Jul 14, 2015

துப்பாக்கி எழுதிய தீர்ப்பு

ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாடுகளில் உள்ள பகுதிகளில் என்ன மாதிரியான அழிச்சாட்டியங்களைச் செய்கிறார்கள் என்பதை விளக்கும் சலனப்படம் ஒன்று யூடியூப்பில் கிடைத்தது. தங்களின் ஆதிக்கத்திற்குள் வரும் பகுதிகளில் இருக்கும் பழங்கால நினைவுச்சின்னங்களை அழிப்பதிலிருந்து சாமானியர்களுக்கும் எதிரிகளுக்கும் மிகக் குரூரமான தண்டனைகளை வழங்குவது வரையிலானவற்றை காட்சிப்படுத்திய சலனப்படம் அது. முட்டாள்களிடம் ஆயுதமும் அதிகாரமும் கிடைத்தால் என்ன நடக்கும் என்பதை அப்பட்டமாக்கியிருந்த அந்தக் காட்சிகளைப் பார்த்துவிட்டு இந்த ஐ.எஸ் தீவிரவாதிகளைப் பற்றிய திரைப்படங்கள் ஏதேனும் வந்திருக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்த போது டிம்புக்டு என்ற படம் கிடைத்தது. டிம்புக்டு(Timbuktu) பழங்கால நகரம். மேற்கு ஆப்பிரிக்காவிலிருக்கு ஒரு நகரத்தின் பெயர் இது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமும் கூட. இப்பொழுது அப்படியில்லை. சிதைந்து போயிருக்கிறது. வறுமையின் வறட்சி.


இந்த நகரம்தான் கதை நடக்கும் இடம். முதல் காட்சியில் மான் ஒன்று வேகமாக ஓடி வருகிறது. ஜீப்பில் துப்பாக்கியை ஏந்தியபடி சுட்டுக் கொண்டே வரும் தீவிரவாதிகளிடமிருந்து அது மூச்சு வாங்க ஓடித் தப்பிக்கிறது. அந்தத் தீவிரவாதிகள் மணற்பாங்கான பாலை நிலத்தில் இருக்கும் பழங்காலச் சின்னங்களைச் சுட்டு வீழ்த்துவதாக படம் ஆரம்பிக்கிறது. ஊர் முழுவதும் மணல்தான். ஒரேயொரு இடத்தில் குளம் இருக்கிறது. அந்தக் குளத்தில் ஒரு மீனவன் இருக்கிறான். இளைஞன். அவன் வலைகளை விரித்து வைத்து மீன்கள் சிக்குவதற்காகக் காத்திருக்கிறான். ஆனால் அவன் படத்தின் நாயகன் இல்லை. நாயகனுக்கு மாடு மேய்ப்பதுதான் தொழில். எட்டு மாடுகள் வைத்திருக்கிறான். அவனுடைய பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் தீவிரவாதிகள் வந்த பிறகு வெகு தூரத்திற்குச் சென்றுவிட்டார்கள். இவன் மட்டும் தனது குடும்பத்தோடு- மனைவி, பனிரெண்டு வயது மகள்- பாலை நிலத்தில் டெண்ட் அடித்து குடியிருக்கிறான். இவனது மாடுகளை ஒரு சிறுவன் பார்த்துக் கொள்கிறான்.

பிரச்சினை இந்த மாடுகளினால் வருகிறது. மேய்ந்துவிட்டு நீர் அருந்தச் செல்லும் மாடுகளில் ஒன்று தண்ணீருக்குள் இறங்கி மீன் வலையை அறுத்துவிடுகிறது. சிறுவன் தடுக்க முயற்சிக்கிறான். ஆனால் ஓடுகிற மாட்டை தடுக்கவா முடியும்? கோபத்தில் ஒரு கூரான குச்சியை எடுத்து மீனவன் மாட்டின் மீது எறிய அது அந்த இடத்திலேயே செத்து போய்விடுகிறது. பையன் அழுது கொண்டே ஓடிச் சென்று முதலாளியிடம் சொல்கிறான். அவன் கோபம் பொங்க வர இப்பொழுது என்ன நடக்கும் என்று யூகித்திருப்பீர்கள் அல்லவா? அதேதான். மீனவனின் ஆயுள் முடிந்துவிடுகிறது. அவனைக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் மாட்டுக்காரன் நினைத்திருக்கவில்லை. இருவரும் ஆள் மாற்றி ஆள் தள்ளிக் கொள்கிறார்கள். அதில் மீனவன் விழுந்து முடிந்து போகிறான்.

ஏற்கனவே ஊரில் ஷரியா சட்டத்தைக் கொண்டு வந்து ஐஎஸ்காரர்கள் அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஊரில் இசை இருக்கக் கூடாது. மீறிக் கேட்டால் கசையடி. பெண்களின் கைகள் கூட வெளியே தெரியக் கூடாது. தெரிந்தால் கைது. காதலிக்கக் கூடாது. காதலித்தால் கல்லால் அடித்துக் கொல்வது என்று வரிசையான கட்டுப்பாடுகள். இந்த லட்சணத்தில் கொலை செய்தால் விட்டு வைப்பார்களா? மாட்டுக்காரனை கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். வழக்கு நீதிபதியின் முன்பாக வருகிறது. நீதிபதியென்றால் கருப்பு கவுன் அணிந்த நீதிபதியில்லை. பள்ளிக் கூட வகுப்பறை மாதிரி ஒரு அறை. அதில் பெஞ்ச் போட்டு ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர்தான் நீதிபதி. மொழிபெயர்ப்புக்கு ஒரு உதவியாள். அப்புறம் குற்றவாளி. விசாரணை நடக்கிறது. ‘எனது மகளை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது...உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா?’ என்றெல்லாம் பேசிப் பார்க்கிறான். எதுவும் ஒத்து வருவதில்லை. தண்டனையாக நாற்பது மாடுகளைக் கொடுக்க வேண்டும் என்று நீதிபதி கேட்கிறார். செத்துப் போன மாடு தவிர்த்து இப்பொழுது ஏழு மாடுகள்தான் அவனிடம் இருக்கின்றன. அதனால் அதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அதைத் தவிர இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. இறந்து போனவனின் குடும்பம் மன்னிப்பு வழங்கினால் தப்பித்துவிடலாம். மீனவனின் குடும்பத்தை அழைத்து வைத்துக் கேட்கிறார்கள். மீனவனின் அம்மா மன்னிக்க மறுத்துவிடுகிறாள்.

மாட்டுக்காரனின் மனைவியும் மகளும் அநாதைகளாகப் போகிறார்கள். பனிரெண்டு வயதுக் குழந்தை திக்குத் தெரியாமல் திணறப் போகிறாள். துவக்கத்திலிருந்தே மாட்டுக்காரனின் மனைவி மீது அந்த ஐஎஸ் குழுவின் முக்கியப் பிரமுகருக்கு ஒரு கண். அவள் அவனுக்கு சம்மதம் சொன்னால் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. கணவனின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அவளது கனவுகளில் நாற்பது மாடுகள் வந்து போகின்றன. வேறு வழியில்லை. துணிந்து அந்த முக்கியப் பிரமுகருக்கு ஃபோன் செய்கிறாள். ஆனால் இவள் அழைத்த நேரத்தில் கிட்டத்தட்ட தீர்ப்பு எழுதப்பட்டுவிட்டது. இனிமேல் தன்னால் குற்றவாளியைக் காப்பாற்ற முடியாது என்று சொல்லிவிடுகிறான். இனி மரணம் மட்டும்தான் ஒரே கதி. மாட்டுக்காரன் தனது மனதை தயார் செய்து கொள்கிறான். மரணம் பற்றிய பயம் எதுவுமில்லையென்றும் தனது மகளுக்காகத்தான் வருந்துகிறேன் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறான். 

அவனை மரண மேடைக்கு அழைத்துச் செல்கிறார்கள். தீவிரவாதிகளில் ஒருவன் தனது இருசக்கர வாகனத்தில் மாட்டுக்காரனின் மனைவியை அழைத்து வருகிறான். க்ளைமேக்ஸ் சில வினாடிகளில் முடிந்துவிடுகிறது. க்ளைமேக்ஸ் காட்சி முடிந்த பிறகு மாட்டுக்காரனின் மகள் பாலைவனத்தில் ஓடுகிறாள். முதல் காட்சியில் ஓடிய அதே மான் மூச்சு வாங்க ஓடுகிறது. படம் முடிகிறது.

ஒன்றரை மணி நேரம்தான் படம். படத்தின் இசையும், காட்சிப்படுத்துதலும், துருத்தல் இல்லாத நடிப்பும், கதைக்களத்தின் பின்னணியும் மிகச் சிறந்த படமாக மாற்றியிருக்கின்றன. மிக எளிய மனிதர்கள். எந்தவிதச் சிக்கலுமில்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்களைச் சுற்றிலும் நிகழும் அதிகாரப் போட்டியும் தம் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும் அந்த எளிய மனிதர்களுக்குள் மன அழுத்தத்தை உருவாக்குகின்றன. அவர்களின் வாழ்க்கை முறை வெகுவாக மாறிப் போகிறது. இந்த அழுத்தம் அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகிறது. அடுத்தவன் மீதான உக்கிரம் கொலையில் முடிகிறது. சட்டமும் வாயைத் திறந்து காத்திருக்கிறது. விழுகிறவனை அப்படியே விழுங்குகிறது. அதைத்தான் இந்தப் படம் பிரதானப்படுத்துவதாகத் தோன்றுகிறது.

படத்தில் அரபி, ப்ரெஞ்ச் உட்பட நான்கு மொழிகளில் பேசுகிறார்கள். அதனால் சப்டைட்டில்தான் கை கொடுக்கிறது. படத்தின் முக்கியமான அம்சமே ஒரு நேர்கோட்டிலான கதையும் அதற்கு சம்பந்தமேயில்லாத பிற பாத்திரங்களும், அந்தப் பாத்திரங்கள் அனைத்தும் கதை நடக்கும் மண்ணோடு பிணைக்கப்பட்டிருப்பதும்தான். உதாரணமாக மீன் விற்கும் பெண்ணிடம் வந்து தீவிரவாதிகள் கையுறை அணியச் சொல்லி வலியுறுத்துகிறார்கள். அவள் மறுக்கிறாள். அவளுக்கும் கதையின் முக்கிய பாத்திரங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. படத்தின் போக்கில் அவள் துண்டிக்கப்பட்ட பாத்திரம்தான். ஆனால் தீவிரவாதிகளை அந்த மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை காட்சிப்படுத்துவதற்கு அவள் அவசியமானவளாக இருக்கிறாள். அதே போலத்தான் கால்பந்து. அதுவும் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த ஊரின் இளைஞர்கள் பந்து இருப்பதாக கற்பனை செய்தபடியே விளையாடுவது அற்புதமான காட்சி. இந்த தீவிரவாதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் உள்ளூர் இசுலாமிய பெரியவர், தனது மகளைத் திருமணம் செய்து கொடுக்க மறுக்கும் பெண்மணி- இப்படி துண்டிக்கப்பட்ட பாத்திரங்களையும் காட்சிகளையும் படத்தின் முக்கியமான கதையுடன் கோர்த்து சிறந்த படமாக்கியிருக்கிறார்கள். அந்தவிதத்தில் டிம்புக்டு அற்புதமான திரைப்படம். 

0 எதிர் சப்தங்கள்: