Mar 13, 2015

Fifty shades of Grey

நேற்றிரவு இரண்டு மணி இருக்கும். தூங்கப் போவதற்கு முன்பாக ஃபேஸ்புக்கை புரட்டிய போது Fifty shades of Grey படத்தைப் பற்றி சில பெண்கள் பேசியது டைம்லைனில் ஓடிக் கொண்டிருந்தது. இந்தப் புத்தகம் நாவலாக வந்த போது தெரியும். பெங்களூர் இலக்கியத் திருவிழாவில் இ.எல்.ஜேம்ஸின் இந்த நாவலைப் பற்றிய விவாதம் நடந்தது. சுற்றிலும் இளம்பெண்களாக அமர்ந்திருந்தார்கள் அதனாலேயோ என்னவோ ஆர்வமாக கலந்து கொண்டேன். புத்தகத்திலிருந்து நான்கைந்து பக்கங்களை வாசித்துக் காட்டினார்கள். அப்பொழுதுதான் சங்கடமாக போய்விட்டது. வெகுநாட்களுக்கு ஸ்வப்னா புத்தகக் கடையில் அதிகம் விற்கும் புத்தகங்களில் இந்த நாவல் இடம் பிடித்திருந்தது. இந்த நாவலைப் பற்றித் தெரியும் என்றுதானே சொல்லியிருக்கிறேன். இவ்வளவுதான் தெரியும். வாசிக்கவெல்லாம் இல்லை.

இப்பொழுது அந்தப் படத்தை பார்த்தே தீர வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை. ‘படம் முழுக்க BDSMதான்’ என்று ஒருவர் சொன்ன போதுதான் சுள்ளென்றானது. அப்படியென்றால் என்னவென்றே தெரியாமல் முப்பத்தியிரண்டு வருடங்களை விழுங்கியிருக்கிறேன். தேடிப்பார்த்தால் விக்கிப்பிடீயாவில் தனியாகவே ஒரு பக்கம் ஒதுக்கியிருக்கிறார்கள். தெரிந்து கொண்ட பிறகுதான் ஒரு பூரணத் தன்மை. காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டேன். இவ்வளவு தூரம் வந்தாயிற்று. படத்தையும் பார்த்துவிட வேண்டியதுதானே? பார்த்தாகிவிட்டது. ஆன்லைனிலேயே கிடைக்கிறது. 

க்ரேவுக்கு இளம் வயது. பெரும் பணக்காரன். தனது கல்லூரி இதழுக்காக நேர்காணல் நடத்த வேண்டியவ பெண்ணொருத்தி காய்ச்சலின் காரணமாக தனக்கு பதிலாக நாயகியை அனுப்பி வைக்கிறாள். ஸ்ருதிஹாசன் சாயலில் இருக்கும் நாயகியை க்ரேவுக்கு பிடித்துப் போய்விடுகிறது. அவளுக்கும் அவன் மீது ஈர்ப்புதான். அவன் இதுவரை பதினைந்து பெண்களுடன் உறவு கொண்டவன். ஆனால் நாயகி தனக்கானவனுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள். இன்னமும் கன்னி. நாயகன் படுக்கையறையில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறவன். அதற்காகவே தனியாக அறையொன்றை வைத்திருக்கிறான். கட்டி வைப்பதற்கும் அடிப்பதற்கும் தேவையான பொருட்கள் அந்த அறை முழுவதும் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த அறையில் தனக்குக் கீழாகச்ச் செயல்படச் சம்மதமெனில் ஒரு ஒப்பந்தத்தைக் காட்டி கையொப்பமிடச் சொல்கிறான். பெண்ணைக் கட்டி வைத்து, துன்புறுத்தி உறவு கொள்பவன் அவன். அவள் ஒப்பந்தங்களில் சில திருத்தங்களைச் சொல்கிறாள். அவனுடன் ஒத்துழைக்கிறாள். கடைசியாக ஒப்பந்தங்களை மீறினால் என்ன தண்டனை கொடுப்பாய் எனத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்கிறாள். அவன் குனிய வைத்து பெல்ட்டால் விளாசுகிறான். வெறுப்புற்று பிரிந்து போய்விடுகிறாள்.

பெண்களை வெறும் உடலாக பார்க்கும் மட்டமான கதை என்று எதிர்தரப்பினர் விமர்சிக்கிறார்கள். படம் அப்படித்தான் இருக்கிறது. ‘இந்த சித்ரவதைகளினால் உனக்கு இன்பம் கிடைக்கும்’ என்று இரண்டு மூன்று முறையாவது சொல்லிவிடுகிறான். அவளும் அந்தச் அத்தகைய பாலியல் உறவை மிகுந்த கிளர்ச்சியுடன்அனுபவிப்பது போலவே காட்டியிருக்கிறார்கள். ஒரு போர்னோ படமளவுக்கு மோசமான படம் என்று சொல்லிவிட முடியாது. நாயகியாக நடித்திருக்கும் பெண் அவனிடம் காதலுக்காக ஏங்குவதும், அவன் எல்லாவிதத்திலும் அவளை தனது ஒப்பந்தம் நோக்கியே இழுப்பதும் படம் முழுக்கவே சுவாரஸியத்தை உண்டாக்குகிறது. இந்த சுவாரஸியம் என்ன வகையான சுவாரஸியம் என்று தெரியவில்லை. அடுத்த படுக்கையறைக் காட்சி எப்பொழுது வரும் என்று ஆழ்மனம் ஏங்குகிறது. அப்படித்தானே?

எப்படியோ தொலையட்டும். கல்லா கட்டிவிட்டார்கள். வசூல் கொடி கட்டிப் பறக்கிறதாம். 

நம் ஊரில்தான் தடை செய்துவிட்டார்கள். இல்லையென்றால் A முத்திரை குத்தி பெருநகரங்களின் ஷாப்பிங் மால்களில் ஓடியிருக்கும். அவிநாசியிலும் தேனியிலும் பாளையங்கோட்டையிலும் வெளிவந்திருக்குமா என்று தெரியவில்லை. அப்படியே வெளிவந்திருந்தாலும் கத்தரி போட்டுத்தான் வெளியிட்டிருப்பார்கள். 

பள்ளிக்காலத்தில் அலெக்ஸண்ட்ரா மாதிரியான படங்களை பார்த்திருக்கிறேன். எத்தனை வயதில் என்று சொல்லலாம்தான். நான்கு பேரின் பற்களுக்கிடையில் சிக்கி வசை வாங்க வேண்டியிருக்கும். அப்பொழுதெல்லாம் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக தியேட்டருக்குள் உள்ளே நுழைந்து அதே திருட்டுத்தனத்துடன் அடுத்தவர்களின் கண்களிலும் பட்டுவிடாமல் வெளியேற வேண்டும். இடைவேளையின் போது கூட இருட்டுக்குள்ளேயே பம்மிக் கொண்டிருக்க வேண்டும். ஒரு சமயம் ஈரோடு அபிராமி தியேட்டரில் நானும் ஒரு நண்பனும் பள்ளிச்சீருடையுடன் சென்று சிக்கிக் கொண்டோம். அவன் மிக நைச்சியமாக வெளியேறிவிட்டான். நான் மாட்டிக் கொண்டேன். அந்தக் கிழவர் அறிவுரை சொல்லி சாவடித்துவிட்டார். ‘இந்தப் படத்தை நீங்க மட்டும் பாக்கலாமா?’ என்று கேட்க முயற்சித்து தோற்றுக் கொண்டேயிருந்தேன். அரை மணி நேர்மாவது அறுத்திருப்பார். வெளியில் வந்து முடிவு செய்து கொண்டோம்- இனி எந்தக் காரணத்தினாலும் சீருடையில் படம் பார்க்கச் செல்லக் கூடாது என்று. 

நாங்கள் சிக்கிக் கொண்டது முக்கியமான விஷயம் இல்லை. ஆனால் அந்தச் சமயத்திலேயே கூட வழக்கத்திற்கு மாறான இத்தகைய பாலியல் திரைப்படங்கள் வந்து போய்க் கொண்டிருந்தன என்பது முக்கியம். இதெல்லாம் கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு முன்பாக. அப்பொழுது இணையம், செல்போன் என்ற எதுவுமே இல்லை. படங்கள் மட்டும்தான் ஒரே வழி. அதைவிட்டால் பின் அடித்த ப்ளாட்பார புத்தகங்களில் தெளிவில்லாத கருப்பு வெள்ளைப்படங்கள் இருக்கும். அப்பொழுதே கூட இத்தகைய படங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்பொழுது அத்தனை வசதிகளும் இருக்கின்றன. ஏகப்பட்ட பாலியல் வலைத்தளங்களில் சலனப்படங்களாகக் குவிந்து கிடக்கின்றன. எதை நினைத்தாலும் பார்த்துவிட முடிகிறது. பிறகு ஏன் தடை செய்கிறார்கள்?

எவ்வளவோ காரணங்கள் இருக்கக் கூடும். இந்தப் படத்தை புரிந்து கொள்கிற அளவுக்கு நம்மிடையே பாலியல் பக்குவம் இல்லை என்பதை ஒத்துக் கொண்டுதான் தீர வேண்டும். சென்ற வாரத்தில் ஒரு செய்தி வந்திருந்தது. தினமும் நீலப்படங்களைப் பார்த்துவிட்டு மனைவியை அப்படிச் செயல்படச் சொல்லி ஒருவன் தொந்தரவு செய்து கொண்டிருந்தானாம். தூங்கிக் கொண்டிருந்தவனின் குரல்வளையை அறுத்துவிட்டாள். பெங்களூரில்தான் நடந்திருக்கிறது. மற்றதையெல்லாம் விட்டுவிட்டு ஏன் குரல்வளைய அறுத்தாள் என்று வெகுநேரமாக யோசித்துக் கொண்டிருந்தேன்.  தன் இச்சை, தன் மோகம், தன் இன்பம் என்று ஒற்றைப்படையாக மட்டுமே யோசிக்கிற ஆட்கள் வாழ்கிற நம் நாட்டில் இத்தகைய படங்களை எந்தத் தடையுமில்லாமல் அனுமதித்தால் இதைச் செய்வது பெரிய சாதனையாக நினைத்து மனைவியின் கைகளைக் கட்டிப் போடுவதற்கு கயிறுகளோடு வீடு திரும்பும் கணவன்களின் எண்ணிக்கை அதிகமானால் விபரீதம் ஆகிவிடக் கூடும் என்று அரசாங்கம் யோசித்திருக்கக் கூடும்.

தேடுகிறவர்கள் எப்படியிருந்தாலும் தேடிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் இதைப்பற்றியெல்லாம் தெரியாத ஒரு மனிதனுக்கு தெரிய வைத்த பாவம் வந்து சேர்ந்துவிடும் என்று அர்சாங்கம் நினைத்திருக்கலாம். எவ்வளவோ பேர் ‘இதெல்லாம் கூட சாத்தியமா?’ என்று யோசிக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நினைப்பதை தடுப்பதாக அரசாங்கம் பாவனை செய்கிறது. உண்மையில் இருள் சூழ்ந்த பகுதியைச் சுற்றி இன்னொரு திரையைத்தான் அரசு இழுத்துவிடுகிறது.

ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது. ‘பணமுள்ள பர்ஸை மனைவியிடம் நம்பிக் கொடுக்கும் ஆண்களுக்கு... செல்போனை கொடுக்கதான் மனமிருப்பதில்லை’ என்று கிர்த்திகா தரன் எழுதியிருந்தார். ஏகப்பட்ட பேர் ஆமோதித்திருந்தார்கள். இத்தகைய பிரச்சினைகள் எங்கேயிருந்து தொடங்குகின்றன? கணவன் மனைவிக்கிடையிலான புரிதலில் எங்கே சிடுக்கு விழுகிறது? வெளிப்படைத்தன்மையில்லாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன? Possessiveness என்று சப்பைக்கட்டு கட்டலாம். ஆனால் உண்மையில் அது insecurity. ஒருவித பயம். இந்த பயத்தை நவீன தொழில்நுட்ப சாதனங்கள் பன்மடங்கு பெருக்கிவிடுகின்றன. அதுதான் கணவன் மனைவிக்கிடையில் ஒரு சுவரை எழுப்பிக் கொண்டேயிருக்கிறது. எதுவாக இருந்தாலும் மறைக்கத் தொடங்குகிறார்கள். காதலர்களாக அந்நியோன்யமாக இருப்பவர்கள் கூட திருமணத்திற்கு பிறகு சுவரை எழுப்பிக் கொள்கிறார்கள். 

‘இதையெல்லாம் மனைவியிடம் பேசக் கூடாது’ என்ற விதையை யார் எப்பொழுது தூவினார்கள்? ‘இதையெல்லாம் பேசினால் தவறில்லை’ என்று மனைவி ஏன் ஏற்றுக் கொள்வதில்லை? இதுதான் வேலி தாண்டச் செய்கிறது. கணவன்- மனைவி என்கிற பிம்பங்கள் நமக்குள் காலங்காலமாக ஊறிக் கிடக்கின்றன. இதைத்தான் பேச வேண்டும் இதையெல்லாம் பேசக் கூடாது என்று சில தடுப்புகள் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதை உடைத்து வெளியில் வருவதுதான் மிகப்பெரிய பிரச்சினை. கணவன் - மனைவி பேசிக் கொள்ளாத விஷயங்களை வேறு யாருடைய மனைவி-கணவனிடம் பேசுவதற்கான சுதந்திரத்தை நவீன சாதனங்கள் உருவாக்கித் தருகின்றன. விளைவாக, கணவன் மனைவி என்கிற கோட்பாடே சிதைந்து கொண்டிருக்கிறது. தனிப்பட்ட பாலியல் சுதந்திரங்களை, இச்சைகளை கணவன் மனைவிக்குள்ளாக மனம்விட்டுப் பேசுகிற சூழல் இல்லாதபட்சத்தில் இத்தகைய படங்கள் தனிமனித உணர்ச்சிகளை கிளறிவிடும் வேலையைத்தான் செய்கின்றன.

அரசாங்கம் இதையெல்லாம் தடை செய்து விளம்பரத்தை உருவாக்கித் தர வேண்டியதில்லை. அடுத்தவர்களின் படுக்கையறை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வதான தொனிதான் இத்தகைய தடைகள். அது இரு மனிதர்களுக்கிடையிலான புரிதல்தானே? அதில் அரசாங்கம் மூக்கை நுழைக்க வேண்டியதில்லை.

ஆனால் அரசாங்கம் ஒன்றைச் செய்தாக வேண்டும். இந்தப் படம் வெளியானால் உருவாக்கக் கூடிய சலனங்களை ஏன் நம் சமூகத்தால் கையாள முடியாது என இந்த அரசாங்கம் நினைக்கிறதோ அதற்கான தீர்வுகளைப் பற்றி யோசிக்க வேண்டிய சூழல் இது. நமக்கென பண்பாடு இருக்கிறது. நமக்கென சில வரைமுறைகள் இருக்கின்றனதான். ஆனால் நவீன தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் நாம் பண்பாடு, வரையறைகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிற விவகாரங்களில் ஓரளவு நெகிழ்வுத்தன்மை இருந்தாக வேண்டும். இல்லையென்றால் உள்ளேயே பொங்கிப் புழுங்கிக் கொண்டிருக்கும் புழுக்கமேறிய சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். அதன் விளைவுகளை உணரத் தொடங்கியிருக்கிறோம். பாலியல் வன்முறைகள் அதன் நீட்சிதான். இவை குறித்தான மிக வெளிப்படையான விமர்சனங்களையும் விவாதங்களையும் நடத்த வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். வெறும் தடைகளும் திரைமறைப்பு வேலைகளும் நமது பண்பாடு சிதையாமல் காக்கப்படுவதற்கு எந்தவிதத்திலும் உதவாது. மாறாக Bigbang என்னும் பெருவெடிப்பு தியரியை நோக்கித்தான் இழுத்துச் செல்லும். வெறும் தாலியில் மட்டுமே நம் பண்பாடு இருக்கிறது என்று நினைத்தால் அது நம் புரிதலின் குறைபாடுதான்.