Jun 6, 2014

உங்களுக்கு எத்தனை பேரைத் தெரியும்?

நண்பர் ஒருவருக்காக காவல்துறை அலுவலகத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவரிடம் ஒரு புகார் இருந்தது. அதைக் கொடுப்பதற்காகத்தான் சென்றிருந்தோம். தமிழக காவல்துறையில் ஒரு FIR பதிவு செய்வதற்குள் எதையெல்லாம் தின்று தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது பற்றிய முன் அனுபவம் இருக்கிறது. ஹைதராபாத்தில் பணி புரிந்த நிறுவனத்தில் பிணை ஒன்றைக் காட்டி கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். அந்த நிறுவனத்திலேயே நான்கு வருடங்கள் பணியாற்ற வேண்டும் என்பதுதான் முக்கியமான ஷரத்து. நான்கு வருடங்கள் என்பது பிரச்சினையில்லை. ஆனால் சொற்ப சம்பளம். ஒருவேளை நான் வேலையை விட்டு நிற்பதாக இருந்தால் பிணையை முறிப்பதற்காகக் கொடுக்க வேண்டிய தொகை எனது நான்கு வருடச் சம்பளத்தைவிடவும் பெரிய தொகை.

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புச் சான்றிதழ்களையும் வாங்கி வைத்துக் கொண்டார்கள். வயிறெரிந்து கிடந்தேன். தற்காலிகமாகக் கூட சான்றிதழ்களை வாங்க முடியவில்லை. ‘சார் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்ய வேண்டும்’ என்றால் அந்த ஹெச்.ஆர் டைரக்டர் புளித்த ஏப்பத்தைவிட்டபடியே ‘அதுக்கு என்ன அவசரம்’ என்பார். ஒருமுறை ‘பிறப்புச்சான்றிதழில் இனிஷியல் மாற்ற வேண்டும் என்றும் அதற்கு கல்விச் சான்றிதழ் தேவை’ என்றெல்லாம் புருடா விட்டுப்பார்த்தேன். என்னை மாதிரி எத்தனை ஆட்களைப் பார்த்திருப்பார்கள். கடவாய் பற்களின் இண்டுகளை நோண்டியபடியே சிரித்தார். ‘எவனாவது இவனை சாத்த வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டே வெளியேறினேன்.

எத்தனை பேர் சாபத்தை வாங்கி வைத்திருந்தாரோ தெரியவில்லை. அடுத்த மாதத்திலேயே அவரது மண்டையை உடைத்துவிட்டார்கள். ஹைதராபாத்திலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அந்தத் தொழிற்சாலை இருந்தது. அந்த டைரக்டர் தினமும் காரில் வந்து போவார். அவராகவேதான் வண்டி ஓட்டுவார். அது தேசிய நெடுஞ்சாலை. இருபக்கமும் அவ்வளவாக வீடுகளும் கடைகளும் இல்லாத பொட்டல் காட்டைக் கிழித்துக் கொண்டு அந்தச் சாலை இருந்தது. தொழிலாளர்கள் அந்த மனிதர் மீது பயங்கரக் கடுப்பில் இருந்தார்கள். ஒரு சுபயோக சுபதினத்தில் காரை நிறுத்தி வெளியே இழுத்துப் போட்டு மண்டையை உடைத்துவிட்டார்கள். வெளியில் மண்டை மட்டும்தான் உடைந்திருந்தது. உள்ளடி எவ்வளவு குரூரமானதாக இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் ஆறு மாதம் விடுப்பில் சென்றுவிட்டார். அவர் விடுப்பில் சென்ற பிறகு காவல்துறை விசாரணை, கைது, டிஸ்மிஸ், போராட்டம் என்று ஏகப்பட்ட விவகாரங்கள் நடந்து கொண்டிருந்தன.

ஆறு மாதங்களுக்குப் பிறகு பணிக்குத் திரும்பிய அந்த மனிதன் இன்னமும் கொடூரனாகிவிட்டான். முன்பாகவேனும் பற்களை நோண்டிக் கொண்டு பேசியவன் அதன் பிறகு பேசுவதற்கு கூட யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. முதல் நடவடிக்கையாக கேண்டீனில் மதியச் சாப்பாட்டில் தயிர் கொடுப்பதை நிறுத்தச் சொன்னான். ஆந்திராக்காரர்களைப் பொறுத்தவரைக்கும் சாப்பாட்டை முடித்துவிட்டு தயிரில் சர்க்கரையைப் போட்டு உறிஞ்சினால்தான் திருப்தி அடைவார்கள். அந்தத் தயிரிலேயே கை வைத்தால் சும்மா விடுவார்களா? பொங்கிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பொங்கிக் கொண்டிருக்கட்டும் அல்லது அவிந்து கொண்டிருக்கட்டும். இனிமேல் என் சான்றிதழ்களை அவர்களிடமிருந்து வாங்கிச் சேர்க்க முடியாது என்ற அவநம்பிக்கை வந்துவிட்டது. 

‘சான்றிதழ் தொலைந்துவிட்டது’ என்று போலீஸில் முதல் தகவல் அறிக்கையை வாங்கினால் அதை இணைத்து சான்றிதழ்களைக் கோரி பள்ளிக் கல்வித்துறையில் விண்ணப்பிக்கலாம் என்றார்கள். சான்றிதழைக் கூட வாங்கிவிடலாம் ஆனால் இந்த FIR வாங்குவதில்தான் பிரச்சினையே இருந்தது. சான்றிதழ்கள் தொலையவில்லை. ஆனால் அப்படித்தான் புகார் கடிதம் எழுதி வைத்திருந்தேன். தொடரூர்தியில் பயணிக்கும் போது தொலைந்துவிட்டதாக எழுதியிருந்தேன். ஆனால் அதை எந்தக் காவல் நிலையத்திலும் வாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை. உள்ளூரில் கொடுத்தால் ரயில்வே காவல் துறையில் கொடுக்கச் சொன்னார்கள். இறங்கிய ஊரில் கொடுத்தால் ‘எங்கே ஏறினாயோ அந்த ஊரில் கொடு’ என்றார்கள். அங்கே சென்றால் ‘எங்கே இறங்கினாயோ அங்கே கொடு’ என்றார்கள். அலைந்து கொண்டிருந்ததுதான் மிச்சம்.

அவர்கள் பிரச்சினை அவர்களுக்கு.  ‘சர்டிபிகேட் தொலைந்து போய்விட்டது’, ‘செல்போன் தொலைந்துவிட்டது’, ‘ஹார்ட் டிஸ்க்கை காணவில்லை’ என்றெல்லாம் FIR பதிவு செய்தால் கண்டுபிடிக்கவா முடியும்? போனது போனதுதான். தீர்க்கப்படாத வழக்குகளின் எண்ணிக்கைத்தான் அதிகமாகும். ‘ஏன் இத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன?’ என்று கேள்வி கேட்டால் அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். அதனால்தான் அவ்வளவு தயங்குகிறார்கள். 

தமிழகத்தில் மட்டும் கடந்த ஓரிரண்டாண்டுகளில் ரயிலில் சிதைந்து இறந்து போனவர்களில் ஆயிரக்கணக்கானவர்களின் அடையாளங்களை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லையாம். இந்தியா முழுவதும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டக் கூடும். இதனால்தான் பாதிக் கொலைகள் ரயில் சக்கரத்தில் விழுந்து தற்கொலைகளாக மாறிவிடுகின்றன. அதையெல்லாம் கண்டுபிடிக்க முடியாமல் திறந்த கோப்புகளை திறந்தபடியே வைத்துக் கொண்டு மண்டையை சொறிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் சென்று ‘என் சான்றிதழைக் காணவில்லை; கோவணத்தைக் காணவில்லை’ என்று சொல்வது நம் தப்புதான். 

சான்றிதழ்களைப் பெறுவதற்கு வேறு வழிகள் இருப்பதாகத் தெரியவில்லை. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. அந்தச் சமயத்தில் அம்மா கிராம நிர்வாக அலுவலராக இருந்தார். ஏதோ ஒரு கொலை வழக்கில் சாட்சி சொல்ல அழைப்பதற்காக ஒரு போலீஸ்காரர் வந்திருந்தார். எப்பொழுதுமே நம்மிடம் காரியம் ஆகும் வரைக்கும் போலீஸ்காரர்கள் தன்மையாக நடந்து கொள்வார்கள். ஆனால் அவர்கள் இடத்துக்குச் சென்றுவிட்டால் அவ்வளவுதான். கழுத்து மீது பூட்ஸ்காலை வைத்து மிதிப்பார்கள். அனைத்து போலீஸ்காரர்களுமே அப்படித்தான் என்று சொல்லவில்லை. ஆனால் பெரும்பாலானவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். வந்திருந்த போலீஸ்காரருக்கு அம்மாவிடம் காரியம் ஆக வேண்டியிருந்தது. விவகாரத்தைச் சொன்னவுடன் ‘இதை நான் பார்த்துக் கொள்கிறேன்; விசாரணைக்கு மட்டும் நீங்க வந்துடுங்க’ என்று காரியத்தை முடித்துக் கொடுத்தார்.

இந்த சான்றிதழ் விவகாரத்திற்குப் பிறகு வெகுநாட்கள் கழித்து அப்பா ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டார். கிடாகறிக்கு காரில் சென்றுவிட்டு வந்தவர் ப்ரேக்குக்கு பதிலாக ஆக்ஸிலேட்டரில் காலை வைத்து மரத்தில் கொண்டு போய் வண்டியைச் சாத்திவிட்டார். வண்டி காலியாகிவிட்டது. இன்சூரன்ஸூக்காக காவல்துறையில் தகவல் தெரிவிக்கச் சொன்னார்கள். FIR இல்லை- ‘புகாரைப் பெற்றுக் கொண்டோம்’ என்று ஒரு ரசீது கொடுப்பதற்காக இரண்டாயிரம் ரூபாயை வாங்கிவிட்டார்கள்.

இவையெல்லாம் மிகச் சாதாரணமான காரியங்கள். இன்னும் சற்று complex விவகாரம் என்றால் திணற வேண்டியதுதான். தேவைப்படுகிறதோ இல்லையோ- தொடர்புகள் அவசியம். எங்கே, யாரிடம் பேசினால் வேலையை முடிக்க முடியும் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும். காவல்துறை, அரசியல் போன்ற அதிகாரம் கொழிக்கும் துறைகளில் நான்கைந்து பேரையாவது தெரிந்து வைத்திருந்தால்தான் இனியெல்லாம் காரியம் ஆகும். இல்லையென்றால் பணம் கொடுக்கும் வலிமை இருக்க வேண்டும். இரண்டும் இல்லையென்றால் நாய் பிழைப்புதான். 

தனியார் துறையில் வேலை வாங்க வேண்டுமென்றாலும் நான்கு பேரைத் தெரிந்து வைத்திருக்க வேண்டியிருக்கிறது. அரசாங்கத்தில் ஒரு காரியத்தை முடிக்க வேண்டுமானாலும் யாரிடமாவது பரிந்துரை வாங்க வேண்டியிருக்கிறது. அவ்வளவு ஏன்? பெங்களூரில் ஒரு பள்ளியில் எல்.கே.ஜி அட்மிஷன் வாங்குவதற்காக அப்துல்கலாமின் உதவியாளரிடம் கடிதம் வாங்கி வந்து கொடுத்தார்களாம்.  ‘அவனிடம் பேச மாட்டேன்; இவன் எனக்கு அவசியமில்லை’ என்று ஒதுங்கி ஒதுங்கிப் போனால் நஷ்டம் நமக்குத்தான். 

நேற்று அந்த நண்பரின் புகாரை வாங்கிக் கொள்ள நான்கு மணி நேரம் எடுத்துக் கொண்டார்கள். நான்கு மணிநேரத்துக்குப் பிறகு ‘அந்த ஸ்டேஷன்ல போய்ப் பாருங்க’ என்றார்கள். அவ்வளவுதான். ஒற்றை வரி பதில். தலையைக் குத்திக் கொண்டு வெளியே வந்தோம். ‘அந்த ஸ்டேஷனில்’ போய்ப் பார்த்தால் என்ன சொல்வார்கள் என்பது உங்களுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட தெரிந்ததுதான்.

12 எதிர் சப்தங்கள்:

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான்! சிபாரிசு அல்லது பணம்! இரண்டும் இருந்தால் எங்கு வேண்டுமானாலும் சாதிக்கலாம்!

kailash said...

Nowadays in Tamilnadu for Cell Phone/Documents and other articles lost for which you need to provide evidence to insurance company/Dept . of Education Police Station has a mechanism called CSR ( Community Service Register ) . Instead of filing FIR they make an entry into this register and give you the receipt , This receipt is being accepted by Dept. of Education and Universities and insurance companies . It is true that Police men scares you when you go to station but you have to use your talents - money or recommendation or that police guy needs to be a understanding person . We also need to understand the ratio between policemen and public , their workload is too much and they show their frusturation on public . Police reforms need to happen to see minimum changes else it will continue .

Vaadaikaatru said...

கைலாஸ் அவர்களே, சி.எஸ்.ஆர். மட்டும் போதாது. Non Traceable Certificateம் வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப காவல் துறையில் ஆட்கள் இல்லை எனபது பொயான வாதம். வேலை செய்வதைத் தவிர்க்க காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகள் கண்டுபிடித்த பொய் வாதம். இலஞ்சம் வாங்க அவர்களுக்கு தேவைக்கும் அதிகமான நேரம் உள்ளது. வேலை செய்யத்தான் நேரம் இல்லை எனபர்.

கரந்தை ஜெயக்குமார் said...

இவவளவு அலைச்சலா

Krishna said...

நிதர்சனமான உண்மை...இப்படி அலைக்கழிக்கப்படும்போது நமக்குள் பெரும்பாலும் வெறியும் சுய பச்சாதாபமும் ஏற்பட்டு " ஒரு நாள் இல்லை ஒரு நாள் நானும் பெரிய ஆள் ஆகி உங்களை எல்லாம் என் காலடில விழுந்து சேவகம் பண்ண வைக்கிறேண்டா..நு " தோணும்...

Venkat said...

Won't RTI help with police ?

செந்தில்குமார் said...

போலிஸ் ஸ்டேசனனுக்கு தனியாக போகவே பயமா இருக்கு,அவங்ககிட்ட ககாரியம் சாதிக்க பணமும் வேணும்,தனித்திறமையும் வேணும்.

செந்தில்குமார் said...

சில நேரங்களில் போலிஸ் ஸ்டேசனுக்கு தனியாகச் செல்வதற்கே பயமா இருக்கு.அவர்களை கையாள பணத்துடன் தனித்திறமையும் வேண்டும்.

Yarlpavanan said...

தொல்லைகளுக்கு
எல்லையே இல்லையா

Ram said...

90-களின் இறுதி அது. நான் படித்தது புதுவையில் (கல்லூரி விடுதியில்). வீடு சென்னையில். ஆகையால் வீட்டு முகவரியுடன் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தேன். வசிப்பிடம் சரிபார்க்க காவல்காரர் வீட்டுக்கு வந்தபோது நான் இல்லை (புதுவையில் இருந்தேன். என்ன பண்ணிக்கொண்டிருந்தேன்-னுவெல்லாம் கேக்கப்பிடாது). அம்மாவிடம் 100 ரூபாய் கேட்க காவல்காரர் கூச்சப்பட்டதால் வந்த வினை. கூச்சப்பட்டாரே தவிர, படுபொறுப்பாக, ஆள் இல்லை - உறுதிப்படுத்தமுடியவில்ல என்று கூறிவிட்டார் பாஸ்போர்ட் அலுவலகத்திடம். மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தது பாஸ்போர்ட் அலுவலகம். இம்முறை நான் சனி, ஞாயிறில் காவல்துறை அலுவலகம் செல்வதாக அப்பா கண்காணிப்பாளரிடம் ஒப்புதல் பெற்றிருந்தார். நானும் ஆஜராகினேன். காசு எதுவும் கைமாறவில்லை. ஆனால், பாஸ்போர்ட்டும் வரவில்லை. வசிப்பிடம் உறுதிப்படுத்த முடியவில்லையாம். இதை என்னிடம் சொல்லியிருந்தால், பாண்டிச்சேரியில் வெள்ளிக்கிழமை என்ன செய்து கொண்டிருந்திருப்பேனோ, அதை விட்டுட்டு கண்காணிப்பாளரையே வீட்டுக்கு வரச்சொல்லியிருப்பேன். அப்பா அரசு அலுவலர் என்பதால் அவரிடம் அன்பளிப்பு கேட்கத்தயங்கி, என் கேஸை கவுத்துப்புட்டார் மாமா. பாஸ்போர்ட்டு வரவில்லையே தவிர, விண்ணப்பம் நிராகரிக்கப்படவுமில்லை. பிறகு ஹைதையில் வேலை கிடைத்து, பிறகு பெங்கைக்கு (அதாங்க…பெங்களூரு) வேலை மாறிய பிறகு (இதெல்லாம் நடக்க, அதிகமில்லை…இரண்டு ஆண்டுகள் தான்!), அலுவலகத்துக்கு பக்கத்து கட்டிடமே பாஸ்போர்ட்டு அலுவலகம் என்பதால் அங்கு சும்மா…வேலை பார்க்குற இடத்திலேர்ந்து சான்றிதழ் மட்டும் வாங்கி விண்ணப்பித்தேன் (பால்கார்டு, ரேஷன்கார்டு எதுவுமில்லை). என்னே அதிசயம். மூன்றே வாரத்தில் காவல்காரர் வீட்டுக்கு வந்தார்-ன்னு பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார். காவல் நிலையம் (ராஜாஜி நகர்-ன்னு நினைக்கிறேன்) சென்று பார்த்தபோது, பக்கத்து வீட்டிக்காரரிடம் இருப்பிட சான்றிதழ் வாங்கி வரச்சொல்ல, அதையே செய்தேன். நோ அன்பளிப்பு. அடுத்த மூன்றாவது வாரத்தில் புதிய பாஸ்போர்ட் என் கையில். சோகம் இன்னான்னா - அடுத்த மூன்றாவது வாரத்தில் இன்னொரு பாஸ்போர்ட்டும் என் கையில். இது கிரிமினல் குற்றமாம். முதல் முறை வெளிநாடு செல்லும்போது பயந்தேன். அப்புறம், பத்து ஆண்டு கழித்து (சேன் பிரான்ஸிஸ்கோவில்) பாஸ்போர்ட் நீட்டிக்கும்போது பயந்தேன். இதெல்லாம் தாண்டியதால், இனிமே மாட்ட வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன். எல்லாம் அந்த சென்னை காவல்காரரால் வந்த வினை, இல்லை பெங்கை காவல்துறையின் அதீத பணிவொழுக்கம்-ன்னும் சொல்லலாம்.

சுப இராமநாதன்

வெத்து வேட்டு said...

லஞ்சம் கேட்கும் போலீசின் மேல் முறைப்பாடு செய்யவில்லை...அந்த தைரியத்தில் தானே கேட்கிறார்கள்....
தொடர்ந்தது முறைப்பாடு செய்து கொண்டிருந்தால் அவர்கள் நடவடிக்கை எடுத்தே தீரவேண்டும்.....
எங்களது பயமே அவர்களது மூலதனம்....

சேக்காளி said...

//கோவணத்தைக் காணவில்லை//
இப்படியெல்லாமா மிச்சம் பிடிக்கிறது?.