Mar 11, 2015

காமம் காதலாகிக் கசிந்துருகி


மோனிகா பெலுச்சியைப் பற்றி எசகுபிசகான செய்திகளாகத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நடிப்பில் தூள் கிளப்புவார் என்றெல்லாம் தெரியாது. 2000 ஆம் ஆண்டு வந்த ஒரு படத்தைப் பார்த்தேன். Malena என்று பெயர். இத்தாலியப் படம். பதின்ம வயதுப் பொடியன் ஒருவன் மோனிகாவின் மீது காமம் பெருக்கெடுத்துத் திரிகிறான். அதை அவ்வளவு நுட்பமாக படமாக்கியிருக்கிறார்கள்.

1940களில் கதை நடக்கிறது. இரண்டாம் உலகப்போர் சமயம் அது. பாசிஸ கட்சியின் முசோலினி இத்தாலியைக் கோலோச்சுகிறார். இரண்டாம் ட்யூஸ்( முசோலினியை அப்படித்தான் அழைத்தார்கள்) வானொலியில் பேசினால் அத்தனை பேரும் வானொலியைக் கேட்டாக வேண்டும் என்று உத்தரவிடுகிற சர்வாதிகார ஆட்சி. அந்தச் சமயத்தில் பொடியன் ரெனேட்டோவுக்கு ஒரு மிதிவண்டி கிடைக்கிறது. எடுத்துக் கொண்டு பறக்கிறான். கடற்கரையில் இவனையொத்த பையன்கள் இவனை தங்களோடு ஏற்றுக் கொள்வதாகச் சொல்கிறார்கள். முதல் வேலையே மலேனாவை சைட் அடிப்பதுதான். அவள் வீட்டிலிருந்து நடந்து செல்லும் பாதை முழுக்க அவளுக்கு முன்பாக சைக்கிளை மிதித்துச் சென்று பெருமூச்சு விடுவார்கள். 

மலேனா ராணுவ வீரனின் மனைவி. அவனை இத்தாலிய அரசு ஆப்பிரிக்காவில் நடக்கும் போருக்காக அனுப்பி வைத்துவிடுகிறது. அதனால் அவள் தனியாகத்தான் இருக்கிறாள். அந்த நகரத்திலேயே அழகான பெண் இவள்தான் என்பதால் அத்தனை ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களும் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள். யாரையும் கவனிப்பதில்லை. ஆனால் ஊர் வாயை மூட முடியுமா? அவளுக்கு நிறைய ரகசியக் காதலர்கள் இருப்பதாக பேசுகிறார்கள். ஊர் முழுக்க இவளைப் பற்றிய வதந்திதான். ரெனட்டோ படிக்கும் பள்ளியில் ஆசிரியராக இருப்பவரின் மகள்தான் மலேனா. அவருக்கு காது கேட்காது. வருகைப் பதிவு எடுக்கும் போது ‘உங்க பெண்ணை.....’ என்று ஏதாவது வக்கிரமாகத்தான் மாணவர்கள் பேசுகிறார்கள். அவரும் வருகைப் பதிவுதான் கொடுக்கிறான் என்று நினைத்து தலையாட்டுகிறார். 

இப்படியான சேட்டைகள் படம் முழுக்க உண்டு. இந்த சுண்டைக்காயன்கள் கடற்கரையில் அமர்ந்து தங்களது உறுப்பை அளவு பார்த்துவிட்டு ‘யார் பெரியவர்?’ என்ற சண்டையெல்லாம் போட்டுக் கொள்வார்கள். ஆனால் அதை ஆபாசம் என்றெல்லாம் ஒதுக்கிவிட முடியாது.

ரெனட்டோவுக்கு மலேனா மீது காதல். அதைக் காதல் என்று சொல்ல முடியாது. காமம்தான். அவளை நினைத்து சுய இன்பத்தில் ஈடுபடுகிறான். மற்றவர்களைக் கழற்றிவிட்டுவிட்டு இவன் மட்டும் அவளைப் பின் தொடர்கிறான். அவளது அறையை எட்டிப் பார்க்கிறான். உள்ளாடையைத் திருடிச் சென்று அடுத்த நாள் காலையில் அவனது அப்பாவிடம் சிக்கி ஊமைக்குத்து வாங்குகிறான். ஆனால் ஊர் பேசுகிற மாதிரி அவள் மோசமானவள் இல்லை என்றும் தனது கணவனுக்காக உண்மையானவளாகத்தான் இருக்கிறாள் என்று புரிந்து கொள்கிறான். ஆனால் ஊர் அவளைப் பற்றி ஏசுவதை நிறுத்துவதில்லை. அவள் தினமும் நடந்து செல்வதே கூட அவளது ரகசியக் காதலனைச் சந்திக்கத்தான் என்று நம்புகிறார்கள். அதைக் கண்டுபிடிக்க ரெனெட்டோ பின் தொடர்கிறான். ஆனால் அவள் தனியாக வசிக்கும் தனது தந்தைக்குச் சேவகம் செய்யத்தான் செல்கிறான் என்று புரிந்து கொண்டு சர்ச்சில் ‘இந்த ஊரிடமிருந்து அவளைக் காக்கச் சொல்லி’ வேண்டிக் கொள்கிறான். ஆனால் கடவுளால் கூட இந்த ஊர் வாயிடமிருந்து அவளைக் காப்பாற்ற முடிவதில்லை. அவளது அழகும் அவளது தனிமையும்தான் இந்த ஊரை அவளுக்கு எதிராக திரண்டு நிற்கச் செய்கிறது.

ஆண்கள் அத்தனை பேரும் தங்களது படுக்கைக்கு அவளைத் தூக்கி வர விரும்புகிறார்கள். பெண்கள் அத்தனை பேரும் பொறாமைப்படுகிறார்கள். 

யாரோ அவளது தந்தைக்கு மொட்டைக் கடிதம் அனுப்புகிறார்கள். ஊருக்கே அவள் விபச்சாரியாக இருப்பதாக அந்தக் கடிதம் சொல்கிறது. மனம் உடைந்து போகும் அவர் வேலையை ராஜினாமா செய்துவிடுகிறார். தந்தை மகள் உறவு தகர்ந்து போகிறது. மலேனா தனிமையில் தள்ளப்படுகிறாள். இந்தச் சமயத்தில் அவளுடைய கணவன் போரில் இறந்துவிட்டதாக செய்தி வருகிறது. அவளைத் தவிர ஊரே சந்தோஷமடைகிறது. இனி அவளை அடைந்துவிடலாம் என்று அத்தனை ஆண்களும் மகிழ்ச்சியடைகிறார்கள்.

இந்த ஊரின் கொடூரம் துளித் துளியாக வெளியாகத் துவங்குகிறது. எந்தப் பற்றுக் கோலும் இல்லாத மலேனாவுக்கு ஒரு லெப்டினெண்ட்டுடன் காதல் வருகிறது. ஆனால் அவன் இதை உடைத்துவிட்டுச் சென்றுவிடுகிறான். ஏமாந்து போகும் மலேனாவை ஒரு பல் மருத்துவரின் மனைவி நீதிமன்றத்துக்கு இழுக்கிறாள். தனது கணவரை மலேனா வளைக்கிறாள் என்பதுதான் குற்றச்சாட்டு. ஆனால் அதில் உண்மை இல்லை. ஒரு வழக்கறிஞர மலேனாவுக்காக வாதாடி ஜெயிக்கிறான். அதற்கு பதிலாக வழக்கறிஞர் அவளை வன்புணர்வு செய்கிறான். அத்தனையையும் ரெனோட்டா பார்த்துக் கொண்டேயிருக்கிறான். அந்த வன்புணர்வு சம்பவம் உட்பட.

ஊர் நினைப்பதைப் போன்று மலேனா மோசமான பெண் இல்லை என்று ரெனேட்டாவுக்குத் தெரியும். ஆனால் அவளைப் பற்றிய மோசமான சித்திரத்தை அவளால் மாற்றவே முடிவதில்லை. ரெனேட்டாவால் எதுவும் செய்ய முடிவதில்லை. அப்பனின் பேண்ட்டைக் கத்தரித்து தனக்கு அளவான பேண்ட்டாக மாற்றிக் கொண்டால் மட்டும் பெரியவன் என்று இந்த ஊர் ஏற்றுக் கொள்ளுமா? ஆனால் ரெனேட்டா அப்படியெல்லாம்தான் முயற்சிக்கிறான்.

மலேனாவுக்கான வாய்ப்புகள் அடைபட்டுப் போகின்றன. பசிக்கு உணவு கிடைக்காமல் சிரமப்படுகிறாள். போர் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு குண்டு வீச்சில் அவளது அப்பாவும் இறந்துவிடுகிறாள். அவளுக்கு உணவு கொண்டு வந்து தருபவன் அதற்கு பதிலாக அவளது உடலைக் கேட்கிறான். இப்படியே இந்தச் சமூகம் அவளை ஒரு மூலைக்கு தள்ளுகிறது. கடைசியில் விபச்சாரத்தில் விழுகிறாள்.

இரண்டாம் உலப்போர் சமயத்தில் முசோலினியின் இத்தாலியும் ஹிட்லரின் ஜெர்மனியும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. அதன்படி ஜெர்மானியப் படைகள் இந்தக் கதை நடந்து கொண்டிருக்கும் சிசிலி நகரத்துக்குள் வருகிறார்கள். அவர்களுக்கு மலேனா விருந்தாகிறாள். இப்படியே நகரும் கதையில் மலேனாவும் ரெனேட்டாவும் பேசிக் கொள்வதேயில்லை. போருக்குப் பிறகாக - இத்தாலி வீழ்ந்துவிடுகிறது- ஊர்ப் பெண்கள் அடித்து அவளை மொட்டையாக்குகிறார்கள். அடித்து உதைக்கிறார்கள். ரத்தம் வழிகிறது. அவள் ரயிலேறி எங்கேயோ சென்றுவிடுகிறாள்.

இதையும் ரெனேட்டோ பார்த்துக் கொண்டேயிருக்கிறான். அப்பொழுதும் அவனால் எதுவுமே செய்ய முடிவதில்லை. 

கதையின் திருப்பமாக மலேனாவின் கணவன் திரும்பி வருகிறான். அவன் தனது கையை மட்டும்தான் இழந்திருக்கிறான். ஆனால் அவன் இறந்துவிட்டதாக தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. ஊரில் யாருமே அவனிடம் பேசுவதில்லை. மலேனாவும் அவனும் வாழ்ந்த வீடு அகதிகள் கூடாரமாகியிருக்கிறது. எப்படி தனது மனைவியைத் தேடுவது என்று தெரியாமல் அலைகிறான். அவனுக்கு ஒரு மொட்டைக் கடிதம் வழியாக மலேனாவின் இருப்பிடத்தை ரெனேட்டா சொல்கிறான். மலேனாவும் கணவனும் திரும்பவும் சிசிலிக்கு வருகிறார்கள். 

கதையை முழுக்க எழுதக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் அது இயலவில்லை. அப்படியான கதை இது. ஆங்காங்கே சில காட்சிகளை மட்டும் விழுங்கிக் கொண்டேன். எல்லாவற்றையும் எழுதிவிட்டு மிச்சத்தை திரையில் காண்க என்று எழுதுவதைப் போன்ற துரோகம் வேறு இருக்க முடியாது என்றாலும் இந்தக் கதையை முழுமையாகச் சொல்லிவிடுவதால் பெரிய பாதகம் இல்லை. நேர்கோட்டில் செல்லும் எளிமையான கதைதான். பெரிய திருப்பங்களைச் சொல்லி சஸ்பென்ஸ் எதையும் உடைக்க முடியாது என்பதால் ஓரளவு சொல்லிவிட்டேன்.

இந்தப் படத்தை பார்ப்பதற்கு முன்பாக இரண்டாம் உலகப்போரில் இத்தாலி, முசோலினி போன்ற விஷயங்களைத் துளி தெரிந்து வைத்துக் கொண்டால் படத்தின் பரிணாமங்கள் இன்னமும் விரிவடைகின்றன. அதெல்லாம் அவசியமே இல்லைதான். நேரடியாகவே புரிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு படத்தை வெறும் படமாக மட்டுமே பார்க்க வேண்டியதில்லை அல்லவா? நாற்பதுகளில் இத்தாலி அதன் conservative தன்மை என எல்லாவற்றையும் ஓரளவு உள்வாங்கிக் கொள்ளலாம்.

இது ஒரு காமம் சார்ந்த படம் என்ற குறிப்பை படித்துவிட்டுத்தான் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். அப்படிச் சொல்வதைப் போன்ற அபத்தம் வேறு இருக்க முடியாது. படத்தில் சில நிர்வாணக்காட்சிகள் உண்டு. ஒன்றிரண்டு படுக்கையறைக் காட்சிகளும் உண்டு. ஆனால் வழக்கமாக இருக்கும் விலாவாரியான காட்சிகள் இல்லை.

ஒரு பெண், அவளைச் சுற்றி இந்தச் சமூகம் உருவாக்கும் கட்டுக்கதைகள், அவளது தனிமை, சோற்றுக்கு வழியில்லாமல் விபச்சாரத்தில் விழுவது, இந்த நகரம் அவளை தண்டிப்பது என அத்தனையும் ரெனோடாவின் பதின்ம வயதுக் கண்களின் வழியாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன, தன்னை விட மூத்த பெண்ணுடனான அவனது காம இச்சைகள், அது உருமாறி அவளுடனான காதலாக மாறுவது, பிறகு பரிதாபமாக வடிவெடுப்பது என பின்னியெடுத்திருக்கிறார்கள். 

மிகச் சிறந்த படம் இது. Malena ஆன்லைனில் கிடைக்கிறது.

கடைசியில் படம் இப்படி முடியும்-  ‘அவளுக்குப் பிறகு ஏகப்பட்ட பெண்களை காதலித்திருக்கிறேன். அவர்கள் என்னை மறந்துவிடுவாயா என்று கேட்பார்கள். மறக்க மாட்டேன் என்றுதான் சொல்வேன். ஆனால் மறந்துவிடுவேன். ஒரேயொருவளை மட்டும் மறக்கமுடிவதில்லை. அவள் ‘என்னை மறந்துடுவியா?’ என்று எப்பொழுதுமே கேட்காதவள்’. 

படத்தைப் பார்த்துவிட்டு படுத்தால் மோனிகாதான் கனவு  முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தார். இது அந்த மாதிரியான கனவு இல்லை என்று சத்தியம் கூடச் செய்வேன்.

(முன்பு இயங்கிக் கொண்டிருந்த ஒரு வலைத்தளத்துக்காக எழுதிய கட்டுரை. சில திருத்தங்களுடன்)