் என்பதுதான் உண்மை. இதில் சீமானின் குற்றம் என்று எதுவும் இல்லை. இந்த அதிநவீன வாழ்க்கைச் சூழலிலும் ஒரு மனிதன் மீது நம்பிக்கை வைப்பது என்பது எவ்வளவு பெரிய அபத்தம். நம்பிக்கை என்பதன் அர்த்தமே மாறிப் போயிருக்கும் இந்தக் காலகட்டத்தில் அந்த அபத்தைத்தான் பெரும்பாலானவர்கள் எப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறோம். இப்பொழுதும்.

Nov 6, 2012

கள்ளக்காதல், கொலை, தற்கொலை




சம்பவம் 1:

ஹைதராபாத் இன்போஸிஸ் கட்டடம். ஜூலை 31, 2012. இரவு 10.30 மணி. 
நீலிமா என்ற பெண் பல அடுக்கு பார்க்கிங் ஏரியாவில் இருந்து குதித்து உயிரை மாய்க்கிறார்.

தற்கொலைக்கான காரணம்- கள்ள உறவு.


சம்பவம் 2:

திருப்பூர் வீரபாண்டி கிருஷ்ணா நகர். அக்டோபர் 29. 
மீனாட்சிதேவி என்ற 19 வயதுப்பெண் தனது இரண்டரை வயது மகளை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொல்கிறார். 

கொலைக்கான காரணம்- கள்ள உறவு.

                                                                        ***
நீலிமாவும் சரி, மீனாட்சியும் சரி மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவருக்குமே குழந்தை உண்டு. அடுத்த சில வருடங்களுக்குள்ளாக காதல் திருமண வாழ்க்கை கசந்து வேறொருவருடன் காதல்/கள்ள உறவு மலர்ந்து தற்கொலை செய்து கொள்வதற்கும், கொலை செய்வதற்கும் தூண்டப்பட்டிருக்கிறார்கள். 

நீலிமா இதற்கு முன்பாக வேலை செய்த ஐ.டி நிறுவனத்தில் தன்னோடு பணி புரிந்த பிரசாந்த் என்பவருடன் உறவு ஏற்பட்டு அதைக் காதல் எனக் கற்பிதம் செய்திருக்கிறார். தற்கொலை செய்வதற்கு முன்பாக “உனக்கும் எனக்கும் ஒத்துவராது” என தனது கணவன் சுரேஷூக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கிறார். தனக்கும் சுரேஷூக்கும் ஒத்துவராது என்பதை காதலித்த போதோ அல்லது திருமணத்திற்கு பிறகோ புரிந்து கொள்ளாத நீலிமா, தனது வாழ்வில் மூன்றாவதாக ஒருவன் குறுக்கே வந்தபிறகு புரிந்து கொள்கிறார். 

மீனாட்சிதேவி தனது காதல் கணவனைவிட்டு பிரிந்து தாயாருடன் வசித்துவருகிறார். பிரிந்து வாழ்ந்தாலும் தனது மனைவியையும் குழந்தையும் பார்க்க அவளது கணவன் அவ்வப்போது தனது மாமியார் வீட்டுக்கு வந்து போகிறார். இந்த நிலையில் சூர்யா என்ற என்பவருடன் ஏற்பட்ட உறவின் காரணமாக அவனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் மீனாட்சிதேவி. இதற்கு முதல் கணவனுடனான தனது குழந்தை தொந்தரவாக இருக்கக் கூடும் என கொலை செய்திருக்கிறார்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே சாம்பிள்தான். வேலூரில் தனது மனைவியின் கழுத்தை மட்டும் தனியாக வெட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வந்த ராணுவ வீரனிலிருந்து, தனது கணவனை ஆள் வைத்துக் கொன்ற ஈரோட்டு பெண்மணி வரைக்கும் பெரும்பாலான குற்றச்சம்பவங்களின் பின்ணனியில் இருப்பது கள்ள உறவுதான். விசாரிக்காமல் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட திருச்சி ராமஜெயத்தின் கொலைப் பின்ணணியில் பெண் விவகாரம் இருக்கிறது என்ற பேச்சு உண்டு.

படித்தவர்கள், பாமரர்கள், நகர்ப்புற வாழ்க்கை, அமெரிக்க ரிடர்ன், பட்டிக்காட்டு வாழ்க்கை, பெரியமனிதர்கள், விளிம்பு நிலை வாழ்க்கை என எந்த பேதமும் பாராமல் விரவிக்கிடக்குகிறது கள்ள உறவு. இதை வெறும் உடல் சார்ந்த பிரச்சினையாக மட்டுமே அணுக வேண்டியதில்லை. உடல் சார்ந்த இச்சைகள் பிரதானம் என்ற போது அதையும் தாண்டி அரவணைப்பு, பற்றுதல் என ஏதோ ஒன்றை இவர்களின் மனம் நாடியிருக்கிறது. சகிப்புத்தன்மையை தொலைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்வதற்கும், கொலை செய்வதற்கும் தேவையான மனச்சிக்கல்களை உருவாக்கிய அம்சம் எது என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டும்.

கள்ள உறவு என்ற சிக்கலை தனிமனிதனின் பிரச்சினையாக மட்டுமே எடுத்துக் கொண்டு விவாதித்துக் கொண்டிருப்பது எந்தப் பயனையும் தரப்போவதில்லை. இது ஒட்டுமொத்த சமூகத்தின் பண்பாட்டுச் சிக்கல். 

பிறத்தியாருடனான உறவு என்பது இன்று நேற்று உருவானதில்லை. சங்ககாலத்திலிருந்தே உண்டு. தமிழ் இலக்கியத்தில் பெருந்திணை என்ற பிரிவு இருக்கிறது. பெருமளவில் நடைபெறுவதால் இதற்கு பெருந்திணை என்று பெயர் என்ற இலக்கணகுறிப்பும் கூட இருக்கிறது. அந்தக்காலத்திலிருந்தே பரவலாக கள்ள உறவு இருந்தாலும் இது சார்ந்து கொலைகளும், தற்கொலைகளும் தற்காலத்தில் அதிகளவில் நடப்பதற்கான காரணம்தான் சமூக ஆய்வியலுக்குட்படுத்தப்பட வேண்டியது.

பண்பாடு என நாம் உருவாக்கி வைத்திருப்பது அடுத்தவர்களைக் கட்டுப்படுத்தி வைப்பதற்கான அம்சமாகத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தன் மனைவி இப்படித்தான் ஆடை அணிய வேண்டும் என்பதிலிருந்து, அவள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், தன் கணவன் யாருடன் பழக வேண்டும், மகனும் மகளும் எங்கே போக வேண்டும், யாருடன் சுற்ற வேண்டும் என அடுத்தவர்கள் மீதான தங்கள் கண்காணிப்பை இறுக்கிக் கொள்ள பயன்படுத்தும் ஒரு ஆயுதம். அவ்வளவுதான். ’சுய ஒழுக்கம்’ என்பதை நமது பண்பாடு போதிப்பதில்லை அல்லது போதிக்கப்பட்ட கொஞ்ச நஞ்ச சுய ஒழுக்கத்தையும் கைவிடாமல் கடைபிடிக்க வேண்டும் என்ற உறுதியை உருவாக்கத் தவறிவிடுகிறது.

இதற்கு ஏற்றாற்போல டிவியில் ஆரம்பித்து, எஸ்.எம்.எஸ், கம்யூட்டர், இண்டர்நெட் என சகல அறிவியல் வசதிகளும் உருவாக்கிக் கொடுக்கும் வாய்ப்புகள் நம் ‘சுய ஒழுக்கம்’ என்பதில் இருக்கும் ஓட்டையின் வழியாக சிக்கல்களை ஊதி வளர்க்கின்றன. கள்ள உறவு என்பது அதில் ஒரு சிக்கல். 

அரசாங்கம் போன்ற நிறுவனங்கள்(Institutions) சமூகச் சிக்கல்களின் பரிமாணங்களை முழுமையாக புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. நடிகையின் ஆடையை திரைப்படங்களில் சரி செய்வதாலும், சிகரெட் புகைப்பதை காட்சி ஊடகங்களில் காட்ட வேண்டாம் என வலியுறுத்துவதாலும் மட்டும் பிரச்சினைகளை தீர்த்துவிட முடியாது என்ற அடிப்படை புரிதல் முதலில் உருவாக வேண்டும். இது பாலியல் சார்ந்த பிரச்சினை மட்டுமில்லை என்ற கோணத்தில் அணுகப்பட வேண்டும்.

பண்பாடு என நம் முன்னோர்கள் உருவாக்கிவைத்திருக்கும் அடுத்தவர்கள் மீதான இத்துப்போன கட்டுப்பாடுகளை நெகிழ்த்துவதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அது காலத்திற்கு ஏற்ப சுய ஒழுக்கத்தை போதிப்பதாக அமைய வேண்டும். “நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன். ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்ற மனநிலையை உருவாக்கும் பண்பாடும் கலாச்சாரமும் ஆபத்தானவை. அதைத்தான் நாம் காலங்காலமாக பின்பற்றியும் கொண்டாடியும் வருகிறோம். 

“நீ எப்படி வேண்டுமானாலும் போ நான் இப்படித்தான் இருப்பேன்” என்ற மனநிலை உருவாக்கம்தான் காலத்தின் தேவை. இதைத்தான் கல்வி நிறுவனங்களில் தொடங்கி சமூக அமைப்புகள், அரசாங்கம் என ஒவ்வொரு நிறுவனமும் முன்னெடுக்க வேண்டும். சகிப்புத்தன்மை என்பது இந்த மனநிலையிலிருந்துதான் தொடங்குகிறது. இன்றைய அவசர, நவீன உலகத்தில் உருவாக்கப்படும் சகிப்புத்தன்மை மட்டுமே எண்பது சதவீத பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியும். இங்கு யாருக்குமே சகிப்புத்தன்மையில்லை என்பது எவ்வளவு பெரிய துக்கம்?

சகிப்புத்தன்மையற்ற சமூகத்தில் அன்பு, பிரியம், குற்றச் செயல்கள் இல்லாத சூழல் என்பனவற்றையெல்லாம் போதிப்பதும் எதிர்பார்ப்பதும் மடத்தனம். சீரழிந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் So called Institutions ஐச் சார்ந்தவர்கள்.

Sep 23, 2012

ரஜினி - பணம் காய்ச்சி மரம்



அலுவலகத்தில் பெங்காலி பையன் ஒருவன் இருக்கிறான். பெருங்குரலோன். அவன் பேசினால் அந்தத் தளத்தில் இருப்பவர்கள் அத்தனை பேரும் திரும்பிப் பார்ப்பார்கள். 'பேசினால்' என்பதை விட 'கத்தினால்' என்பதுதான் பொருத்தமாக இருக்கும். நேற்றும் கத்திக் கொண்டிருந்தான். அவன் கத்திக் கொண்டிருந்தது ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளை. அரைகுறைத் தமிழில் டயலாக்குகளை கீழே போட்டு மிதித்துக் கொண்டிருந்தான். அவனது தமிழ் உச்சரிப்பை தொடர்ந்து கேட்டால் காதுகளில் இரத்தம் வந்துவிடக் கூடும் என்பதால் அவனை சாந்தப்படுத்துவது தலையாயக் கடமையாகிவிட்டது. குறுக்கே புகுந்துவிட்டேன்.

ஒரு சிறு புத்தகத்தை வைத்துக் கொண்டுதான் இத்தனை அலப்பறையும் செய்து கொண்டிருந்தான். புத்தகத்தின் பெயர் "Rajni's Punchtantra". ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த புத்தகம். அமெரிக்கா சென்றிருந்த நண்பன் இவனுக்கு அன்பளிப்பாக வாங்கி வந்தானாம். 

ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் முப்பதை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஒரு பக்கத்தில் ரஜினியின் படம். அடுத்த பக்கத்தில் டயலாக்கை தங்கிலீஷில் கொடுத்திருக்கிறார்கள். உதாரணமாக "Sollraan...senjittan" அதன் கீழேயே அர்த்தத்தை ஆங்கிலத்தில் தந்திருக்கிறார்கள் " I committed..I delivered". 

இத்தோடு நிறுத்தவில்லை. அதற்கு அடுத்த பக்கம் இந்த டயலாக்கை தொழிலில் எப்படி பயன்படுத்துவது, வாழ்க்கையில் எப்படி பயன்படுத்துவது என்று பாடம் நடத்துகிறார்கள். ரஜினி என்ற பெயரை எப்படி வேண்டுமானாலும் காசாக்கிவிடலாம். இந்த புத்தகமும் அப்படித்தான் போலிருக்கிறது என்று வாசித்தால் மயக்கம் வராத குறைதான். 

புத்தகத்தில் "இது எப்படி இருக்கு" என்ற டயலாக்கும் இருக்கிறது. இதை தொழிலில் எப்படி பயன்படுத்தலாம்? 

சொல்லுங்கண்ணே சொல்லுங்க இமான்தான் ஞாபகத்திற்கு வருகிறார். அவர் பாணியிலேயே வாசியுங்கள்.  "குழுவாக செயல்படும் போது மேனேஜர் குழுவில் இருக்கும் உறுப்பினர்களிடமெல்லாம் "இது எப்படி இருக்கு" என்று கேட்க வேண்டும். உறுப்பினர்கள் சக உறுப்பினர்களிடம் கேட்க வேண்டும்" இதே வரியை முக்கால் பக்கத்திற்கு நீட்டி முழக்க முடியாதல்லவா? அதனால் ஐன்ஸ்டீனை எல்லாம் உள்ளே இழுத்து கும்மியிருக்கிறார்கள்.

இந்த டயலாக்கை வாழ்க்கையில் எப்படி பயன்படுத்தலாம்? சிம்பிள். டீம் மெம்பர்,மேனேஜர் என்ற சொற்களை தூக்கிவிட்டு உறவினர்கள், நண்பர்கள் என்ற வார்த்தைகளை நிரப்பிக் கொள்ளவும். இவர்களிடமெல்லாம் "இது எப்படி இருக்கு" என்று கருத்துக் கேளுங்கள். அப்பொழுதுதான் சந்தோஷமான குடும்பத்தையும், வாழ்க்கையையும் அமைக்க முடியுமாம்.

ஒவ்வொரு டயலாக்கும் இப்படித்தான் புல்லரிக்க வைக்கிறது. 

உங்களின் Lateral Thinking க்கு ஒரு கேள்வி. "பாபா கவுண்ட் ஸ்டார்ட்ஸ்" என்ற டயலாக் தரும் மெசேஜ் என்னவாக இருக்கும்? ஒரு நிமிடம் யோசித்துவிட்டுச் சொல்லுங்கள்.

இந்த அற்புதமான புத்தகத்தை பி.சி.பாலசுப்ரமணியன் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி என்று இரண்டு பேர் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். இதில் ராஜா கிருஷ்ணமூர்த்தி தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்திருக்கிறார். அருணாச்சலம் படத்தில் மூன்று வில்லன்களில் ஒருவராக வருவாரே அவரேதான். இரண்டு பேரில் இனிமேல் யாரை பார்த்தாலும் கையெடுத்துக் கும்பிட வேண்டும். புத்தகத்தில் இருக்கும் கருத்துக்கள் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் சம்பந்தமே இல்லாமல் ரஜினி டயலாக்குகளை குதறியிருக்க வேண்டியதில்லை. 

இந்த புத்தகம் NHM இல் கிடைக்கிறது. முன்னேற விரும்புபவர்கள் வாங்கிப்படிக்கலாம்.

ம்ம்..."பாபா கவுண்ட் ஸ்டார்ட்ஸ்" டயலாக் தரும் மெசேஜ்  "Time is most precious thing- do not waste it"

மீண்டும் இமான் நினைவுக்கு வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை. சொல்லுங்கண்ணே சொல்லுங்க.

Sep 19, 2012

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக




"ரோடு கண்ணாடி மாதிரி சார், சும்மா வழுக்கிட்டு போகுது". 

"பையன் பி.ஈ. ஃபைனல் இயர். ப்ளேஸ் ஆகிட்டான், நல்ல பேக்கேஜ்"

"இது 3G ஃபோன். ஃபேஸ்புக், ஜிமெயில் எல்லாம் இதுலதான் பார்க்கிறேன்"

இதில் எதுவுமே இதுவரை கேட்டிராத புது ஸ்டேட்மெண்ட் இல்லை.  "வளர்ச்சி(Development) என்ற பெயரில் முதலாளித்துவ அரசாங்கம் மேற்கொள்ளும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் ஒத்து ஊதுகிறேன்" என்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் வேறு வடிவங்கள், அத்தனையையும் ஏற்றுக் கொள்கிறேன் என்பதை சுய பெருமையுடன் சொல்லிக் கொள்வதன் வெளிப்பாடு.

நாம் கோரும் ஒவ்வொரு வசதி வாய்ப்பும் நேரடியாக சில ஆயிரம் பேர்களையும் மறைமுகமாக பல்லாயிரம் பேர்களை வதைத்திருக்கின்றன. ஆனால் யாரைப் பற்றியும் நாம் அலட்டிக் கொண்டதில்லை. ஐந்து இலக்க சம்பளம், திரும்பிய பக்கம் மால்களால் நிறைந்த வாழ்க்கை முறை, ஸ்மார்ட்போன் என்பவை வாழ்வின் கனவுத்திட்டங்களாகியிருக்கின்றன. கனவுகளை பூர்த்தி செய்ய எந்த 'காம்ரமைஸ்'க்கும் தயாராகியிருக்கிறோம். லட்சக்கணக்கான மக்கள் வசதியாக வாழ சில ஆயிரம் பேர்கள் பாதிக்கபட்டால் அதில் தவறொன்றும் இல்லை என்பது சித்தாந்தம் ஆகியிருக்கிறது.

வளர்ச்சி என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளையும், தங்க நாற்கரச் சாலகளையும் கடக்கத் தெரியாமல் நசுங்கிக் கிடக்கும் அப்பாவி நாய்களின் எண்ணிக்கையை யாராவது கணக்கில் எடுத்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை. வீதிக்கு வீதி செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டு இழந்தவிட்ட சிட்டுக்குருவி முதலான உயிரினங்கள் நமக்கு துச்சமானதாகத்தான் இருந்திருக்கிறது. நாய்களையும், குருவிகளையும் விட்டுவிடலாம்- 

மனிதர்களையாவது கண்டு கொள்கிறோமா? கண்ணாடிச் சாலைகள் கிழித்துச் செல்லும் ஒவ்வொரு ஊருக்குள்ளும் வீடுகளை இழந்தவர்களையும், வாழ்வாதாரமாக வைத்திருந்த அரை ஏக்கர் நிலத்தை தாரை வார்த்தவர்களையும் நாம் கண்டு கொண்டதில்லை. நகரத்தின் வளர்ச்சிக்கும் செலவுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் சாலைகளுக்கும் ப்ளாட்பாரங்களுக்கும் விரட்டியடிபக்கப்பட்டவர்களை கவனப்படுத்தியதில்லை. சில வருடங்களுக்கு முன்பாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு வாழ்வளித்த டைப்ரைட்டிங் இன்ஸ்டியூட்கள் எங்கே போயின? சுவர்களில் படம் வரைந்து வாழ்வை நகர்த்தியவர்களை ஃப்ளக்ஸ் பேனர்கள் தின்று தண்ணீர் குடித்திருக்கின்றன. சட்டி பானை செய்தவர்கள், கை விசிறி செய்தவர்கள், பனங்கருப்பட்டி உற்பத்தியாளர்கள் எல்லாம் ஏன் கண்ணில் தென்படுவதில்லை?

"சார், அதுதான் டெவலப்மெண்ட்". 

இந்த டெவலப்மெண்ட்தான் மளிகைக் கடை நடத்தி வாழ்வை ஓட்டுபவர்களையும், மார்கெட்டில் காய்கறி விற்பவர்களையும் குறிபார்க்கிறது. அடுத்த தோட்டா அவர்களை நோக்கி சீறப் போகிறது. இந்த வளர்ச்சிதான் மனிதர்களை மெஷின்களாக மாற்றியிருக்கிறது. வாழ்வை இயந்திரத்தனமாக மாற்றியிருக்கிறது. பணத்தை பிரதானமானதாக மாறியிருக்கிறது. நகரங்கள் காந்தத்தைப் போல இழுக்கின்றன. ஒவ்வொரு மனித மெஷினும் இந்த காந்தத்தில் வேகமாக  ஒட்டிக் கொள்கிறது.

"இன்னும் பத்து வருஷம் சார். இந்த சிட்டியை விட்டுட்டு கிராமத்துல செட்டில் ஆகிடணும்". இந்த டயலாக்கை கேட்கும் போதெல்லாம் சிரிப்பு வந்துவிடும். நாம் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வரும் இந்த வாழ்க்கையில் ரிவர்ஸ் கியர் என்பதே கிடையாது ஒருவேளை திரும்பிச்சென்றாலும் கூட நாம் விட்டுவந்த கிராமமும் வாழ்க்கை முறையும் அங்கு இருக்கப்போவதில்லை. 2040க்குள் ஜப்பானில் அணு உலைகளே இருக்காது என்று செய்தி வந்த இரண்டாவது நாளில் மூன்று புதிய அணு உலைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையையும் 'வாபஸ்' பெறுவதற்கு சாத்தியமே இல்லை என்று சமூக விஞ்ஞானிகள் விமர்சிக்கிறார்கள். 

தொண்ணூறுகளில் திறந்துவிடப்பட்ட "வளர்ச்சி" என்ற பூதம் தனக்குள் ஒட்டுமொத்த தேசத்தையும் சுருட்டிக் கொண்டு உருள்கிறது. வளர்ச்சி என்ற மாயவலையின் அடையாளங்கள் ஊர்தோறும் காட்டப்படுகின்றன. கிராமங்களில் தீபிகா படுகோனே 3ஜி போனை வைத்துக் கொண்டு பேனர்களில் விளம்பரம் செய்கிறார். விவசாய நிலங்கள் "கோல்டன்" நகர்களாகவும், "செளபர்ணிகா" சிட்டிகளாகவும் சைட் போடப்பட்டிருக்கின்றன.

தீபாவளியை புகைகளாலும், விண்ணதிரும் ஓசைகளினாலும் கொண்டாடுவது நமது தகுதியின் வெளிப்பாடாகியிருக்கிறது. கார்கள் வாங்குவது சாதாரணமாகியிருக்கிறது. விலை ஏற்றங்களை காபி குடிக்கும் நேரத்தில் மறந்துவிட்டு அடுத்த வேலையை பார்ப்பது இயல்பானதாகியிருக்கிறது. கொலைகளையும், கொள்ளைகளையும் வெறும் செய்திகளாக வாசிக்க பழகிக் கொண்டோம்.

வளர்ச்சியின் அடையாளங்கள் ஊர்தோறும் ஜொலிக்கின்றன. இன்று அப்படியொரு நாள். விநாயகர் சதுர்த்தி. வீதிக்கு வீதி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பெரும் ஸ்பீக்கர் செட்களை அலறவிட்டு, ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்யப்பட்ட விநாயகரை வளர்ச்சியின் அடையாளமாக்கியிருக்கிறார்கள். உள்ளூர் 'பெரிய'வர்களுக்கு இது ஒரு வாய்ப்பு. தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு 'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறை' படம் காத்திருக்கிறது. கொண்டாடுவோம்.

Sep 16, 2012

ஓபியம்- உலகம் கொண்டாடும் சரக்கு



பியத்துக்கும், ஒசாமா பின் லேடனுக்கு என்ன சம்பந்தம்? பெயர் "ஒ"வில் தொடங்குவதை தவிர வேறு ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்பவர்கள், தலிபானும், ஒசாமாவும் எப்படி பணம் சேர்த்தார்கள் என்பதை கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். ஒரே வரியில் சொல்வதானால் டன் கணக்கில் ஓபியம், ஹெராயின் பிஸினஸை உலகம் முழுவதும் செய்து கோடிகளை டாலர்களில் சுருட்டியெடுத்தார்கள்.

ஆப்கானிஸ்தான் தேசம்தான் ஓபியத்திலிருந்து ஹெராயினை எடுத்து உலகம் முழுவதும் அட்டகாசம் பண்ணுவதாக சில மேலை நாடுகள் புலம்புகின்றன. ஆனால் அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏதான் உலகின் மிக முக்கியமான போதை பொருள் கடத்தும் நிறுவனம் என்ற பேச்சும் உண்டு. வெனிசுலா போன்ற சில அரசுகள் இதை அடிக்கடி சுட்டிக்காட்டுவதும், சில நேரங்களில் அம்பலப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதும் உண்டு. ஆனால் போட்டுத்தள்ளத் தயங்காத தாதாக்களான  'பெரிய அண்ணன்' பற்றிய செய்திகள் அதுவும் சி.ஐ.ஏ பற்றிய எதிர்மறை செய்திகள் எல்லாம் வெளிப்படையாக பேசப்படுவது என்பது கொஞ்சம் அரிதான விஷயம்தான். 

மற்ற-கிட்டத்தட்ட எல்லா போதை செடிகளையும் போல ஓபியமும் வலி நிவாரணியாக பயன்படுகிறது என்பதால், சட்டப் பூர்வமாக ஓபியம் பயிரிடுவது பெரும்பாலான நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒருவன் எல்லோருக்குமே கெட்டவனாக "தியரி"ப்படி இருக்க முடியாது என்கிறார்கள். யாராவது ஒரு ஜீவனுக்காவது நல்லவனாக இருப்பானாம். அப்படித்தான் இந்தக் கட்டுரையின் கதாநாயகன்(கதாநாயகி?) ஓபியமும்.

என்னதான் கெட்ட பொருளாக சித்தரிக்கப்பட்டாலும் இதற்கென்று மருத்துவக் குணம் உண்டு. பழைய கிரேக்கர்கள் ஓபியன்(Opion) என்ற பெயரில் இதை மருந்தாக பயன்படுத்தினார்கள். இதற்கு இன்னொரு பெயர் Tincture of Opium(ஓபியம்+ஈத்தைல் ஆல்ஹகால் கலவை). வகை தொகை இல்லாமல் இருமல்,சளியிலிருந்து ஆல்கஹாலுக்கு அடிமையானவர்கள் வரை எல்லோருக்குமே இதுதான் மருந்து. "எங்கோ போற மாரியாத்தா என்னை புடிச்சு உலுக்கு ஆத்தா" என்ற கணக்காக நோயிலிருந்து விடுபட்டவர்கள் எல்லாம் ஓபியத்தை அடித்துவிட்டு மலையேற ஆரம்பித்தார்கள்.

சீட்டாட்டம், சாராயக் குடி மாதிரியாக ஒபீயமும் கலாச்சாரத்தோடு ஒன்றத் துவங்கியது. அரைக்காசுக்கு ஓபியம் வாங்கினால் ஒரு நாள் போதை கியாரண்டி என்பதால் பொருளாதார ரீதியாக பெரிய இழப்பு எதுவுமில்லை.(வேலைக்கு போகாமல் வீட்டிலோ ரோட்டிலோ படுத்துக் கிடப்பதை கணக்கில் வைக்கவில்லை).

ஓபியத்தை அதன் தாவரத்திலிருந்து பிரித்து எடுக்கிறார்கள். பப்பாளிப் பால் எடுப்பது போலத்தான் இதுவும். காய்வெட்டாக இருக்கும் ஓபியத்தின் காய்களில் கத்தியை வைத்து கீறிவிட வேண்டும். வெண்மை நிறத்தில்,பிசுபிசுப்பாக வடியும் இந்தத் திரவம் காயும் போது பழுப்பு நிற பிசினாக காய் மீது ஒட்டியிருக்கும். இந்தப் பிசினை பல விதங்களில் பயன்படுத்தி ஜகஜ்ஜாலங்கள் செய்யலாம்.

ஒபியத்தை புகையிலையோடு சேர்த்து புகைபிடிப்பது போல பயன்படுத்துபவர்களும் உண்டு. ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஓபியம் ஆவியாவதற்கு அதிக வெப்பம் தேவைப்படும். சிகரெட்டுக்குள் திணித்து பற்றவைத்து உறிஞ்சினால் வேலைக்கு ஆகாது. ஓபியம் மட்டும் தனியாக தங்கிவிடும். அப்புறம் "ஓபியம் ஓபியம்ன்னு உலகமே பேசுது..ஆனா நான் ஓபியம் அடிச்சா கூட மப்பு வராம ஸ்டெடியா நிப்பேன் தெரியுமா?" என்று தெனாவெட்டாக சொல்ல வேண்டியிருக்கும். ஓபியம் புகைப்பதற்கென்றே குழாய்கள் தனியாக கிடைக்கின்றன. அவை இதற்கென்றே தனியாக வடிவமைக்கப்பட்டவை. கொஞ்ச நாட்களுக்கு முன்னதாக வந்த இந்திப்படங்களில் ஒரு பெண்ணை நடுவில் ஆட விட்டு சுற்றிலும் அமர்ந்து புகைத்துக் கொண்டே கும்மாளமடிப்பார்களே அப்படி.

ஆப்கானிஸ்தான் ஓபியத்தின் மிக முக்கியமான உற்பத்தி தேசம். பல நாடுகளின் மருந்துத் தொழிற்சாலைகளுக்கு(மருந்து தயாரிப்புக்காக) ஓபியம் இங்கு இருந்தே ஏற்றுமதியாகிறது. ஆனால் அங்கு கொஞ்சம் (அல்லது நிறைய)பேர் திருட்டுத்தனமாகவும் ஓபியத்திலிருந்து ஹெராயினை எடுத்து பணம் கொழிக்கிறார்கள்.

இந்தியாவிலும் ஓபியம் அதிகம் பயிரிடப்படுகிறது. இங்குதான் பாரம்பரிய முறையில்(கத்தியில் கீறி பிசின் எடுப்பது)ஓபியம் எடுப்பதும் நடைமுறையில் இருக்கிறது. ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவை விட கொஞ்சம் குறைவாக ஆனால் உலக அளவில் இதன் உற்பத்தியில் முக்கிய இடம் வகிப்பவை. மற்ற நாடுகளில் கிரிகரி(Gregory) முறையில், அதாவது இலைகள், வேர் தவிர்த்து மொத்த தாவரத்தையும் கசக்கி, நீர்த்துப் போன அமிலத்தில் ஊற வைத்துவிடுவார்கள். பின்னர் சில அமிலம் அல்லது காரம் சேர்த்து சுத்தம் செய்வார்கள்.

வில்லன் பிரகாஷ்ராஜ் ஸ்மார்ட்டாக இருந்தாலும் அவரது அடியாட்கள் எல்லாரும் கடா மீசையும், முரட்டு ஆளாக இருப்பது போல, ஓபியத்தின் தாவர அமைப்பும் முட்களோடும், நாற்றம் வீசுவதாகவும் இருக்கும் என்றெல்லாம் நினைக்க வேண்டியதில்லை. ஒபியத்தின் மலர்கள் பல வித வண்ணங்களிலும், அளவிலும் அழகில் தூள் கிளப்புபவையாக இருக்கும். சிறிய அளவிலான, காய்ந்த ஓபியம் விதைகள்(குறைந்த அளவு ஆல்கலாய்ட் கொண்டவை) ரொட்டி, கேக் போன்றவற்றில் அலங்காரப் பொருட்களாக கூட உபயோகப்படுத்தப்படுகின்றன.

கொசுறு: கொஞ்சமாக மட்டும் போதையேற்றிக் கொண்டு அளவாக மிதப்பதற்கு Responsible Drug use என்று பந்தாவான பெயர். அந்தக்காலத்தில் நம் மக்கள் வைத்திருந்த சோமபானம், சுராபானம் எல்லாம் அந்த மாதிரி பிரிவினையா என்று தெரியாது. ஆனால் இன்றைக்கு நாட்டிற்கு தகுந்த படி "சரக்கின்" விலையும், பயன்பாடும், உபயோகமும் மாறுகிறது. சவுதி அரேபியாவில் ஆல்கஹாலை கண்டுபிடிப்பது குதிரைக் கொம்பு. பிரான்ஸில் மினரல் வாட்டருக்கு செலவு செய்யும் தொகையை விட குறைவான செலவில் ஒயின் வாங்கிவிடலாம்.

Sep 13, 2012

சிரிப்பு வருது..சிரிப்பு வருது..சிரிக்க சிரிக்க



எட்டாம் வகுப்பின் அறிவியல் தேர்வில் "சிரிப்பூட்டும் வாயு என்பது ___________"  என்ற கோடிட்ட இடத்தை நிரப்பும் போது நைட்ரஸ் ஆக்சைடு என்று எழுதியிருப்போம். இது சிரிப்பூட்டுமா? ஆமாம். நைட்ரஸ் ஆக்சைடை சுவாசிக்கும் போது அது கிளர்ச்சியான மனநிலையை உருவாக்குகிறது. இந்த கிளுகிளுப்புதான் உற்சாகத்தையும், போதையையும் கொடுக்கிறது.

ஜோச‌ப் பிரிஸ்ட்லே N2O வை 1772 இல் க‌ண்டுபிடித்து, அதற்கு பெய‌ரையும் வைத்துவிட்டார். பிறகு பதினெட்டு வ‌ருட‌ங்க‌ள் அதை யாருமே கண்டுகொள்ளவில்லை. ஹ‌ம்ப்ரி டேவி(Humpry Davy) என்பவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து சேர்ந்து இதை சோதனை செய்து பார்க்க நினைத்தார்கள். வழக்கமாக எலி, தவளைகளை சோதனை என்ற பெயரில் சித்ரவதை செய்யும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மத்தியில் "எங்களை வைத்தே பரிசோதித்துக் கொள்கிறோம்" என அறிவித்தார்கள். 'மப்பு' மேட்டர் என்பதால்தான் அவர்களே 'ட்ரை பண்ணுகிறார்கள்" என்று நக்கலடித்தவர்களும் உண்டு.

போதையோடும், உற்சாகத்தோடும் பிரிக்க முடியாத பந்தத்தில் இருக்கும் கவிஞர்கள் வர்க்கமும் இந்த நண்பர்கள் குழாமில் உள்ளடக்கம். Samuel Taylor Coleridge, Robert Southey போன்ற கவிஞர்களும் இந்தச் சோதனையில் ஈடுபட்டார்கள். சோதனையின் முடிவில், இந்த வாயு சரக்காக்க மட்டுமில்லாமல் வ‌லி நீக்கியாக‌வும், அரை ம‌ய‌க்க‌ம் த‌ருவ‌தாக‌வும் இருக்கிற‌து என்ற‌ அறிவித்தார்கள். இதன் பிறகு ப‌ல் ம‌ருத்துவ‌ர்க‌ள் இந்த வாயுவை தங்களின் சிகிச்சையில் மயக்கமூட்டும் மருந்தாக முதலில் ப‌யன்ப‌டுத்த‌ துவ‌ங்கினார்க‌ள். 

இதை எப்ப‌டித் த‌யாரிக்கிறார்க‌ள் என்ப‌தை சுருங்க‌ பார்த்துவிடலாம். அமோனியம் நைட்ரேட்டை கொதிக்க‌ வைக்கும் போது நைட்ர‌ஜ‌ன், நீராவி, அமோனிய‌ம் நைட்ரேட் புகை ஆகியவற்றோடு சேர்ந்து நைட்ர‌ஸ் ஆக்சைடும் வெளிவ‌ரும். வெளிவரும் நைட்ரஸ் ஆக்சைடுடன் வெவ்வேறு 'பாஸ்பேட்'க‌ளைச் சேர்த்து சுத்த‌மாக்குவார்க‌ள். இந்த‌ நிக‌ழ்வு கிட்ட‌த்த‌ட்ட‌ 240 டிகிரி செல்சிய‌ஸில் ந‌டைபெறும். இந்த‌ வெப்ப‌நிலை கொஞ்சம் அதிகமானாலும் கூட‌ வெப்ப‌ வெளியீட்டு நிக‌ழ்வு(exothermic) தொட‌ங்கிவிடும். இந்த வாயு த‌யாரிப்பில் வெப்ப‌நிலையை சீரான‌ அளவில் க‌ட்டுப்ப‌டுத்துவ‌து என்பதுதான் சிக்க‌ல் நிறைந்தது. கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலோ அல்லது கட்டுப்படுத்தாவிட்டாலோ பெரிய‌ "தீபாவ‌ளி"க்கான‌ வாய்ப்புகள் உண்டாகின்றன‌. ஒஹ‌யோ வேதியிய‌ல் விப‌த்து(1966), டெல்வேர் வேதியியல் விபத்து(1977)க்கள் இந்த சிரிப்பூட்டும் வாயு தயாரிக்கும் போது நிகழ்ந்வைதான். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பாக நடந்த இந்த விபத்துகளின் வீரியம் பற்றி இன்னமும் கூட அலறிக் கொண்டிருக்கிறார்கள். 

அமெரிக்கா போன்ற‌ நாடுக‌ளில் நைட்ரஸ் ஆக்சைடு உட்கொள்வ‌து த‌டை செய்ய‌ப்ப‌ட்டிருக்கிற‌து. சிரிக்கத்தானே வைக்கிற‌து என்று எதிர்கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது. இதை உட்கொள்ளும் முறையிலிருந்தே இத‌ற்கான‌ ஆப‌த்துக்க‌ள் தொட‌ங்குகின்ற‌ன‌. ஏடாகூட‌மாக‌ நைட்ர‌ஸ் ஆக்சைடை உறிஞ்சினால் நுரையீர‌லின் அழுத்தம் திடீரென குலைந்து நுரையீரலில் வெற்றிட‌ம் உருவாகும். நுரையீலுக்குள் உண்டாகும் அழுத்தக் குறைவை சமன் செய்ய வெளியிலிருந்து நைட்ரஸ் ஆக்சைடு பெருமொத்தமாக உள்ளே செல்லும். இந்த வாயு உற்பத்தியாகும் போது மிகக் குளிர்ந்த நிலையில் இருக்கும் என்பதால் நுரையீர‌ல் திசுக்க‌ள் உறைந்து போவ‌த‌ற்குமான‌ வாய்ப்புக‌ள் உண்டு. இந்த உறைநிலையை(Frostbite)ஐ தவிர்க்க பொதுவாக‌ இதை ப‌லூனில் நிர‌ப்பி உறிஞ்சுவார்க‌ள். 

இர‌ண்டாவ‌து, தெரியாத்த‌னமாக‌ தேவையான‌ அள‌வு ஆக்ஸிஜ‌னை உறிஞ்சாம‌ல் நைட்ர‌ஸ் ஆக்சைடை சுவாசிப்ப‌து ஆளையே கூட‌ முடித்துவிடும். ஆய்வுக் கூடத்தில் நின்று நாம் உறிஞ்ச வேண்டியது நைட்ர‌ஸ் ஆக்சைடா, நைட்ரிக் ஆக்சைடா என்ற‌ குழ‌ப்ப‌ம் வ‌ந்தால் வேறு வினையே தேவையில்லை. நைட்ரிக் ஆக்சைடு மிக‌ அதிக‌ அளவு விஷ‌த்த‌ன்மை கொண்ட‌து. மீன் முள் குத்தி கூட‌ உயிர் போகும். அத‌ற்காக மீன் தின்னாம‌ல் இருக்கிறார்க‌ளா என்றால் அதுவும் ச‌ரிதான். ஆனால் நைட்ர‌ஸ் ஆக்சைடை தொடர்ந்து கொள்வ‌து விட்ட‌மின் பி12 குறைபாடு, இர‌த்த‌ சோகை என்று குட்டி குட்டியாகத் தொடங்கி மொத்தமாக மண்டையடியாக அடிக்கும்.

இதற்காக நைட்ரஸ் ஆக்சைடை முழுமையாக தடை செய்ய வேண்டிய அவசியமில்லை.நைட்ர‌ஸ் ஆக்சைடை ம‌ய‌க்க‌ ம‌ருந்தாக‌ ம‌ருத்துவ‌த்தில் ப‌ய‌ன்ப‌டுத்துகிறார்க‌ள். ஆக்சிஜன் மற்றும் நைட்ர‌ஸ் ஆக்சைடை ச‌ரிபாதியாக‌ க‌ல‌ந்து பிர‌ச‌வ‌ம், ப‌ல் ம‌ருத்துவ‌ம் ஆகிய‌வ‌ற்றில் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌துண்டு. இர‌ண்டு ப‌ங்கு நைட்ர‌ஸ் ஆக்சைடு, ஒரு ப‌ங்கு ஆக்ஸிஜ‌ன் என்ற‌ விகித‌ம் இன்னும் கொஞ்ச‌ம் வீரிய‌ம் மிக்க‌து.

நைட்ர‌ஸ் ஆக்சைடு ஓஸோனில் ஓட்டை விழுவ‌த‌ற்கான‌ முக்கிய‌ கார‌ண‌ம். கார்ப‌ன் டை ஆக்ஸைடு புவி வெப்ப‌த்தில் உருவாக்கும் விளைவுக‌ளை போல பல‌ ம‌ட‌ங்கு விளைவுக‌ளை நைட்ர‌ஸ் ஆக்சைடு உருவாக்குகிற‌து. சில‌ பாக்டீரியாக்க‌ள் இய‌ல்பாக‌ இந்த‌ வாயுவை உற்ப‌த்தி செய்கின்ற‌ன‌. ம‌னித‌ன் விவ‌சாய‌த்தில் ப‌ய‌ன்ப‌டுத்தும் நைட்ர‌ஜ‌ன் உர‌ங்க‌ள் போன்ற‌வ‌ற்றின் கார‌ணமாக‌வும் வ‌ளி ம‌ண்ட‌ல‌த்தில் நைட்ர‌ஸ் ஆக்சைடின் அள‌வு அதிக‌ரிக்கிற‌து.

யோசித்துப் பார்த்தால் ஹெராயின் அள‌வுக்கோ அல்ல‌து ஆல்ஹ‌கால் அளவுக்கோ கூட‌ நைட்ர‌ஸ் ஆக்சைடு, ஒயிட்ன‌ர் அல்ல‌து வாக‌ன‌ப் புகை போன்ற‌வை போதைப் பொருட்க‌ளில்லை. ஆனால் ம‌னித‌ன் எதிலிருந்தும் போதையை பெற்றுக் கொள்ப‌வ‌னாக‌ இருக்கிறான். பைச‌ர்(Pfizer) நிறுவ‌ன‌த்தின் வ‌யாகராவைக் கூட‌ இந்த‌ப் ப‌ட்டிய‌லில் கொண்டுவ‌ர‌லாம் போலிருக்கிற‌து.