Jun 7, 2014

எப்படி தேறுவார்கள்?

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம்  வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தரவரிசையை எந்த அடிப்படையில் கணக்கிடுவார்கள் என்று தெரியவில்லை. கல்லூரியின் தேர்ச்சி சதவீதம், ஆசிரியர்கள்-மாணவர்கள் விகிதாச்சாரம், ஆய்வக வசதிகள், ஆசிரியர்களின் கல்வித் தகுதி. அவர்களின் அனுபவம், கடந்த ஆண்டு கல்லூரி தயாரித்த ஆராய்ச்சி தாள்களின் எண்ணிக்கை, இறுதி ஆண்டு மாணவர்களின் ப்ராஜக்ட்கள், எத்தனை மாணவர்கள் வேலை வாங்கினார்கள், எத்தனை மாணவர்கள் GATE மதிப்பெண்கள் வாங்கினார்கள், எத்தனை மாணவர்கள் வெளிநாடு செல்கிறார்கள், விளையாட்டில் கல்லூரியின் நிலை, நூலக வசதி என அத்தனைக்கும் தனித்தனியாக புள்ளிகள் கணக்கிட்டு அதனடிப்படையில்தான் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். ஆனால் அதையெல்லாம் செய்யமாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். 

இப்போதைக்கு கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதத்தை வெளியிட்டிருக்கிறார்கள். மொத்தம் உள்ள 497 கல்லூரிகளில் முந்நூறுக்கும் அதிகமான கல்லூரிகள் ஐம்பது சதவீத தேர்ச்சியைக் கூட காட்டவில்லை. ஐந்நூறு பேர்கள் தேர்வெழுதிய கல்லூரிகளில் ஐம்பதுக்கும் குறைவானவர்கள் மட்டுமே தேர்ச்சியடைந்த கொடுமை எல்லாம் நடந்திருக்கின்றன. 

எப்படி தேறுவார்கள்? 

‘ஏன் எம்.டெக் படிக்கிற’ என்று கேட்டுப்பாருங்கள். ‘வேறு வேலை கிடைக்கவில்லை..எம்.இ முடித்தால் ஏதாவது கல்லூரியில் வேலை கிடைத்துவிடும்’ என்பவர்கள்தான் இங்கு அதிகம். இவர்களை துணைப் பேராசிரியர்கள் என்கிறார்கள். அடித்து சத்தியம் செய்யலாம்- இந்தத் துணைப் பேராசிரியர்களில் எண்பது சதவீதத்திற்கு மேலானவர்களுக்கு பாட அறிவே இருக்காது. மின்னியல் துறைப் பேராசிரியர்களில் ‘எனக்கு மோட்டாருக்கு coil கட்டுவதன் அடிப்படை தெரியும்’ என்று சொல்லக் கூடியவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? ஒரு கல்லூரிக்கு ஒருவர் இருந்தாலே கூட பெரிய விஷயம்.

பெரும்பாலான கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு மரியாதையே இருப்பதில்லை. தன் பண்ணையில் வேலைக்கு இருப்பவனை நடத்துவதைப் போலத்தான் கல்லூரி எஜமானர்கள் நடத்துவார்கள். மொத்த சான்றிதழ்களையும் கல்லூரியில் கொடுத்துவிட்டு அடிமைகளுக்கு எந்தவிதத்திலும் சளைக்காத துணைப் பேராசிரியர்களை சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். ஆசிரியர்களை குறை சொல்லவில்லை. வேலையில்லாத பாட்டுக்கு அவர்கள் சேர்ந்துவிட்டார்கள். ஆனால் அவர்களை மேம்படுத்தும் முக்கியமான கடமை கல்லூரிக்கு இருக்கிறது. ஆனால் பெரும்பாலான கல்லூரிகள் இதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை என்பதுதான் உண்மை. மாதச் சம்பளத்தையே ஏழாம் தேதி வரைக்கும் இழுத்தடித்து தரும் நிர்வாகம் ஆசிரியர் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு செலவு செய்வார்கள் என்று சொல்ல முடியாது. 

பி.வி.ஏ ராவ் என்றொரு பேராசிரியர் பாடம் நடத்தினார். அவருக்கு பாடம் நடத்துவதில் பெரிய திறமை இல்லை. ஆனால் மண்டை முழுவதும் சரக்கு இருந்தது. ஒரு சுத்தியலை எடுத்து கல்லை உடைத்தால் அந்த அதிர்வின் காரணமாக கையில் அரிப்பு எடுக்கிறது. ஆனால் அதுவே ஒரு மரங்கொத்தி இத்துனூண்டு அலகை வைத்துக் கொண்டு மரத்தை ஓட்டை போட்டுவிடுகிறது. அதிர்வு இருக்காதா? இருக்கும். ஆனால் அதன் தலையில் இருக்கும் பூப்போன்ற கொண்டை அந்த அதிர்வை உறிஞ்சிக் கொள்கிறது. இதை சொல்லிவிட்டு போய்விடலாம். ஆனால் எப்படி நிரூபிப்பது? அந்த மனிதர் அதற்கு ஒரு சமன்பாட்டை எழுதினார். கரும்பலகை முழுவதும் நிறைந்துவிட்டது. இத்தனைக்கும் அவர் அன்று தயாரித்துவிட்டு வந்து எழுதியதாகத் தெரியவில்லை. உராய்வு, அதிர்வு என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த போது மரங்கொத்தி பற்றிய பேச்சு வந்தது. சமன்பாட்டைத் தீட்டிவிட்டார்.

அவரளவுக்கு வேண்டியதில்லை. அதில் துளியாவது ஆசிரியருக்கு வேண்டாமா? ம்ஹூம்.

ஆசிரியர்கள் மட்டும் இல்லை - இங்கு எல்லோருமே காரணம்தான். அறுநூறு மதிப்பெண்கள் வாங்கியிருந்தாலும் கூட பொறியியலில் சேர்த்துக் கொள்கிறார்கள். கல்லூரியிலும் சரியான வசதிகள் இல்லை. ஆசிரியர்களுக்கும் தகுதி இல்லை. மாணவர்களுக்கும் படிப்பில் ஆர்வம் இல்லை. பிறகு பொறியியல் கல்வி எப்படி இருக்கும்? இப்படித்தான் பல்லிளிக்கும்.

இந்த லட்சணத்தில்தான் அடுத்த ஆண்டுக்கு கதவைத் திறந்து வைத்துக் கொண்டு வழிந்து கொண்டிருக்கிறார்கள். 

தமிழ்நாட்டில் மட்டும் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் பொறியியல் இடங்கள் இருக்கின்றன. இந்தக் கணக்கில் அமிர்தா, வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி, எஸ்.ஆர்.எம் போன்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கணக்கில் வருவதில்லை. இந்தக் பல்கலைக்கழகங்கள் எப்படியும் குறைந்தபட்சம் இரண்டாயிரத்திலிருந்து மூன்றாயிரம் பொறியாளர்களை ஒவ்வொரு வருடமும் துப்பிக் கொண்டிருக்கின்றன. கூட்டிக் கழித்தால் பார்த்தால் மூன்று லட்சம் பொறியாளர்களையாவது இந்தக் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்தகுடி பெற்றுத் தள்ளுகிறாள்.

நல்ல வேளையாக இந்த வருடம் நிறைய மாணவர்கள் விழித்துக் கொண்டார்கள் போலிருக்கிறது. இரண்டரை லட்சம் இடங்களுக்கான விண்ணப்ப விற்பனை இரண்டு லட்சத்து பத்தாயிரத்தைத்தான் தொட்டிருக்கிறது. ஆக உறுதியாக முப்பதாயிரம் இடங்கள் நிரம்பப் போவதில்லை. விண்ணப்பம் வாங்கியவர்களிலும் அத்தனை பேரும் பொறியியல் சேர்வார்கள் என்று சொல்ல முடியாது என்பதால் ஐம்பதாயிரம் இடங்களாவது காற்று வாங்கும். 

அடி வாங்கட்டும். தகுதியில்லாத கல்லூரிகள் ஒழிந்து போகட்டும். 

நானூறு பேர்களை தேர்வெழுத வைத்து அதில் வெறும் பன்னிரெண்டு பேர்களை மட்டுமே தேர்வடையச் செய்ய இயலுமானால் அத்தகைய கல்லூரிகள் இருந்தால் என்ன நாசமாகப் போனால் என்ன? அவனவன் சம்பாதிக்க ஓணான் கூட முட்டையிடாத பொட்டல் காடுகளில் ஆயிரத்தெட்டு பெயர்களில் கல்லூரிகளைத் திறந்து வைத்து காசு கொழிக்கிறார்கள். சாராயம் காய்ச்சட்டும், ப்ராத்தல் நடத்தட்டும். பிழைக்க எத்தனையோ தொழில்கள் இருக்கின்றன- மாணவர்களின் வாழ்க்கைதானா இவர்களுக்கு சிக்கியது?

பொறியியல் கல்வியின் பின்னால் இருக்கும் அரசியலை எந்த ஊடகமும் பெரிதாகப் பேசுவதில்லை. ஏன் இத்தனை கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றன? எதனால் பொறியியல் படிப்புக்கான தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன? ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வித்தந்தைகளாக வருபவர்களின் பின்னணி என்ன? பொறியியல் முடிப்பவர்களில் எத்தனை மாணவர்கள் வேலை வாங்குகிறார்கள்? பொறியியல் முடித்துவிட்டு வேலை கிடைக்காதவர்கள் எப்படி பிழைக்கிறார்கள்? இப்படி ஏகப்பட்ட கேள்விகளுக்கு பதிலே கண்டுபிடிக்க முடியாது. 

பொறியியல் கல்வியின் இந்த இருண்ட பக்கங்களை பற்றியெல்லாம் என்னவென்றே தெரியாமல் நெருப்புக்குழிக்குள் விழும் விட்டில் பூச்சிகளைப் போல மாணவர்களும் பெற்றோர்களும் விழுந்து கொண்டிருக்கிறார்கள்.

பொறியியல் கல்வியே வேண்டாம் என்று சொல்லவில்லை. படிக்கலாம். தரமான கல்லூரியில் இடம் கிடைக்குமானால் படிக்கலாம். பொறியியல்தான் படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்குமானால் படிக்கலாம். அதெல்லாம் எதுவுமே இல்லாமல் துளி கூட தகுதியே இல்லாத கல்லூரிகளில் கொண்டு போய் லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி வாழ்க்கையில் திசை தெரியாமல் விழிக்கிறார்கள் என்பதுதான் துக்கம். ஆயிரம் வாய்ப்புகள் இருக்கின்றன. எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம். இது மட்டும்தானா படிப்பு? கல்வித் தந்தைகள் தாங்கள் பிழைப்பதற்காக குழியை வெட்டி மேலே வண்ணத்துணியை விரித்து வைத்து அமர்ந்திருக்கிறார்கள். எல்லோரும் விழுகிறார்கள் என்று நாமும் விழ வேண்டியதில்லை. ஒரு கணம் நின்று யோசித்தால் போதும். தப்பித்துவிடலாம். உலகம் மிகப் பெரிது.

14 எதிர் சப்தங்கள்:

நாமக்கல் சிபி said...

Engg Admissionkku Minimum Qualification +2 Pass thane? (alladhu) adhuvum illaiya?

Yarlpavanan said...


சிறந்த சிந்தனைப் பதிவு

kumar.S said...

http://www.annauniv.edu/pdf/PASS_PERCENTAGE_ND2013.pdf

RK said...

there should be entrance exam for engineering admission. Also, to work in engineering college as faculty, Anna University should conduct qualifying exam to recruit as Assistant Professor and so on...

thiru said...

"மின்னியல் துறைப் பேராசிரியர்களில் ‘எனக்கு மோட்டாருக்கு coil கட்டுவதன் அடிப்படை தெரியும்’ என்று சொல்லக் கூடியவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? "
-- அவ்வளவு ஏன் வீட்டில் Plug point ரிப்பேர் செய்வார்களா ??

”தளிர் சுரேஷ்” said...

மிக சிறப்பான அலசல்! புற்றீசல் போல பொறியியல் கல்லூரிகள் பெருகிவிட்டன! பெற்றோர்களும் அடமானம் வைத்தாவாது பி.இ சேர்த்து விடுகின்றனர். எப்போதுதான் விழிப்புணர்வு வருமோ?

NAGARATHAN said...

ha.. ha.. ha...

ராஜி said...

நல்ல அலசல். அறுநூறு மார்க் வாங்கினவங்கலாம் இஞ்சினியரிங் சேர்ந்து படிக்கும் அவலத்தைப் பார்த்துட்டுதான் எனக்கு அப்படிப்பு மேலயே வெறுப்பு வந்திட்டுது.

Santhose said...

How many of them know the answer for the "Difference between electrical and Electronics" - B.Tech & BE ?

Babu said...

Pathetic state of affairs. a good topic for research. remedies?

சூனிய விகடன் said...

கல்விக்கடன் என்ற பெயரில் ஏகப்பட்ட கோடிகளை வங்கிகள் இந்தக் கல்வித்தந்தைகளின் கஜானாவில் கொண்டு போய்க்க்கொட்டுகிறதே..அந்தக்கொடுமை நெஞ்சு பொறுக்காத கொடுமை. கல்விக்கடன் என்று வங்கிகள் ஒரு வராக்கடன் லிஸ்ட் தயார் பண்ணுவதே இந்தத் தனியார் கல்வி நிறுவனங்களைக் கொழுக்க வைக்கத்தான். எழுபது சதவிகிதத்திற்கு மேல் மார்க் வைத்திருப்பவனுக்குத்தான் கல்விக்கடன் என்று சொல்லிப்பாருங்கள்...செவப்புக்கொடி, பு.ஜா.கோ, க.ஜா.கோ..அப்புறம் சமூக ஆர்வலர், தேசிய ஆர்வலர் என்று அனைவரும் கொடி பிடித்து விடுவார்கள்.

A Simple Man said...

There is an advt for a college.. a school boy (studying 5th or 6th) is asking for college admission..
Such things to be banned..

arulmozhi said...

you should understand the difference between TECHNICIAN and ENGINEER.coilwinding,fuse changing,plugpoint repair all these things are done by ITI qualified technicians.It is not the job of an engineer.Please understand.Engineer is a person who designs.adiplomo holder will execute the design with the ITI technicians.

Muthu said...

// சாராயம் காய்ச்சட்டும், ப்ராத்தல் நடத்தட்டும். பிழைக்க எத்தனையோ தொழில்கள் இருக்கின்றன- மாணவர்களின் வாழ்க்கைதானா இவர்களுக்கு சிக்கியது? //

மணி, மெய்யாகவே நீங்கள்தானா ? :) அடேங்கப்பா.