Sep 19, 2012

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக




"ரோடு கண்ணாடி மாதிரி சார், சும்மா வழுக்கிட்டு போகுது". 

"பையன் பி.ஈ. ஃபைனல் இயர். ப்ளேஸ் ஆகிட்டான், நல்ல பேக்கேஜ்"

"இது 3G ஃபோன். ஃபேஸ்புக், ஜிமெயில் எல்லாம் இதுலதான் பார்க்கிறேன்"

இதில் எதுவுமே இதுவரை கேட்டிராத புது ஸ்டேட்மெண்ட் இல்லை.  "வளர்ச்சி(Development) என்ற பெயரில் முதலாளித்துவ அரசாங்கம் மேற்கொள்ளும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் ஒத்து ஊதுகிறேன்" என்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் வேறு வடிவங்கள், அத்தனையையும் ஏற்றுக் கொள்கிறேன் என்பதை சுய பெருமையுடன் சொல்லிக் கொள்வதன் வெளிப்பாடு.

நாம் கோரும் ஒவ்வொரு வசதி வாய்ப்பும் நேரடியாக சில ஆயிரம் பேர்களையும் மறைமுகமாக பல்லாயிரம் பேர்களை வதைத்திருக்கின்றன. ஆனால் யாரைப் பற்றியும் நாம் அலட்டிக் கொண்டதில்லை. ஐந்து இலக்க சம்பளம், திரும்பிய பக்கம் மால்களால் நிறைந்த வாழ்க்கை முறை, ஸ்மார்ட்போன் என்பவை வாழ்வின் கனவுத்திட்டங்களாகியிருக்கின்றன. கனவுகளை பூர்த்தி செய்ய எந்த 'காம்ரமைஸ்'க்கும் தயாராகியிருக்கிறோம். லட்சக்கணக்கான மக்கள் வசதியாக வாழ சில ஆயிரம் பேர்கள் பாதிக்கபட்டால் அதில் தவறொன்றும் இல்லை என்பது சித்தாந்தம் ஆகியிருக்கிறது.

வளர்ச்சி என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளையும், தங்க நாற்கரச் சாலகளையும் கடக்கத் தெரியாமல் நசுங்கிக் கிடக்கும் அப்பாவி நாய்களின் எண்ணிக்கையை யாராவது கணக்கில் எடுத்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை. வீதிக்கு வீதி செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டு இழந்தவிட்ட சிட்டுக்குருவி முதலான உயிரினங்கள் நமக்கு துச்சமானதாகத்தான் இருந்திருக்கிறது. நாய்களையும், குருவிகளையும் விட்டுவிடலாம்- 

மனிதர்களையாவது கண்டு கொள்கிறோமா? கண்ணாடிச் சாலைகள் கிழித்துச் செல்லும் ஒவ்வொரு ஊருக்குள்ளும் வீடுகளை இழந்தவர்களையும், வாழ்வாதாரமாக வைத்திருந்த அரை ஏக்கர் நிலத்தை தாரை வார்த்தவர்களையும் நாம் கண்டு கொண்டதில்லை. நகரத்தின் வளர்ச்சிக்கும் செலவுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் சாலைகளுக்கும் ப்ளாட்பாரங்களுக்கும் விரட்டியடிபக்கப்பட்டவர்களை கவனப்படுத்தியதில்லை. சில வருடங்களுக்கு முன்பாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு வாழ்வளித்த டைப்ரைட்டிங் இன்ஸ்டியூட்கள் எங்கே போயின? சுவர்களில் படம் வரைந்து வாழ்வை நகர்த்தியவர்களை ஃப்ளக்ஸ் பேனர்கள் தின்று தண்ணீர் குடித்திருக்கின்றன. சட்டி பானை செய்தவர்கள், கை விசிறி செய்தவர்கள், பனங்கருப்பட்டி உற்பத்தியாளர்கள் எல்லாம் ஏன் கண்ணில் தென்படுவதில்லை?

"சார், அதுதான் டெவலப்மெண்ட்". 

இந்த டெவலப்மெண்ட்தான் மளிகைக் கடை நடத்தி வாழ்வை ஓட்டுபவர்களையும், மார்கெட்டில் காய்கறி விற்பவர்களையும் குறிபார்க்கிறது. அடுத்த தோட்டா அவர்களை நோக்கி சீறப் போகிறது. இந்த வளர்ச்சிதான் மனிதர்களை மெஷின்களாக மாற்றியிருக்கிறது. வாழ்வை இயந்திரத்தனமாக மாற்றியிருக்கிறது. பணத்தை பிரதானமானதாக மாறியிருக்கிறது. நகரங்கள் காந்தத்தைப் போல இழுக்கின்றன. ஒவ்வொரு மனித மெஷினும் இந்த காந்தத்தில் வேகமாக  ஒட்டிக் கொள்கிறது.

"இன்னும் பத்து வருஷம் சார். இந்த சிட்டியை விட்டுட்டு கிராமத்துல செட்டில் ஆகிடணும்". இந்த டயலாக்கை கேட்கும் போதெல்லாம் சிரிப்பு வந்துவிடும். நாம் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வரும் இந்த வாழ்க்கையில் ரிவர்ஸ் கியர் என்பதே கிடையாது ஒருவேளை திரும்பிச்சென்றாலும் கூட நாம் விட்டுவந்த கிராமமும் வாழ்க்கை முறையும் அங்கு இருக்கப்போவதில்லை. 2040க்குள் ஜப்பானில் அணு உலைகளே இருக்காது என்று செய்தி வந்த இரண்டாவது நாளில் மூன்று புதிய அணு உலைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையையும் 'வாபஸ்' பெறுவதற்கு சாத்தியமே இல்லை என்று சமூக விஞ்ஞானிகள் விமர்சிக்கிறார்கள். 

தொண்ணூறுகளில் திறந்துவிடப்பட்ட "வளர்ச்சி" என்ற பூதம் தனக்குள் ஒட்டுமொத்த தேசத்தையும் சுருட்டிக் கொண்டு உருள்கிறது. வளர்ச்சி என்ற மாயவலையின் அடையாளங்கள் ஊர்தோறும் காட்டப்படுகின்றன. கிராமங்களில் தீபிகா படுகோனே 3ஜி போனை வைத்துக் கொண்டு பேனர்களில் விளம்பரம் செய்கிறார். விவசாய நிலங்கள் "கோல்டன்" நகர்களாகவும், "செளபர்ணிகா" சிட்டிகளாகவும் சைட் போடப்பட்டிருக்கின்றன.

தீபாவளியை புகைகளாலும், விண்ணதிரும் ஓசைகளினாலும் கொண்டாடுவது நமது தகுதியின் வெளிப்பாடாகியிருக்கிறது. கார்கள் வாங்குவது சாதாரணமாகியிருக்கிறது. விலை ஏற்றங்களை காபி குடிக்கும் நேரத்தில் மறந்துவிட்டு அடுத்த வேலையை பார்ப்பது இயல்பானதாகியிருக்கிறது. கொலைகளையும், கொள்ளைகளையும் வெறும் செய்திகளாக வாசிக்க பழகிக் கொண்டோம்.

வளர்ச்சியின் அடையாளங்கள் ஊர்தோறும் ஜொலிக்கின்றன. இன்று அப்படியொரு நாள். விநாயகர் சதுர்த்தி. வீதிக்கு வீதி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பெரும் ஸ்பீக்கர் செட்களை அலறவிட்டு, ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்யப்பட்ட விநாயகரை வளர்ச்சியின் அடையாளமாக்கியிருக்கிறார்கள். உள்ளூர் 'பெரிய'வர்களுக்கு இது ஒரு வாய்ப்பு. தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு 'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறை' படம் காத்திருக்கிறது. கொண்டாடுவோம்.

8 எதிர் சப்தங்கள்:

இராஜராஜேஸ்வரி said...

நிசப்தமாகத்தொடரும் ஆக்ரமிப்பு...

Anonymous said...

மண்டையில் ஓங்கி ஒரு அடி அடிச்சுட்டீங்க..சூப்பர்.

(டைட்டில் இன்னும் பெட்டரா இருந்திருக்கலாம்)

சிவக்குமார் said...

ம்ம். மனசாட்சியை உறுத்தும் கேள்விகள். இங்கு வளர்ச்சி என்றெல்லாம் எதுவுமில்லை. வீக்கம்தான். சிலருக்கு பசித்த வயிறுகள் உள்நோக்கிச் செல்ல, கொழுத்தவருக்கு தொப்பை வளர்வதுதான் வளர்ச்சி என்கிறார்கள். செல்பேசிக் கோபுரங்களால் சிட்டுக் குருவிகள் பாதிக்கப்படுகின்றன என்பது அடிப்படை ஆதாரமற்ற தகவல், ஆனால் எல்லோராலும் அது நம்பப்படுகிறது. அது பொய்யாகப் பரப்பட்ட தகவல்தான்.

Vaa.Manikandan said...

நன்றி ராஜேஸ்வரி,அனானிமஸ்.

தமிழானவன்,

ஆமாம். அதுவும் ஒரு காரணம் என்று வாசித்திருக்கிறேன். இதுபற்றி முன்பு சற்று விரிவாக எழுதியிருக்கிறேன். நன்றி.

http://www.nisaptham.com/2010/06/blog-post_15.html

bandhu said...

தொலைந்து போனவர்கள் பட்டியலில் கண்ணில்லாத பலருக்கும் வேலை வாய்ப்பு கொடுத்து வந்த PCO/STD Boothகளும் உண்டு. எப்போது நினைத்தாலும் வருத்தப்பட வைப்பது அது.

திண்டுக்கல் தனபாலன் said...

நடக்கும் உண்மைகள் கண் முன்னே தெரிகிறது...

புதியவன் பக்கம் said...

நான் எழுத எண்ணுவதை எல்லாம் அப்படியே எழுதியிருக்கிறீர்கள். நன்றி.
http://pudhiavan.blogspot.in

Uma said...

"இன்னும் பத்து வருஷம் சார். இந்த சிட்டியை விட்டுட்டு கிராமத்துல செட்டில் ஆகிடணும்". இந்த டயலாக்கை கேட்கும் போதெல்லாம் சிரிப்பு வந்துவிடும். நாம் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வரும் இந்த வாழ்க்கையில் ரிவர்ஸ் கியர் என்பதே கிடையாது ஒருவேளை திரும்பிச்சென்றாலும் கூட நாம் விட்டுவந்த கிராமமும் வாழ்க்கை முறையும் அங்கு இருக்கப்போவதில்லை.
--உண்மைதான் ஆனாலும் அமைதியான கிராமத்துவாழ்க்கைக்கு மனம் ஏங்குகிறது.நான் கூட பெங்களூரு சென்னை, கல்கத்தா என பெருநகரங்களில் மும்மூன்று வருடங்கள் இருந்திருக்கிறேன் இருப்பினும் நெஞ்சில் நீங்காமல் உறைந்துள்ளது கோபிசெட்டிப்பாளையத்தின் சுற்றுப்புற கிராமங்களின் இயற்கைவனப்பும் மக்களின் அன்பும்தான் பங்களாபுதூர் வய்க்காலில் மூழ்கும் சுகம் ஏசி அறையில் கிடைக்காது..