ராஜ போதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
உயிரோசை இணையத்தளத்தில் போதைப் பொருட்களைப் பற்றி எழுதும் போது இந்தப் பெயர் அறிமுகமானது. இந்த மாதிரி ஐட்டங்களை எல்லாம் “ஏதாச்சும் எழுதணுமே” என்று எழுதினால் பல்லிளித்துவிடும். அப்படித்தான் பல்லிளிக்க வைத்தேன். இந்த சமாச்சாரங்களை அனுபவித்து எழுத வேண்டும் அப்படியில்லையென்றால் விட்டுவிட வேண்டும். குமுதத்திலோ, ரிப்போர்ட்டரிலோ எழுதுவார்கள். தெரிந்து கொள்ளலாம்.
ராஜபோதை என்றால் வேறொன்றுமில்லை- குட்டிப்பாம்பை நாக்கின் மீது கடிக்க விடுவார்கள். Yes,சரியாகத்தான் படிக்கிறீர்கள். குட்டிப் பாம்புதான் கடிக்கும். பாம்பும் நாக்கை கடித்தால் என்ன ஆகும்? விஷம் உச்சந்தலைக்கு எகிறி மூச்சை அடைக்கும். இதயத்துடிப்பு, மூச்சை எல்லாம் இழந்துவிட்டு இரண்டு நிமிடங்களுக்கு இறந்துவிடுவார்கள். குட்டித் தூக்கம் மாதிரி, இது இரண்டு நிமிடங்கள் மட்டுமே இறந்து போகும் Mini death. பின்னர் அதிர்ஷ்டம் இருந்து எழுந்தால் இரண்டு நாளைக்கு ஆல்ஹகால் வாடை இல்லாமல் போதையில் மிதக்கலாம். இந்த போதையைத்தான் ராஜ போதை என்கிறார்கள்.
கஞ்சா, ஹெராயின் எல்லாம் அடித்தால் டாப் கியரில் போதை எகிறினாலும் கூட சில ‘போதாதிபதிகளுக்கு’ அளவு போதாதாம். இன்னும் கொஞ்சம் ஏத்திக்கலாமே என்று நினைத்து பாம்பை கொத்தவிட்டு கிறுகிறுத்து கிடப்பார்களாம். Boost up plan மாதிரி.
பெரும்பாலும் பணக்கார பார்ட்டிகளில் கும்மாளத்திற்கு மெருகூட்ட பாம்பாட்டிகளைக் கூட்டி வருகிறார்கள். “நீ போய் நேர்ல பார்த்தியா?” என்று கேட்கக் கூடாது. இண்டர்நெட்டில் அப்படித்தான் யாரோ எழுதி வைத்திருந்தார்கள்.
குறிப்பிட்ட வகை பாம்புகள், அதுவும் குறிப்பிட்ட வயதிற்குள்ளான குட்டிப் பாம்புகளையே கடிக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். உதாரணத்திற்கு ராஜ நாகத்தில் இருக்கும் விஷம் Neuro Toxic. நரம்படி நாராயணன். சற்று வயதான பாம்புகளில் இந்த விஷத்தின் வீரியம் அதிகமாக இருக்கும். இத்தகைய விஷம் அதிகமுள்ள பாம்பைத் தேர்ந்தெடுத்தால் மூச்சை நிறுத்தி ஆளை மொத்தமாக முடித்துவிடும். சிலவகைப் பாம்புகளில் இருக்கும் விஷம் ஹீமோஸ்டாட்டிக் விஷம். இந்த வகை விஷம் உடனடியாக இரத்தத்தைக் கட்டியாக்கி உயிரை முடித்துவிடும். இந்த மாதிரியானகாரணங்களால் பாம்பினைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்தகவனம் தேவை. இந்தியாவில் பெரும்பாலும் குட்டி நாகபாம்புகளையும், மரத்தில் இருக்கும் பச்சைப் பாம்புகளையும் பயன்படுத்துகிறார்கள்.
இந்தியாவில் பாம்புக்கடி என்பது நீண்டகாலமாக இருந்து வருகிறது. சில இந்து சாதுக்கள் மத ரீதியான காரணங்களுக்காக நாகப்பாம்பினைத் தங்கள் நாக்குகளில் கொத்தச் செய்கிறார்கள். மும்பையின் தென் பகுதிகளில் மிகப் பரவலாக போதைக்குப் பாம்புக்கடியைப் பயன்படுத்துவது உண்டு. ஒரு கடிக்கு ஐம்பது ரூபாய் என்ற அளவில் கிடைக்கிறது. சென்னையிலும் உண்டாம். ஒரு கடிக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயாம்.
கட்டுரை மொத்தத்தையும் டவுன்லோட் செய்து எழுதிவிட்டான் என்று பல் மீது நாக்கை போட்டு யாரும் சொல்லிவிடக் கூடாது அல்லவா? அதனால் துக்கினியூண்டு இதுபற்றி விசாரித்தும் வைத்திருந்தேன்.
போதை மறுவாழ்வு மையம் ஒன்றில் இது பற்றி கொஞ்சம் தகவல்களைக் கொடுத்தார்கள். ராயப்பன் என்ற பவர்ஸ்டார் ஒருவரின் அறிமுகமும் கிடைத்தது. ராயப்பன் எழுபதுகளின் மத்தியிலிருந்து (தனது 20 வயதில்) இன்று வரை பாம்புக் கடியின் சந்தோஷத்தில் திளைத்து வருகிறார். ஆரம்பத்தில் கஞ்சா அடிக்க ஆரம்பித்திருக்கிறார், போதை இன்னமும் அதிகம் கிடைக்கும் என்று யாரோ சொன்னதற்காக பாம்புக் கடியையும் கூடச் சேர்த்திருக்கிறார். ஆரம்பத்தில் 18 மணி முதல் 20 மணி நேரம் மயக்கத்தில் கிடப்பாராம். நாட்கள் ஆக ஆக 12 மணி முதல் 14 மணி நேரமாக போதை நேரம் குறைந்திருக்கிறது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்று சிகிச்சை எடுத்து வருகிறார்.
ஹெராயினைத் தொடர்ந்து உட்கொள்பவரை திடீரென நிறுத்தச் செய்தால் அதன் விளைவு கொடூரமானதாக இருக்கும். இதற்கு Withdrawal Symptoms என்று பெயர். ஹெராயின் கிடைக்காத அந்தநேரத்தில் கிட்டத்தட்ட பைத்திய நிலையை அடைவர். தொடர்ச்சியான பதட்டம், வியர்வை, போதைக்காக பின் விளைவுகள் குறித்து யோசிக்காமல் எதையும் செய்தல் போன்றவை சில. தமிழ்/தெலுங்கு படங்களில் போதைக்கு அடிமையான பெண்கள் போதை வேண்டும் என்பதற்காக எதுவும் செய்வார்கள் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்குமே, அப்படி. இது போன்ற Withdrawal Symptoms பாம்புக்கடிக்கு இல்லை.
பாம்புக்கடிக்குப் பழகியவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இதை நிறுத்திக் கொள்ள முடியும் என்பதால் இதனை "அடிமையாக்கும் போதை" என்று சொல்லமுடியாது. நேரம் கெட்டுக் கிடந்தால் "ஆளை முடிக்கும் போதை" என்று வேண்டுமானால் சொல்லலாம்.