Feb 23, 2015

கெட்டவன்

முந்தாநாள் சென்னையில் நடந்த நிகழ்வில் கொரிய இயக்குநரான கிம் கி டுக்கின் Bad Guy என்ற படம் பற்றி பேச வேண்டும் என்பதுதான் எனக்குத் தரப்பட்டிருந்த வேலை. கிம் என்பது குடும்பப் பெயராம். கடைசியில் இருக்கும் K எழுத்தும் Silence. கி டோ என்றுதான் அந்தப் பெயரை உச்சரிக்க வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் ஒருவர் சுட்டிக்காட்டினார். சுட்டிக்காட்டியவர் கொரியாவில் ஆராய்ச்சியாளராக பணியாற்றிவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். சரியாகத்தான் இருக்கும். கி டோவின் வாழ்க்கையே சுவாரஸியமானதுதான். கிறித்துவப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தவருக்கு ஓவியம் நன்றாக வரும். ஒரு கட்டத்தில் பிரான்ஸுக்குச் சென்றுவிட்டார். அங்கு தனது ஓவியங்களை விற்று காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தவர் அங்குதான் முதன்முறையாக திரைப்படங்களை பார்க்கத் துவங்கினார் என்றொரு குறிப்பை வாசித்தேன். அதன் பிறகு படங்களின் மீது உண்டான ஆர்வத்தின் காரணமாக கொரியாவிற்கு திரும்ப வந்து திரைப்படங்களை எடுக்கத் துவங்கினார். முதல் ஆறேழு படங்களுக்கு கொரியாவில் பெரிய மரியாதை இல்லை. Badguy தான் கி டோவுக்கு கொரியாவில் கவனம் பெற்றுத் தந்த முக்கியமான படம்.


அதையும் கூட ஒரு நேர்காணலில் ‘அந்தப் படத்தில் நாயகனாக நடித்தவருக்காகத்தான் கொரியர்கள் பார்த்தார்கள். இல்லையென்றால் வேறு மாதிரியான முடிவு கிடைத்திருக்கக் கூடும்’ என்று கி டோ சொல்லியிருந்தார். அவ்வளவு தன்னடக்கம். அவர் சொல்வதும் சரிதான். படம் மொத்தமாகச் சேர்ந்து ஒரேயொரு காட்சியில்தான் நாயகன் பேசுவார். வெறும் உடல்மொழியிலேயே படம் முழுவதும் மிரட்டியிருக்கிறார் அந்த நாயகன். 

நாயகி ஒரு கல்லூரிச் சாலையில் அமர்ந்திருப்பாள். அந்த வழியாக வரும் நாயகன் அவளை முறைத்துப் பார்ப்பான். வெகுஜனம் வெறுத்து ஒதுக்குகிற மாதிரியான பொறுக்கித்தனமான தோற்றமுடையவன் அவன். இந்தப் பெண்ணும் ஒருவிதமான அசூசையை பார்வையிலேயே காட்டுகிறாள். அப்பொழுது அவளின் நண்பன் வருகிறான். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது நாயகன் அவளை இழுத்து முத்தம் கொடுத்துவிடுகிறான். அவர்களைப் பிரித்துவிடுவதற்கு அவளது நண்பன் முயற்சி செய்வான் ஆனால் அது சாத்தியமாகாது. அந்த வழியாக வரும் மூன்று படைவீரர்கள் நாயகனை உதைத்து அவளிடம் மன்னிப்பு கேட்கச் சொல்வார்கள். அப்பொழுதும் அவன் பேசுவதில்லை. அவளையே பார்த்துக் கொண்டிருப்பான். அவள் காறி முகத்தின் மீது உமிழ்ந்துவிட்டுச் செல்வாள்.

இந்தப் படத்திற்கான டிவிடி பெங்களூரில் கிடைக்கவில்லை. ஸ்வப்னா, ப்ளானெட் எம் போன்ற பெரிய கடைகளிலும் தேடிய போதும் சரி, ப்ளாட்பாரக் கடைகளில் தேடிய போதும் சரி- ஏமாற்றம்தான் மிஞ்சியது. யூடியூப்பில் நிறைய கொரியப்படங்கள் இருக்கின்றன. ஆனால் இந்தப் படத்தின் பிரதி கிடைக்கவில்லை. கடைசியில் dailymotion.com தளத்தில் பிடித்துவிட்டேன். Nappeun namja என்ற அதன் கொரியப்பெயரில் தேடினால் கிடைத்துவிடும். படத்திற்கான ஆங்கில சப்டைட்டில் இல்லை ஆனால் இந்தப் படத்திற்கு அது தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன். முதல் முறை பார்த்துவிட்டு கி டோவின் நேர்காணல்கள், இந்தப் படத்திற்கான விமர்சனங்கள் போன்றவற்றைத் தேடி படித்துவிட்டு இரண்டாம் முறை பார்த்த போது வேறுவிதமான புரிதல் கிடைத்தது.

ஒரு நேர்காணலில் ‘நாயகன் எதற்கு மாணவர்கள் நிறைந்திருந்த அந்தச் சாலைக்குச் சென்றான்? அவனுடைய தோற்றத்துக்கும் வேலைக்கும் அந்தக் கல்லூரிச்சாலையில் எந்த வேலையும் இருப்பதாகத் தெரியவில்லை. லாஜிக்கலாக உதைக்கிறதே’ என்று கேட்டிருந்தார்கள். அதற்கு கி-டோ சரியான பதிலைச் சொல்லியிருக்கவில்லை. ‘ஏன் அவன் அங்கு போகக் கூடாதா?’ என்று திரும்பக் கேட்டிருந்தார். அந்தக் கேள்வி சரியானதுதான். இரும்படிக்கிற இடமாகத்தான் அது தெரிந்தது. இந்த ஒரு தட்டையான காட்சிக்குப் பிறகு படம் சூடு பிடித்துக் கொள்ளும்.

நாயகன் விபச்சாரத் தரகன். தன்னை அவமானப்படுத்தியவளை பழி வாங்குவதற்கென அவளை Trap செய்கிறான். புத்தகக் கடையொன்றில் அவள் கண் படும்படியாக ஒரு பணப்பையை நாயகனின் ஆள் ஒருவன் விட்டுச் செல்கிறான். இவள் அதை அவசரமாக கழிவறைக்குத் எடுத்துச் சென்று அதில் இருக்கும் பணத்தையெல்லாம் எடுத்துக் கொள்கிறாள். இதை எதிர்பார்த்துக் காத்திருந்த ஒருவன் அவளைத் துரத்தி பிடித்துவிடுகிறான். அதில் பத்தாயிரம் கொரியன் பணம் இருந்ததாகச் சொல்கிறான். அதில் இரண்டாயிரத்து ஐந்நூறுதான் இருந்தது. ஆனால் அவன் ஒத்துக் கொள்வதில்லை. ‘போலீஸூக்குச் செல்லலாம்’ என்று இழுக்கிறான் அல்லது தனது அழகையும் உடலையும் அவள் தர வேண்டும் என்கிறான். இரண்டாவதாகச் சொன்னதை அவள் தேர்ந்தெடுத்துக் கொள்கிறாள். ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

கொரிய நகரின் விபச்சார விடுதியில் அவள் சிக்குகிறாள். 

கி டோ இதுவரையில் இருபது படங்களை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை உளவியல் ரீதியாக கவனிக்க வேண்டும் என்கிறார்கள். அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு முரடன் கொலை செய்கிறான் என்று ஒரு பாத்திரத்தை உருவாக்குவதில் சிக்கல் இல்லை. அன்பானவொருவன் உருகி உருகி காதலிக்கிறான் என்று காட்டுவதில் பெரிய சவால்கள் இல்லை. ஆனால் ஒரு வன்மம் மிகுந்தவனுக்கு வரக் கூடிய காதலையும் அதை உள்ளடங்கிய குரலில் காட்டுவதிலும் மிகப்பெரிய சவால் இருப்பதாகத் தோன்றுகிறது. அவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட உணர்ச்சிகள். அந்த இரண்டையும் கதாபாத்திரத்தோடு பொருத்துவது சிரமம்தான். மனிதன் என்பவன் உணர்ச்சிகளின் கலவைதானே? வன்முறை, அன்பு, காமம், கோபம், நகைச்சுவை எனக் கலவைகளால்தான் அத்தனை மனிதர்களும் ஆகியிருக்கிறோம். ஆனால் அத்தனை உணர்ச்சிகளிலும் ஒன்று predominant ஆகத் தெரியும். பெரும்பாலான படைப்புகளில் இந்த Predominant உணர்ச்சிதான் காட்டப்பட்டிருக்கும். ஆனால் இந்த உணர்ச்சிக்கு எதிர்நிலையிலான உணர்ச்சி ஒன்றும் அவனிடம் ததும்பிக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டும்விதத்தில் கி டோ தன்னை ஒரு கலைஞன் என்று நிரூபிக்கிறார்.

நாயகியாக நடித்த பெண்ணும் சளைத்தவள் இல்லை. விடுதியின் மற்ற பெண்கள் எல்லாம் வாடிக்கையாளர்களை கை நீட்டி அழைக்கும் போது இவள் ஆரம்பத்தில் அமைதியாக அமர்ந்திருக்கிறாள். கன்னித்தன்மையை தனது நண்பனுக்கு அளிக்க வேண்டும் என விரும்புகிறாள். அது சாத்தியமாவதில்லை. எவனோ ஒருவனால் வலுக்கட்டாயமாக புணரப்படுகிறாள். அழுது கொண்டே ஏற்றுக் கொள்கிறாள். அடுத்து வருபவனிடம் பெரிய எதிர்ப்புக் காட்டுவதில்லை. அடுத்தடுத்து தானாகவே கவர்ச்சியான ஆடையை அணிந்து கொண்டு வாடிக்கையாளர்களை அழைக்கத் தொடங்குகிறாள்.

நாயகியின் அழகினால் வாடிக்கையாளர்கள் அவளையே தேர்ந்தெடுக்கிறார்கள் என சக பெண்கள் அவளிடம் வெறுப்புக் கொள்வது, நாயகனுக்கும் வேறொரு குழுவினருக்குமான பகைமை, கொலை முயற்சிகள், நாயகனின் நண்பனொருவன் அவள் மீது மோகம் கொண்டு அவளோடு ஒரு முறை உறவு கொண்டு அவளைத் தப்பிக்க வைக்க முயற்சிப்பது, அவளை நாயகன் மீண்டும் இழுத்து வருவது என படம் முழுக்கவும் சுவாரஸியமாக நகர்கிறது. 

இடையில் ஒரு காட்சி உண்டு. தப்பித்துச் செல்பவளை இழுத்து வரும் போது இரண்டு பேரும் கடற்கரையில் அமர்ந்திருப்பார்கள். கிழிக்கப்பட்ட நிழற்படத்தை ஒரு பெண் புதைத்துவிட்டு எழுந்து சென்று கடலில் குதித்துவிடுவாள். நாயகி அந்தப் படங்களை எடுத்து ஒட்டிப்பார்ப்பாள். அது காதலர்களின் படம். ஆனால் முகம் மட்டும் இருக்காது. இதை எப்படிப் புரிந்து கொள்வதில்லை என்று சரியாகத் தெரியவில்லை. தனது பழைய வாழ்க்கை இறந்து போனதாகவும் இது ஒரு புதிய வாழ்க்கை என்று நாயகி நினைத்துக் கொள்வதாகவும் எடுத்துக் கொண்டேன்.

படத்தில் ஒரு முக்கியமான அம்சம் இருக்கிறது- நாயகியின் படுக்கையை ஒரு பக்கக் கண்ணாடி வழியாக நாயகன் கவனித்துக் கொண்டேயிருப்பான். அவளுக்கு கண்ணாடிக்குப் பின்பாக அவன் இருக்கிறான் என்பது தெரியாது. ஆனால் பார்வையாளர்களுக்குத் தெரியும். தன்னை உதாசீனப்படுத்தியவளை எவனெல்லாம் அனுபவிக்கிறான் என்பதைப் பார்த்து பழி தீர்த்துக் கொள்கிறான் என்றும் புரிந்து கொள்ளலாம் அல்லது நீலப்படம் பார்த்து இன்பம் அடைவதைப் போன்ற voyeurism என்றும் புரிந்து கொள்ளலாம். நாயகி வருவதற்கு முன்பாகவிருந்தே அந்தக் கண்ணாடி அங்குதான் இருக்கிறது.

நாயகிக்கும் அவன் மீது கொஞ்சம் கொஞ்சமாக பிரியம் வருகிறது. அவளுக்கு வேறு வழியும் இல்லை. காதலனை விட்டு பிரிந்தாகிவிட்டது. குடும்பம் இல்லை. வாடிக்கையாளர்களாக வருபவர்கள் எல்லோருமே உடலைத்தான் துய்க்கிறார்கள். இவன் மட்டும்தான் வேறுவிதமான உணர்வுகளுடன் நெருங்கி வருகிறான். அவளுக்கு அவன் மீது அன்பும் பிரியமும் உண்டு என்பதை சில காட்சிகள் உணர்த்திவிடும். நாயகனும் நாயகியும் முதன் முறையாகச் சந்தித்துக் கொண்ட அதே சாலையில் அதே பெஞ்ச்சில் அமர்வார்கள். அப்பொழுது இருவரின் கரங்களும் மென்மையாக வருடிக் கொள்ளும்.

அதோடு படம் முடிந்துவிடுவதில்லை. அவளை விபச்சார விடுதியில் இருந்து அழைத்துச் சென்றுவிடுவான். கி டோவின் படங்கள் கெட்டவர்கள் திருந்தி சமூகத்தோடு ஒத்து வாழ வேண்டும் என்கிற மாதிரியான போதனைகளையெல்லாம் கற்பிப்பதில்லை. மீனவர்களின் குடிசைப்பகுதியில் டெம்போ போன்றதொரு வண்டியை நிறுத்தி வண்டியைத் திரைச்சீலைகளால் மறைப்பான். பிறகு தள்ளி வந்து அமர்ந்து கொள்வான். அப்பொழுது அவள் தனது புதிய வாடிக்கையாளருடன் வண்டிக்குள் செல்வாள். அவளது வாழ்க்கை இனி அப்படித்தான் தொடரப் போகிறது. அவன் Pimp ஆகவே இருக்கப் போகிறான் என்கிற விதத்தில் படம் முடிவுக்கு வரும்.

வன்மம் என்பதும் ஒரு உணர்ச்சிதானே? யாரிடம் வன்மம் இல்லை? எல்லோரிடமும்தான் இருக்கிறது. நம்மை கொன்றுவிடுவதான வெறியில் சுற்றிக் கொண்டிருப்பவன் கூட நேர் பேச்சில் புன்னகைக்கிறான். தனது விஷம் அத்தனையையும் பற்களுக்குப் பின்னால் ஒளித்துக் கொள்கிறான். நமக்கும் அவனைப் பற்றித் தெரியும். ஆனால் நாம் சிரிப்பதில்லையா என்ன? இந்தச் சமூகம் விரும்பாத உணர்ச்சிகளை நாசூக்காக மறைத்துக் கொள்கிறோம். சமூகம் போற்றுகிற உணர்ச்சிகளான அன்பு, பிரியம் என்பதையெல்லாம் எச்சில் ஒழுகுவதைப் போல அடுத்தவர்களுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறோம். இது ஒரு உலக மகா நடிப்பு. ஆனால் இந்தப் படத்தின் நாயகன் அப்படியில்லை. தனது வன்மத்தையும் குரூரத்தையும் மறைத்துக் கொள்வதில்லை. எதிர்மறையான சிந்தனைகளையெல்லாம் ஒழித்துவிட்டு அன்பை விதைப்போம் என்று நாடக்கத்தனமாக போதிப்பதற்கு கி டோவும் சராசரி இயக்குநர் இல்லை என்பதை இந்த படத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.