Nov 28, 2012

சீமான் - சிதைந்த நம்பிக்கைகள்தமிழகத்தையும் ஈழத்தையும் உய்விக்க வந்தவர் என்று ஒரு காலத்தில் சீமானை நம்பியிருந்தேன். அரசியல் புரிந்த மேதையாகவோ அல்லது தீர்க்கதரிசியாகவோ இருந்திருந்தால் ‘இவரும் இன்னொரு அரசியல்வாதி’ என்று தொடக்கத்திலேயே முடிவு செய்திருக்கலாம். தந்தி பேப்பரை அக்குளில் இடுக்கிக் கொண்டு சலூனிலும் டீக்கடையிலும் அரசியல் பேசும் என்னால் அப்படியெல்லாம் நிராகரிக்க முடிவதில்லை. அதிமுக,  திமுக தவிர்த்து யார் வந்தாலும் நல்லவர் என்று நம்பிக் கொள்கிறேன். விஜயகாந்த்தைக் கூட அப்படி நம்பியவனால் சீமானை எப்படி ஒதுக்க முடியும்? நாற்பதாண்டுகளுக்கும் மேலாக வாக்கரிசி பொறுக்கும் அரசியல்வாதிகளுக்கிடையே அல்லாடும் தமிழர்களுக்கு கிடைத்த போராளியாகத்தான் சீமான் தெரிந்தார்.

ஈழப்போராட்டமும் அதன் வழியாக  தமிழ் சாம்ராஜ்யமும் சரிந்து கொண்டிருந்த சமயத்தில் கிழிந்து தொங்கிய தமிழக அரசியல்வாதிகளின் முகமூடிகளைத் தாண்டி தான் மட்டுமே விடிவெள்ளியென்ற பிம்பத்தை சீமானால் மிகச் சுலபமாக உருவாக்க முடிந்தது. அவரது கூட்டங்களில் தெறித்த தீக்கங்குகளையும், வெறித்தனமாக அவர் பின்னால் சுற்றிய தம்பிமார்களையும் பார்க்கும் போது நரம்புகளை உருவியெறிந்துவிட்டு TMT முறுக்குக் கம்பிகளை செருகிக் கொண்டு சுற்றுகிறார்களோ என்று நினைத்ததில் ஆச்சரியம் ஏதும் இருக்க முடியாது.

ஈழத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு அவர் விடுத்த எச்சரிக்கைகள் நெஞ்சுக்குள் தீ மூட்டின. இந்த பேச்சுக்களை கேட்டுவிட்டு இந்த நொடியில் நெஞ்சு வெடித்துச் செத்தாலும் சம்மதமே என்று சமாதானம் ஆகிக் கொள்வேன். காங்கிரஸை கறுவறுப்பேன் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் அவர் கர்ஜித்த போதும் கேட்ட விசில் சப்தங்கள் இன்னமும் காதுக்குள் ஒலிக்கிறது. அரசியலில் கொடி கட்டப்போகும் சீமான் அதே சமயத்தில் தமிழுணர்வை பழுக்கக் காய்ச்சி நம் ஆங்கில மோகத்தின் புட்டத்தில் சூடு போடப் போகிறார் என்றுதான் அசிரீரி ஒலித்தது. ப்ளாஸ்டிக் என்ற சொல்லுக்கு பதிலாக ‘நெகிழி’ என்போம் என்றெல்லாம் தமிழுணர்வு விதைகளை விதைத்த போது இனி தமிழனின் வாழ்வில் எல்லாம் சுகமே என்றுதான் நம்பினேன்.

தேர்தல் வரைக்கும் சுற்றிச் சுற்றி வந்தவரை கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாகவே காண முடியவில்லை.நமது நம்பிக்கைக்குரியவர்கள் எதைச் செய்தாலும் நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்வோம் இல்லையா? அப்படித்தான் என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். தமிழர்களுக்காக தனது தொழிலான சினிமாவை விட்டுவிட்டு சில வருடங்களாக போராடியதால் வருமானமில்லாமல் சாப்பாட்டுக்கும் கூட கஷ்டபட்டிருப்பார் எனவும் மீண்டும் சில படங்களை இயக்கியோ அல்லது நடித்தோ நல்ல உணவு உண்டுவிட்டு மீண்டும் மைக் பிடிப்பார் என ஆறுதல் படுத்திக் கொண்டேன். 

தென் மாவட்டங்களில் இரத்த ஆறு ஓடிய போது உண்ட களைப்பில் தூங்கியிருக்கக் கூடும் என நம்பியது அதே ஆறுதலின் நீட்சிதான். தமிழகத்தின் பிரச்சினைகள் என வந்த போதெல்லாம் அவரை எதிர்பார்ப்பதும் அவர் வராமல் இருப்பதும் வழக்கமாகிப்போனது. அப்பொழுதெல்லாம் சினிமா ஷூட்டிங்கிற்காக வெளிநாட்டில் இருப்பார் என ஏற்றுக் கொண்டதும் அதே நம்பிக்கையில்தான். 

தர்மபுரியில் அரிவாளும் நெருப்பும் நடனம் புரிந்த போதும் ஒரு ‘வழவழா’ அறிக்கையோடு அமைதியாகியிருக்கிறார். இப்பொழுதும் கூட அவர்தான் விடிவெள்ளி என நம்புவதில் எனக்கு ஒரு பைசா இழப்பு கூட இல்லை. ஆனால் சில கேள்விகள் அரித்துக் கொண்டிருக்கின்றன. அவை சிதைந்து கொண்டிருக்கும் நம்பிக்கைகளின் காரணமாக எழும் கேள்விகள்.

‘நம்பிக்கைகளை சிதைப்பதைவிட நம் மீது நிகழ்த்தப்படும் ஆகப்பெரிய வன்முறை என்று வேறு எதுவும் இல்லை’ என்று கவிஞர் கோசின்ரா சொன்னபோது சீமானின் முகம்தான் வந்து வந்து போனது. இலட்சக்கணக்கான தமிழர்களின் நம்பிக்கைகளை சிதைத்திருக்கிறார் சீமான். அவரைப் பின் தொடர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை நட்டாற்றில் விட்டிருக்கிறார்.என்னைப் போன்ற மிடில்க்ளாஸ் மாதவன்களின் தலையில் மிளகாய் அரைத்திருக்கிறார்.

மிளகாய் அரைப்பது என்பது பணத்தை திருடிக் கொண்டு போய்விட்டார் என்பதோ அல்லது சொத்தை பறித்துக் கொண்டார் என்பதோ இல்லை. அவர் உருவாக்கியா அல்லது அவரது பேச்சினால் நாமாக உருவாக்கிக் கொண்ட பிம்பத்தை சிதைப்பதும் கூட மிளகாய் அரைப்பதுதான். 

சீமான் ஒருபோதும் தமிழர்களின் தலைவனாக மாறப்போவதில்லை. அப்படி அவர் நினைத்துக் கொண்டிருந்தால் அதைவிட காமெடி வேறு ஒன்றும் இருக்க முடியாது. மூன்று வருடங்களில் சில நூறு கூட்டங்களில் கழுத்து நரம்பு புடைக்க பேசிவிட்டால் தலைவன் ஆகிவிட முடியும் என்றால் நாஞ்சில் சம்பத்தோ அல்லது தீப்பொறி ஆறுமுகமோ எப்பொழுதோ தலைவர்கள் ஆகியிருப்பார்கள். 

சீமானோ அல்லது இன்னமும் அவரை  நம்பும் தம்பிகளோ என்ன விளக்கம் வேண்டுமானாலும் தரலாம். ஆனால் குறைந்தபட்சம் என்னளவில் சீமானின் பிம்பத்தைச் சிதைத்துக் கொண்டேன் என்பதுதான் உண்மை. இதில் சீமானின் குற்றம் என்று எதுவும் இல்லை. இந்த அதிநவீன வாழ்க்கைச் சூழலிலும் ஒரு மனிதன் மீது நம்பிக்கை வைப்பது என்பது எவ்வளவு பெரிய அபத்தம். நம்பிக்கை என்பதன் அர்த்தமே மாறிப் போயிருக்கும் இந்தக் காலகட்டத்தில் அந்த அபத்தைத்தான் பெரும்பாலானவர்கள் எப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறோம். இப்பொழுதும்.